உறைநிலை மனங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 21, 2013
பார்வையிட்டோர்: 10,303 
 

நான் அனுபவித்த வரையில் குளிர் மூன்று வகையானது, தமிழ்நாட்டில் கிடைக்கும் மார்கழி மாதக் குளிர், சுகமான குளிர் அது, சின்ன ஸ்வெட்டர் அணிந்து ஏழு மணி வாக்கில், அருகில் இருக்கும் டீக்கடைக்கு சென்று , தினத்தந்தியை மேய்ந்தபடி, பக்கத்து கடைக்கு காய்கறி வாங்க வரும் அம்முவை சைட் அடிப்பதில் ஏலக்காய் டீ துணையுடன் மென்மையான குளிர் மேலும் சுவாரசியப்படும்.

ஃப்ரிட்ஜைத் திறந்தவுடன் முகத்தில் அடிக்கும் குளிர், சில வினாடிகளுக்கு நன்றாக இருக்கும், இது இரண்டாவது வகையிலான குளிர், ஸ்வீடனைப் பொருத்தமட்டில் இது மிதமான குளிர். இந்த மிதமான குளிருக்கே ஸ்வீடன் வந்த முதல் வாரத்தில் ஒரு பனியன், பின்னர் கழுத்து வைக்காத டீஷர்ட், அதன் மேல் ஒரு சட்டை,அதற்கு மேல் ஸ்வெட்டர், கடைசி அடுக்காக ஒரு ஓவர்கோட் என தனுஷ் மாதிரி இருந்தவன், பூசணிகாயிற்கு சின்னக் கத்தரிக்காயைத்தலையாக வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி மாறிப்போனேன். அம்முவிற்கு அனுப்பவேண்டும் என, கார்ல்ஸ்க்ரோனா ரயில் நிலையத்திற்கு வெளியில் வெறும் சட்டையுடன் ஸ்டைல் போட்டோ எடுக்க நான் பட்டபாடு தனிக்கதை. கடைசிவகை குளிர் ஃப்ரீசரில் அடிக்கும் குளிர், இது ஆரம்பித்து சில வாரங்கள் ஆகின்றது. உடன் பிறப்பாக பனி மழையும் ஆரம்பித்துவிட்டது.

முதலிரண்டு நாட்களில் பனிப்பொழிவைப் பார்த்த மகிழ்ச்சி, அடுத்தடுத்த நாட்களில் கரைந்துப்போனது. வீட்டிற்குள் இருந்தபடி, சன்னலின் வழியாக, கையில் தேநீர் கோப்பையுடன் இளையராஜாவின் பின்ணனி இசையில், புது வெள்ளை மழை எனப்பார்க்கும் உற்சாக உணர்வு, பனியில் அலுவலகம் போகும்பொழுது வருவதில்லை. அலுவலகம் பத்து நிமிட நடைதான், பாதையில் வழுக்கி விழுந்துவிடக்கூடாது எனக் கவனத்துடன் நடக்கும்பொழுது, மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சினை, நான் வீட்டில் இருக்கும்பொழுது அம்மு மிஸ்ட் கால் கொடுக்க மாட்டாள், அலுவலகத்தில் இருக்கும்பொழுதும் கொடுக்க மாட்டாள். சரியாக உறைபனிக்குளிரில் நடக்கும்பொழுதுதான் கொடுப்பாள். ஒரு நிமிடத்திற்குள் திருப்பிக்கூப்பிட்டாகவேண்டும், இல்லை என்றால் மண்டகப்படிதான். கையுறையைக் கழட்டி, திரும்பக்கூப்பிட்டு கண்ணே மணியே எனக் காதல் மொழிப் பேசி முடிப்பதற்குள் எனது கை ஃப்ரீசரில் வைத்தக் கோழியைப்போல விறைத்துவிடும்.

பனிக்காலத்தில் இவர்களுக்கு இருக்கும் ஒரே மகழ்ச்சி, கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள், ஊரே பனிப்படர்வில் பிரகாசிக்கும் மின்னொளி வெள்ளத்தில் மிதக்கும்,
நான் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. மொத்தம் இருபது வீடுகளில் நான் ஒருவன் மட்டுமே வெளிநாட்டுக்காரன் அதிலும் மாநிறத்திற்கு சற்றுக்குறைவானவன், மற்றவர்கள் தங்க நிறக் கூந்தலுடன் 14 தலைமுறைகளாக தங்களது ஏழாம் அறிவைப் பாதுகாத்து கொண்டு வருபவர்கள். கருப்பாக இருப்பவர்கள் என்றால் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்ற தோரணையுடன் இருப்பவர்களாக எனக்குப்பட்டது, தீவிர வலதுசாரி, வெளிநாட்டவர் எதிர்ப்பு கட்சி, கடைசியாக நடந்தத் தேர்தலில், இந்தப்பகுதியில் 95 சதவீத வாக்குகளைப் பெற்றது என எனது அலுவலக பாகிஸ்தானியத் தோழன் சொன்னான். எனக்கு எப்படி அந்த குடியிருப்புப் பகுதியில் வீடு கிடைத்தது என்ற வியப்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு.

நான் வேலைப்பார்க்கும் ஸ்வீடன் நிறுவனத்தைப் பொருத்தமட்டில் நான் அவர்களுக்குக் கிடைத்த அடிமைகளில் நான் மிகவும் திறமைசாலியானவன், அருகில் வைத்துக்கொண்டால் என்னை அதிக நேரம் சாறு பிழியலாம் என்பதால் எனது மனிதவள மேலாளார் இந்த வீட்டைப் பெற்றுத்தந்தார், உடல் உழைப்பு சார்ந்த அடிமைகளை விட, அறிவுசார் அடிமைகளுக்கு எங்கும் மதிப்புதான். நான் வீட்டு வாடகைத் தரவேண்டியதில்லை என்றாலும், ஏழால் பெருக்கி இந்திய பணத்திற்குப் பார்க்கும்பொழுது ஒரு இந்திய கடைநிலை அரசாங்க ஊழியனின் இரண்டு வருட சம்பளம்.

அழகு மனிதர்களின் மத்தியில் நான் பார்த்த ஒரேஅழுக்கு மனிதர், கார்ல்ஸ்க்ரோனா ரயில் நிலையத்தின் மூலையில் இருக்கும் ஒரு பெஞ்சில் தனது அழுக்கு மூட்டையுடன் அடிக்கடி
தென்படும் ஒரு வயதானவர். வெளிநாட்டுக்காரர் அல்ல, ஸ்வீடிஷ் மண்ணின் மைந்தர்தான். நான் எப்பொழுது ரயில் நிலையம் சென்றாலும் அங்கு தென்படுவார், சில சமயங்களில் அருகில் இருக்கு அரபுக்கடை ஒன்றில் ஏதேனும் வாங்கிக்கொண்டு இருப்பார். வீடில்லாதவர்கள் ஸ்வீடனில் இல்லை என்ற எண்ணத்தை இது உடைத்து நொறுக்கியது. பகலில் சரி, இரவில் என்ன செய்வார், ஸ்வீடனின் அனைத்து ரயில் நிலையங்களும் நள்ளிரவைக் கடந்த பின்னர் பூட்டப்பட்டு விடும். முதன் முறையாக ஸ்டாக்ஹோல்ம் மைய ரயில்நிலையத்தில் அடித்துத் துரத்தாதக் குறையாக அனைவைரையும் வெளியேற்றினர். நல்லவேளை நமது மார்கழிக்குளிரைத் தரும் ஸ்காண்டிநேவிய கோடையாக இருந்ததால் தப்பித்தேன்.

இந்த வயதானவர் இரவில் எங்குத் தங்குகிறார் என்பதைக் கண்டுபிடித்தாகவேண்டும், என வெறுமனே 10 மணியில் இருந்து கோபன்ஹேகன் போகும் ரயில்களை வேடிக்கைப்பார்த்தபடி, காத்திருந்தேன். வயதானவர் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டார், 7 ஆம் எண் பேருந்தைப்பிடித்தார், கடைசி நிறுத்தத்தில் இறங்கினார். அவரைப்பின் தொடர்ந்தேன். அகதிகள், ஏழைகள், மாணவர்கள் தங்கி இருக்கும் ஊருக்கு வெளியே இருக்கும் அந்தக்குடியிருப்புப் பகுதியினுள் நுழைந்தார், தமிழகத்தில் இருப்பது போல, காவலாளிகள் கிடையாது. எல்லாம் தானியங்கு முறை. குடியிருப்பின் வாசலில் சிலவினாடிகள் காத்திருந்த பின்னர், என்னைப்பார்த்து, உள்நுழையும் கடவு எண் தெரியுமா என ஸ்வீடிஷில் கேட்டார். பதில் சொல்வதற்குள்,

பால்கனியில் இருந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஆப்பிரிக்க கருப்பன் எங்களைப் பார்த்ததும் கீழே வந்து உள்ளிருந்து கதவைத் திறந்துவிட்டான். தனது வீட்டிற்குப்போவார்
எனப்பார்த்தால், வயதானவர், மாடிப்படிகளுக்குக் கீழ் இருந்த இடத்தில் தனது படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் ஏதேச்சையாகப்பின் தொடருவதைப்போல அவரைத்தொடர்ந்தேன். அதேக்குடியிருப்புப் பகுதி, ஆனால் வேறுக்கட்டிடம், வேறு ஒரு ஆள் கதவைத் திறந்துவிட, மாடிப்படிகளின் கீழ் உள்ள இடத்தில் அவரின் வாசம். வார இறுதிக்கொண்டாட்டங்களை கோபன்ஹேகனில் கோலாகலமாகக் கொண்டாடிவிட்டு , கடைசி ரயிலில் கார்ல்ஸ்க்ரோனா வந்திறங்கியபொழுது, அந்த முதியவர் என்னைப்பார்த்து சிரித்தபடி பின் தொடர்ந்தார். வாசலில் குடியிருப்பில் உள்நுழைவதற்கான எண்ணை அடித்துவிட்டு, கதவை அவருக்காக திறந்துவிட்டேன். எனது குடியிருப்பின் மாடிப்படிகளில் கீழ் இருக்கும் இடத்தில் ஒரு குடும்பமே நடத்தலாம். அத்தனை விசாலமானது. தொடர்ந்த நாட்களில், நான் அலுவலகம் முடிந்து வரும் வழியில் காத்திருந்து என்னைப் பின் தொடர்ந்து, இரவு தங்கிவிட்டு, விடியற்காலையில் ரயில் நிலையம் திறக்கும் சமயத்தில் சென்றுவிடுவார்.

மூன்றாம் நாள், இரவு இரவு பதினொரு மணி அளவில் அழைப்பு மணி அடிக்கப்பட்டது, யார் இந்த வேளையில், ஒரு வேளை அந்த வயதானவர் அழைக்கிறாரோ என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்தால், எனக்கு மேல் தளத்தில் இருக்கும் இளம் தம்பதியினர் முகத்தில் கடுமையுடன், சிறு குழந்தையுடன் இவர்களைப் பார்த்திருக்கின்றேன். நான் ஒரு முறை நட்புப்புன்னகை செய்தபொழுது வறட்டுப்புன்னைகையைத் திரும்பக்கொடுத்ததால் அவர்களை அதன்பின்னர் கண்டுகொண்டதில்லை.

”நீ தான் அந்த வயதான மனிதருக்கு கதவைத் திறந்துவிட்டாயா?” அந்த இளம் மனைவி கேட்டார்.

“ஆமாம், வெளியே கடும் குளிர் அடிக்கின்றது, அதனால் தான் திறந்துவிட்டேன்”

“இது சிறு குழந்தைகள் இருக்கும் பகுதி, அந்த நபர் நோயாளியைப்போலவும் தெரிகிறார், அநாமதேய நபர்கள் வருவதை நாங்கள் விரும்புவதில்லை”

“மனிதாபிமான அடிப்படையில்தான் திறந்துவிட்டேன், இனிமேல் அவ்வாறு நிகழாது, சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாள் வயதான மனிதரிடம் சென்று கடவு எண்ணைக் கொடுத்துவிட்டு, இனிமேல் என்னை எதிர்பார்க்க வேண்டாம், அவராகவே திறந்து வந்து மடிப்படிகளில் கீழ்
படுத்துக்கொள்ளவும் எனச்சொல்லிவிட்டேன்.

மூன்று தினங்கள் எந்தப்பிரச்சினை இன்றி சென்றது, நான்காம் நாள், எனது வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட்டது, இந்த முறை போலிஸ், போலிஸிற்குப்பின்னர் அந்த தம்பதியினர் மற்றும் மேலும் சில குடியிருப்பு வாசிகள்.

காவலதிகாரிகள் கதவை இனி அந்த முதியவருக்கு திறந்துவிடக்கூடாது என என்னை எச்சரிக்கை வந்தார்களாம்.

“அந்த முதியவர் ஒரு நாள் நான் கடவு எண்ணை அடிக்கும்பொழுது பார்த்துவிட்டார், ஒரு வேளை அதன் மூலம் உள்ளே வந்து இருக்கலாம், எனக்கு இது பற்றி எதுவும் மேலேத்
தெரியாது” என்றேன்.

எனது பதிலில் திருப்தி அடையாவிட்டாலும், வேறு வழியின்றி அவர்கள் சென்றனர். பால்கனி வழியே வெளியேப்பார்த்தேன். அந்த முதியவர் காவல்துறையின் காரில் ஏற்றப்பட்டிருந்தார்.

மறுநாள் கடவு எண் அடித்து உள்நுழையும் முறை மாற்றப்பட்டது. வீட்டிற்கு இரண்டு ஸ்மார்ட்கார்ட்கள் கொடுக்கப்பட்டன. ஏடிம்மில் கார்டை நுழைத்தை கடவுச்சொல்லை அடிப்பது போல , கதவைத் திறக்க புது வழிமுறை. எனக்கு மட்டும் ஒரு அட்டை மட்டும் கொடுக்கப்பட்டது. சில நாட்கள் காணாமல் போய் இருந்த முதியவரை மீண்டும் வழியில் பார்த்தேன்.

7 ஆம் எண் பேருந்திற்காகக் காத்திருப்பதாகக் கூறினார். 7 ஆம் எண் பேருந்து வருவதைப்போலத் தெரியவில்லை. அந்த வாரத்தில் கடும்பனிப்பொழிவும் கடுமையான குளிரும் இருக்கும் என வானிலை எச்சரிக்கை இருந்ததால், அவரை நான் என்னுடன் அழைத்துச் சென்றேன். வீட்டின் அருகில் அந்தத் தம்பதியினர் என்னைப்பார்த்தனர்.

“உனக்கு அறிவு இல்லையா, இனியும் இவருக்காகக் கதவைத் திறந்துவிட்டால் நீயும் இவருடன் வெளியேற்றப்படுவாய் ” என்பதை பக்குவமான மொழியில் சொன்னார்கள். .

“இவர் என் வீட்டு விருந்தாளி, என் விருந்தாளியை என் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு எனக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றது” எனச்சொல்லிவிட்டு வீட்டிற்கு அழைத்துச்சென்றேன்.

மறுநாள் என்னிடம் “எனக்கு நான் வாழும் வாழ்க்கை முறையேப்பிடித்து இருக்கின்றது, வீடுகளில் வழக்கமான படுக்கை விரிப்புகள் தூக்கம் எனக்குப் பிடிக்கவில்லை ஆனாலும் உன் அன்புக்கு நன்றிகள்”

எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். ஏதோ ஒரு உந்துதலில் என் வீட்டு விருந்தாளி எனக்கூட்டிவிட்டு வந்துவிட்டேன், ஒரேயடியாக இங்கேயேத் தங்கிவிடுவாரோ என்ற பயம் உள்ளூர இருந்தது, அவரே போறேன் என்று சொன்னதும் மகிழ்ச்சியாகவே வழியனுப்பும் முன்னர்,

“ஒரு வேளை 7 ஆம் எண் பேருந்து கிடைக்கவில்லை என்றாலோ, அதிக பனி குளிர் என்றாலோ தாரளமாக இங்கு வரலாம்” என எனது கைபேசி எண்ணைக்கொடுத்தேன்.

வரும் நாட்களில் பனியும் குளிரும் மேன்மேலும் அதிகமாகும் என்ற ஒவ்வொரு எச்சரிக்கையின் போதும் முதியவர் நினைவுக்கு வருவார், பின் அம்முவின் உரையாடல்களில் காணாமல் போய்விடுவார். புதுவருட ஆரம்பத்தில் அலுவலக நிமித்தமாக ஸ்டாக்ஹோல்ம் செல்ல வேண்டி இருந்தது. சக்கையையும் மறு முறை பிழிவதைப்போல இரண்டு நாட்களில் இரண்டு வார வேலையை வாங்கிக்கொண்டார்கள். பல எடுக்காத கைபேசி அழைப்புகள். பெரும்பாலனவை அம்முவினது, சிலவை புதிய எண்கள், கார்ல்ஸ்க்ரோனா எண்கள் போல இருந்தன.

விடியற்காலையில் 8 மணி நேர பேருந்து பயணத்திற்குப்பின்னர்,ஸ்டாக்ஹோல்மிலிருந்து கார்ல்ஸ்க்ரோனா வந்தடைந்த பொழுது சுத்தம் செய்யப்படாத சாலைகளில் கணுக்காலுக்கும் மேலே பனிபடர்வு இருந்தது. எனது தெருவின் முனையில் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு போலிஸ் வாகனம். ஏற்கனவே கதவைத் திறந்த விசயத்தில் என்னை விசாரித்த அதிகாரியும் அங்கு இருந்தார்.

அவரிடம் போய் என்னவென்று கேட்டபொழுது, “அந்த முதியவர் பனிக்குளிரில் இறந்துவிட்டார், அவரின் உடலை எடுத்துப்போகத்தான் வந்து இருக்கின்றோம்”

ஸ்வீடன் வந்த பின்னர் முதன் முறையாக கண்கலங்கியது. ஒருத்தர் கூடவா கதவைத் திறந்துவிடவில்லை. எனக்கு வந்திருந்த அறிமுகமில்லாத எண்களை மீண்டும் ஒரு முறைப்
பார்த்தேன். கடைசி அழைப்பு நேற்றிரவு 11 மணிக்கு, கடவுளே , நான் கதவைத் திறப்பேன் என்ற நம்பிக்கையில் அல்லவா வந்திருப்பார். சிறிய கூட்டத்தில் என்னை எச்சரித்த
தம்பதியினரும், வேறு சில குடியிருப்பு வாசிகளும் இருந்தனர். என்னை கண்ணுக்கு கண் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தபடி இருப்பதாக பாசாங்கு செய்து கொண்டிருந்தனர்.
பாசாங்கையும் மீறி குற்ற உணர்ச்சி தெரிந்தது. அவர்களை விட எனக்கு அதிகமாவே இருந்தது. ஒரு நிமிடம் எனது கையுறையைக் கழட்டிவிட்டு அந்த மைனஸ் 10 டிகிரியில் வெறும் கையுடன் இருந்தேன். கையில் மரத்துப்போன உணர்ச்சியை மீட்டு எடுக்க அன்று பகல் முழுவதும். ஆனது. கை உணர்ச்சி வந்தாலும் மனது மரத்தேப்போனது. மறுநாளும்
அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு பால்கனி சன்னலின் வழியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். பனி மழைக் கொட்டிக்கொண்டிருந்தது.

மேல்தள தம்பதியினரில் இளம் மனைவி தனது கைக்குழந்தையுடன் வெளியில் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். கடவு அட்டையை மறந்து வைத்து விட்டாள்
போலும். நான் பால்கனியில் இருப்பதைப்பார்த்தவுடன் என்னைப்பார்த்து கையை ஆட்டி சைகையில் கதவைத் திறந்துவிட சொன்னாள்.

நான் அவளையே புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக மற்றவர் படும் கஷ்டம் ஆனந்தமாக இருந்தது. நான் திறக்கப்போவதில்லை என்பதைப்புரிந்து கொண்டாளோ என்னவோ, கையுறையைக் கழட்டிவிட்டு கைபேசியை எடுத்து அவளின் கணவனிட்ம் பேசினாள் போல, சில நிமிடங்களுக்குப்பிறகு அவளின் கணவன் கதவைத் திறந்துவிட்டு உள்ளே அழைத்து செல்லும் முன்னர், இருவரும் என்னைப்பார்த்தனர். குரூர சிரிப்புடன் உறைந்த மனங்களுக்கு மத்தியில் மரத்துப்போன மனிதத்துடன் அவர்களுக்கு நடுவிரலைக் காட்டினேன்.

– நவம்பர் 17, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *