கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 14,795 
 

வாசலில் ராமசுப்பு போய்க் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதே சோர்வான நடை. தலை குனிந்தமேனிக்கு. எடுத்து வைக்கும் அடிகள் கூட அத்தனை பதவாகம். எங்கே பூமி அதிர்ந்து விடுமோ என்று பயந்தாற்போல.

செருப்புச் சத்தம் கூடக் கேட்டுடக் கூடாதுன்னு உங்க ஃப்ரென்டு எத்தனை ஜாக்கிரதையாப் போறார் பாருங்கோ…. – வத்சலாவின் வார்த்தைகள் என்னை நெருங்கி வந்தன. நிச்சயம் வந்து நிற்பாள் என்று எனக்குத் தெரியும். அதற்காகவேதான் திண்ணையில் பிரசன்னமாகிறாள். அந்த நேரத்தைத் தவறவிட்டு விடக் கூடாது என்று.

நானும் பார்த்துண்டேயிருக்கேன். மனுஷன் தலையை நிமிர்த்த மாட்டேங்கிறாரே….தற்செயலாக் கூடவா ஒருத்தர் திரும்ப மாட்டார்? வீட்டுலேர்ந்து புறப்படுற போதே நிர்ணயம் பண்ணின்டுதான் கிளம்புவார் போலிருக்கு….

எதுக்காக இப்டியெல்லாம் நினைக்கிறாள் இவள் என்றிருந்தது. அடுத்தவர் மனதை அப்படியா ஊடுருவிப் பார்க்க முடியும்? அவர் அப்படியோ இல்லையோ, இவள் இப்படி…

திரும்பாட்டி என்ன? நீ கூப்பிட வேண்டிதானே…! அதுக்குத்தானே போய் நிக்கிறே…? தினசரி தவறாம நிக்கிறேன்னு தெரிஞ்சிண்டுதான் கவனமாத் திரும்பாமப் போறார் போலிருக்கு…

குனிஞ்ச தலை நிமிராம, குமரிப் பொண்ணு கெட்டுது போங்க…அந்த மனுஷன் திரும்பினா வாங்கோன்னு சொல்லி, ஒருவாட்டி கேட்கலாமேன்னு பார்க்கிறேன்…முகம் பார்த்தாத்தானே…! அப்டியே பார்த்தாலும் அவரை எதுக்கு நான் கூப்பிடணும்? நன்னாவா இருக்கும்?

எல்லாத்தையும் நீதான் சொல்லிக்கிறே…முடியாதுதானே…அப்போ பேசாம உள்ளே போய் காரியத்தைப் பார்க்கலாமே…? கூப்பிட்டாத்தான் காப்பி கொடுக்கணுமே…! – அந்தக் கடைசிப் பேச்சு எனது குசும்பு. அவளை வெட்டிக்கு உசுப்பி விடுவது…

ஆம்மா…காபிதான் ஒரு குறைச்சல்? துட்டை என்னைக்குத் திரும்ப வாங்குறதாம்….? ஒரு மாமாங்கம் ஆச்சு…நீங்களும் கேட்குறாப்ல இல்லை…அவரும் அவராத் தர்றாப்ல இல்லை….நாளாவட்டத்துல ரெண்டு பேருக்குமே மறந்துடப் போறது…..

ஆனா உனக்கு மறக்காதே…..-சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டார் ரங்கநாதன்.

எதுக்காக மறக்கணும்? இல்ல எதுக்காக மறக்கணும்ங்கிறேன்…கடன் கொடுத்து உதவி செய்தா, திருப்பித் தர வேண்டாமா? அதை நினைவுல வச்சிக்கிறது தப்பா? நியாயமாப் பார்த்தா அவரா வந்து இன்ன தேதிக்குள்ள தந்துடுறேன்னு சொல்லணும்… அது தெரிலயாக்கும் உங்களுக்கு…?

நினைவுல இருக்கிறது தப்பே இல்லை…யாருதான் மறந்துடப் போறா…நானும் மறக்க மாட்டேன்தான்…ஆனா அதே நினைப்பா பித்துப் பிடிச்ச மாதிரி அலையறதுதான் தப்பு…

அவர் அந்த நெனப்பே இல்லாம அலைஞ்சிண்டிருக்காரே…? அது சரியா? – அவளும் விடுவதாய் இல்லை.

அப்படீன்னு உனக்கு எப்படித் தெரியும்? அடுத்தவா மனசை ஊடுருவிப் பார்க்கிற திறன் வந்துடுத்தா? வலிய வந்து இப்பத் தர்றேன், அப்பத் தர்றேன்னு சொன்னாத்தான் ஆச்சா?

தினசரி வெறுமே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போயிண்டும் வந்திண்டும்தான் இருக்கார்…ஒரு வார்த்தை இல்லை… அதுக்கு என்ன அர்த்தமாம்….?

நல்லாயிருக்கு கதை…நம்மகிட்டே கடன் வாங்கின தோஷத்துக்காக அவர் இந்தத் தெருவுலயே போகாம இருக்க முடியுமா? இந்த நகர் தொடங்கின போது இந்தத் தெருவுக்கே சிந்து நதித் தெருன்னு பெயர் வச்சவரே அவர்தான். சங்கத்துல சீட்டுக் குலுக்கிப் போட்ட போது இந்தப் பேருக்கு மட்டும் சீட்டு வேண்டாம்னு சொல்லி ஸ்பெஷலா வாங்கின பெயராக்கும். சிந்து நதியின்மிசை நிலவினிலே…ன்னு சதா அவர் வாய் முனகிண்டேயிருக்கும்…நீ கேட்டிருக்க மாட்டே…இன்னொண்ணு… அல்லி மலர்த் தெரு வழியா சுத்தி மெயின்ரோடு போறதுக்கு ஒரு வழி இருக்கு தெரியுமோ? ஆனா அவர் அப்படிப் போறதில்லை…அதை ஞாபகம் வச்சிக்கோ….

அங்கே ஒரேயடியா நாய்கள் கொலைச்சுத் தள்றது….பிடுங்கி எடுத்திடுமோன்னு பயமாயிருக்கும்…நம்மாத்தைக் கடக்குறபோதுதான் கால் விரையறதே…!

என்னடீது? இப்பத்தான் பூனை மாதிரிப் போறார்னு பூடகமாச் சொன்னே….அதுக்குள்ளேயும் இப்டி ஒண்ணைச் சொல்றே? அந்த மனுஷனை ஏனிப்படிக் குறையாப் பார்க்கிறே….?அப்புறம் அது வெறுப்பா மாறும்… நம்ம கண்ணுலேர்ந்து மறையாம இருக்காரே…அதுவே அவரோட நாணயத்துக்கு ஒரு அடையாளம்….தன்மையான ஆளுடீ…அதைப் புரிஞ்சிக்கோ….

நீங்கதான் மெச்சிக்கணும்….எதுக்கும் எதையாவது அர்த்தம் கற்பிக்க வேண்டிது…. கற்பிக்கிறதில்லை…அதுதான் நிஜம்….அவர்பாட்டுக்கு சகஜமா வந்து காபி சாப்டுட்டுப் போயிண்டிருந்தார்…அது போச்சு இப்போ….

நானொண்ணும் வரவேண்டாம்னு சொல்லலையே…அவரா நிறுத்திண்டிருக்கார்…

நீதான் அன்னைக்குக் கலந்து கொடுத்த காபியைப் பார்த்தனே…என் கண் முன்னாடியே எனக்கு ஒரு மாதிரியும், அவருக்கு வேறே மாதிரியும் கொடுத்தேன்னா அது தெரியாமப் போயிடும்னு நினைச்சியா? காபி கலரே காண்பிச்சுக் கொடுத்துடுத்தே…

என்ன பெரிய தப்பு….பழைய டிகாக் ஷன் இருந்தது. அதுல அவருக்குக் கலந்தேன். உங்களுக்குப் புதுசுல போட்டேன்….இது ஒரு தப்பா? பழசைத் தூரக் கொட்ட முடியுமா? காபிப் பொடி என்ன விலை விக்கறது?

வந்த விருந்தாளிக்கில்ல நீ புதுசுல கொடுத்திருக்கணும்…வீட்டு மனுஷனுக்கு ஒரு நாளைக்கு சுமாரா இருந்தாப் பரவால்லன்னு நினைச்சிருந்தா அது சரி….

ஆஉறா,எம்புட்டு தாராளம்? வாயால வழிய விட உங்கள விட்டா ஆள் ஏது? என்னைக்காவது வர்றவங்கதான் விருந்தாளி…எப்பயும் வந்திட்டிருக்கிறவங்க? சரியான ஓட்ட வாயி… வெட்டிப் பேச்சு……..அப்டி மட்டும் கொடுத்திருந்தேன்னா….பூகம்பமே வெடிச்சிருக்குமே நம்மாத்துல? பால்ல துளி தண்ணி கலக்கப்டாது உங்களுக்கு… ….கள்ளிச் சொட்டா இருக்கணும்பேள்…இப்போ ரொம்பத்தான் வாய் நீள்றது….. – ரசனையோடு சிரித்துக் கொண்டேன் நான். எத்தனை பேச்சு சுதந்திரம்?

ஒரு மனுஷனோட தனிப்பட்ட பழக்கம்ங்கிறது வேறே…அவருக்கு நாம பணம் கொடுத்திருக்கோம்ங்கிறது வேற….கைமாத்து வாங்கிட்டதுனாலயே ஒருத்தர் குறைஞ்சு போயிடுவாரா…?

இதுக்குப் பேரு கைமாத்தா? கடனா, கைமாத்தா அதை முதல்ல சொல்லுங்கோ…எம்புட்டு ஈஸியா நினைச்சிண்டிருக்கேள்…ஒத்தப் பைசா வட்டியில்லாம பத்தாயிரம் சொளையா தூக்கிக் கொடுத்திருக்கிறது உங்களுக்குக் கைமாத்தாத் தெரியறதாக்கும்….ஒருத்தருக்குக் கடன் கொடுத்து வாங்குறதுக்கும் ஒரு தகுதி வேணும்ங்கிறது சரியாத்தான் இருக்கு….அதெல்லாம் அவருக்கு நன்னாத் தெரிஞ்சிருக்கும் போல… அதான் வசமா உங்களை மடக்கி, வசதியா வாங்கிண்டு போயிருக்கார்….

அடேயப்பா…என்ன அழுத்தமான பேச்சு? இவள் மனது அறிந்துதான் அவர் தன் வருகையை நிறுத்திக் கொண்டாரோ என்று தோன்றியது எனக்கு. என்னால் அவர் முகத்தைப் பார்த்து நிச்சயம் கேட்க முடியாது. எனக்கு வாய் வராது. சரியாகச் சொல்லப் போனால் நானெல்லாம் கடன் கொடுக்க லாயக்கில்லாத ஆள்தான். ஒரு வாரத்தில் கொடுக்கிறேன் என்று சொன்னால் அப்புறம் அது கைமாத்து இல்லாமல் வேறென்ன? சிறிய தொகையோ, பெரிய தொகையோ…கால அளவு சுருங்கிப் போனால் தன்மையும் மாறிப்போகும்தானே? இன்னொன்றும் சொல்லலாம். ரொம்ப வேண்டப்பட்டவர்களுக்குக் கொடுப்பதற்குப் பெயர் கைமாத்து என்பேன் நான். வேறொன்றும் சொல்லலாம். வட்டி கணக்கிட்டால் அது கடன். இப்படிக் கொடுத்து அப்படி வாங்குவது கைமாத்து. அது யாருக்கு? ரொம்பவும் நெருங்கியவர்களுக்கு. ராமசுப்பு அப்படி ஆள்தானே…! நான் அப்படி நினைத்துத்தான் கொடுத்தேன். வெறுமே சிரித்து அளவளாவுவதும், சேர்ந்து காபி குடிப்பதும்தானா நட்பு? ஒரு வேளை வத்சலாவிடம் அது இப்போது வேறு உருக் கொண்டுவிட்டதோ என்னவோ? ஏனென்றால் அவளிடம் சொல்லிவிட்டுக் கொடுக்கவில்லையே..! அந்தப் பாயின்டை மனதில் வைத்துக் கொண்டுதான் அவளும் பேசுகிறாள் போலிருக்கிறது.

இவ்வாறு கொடுப்பதும், பெறுவதும், பெறாமல் விடுவதும் என்னைப் பொறுத்தவரை சகஜம். நான் தர்மவான் அல்ல. ஆனாலும் இப்படிப் பழகிப் போனவன். கொடுப்பேன்…மறந்து விடுவேன்…. அலுவலகத்தில் எத்தனையோ பேருக்கு நிகழ்ந்திருக்கிறது இது…சிறு சிறு தொகைகள்…அதாவது கைமாத்து. என்னத்தைத் திருப்பிக் கேட்பது? போகட்டும்…வந்தால் சரி….இல்லையா, அதுவும் சரி….

மறந்தமாதிரி நீ என்னய்யா இருக்கிறது? நானே மறந்துடறேன் போ… – இதுதான் என் கதை. அம்பது, நூறு என்று எத்தனையோ…எனக்குச் செலவழித்ததைவிட என்றே சொல்லலாம். இதெல்லாம் வத்ஸலாவுக்குத் தெரியாது…தெரியவந்தால் அதகளம்தான்.

சார், மொத்தமா இவ்வளவு வாங்கியிருக்கேன்…ஒரு ஞாபகத்துக்குச் சொன்னேன் என்றவர்களும் இருக்கிறார்கள்…திருப்பியும் கொடுத்திருக்கிறார்கள்….பழசு எதுவும் இல்லை என்பதுபோல் திரும்பத் திரும்ப வாங்கினவர்களும் இருக்கிறார்கள். சாமர்த்தியமாய், கொடுத்துட்டனே என்றும் விளம்பியிருக்கிறார்கள். தெரிந்தே ஏமாற்றுகிறார்களோ என்பதெல்லாம் இல்லை. ஏமாறுவதிலும் ஒரு தனி சுகம் உண்டுதான். கொடுத்துப் பார்த்தால்தான் தெரியும் அந்த அருமையும் ஆளுமையும். வாங்கும்போது அந்த முகம் காட்டும் பணிவு…மறக்காமல் நன்றி சொல்லும் வாய், கண்கள் காட்டும் அந்த பவ்ய உணர்ச்சி….இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்…மனிதர்கள் இயல்பாகவே வளைந்தவர்கள்தான் என்று நினைப்பேன். அதுதான் எனக்கு வேணும்…இத்தனைக்கும் நானென்ன ரொம்ப வசதியானவனா, இல்லைதான்…ஆனால் கடன் வாங்காமல் கழிக்கும் வாழ்க்கை தெரிந்தவன்…அப்பா காலத்திலேயே கடன் வாங்கி வாங்கி எல்லா அவமானமும் பட்டுத் தெளிந்தாயிற்று. குட்டுப் பட்ட காலம் அது. அதெல்லாம் அப்போது பெரிய தொகை. இன்று அதுவே கைமாத்து. மறந்தால் “கால்மாத்து“ என்று உள்ளோர் பலர். நான் அந்தவகை இல்லை.

