கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 8,224 
 

கிருபாவுக்கு என்னதான் பிரச்சனை? கிருபா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவள் நடந்து கொள்ளும் விதம் எனக்கு எரிச்சலைத்தான் மூட்டுகின்றது. எரிச்சல் தலைக்கு ஏறும்போது கோவாமாக மாறுகிறது. அந்த கோவத்தில்தான் கிருபாவை நன்றாக அடித்துவிட்டேன். நெஞ்சழுத்தம் நிறைந்தவள்; வாங்கிய அடிக்காவது கண்ணீர் விட்டாளா? ஏதோ பெரிய மனுஷியைப் போல அறைக்குள் சென்றுவிட்டாள். எல்லாம் அவள் பாட்டியைச் சொல்ல வேண்டும். அவர் இவளுக்குக் கொடுத்த செல்லம்தான். அவரைச் சொல்ல என்ன இருக்கிறது? அவர்தான் படத்தில் மாலையோடு ஐக்கியமாகி விட்டாரே. தலைவலி என்னவோ எனக்குதான். எனக்கு என்றால் எனக்கு மட்டுமல்ல; என் மனைவிக்கும்தான்.

நானும் என் மனைவியும் வீட்டில் சேர்ந்திருப்பது மிகவும் அரிது. நான் சந்திரனென்றால் என் மனைவி சூரியன். என் மனைவிக்கு எப்போதுமே காலை வேலை. எனக்கோ இரவு வேலை. ஆக, நான் பகலில் வீட்டில் இருப்பேன் (உறங்குவேன்). என் மனைவி இரவில் வீட்டில் இருப்பாள் (உறங்குவாள்). சிங்கையில் வேலை செய்பவரின் வாழ்க்கையே இப்படித்தானே. வேலை முடிந்து வீடு வரும் நேரம் வீட்டின் அலங்கோலம் கோவத்தைத் தலையின் உச்சியில் நிப்பாட்டும். வீடெல்லாம் பூவிதழ்கள் ஆங்காங்கே பிய்த்து வீசப்பட்டிருக்கும். அது கிருபாவின் வேலைதான். அதனாலேயே கிருபா என் மனைவியிடம் அடி வாங்குவாள். எவ்வளவு அடி வாங்கினாலும் மறுநாள் அதே நிலைதான். நானும் பலமுறை கிருபாவிடம் ஏன் இப்படியெல்லாம் செய்ற என்று கேட்டுவிட்டேன். தலை குனிந்தபடி பதில் ஏதும் பேச மாட்டாள்.

கிருபா ஒரு வருஷமாக எங்களோடுதான் இருக்கிறாள். இந்த ஒரு வருஷத்தில் அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அதீத தீவிரம் கண்டு வருகின்றன. நானும் என் மனைவியும் அவளது நடவடிக்கையால் பலமுறை குழப்பத்தில் ஆழ்ந்ததும் உண்டு.

ஆரம்பத்தில் கிருபா எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ஷ்டமானவளாய் தெரிந்தாள். அவள் வருகைதான் எனக்கு தந்தை எனும் கௌரவத்தைக் கொடுத்தது. எனது மனைவிக்கும் தாய் எனும் உயர்பதவியை அளித்தது. அதோடு எங்கள் வாழ்வில் நல்லதும் நடக்க ஆரம்பித்தது. அவள் பிறந்த நேரம் எனக்கும் என் மனைவிக்கும் சிங்கையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. மனமே இல்லாமல் கிருபாவை அம்மாவிடம் விட்டு விட்டு நாங்கள் இருவரும் சிங்கப்பூரீல் அமர்ந்தோம். வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே எனக்கு பதவி உயர்வு, மனைவிக்கு சம்பள உயர்வு. இவ்வளவும் கிடைத்திட கிருபா பிறந்த நேரமே என்று திடமாக நம்பினோம். ஆக, வாழ்க்கையில் அவளுக்கு வேண்டிய சகல வசதிகளும் கிடைக்க வேண்டும். அவளுக்காக நாங்கள் பொருள் ஈட்ட வேண்டும் எனும் வேட்கையில் அதீத தீவிரம். மாதத்தில் ஒருமுறை அவளை வந்து பார்த்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. நாளடைவில் அதுவும் குறைந்து போனது. அம்மாவிடம் தொலைப்பேசி உரையாடலிலேயே கிருபாவைப் பற்றி விசாரித்துக் கொண்டோம்.

கிருபாவின் வளர்ப்பில் எந்தவொரு குறையும் வைக்கவில்லை. தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்திருந்தோம். குழந்தைப் பருவத்தில் எங்கள் இருவரின் படத்தைக் காட்டி காட்டி மகிழ்கிறாள் என அம்மா ஒவ்வொரு முறையும் சொல்லும்போதும் எங்களிடத்தில் மகிழ்ச்சி ததும்பினாலும் சோகம் கீற்றாய் முகத்தில் படிந்து சென்றதுண்டு. எல்லாம் கிருபாவுக்குத்தானே என எங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டதும் உண்டு. ஒருகட்டத்தில் அம்மா எனக்கு அழைத்து, கிருபா முதன்முதலாக ‘அம்மா’ என்று அழைத்ததாக சொன்னபோது என் மனைவி அழுந்தது எல்லாமே சமீபத்தில் அரங்கேறியது போலவே உள்ளது. காலத்தின் வேகசுழற்சி அதற்குள் பத்தாண்டுகளைக் கடந்து விட்டது. அதுவரை கிருபா அவள் பாட்டியிடம்தான் வளர்ந்தாள்.

வேலைப்பளு அதிகரிக்க நானும் என் மனைவியும் இயந்திரமாகிக் கொண்டிருந்தோம். அம்மா ஒவ்வொரு முறையும் என்னை அழைத்து, எப்படா வருவே? கிருபா கேட்டிகிட்டே இருக்கானு என்று சொல்லும்போதெல்லாம் இன்று நாளை என சொல்லி காலம் கடத்தியதுண்டு. வேலையை விட எனக்கும் சரி என் மனைவிக்கும் சரி மனம் வரவில்லை. நல்ல சம்பளத்தில் இது போன்ற ஒரு வேலை கிடைக்குமா என்பது சந்தேகமே. இருந்த வேலையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டோம்.

எதிர்பாராமல் வந்த தொலைப்பேசி அழைப்பில் அம்மா மாரடைப்பால் தவறி விட்டதாக செய்தி வந்தது. அலறியடித்துக் கொண்டு வந்தபோது அம்மா சவப்பெட்டியில் பூமாலைகள் சூழ வைக்கப்பட்டிருந்தாள். பக்கத்தில் கிருபா அழுது கொண்டிருந்தாள். என் மனைவியைக் கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். அம்மா, பாட்டிக்கு என்னம்மா ஆச்சு? யேம்மா பாட்டி படுத்துக் கெடக்குறாங்க? சொல்லுமா…சொல்லு என அழுந்து புலம்பினாள் கிருபா. பாட்டி சாமிகிட்ட போய்டாங்க கிருபா, இனிமே பாட்டி வரமாட்டாங்கடா என்று என் மனைவி அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

அம்மாவின் மறைவுக்கு பின் கிருபாவை அழைத்து வந்துவிட்டேன். கிருபாவின் படிப்பைக் கருதி, இனி சிங்கையில் இருக்க முடியாதென ஜோகூர்பாருவிலேயே வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். ஜோகூரிலிருந்து வேலைக்குச் சிங்கை செல்ல வேண்டிய நிலை எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்டது. இயல்பான எங்களின் வாழ்க்கை பாதித்திருந்தது.

பின்னிரவு நேரங்களில் பலமுறை கிருபா கனவில் அவளது பாட்டியை நினைத்து அலறியது என் மனைவியின் உறக்கத்தைக் கெடுத்து மறுநாள் வேலைக்கு போவதில் பெரும் சிக்கலை உருவாக்கிவிட்டது. எனக்கோ வேலையை அவசரமாக முடித்துக்கொண்டு காலையிலேயே கிருபாவைப் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை. கிருபா பள்ளி முடிந்து வீடு வரும்போது நான் இருக்க மாட்டேன். மனைவியோ வீடு வர மாலை நேரம் கடந்து போயிருக்கும். வேலையிடத்தில் அவ்வப்போது கிருபா எனக்கும் என் மனைவிக்கும் தொலைபேசியில் அழைத்து, அப்பா எப்ப வருவீங்க? அம்மா எங்கம்மா இருக்கீங்க? என்று கேட்டுக்கொண்டேயிருப்பாள். ஆரம்பத்தில் அவளிடம் செல்லமாக எடுத்துக் கூறினாலும் நாளடைவில் என்னையே மறந்து அவளிடத்தில் எரிந்து விழுந்ததும் உண்டு.

கிருபா எனக்கும் மனைவிக்கும் ஒரு புதிய பிரச்சனையாகத் தோன்றினாள். கிருபாவை யார் பார்த்துக்கொள்வது என்று தெரியாமல் நானும் என் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டோம். இருவருமே வேலைக்குச் செல்லவேண்டியதால் கிருபாவுக்குத் துணையாக இந்தோனேசியப் பணிப்பெண் ஒருத்தியைத் தருவித்திருந்தேன். கிருபாவிடம் அப்பெண்ணை அறிமுகப்படுத்தியபோது அவள் முகத்தில் ஒருவித சலிப்பு தோன்றி மறைந்தது என்னால் உணர முடிந்தது. கிருபாவுக்கு அவளைப் பிடிக்கவில்லை. அவளோ கிருபாவை அணைத்து கொண்டாள். கிருபாவுக்கு ஒரு துணை வந்துவிட்டாள் என நினைத்துக் கொண்டு அகம் மகிழ்ந்தேன்.

எப்போதாவது எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாளில் விடுமுறை வருவதுண்டு. அன்றைய தினத்தில் அறையைத் தாளிட்டு நானும் என் மனைவியும் இன்பம் கொள்வோம். அந்த நேரத்தில்தான் கிருபா அறையின் கதவைத் திறக்கும் வரை தட்டிக்கொண்டே இருப்பாள். அந்நேரத்தில் கிருபா எனக்கு எதிரியாகவும் தெரிவாள். அசந்து உறங்கும் சில நேரங்களில் எங்கள் இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டு விளையாடுவாள். என் மனைவி கிருபாவைத் திட்டி அறைக்கு அனுப்பி விடுவாள்.

திருமண நாளன்று கோவிலுக்குச் செல்லலாம் என்று நானும் மனைவியும் வேலைக்கு விடுப்பு சொல்லியிருந்தோம். கிருபா பாவாடையைப் போட்டுவிடும்படி தன் அம்மாவிடம் எடுத்துச் சென்றாள். அவள் அப்பாவிடம் போடா என்று என்னிடம் அனுப்பி வைத்தாள். நான் வேலைக்காரியை அழைத்து கிருபாவுக்குப் பாவாடையை போட்டுவிடும்படி சொன்னேன். கிருபா பாவாடையை உதறிவிட்டது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. கோவிலுக்குச் சென்று திரும்பும்போது வெளியே பூக்கடையைப் பார்த்து புருவம் உயர்த்தினாள் கிருபா. அப்பா எனக்கு பூ வேணும்பா என்றாள் கிருபா. உனக்கு எதுக்கடி பூ? என்று கேட்டாள் என் மனைவி. எனக்கு வேணும் என அடம்பிடித்தாள் கிருபா. நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். சொல் பேச்சு கேட்கமாட்டியா? என முறைத்தாள் என் மனைவி. அதெல்லாம் முடியாது, எனக்கு பூ வேணும் என விடாப்பிடியாக இருந்தாள் கிருபா. சொன்னா கேளு கிருபா என்றேன். வெடுக்கென்று கையை உதறினாள் கிருபா. மனைவியின் கோவத்தில் கிருபாவின் கண்ணம் சிவந்தது. அன்று இரவு ‘டெங்காபே’யில் நானும் என் மனைவியும் கிருபாவின் கையைப் பிடித்துக் கொண்டு கடலோரமாக நடந்து சென்றோம். அவளது கைகள் உணர்வற்று இருந்தன. கிருபா கடலையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் கிருபாவின் பள்ளியிலிருந்து எனக்கு கடிதம் வந்திருந்தது. கிருபாவின் பெற்றோர் பள்ளிக்கு வரும்படி அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நானும் இதுவரை கிருபா பயிலும் பள்ளிக்குப் போய் அவளது படிப்புப்பற்றி விசாரித்ததேயில்லை. அன்று அவளது பள்ளிக்குச் சென்றேன். ஆசிரியை கிருபாவின் தேர்ச்சி அறிக்கையைக் காட்டியபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான பாடங்களில் அவள் தேர்ச்சி பெறவில்லை. கிருபா பாட்டி வீட்டில் வளர்ந்தபோது கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்கியதை நானறிவேன். ஆசிரியை மேலும் கூறுகையில், கிருபா பாடநேரங்களில் கவனம் செலுத்துவதில்லையென்றும் எப்போதும் பள்ளி வளாகத்தின் பூச்செடிகளில் பூக்களைப் பறித்து அவற்றை ஒன்றொடு ஒன்று அடுக்கியபின் ஆவேசமாக கொய்ந்து எறிகிறாளாம். யாரோடும் அவ்வளவாக பேசுவதும் கிடையாதாம். இப்படியாக பலமாதிரியான குற்றம் குறைகளை ஆசிரியைக் கூறியபோது நான் அந்த குற்றப்பத்திரிக்கையை மனசுக்குள் அலசினேன்.

அன்றைய தினம் கிருபா தன் அம்மாவிடம் நன்றாக அடி வாங்கியிருந்தாள். மறுநாள் நண்பர்களிடம் விசாரித்தபின் கிருபாவை தரமான பிரத்தியேக வகுப்பில் சேர்த்து விட்டேன். பள்ளிக்கூடம், பிரத்தியேக வகுப்பு என கிருபாவின் அட்டவணை கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்தது. நானும் என் மனைவியும் கிருபாவின் பார்வையிலிருந்து குறைந்திருந்தோம். நான் இருக்கும் நேரத்தில் கிருபா வீட்டில் இல்லாமலிருந்தாள். அவள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவள் அம்மா உறங்கியிருந்தாள்.

வேலைக்காரி வந்தது முதல் என் மனைவியும் கிருபாவை அதிக சிரம் எடுத்து கவனிக்கவில்லை. வேலைக்காரி வீட்டு வேலையை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என் மனைவிக்குக் கூடுதல் ஓய்வைக் கொடுத்தது. எட்டு மணி வேலைக்காக அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்திருக்கும் என் மனைவி அந்த ஓய்வை உறங்க பயன்படுத்திக் கொண்டாள்.

கிருபா பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பதாகவும் ஒழுங்காக சாப்பிடுவதில்லையென்றும் வேலைக்காரி சொல்லி எனக்கு தெரியவந்தது. இது சம்பந்தமாக கிருபாவை அழைத்துப் பேசினேன். அவள் என்னை பார்த்து பேசிய விதம் ஏதோ மூன்றாம் மனிதனைப் பார்த்து பேசுவதைப் போல இருந்தது. இனிமே ஒழுங்கா சாப்பிடு…கம்சியா சொல்றபடி கேட்டு நடந்துக்கோ…இல்ல கண்ணம் வீங்கிடும் என மிரட்டி வைத்தேன். அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை என்பது அவளது அலட்சியப்பார்வை காட்டியது. எனக்குள் கிருபாவின் நினைப்பு ஓடிக்கொண்டே இருந்தது. நான் வேலைக்காரியை அழைத்து கிருபாவைக் கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும் எதுவாக இருந்தாலும் எனக்கு தெரியப்படுத்தும்படியும் சொல்லி வைத்தேன்.

ஒரு நாள் வேலைக்காரி கிருபாவைப்பற்றி என்னிடம் போட்டு வைத்தாள். கிருபா அவளிடம் அவ்வளவாக பேசுவது கிடையாதாம். அப்படியே பேசினாலும் முகம் கொடுத்து பேசுவது கிடையாதாம். எப்போதும் தனிமையில் அமர்ந்து புத்தகப்பையில் பறித்து வைத்திருந்த பூக்களை எடுத்து ஒன்றோடு ஒன்று மாலையைத் தொடுப்பது போன்று அடுக்கிப் பார்க்கிறாளாம். அது அவளது கைக்கு அடங்காத போது பூக்களை கோவத்தில் ஆவேசமாக கொய்ந்து வீசி எறிகிறாளாம். வேலைக்காரி கிருபாவைப்பற்றி சொன்னதும், எனக்கு ஆசிரியைச் சொன்னது நினைவுக்கு வந்தது. அன்றைய இரவு வேலையிடத்தில் கிருபாவைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முறை என் மனைவி கிருபாவை அடித்துவிட்டதாக சொல்லி வேலை நேரத்தின் போது குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். அண்டை வீட்டுக்காரி சீனத்தி மனைவியிடம் கிருபாவைப்பற்றி புகார் சொன்னாளாம். கிருபா அவளது வீட்டுப் பூச்செடிகளில் பூத்திருந்த பூக்களை வேண்டுமென்றெ ஒவ்வொரு முறையும் பறித்து விடுகிறாளாம். இப்படியாக பூக்களைச் சார்ந்தே கிருபாவைப்பற்றி புகார்கள் வந்தன.

பூவுக்கும் கிருபாவுக்கும் என்னதான் தொடர்பு? என்ற கேள்வி என் மூளையின் நரம்பு மண்டலங்களை ஒவ்வொரு நாளும் தைத்தது. கிருபா நாளுக்கு நாள் எனக்கும் மனைவிக்கும் அந்நியமாகிக் கொண்டிருந்தாள். அவள் என்னையும் மனைவியும் கண்டுகொள்வதில்லை.

நான் மனைவியிடம், கிருபாவைப்பற்றி என்ன நினைக்கிறாய் என கேட்டேன். அவளோ இதில் நினைக்க என்ன இருக்கிறது? கிருபா நம் மகள், அவளுக்கென்ன? என்று கேள்வியை என்னிடம் திருப்பினாள். நான் அமைதியானேன். கிருபாவை உண்மையிலேயே இவள்தான் பெற்றாளா! என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. ஒருவேளை கிருபா அவளது அம்மா மாதிரியோ? என்ற எண்ணமும் எனக்குள் தோன்றி மறைந்தது.

கிருபா பாட்டியின் மறைவுக்குப் பின் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி விட்டாள். அந்த வட்டத்தை தாண்டி அவள் வருவதும் கிடையாது அல்லது பிறர் யாரும் அந்த வட்டத்திற்குள் நுழைய முடியாது. அவள் வட்டத்தில் பூக்கள் நிறைந்திருக்கின்றன. அவள் அப்பூக்களைத் தனது கைகளுக்குள் அடக்கப் பார்க்கிறாள். பூக்கள் அவளது கைகளில் அடங்காத போது ஆவேசத்துடன் பூக்களைக் கொய்ந்து வீசி எறிகிறாள். எனக்குள் கிருபாவைப்பற்றி இம்மாதிரியான விமர்சனங்கள் சுயமாகவே உருவெடுத்தன.

இன்றைக்கும் எனக்குள் அவளைப் பற்றிய பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்த போதுதான் அதே அண்டை வீட்டுக்காரி சீனத்தி என்னிடம் கிருபாவைப்பற்றி புகார் கூறினாள். வழக்கமான அதே புகார். நான் சீனத்தியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். உள்ளுக்குள் கோவம் கொப்பளித்தது. கிருபாவை இப்படியே விட்டுவிட்டால் அது சரி பட்டு வராது என்று அவளை அழைத்து விசாரித்தேன்.

உனக்கு என்னதான் பிரச்சனை? எதுக்கு பக்கத்து வீட்ல பூத்திருந்த பூக்களை பறிச்சு நாசப்படுத்தின கிருபா? என கேட்டேன். அவள் எதும் பேசாமல் என்னையே வெறித்துக் கொண்டிருந்தாள். உன்னை தான் கேட்குறேன். எதுக்கு இப்படி பண்ற? கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லு என்றேன். கிருபா பதில் பேசாமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள். அவள் நடந்து கொள்ளும் விதம் எனக்கு எரிச்சலை மூட்டியது. அந்த கோவத்தில்தான் கிருபாவை நன்றாக அடித்துவிட்டேன்.

அறைக்குள் சென்றவள் இதுவரை வெளியே வரவேயில்லை. அழைத்துப் பார்த்தேன்; சத்தமேயில்லை. எழுந்து அறைக்குச் சென்றேன். நான் அவள் அறைக்குச் செல்வது மிகக் குறைவு. கிருபா மெத்தையில் உறங்கிப் போயிருந்தாள். அவள் அறை எனக்கு விசித்திரமாக இருந்தது. அறையின் சுவர்களில் கிருபா சித்திரங்களைப் பல கோணங்களில் வரைந்து வைத்திருந்தாள். சித்திரங்களில் ஒன்று ஆணைப் போலவும் மற்றொன்று பெண்ணைப் போலவும் இருந்தது. அவற்றின் மத்தியில் அப்பா அம்மா என்று எழுதியிருந்தாள். அவை ஒவ்வொரு கோணங்களிலும் தங்கள் உருவத்தை மாற்றிக்கொண்டு இறுதியில் அகோரமாவதைப் போன்று அவள் வரைந்திருந்தாள். அச்சித்திரங்களைச் சுற்றிப் பூக்களையும் வரைந்திருந்தாள். அவள் வரைந்த ஓவியங்கள் எதையோ சொல்ல முற்படுவதைப் போல இருந்தன. அவளுடைய அலமாரி கதவு திறந்து கிடந்தது. கதவை மூடச் சென்றேன். அலமாரியின் உள்ள கிருபாவின் பாட்டியின் படத்தோடு நானும் என் மனைவியும் சேர்ந்திருக்கும் படம் வாடி கருகிப்போன பூமாலைகளோடு ஐக்கியமாகியிருந்தது.

– மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை 2013 ஆண்டு நடத்திய பேரவைக்கதைகள்-27 சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *