Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சப்தங்களும் சங்கீதமும்

 

குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.

இப்போதென்றில்லை. பிறந்ததிலிருந்து எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்பது மாதத்தில் தொண்டைக் குழியில் திரள்கிற சத்தம் இந்தக் குழந்தைக்கு எழவில்லை. சில குழந்தைகள் மெதுவாய்த்தான் பேசும் என்றாள் அம்மா. ரொம்ப நாள் கழித்துப் பேச ஆரம்பித்துச் சண்டப் பிரசண்டனாய் மாறிப் போன கதை சொன்னாள் பாட்டி. ஒரு வருஷம் இரண்டாயிற்று. கதை நிஜமாகவில்லை. துக்கம் நெஞ்சுத் தழும்பாய்ப் பழகிப் போச்சு.

கொல்லைத் தாழ்வாரத்தில் சோற்றுப் பானையைக் கொண்டு வைத்துவிட்டு, குழந்தையை இழுத்து வைத்துக் கொண்டு காகமாய்க் கரைந்தாள் மனைவி. பெட்ரூம் விளக்கொளியில் விரல்களை நாய்களாய்ச் சுவரில் கிடத்திக் குரைத்துக் காண்பித்தாள். மியாவ் பூனையாய்க் கண்ணை உருட்டினாள். பசுக் கன்றாய் ஏங்கி ஏங்கி அழைத்தாள்.

குழந்தை திரும்பிப் பார்க்கவில்லை. மிரண்டு அழவில்லை. வியந்து சிரிக்க வில்லை.

விம்மினாள் மனைவி. இவன் விக்கித்துப் போனான். சாபமா ? சாமி கோபமா ? செய்வினையா ? ஊருக்கு உறவுக்குச் செய்யாத வினையா ? மந்திரித்துக் கயிறு கட்டினார்கள். பச்சிலை எண்ணெய் காய்ச்சிக் காதில் ஊற்றினார்கள். உருண்டு உருண்டு அங்கப் பிரதட்சிணம் செய்தார்கள். இங்கிலீஷ் டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அவன், இது கேளாச் செவி என்றான். செவிதான் பேசாத வாய்க்கும் காரணம் என்று சொன்னான். ஸ்பெஷலிஸ்ட்டுக்கு வழி காண்பித்தான். பெரியவர் நடையாய் நடக்க வைத்தார். பணமாய்க் கரைத்தெடுத்தார். கடைசியில் உதட்டைப் பிதுக்கினார். உயிரின் மூல அணுவிலேயே (Gene) கோளாறு என்றார். இதற்குத்தான் கிட்டின சொந்தத்துக்குள் கல்யாணம் கூடாது என்று அறிவுரையை இலவசமாய்த் தந்தார். எல்லாத்துக்கும் மேலே ஒருத்தன் இருக்கான் என்று விரலை உயர்த்தினார்.

விஞ்ஞானம் பொய்த்துப்போய் விட்டது. உலகத்தை மடக்கிக் கைக்குள் வைத்துக் கொள்கிற விஞ்ஞானம் ஒரு குழந்தையிடம் பொய்த்துப் போனது. இவன் சலித்துப் போனான். மனிதர்களை நம்ப முடியாது போனதற்கப்புறம் மனைவி, கடவுளை நம்பத் தொடங்கினாள். செவ்வாய், வியாழன் ராப்பட்டினி கிடந்தாள். சனிக்கிழமை எள்ளுப் பொட்டலம் ஏற்றி வைத்தாள். இவனுக்கும் பால் கொடுக்க பார்வதியோ, சொல் கொடுக்க குமரேசனோ ஒருநாள் வருவார்கள் என்று நம்பினாள்.

இவனுக்குத்தான் இருப்புக் கொள்ளவில்லை. வீட்டில் கால் தரிக்கவில்லை. பேசினான், வெறி வந்தவன்போல் பேசினான். சந்தி சந்தியாய் நின்று அரசியல், மேடை மேடையாய் ஏறிக் கவிதை, நண்பர்களிடத்தில் தொழிற் சங்கம், தெரிந்தவர்களிடத்தில் இலக்கியம், தெருமுனையில் சினிமா, ஊர்வம்பு, பிறந்தால், செத்தால், கல்யாணம் கட்டிக் கொண்டால், பூப்படைந்தால், மூப்படைந்தால், ஆபிஸில் வந்து சேர்ந்தால், பிரிந்து போனால் எல்லாத்துக்கும் மேடை, கவிதை, பேச்சு.