இந்த வாழ்க்கையில் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போனால், பிறகு அதற்கு ஒரு முடிவே இல்லாமல் போகும்…அது கடனில்தான் கொண்டு விடும். தேவைகளைச் சுருக்கச் சுருக்கத்தான், அதாவது எளிமைப்படுத்தும்போதுதான் அவசியங்கள் தானே அழிந்து போகின்றன. அப்போ அவசியமானதே வாங்கிறதில்லையோ? என்று கேட்காதீர்கள். அதிலும் சுருக்கம்தான். எல்லாவற்றிலும் எளிமை என்பது ஆத்மார்த்தமாய் படிந்து போனது. அதுவும் அப்பாவிடம் கற்றது. துண்டைத் தரையில் விரித்து உருளப் பழகிக் கொண்டால் நம்மைப் போல் சுகவாசி எவனுமில்லை. எளிய உடை, படுக்க ஒரு பாய், சாப்பிட ஒரு அலுமினியத் தட்டு, உடம்பு தேய்க்க ஒரு கல்…இக்குணூன்டு பென்சில்… அண்ணல் காந்திஜிதான் எத்தனை எளிமை…! யாருக்காகவும் அதை அவர் விட்டுக் கொடுக்கவில்லையே…! வட்ட மேஜை மாநாட்டிற்கே அந்த உருவில்தானே போய் வந்தார். எனக்கும் சேர்த்துத்தான் உங்க பாஸ் போட்டிருக்காரே என்று காமெடி பண்ணவில்லையா?

வத்சலாவையும் சும்மா சொல்லக் கூடாது….இன்றுவரை அவள் தன் தேவை கருதி எதற்கும் முகம் சுளித்தவளல்ல. சுங்குடியில் அழகுப் பதுமையாய் வலம் வருவாள். நான் வாங்கிப் போடுவதை வைத்துக் கொண்டு சிண்டுபோல் கட்டு செட்டாகக் குடும்பம் நடத்துகிறாள். வீட்டுக் காரியங்களி்ல் என் கையாவது கொஞ்சம் வீச்சாக நீளும். அவளுக்கு? அளவென்றால் அளவுதான். அடுப்பிலிருந்து திரும்பாமலே பின் பக்கமாய் கை நீட்டி ஒரு சிட்டிகை உப்பு எடுத்தாலும் கன கச்சிதமாய் வரும்.

இந்த ரேஞ்சுக்கு தோசைக்கு எண்ணெய் விட்டேள்னா இன்னும் ரெண்டு பாக்கெட் கூட வாங்கணுமாக்கும்…நீங்க தள்ளுங்கோ….நா வார்க்கிறேன்…என்று என் கையிலிருந்து திருப்பிக்கரண்டியைப் பிடுங்கிக் கொள்வாள். குறைந்த செலவில் நிறைந்த திருப்தி தரும் சாமர்த்தியம் உண்டு அவளுக்கு. சமையலைக் கலையாகப் பயின்றவள்.

ரெண்டாவது டிகாக் ஷன் அடிக்கணுமாக்கும். கொஞ்சம் கிளறி விட்டு, வெந்நீரை ஊத்தினா பரவால்லாம விழும்…ஒரு வேளை கொஞ்சம் சுமாரா காபி சாப்டறது…உள்ளே எறங்காதா அய்யர்வாளுக்கு? உரிமை எடுத்துக் கொள்வதிலும் ஒரு அழகு உண்டுதான்.

வாயே திறக்கமாட்டேன். நல்லதைத்தானே சொல்கிறாள். கேட்டால் குறைந்தா போகும். காசின் அருமை கஷ்டப்பட்டவனுக்குத்தான் தெரியும். வீசி வீசிச் செலவு செய்தால் வீங்கிப் போக வேண்டியதுதான். ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்து செலவழிக்க வேண்டும் என்பாள் பாட்டி. இடுப்புப் புடவையில் சுருட்டி முடிந்து, எண்ணி எண்ணிப் பார்ப்பாள். முறுக்கு சுற்றப் போன வீடுகளில் முடிந்து வந்த காசு அது. வீட்டுச் செலவுக்குத் தட்டுப்பாடு வரும்போது ஆபத்பாந்தவள் அவள்தான். அம்மாட்ட இருக்கும்…வாங்கிக்கோ…என்றுவிட்டு நழுவி விடுவார் அப்பா. எங்கள் அம்மாதான் எப்படி பயப்படுவாள் மாமியாரிடம் கேட்க? ஆனால் பாட்டியின் தாராளம் யாருக்கும் வராது. அவசரத்துக்கு உதவட்டும்னுதானே பாதுகாத்து வச்சிருக்கேன்…அகத்துக்கில்லாம வேறே எதுக்கு? இந்தா பிடி…என்று எடுத்து நீட்டி விடுவாள்.

அக்ரஉறாரத்தில் காமாலைக்கு மந்திரிக்கப் போவாள். காசு வாங்க மாட்டாள். தொழில் தர்மம் அது. காமாலைக்கு மந்திரிப்பவர்கள் அந்த வியாதியைத் தனக்கு வாங்கிக் கொள்வார்கள். எத்தனை பேருக்குத் தெரியும் இது? ரணம் அனுபவித்த பாட்டிக்கு மட்டுமே. பாட்டி உடம்பு அப்படித்தான் ச்ஷீணமானது. ஆனாலும் டாக்டரின் மருந்துக்கு அடங்காத மஞ்சள் காமாலை பாட்டியின் மந்திரத்துக்கு அடங்கியது. எழுப்பித் தந்தது எத்தனையோ பேரை. காசை தெய்வமாய் மதித்தார்கள் அன்று. அது நம்மை ஆளக் கூடாது என்ற பிரதிக்ஞையோடு. இன்று? வீசி விடுகிறார்கள்.

டேய் ரமணீஸ்வரா…அந்தச் செல்லம் சவுன்ட் சர்வீஸ் வாசல்ல தேவர் உட்கார்ந்திண்டிருப்பார்…அவர்ட்டப் போய் அப்பா நூறு ரூபா வாங்கிண்டு வரச் சொன்னார்னு கேட்டு உடனே வாங்கிண்டு வா பார்ப்போம்…எங்கே ஓடு…..! பத்து எடுத்திண்டு தொண்ணூறு தருவார்….பத்திரமாக் கொண்டுவா…..

என்னா அம்பி…அய்யரு பணம் வாங்கிட்டு வரச் சொன்னாரா…அதான பார்த்தேன்…என்னடா ஆளக் காணமேன்னு…உன்னை அனுப்பிட்டாராக்கும்….சரி…சரி…தர்றேன்….போயி அந்த வைகை டீ ஸ்டால்ல எனக்குன்னு சொல்லி சூடா, ஸ்ட்ராங்கா ஒரு டீ வாங்கியா பார்ப்போம்…..-தேவரின் குரல் கம்பீரமாய் ஒலித்தது. லேசாக மனதுக்குள் ஒரு நடுக்கம். ஆனாலும் நான் அசையவில்லை.

அங்கேயே நின்று கொண்டிருந்தேன். தினசரியில் கவனமாய் இருந்தவர் சற்றுப் பொறுத்துத் தலை நிமிர்ந்தார்.

இன்னும் போகலியா…நீ.? ஏம்ப்பா……?

அப்பா பணம் வாங்கிண்டு வரச் சொன்னார்…-.கையைப் பின்னால் கட்டிக் கொண்டு, நின்ற இடத்தில் அசையாமல் மீண்டும் அதையே சொன்னேன்.

அதான் தர்றேன்னிட்டேன்ல…..போய் டீ வாங்கியாடா…..அதோ….தெரியுது பார் கடை… இப்டிப் ப்ளாட்பாரம் மேலயே போ…..ஓடு…..

நான் தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். சற்றுப் பொறுத்து. “நான் வீட்டுக்குப் போறேன்….” – சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.

டே…டேய்…..பணம் வாங்கிட்டுப் போ….என்னா இந்தப் பிள்ள இப்டி ஓடுது…? – தேவர் புரியாமல் கத்துவது காதில் லேசாக விழுந்தது.

வீட்டில்…….

உன் பிள்ளை வெறுங்கையை வீசிண்டு வந்திருக்கான் பார்…..என்னான்னு விசாரி…

ஏண்டா கண்ணா…..ஏன் வாங்கிண்டு வரல்லை? – அம்மாவின் இதமான அரவணைப்பு. சொல்வோமா வேண்டாமா? சிறு தயக்கம். ஏண்டா ராஜா…? அந்த அன்பில் பிறந்த தைரியம்.

அந்தாளு டீ வாங்கிண்டு வரச் சொல்றாரும்மா…..கடன் கொடுக்கிறாருன்னா, எடுபிடி வேலை செய்யணுமா? முடியாதுன்னுட்டு ஓடி வந்துட்டேன்….-எப்படிச் சொன்னேனோ… அடக்க முடியாமல் அழுகை வந்துவிட்டது. அந்த “எடுபிடி“ என்ற வார்த்தையை அந்த வயதில் எங்கு கற்றேன்…எங்கு படித்தேன், கேட்டேன்? எப்படிச் சொன்னேன்.? இன்றுவரை எனக்கு அது புதிர்தான்.

ஏதுடி கண்ணு…எதுக்கு இதுக்குப் போய் தங்கம் அழணும்? அழாதே…

அம்மா இழுத்துக் கட்டிக் கொள்கிறாள். சமாதானப்படுத்துகிறாள். பிறகு பதமாய்ச் சொல்கிறாள்.

வாங்கிக் கொடுத்தா என்ன, கேவலமா? நீ சின்னப் பையன்னு சொல்லியிருக்கார்….ப்ரியமாச் சொல்லியிருப்பார்…அது ஒரு குத்தமா? அவர் நமக்கு அவசரத்துக்குப் பணமெல்லாம் தந்து உதவுறாரில்லையோ? இனிமே அப்டி வரக் கூடாது…சரியா? பெரியவாளோல்லியோ..? பணிவா நடந்துக்கணும்… சமத்தோல்லியோ நீ…!

ம்…சரி…… – தலையாட்டுகிறேன். அந்த நிகழ்வு இன்று வரை எனக்கு மறக்காதது. அப்பா என்னை ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஏதோவொரு வகையில் அவருக்கும் எனது ஓட்டம் ஒப்புதலோ என்னவோ? அதற்குப் பின்னால் எத்தனையோ தடவை தேவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட பிறகு என்னை அனுப்பியதில்லை. அது ஆறோ, ஏழோ படித்த காலம் என்று நினைவு. துல்லியமான மனக் கணக்கோடுதான் கடன் வாங்குவார் அப்பா. சொன்னபடி சரியாகத் திருப்பிக் கொடுத்து விடுவார். அந்த மதிப்பு அவரின் கௌரவம். ஆனால் கடன் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது என்ற நிலை. பார்த்துப் பார்த்து மனம் புழுங்கிய நாட்கள் அவை. எத்தனையோ பேர் உதவியிருக்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கை அத்தனை ஆழம் நிறைந்தது அப்போது. மனிதனை மனிதன் நம்பிய காலம்.

