கெடுபிடி

 

“அக்கா, வாங்கோக்கா… கிலோ அம்பது தானக்கா… வாங்கோ…” தீபனா திரம்பிப் பார்த்தாள். சனங்கள் நிரம்பி வழிய பஸ் சிரமப்பட்டு நகர முயற்சித்துக் கொண்டிருந்தது.

“கிலோ அம்பது… கிலோ அம்பது…” தீபனாவை மீண்டும் அந்தக் குரல் இழுத்தது. கறுத்துப் பளபளத்துக் கொண்டிருந்த திராட்சைக் குவியல்கள் அவளை வாவென்றழைத்தன.

“அரைக்கிலோ போடப்பன்….” பேர்சைத் திறந்து காசை எடுத்தபடியே சொன்னாள். அவள் சொல்லும்போதே சின்னவளின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. சின்னவளுக்கு ஏதேனும் வாங்கிக் கொண்டு போகவேண்டும். இல்லாவிட்டால் அவள் முகம் தொங்கிப் போகும். ஆசை ஆசையாய்க் காத்திருக்கும் அவளின் முகத்தை வாட வைக்கப் பிடிக்காமல் எப்போதும், ஏதேனும் அவளுக்கு வாங்கிக் கொண்டு போவதே வழமை. இன்று அவளுக்குத் திராட்சை. அவற்றைப் பார்க்கும்போது, அவள் முகத்தில் தோன்றப் போகும் குதூகலம் தீபனாவின் அன்றைய நாள் களைப்பைப் போக்கப் போதுமானதாயிருக்கும். திராட்சைகளோடு அவள் திரும்பிய போது நேரம் நான்கு பதினைந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. திருநெல்வேலியில் மூன்றரைக்கே, பஸ்ஸைப் பிடித்தும், இங்கு வர அரை மணிநேரம் ஆகிவிட்டது. இனி வரணி வரை போக வேண்டும். ஏற்கனவே நின்றிருந்த மினி பஸ் சனங்களுடன் போய்விட்டிருக்க வேறொரு மினிபஸ் இரண்டொரு மனிதர்களுடன் வெற்று ஆசனங்கள் நிறைய அவளுக்காகக் காத்திருந்தது.

“ஏறுங்கோ அக்கா… ஏறுங்கோ…” வழக்கமாய் வந்ததில் பழகிப்போன கண்டக்டர் அவளை வரவேற்றான். இவள் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் மேலும் சனங்கள் மளமளவென்று ஏறினர். பஸ் வெகுவிரைவிலேயே முழுமையாய் நிரப்பிக் கொண்டது. நேரம் நான்கு இருபதை அண்மித்தது. சனங்கள் இன்னும் ஏறினார்கள். தீபனா ஜன்னலோரம் அமர்ந்தபடி யாரும் தெரிந்தவர்கள் ஏறுகின்றார்களா என அவதானித்துக் கொண்டிருந்தாள்

பஸ் ஸ்டார்ட் ஆகிவிட்டபோதும் இன்னும் நகரவில்லை. ‘ஏன் இன்னும் நிண்டு மிலாந்துறான்…. கொன்வேயிலை அம்பிட்டால் தெரியும்’. பஸ்ஸினுள் ஏறியவர்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள். இவளுக்கும் ஒரு பயம் இருந்ததுதான். முன்பும் இரண்டு மூன்று தடவை இப்படி ‘கொன்வே’யில் அகப்பட்டு வீடு போய்ச் சேர இரவு ஏழு மணியாகிவிட்டது. முகத்தை அழுமாப்போல் வைத்துக்கொண்டு, வீட்டுக்கும், வாசலுக்குமாய்த் திரியும் சின்னவளை நினைக்கையில் மனம் பதறும். ஆனால் என்ன செய்ய முடியும்? வேலையை விட்டுவிட்டா போக முடியும்?

பஸ் கொஞ்சம், கொஞ்சமாய் நகரத் தொடங்கியது.

“கடைசி பஸ்… கடைசி பஸ்..” என்ற தன் அஸ்திரத்தைப் பாவிக்க முனைந்தபடி கண்டக்டர் பையன் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தான்.

இப்படியே பஸ்கள் ஆறுதலாய்க் கிளம்பிப் போயிருப்பின் முன்பொரு நாள் அவள் பஸ்ஸைத் தவற விட நேர்ந்திருக்காது. அன்று எவ்வளவு அவசரமாய் வந்தும் நாலரை ஆகிவிட்டது. இவள் வேர்க்க, விறுவிறுக்க திருநெல்வேலி பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடி வந்தும் கொடிகாம பஸ்ஸை காண முடியவில்லை. இப்போது நான்கு முப்பது மூன்றுதான். ஆனால் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்க மாட்டேன் என்பது போல் பஸ்கள் புறப்பட்டு விடுகின்றன. இவளுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றிப் போனது.என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தவள், அப்பால் நின்று கொண்டிருந்த ஓட்டோ ஒன்றைப் பிடித்து பஸ்ஸைப் பிடிக்கக் கூடியதூரம் வரை வரச் சொல்லி, செம்மணி எல்லையில் பஸ் தெரிவதைக் கண்டு எட்டி விரட்டி, அன்று அவனுக்கு முந்நூறு ரூபா கொடுத்துப் பின் பஸ்ஸிலேறிப் போனதை எப்படி மறக்க முடியும்? அவ்வாறு எத்தனையோ தடைகளையெல்லாம் தாண்டி வீடு போய்ச் சேர்ந்தவர்களுக்கு இன்று பஸ் மெதுவாகப் போவதையிட்டு அதிகம் கோபிக்கவும் முடியவில்லை. ஆனாலும், சில பெண்கள் பஸ் மெதுவாகப் போவதையிட்டு முணுமுணுக்காமல் இல்லை.

ஆஸ்பத்திரி முன் தாமதித்து, ஆட்களை ஏற்றிய மினி பஸ் அதற்குப் பிறகும் நின்று மிலாந்தாமல் வேகம் எடுத்தது. ‘அப்பாடா’ என எண்ணியபடி இவள் இருக்கையில் வாகாகச் சாய்ந்து கொண்டாள். உள்ளே ஒலித்துக் கொண்டிருந்த பாடல்களும் மிக ரம்மியமாய் இருக்க இவள் சாதாரணமாயே அந்தப் பயணத்தை ரசித்த படியிருந்தாள். காதில் ஒலித்த பாட்டின் இசையை மீறி விசில் ஒலி கேட்டபோது, திடுக்குற்று நிமிர்ந்தது மனம். பஸ்ஸின் வேகம் சீராகக் குறைந்து, டிரைவர் பஸ்ஸை மாம்பழம் சந்தியிலுள்ள ஒழுங்கையொன்றில் புகுந்து பின் வளமாய், உள்ளே உள்ளே போய்க் கொண்டிருந்தான்.

“இனி, வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த மாதிரித்தான்….”

உள்ளே பெரும் புகைச்சல் கிளம்பியது.

“சொல்லச் சொல்ல வைச்சுக் கொண்டிருந்தவன் இப்ப மறிச்ச பிறகு நாங்களெல்லோ நிக்க வேண்டிக் கிடக்கு…”

“இனி ஏழு மணிதான்…”

இவ்வாறான குரல்கள் உள்ளே பல்கிப் பெருகின. நிறுத்தப்பட்ட பஸ்ஸின் ஓய்வைப் பயன்படுத்தி கண்டக்டர் உள்ளே துருவிக் கொண்டு நுழைந்தான்.

“அக்கா காசை எடுங்கோக்கா….”

“இதுக்கு மட்டும் முன்னாலை வரத் தெரியும். கொண்டு போய்ச் சேர்க்க மட்டும் தெரியாது.”

யாரோ ஒருத்தி கத்தினாள்.

“வர விருப்பமில்லாட்டி இறங்குங்கோ அக்கா, சும்மா இதிலை ஏறி நிண்டு கொண்டு கத்தாதையுங்கோ….”

