நான் யார்?

 

(இறுதிப் பகுதி)

டாக்டர் கோவிந்தன் மண்டையை குடைந்து கொண்டார். விடை நாடினார். நான் யார் ? – இதற்கு விடை தெரிந்தபாடில்லை. தேடினார். தேடியே ஓடினார். அவர் தெளிந்த பாடில்லை.

“நான் யார் ? நான் நரம்பியல் டாக்டர் கோவிந்தனா? இல்லை நான்கு கால் நாயா? அடிபட்டு நாயாக , மயக்கமாக இருக்கும் நாயின் கனவில் நான் கோவிந்தனாக இருக்கிறேனா? இல்லை, டாக்டர் கோவிந்தன் கனவில் , நான் நாயாக , அலைந்து, அடிபட்டு கிடக்கிறேனா ? கோவிந்தனாக நரம்பியல் நிபுணராக , பணம், காசு, பேர், புகழ் என ராஜபோகம் அனுபவித்ததும் நான் தான் ! நாயாக குப்பை மேட்டில் அலைந்து, ரத்தம் வழிய ஓடியதும் நான்தான் ! இதில் எது நிஜம் ? எது பொய்?” அவரது மண்டை பிராண்டியது.

நாளாக நாளாக, அவரது மருத்துவ வேலையில் அவருக்கு ஈடுபாடு குறைந்தது. நாட்டம் இல்லாது போயிற்று. ஆனால், முன்பை விட இப்போது மிக அதிகமாக நிறங்கள் கண்களில் தெரிந்தன. மஞ்சள் நிறத்திலேயே பத்து வகை, பச்சை நிறத்திலேயே இருபது வகை. முன்பெல்லாம் பழுப்பு நிறம் ஒன்று தான் அவருக்கு தெரியும். இப்போது அதில் பதினைந்து நிறங்கள் தெரிந்தன. என்ன ஒரு சுகம் ? பார்க்கும் அத்தனையும் துல்லியமாக தெரிந்தன. கண்ணுக்குள் ஒரு விலை உயர்ந்த டிஎஸ்எல்ஆர் கேமரா பொருத்தியது போல இருந்தது. இது என்ன மாற்றம்?

ஆனால், அதை விட ஆச்சரியம், அவருக்கு மோப்ப சக்தி நாளாக நாளாக கூட ஆரம்பித்தது. அடடா! என்ன ஒரு ஆனந்தம்? இவ்வளவு அருமையான வாசனைகளா? இதுவரை தெரியாமல் போயிற்றே ? அவரது நண்பர்களின் வருகையை, நோயாளிகளின் வருகையை அவர்களை பார்க்காமலே, அவர்கள் உடல் வாசனை வைத்தே துல்லியமாக சொல்ல முடிந்தது.

சக டாக்டர்களுக்கு ஆச்சரியம்! இது எப்படி சாத்தியம் ? கோவிந்தனின் உதவி டாக்டர் மணிமேகலைக்கோ குழப்பம்! எது எதனால்? ஒரு வேளை, டாக்டருக்கு மூளைகட்டி அல்லது மூளைப் புற்று நோய் தாக்கமாக இருக்குமோ? மற்ற டாக்டர்கள் சந்தேகப் படுவது சரிதானோ?

இன்னும் நாட்கள் செல்ல செல்ல, டாக்டர் கோவிந்தனின்நோய் முற்ற ஆரம்பித்து விட்டது. நோயாளிகளை பார்க்க மறுத்தார். எப்போதும் ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை தேட ஆரம்பித்தார், மருத்துவ புத்தகங்கள், வேதாந்த புத்தகங்கள் வாங்கி படித்தார். பெரிய சமய குருமார்கள், தத்துவ வித்தகர்கள், அறிவு சார்ந்த ஞானிகள் அனைவரிடமும் தன் சந்தேகத்தை கேட்டார். ஒரே கேள்வி? – நான் யார் ? அடிபட்டு நாயாக , மயக்கமாக இருக்கும் நாயின் கனவில் கோவிந்தனாக இருக்கிறேனா? இல்லை, டாக்டர் கோவிந்தன் கனவில் நாயாக , அலைந்து, அடிபட்டு கிடக்கிறேனா ? எது நிஜம்? எது பொய்? ஆனால், பதில் தான் கிடைக்க வில்லை.

அவரது சக டாக்டர்கள், அவரது மூளை ஸ்கேன், சீட்டீ , எமாரை , பெட் ஸ்கேன் மற்றும் பல டெஸ்ட்கள் செய்து , கடைசியில் கண்டறிந்தது இதுதான். “ அவருக்கு மூளை புற்று நோயின் தாக்கம்”. வேறு வழியில்லை. மூளை ஆபேரஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது. கொஞ்சம் சிக்கலான சர்ஜரி தான்.

டாக்டர் கோவிந்தன் , இப்போது, அறுவை சிகிச்சைக்கு தயாரானார், பேஷண்டாக ! . மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்படியே மயக்கமானார்.

****

யாரோ தன்னை தட்டி எழுப்புவது போல இருந்தது.
கோவிந்தன் , கண்ணை விழித்து , தலையை தூக்கி பார்த்தால், எதிரில், ஒரு கால்நடை மருத்துவர், வயதான கிழம். தனது உதவியாளனை கூப்பிட்டுக் கொண்டிருந்தார். “யாரப்பா அங்கே ! இந்த நாயோட முன்னங்கால்லே கட்டுப்போட்டு, வெளியில் வராந்தாவில் படுக்க வை. யாரவது இதை தேடிக்கிட்டு வந்தா, அனுப்பி விடு. !”

கோவிந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன கொடுமை ? நான் இப்போது யார் ? கோவிந்தனா? இல்லை நாயா? நான் இங்கே எப்படி வந்தேன்? இல்லே இல்லே ! நான் டாக்டர் கோவிந்தன் தான்!” . லொள் லொள் என்று அலறிய படி, அறையை விட்டு, மூன்று கால் பாய்ச்சலில், நொண்டியபடியே, வெளியே ஓடினார்.

சவாரி ஏதாவது வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கையிலே, எதிரில் , நாய் வருவதை பார்க்காத ஆடோ ஒன்று, கால்நடை மருத்துவ ஆஸ்பத்திரி வாசலில், நாயின் பேரில் ஏறி இறங்கியது. நாயின் மண்டையில் அடி ! ரத்த வெள்ளம் !.

***

யாரோ தன்னை தட்டி எழுப்புவது போல இருந்தது.
ஆனால், டாக்டர் கோவிந்தனால் அசைய முடிய வில்லை. மூச்சு மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. அவரது நினைவு மங்கிக் கொண்டே வந்தது ! சுற்றி இருந்த டாக்டர்கள், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்துவிட்டனர். கோவிந்தனின் பல்ஸ் இறங்கி விட்டது. இதயத்துடிப்பு நின்றுவிட்டது. ஆபரேஷன் என்னவோ வெற்றிகரம் தான். ஆனால் பேஷன்ட் தான் இறந்து விட்டார். டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.

டாக்டர் மணிமேகலை, கோவிந்தனின் உதவி டாக்டர் , வாயை பொத்தியபடி, கண்ணீர் சிந்தினாள். உடனிருந்தவரும் கண் கலங்கினர். டாக்டர் கோவிந்தன், எவ்வளவு பெரிய நரம்பியல் நிபுணர், எவ்வளவு புகழ், என்ன ஒரு செல்வாக்கு, சமூகத்தில் எப்படிப்பட்ட அந்தஸ்து, அத்தனையும் இன்று மண்ணோடு மண்ணாக, காற்றோடு காற்றாக!. சின்ன வயதிலேயே இந்த உலகத்தை விட்டு போய் விட்டாரே! அனைவரும் வருந்தினர்.

***

யாரோ , கோபாலனை தட்டி எழுப்புவது போல இருந்தது.

அவரது நண்பர் வாசு தான். “என்ன கோபாலன், இப்போ உடம்பு தேவலையா? “ ! உங்க பைபாஸ் ஆபேரஷன் நல்லபடி ஆச்சுன்னு கேள்விப்பட்டேன்.! அரைமணி முன்னாடி வந்திருந்தேன் ! டிவி ஓடிக் கொண்டிருந்தது. நீங்க டீப்பா தூங்கிட்டிருந்தீங்க.! சரி உங்களை எழுப்ப வேண்டாம்னுட்டு வெயிட் பண்ணிட்டிருந்தேன் . இப்போ எப்படி இருக்கு? “

கோபாலனுக்கு அப்பாடா என்றிருந்தது. அட இவ்வளவு நேரம் நான் கண்டதெல்லாம் கனவா ? தப்பித்தேன் ! நான் நாயுமில்லை !! டாக்டர் கோவிந்தனுமில்லை! தத்ரூபமாக இருந்ததே! நானே அனுபவித்தது போல இருந்ததே ! அப்பப்பா ! என்ன ஒரு பயங்கர சொப்னம் ! .

வாசுவை பார்த்து சிரித்தார். “வாங்க வாசு ! இப்போ எவ்வளவோ பரவாயில்லே . லேசா, மார்புப் பகுதியில் அப்பப்போ வலிக்கிறது. சரியாயிடுமாம். என்னை அறியாம தூங்கிட்டேன் போலிருக்கு. அதான் நீங்க வந்ததை கூட பார்க்கலை !”

பிரைவேட் ஆஸ்பத்திரி ! ஏசி அறையில், சங்கரா டிவி ஓடிக்கொண்டிருந்தது. யாரோ ஒரு பாகவதர் , அதில் கீதை பற்றி உபந்நியாசம் செய்து கொண்டிருந்தார். கோபாலன் திரும்பி படுத்துக் கொண்டார். ‘டிவி பார்த்துக் கொண்டே தூங்கி விட்டேன் போல !’

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, வாசு எழுந்தார். அப்போது, டிவியில்,பாகவதர் முடிவுரையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

“……. இதுதான் வாழ்க்கை ! வெறும் கனவு ! மாயை ! நாம் செய்யும் பாவ புண்ணியங்களை பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. நம் செயல்களின் பலன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும். செய்யும் பாவங்கள் அல்லது முற்பிறவியில் செய்த பாவங்கள் , கடுமையாக இருந்தால், இந்த பிறவியில், நாம் விழிப்பு நிலயிலேயே, நம் புலன்களால், நமது பாவ-புண்ணிய பலன்களை அனுபவிப்போம். சில பல கடுமை இல்லாத பாவ-புண்ணிய பலனை, நாம் நமது கனவில், அதாவது ஸ்வப்ன தசையில் அனுபவிப்போம். அனுபவித்து கழிப்போம் !”

“யாரும் தான் செய்த பாவங்களையும் புண்ணியங்களையும் அனுபவி த்தே தீரவேண்டும் ! தப்பிக்க முடியாது ! விழித்திருக்கும் போதோ , அல்லது கனவிலோ, இந்த பிறவியிலோ, அடுத்த ஜென்மத்திலோ அல்லது அதற்கு பின்போ ! அதனால், நாம் இந்த உலகில் இருக்கும் வரை, நல்லதையே நினைப்போம், நல்லதையே சொல்வோம்! பிறருக்கு நல்லதையே செய்வோம்! நன்மையே நடக்கும்! அது ஒன்று தான் நாம் உய்ய வழி !இதைத்தான் கண்ணன் கீதையில் சொல்கிறான் ……..”

கீதையை கேட்டுக் கொண்டே, பேச்சு வாக்கில், வாசு சொன்னார் . “ இந்த ஆட்டோ காரங்க, எப்படி ஓட்டறாங்க தெரியுமா கோபாலன்? இப்போ இங்கே, வரும்போது, நம்ம ஆஸ்பத்திரி எதிரே, காலில் கட்டுப் போட்ட நாய் ஒன்று , ஆக்சிடென்ட்டில் அடிபட்டு, துடி துடித்து இறந்து கொண்டிருந்தது. பாக்கவே மனசுக்கு கஷ்டமாக இருந்தது. பாவம், அந்த வாயில்லா ஜீவன், என்ன பாவம் பண்ணியதோ, இந்த தண்டனை பெற ?”

அதற்கு இடது பக்கம் ஒருக்களித்து படுத்தவாரே, கோபாலன் சொன்னார் “ அட நீங்க வேறே வாசு! அந்த நாய் பொழைக்க தெரிந்த நாய் ! அதான் சீக்கிரமே செத்துப் போச்சு ! பொழைக்கத் தெரியாதவங்க தான் உலகத்திலே இருந்து, தினம் தினம் சாவாங்க! “

வாசுவிற்கு புரியவில்லை. “நீங்க என்ன சொல்றீங்க கோபாலன் ?”

கோபாலன் , தான் கண்ட கனவை விவரித்தார். டாக்டர் கோவிந்தன், நாய் தனது கனவில் வந்தது பற்றி சொன்னார். கதை போல் வாசுவும் கேட்டுக் கொண்டார்.

“இப்போ சொல்லுங்க வாசு, நான் யார் ? விழித்திருக்கும் வேளையில், இதய ஆபேரஷன் செய்து கொண்டு அவஸ்தைப் படும் கோபாலனா, இல்லை செத்துப்போன நாயா, இல்லை ‘மெண்டல்’ டாக்டர் கோவிந்தனா?”

வாசு சிரித்தார். “ இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது. ரொம்ப கஷ்டமான கேள்வி ! ஆனால், ரமண மகரிஷியிடம் யாரோ, இதே மாதிரிதான் ஒரு கேள்வி கேட்டாங்க ! அதுக்கு அவர் சொன்ன பதில் இதுதான் :அதை சொல்லவா ?”

“சொல்லுங்க வாசு ! என்ன சொன்னார் ? ”

‘வாசு சொன்னார் . “ரமண மகரிஷி சொன்னது இதுதான் . ‘நான்… நான்… நான்… என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது? விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’

வாசு நிறுத்தினார்.

கோபாலனுக்கு ஏதோ விளங்கினால் போல இருந்தது. விளங்காதது போலவும் இருந்தது.

வாசு சிரித்துக் கொண்டே எழுந்து விட்டார் . “அப்புறம் வரேன் கோபாலன். ரொம்ப யோசனை பண்ணாதிங்க! இது பெரிய விஷயம் ! ஓரமா போட்டு வைங்க ! இப்போ ஜஸ்ட் ரிலாக்ஸ்!”

… முற்றும் 

தொடர்புடைய சிறுகதைகள்
சைதாபேட்டை அனன்யா மகளிர் கல்லூரி நூலக வளாகத்தை விட்டு நான் வெளியே வரும்போது சரியாக மாலை 6.00 மணி. கடந்த எட்டு வருடங்களாக இங்குதான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன், லைப்ரரியனாக. வெளியே வரும்போது யாரோ “லஷ்மி” என்று கூப்பிட்டது போல் இருந்தது. திரும்பினேன். என்னை ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்கம்: மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. 14, காந்தி தெரு, இதுதான் அவனது இலக்கு,. பெரிய பங்களா. வாசல் செக்யூரிட்டி, தோட்டக்காரன், வேலைக்காரர்கள். மூணு பெரிய கார். பசையுள்ள பார்ட்டிதான். நோட்டம் போட்டுக்கொண்டு இருந்தான் பத்து நாளாக.. அந்த ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. என்னை தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே யாரு? என் தர்ம பத்தினி தான்.“பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து கொலஸ்ட்ரால் வேற. வாக்கிங் கிளம்புங்க.” மனைவயின் அதட்டல்.வேறே வழியில்லை. ...
மேலும் கதையை படிக்க...
தியானம் - 5 வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன் தந்தை வேத வியாசரை அரித்தான் குழந்தை சுகதேவ். “பிரம்ம ஞானத்தை எனக்கு இப்போதே உபதேசி !” வேத வியாசரும், சுக தேவரை ( ...
மேலும் கதையை படிக்க...
சென்னை. திருவல்லிக்கேணி. வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி. தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள். தனத்திற்கு இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான். மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் ...
மேலும் கதையை படிக்க...
சந்தேகம்
திருடனுக்கு ஜே !
‘பார்க்’காமை
தியானம் செய்ய வாருங்கள் !
அவள் அப்படித்தான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)