அந்த மனநிலைதான் இன்றும் என்னை ஆட்டுவிக்கிறதோ? கடன் கேட்பவர்களைக் கண்டாலே சட்டென்று மனம் இறங்கி இளகி விடும். மனைவியின் மார்பகப் புற்று நோய் ஆபரேஷன் என்று கேள்வி. ரொம்ப காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு இது ரொம்பச் சிறு தொகைதான்…போதுமோ இல்லையோ என்பது கூட இல்லை. என்னிடம் அவர் கேட்டது அவ்வளவுதான்.. நானாக ஊகித்துக் கொண்டேன். கொடுத்துவிட்டுத்தான் வத்ஸலாவிடம் சொன்னேன். கடைகண்ணிக்குச் சென்று வருகையில் அந்த மாமியோடு வழியில் சந்தித்துப் பேசும் வழக்கம் அவளுக்கு. மறுப்பொன்றும் சொல்லவில்லை. ஆனால் இத்தனை மாதங்கள் ஆகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதுதான் அவளை இன்று பிடுங்கியெடுக்கிறது. பயப்படுகிறாளோ என்னவோ… வராமல் போனால்தான் என்ன? ஏதோவொரு நல்ல காரியத்திற்குக் கொடுத்தோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஒரு சமயம் அதிக வட்டி அதிக வட்டி என்று நிதி நிறுவனங்களில் ஓய்வுப் பலன்களையெல்லாம் போட்டு எத்தனை பேர் எவ்வளவு பணம் இழந்து தவித்தார்கள். இது என்ன அப்படியா? மனமறிந்து செய்த உதவிதானே…!

ஆனாலும் ராமசுப்புவின் கௌரவம் குறைவது போல் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாய் இருந்தேன். கடன் வாங்கி விட்டதாலேயே ஒருவரின் கௌரவத்துக்குப் பங்கம் வந்து விடுமா என்ன? அவரும் ஒரு நிறுவனத்தில் மானேஜராய் இருந்து ஓய்வு பெற்றவர்தான். தனியார் நிறுவனம் என்பதால் பென்ஷன் கிடையாதே தவிர, ஒரு குறிப்பிட்ட சேமிப்பில், அதற்கான மாத வருமானத்தில் அவரின் குடும்ப வரவு செலவு நடக்கிறது என்கிற அளவில் எனக்குத் தெரியும். எதிர்பாராத புதிய செலவினம் ஏற்படுகையில் என்ன செய்வது? உருட்டிப் பெரட்டி என்னவோ செய்து கொண்டிருந்தார். வீட்டிற்கு வாங்கும் தினசரியைக் கூட நிறுத்தி விட்டேன் என்று சொன்னார். பஸ்-ஸ்டான்டின் டீக்கடைக் குத்துக்கல்லில் அமர்ந்து காலை,மாலைத் தினசரிகளை அலசுவதைப் பார்த்திருக்கிறேன். நான் டீ குடிக்கும்போது அவருக்கும் வாங்கிக் கொடுக்கத் தவறியதில்லை. வேண்டாம் என்று அவரும் சொன்னதில்லை. அதுதான் அவரிடம் எனக்குப் பிடித்தது. உள்ளார்ந்த அன்பு பாராட்டுபவர். அவரின் நட்பு ஆத்மார்த்தமானது.

எனக்கும்தான் பணத் தேவை நிறைய இருந்தது.. திருமணமே வேண்டாமென்றிருந்து, காலம் போன கடைசியில் விரும்பியும் விரும்பாமலும் அதைப் பண்ணி, அதற்கப்புறம் நாலு வருஷம் கழித்துக் குழந்தை பெற்று, அது இன்னும் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத வயதில் நின்று கொண்டிருந்தேன் நான். என்னோடு பணியாற்றுபவர்கள் பலரும் சர்வீசில் இருக்கையிலேயே ஒரு சொந்த வீடு கட்டிக் குடியேறி, இன்னும் சிலர் மாடி கட்டி வாடகைக்கு விட்டு, அதன் பின் பெண்ணுக்கும், பையனுக்கும் பாங்காய் ஓரளவு தகுதியான இடத்தில் திருமணத்தை முடித்து, ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல் உறாய்யாக மறு ஓய்வு பெறத் தயாராய் நின்றார்கள்.

என் கதை என் ஓய்வு வயதையும் தாண்டித்தான் போய் நிற்கும் என்பது நன்றாய்த் தெரியும். எல்லாருக்கும் எல்லாமும் நினைத்தபடியேவா நடந்து முடிகிறது. காலந் தாழ்ந்து நடந்தாலும் கச்சிதமாய் நடந்தால் சரி என்றிருந்தேன்.

அன்றன்றைக்கு என்ன உண்டோ அந்தக் காரியங்களைப் பார்த்துக் கொண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தோம் நாங்கள். வேறெந்தச் சிந்தனையும் இல்லை. உறவுகளில் அவனுக்கு அப்படி, இவனுக்கு இப்படி என்கிற பொறாமைக்கெல்லாம் இங்கு இடமில்லை. அடுத்தவனிடம் போய் நிற்காமல் காலம் கழிந்தால் சரி. அதற்கே ஏதேனும் பங்கம் வந்து விடுமோ என்றுதான் பயப்படுகிறாள் வத்சலா.

ராமசுப்பு, காலாகாலத்தில் அந்தப் பத்தாயிரத்தைத் திருப்பிக் கொடுக்காதது அவளை அந்த அளவு நினைக்க வைக்கிறது. போதாக் குறைக்கு முந்தா நாள்தான் பையன் காலாண்டு பள்ளிக் கட்டண டிமான்டைக் கொண்டு வந்து நீட்டியிருக்கிறான். ஒரு ஃபீஸ் கட்டி, அப்படி இழுத்து மூச்சு விடுவதற்கு முன் அடுத்தது வந்து நின்றால் என்னதான் செய்வது? பன்னெண்டாயிரம், பதினஞ்சாயிரம் என்றால் மனசு பயப்படுகிறதே? சதா மனக்கணக்குப் போட்டுக் கொண்டே இருக்க முடியுமா? இருக்கும் ஃபீஸ் நெருக்கடியைப் பார்த்தால், நாமே அந்தப் பாடங்களையெல்லாம் நிஷ்டையில் அமர்ந்து உருப்போட்டு, பையனைத் தயார் செய்து விடலாம் போல்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு வெறியாய் நினைக்க வைக்கிறது. ஆனாலும் நல்ல கல்வியைப் பிள்ளைக்குத் தருவது பெற்றோரின் கடமையல்லவா?

அரசுப் பள்ளியில் சேர்ப்போம் என்றால் கேட்டால்தானே? அரசு ஊழியனான எனது விருப்பம் அதுதான். நானெல்லாம் வெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு வேலைக்கு வந்து ப்ரமோஷனில் உயர் பதவியை எட்டி, குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றவில்லையா? தூர்ந்தா போனேன். நாற்சந்தியிலா விட்டேன்? படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கத்தான் செய்யும். கருத்தும் அக்கறையும்தான் பிரதானம். பக்கத்து அரசுப் பள்ளிக்கு நடந்து போனால் என்ன, கேவலமா? பிள்ளையை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட்டு, கூட்டி வந்தால்தான் மதிப்பா? என்னவோ தரமான கல்வி என்கின்ற பெயரில் காசு தண்ணீராய்க் கரைகிறது கடலில் கரைத்த பெருங்காயமாய்….!

விடு பார்ப்போம்…வராமயா போய்டும்….அதுக்காக அதையே நினைச்சிட்டு, மனசைப் போட்டு உழட்டிட்டு இருக்காதே…..நீபாட்டுக்கு வேலையைப் பாரு…..சொன்னேனேயொழிய எனக்கும் அந்தப் பணம் வந்தால் தேவலை என்றுதான் இருந்தது. ஆனாலும் சமாளிக்க முடியாத நெருக்கடி இல்லைதானே…! இப்படியும் நினைத்துக் கொண்டேன்.

வந்ததா பணம்? அதுதான் இல்லை. பதிலாக அந்தச் செய்திதான் காதுக்கு எட்டியது. எல்லாம் நம்ம நேரம்…! ஐயோ பாவம், அவருக்கு என்ன பாடோ?

கொஞ்சம் நடந்துட்டு, அப்டியே உழவர் சந்தைக்குப் போய் காய்கறி வாங்கிண்டு வந்திடறேன்….இன்னைக்கு லேட்டாப் போனாப் போறும்தானே….கேட்டுக் கொண்டே கிளம்பிப் போயிருந்தாள் வத்சலா. அவள் பாடு அவளுக்கு.

சனிக்கிழமையானாலும் ஆபீஸ் போவது என் வழக்கம். பன்னெண்டு மணியைப் போல் அமர்ந்து சாயங்காலம் அஞ்சுவரை வேலைகளைப் பார்த்துவிட்டுக் கிளம்பி, எதிரே நாயுடு ஸ்டாலில் ஒரு வர்க்கியும் டீயும் முடித்துக் கொண்டு வீடு வருவேன். திங்கட்கிழமை காலை அமர்கையில் டேபிளில் எந்தக் கோப்பும் இருக்கக் கூடாது எனக்கு. வாழ்க்கையின் நியமங்கள் எல்லோருக்கும் எல்லாக் காலத்திலுமா துல்லியமாய் நிறைவேறுகின்றன? பல சமயங்களில் தடுமாறிப் போகின்றனவே…!

ரங்க மாமா….சேதி தெரியுமோ…. – கேட்டுக் கொண்டே படபடப்பாய் வந்து நின்ற மஉறாலிங்கத்தைப் பார்த்த போது சட்டென்று எனக்கு அப்படித்தான் தோன்றியது. பிட்சாண்டார் கோயிலின் பிரதான குருக்கள். பக்தி மயம், சக்தி மயம் என்று மூச்சு விடாமல் பஜனை செய்வான் ரெண்டு மணி நேரத்துக்கு. ஆன்மீக விஷயங்கள் அத்துபடி..சதா ஈஸ்வர நாமம் ஜபிக்கும் உதடுகள். நல்லதையே போட்டு நிரப்பிய மனசு.

என்னாச்சு மஉறா…என்ன செய்தி…சொன்னாத்தானே தெரியும்…..? பதட்டமின்றி நிதானமாய்க் கேட்டேன்.

நம்ப ராமசுப்பு அகத்து சாரதா மாமி போய்ச் சேர்ந்துட்டாளாம்…

ஒரு கணம் அதிர்ந்தேன். அடப்பாவமே…! எதிர்பாராத நியூஸால்ல இருக்கு….அப்டி என்ன செய்துதாம்…?

என்ன செய்துதாவா? உங்களுக்குத் தகவலே தெரியாதோன்னு தோண்றதே.. ….அந்த மாமிக்கு ப்ரெஸ்ட் கான்சர்ண்ணா…..ரொம்ப முத்த விட்டுட்டா போலிருக்கு….செலவுக்கு அஞ்சிண்டு அப்புறம் பார்க்கலாம்…அப்புறம் பார்த்துக்கலாம்னு இருந்திருக்கா…..ட்ரீட்மென்ட் போறலயாம்… உயிருக்கே உலை வச்சிடுச்சு….பாவம் அந்த மனுஷன்…இனிமேத்தான் என்ன செய்யப் போறார்னு தெரிலை…..மனுஷா வாழ்க்கையிருக்கே…ஒண்ணும் சொல்றதுக்கில்லே….வரேளா…..நான் அங்கதான் போயிண்டிருக்கேன்….மத்தியானத்துக்கு மேலேதான் எடுக்கிறாளாம்…எல்லாருக்கும் மூத்தவன் டெல்லில இருக்கானாமே… கோவிச்சிண்டு போனவனாம்….வரணுமாம்….. …நா போயிண்டிருக்கேன்…

சொல்லிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார் மஉறாலிங்கம். கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். வத்சலா சந்தைக்குப் போயிருப்பாளா அல்லது போகும் வழியிலேயே தகவல் கிடைத்திருக்குமா தெரியவில்லை. எந்த விஷயமும் அவளுக்குத்தான் முதலில் தெரியவரும். இன்று மாறிப்போனதோ…!

கொல்லைக் கதவு, நடைக் கதவு, ரேழிக் கதவு என்று ஒவ்வொன்றாய்ச் சாத்திக் கொண்டே வாசலுக்கு வந்து பிரதான வீட்டு மரக் கதவையும் அமுக்கிப் பூட்டி இழுத்துப் பார்த்துவிட்டுப் படியிறங்கினேன். திண்ணை ஓரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்தக் கிழிந்த பாய் கண்ணில் பட்டது. பக்கத்து அனுமார் கோயில் பண்டாரம் வந்து படுப்பார். பல நாட்களாய் அது அவரது இடமாகிப் போனது. நானோ வத்சலாவோ எதுவும் சொன்னதில்லை. ஏனென்றும் விளங்கவில்லை.

நான் போய் ராமசுப்புவின் வீட்டு வாசலை எட்டிய போது உள்ளேயிருந்து வெளியேறிக் கொண்டிருந்த வத்சலா என்னை நோக்கி அவசரமாய் வந்தாள். என்ன…? என்று நினைத்தவனாய் அவள் முன்னே தவிப்போடு போய் நின்றேன்.

ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதுக்கு அடுத்த வாரம் அஞ்சாம் தேதி வரைக்கும் டைம் இருக்குதானே….அதுக்குள்ள பார்த்துக்கலாம்….அகத்துக்குப் போய் நேத்திக்கு பாங்குல எடுத்த பதினஞ்சாயிரம் பணத்தைச் சட்டுன்னு கொண்டு வாங்கோ……இப்போ காரியம் ஆகணும் இங்கே….ஒரு மாத்துதானே…அவசரத்துக்கு ஒதவாத பணம் அப்புறம் எதுக்கு? அந்தக் குழந்தேளைப் பார்த்தா எனக்கு மனசு தாளலை…- எல்லாம் என்னைக் கட்டிண்டு கதர்றதுகள்….ம்ம்…சீக்கிரம் விரசலா போய்ட்டுத் திரும்புங்கோ…. சொல்லி என் தோளைத் தொட்டுத் தள்ளினாள். அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்து நின்றவன் தன்னுணர்வு பெற்றேன்.

சொன்னதை மனசுல வாங்கிண்டேளோன்னோ….கிளம்புங்கோ…சட்டுனு வாங்கோ…

அவள் கண்கள் மிகவும் கலங்கியிருந்தன. முகம் சிவந்திருந்தது. மேற்கொண்டு பேசினால் விசித்து விடுவாள் போலிருந்தது.

அந்த அழுது கலங்கிய முகத்தையும்… தென்பட்ட பதட்டத்தையும் அந்த வீட்டின் திடீர் வித்தியாசமான மாறுபட்ட சூழலையும் குழப்பத்தோடு மாறி மாறிப் பார்த்தவனாய் மறுபடியும் வீடு நோக்கி விரைந்தேன் நான்.

Print Friendly, PDF & Email

1 thought on “கைமாத்து

  1. உஷாதீபனின் கதை நன்றாக இருந்தது…தாம் இருக்கும் இடத்தையே கதைக்களனாய்க் கொண்டுஂபோய் இயல்பான மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை விவரிக்கின்றார் கைமாத்து கதையில். பாராட்டுகள்.
    இளவல் ஹரிஹரன், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *