கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 2,807 
 

மனதுக்குள் இப்பொழுதெல்லாம் யார் யாரோவெல்லாம் வந்து போகிறார்கள். எதையாவது பார்த்தால் இதை எங்கோ பார்த்திருப்பதாக ஞாபகம் வந்து போகிறது, ஆனால் எப்பொழுது எங்கே? என்ற எண்ணங்களில் ஒரே குழப்பம். நான் நானாகத்தான் இருக்கிறேனா ? என்று கூட பயம் வருகிறது.

மெல்ல நடந்து கொண்டிருக்கிறேன், யாரோ தோளைத் தொட அனிச்சையாய் திரும்பி பார்க்கிறேன்.

என்னை ஞாபகம் இருக்கிறதா?

இதென்ன கேள்வி திடீரென்று ஒரு பெண் என்னை நிறுத்தி என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாள்.

ஆச்சர்யத்துடன் இல்லை என்று தலையசைத்து நடக்க முயற்சிக்கிறேன்.

ஆர் யூ ஆல் ரைட்? இந்த கேள்வி அந்த பெண்ணிடம் இருந்து வரவும் எனக்கு ஆச்சர்யம்? எனக்கென்ன பாருங்கள் நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.

எதற்காக என்னிடம் இப்படி கேட்கிறீர்கள், நீங்கள் மருத்துவரா? என்னிடமிருந்து சராமாரியாக இந்த கேள்வி வந்ததும் அந்த பெண் மென்மையாய் சிரித்தாள், நோ..நோ..ஐம் நாட் டாக்டர், ஆனா உங்க பக்கத்து வீட்டுலதான் வசிக்கிறேன். என்னைய பார்த்திருக்கிறீர்களா?

அந்த பெண்ணின் கேள்வி இப்பொழுது என்னை அந்த பெண்ணை உற்று பார்க்க தூண்டுகிறது. இருந்தால் இருபத்தி ஐந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கலாம், பழுப்பு கலந்த வெண்மை, முகம் வட்டமாய் இருக்கிறது. சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி அழகாய் இருக்கிறது, அப்படியே நின்று கொண்டிருந்தவனை அந்த பெண் உசுப்பினாள். நான் கேட்ட கேள்விக்கு இது வரை பதிலே சொல்லை நீங்க?

இல்லே, பட்டென்று சொன்னவன் உங்களை பார்த்த ஞாபகம் இல்லை, உங்க பேரு? சியாமளா. சாரி..உங்களை நான் பார்த்ததில்லை, தப்பா நினைச்சுக்காதீங்க பக்கத்துல இருந்தும் உங்களை பாக்க முயற்சி பண்ணாம இருந்துட்டேன்.

அந்த பெண் கொஞ்சம் முகம் மலர்ச்சியுடன் ‘இட்ஸ் ஆல்ரைட்’, நான் உங்களை அங்கிள்னு கூப்பிடலாமா? இது என்ன கேள்வி என்னை பார்த்தால் தாராளமா வயசு ஐம்பதுக்கு மேல இருக்கும்னு உங்களுக்கு தோணுதா? அப்படீன்னா நீங்க என்னை அங்கிள்னு கூப்பிட்டுக்கலாம்.

யாரோ ஒரு பெண் வேகமாக வந்து டாக்டர் உங்களுக்கு போன்.! சொல்லி விட்டு செல்லவும் அந்த பெண் என்னை குற்ற உணர்வுடன் பார்த்தாள். நான் குறு நகையுடன் பார்த்தேன், நீங்க டாக்டரா? அப்படீன்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க, இப்ப இவங்க உங்களை டாக்டர்னு கூப்பிட்டு போறாங்க.

கொஞ்சம் தடுமாறியவள் சாரி உங்க கூட நட்பு வச்சுக்கணும்னு தான் அப்படி சொன்னேன், ஒரு வேளை டாக்டர்னா என் கூட பழக மாட்டீங்களோன்னு சொல்லிட்டேன்.

‘ஒன் மினிட்’..அந்த போனை அட்டெண்ட் பண்ணிட்டு வரட்டுமா? இங்கேயே நிக்கறீங்களா? நான் சரி என்று தலையசைத்தேன்

வேகமாய் அங்கிருந்து சென்ற சியாமளா முன்னறையில் இருந்த போனை எடுத்து பேசுவது தெரிகிறது..

மேலே என்ன போர்டு.? சியாமளா ஹாஸ்பிடல் அப்படீன்னு போட்டிருக்குக்கிறது, அப்படியானால் இந்த இடம் மருத்துவமனைதானா? இந்த கேள்வி என் மனதை குடைந்து கொண்டிருக்க…

அங்கே சியாமளா ! ஹலோ..யா சியாமளா ஸ்பீக்கிங்க்..என்ன…! இவரு யாருன்னு கண்டு பிடிச்சிட்டியா? “இராமமூர்த்தியா”..இவர் பேரை கேள்வி பட்டமாதிரி இருக்கு..இரு..இரு..ஞாபகப்படுத்தி பார்க்கறேன். யெஸ். இப்ப ஞாபகம் வருது, நாம் இவரை எங்கே பார்த்தோம், ஊட்டி சிம்ஸ் பார்க்குகிட்ட தானே, அப்ப இவரு தனியா நடந்து வந்து நம்ம கிட்ட பேசிகிட்டிருந்தாரில்லை, அந்த இடத்துலதான், எங்கேயோ அவர் தங்கியிருக்கறதா. பேப்பர்ல படிச்சிருக்கேன். பெரிய அணு விஞ்ஞானி, அவ்வளவு செக்யூரிட்டி இருந்தும் எப்படி தனியா வெளியே வந்தாரு..

என்ன கேட்டே? அவருக்கு தான் யாருன்னு ஞாபகம் வந்துடுச்சுன்னா? இல்லே, அவருக்கு “அம்னீசியா பலமா பாதிச்சிருக்கு”. இவங்களுக்கு தான் யாருங்கறது கூட ஞாபகம் இருக்காது. ஆனா தெளிவா இருப்பாங்க. நான் பக்கத்து வீடுன்னு சொன்னப்ப உன்னைய பார்த்தது இல்லேன்னு சொன்னாரு. அப்படீன்னா அவர் ஞாபகத்துல பக்கத்துல வேற யாரோ இருந்திருக்காங்க, அப்படீங்கறதை உணர்ந்திருக்காரு.

அவங்க வீட்டுல இன்பார்ம பண்ணிடு, அவரு ஞாபகம் சக்தியில்லாம நம்ம கிட்ட வந்து கிட்டிருந்ததையும், அவரை பத்திரமா பாதுக்காப்பா வச்சுக்கணும்ங்கறதுக்காக சியாமளா ஹாஸ்பிடல்ல வச்சிருக்கோம் அப்படீங்கறதையும் சொல்லிடு. ஏன்னா அவர் பெரிய சயிண்டிஸ்ட், நாளைக்கு கவர்ன்மெண்ட் நம்ம கிட்டே ஏகப்பட்ட கேள்வி கேப்பாங்க.

ஓகே..பை.. அப்பாடி இவர் யாருன்னு கண்டு பிடிச்சுட்டோம், இனி பத்திரமாய் அவங்க வீட்டுல ஒப்படைச்சிடலாம். மன நிறைவுடன் வந்த சியாமளா.. அவரை நிற்க சொன்ன இடத்தில் வந்து பார்த்த பொழுது அவரை காணவில்லை..

அங்கிள்..அங்கிள்… சத்தமாய் கூப்பிட்டாள்..வாட்ச்மேன் இங்க ஒருத்தரை நிக்க சொல்லியிருந்தேன், உங்களை தாண்டி போனாரா?

சியாமளாவை நோக்கி ஓடி வந்த வாட்ச்மேன், இப்ப ஒருத்தரு வெளியே போனாரு, ஆனா அவரு யாருன்னு தெரியாம நான் எப்படி மேடம்..?

ஓடு ஓடு..அவரை எப்படியாவது கண்டு பிடிச்சு கூப்பிட்டு வா..பர பர வென பறந்தவள் காரை எடுக்க ஓடினாள்.

‘சயிண்டிஸ்ட் இராமமூர்த்தி’ ஆகிய நான் எங்கிருக்கிறேன்? என்னசெய்கிறேன் என்பதை எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டும் ஏதோ யோசித்து கொண்டும் விரைவாக அந்த பாதையில் நடந்து கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *