Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பேரிழப்பு

 

‘இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய் விடவேண்டியது தான்!’ இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது.

இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல, முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்!

பூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருஷங் கள் ஓடிவிட்டன. அவர் வந்த நாளிலிருந்து ‘ஊருக்கு ஒரு தரமாவது போயிட்டு வரணும்’ என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்படி முப்பது வருஷ காலமாக அது வளர்ந்து வருகிறது.

வெறும் நினைப்பு, சாதாரண எண்ணம் என்ற நிலை மாறி, ஆசை ஏக்கமாகவும் தவிப்பாகவும், தணித் தாகப்பட வேண்டியதாகவும் பேருருவம் பெற்று விட்டது. இன்னும் அது வளர்ந்து வந்தது.

‘திருநாளைப்போவார்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த நந்தனாருக்காவது ‘நாளைக்குப் போகலாம்… தில்லைக்கு நாளை போய்விடலாம்’ என்று ஒரு வாயிதா கூறப்பட்டு வந்தது. அவரும் அதில் நிச்சய நம்பிக்கை வைத்திருந்தார்.

பூவுலிங்கத்துக்கு அந்த விதமான நம்பிக்கைக்கே இடம் இருந்ததில்லை. அவரும் முப்பது வருஷ காலமாக, செயல்படுத்தப்படாத – செயல்படுவதற்கு வாய்ப்பு நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கைகூடப் பெறமுடியாத – அந்த எண்ணத்தை ஏக்கமாக வளர்த்து வந்தார். ‘இந்த வருஷம் எப்படியாவது ஊருக்குப் போய்விட வேண்டியதுதான். முப்பது வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. கோயிலும், பிள்ளையார் நந்தவனமும், தெப்பக்குளமும், அரசமரமும், ஆறும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. அவற்றை எல்லாம் திரும்பப் பார்க்க வேண்டும். அப்போது சின்னப்பயல்களாகத் திரிந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்!’ இந்த விதமாக அவர் எண்ணாத நாள் கிடையாது.

பூவுலிங்கம் வெறும் பூவு ஆக, ‘எலேய் பூவு’ ‘அடேய் பூவுப்பயலே!’ என்று அதட்டுவோர் குரலுக்கு அஞ்சி ஒடுங்கிப் பணிவுடன் அருகே வரும் சின்னப் பயலாகத் திரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு பெரிய மனிதர் பெரிய மனசு பண்ணி அவனை பட்டணத்துக்கு அழைத்துவந்து விட்டார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு, போட்டதைத் தின்று, பிள்ளைகளை எடுத்து வைத்து, ‘ஏய்!’ என்று கூப்பிடும் குரலுக்கெல்லாம் ‘என்ன ஐயா!’ எனக் கேட்டு பணிவிடை செய்து, இரவு பகலாக வீட்டில் நாய் மாதிரி காத்துக் கிடப்பதற்காகத் தான் ஊரின் பெரிய வீட்டுப் பெரிய ஐயா அந்தப் பயலைத் தம்முடன் அழைத்து வந்தார்.

பூவுப்பயலின் அப்பன்காரனும் ஆத்தாக்காரியும் ‘எசமான், இந்தப் பயல் இங்கே இருந்தால் வீணாக் கெட்டுச் சீரழிஞ்சு போவான். அவனை உங்களோடு கூட்டிக்கிட்டுப் போயி ஆளாக்கி விடுங்க!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதனாலேதான், சிறுகுளம் முதலாளி மகன் கைலாசம் பிள்ளை அவனை பட்டணத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அவனுக்குப் பத்து வயது.

சிறுகுளம் என்பது ‘சுத்தப் பட்டிக்காடு’. பள்ளிக்கூடம் என்ற பேருக்கு திண்ணையில் ஒரு அண்ணாவி சில பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அச்சிலரில் ஒருவன் ஆக விளங்கும் பேறு பூவுப் பயலுக்குக் கிடைத்ததில்லை.

அவன் தந்தை பலவேசம் பெரிய வீட்டில் வண்டிக்காரனாக வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான், ‘பயல் படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப் போறான்! இங்கே கிடந்து வயலில் உழைக்கணும், அல்லது ஆடு, மாடு மேய்க்கப் போறான். அவனுக்கு என்னத்துக்கு படிப்பு? என்று ஒரே அடியாக முடிவு செய்தது தான் ‘தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி’ ஆகும்!.

பையன் ஆடு மேய்க்கப் போறேன் என்று ஊர் சுற்றுவது, வயல் காடுகளில் திரிவது, மரங்களின் மீது ஏறுவ��
�ு, கிட்டிப்புள் விளையாடுவது போன்ற அலுவல்களை உற்சாகமாகச் செய்து வந்தான். அங்கேயே இருந்திருந்தால் அவன் உருப்படாமல் போவான் என்று அப்பன் கருதினான்.

‘பட்டணத்துக்கு வந்து மட்டும் நான் என்ன உருப்பட்டு விட்டேன்? உருப்படக் கூடியவன் எங்கே இருந்தாலும் உருப்பட்டு விடுவான். உருப்படாமல் போற கழுதை எந்தச் சீமைக்குப் போனாலும் உருப்படாது தான்!’ என்று பிற்காலத்தில் பூவுலிங்கம் அநேக தடவைகள் எண்ணியது உண்டு. இந்த அறிவு அவனுக்கு ஆதி நாட்களில் இவ்வாறு வேலை செய்தது இல்லை!

அந்தக் காலத்தில் அவன் அந்த ‘தரித்திரம் பிடித்த’ பட்டிக்காட்டை விட்டு வெளியேற வசதி கிட்டியதை பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதினான். ‘ஒட்டை உடைசல் நத்தம் புறம்போக்குப் பட்டிக்காடு’ என மதிக்கப்பட்ட ஊரை விட்டு நாகரிகத்தின் சிகரமாகத் திகழ்ந்த பட்டணத்துக்கே போக முடிவது கிடைத்தற்கு அரிய பாக்கியம் என்று தான் அவனை அறிந்திருந்த பலரும் எண்ணினார்கள்.

‘சுரத்’ இல்லாத சூழலிலிருந்து பரபரப்பு மிகுந்த பெருநகரத்துக்குச் செல்வது அந்தப் பையனுக்கு அதிகமான உற்சாகத்தையே தந்தது. பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும், சில தினங்கள் வரை அவனுக்கு ஆனந்தம் குறையாமல் தானிருந்தது. புதிய சூழ்நிலை, புதிய முகங்கள், புதிய அலுவல்கள் – எல்லாம் மகிழ்ச்சி அளித்தன.

ஆனால், நாளாக ஆக அந்த வாழ்க்கை முறையும் பூவுலிங்கத்துக்கு அலுப்பு தருவதாகவே தோன்றியது. ‘இப்படி வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்து, ஒயாது வேலை செய்து கொண்டிருப்பதற்கு பட்டணத்தில் இருப்பானேன்? பட்டிக்காட்டிலாவது இஷ்டம் போல் சுற்றித்திரிய முடிந்தது. நம் ஊருப் பக்கத்தில் டவுனில் பலசரக்குக் கடைகளில் சில பையன்கள் வேலை செய்கிறார்கள். காலை ஏழு மணி முதல் இரவு பத்துமணி முடிய கடையிலேயே அடைபட்டுக் கிடக்கிற அவர்கள் டவுன் பூராவையும் சுற்றிப் பார்த்தது கூடக் கடையாது. நான் பட்டணத்தில் பெரிய வீட்டில் வேலைக்கு இருக்கிறேன் என்று பேர்தான் பெரிசு. வெளியே போய் பட்டணத்தைப் பார்க்கக்கூட நேரமும் இல்லை; வசதியும் இல்லை. இங்கே இப்படி வந்து ஜெயில் வாழ்க்கை அனுபவிப்பதைவிட, நம்ம பக்கத்து டவுனில் பலசரக்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக் கலாம்’ என்று அவன் மனக்கசப்புடன் எண்ணலானான்.

பிறகு நாளடைவில் அவன் சுற்றி திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கு நேரம் தேடிக்கொண்டான். உண்ப தற்கும் உறங்குவதற்கும் இடவசதி இருந்ததால், வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வேடிக்கை பார்த்துப் பொழுது போக்குவதற்கு மிகவும் வசதியான இடம் இந்தப் பட்டணம் என்று அவனுக்குத் தோன்றியது.

பட்டணத்துக்கு வந்துவிட்ட பையனை அவன் தாயோ தகப்பனோ ஊருக்குக் கூப்பிடவே இல்லை. ஒரு பிள்ளைக்குச் சோறு போட்டு, துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் தொலைந்ததே என்றுதான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். பொருளாதார நிலைமை உணர்வுகளையும் உறவுகளையும்விட வலிமை மிக்கதுதான்!

ஆரம்ப காலத்தில் ‘ஊருக்குப் போகணும்’ எனும் வெறும் நினைப்பு தீபாவளி சமயத்திலும் பொங்கல் திருநாளின் போதும்தான் பூவுலிங்கத்துக்கு தீவிரமாக வேலை செய்தது. ‘இப்போதெல்லாம் ஊரில் இருக்கணும். எவ்வளவு ஜோராக இருக்கும் தெரியுமா!’ என்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக்கொள்வது வழக்கம்.

கைலாசம் பிள்ளையோ, அவரது குடும்பத்தினரோ அடிக்கடி சொந்த ஊருக்குப் போகும் சுபாவம் பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக எப்போதாவது, நாலைந்து வருஷங்களுக்கு ஒரு தடவை, போய் வருவது வழக்கம். பிள்ளை அவர்கள் மாத்திரம் ஊர் பக்கம் போகிறபோது, ‘நீ இங்கேயே இவர்களோடு இரு. உன்னை ஊரிலே யாரு தேடுறாங்க?’ என்று பூவுலிங்கத்தைத் தட்டிக் கழித்துவிடுவார். குடும்பத்தினர் அனைவரும் புறப்படும் சமயத்தில், ‘ஏண்டா, நீயும் இவங்களோடு ஊருக்குப் போய்விட்டால் நான் என்னடா செய்வேன்? நீ ஊருக்குப் போயி என்ன பண்ணப்போறே? சும்மா இங்கேயே இரு!’ என்று உத்திரவு போடுவார்.

எப்படியோ தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்தன அவனுக்கு. பூவுலிங்கத்தின் தந்தை பலவேசம், மகன் பட்டணத்துக்குப் போன மறு வருஷமே மண்டையைப் போட்டுவிட்டான். அவன் காரியம் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் பட்டணத்தில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது. பூவுப்பயனுக்கு அண்ணன்களும் தம்பிகளும் நிறைய இருந்ததால், அப்பனின் இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பி வைக்க அவன் வந்தே ஆகவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டொரு வருஷங்களில் தாயும் சிவபதம் சேர்ந்தாள். இந்த மகனின் துணை அப்பொழுதும் எதிர்பார்க்கப்படவில்லை.

‘நான் ஊரைவிட்டு வந்து நாலைந்து வருஷங்கள் ஆச்சுது. அங்கே போகணுமின்னு ஆசையாக இருக்கு. ஒருதடவை போயிட்டு வாறேனே!’ என்று அவன் பிள்ளைவாளிடம் கெஞ்சினான்.

‘நீ என்னடா சுத்தப் பைத்தியக்காரனா இருக்கிறே? இது ஊரு இல்லாமல் காடா? அந்தப் பாடாவதிப் பய ஊரிலே உனக்கு என்ன வச்சிருக்குது? இங்கே கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு பேசாமல் கிடப்பியா? ஊரு ஊருன்னு தொண தொணக்கிறியே’ என்று கைலாசம் பிள்ளை உபதேசித்தார்.

அவன் வருகையை அவனுடைய அண்ணன்மாரும் விரும்பவில்லை. ‘பூவு எசமான் கண்காணிப்பில் இருக்கிறப்படியே இருக்கட்டும். இங்கே இப்போது ரொம்பவும் கஷ்டதசை. அவன் நல்லபடியாக வாழ கடவுள் வழிகாட்டிவிட்டதற்கு நாங்கள் சந்தோஷப்படுகிறோம்’ என்று பெரிய அண்ணன் எழுதி அறிவித்து விட்டான்.

ஆகவே, பூவுலிங்கம் தனது எண்ணத்தைத் தன் உள்ளத்திலேயே வைத்து, தானாகவே புழுங்கிக் குமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

அவன் கையில் பணம் சேர வழி ஏது? பிள்ளை வீட்டிலேயே அவன் வளர்ப்புப் பிள்ளை மாதிரி வாழ்ந்தான். சம்பளம் என்று எதுவும் அவன் கையில் தரப்படவில்லை. எனினும், அவன் குறை கூறுவதற்கு வழி இல்லாமல் அவனது தேவைகள் எல்லாம் சரிவர பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

இந்த விதமாகப் பத்து வருஷங்கள் ஓடிவிட்டன. திடீரென்று கைலாசம் பிள்ளை செத்துப்போனார். அவரும் மனிதப்பிறவிதானே!

கைலாசம் பிள்ளையின் மனைவியும் மகளும் பட்டணத்திலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். ‘பூவு, நீ வேண்டுமானால் ஊருக்குப் போ, செலவுக்குக் கொஞ்சம் பணம் தர்றேன்’ என்று பெரிய அம்மாள் சொன்னாள்.

ஒரே அடியாக ஊருக்குப் போய் என்ன செய்வது என்பது பெரும் பிரச்ன¨யாக அவனை மிரட்டியதால், அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்ள வில்லை.

பூவுலிங்கம் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள், திருப்பங்கள, வளர்ச்சிகள், தேக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. அவன் வேறொருவர் வீட்டில் வேலையில் சேர்ந்தது. அந்த இடம் பிடிக்காமல் வெளியேறியது, கடை கடையாக வேலைக்கு அமர்ந்து காலம் கழிக்க முயன்றது எல்லாம் அவனுடைய வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட மேடு பள்ளங்கள்தான். ‘திருப்பம்’ என்று, அவனது இருபத்தைந்தாவது வயசில் நிகழ்ந்த திருமணத்தைச் சொல்லலாம்.

சிறு அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு பெரியவர் தனது மகளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார். அதுமுதல் பூவுலிங்கம் தனி அந்தஸ்தையும் பெரிய மனிதத் தன்மையையும் அடைய வசதி கிட்டியது. குடும்பத் தலைவர், கடைமுதலாளி என்ற தகுதிகள் தாமாகவே வந்து சேர்ந்தன.

குடும்பமும் பொறுப்புகளும் பெருகப் பெருக, பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை – சொந்த ஊரை ஒரு தடவையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற நினைப்பு – அடிவானம் மாதிரி எட்டஎட்டப் போய்க் கொண்டே இருந்தது.

மனைவி வீடு ‘தெற்கத்திச் சீமையில்’ எங்காவது இருந்திருந்தாலாவது அடிக்கடி அங்கே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். அதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.

மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்க வில்லை – சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது – என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும் கனவு நெசவுகளையும் செய்து, அமைதியைக் கெடுக்கிறது.

பெரிய மனிதனாகிவிட்ட பூவுலிங்கத்துக்கு, தனது சிறுபிராயச் சூழ்நிலை – அந்தக் காலத்தில் வறண்டதாய், அலுப்புத் தருவதாய் தோன்றிக் கொண்டிருந்ததுதான். கனவின் இனிமைகளும் கற்பனைப் பசுமைகளும் நினைவின் மினுமினுப்பும் கலந்த அற்புத உலகமாக நிழலிட்டது. சிறு பிள்ளைகளோடு வி¨ளாயடிக் களித்த இடங்கள் பலவும் திடீர் நினைவுகளாய் குமிழ் தெறிக்கும் அடிக்கடி.

தென்னந் தோப்புகள், பெரிய வீட்டின் வாசலில் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்ற மரமல்லிகை விருட்சங்கள் பூத்துக் கொட்டும் மணம் நிறைந்த பூக்கள், மதகுப் பாலம், அங்கு கொட்டுகிற சிறு அருவி நீர் – இப்படி எத்தனை எத்தனையோ சிறுசிறு இனிமைகள் நெஞ்சில் தைக்கும் நினைவுகளாய் தலையெடுத்தன.

பூவுலிங்கத்தின் கண்முன்னே எவ்வளவோ மாறுதல் களும் அழிவுகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

வெள்ளைக்காரன் காலத்துப் பட்டணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் புது வருஷப் பிறப்பும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்நகரம் புதுப்பொலிவும் தனி மிடுக்கும், களி வெறியும் குதூகலமும் கும்மாளியும் பெற்று விளங்கியதை அவர் பார்த்தார்.

யுத்த காலத்தில் நகரமே காலியாகிவிட்டது போல், ரொம்பப்பேர் இங்கிருந்து ஓடிப்போனதையும், பட்டணம் இருள் பிரதேசமாய், பயம்மிகுந்த இடமாய், பட்டாளத்துக்காரர்கள் நடைபோடும் சூழலாய் மாறியதையும் அவர் கண்டார்.

விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளையும், சுதந்திரம் பெற்ற பிறகு தோன்றிய மாறுதல்களையும் அவர் கவனித்தார்.

ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் பளிச்சென்றோ, மறைமுகமாகவோ தனது பாதிப்புகளை இந்நகர்மீது அழுத்திச் சென்றதை அவர் உணர்ந்தார்.

காலம் நிகழ்த்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை!

முக்கிய ரஸ்தாக்களில் ஙண ஙண ஒலி எழுப்பிய வாறே ஓடிக்கொண்டிருந்த டிராம் வண்டிகள் இல்லாதொழிந்தன. பஸ்கள், மோட்டார்கள், சைக்கிள்களின் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே போயின. யுத்த காலத்தில் ஜன நெருக்கடி குறைந்திருந்த நிலை மாறி, ஜனப் பெருக்கமும் நெருக்கடியும் அளவில் அதிகரித்து வந்தது.

அழகான சூழ்நிலைகள் பல சிதைவுற்றன. பெரிது பெரிதாக வளர்ந்து நின்ற மரங்கள் பல வெட்டப்பட்டு, குளுமையோடு இருந்த இடங்கள் வெறிச்சோடி விளங்கின. கட்டிடங்கள் புதுசு புதுசாக எழுந்தன. நாகரிக மோஸ்தரில் கட்டிட உருவங்களும் அமைப்புகளும் மாறி விசித்திரக் காட்சிகளாக மொட்டை மொழுக்கென்று கண்களை உறுத்த லாயின.

எப்படியோ, பல வகைகளிலும் பட்டணத்தின் வெளித்தோற்றம் பெரும் மாற்றங்களைப் பெற்றுக் கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் ஏகப்பட்ட கடைகள். பிரகாசம் மிகுந்த வெளிச்சம், ஜனக் கூட்டம், பளபளப்பு, பகட்டு, வர்ணக் கலவைகள்…

இவற்றை எல்லாம் காணக் காண, பூவுலிங்கத்தின் மனம் சிறுகுளம் என்கிற ஊரைப்பற்றியே எண்ணியது. அந்த ஊரும், வேகமாக இல்லாது போயினும், சிறிது சிறிதாகவேணும் மாறுதல்களை ஏற்று, வளர்ந்தி ருக்கும். காலத்தின் கைவண்ணம் அச்சிற்றுருக்கும் அதிகச் சோபை சேர்த்திருக்கும் என்று அவர் நினைத்தா
ர்.

ஊர்கள்தோறும் மின்சார விளக்குகள் பரவியதையும், ரேடியோ புகுந்துவிட்டதையும், பஸ் போக்குவரத்து மூலைக்கு மூலை ஏற்பட்டிருப்பதையும் பத்திரிகைச் செய்திகளாகவும், பிரயாணம் போய் வருவோரின் பேச்சுகள் மூலமும் கேட்டறிந்த போதெல்லாம், ‘நம்ம ஊருக்கும் இவை எல்லாம் வந்திருக்கும். நம் ஊர் இப்போது பிரமாதமாக இருக்கும்’ என்று எண்ணா திருக்க இயலவில்லை அவரால்.

அவர் வருஷம் தோறும் எவ்வளவோ செலவுகள் செய்தார், குடும்பம் என்றால் செலவுகளும் வளர்ந்து பெருகி எல்லை காண முடியாமல் தானே இருக்கும்? அதிலும் அவர் மனைவி ஓயாத சீக்காளியாக வேறு வந்து வாய்த்தாள். அவர்களுக்குப் பிறந்த குழந்தை களும் செலவு இனங்களைப் பெருக்கக்கூடிய சாதனங்களாகவே அமைந்தன. இதனால் எல்லாம் பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை தீராத தவிப்பாகவே வளர்ந்து வந்தது.

தூர தொலைவில் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் பலர் திருப்பதிக்குப் போக வேண்டும், காசிக்கு யாத்திரை போக வேணும் என்று தீர்மானித்துவிட்டு, பிறகு ‘நேர்த்திக் கடனை’ தீர்ப்பதற்குப் போக முடியாமல் வருஷா வருஷம் எண்ணியும் பேசியும் காலத்தை ஏலத்தில் விட்டு ஏங்கியிருப்பது போல, பூவுலிங்கமும் ‘சொந்த ஊருக்குப் போய் சும்மா ஒரு தரம் பார்த்துவிட்டு வரலாம்’ என்கிற ஏக்கத்தை வளர்த்துப் பொழுது போக்கிவந்தார்.

இப்படியே விட்டுவைத்தால், முப்பது வருஷங்கள் ஓடி மறைந்தது போலவே, பாக்கியுள்ள காலமும் பறந்துவிடும்; தனது அந்தரங்க ஆசையை நிறை வேற்றிக் கொள்ளாமலே செத்துப் போக நேரிடலாம் என்ற அச்சமும் அவருக்கு உண்டாயிற்று. சிறுகுளம் என்ற ஊர் மனமோகன சொர்கபுரியாய் மங்கி நின்று அவரை ‘வா வா’ என ஆசை காட்டி அழைத்தது. அதுவே பித்தாய், பேயாய் பிடித்து ஆட்டியது.

இனியும் தள்ளிப்போட்டு வந்தால் மனநிம்மதி குலைந்து, பைத்தியமே பிடித்துவிடும் என்று அவருக்குப்பட்டது. அந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, ‘சட்டியைத் தூக்கிக் குட்டியில் போட்டு, குட்டியைத் தூக்கி சட்டியில் போட்டு’, ஏதேதோ வித்தைகள் செய்து, பொருளாதாரத்தை சரிப்படுத்திக் கொண்டு, ஒருநாள் பிரயாணத்தை மேற்கொண்டார்.

பிராயணம் முழுவதிலும் அவருக்கு இருந்த பரபரப்பும் உணர்வுக் கிளர்ச்சியும் அளவிட முடியாதவை. நாகரிக நகரத்தின் மகத்தான காட்சிகளும், நகரவாசிகளின் கவலையில்லாத தோற்றமும் பகட்டும் அவருக்கு அவருடைய சிற்றூரையும் அங்குள்ள மக்களையும் கிட்டத்தட்ட அதே ரகங்களும் தரங்களும் கொண்ட நிலைகளில் சித்திரம் தீட்டத் தூண்டுகோல்களாய் விளங்கின.

ஒடும் ரயில் அறிமுகம் செய்து காட்டிய நிலையங் களும், பாதை ஓர ஊர்களின் பெருமையும், புதிய கட்டிடங்களின், தொழிற்கூடங்களின் தன்மையும் அவரின் ஊர் பற்றிய கற்பனை நிலைக்கு உரமிட்டன.

பட்டணத்திலிருந்து நானூற்றுமுப்பது மைல்கள் கடந்துதான் அவருடைய ஊர் இருந்தது. முந்நூறு மைல்கள்வரை காடும் செடியும், பசுமையும் பயிருமாக வளத்தின் பொலிவோடு காட்சி தந்த சூழ்நிலை பிறகு வறண்ட பிரதேசமாய் பார்வையில் படலாயிற்று. மழை இல்லவே இல்லை; அதனால் வறட்சி படுமோசமாக இருந்தது. ஆங்காங்கு வந்து சேர்ந்த மக்களும், கண்ணில் தென்பட்டவர்களும், உவகை எழுப்பும் உருவமினுக்கு உடையவர்களாக இல்லை.

நானூறாவது மைலில் உள்ள முக்கிய ஜங்ஷனில் ரயிலைவிட்டு இறங்கிய பூவுலிங்கம் பட்டணத்தின் மிகச் சிறு அளவேயான ஒரு குட்டிப் பகுதியைப் பார்ப்பது போலவே உணர்ந்தார். கும்பலும், வேலையில்லாமல் சுற்றி அலைவோரும், பஸ்களும், போக்குவரத்து நெரிசலும் இந்த விதமான பிரமையைத் தந்தன அவருக்கு.

பஸ் நிற்கும் இடத்திலும், பஸ்களிலும் கட்டத்துக்குக் குறைவு இல்லைதான். எப்படியோ பஸ் பிடித்து, முப்பது மைல் பிரயாணம் செய்து, ‘நகரமும் இல்லாத பட்டிக்காடும் அல்லாத’ இரண்டும் கெட்டான் ஊர் ஒன்றில் இறங்கி மூன்று மணி நேரம் காத்துக்கிடந்து, வேறொரு பஸ் வந்த பிறகு ஏறி, சிறுகுளம் என்கிற ‘லட்சியக் கனவு’ ஊரை எட்டிப்பிடித்தார் பூவுலிங்கம்.

பிரயாணம் செய்யச் செய்ய வறட்சியும், வறுமையின் சின்னங்களும், மனித உருவங்களின் விகாரத் தோற்றங்களும், பணக் கஷ்டத்தின் கோரப் பிரதி பலிப்புகளும் பளிச்செனப்பட்டன. இருப்பினும், தனது எண்ணத்திலும் கனவிலும் நிலையாய் கண்டு மகிழ்ந்த சிறுகுளம் இனிமை மிகுந்த குளுகுளு ஊராகவே இருக்கும் என்றுதான் பூவுலிங்கத்தின் மனம் நினைத்தது.

பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கியதுமே, அவர் மனச்சித்திரத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவர் தெருத் தெருவாக நடக்கத் தொடங்கியதும், அவருடைய உள்ளத்திலே நித்திய செளந்தர்யத்தோடு நிலை பெற்றிருந்த இளம் பருவச் சூழ்நிலை பற்றிய ரம்மியமான சித்திரம் தகர்ந்து, உருக்குலைந்து விழுந்து, சிதறிச் சின்னாபின்னமாகிப் பாழ்பட்டு மக்கியது.