பொறுமையை இழந்து போன கண்டக்டர் பதிலுக்குக் கத்தினான். தீபனா மனங் கொந்தளித்துக கொண்டிருந்தாலும் பரிவாய் சனங்களை ஏறிட்டாள். ஓவ்வொருவருக்கும் எவ்வளவு பிரச்சனைகள், வேளைக்குப் போக முடியாமல் போய் விட்ட ஆதங்கத்தில் அந்தப் பெண்கள் கத்துகின்றார்கள். உண்மையில் பயணம் தடைப்பட யார் காரணமோ அவர்கள் மீதில் கோபத்தைக் காட்ட முடியாது. கோபத்தைக் காட்டுவதற்கு அவர்களுக்குக் கிடைத்தது, அந்த அப்பாவி கண்டக்டர். அவன் செய்த ஒரே தப்பு சற்றே ஊர்ந்தது, ஊர்ந்து மெதுவாக பஸ்ஸை ஓட்ட வைத்ததுதான். மற்றும்படி அவனும் இவர்களோடு தான் அலைந்து உரிய இடத்தில் பஸ்ஸை ஒப்படைத்து எத்தினை மணிக்குத் தனது வீட்டை அடையப் போகின்றானோ? அது எல்லாம் யோசிப்பது யார்? இவளும் எப்படியும் வேளைக்குப் போயே ஆக வேண்டும். கொடிகாமத்திற்கு அப்பால் எப்படிப் போவதென்று தெரியவில்லை. ஏழு மணியானால் ஊரடங்கு ஆகிவிடும். கொடிகாமத்தில் சைக்கிளை எடுத்துக் கொண்டு அப்பாலுள்ள முகாம்களைக் கடந்து வரணிக்கு எப்படிப் போக முடியும்?

தீபனாவின் முகம் கலவரத்தினால் சுருண்டு போனது.விட மாட்டானா…? விட மாட்டானா…? என உள்ளே ஏங்கிற்று மனம். எட்டி, எட்டிப் பார்த்த பார்வைக்குள் எந்த ஒரு வாகன அணியுமே சிக்கவில்லை. இரண்டு, மூன்று சீருடைகள் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தன. ‘கடவுளே, கடவுளே’ என நேர்ந்தபடி அவள் கண்களை மூடிக் காத்திருந்தாள். நேரம் துளித்துளியாய் மிகக் கடினமாய் நகர்ந்து கொண்டிருந்தது.

ஒற்றை ஒற்றையாய் இராணுவ வாகனச் சத்தங்கள் கேட்டன. எட்டிப் எட்டிப் பார்த்தாள். நிமிடங்களை விழுங்கிக் கொண்டு வாகனங்கள் பறந்தன. இவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு ஒவ்வொரு நிமிடத்தையும் கனத்தயுகங்களாகக் கடத்தினாள். கைத்தொலைபேசி மூலம் வீட்டுக்குத் தகவல் சொல்லவேண்டும் என்று நினைத்தாள். சற்றுப் பொறுத்துச் சொல்லிக் கொள்ளலாம். இப்போதிருந்தே ஏன் கணவனையும், குழந்தைகளையும் சங்கடத்திற்கு உள்ளாக்குவான் என்று தோன்றப் பேசாதிருந்தாள்.

பஸ்ஸிற்குள் அடிக்கடி கைத்தொலைபேசிகளின் சிணுங்கல்கள் கேட்டன. எல்லோரும் தத்தம் அவலத்தை வீட்டுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். என்ன நாடு இது….? விடிகாலை ஏழுமணிக்கு புறப்பட்டால் இரவு எட்டு மணி ஆகியும் வீட்டுக்குப் போய்ச் சேர்வோமா என்று தெரியாத நிலை. என்னதான் செய்வது இந்த நாட்டில். வீட்டிலும் இல்லாமல், அலுவலகத்திலும் இல்லாமல் வெறும் தெருவில் தானே பாதிப் பொழுது கழிகிறது.

ஏழு மணிக்கு ஊரடங்கு போடுகிறார்கள்தானே. அதன்பின் இந்த வாகன அணி போக முடியாதா? அல்லது சற்றுப் பொறுத்து பஸ்கள் புறப்பட்ட பின் ஐந்தரைக்குப் பிறகு போனால்தான் என்ன? இப்படி நாலரைக்கு உழைத்துக் களைத்து, வீட்டுக்குப் போகும் மக்கள் மீது, இப்படி ஈவிரக்கமற்ற அழுத்தத்தைப் பிரயோகிப்பது சரி தானா…? ஒரு பக்கம் வாகன அணி. இன்னொரு பக்கம் ஊடரங்கு. இரண்டு பக்கத்தாலும் நசித்தால் இந்த சனங்கள் என்னதான் செய்வது….? தீபனாவின் மனதில் பொங்கியெழுந்த கேள்விகள் தான் எல்லார் மனதிலும் எழுந்தன. எனினும் கேள்வி கேட்கின்ற சூழலிலா அவர்கள் இருக்கின்றார்கள்.

ஒற்றை ஒற்றையாய்க் கேட்ட வாகன இரைச்சல் சற்றே அடங்கி ஓய்ந்தது. வெளியே இறங்கி நின்றிருந்த சனங்கள் ஒவ்வொருவராய் உள்ளேறினார். நேரம் ஐந்தே முக்காலைக் கட்டியது. “கடவுளே, விட்டுவிட்டானென்றால் எவ்வளவு நல்லது.” மனம் பிரார்த்தனை பண்ணியது. ஏதோ நினைத்தவன் போல் வீதியில் நின்றவன் விசில் ஊத, பிறகும் கீழே நின்றவர்கள் தபதபவென்று உள்ளே ஏறினர். கண்டக்டர் அவசர அவசரமாய் சனங்களை உள்ளேற்றி ‘ரைட்’ சொன்னான். ட்றைவருக்கு எங்கிருந்துதான் அந்த வேகம் வந்ததோ தெரியாது. இவ்வளவு நேரமும் புதிதாய் பஸ் ஓட்டப் போகிறது போல் ஓடிக் கொண்டிருந்த ட்றவைர் இப்போது கை தேர்ந்த வாகன ஓட்டுனராய்த் தன் திறமையைக் காட்டினான்.

ஏதோ சின்னவளின் முகத்திலாவது சந்தோஷத்தைப் பார்க்கலாம் எனும் எண்ணம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. இனி மாம்பழம் சந்தியிலிருந்து கொடிகாமம் போகும்வரை எங்குமே மறிக்காதிருக்க வேண்டுமே என மனம் மன்றாடிக் கொண்டது. எதையும் திட்டவட்டமாக சொல்ல முடியாமலல்லவா இருக்கிறது. வேகமாகச் சென்ற பஸ் செம்மணியை நெருங்கியபோது நல்லூருக்குச் செல்லும் கிளைப் பாதையில் ஏற்கனவே பஸ்கள் வரிசையாய் மறிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. நிறைய சனங்கள் மோட்டார் சைக்கிள்களோடும் மறிக்கப்பட்டிருந்தனர்.சில வேளை இந்த வழியால் செல்லும் வாகனங்களைவிட்ட பின் அவர்களுக்குரிய தடைகள் அகற்றப்படக்கூடும். மனம் அந்தரித்துக் கொண்டிருந்தபோது இவர்களின் பஸ்ஸையும் சைகை காட்டி அந்தப் பாதைக்குள் பின்வளமாக அனுப்பினான் ஒரு சிப்பாய். இருப்புக் கொள்ளாமல் தவித்தபோது பஸ்ஸின் என்ஜினும் நிறுத்தப்பட்டது. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காற்றில் பறந்தது.

“சீ… என்ன வாழ்க்கை இது…?”

நேரம் ஆறு மணி ஆயிற்று. வெட்டவெளிக் காற்று குளிராகி ஜன்னலால் இவள் முகத்தை அடித்தது. மழைக் கால இருட்டு எங்கும் பரவத் தொடங்கியது. இவள் கண்களினூடு கண்ணீர் கரகரவென்று வழிந்தது. ஏதோ ஒற்றையடிக் காட்டுப் பாதையில் தனித்து வழி தவறியது போல் உணர்வு. தனித்து வழி தவறவில்லை. எல்லோரும் சேர்ந்து வழி தவறியிருக்கிறோம் என்பது போல் ஜன்னலுக்கு வெளியே கும்பலாய் சனங்கள் தெரிந்தார்கள். எத்தனை சைக்கிள்கள். எத்தனை மோட்டார் சைக்கிள்கள். மோட்டார் சைக்கிள்களில் இரண்டு மூன்று சிறுவர்கள் கூட நெருக்கியடித்து இருந்தார்கள்.

குழந்தைகளைக் கொண்டு வந்த எல்லாரும் இந்த இருட்டில் எப்படிப் போகப் போகிறார்கள். ஆறு மணி ஆகிவிட்டதனால் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். இன்னும் சற்று நேரத்தில் அவன் விசில் ஊதியதும் இந்த மழை இருட்டில் பீறிட்டபடி பறக்கப் போகின்ற இந்த மோட்டார் சைக்கிள்கள், மினி பஸ்கள் ஒன்றோடொன்று மோதாமல் இருக்க வேண்டுமே. வீட்டையும், நாட்டையும் நினைக்க, நினைக்க அவளுக்கு அழுகை வந்தது. யாரும் பார்த்து விடுவார்கள் என்ற உணர்வு எதுவுமின்றிக் கண்ணீர் விட்டாள். மழை மைம்மல் யாருக்குத் தெரியப் போகிறது. கண்ணீர் வழிய வழியக் கைகுட்டையால் ஒற்றியெடுத்த படி அவள் ஜன்னல் வழியே வெளியே வெறித்தாள். எந்த ஒரு வாகனமும் வருவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.

தொலைபேசியை எடுத்து செம்மணியடியில் நிற்பதாய் கணவனுக்குத் தகவல் சொன்னாள். சின்னவளைப் பற்றிப் கேட்டால் அழுகை வந்துவிடும். அவளும் கேட்கவில்லை. அவனும் அவளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இவளால் இந்த இரவு நிச்சயம் வீட்டுக்குப் போக முடியாது. போன முறை மாதிரி கொடிகாமத்தில் சைக்கிள் விடும் வீட்டில் தங்கிவிட்டு, காலை ஐந்தரைக்கு எழும்பி வீட்டுக்குப்போய் அதன் பின் குடும்பத்துக்கான கடமைகளைக் கவனித்து திரும்பவும் அவசரப்பட்டு எட்டு மணிக்காவது வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். வீட்டில், வேளைக்கு வெளிக்கிட வேண்டியதுதானே எனும் கணவனுக்கு, மூன்றரைக்கு முன் எப்படி வெளிக்கிடுவது என்று சொல்லிப் புரிய வைக்க முடியும். கையெழுத்து மிஷினுக்கு முன் என்ன நியாயத்தை, எப்படி வெளிப்படுத்த முடியும்? வேளைக்கு அலுவலகத்திற்கு வரவேண்டும் என வலியுறுத்தும் அதிகாரிகள் யாரும் எத்தனை மணிக்கு வீடு போய்ச் சேர்ந்தாய் என்று கேட்பதில்லையே.

கண்ணீரை அடக்கிக் கொண்டு வெளியே பார்த்த போது சைக்கிளில் போன இரு சிப்பாய்கள் மறிக்கப் பட்டவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு போனார்கள். இவர்களுக்கு எப்படிப் பதிலுக்குச் சிரிப்பது….? கை கால்களை இறுகக் கட்டிவிட்டுச் சிரி என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது நிலைமை.

“நாளைக்கு நீ சுடுதண்ணிப் போத்தில் கொண்டா மச்சான். நான் பிஸ்கட் கொண்டாறன்…” யாரோ விடலைகளின் பேச்சு இவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது. உள்ளே பஸ்ஸின் லைட் மங்கலாக ஒளிர்ந்தது. இரு பையன்கள் இவளிருந்த சீட்டிற்கு அருகில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவளது கண்களில் வழிந்த கண்ணீரை அவர்கள் கண்டார்களோ…? அதுதான் அவளின் கவனத்தை திசை திருப்பி அவளது முகத்தை மலரச் செய்யும் விருப்பமோ? அவள் முகத்தை அழுத்தித் துடைத்தாள். தொடர்ந்த அவர்களின் நகைச்சுவைப் பேச்சுக்களிடையே முகத்திற்குப் புன்னகையைப் பூசிக்கொண்டாள். பிரச்சினைக்குள்ளும் நகைச்சுவை பேசுகின்ற அவர்களால் அந்தச் சூழலின் இறுக்கம் சற்றே தளர்ந்தது. அப்பாடி, என மூச்சு விட முடிந்தது.

“நாளைக்கு ரேடியோவும் கொண்டர வேணும். பாட்டுக் கேக்க….”

“கச்சான் கொண்டந்தாலும் வறுத்துச் சாப்பிடலாம்…..”

