கதாநாயகி

 

ஏனய்யா! நான் டைரக்டர் சாரைப் பார்க்க ரொம்ப தூரத்துல இருந்து வரேன், ரெண்டே நிமிஷம் பார்த்து சான்ஸ் கேட்டுட்டுப் போயிடறேனே!

“ஏன் கிழவி, எத்தனை வாட்டி சொல்றது? டைரக்டர் சார் ஒரு மாசம் கழிச்சி இன்னிக்குத்தான் வந்திருக்கார். இப்போ தூங்கிட்டிருக்கார். இன்னிக்கு யாரையும் பார்க்க மாட்டார். போ, போயிட்டு நாளைக்கு வா! வந்துட்டாங்க வயசான காலத்துல வீட்ல இருக்க முடியாம” காவலாளியின் சலிப்பான குரல்.

“என்னாப்பா! வயசானவ எத்தனை வாட்டி அலையறது. நீ என் பேரன் மாதிரி. கொஞ்சம் கேட்டு சொல்லு ராசா, உனக்கு புண்ணியமாப் போவும்” பாட்டியும் விட்டுத் தருவதாயில்லை. இவர்களின் குரலில் தூக்கம் கலைந்து விழித்தார் இயக்குனர் பார்த்திபராஜன். இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர். தனது கதைக்களமாகப் பெரும்பாலும் கிராமங்களையே தேர்ந்தெடுப்பவர். கண்ணியமான, வெற்றிப் படங்களைத் தரும் மிகச் சிலரில் ஒருவர்.

பாட்டிக்கு இந்த வயதில் நடிப்பதில் இருக்கும் ஆசையப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவரது அடுத்த படத்துக்கான பூஜை அடுத்த வாரத்தில் ஏ.வி.எம்-மில் தொடங்க இருந்தது. அதற்கான கதாநாயகியைக் கூடத் தேர்ந்தெடுத்து விட்டார். ஆனால் கதாநாயகி வயதானவராக வரும் கடைசி சில காட்சிகளில் நடிக்கத்தான் சரியான ஆள் கிடைக்கவில்லை. முன்னணி நடிகையரின் கால்ஷீட் கிடைக்காமல் வேறு ஆளைத் தேடிக் கொண்டிருந்தார். தேடிப் போன மூலிகை காலில் இடறியது போலத் தோன்றியது அந்தக் கிழவியைப் பார்த்ததும்.

“வாட்ச்மேன், அவங்களை உள்ளே அனுப்புப்பா!” இயக்குனரின் குரல் கேட்டதும் காவலாளி விறைப்போடு கேட்டைத் திறந்து விட்டான். வயதை மறந்து குடு குடுவென ஓடினாள் கிழவி.

கிராமத்து பாணியில் வாரி முடித்த தலை, தொள தொளவென்ற ரவிக்கை, பழைய ஆனால் சுத்தமான புடவை, கையில் அதே போன்ற சுத்தமான துணியில் சுற்றப்பட்ட ஒரு சின்ன மூட்டை என்று தன் முன் நின்ற கிழவியை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தார்.

“என்ன பாட்டி, இந்த வயசுல நடிக்கறதுக்கு சான்ஸ் தேடி வந்திருக்கீங்களே, உங்க வீட்ல இதுக்கு சம்மதிப்பாங்களா? நேரம் காலம் பார்க்காம வேலை செய்யற தொழில் இது. உங்களால முடியுமா?” சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்த இயக்குனருக்கு கிழவியின் ஒரே பதில் சிரிப்புடன் கூடிய பலமான தலையாட்டல்தான்.

“சரி உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாவது நாட்டுப்புறப் பாட்டு பாடி ஒரு சீன் நடிச்சிக் காண்பியுங்க” என்ற பார்த்திபராஜாவுக்கு அடுத்த சில நிமிடங்கள் முதல் மரியாதை பொன்னாத்தா, கிழக்குச் சீமையிலே சிறுவாயி இருவரும் கண் முன்னே நடமாடியது போல் இருந்தது.