பூவுலிங்கத்தின் உள்ளத்தில் சிரஞ்சீவித் தன்மை யோடு இனிமையாய், எழிலாய் பசுமையாய், வளமாய், அருமையாய், ஆனந்த உறைவிடமாய் கொலுவிருந்த சிறுகுளத்துக்கும், கண்முன்னே காட்சி அளித்த ஊருக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு வித்தியாசம்!

தெருக்கள் குறுகி, புழுதிமயமாய், அழுக்கும் அசிங்கமுமாய் கண்களை உறுத்தின. ஒவ்வொரு தெருவிலும் அநேக வீடுகள் இடிந்து விழுந்து, குட்டிச் சுவரும் கட்டை மண்ணுமாய் காட்சி தந்தன. வீடு என்ற பெயரோடு தலைதூக்கி நின்ற பல குடிசைகள் ‘இப்பவோ பின்னையோ இன்னும் சித்தெ நேரத் திலோ’ விழுந்துவிடுவோம் என்று எச்சரிக்கை கொடுத்தவாறு உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றன. அநேக வீடுகளில், ஆட்கள் பிழைப்புக்கு வழிகாண நகரங்களைத் தேடிச் சென்றுவிட்டதால், பூட்டுகள் தொங்கின. கறையான் தன் வேலையை வெகு தீவிரமாகச் செய்து கொண்டிருந்தது.

ஊர் ஓரத்தில் முன்பு பூவரச மரங்களும் நந்த வனமுமாக அழகுடன் காட்சி தந்த தனித் தெரு இப்போது அடர்த்தியான குட்டை முட்செடி இன ‘நீர்க் கருவேல்’ புதர் புதராக மண்டிக் கிடக்கும் பாழ்பட்ட பகுதியாக விளங்குகியது. கோயில்கள்கூட வசீகரம் குன்றியே காணப்பட்டன. ஊரின் எல்லையில் திடுமென ஓசை எழுச் சிறு அருவிகள் விழும் மதகுகளோடு இருந்த பாலம் இப்போது பலமான சுவரமைப்போடு, இறுக மூடிய பலகைககளோடு, புதுமைத் தோற்றம் பெற்றிருந்தது. மொத்தத்தில் ஊரே பலரகமான பொருள்களும் தாறுமாறாகக் குவிந்து கிடக்கும் குப்பைமேடு மாதிரித் தோற்றம் காட்டியது.

அங்கு வசித்த ஆட்களில் அவருக்குத் தெரிந்த – அவரை இனம் கண்டு கொள்ளக்கூடிய – நபர் யாருமே இல்லை. பலரும் ஏதோ சாயைகள் போலும், அருவங்கள் போலும், எலும்பு உருவங்கள் போலும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சித் துடிப்பு, உயிரோட்டம், உவகைத் துள்ளல், திருப்தி முதலியன பெற்ற மனிதர்களாகக் காணப்படவில்லை அவர்கள், வாழ்க்கை எனும் கொடிய இயந்திரம் கசக்கிப் பிழிந்து விட்ட சக்கைகளாய், சாரமற்ற முறையில் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் நிழல்களாய் திரிந்தார்கள். வாழ்க்கையே கோரமான தண்டனை ஆகிவிட, மரணம் என்னும் விடுதலையை அடைவதற்காகக் காத்திருக் கும் குற்றவாளிகள் போல், மண்ணைப் பார்த்தபடி தலை குனித்து நடந்த உருவங்களையே அவர் கண்டார்.

இரவு வந்ததும், மின்சார விளக்குகள் எரித்தன. வெறுமையை, வறுமையை, பாழ்பட்ட சூழலை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கே அவை உதவின. ஏழரை மணிக்கே ஊர் அடங்கிவிட்டது. எட்டரை மணிக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஊரே சுடுகாட்து அமைதி பெற்ற இடமாக இருளில் மூழ்கிவிட்டது.

பூவுலிங்கம் பட்டணத்தை, அதன் பரபரப்பை வெளிச்சத்தை, மினுமினுப்பை, பகட்டை, படாடோ பத்தை எல்லாம் எண்ணினார். இந்த வேளையில் நாகரிகப் பெருநகரம் எப்படிக் கோலாகலமாக இருக்கும் என்று நினைத்துப் பெருமூச்சு எறிந்தார்.

பட்டணத்தின் போலித்தனமான வாழ்க்கை அவருக்குப் பிடித்திருக்கவில்லை. அதேபோல், இருண்ட கிராமத்தின் சமாதிநிலை வாழ்வும் அவருக்கு உகந்திருக்கவில்லை.

பட்டணத்தில் – நாகரிக நகரங்களில் – ஆத்மா இல்லாத வாழ்க்கைத்தான் கூத்தடிக்கிறது. ஆத்மா மறக்கப்படுகிறது, அமுக்கி அழுத்தப் பெறுகிறது, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது என்பது பூவுலிங்கத்தின் அனுபவம்.

அவருடைய நினைவிலும் கனவிலும் மோகனமாகக் கொலுவிருந்த சிறுகுளம் கிராமம் மனிதனுக்கு மாண்பு தரும் ஆத்மாவை கெளரவிப்பதாக – ஆத்ம ஒளி பெற்றதாக – விளங்கும்என எண்ணியிருந்தார். அங்கு ஆத்மா வறண்ட வெறுமையைக் கண்டதும் அவர் நெஞ்சில் வேதனை ஏற்பட்டது. அவருடைய ஏமாற்றம் கொடியதாய், ஈடு செய்ய முடியாததாய், அவரை வருத்தியது. ஏதோ பேரிழப்பை ஏற்க நேர்ந்தது போல் அவர் சோகம் அடைந்தார்.

‘இந்த ஊர் இப்படி மாறியிருக்கும் என்று தெரிய வழி இருந்திருக்குமானால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். இந்த ஊருக்கு வந்ததனால், இதன் உண்மை நிலையை அறிய நேர்ந்த துக்கம் வேறு. என் மனசில் பதிந்திருந்த பசுமைச் சித்திரம் சிதைந்து விட்ட நஷ்டம் வேறு!” என்று அவர் எண்ணினார்.

சிறுகுளத்தின் நிகழ்கால நிலையை நேரில் பார்க்காமல் இருந்தாலாவது, மனம் பழைய அடிப்படையை வைத்து இனிய வேலைப்பாடுகள் செய்து கொண்டிருக்கும் அல்லவா? தனது கனவை, கற்பனையை தானே கொன்றுவிட்டதாக அவர் வருத்தப்படலானார்.

சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட சிறு பிராய நினைவுகளின் இடிபாடுகள் மத்தியில் அழுகுணிச் சித்தராய் வெகுநேரம் நிற்கவும் திரியவும் அவர் உள்ளம் இடம் தரவில்லை. ஆகவே பூவுலிங்கம் உடனடியாக திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டார். இப்போது அவர் உள்ளத்தில் உவகை இல்லை, உணர்ச்சித் துடிப்பும் தவிப்பும் இல்லை. ஆசைப் படபடப்பு இல்லை, அவசர பரபரப்பும் இல்லை. தனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரை அல்லது ஒன்றை, பறிகொடுத்துவிட்டு, ஆற்ற முடியாத துயரத்தோடு திரும்புகிற ஒரு மனிதனின் வேதனைச் சுமைதான் அவர் உள்ளத்தில் கனத்தது.  

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணாடி முன் நின் சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கு இழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பை படரவிட்டான். தம்பி சிங்காரம்! நீ சாமானிணன் இல்லை. ...
மேலும் கதையை படிக்க...
அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான். நான் எழுதுவதை நிறுத்த நேர்ந்தது. எழுந்து ...
மேலும் கதையை படிக்க...
ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி வீசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்ரித்தும் ஐசபும் கைகோர்த்து வந்தனர். மற்றவர்களோடு சேர்ந்தனர். இருவரும் புதிய ஆடைகள் அணிந்திருந்தார்கள். நிறம், அளவு, துணிரகம்-அனைத்திலும் ...
மேலும் கதையை படிக்க...
என்ன மோசமான பையன்! அவனை உதைக்க வேண்டியது தான், மற்றப் பையன்களோடு அவன் சண்டை போடுவது பற்றியும் அதிகம் கேள்விப் படுகிறேன். அவனைக் கூப்பிடு உடனே. "மோகன்! ஏய் மோகன்!" தலைமை ஆசிரியர் தன் பியூனை கூப்பிட்டார். அவர் குரலின் வெடிப்பைக் ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் காலத்திலே அதாகப்பட்டது 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை இங்கு தருகிறேன். ஒரு ஊரிலே அப்பாயி (அப்பாவி மனிதன்) ஒருத்தன் இருந்தான். அவனுக்கு அடங்காத ஆசை ஒன்று இருந்தது. தனக்கு அடர்த்தியா ...
மேலும் கதையை படிக்க...
வானத்தை வெல்பவன்
பசித்த மரம்
அவன் சட்டையில் இவன் மண்டை…
சிறப்புப் பரிசு
வரம் கேட்டவன் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)