லேசாய்ப்போன மனத்தை ஒரு பெருமூச்சோடு தாங்கிக் கொண்டாள். நேரம் ஏழு மணியாயிற்று. இருட்டு கனமாகவே திரண்டது. எந்த ஒரு வாகனமும் போகவில்லை. வீதியில் நின்றவன் விசிலை ஊதினான்.

“இப்பதான் விசிலூதிப் பழகுறான்….” எரிச்சல் தாளாமல் ஒரு குரல் முணுமுணுத்தது.

“அப்பாடி இப்பவாவது எல்லா வாகனமும் முகமாலைக்குப் போய்ச் சேர்ந்துதே….”

“அதெல்லாம் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தபடியாத் தானை எங்களை விடுபடூது…”

அவர்களின் பேச்சுக்குக் காத்திராமல் பஸ் சர்ரென்று சீறிக் கொண்டு பாய்ந்தது. நாவற்குழி வளைவில் வெள்ளை ஒளிப் புள்ளிகளாய், மோட்டார் சைக்கிள்களும், மினி பஸ்களும் வரிசையாய் அசைவது தெரிந்தது. சாதாரண வேளையெனில் அது ஒரு அழகான காட்சியாய் மனதில் பதிந்திருக்கும். இப்போதோ எந்த ஒரு விபத்தும் நேரா திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றியது.

வீதிகளிளெல்லாம் லாம்பு ஏந்தியபடி ஒவ்வொருவரும் தமது சொந்தங்களுக்காகக் காத்து இருந்தனர். இவளுக்கு….? கொடிகாமத்தில் கடைசி ஆட்களில் இவளும் ஒருத்தியாய் இறங்கிய போது மனம் கனத்தது. பைக்குள் இருந்த திராட்சையும் கூட…. இப்போது பளிச் சென்றிருக்கின்ற அந்தக் திராட்சைகள் தான் சின்னவளைப் பரவசப்படுத்தும். நாளை வாடி உலர்ந்த திராட்சைகளை நித்திரைப் பாயில் உலுக்கி எழுப்பிக் கொடுக்கிறபோது அவளது முகம் மலரவா செய்யும்…? கண்களில் மீண்டும் நீர் வந்து விடும்போல் தோன்றவே மனதைக் கல்லாக்கிய படி நடக்கத் தொடங்கினாள் தீபனா!

- ஜீவநதி :தை-மாசி 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
பூக்கத் தொடங்கியது பூவரசு. ஆள்களில்லாமல் வெறிச்சோடியிருந்த நிலத்தில் விருப்பமில்லாமலே பூத்துப் பூத்துச் சொரிந்து, சருகுகளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நின்று கொண்டிருக்கிறது. இப்படி எத்தினை தடவை பூத்தது அது. மஞ்சள், மஞ்சளாய், குமிழி குமிழியாய் இதழ்களை மலர்த்திச் சிரித்து, வசந்தகாலப் பண்ணோடு பறந்து ...
மேலும் கதையை படிக்க...
முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ ஒரு இரையைக் கவ்விக் கொண்டது. விரட்டி விடுவார்களோ என்ற பயம் தெளிந்ததாலோ என்னவோ மீண்டும் திருப்தியுற்று இரை தேடலில் ஆர்வமாயிற்று. வெளி ...
மேலும் கதையை படிக்க...
சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு பஸ்ஸும் ஒவ்வொருவரை ஏற்றிப் போயிற்று. இவள் ஏறவில்லை. சனங்கள் அதிக மென்றில்லை. ஏறியிருக்கலாம். ஏறவில்லை. அடிக்கடி மணி பார்த்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
“நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்...” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும் நிறையச் சேர்க்கிறனான் தானை. இண்டைக்கு எனக்குக் குரும்பட்டி கிடைக்கேல்லை என்டவுடனே என்னைப் பழிக்கிறதே... “ம்... நான் தரமாட்டன்...” வேணு எனக்குப் பழிப்புக் காட்டுறான். ...
மேலும் கதையை படிக்க...
இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான். இவள் அயர்ச்சியை மறந்து அவனை ஒரு கணம் பார்த்தாள். இது வரைக்கும் இப்படி நடந்ததில்லை. மணமான பிறகு ஒரு நாளுமே ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பூவரசு , ஒரு கடிகாரம் , ஒரு கிழவி
சிறகிழந்தவன்
விடுபடல்
வெளியில் வாழ்தல்
பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)