ஆனால் அத்தனையும் வாழ்த்தில்லை. இடக்கு, கிண்டல், குதர்க்கம், நையாண்டி, வசவு பளிச்சென்று வெளியே தெரியாமல், பூடகமாய் புத்திசாலித்தனத்தில் பூசிப் பூசி வரும். வேட்டி சட்டையில் ஒட்டிக் கொண்ட ஊசி முள்ளாய்க் கண்ணுக்குத் தெரியாமல் குத்தும்.

“ சார்வாளைப் பற்றி நமக்கெல்லாம் தெரியாதா, பரமஞானி, லௌகீகம், ஆபீஸ்கார்யம் எல்லாம் அற்பம் அவருக்கு … ”

“ அண்ணாசாமி மாதிரி, ஊர்பாடமே கால்பாடமா அலையறவா யார் இருக்கா. காவேரி வாய்க்கால், ஆத்துப்பாலம், கோவில் கும்பாபிஷேகம், கோவப்பிரட்டி எல்லாம் இவாளா கொண்டு வந்தா, பணம் சம்பாதிச்சுட்டான்னு எல்லாம் பேசிக்கிறா. பணம் என்ன பெரிய பணம். இன்னிக்கு வரும் … ”

“ கல்யாணப் பொண்ணைப் பற்றி ஊருக்கே தெரியும். பறந்துண்டே இருக்கிற பச்சைக்கிளி. உடனே பழந்தான் ஆகாரமோன்னு யாரும் கேட்டுடக்கூடாது. அவா ஏழை பிராமணன். பழத்தை எங்கே கண்டார் … ”

கூட்டம் எல்லாத்துக்கும் சிரிக்கும். சங்கேதக் குறிகள், பட்டப் பெயர்கள் புரிந்துகொண்டு, சிரிப்பே வெளியில் கேட்காமல் சிரிக்கும். சண்டைக் கோழியை, சர்க்கஸ் கோமாளியைப் பார்க்கிற குஷி அதற்கு. இவனைக் கூப்பிடனுப்பி கொம்பு சீவி விடும்.

இன்னொன்று பிறந்தது. தூளியை உதைத்துக் கிழித்தது. நீந்திற்று. தவழ்ந்தது. எல்லாவற்றுக்கும் மேல் பேசிற்று. வீட்டில் இருந்தால், இந்தச் சின்னதைத்தான் மடியில் தூக்கி வைத்துக் கொள்வான். அகரம், உகரம், ஏபிசிடி சொல்லிக் கொடுப்பான். குழந்தை ஏ என்று நீர் யானையாய் வாயைத் திறக்கும். பிஸ்கட்டைத் திணிப்பான். அய்ய் என்று உதட்டுக்கு நடுவில் வைத்து அழுத்தும். ஓ என்று அடி வயிற்றிலிருந்து குரல் எழுப்பும். பேசாக் குழந்தை இந்த வேடிக்கையைப் பார்த்துக் கண்ணை அகட்டிக் கொண்டு சிரிக்கும். இவனுக்குச் சிரிப்பு வராது.

‘ ஆமாம், இனி ’ என்று கை உயரும்.

இந்த அலைச்சல் ஒருநாள் எழும்பூர் ஸ்டேஷன் வாசலில் நின்றது. பக்கத்து பஸ் ஸ்டாப்பில் கூட்டம் வளைத்துக் கொண்டு நின்றது. இவனும் எட்டிப்பார்த்தான். கம்பும் கயிறும் கட்டையுமாய்க் கிடந்தது. தகர டின் மொத் மொத் என்று அடிவாங்கிக் கொண்டிருந்தது. துடப்பக்கட்டை ஸ்ஸ் என்று ரகசியம் பேசியது நாலைந்து குருடர்கள்.

“ என்ன சார் அது ? ”

பக்கத்தில் இருந்தவர் திருப்பிப் பார்த்தார்.

“ ஓ… அதைக் கேக்கறேளா, அது அவா சங்கீதம். பார்த்துண்டே இருங்கோ, இப்போ இவா ஏழு ஸ்வரஸ்தானமும் அதிர அதிர கச்சேரி பண்ணப்போறா. எந்தப் பாட்டும் எத்தனை மெல்லிய சங்கீதமும் ஜ்லுங் ஜ்லுங் என்று சோடா மூடியாய் அதிரும். வாத்தியம் என்று நமக்குப் பரிச்சயமானது ஒன்றும் இருக்காது. புல்புல்தாரா இருக்கும். சிலநாள் ஒத்தை வயலின் இருக்கும். மீதியெல்லாம் அவர்களாகப் பண்ணிக் கொண்டதுதான். கம்பி, மரக்கட்டை, தகர டின், துடைப்பக்கட்டை எல்லாம் வாத்தியமா வந்து உட்கார்ந்திருக்கும்.

அவாளச் சொல்லி என்ன ? “ நாங்க குருடர்கள் எங்களுக்குப் பார்க்க முடியவில்லை ? சூடு தான் சூரியன். வாசனை தான் பூ. ஹாரன்தான் பஸ், தடக் தடக்னா ரயில், சில்னு விழுந்தாள் காசு. உங்கள் பச்சையை, சிகப்பை, மஞ்சளை, எதிர்த்தாற்போல், இழுத்துக் கட்டின மாதிரி நிற்கிற பொண்ணை எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்கள் விகாரங்களைத் தெரியும். அதைத்தான் வாசிக்கிறோம் அதை வாசித்தே உங்கள் காதை அடைக்கிறோம் என்கிற மாதிரியில்லை இது ? நானும் பார்க்கிறேன், இந்த நாலு குருடர்களைப் பார்க்க நாற்பது ஐம்பது குருடர்கள் வளைத்துக் கொண்டு நிற்கிறார்கள் தினமும். வேடிக்கையாய் இல்லை. இதுதான் மெட்ராஸ் … சாருக்கு எந்த ஊர் ? ”

கூட்டம் சங்கீதத்தைப் பார்க்க இவன் அதைக் கேட்டுக் கொண்டு நின்றான். இந்தக் குருட்டு சங்கீதம் மடேர் மடேர் என்று பிடரியில் அறைந்தது. பிடித்து உலுக்கியது. “ எங்களுக்குக் கண் தெரியவில்லை. ஆனால் உங்கள் விகாரங்களைத் தெரியும் … ”

இவன் அடுத்தநாளே ஊர்வந்து சேர்ந்தான். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டு பிஸ்கட்டைச் சப்பிக் கொண்டிருந்த குழந்தை கண்ணை அகட்டிக் கொண்டு, இவனைப் பார்த்துக் கையை நீட்டிச் சிரித்தது. இவன் வாரி அள்ளிக் கொண்டான்.

குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை. ஆனால் இவனுக்குக் காது கேட்க ஆரம்பித்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
தாத்தா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. தாத்தாவிடம் கேட்பதற்கு அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. முக்கியமான கேள்வி. கேட்டே ஆகவேண்டிய கேள்வி. தன்னுடைய கணக்கு சரியா, தவறா? ஜனனி மீண்டும் ஒரு முறை அந்தப் பரிட்சை பேப்பரை ...
மேலும் கதையை படிக்க...
அவன் நிறம் வெள்ளை, வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த சுண்ணாம்பு வெள்ளை, வெளிறிப்போன ரோஜா வெள்ளை. லுகோடர்மா வெள்ளை. அவன் இடம் மூலை. மூலையின் இடதுபுறம் டெஸ்பாட்ச், அவன் நிறம் கொண்டு வந்து சேர்ந்த இடம். கஸ்டமர்கள் முகம் சுளிப்பார்கள். கவுண்ட்டரில் போட ...
மேலும் கதையை படிக்க...
இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை. 'பூமியின் கடைசி மனிதனுக்குக் காலை வணக்கங்கள் ' என்றது முக்கோணம். 'என்னது? ' 'பூமியின் ...
மேலும் கதையை படிக்க...
வெகு நாட்களுக்கு முன்பு எனக்குள் ஒரு கனவு இருந்தது. கனவிற்கு ஆதாரம் சுப்ரமணியன். சுப்புணி எங்கள் பள்ளியின் கபில்தேவ். விளையாட்டை ஆரம்பித்து வைக்கிற வேகப்பந்து வீச்சாளன். பந்தை விச ஆரம்பிப்பதற்கு முன் பன்னிரண்டு தப்படி நடந்து – அது என்ன கணக்கோ ? ...
மேலும் கதையை படிக்க...
கடை வாசலில் காத்திருந்த முகத்தைப் பார்த்ததுமே ரங்கனுக்குப் புரிந்துவிட்டது. இன்னொரு கிராக்கி. வந்திருந்தவன் கடைப் பலகையில் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருந்தான். பொரிகடலையோ, புண்ணாக்கோ தெரியவில்லை. வாய் மொச்சுக் மொச்சுக் என்று அரைத்துக் கொண்டிருந்தது. சற்றுத் தள்ளி, செயின் கார்டு இல்லாத ...
மேலும் கதையை படிக்க...
தப்புக் கணக்கு
பாம்பின் கால்
கல்கி
ஒரு கதவு மூடிக் கொண்டபோது
ராசி

சப்தங்களும் சங்கீதமும் மீது ஒரு கருத்து

  1. ஒரு அழஹானா கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)