பொறுப்பறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 6,905 
 

நகரப் பூங்கா, வழக்கமான கூட்டமின்றி, ஆங்காங்கே சிலர் நடைபயிற்சியில் இருக்க, குழந்தைகள் சறுக்கு மரமேறி இறங்கி விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்த்து சிவராமன் சார் தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி அமர்ந்து இருந்தார்.

சிவராமனுக்கு வயது என்பதை கடந்து ஆறு மாதமாகிறது.

மனைவியை இழந்து மூத்த மகளுடன் சீர்காழியில் வசிக்கிறார். இளையமகள் சென்னையில் இருக்கிறார். இவர் அங்கும் இங்குமாக இருப்பார். ஆண் வாரிசு இல்லாவிட்டாலும் பெண்கள் இரண்டும் தன்னை கைக்குள் வைத்து காப்பதும், மாப்பிள்ளை இருவரும் நன்கு மரியாதையுடன் இருப்பதையும் இவர் அதனை தம் வாழ்க்கையில் கிடைத்த ஒரு வரமாகவே பார்க்கின்றார்.

என்ன சார், நடக்கலையா? எனக் கேட்டபடி வந்த ஆசிரியர் முருகேசன், அவர் அருகில் அமர்ந்தார்.

இருவரும் பூங்காவில் நண்பர்கள் ஆனவர்கள், இன்னும் ஒர வருட வேலை இருக்கு முருகேசன் சாருக்கு.

ஏன் நீங்க நடக்கலை? என்றார் சிவராமன்.

இல்ல சார்,மனசு சங்கடமா இருக்கு, ஏன் என்று தெரியலை.

உங்களுக்கே தெரியாமா அப்படி என்ன சார் சங்கடம்?என்றார் சிவராமன்.

அது இல்ல சார், பிரச்சினை என்னன்னு தெரியுது. ஆனா மனசு கேக்க மாட்டேங்குது.

பிரச்சினை உங்களுக்கு தெரிஞ்சாலே அது ஒன்றும் பிரச்சினையே இல்லை போங்க!

பாதி பேரு பிரச்சினையே என்னன்னு தெரியாம இல்ல அலையறாங்க! என்று சிலேடையாகப் பேசினார்.

உங்களுக்கென்ன சார்! மாப்பிள்ளை தங்கமா அமைஞ்சுட்டாங்க!

இங்கே ஒரு பையனை வச்சுகிட்டு நான் படற பாடு இருக்கே, நாய் படுகிற பாடு என்றார் விரக்தியாக. நான் சொல்றதை அவன் கேட்கிறதில்லை, என் மனைவிக்கும் மருமகளுக்கும் ஒத்தே போக மாட்டேங்குது.

வீட்டுக்குள்ளே வந்தாலே ஏதாவது குத்தம், குறைன்னா எப்படி சார். எனப் புலம்பினார்.

நானும் இதெல்லாம் கடந்துதான் சார் வந்தேன். எல்லார் வீட்லேயும் நடக்கிறதுதான். ஆனா நமக்கு நடக்கும் போது பூதாகரமாக தோன்றும். இதற்கு பதட்டமே படாதிங்க! அணுகுமுறையை மாத்தினாலே போதுமானது என்று தத்துவம் பேசினார்.

என்னைப் பிரச்சினை உங்களுக்கு? சொல்லுங்கள் என்றார்.

எம் பையன் என் பேச்சை கேட்கிறதே இல்லை. என்றார்.

ஏன் கேட்கனும்னு, எதிர் பார்க்குறீங்க?

சார் நான் அவனின் அப்பா! நல்லது கெட்டது எனக்குத் தெரியாதா?

சார், அது சரி. ஆனா, அவன் உங்களின் மகன்.

இரண்டும் ஒன்றுதானே சார்.

உறவு முறைக்கு ஒன்றுதான்.

நடைமுறைக்கு அவன் உங்கள் மகன்.

அவனுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கு, அதை அவனை வாழவிடாம நீங்களே சில முடிவுகளை எடுத்து அவனிடம் நடக்கச் சொன்னால் அது சரியாகவே இருந்தாலும், அது அப்பா எடுத்த முடிவு என ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான் மகன்களின் இயல்பு.

அதுக்கு நான் என்ன செய்ய?

பொறுப்புக்களை துறந்து விடுங்கள். தானாக சரியாகிடும்..

அய்யா உங்களுக்கு பெண் பிள்ளைகள்,அதனாலே பிரச்சினை தெரியலை. ஆண் பிள்ளைங்க நம்மை வீட்டில் அலட்சியமாக நடந்துக்கிறதைப் பார்த்தா தாங்க முடியலை,

ஆணோ,பெண்ணோ, அவர்கள் வாழ்க்கை அவர்கள் வாழ நல்லது,கெட்டது எது என சொல்லி துணை நிற்க வேண்டுமே ஒழிய ஒரு போதும் முடிவுகளை திணிக்கக் கூடாது, என சொல்லி முடித்தார்.

அப்போது சிறுவர் கள் சண்டையிட்டுக் கொண்டு இருக்க, என்ன பசங்களா என்ன தகராறு என்றார்?

தாத்தா.. இவன் நான் சொல்றதையே கேட்க மாட்டேங்கிறான்,அதான் ..

உங்களில் கேப்டன் யாரு? என்றார்.

அப்படியெல்லாம் யாரும் இல்லை தாத்தா.

அதை முதலில் முடிவு செய்யுங்கள், பின் அவன் சொல்படி கேளுங்கள், பின் விளையாடுங்கள் என்றார்.

அதன் பிறகு அமைதியாய் விளையாடி மகிழ்ந்தார்கள்.

அய்யா இப்போ சொன்னிங்களே, பசங்களுக்கு, இதேதானே வீட்டில் சொல்கிறோம். வீட்டில் நாம்தானே கேப்டன், என்று மடக்கினார்.

ஆமாம்,ஆனால் இது விளையாட்டு ஒத்த வயது பிள்ளைகளுக்கு.

அது வாழ்க்கை, வயது வந்த பிள்ளைகளுடன்…நீங்கள் ஓய்வு பெற்ற கேப்டன் மாதிரி..

முடிவா என்னத்தான் சொல்றீங்க, எல்லாத்தையும் விட்டுட்டு அமைதியா இருன்னு சொல்றீங்க. அதானே,

பார்வையாளனாக மட்டும் இரு!என்று சொல்கின்றேன். தானாகவே சரியாகிடும் என்று கூறி முடித்தார்.

முருகேசன் முகத்திலும், மனத்திலும் வெளிச்சம் வந்தது, மாலை நேரம் மயங்கி பூங்காவில்.. இருள் சூழ்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *