கறி வாங்க உதவிய கடவுள்

 

மாணவர் விடுதியின் வரவேற்பறையில் இருந்த பொறுப்பாளர் மக்டலீனாவிடம் என் அறையின் சாவியைக் கொடுத்த பின்னர் , தலைக்கு மேலே படத்தில் இருந்தபடி சிரித்து
கொண்டிருந்த நல்ல மேய்ப்பாளன் இயேசுவைப் பார்த்து நானும் புன்னகைத்துவிட்டு அருகில் இருந்த மளிகைக்கடைக்கு நடக்கலானேன்.

இத்தாலி வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன, இன்னும் குறைந்தது நான்கு வருடங்களாவது வாழ்ந்தாக வேண்டும், ஸ்வீடனில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றியதைப்போல இங்கு
நிச்சயம் முடியாது, மண்ணிற்கு கொடுக்கும் மரியாதை அந்த மண்ணின் மொழியை அறிந்து கொள்வது, இணையத்தில் மனனம் செய்து வைத்து இருந்த ஒன்று இரண்டு மூன்று எண்
வரிசையை ஜெபித்தபடியே அருகில் இருந்த கடைக்கு வந்தேன். அடடா, எழுதி வைத்திருந்த , தேவையான பொருட்களின் இத்தாலிய இணை வார்த்தைகள் அடங்கிய சீட்டை
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

“கார்த்தி கண்ணா, நம்ம வீட்டுல மட்டன் குழம்பு, நீ இல்லை என்பதுதான் குறை” என அம்மா வருந்தியபொழுது, “மதியம் நானும் ஆட்டுக்கறி குழம்பு வச்சி சாப்பிடுறேன், கவலைப்படாம நீ சாப்பிடு ” என ஆறுதல் படுத்தியது நினைவுக்கு வந்தது.

ஆட்டுக்கறியை கடைசியாகத் தேடுவோம், முதலில் அரிசி, தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிப்பொடி என ஒவ்வொன்றாக அமைப்பை வைத்தோ, ஆங்கிலத்திற்கு நெருங்கியப் பெயர்களை வைத்தோ எடுத்துப்போட்டுக்கொண்டே , மாமிசம் இருக்கும் பகுதிக்கு வந்தேன்.

கண்ணாடித்தாள்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை , அதன் சிறிய கால்களினால் எளிதாக அடையாளம் காண முடிந்தது, எது மாட்டுக்கறி, எது பன்றிக்கறி எது ஆட்டுக்கறி என பிரித்தறிவதில் குழப்பம். ஏனைய கறிகளை சாப்பிடக்கூடாது , சாப்பிட்டால் பாவம் தீட்டு என்பதெல்லாம் கிடையாது. ஆட்டுக்கறி குழம்பு செய்யவேண்டும் என முடிவு செய்த பின்னர் அதை மட்டுமே வாங்கிப்போக வேண்டும் தானே…

“உங்க நாட்டில் மாட்டுக்கறி சாப்பிட மாட்டீர்கள் தானே, மாடு உங்களுக்குத் தெய்வம் தானே” என முன்பு ஒரு முறை ஆண்டர்சன் நக்கலாக ஸ்டாக்ஹோல்ம் கல்லூரிக் கொண்டாட்டத்தின்பொழுது கேட்டான்.

மாமிசத்தில் கூட அரசியலைக் கலந்து வைத்திருக்கும் நமது சமுதாயக் கலாச்சாரக் கூறுகளை விளக்க விரும்பாமல், எல்லோருக்கும் சரி என ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் ஒன்றைக்
கொடுத்தேன்.

“விவசாயம், பொழுது போக்கு, வாகனப்போக்குவரத்து என அனைத்திலும் உங்களுக்கு உபயோகரமாக இருக்கும் குதிரையின் மாமிசத்தை ஐரோப்பாவில் சாப்பிடுவீர்களா?”

“நீ அருவெறுப்பாக பேசுகிறாய்” இது லிண்டா , ஆண்டர்சனின் காதலி.

”அதே அதே … உங்களுக்கு குதிரைகள் அனைத்திலும் பயன்பட்டதைபோல, இந்தியத் துணைக்கண்டத்தில் மாடுகள் அன்றாட வாழ்வில் இன்றி அமையாததாக மாறிப்போனது,
பொதுவாக இந்திய துணைக்கண்ட மக்கள் நல்லதை நேரிடையாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள், தண்டனை உண்டு என்றால் கேட்பார்கள், கடவுள் கண்ணைக்குத்துவார், இது
சாமியின் வடிவம் என்று சொன்னால் தான் மாடுகளைப் பாதுகாக்க முடிந்தது, நவீன உலகத்தில் எது நமக்கு வசதியோ அதைப்பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மேற்கத்திய சிந்தனை ஓட்டங்களுக்கு இந்திய மக்களும் பழகிவிட்டார்கள், ஆட்டுக்கறி கோழிக்கறி கிடைக்காத பட்சத்தில் எனக்கு மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை”

”அட்டகாசமானப் பதில் “ என்றபடி தலையை வருடிக்கொடுத்தாள் ஹன்னா, ஒரு விதத்தில் ஆண்டர்சனை வெறுப்பேற்றக்கூட இருக்கலாம், லிண்டாவின் வரவிற்குப்பின்னர்
ஹன்னாவின் பார்வை என் மேல் விழுந்து விட்டது. ம்ம்ம் அது எல்லாம் பழையக்கதை.

மாமிசக்கூட்டத்தில் மறைந்து இருக்கும் எனக்கான இன்றைய ஆடு எங்கே எனத் தேடுவதில் சில நிமிடங்கள் ஓடிப்போனது. கோழி, பன்றி, மாடு மூன்றும் சேர்ந்த படங்களையே எல்லா
கண்ணாடிக்கதவுகளிலும் ஒட்டி வைத்திருந்தார்கள். மொழியின் தேவை சாப்பாட்டிற்கு வரும் என ஒருபொழுதும் நினைத்தது கிடையாது.

“சாவ்” என ஒருக் குரல் கேட்க , அது மக்டலீனா.

அட, கடவுளே அனுப்பி வைத்திருப்பார் போல, மக்டலீனா ஆங்கிலம் நன்றாகப் பேசுவாள்.

“மக்டா, உனக்கு ஆட்டுக்கறி எது எனத் தெரியுமா” நான் ஆட்டுக்கறி என்பதை மட்டன் எனக்கேட்டதால் அவளுக்கு விளங்கவில்லை.

இது மாட்டுக்கறி , இது பன்றிக்கறி, இது கோழிக்கறி என ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு வந்தாள். “நீ எந்தக் கறியைக் கேட்கிறாய், மீன் வேண்டும் என்றால் வலது புறம் இருக்கின்றது”

“இல்லை, இல்லை, எனக்கு மட்டன் வேண்டும், கோட் அல்லது லாம்ப்” ஒரு வேளை என்னுடைய ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு விளங்காமல் கூட இருந்திருக்கலாம்.

“மன்னிக்கவும் நீ சொல்லுவது எனக்கு விளங்கவில்லை”

பன்றியைப்போல உருவத்தில் சிறியதாக இருக்கும், தலையில் கொம்பு இருக்கும், நம்ம ஊர் ஆட்டின் நினைவாக கருப்பாக இருக்கும் என ஆங்கிலத்திலும் சைகை மொழியிலும் விளக்க முயன்றும் முடியவில்லை.

எந்திரன் ரஜினியைப்போல ம்மெமேஹே எனக்கத்திக் காட்டிவிடலாம் என்ற பொழுது இயேசு நினைவுக்கு வந்தார்.

“உனது கடவுள் இயேசு கூட கையில் வைத்திருப்பாரே … ஆங்கிலத்தில் குட் ஷெப்பர்ட் என்றெல்லாம் சொல்லுவார்களே, அந்தக்கறி வேண்டும்”

“ஓ அன்யெல்லோ, அல்லது ரோம் நகரத்து வழக்கு மொழியில் அப்பியாச்சி, அது இந்தக்கடையில் கிடைக்காது , அடுத்தக் கடையில் புத்தம் புது கறிக்கிடைக்கும் அங்கு போகலாம் வா” என்றாள்.

அடுத்தக்கடையில் ஆட்டுக்கறி வாங்கிவிட்டு மக்டலீனாவுடன் வெளியே வரும்பொழுது,

“இன்றைக்கு உன் அறையில் ஆட்டுக்கறி குழம்ப்பா, இந்தியர்களும் இத்தாலியர்களைப்போல காரச்சாரமாக சமைப்பார்கள் எனக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்” என்றாள்.

“உனக்கு நேரம் இருந்தால் வாயேன், உனக்கும் சேர்த்து தமிழ் நாட்டுப்பாணியில் சமைத்துத் தருகின்றேன்”

“இன்றைக்கு வேண்டாம், அடுத்த வாரம் என் வீட்டிற்கு வா, கொஞ்சம் இத்தாலியம் , கொஞ்சம் ஆங்கிலம் நிறைய ஆட்டுக்கறி சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே கோப்பை வைனுடன்
பேசுவோம்” என்றபடி மக்டலீனா என்னிடம் இருந்து விடைபெற்றாள்.

இனி மொழிக்கும் பிரச்சினையில்லை இனி, செத்தெ, செய், ஜின்குவே, க்வாத்துரோ , துவே, ஊனோ என அடுத்த ஏழு நாட்களை எண்ணியபடி ஆட்டுக்கறியில் அடுத்த அத்தியாயத்தை எழுத தயாராக வேண்டியதுதான். விடுதியின் வரவேற்பறைப்படத்திலிருந்த இயேசுவின் புன்னகை சில மில்லிமீட்டர் அகன்றிருந்ததுபோலத் தோன்றியது.

- நவம்பர் 22, 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
SC upholds OBC quota, TWENTY-SEVEN PER CENT QUOTA FOR OBCs என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முதல் வேளையாக என்னுடைய தூரத்து மாமா பையன் சேகரை தொலைபேசியில் கூப்பிட்டேன். "சேகரா, ஒழுங்கா GATE எக்ஸாம் எழுது ...
மேலும் கதையை படிக்க...
வெளிநாட்டுப் பயணங்கள் என் வாழ்வில் அன்றாடம் ஆகிப்போன இக்காலக்கட்டங்களில் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளை நினைக்காமல் இருந்ததில்லை. அவளுக்கு நான் கொடுத்திருக்கும் கவுரவம் என்னுடைய கடைசி காதலி என்பதுதான். அவளுக்குப்பிறகு யாரையும் காதலிக்க தோன்றவில்லை, ஏனெனில் நான் காதலிக்கப்பட்டது ...
மேலும் கதையை படிக்க...
"தேவையில்லாமல் நம்ம நேரத்தை உறிஞ்சி எடுத்துக்கிற எந்த ஒரு விசயத்திலேயும் ஆர்வம் இல்லை தம்பி" புதுசா எங்க அபார்ட்மென்ட்ஸ்ல குடிவந்து இருக்கும் மோகனிடம் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தைப் பற்றி பேச ஆரம்பித்தபோது, தனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை என்பதை அவர் ...
மேலும் கதையை படிக்க...
கணேசன் என்னதான் வாட்டசாட்டமாய் சக்திமான் முகேஷ் கண்ணா மாதிரி இருந்தாலும் இந்த சுவீடன் குளிரை மட்டும் அவரால் தாங்க முடியவில்லை. விடியற்காலை மூன்று மணிக்கு என் போர்வையை யாரோ உருவுவது போல இருக்க, எழுந்து பார்த்தால் நம்ம கணேசன், சத்தமே இல்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
"அகரம் இப்போ சிகரமாச்சு,தகரம் இப்போ தங்கமாச்சு, காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு" எனஅடுத்த தடுப்பில் இருந்த மோகனின் கைத்தொலைபேசி பாட, அவர் எடுத்துப் பேசினார். "சொல்லுங்க பஷீர்" "----" "அன்னக்கி காலையில வந்து கடைப்பையன் இஸ்மாயில் கிட்ட கொடுத்தேனே!!" "----" "ஓ அப்படியா, சரி பஷீர், மதியம் வந்து ...
மேலும் கதையை படிக்க...
இட ஒதுக்கீடு
யாக் அல்ஸ்கார் தீக்
நானும் இந்தியன்
அப்பாவி கணேசனும் அமானுஷ்யமும்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)