“என்ன ஒரு நடிப்பு” சிலாகித்துக் கொண்டார். உடனே ஆயிரம் ரூபாய் நோட்டொன்றை எடுத்து அக்கிழவியின் கைகளில் கொடுத்தார். “என்னொட படத்துல கதாநாயகியோட முதுமைப் பருவத்துக்கு உங்களை ஒப்பந்தம் பண்ணிக்கறேன். உங்க விலாசம் குறிச்சி குடுத்துட்டுப் போங்க. பூஜை அன்னிக்கு வந்துடுங்க. நீங்க கதா நாயகியோட வயசான கதாபாத்திரத்துல நடிக்கறதால அவங்க நடிக்கும்போது அவங்களோட சின்ன வயசு மானரிசம் இதெல்லாம் பார்த்துக்கோங்க. அனேகமா அவங்களோட முக்கியமான காட்சிகள் இருக்கும்போதெல்லாம் நீங்களும் வரவேண்டியிருக்கும். ஊருக்கு எங்கயும் போயிடாதீங்க” என்றவாறு கை கூப்பி விடை கொடுத்தார்.

“ஐயா, இந்த ரூபாய்ல உங்க கையெழுத்துப் போட்டுக் கொடுங்க”

“எதுக்கும்மா.. ரூபாய் நோட்டுல எல்லாம் கையெழுத்து போடக் கூடாது. அது சும்மா இருந்த உங்க செலவுக்காவது உதவுமில்லையா” அன்போடு மறுத்தார் இயக்குனர்.

“ஐயா இந்த நோட்டை நான் என்னென்னிக்கும் செலவு பண்ணாம வெச்சிக்கணும்னுதான் கேட்கிறேனுங்க. தயவு செய்து மறுப்பு சொல்லாம போட்டுக் கொடுங்க” கிழவியின் வற்புறுத்தலுக்கிணங்கி தன் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார்.

அன்று படத்திற்கான பூஜை. பூஜை முடிந்ததும் சில முக்கியமான காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் பார்த்திபராஜா. அதற்காக அந்தக் கிழவியையும் வரச் சொல்லி இருந்தார். அவரது பொறுமையைச் சோதிப்பது போல் அந்தக் கிழவியை அது நேரம் வரை காணவில்லை. ஒரே கோபமாயிருந்த இயக்குனரை அணுகி என்ன விஷயமென்று விசாரித்தாள் அந்தப் படத்தின் கதாநாயகி மஞ்சுஸ்ரீ.

“உன்கிட்ட சொல்லி என்னம்மா பிரயோஜனம். உன்னோட வயசான கதாபாத்திரத்துக்கு ஒரு கிழவியைத் தேர்ந்தெடுத்திருந்தேன். வீடு தேடி வந்து வாய்ப்புக் கேட்டங்களே, திறமையானவங்களாவும் இருக்காங்களேன்னு வாய்ப்பு குடுத்தா இது வரைக்கும் அந்தக் கிழவி வரவே இல்லை. முகவரி எதுவும் குடுக்கவும் இல்லை. உதவி இயக்குனர்கள் இந்த விஷயத்தையே இப்போதான் சொல்றாங்க. படம் ஆரம்பிக்கற அன்னிக்கே டென்ஷனும் ஆரம்பிச்சிடுச்சி” கோபமாக ஆரம்பித்துப் புலம்பலில் முடித்தார் இயக்குனர்.

ஒரு மர்மச் சிரிப்புடன் தன் பையைத்துழாவி ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து இயக்குனரிடம் நீட்டினாள் மஞ்சுஸ்ரீ. “சார்.. ஆயிரம் ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா? இருந்தா எடுத்து வையுங்க இதோ வரேன் என்று ஒப்பனை அறையை நோக்கி ஓடினாள் மஞ்சுஸ்ரீ.

“இருக்கற கடுப்புல நேரம் காலம் தெரியாம இது வேறயா?” என்று இன்னும் கடுப்பானார் இயக்குனர். பக்கத்திலிருந்த உதவி இயக்குனர் மெதுவாக “குடுங்க சார், சில்லறை விஷயத்தை நான் பார்த்துக்கறேன்” என்று ரூபாய் நோட்டை வாங்கினார். அலட்சியமாக ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டுத் திரும்பிய இயக்குனரின் கண்ணில் அறைந்தது அவர் கையெழுத்து. அது அந்தக் கிழவிக்கு அவர் கொடுத்த நோட்டு. இது எப்படி கதா நாயகியின் கையில்.. வியந்து கொண்டே ஒப்பனை அறை வாசலைப் பார்த்த இயக்குனரின் கண்கள் வெளியே தெறித்து விடும் போல் விரிந்தன.

“மஞ்சு, நீயாம்மா?!!”

“ஆமாம் சார். இந்தப் படத்துல முழுக்க முழுக்க வயதான ரோல் முதற்கொண்டு நானே பண்ணனும்னு ரொம்பவும் ஆசைப் பட்டேன். ஆனா புது முகமா இருந்ததால அது ரொம்பவும் முக்கியமான கதாபாத்திரம், சரியா பண்ணலைன்னா படத்துக்கு உயிரே இருக்காதுன்னு சொல்லி நீங்க மறுத்துட்டீங்க. என்னால முடியும்னு நிரூபிக்கத்தான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்து வாய்ப்புக் கேட்டேன்” தயக்கத்துடன் பதிலளித்தாள் கிராமத்துப் பாணியில் தலை வாரி முடிந்து, தொள தொள ரவிக்கை, பழைய புடவை, துணி மூட்டை என்று காட்சியளித்த மஞ்சுஸ்ரீ.

பிறகென்ன… அவளே அந்தப் படத்தின் முழுமையான கதாநாயகி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?!

- ஸ்ரீ [kalpagam.r@gmail.com] (ஆகஸ்ட் 2007) 

தொடர்புடைய சிறுகதைகள்
டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து செல்வதாக ஏற்றியவரின் டாக்சி, முப்பது நிமிட நேர பயணத்திற்குப்பின் சாலை விளக்குகள் இல்லாத கம்பத்துப்பாதையில் குலுங்கியபடி நகர்ந்தது. ஓர் ஆற்றின் ...
மேலும் கதையை படிக்க...
இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி ...
மேலும் கதையை படிக்க...
‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி நாணயம் ஒன்றும் தெப்பக்குளத்தில் புதிதாக விடப்பட்டுள்ள மோட்டர் படகு சவாரிக்கான அனுமதிச் சீட்டும் இலவசமாகத் தருவதாக அறிவித்துப் பத்து தினங்களுக்கும் மேலாகியிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
"பிள்ளையாரப்பா.. இந்த வெயில்ல..ஜனங்க எல்லாம் என் கடையில வந்து தாகம் தீர்த்துக்கணும்.. கடை கல்லாவும் நிறையணும்.." சொல்லிக்கொண்டே பூவை சாமிக்கு போட்டார் குமாரசாமி. "ஏம்ப்பா செந்திலு.. மணி ஒன்பது ஆச்சு.. வியாபாரம் நடக்கிற நேரம்.. இந்த சேகரை எங்க காணோம்...?" " அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொன்னார் ...
மேலும் கதையை படிக்க...
“ம்ம்மா..., குப்பேய்...!” அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய குரல், இரண்டு பக்கமும் அப்பார்ட்மென்ட் கட்டடங்களும், மாடி வீடுகளும் நெருக்கியடித்து நின்றிருந்த அந்த வீதியின் தொடக்கத்திலிருந்து கேட்டது. குரலின் தொடர்ச்சியாக வீதிக்குள் திரும்பி கொண்டே, நுழைந்தது இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, அடர்த்தியான பச்சை நிற குப்பை வண்டி. ...
மேலும் கதையை படிக்க...
போயாக்
உறவு, பந்தம், பாசம்…
அவர்கள் ரயிலைப் பார்க்கவில்லை
சில்லறை
குப்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)