குப்பைத்தொட்டி’ல்’!

 

வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த, பின்னதன் மறுபக்கம் வெளிப்பட்டது புன்னகைக்கும் சிறுவனின் பொன்முகம்.

ஆலமரத்தின் கிளைநுனிகள், கோணத்திற்கொன்றாய் திசையனைத்தும் வியாபித்திருப்பதைப் போன்று, சூரியனின் கிரணங்கள் கிஞ்சித்தும் பாகுபாடின்றி எண்திசையும் பாய்ந்தோடிப் பரவுதற்போன்று, அவன் பரட்டைத் தலைமயிர்க்கால்கள் முரட்டுத்தனமாய் அனைத்துப்பக்கமும்
துளைத்துக் கொண்டிருந்தன.

மெதுவாய் சிரிக்கும் அவன் விழிகளின் ஆழத்துள் நுரைத்துத் தளும்பின சோகத்தின் சுமைகள்.

பட்டினிப் போரால் துவண்டு, அதன் விளைவாய் கலங்க எத்தனிக்கும் தன் கருவிழிகள் இரண்டைக் கட்டுக்குள் அடக்கி, “என் பசி போக்க வரமொன்றைத் தாரும்” என்பதைப் போல், தன் கரம்தனைப் பக்கவாட்டுக் கதவெதிரில் அவன் ஏந்த, நின்றிருந்த வண்டி, நிமிஷத்தில் காணாமற்போனது.

சட்!

காய்ந்து கருகிப்போன இந்தச் சிறுகுழந்தை, எத்தனை முறை தான் காயம் தாங்கும்?

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் கட்டி, அதில் ஆட்டுவித்து அகமகிழும் ஆசைமிகு பெற்றோரும் இவனுக்கில்லை.

ஆதரவாய் அன்னமிட்டு அன்புடனே அள்ளிக்கொள்ள உற்றாரும் இவனுக்கில்லை.

இரும்பு மனத்துடன் விரும்பியோ விரும்பாமலோ குப்பைத்தொட்டியில் வீசி எறியப்பட்ட இவன் நிலையை சுருங்கச் சொன்னால், பெற்றோர் உற்றாரில்லா இவனோர் “அநாதைப் பிள்ளை”!

உண்பதற்கே வழியின்றி இங்குமங்கும் அலைந்து திரிந்து அவதிப்படும் இப்பிள்ளைக்கு, அரைவயிறு சோறிட்டு ஆதரிக்க யாருமில்லை.

கால்நோக நடந்து இவன் அவசரமவசரமாய் குப்பைக் கூளங்களைக் கிளர, எதிர்ப்படும் எச்சிலிலைகளில் மிச்சமில்லை.

இறுகிப்போன மனமும் இறுகிப்போன வயிறுமாய் தொடர்ந்து நடந்தவனின் கண்களுக்குத் தேநீர்க் கடையொன்று தென்பட, முகமலர்ந்து வேகமாய் ஓடினான் அவன்.

பிச்சையெடுக்க மனம் வரவில்லை. கடையெதிரில் பறந்துகொண்டிருந்த
குப்பைகளையெல்லாம் அவன் கூட்டிக் கொட்டினான்.

முன்னே நின்ற கூட்டத்துள் புகுந்து, கடைக்காரனைக் கண்டுகொண்டான்.

“பசிக்கிறது, புசிப்பதற்கு ஏதாயினும் கொடுங்கள்” இவன் சைகையால்
கடைக்காரனை வேண்ட,

கடைக்காரன் மனமோ, வற்றிப்போன வைகையை ஒத்திருந்தது.

அவன், “தள்ளிப் போ” என்றான்.

“சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” ஏக்கமாய் இவன் வயிற்றைத் தொட்டுக்
காட்டினான்.

“உன்னை சாத்துவதற்குள்ளாக ஓடிப்போ!” வேகமாய் அவன்
கைக்கரண்டியைத் தொட்டுக்காட்டினான்.

“டீயாச்சும் கொடுங்கண்ணே!” இவன் வாய்விட்டே கேட்டான்.

ஊற்றினான் கடைக்காரன்….. இவன் முகத்தின் மேலே.

சுடும் தேநீரை அலறிக்கொண்டே வேகமாய் வழித்தவன், அதை உதற
மனமில்லாமல் அதைவிட அதிகமாய் தகிக்கும் பசித்தீயைப் போக்கிக்
கொள்ள வாயிலிட்டு விழுங்கினான்.

எல்லாமும் இருக்க, எல்லோரும் இருக்க, சோகத்தினூடே திண்டாடும்
கூட்டத்தினுள்ளே, எதுவுமேயில்லாத இந்தச் சிறுகுழந்தை
என்ன தான் செய்யும்?

பாவம்.

ஆற்றுப்படுகையில் திடீர் வெள்ளத்தால் வெறுமனே நின்றிருக்கும்
மரங்கள் படுவேகமாய் அடித்துச் சென்று அலைகழிக்கப்படுவதைப்போல,
வாழ்க்கை வெள்ளத்தில் எதற்கென்றே அறியாமல் பிறர் தவற்றால்
தானாகவே அடித்துச் சென்று மூழ்கடிக்கப்படுபவர்கள் இவர்கள்.

உண்ண உணவும், உடுக்க உடையும், உயர்வதற்குக் கல்வியும் இல்லாது
ஏங்கி ஏங்கித்தானிவர்கள் சாக வேண்டுமோ?!

கடைசியாய் பார்த்த திரைப்படத்தை விமர்சித்தும், விழுங்கிய
விருந்தைப் பற்றிப் பீற்றிக்கொண்டும் திரிகின்ற வீணர்களின் மத்தியில்,
தினசரி வாழ்வையே போர்க்களமாய் கழித்துக் கொண்டிருக்கும்
இவர்களின் வேதனையை என்னவென்பது?

காற்றடித்தாலும் சரி, மழையடித்தாலும் சரி.
வெயில் வாட்டினாலும் சரி, கடுங்குளிர் தாக்கினாலும் சரி.
ஒதுங்க இவர்கட்கு இடமொன்றுமில்லை.

தினம் சோறு இல்லை. திருவிழா இல்லை. புத்தாடையென்ன….
பொத்தல் ஆடைகூட இல்லை.

இவர்கள் விழித்தால், கதிரவன் கதிர்கள் இவர்களைப்
ஸ்பரிசிக்குமோ இல்லையோ… கண்டதில் அமர்ந்து பசியாரும் ஈக்கள்,
நித்யமும் இவர்களை ஸ்பரிசிக்கத் தவறுவதில்லை.

மழையிலும் நீரிலும் அமிழ்ந்தெழுந்து இவர்கள் இன்புறுகிறார்களோ
இல்லையோ….நாகரீகமற்ற கனிவற்ற இரக்கமற்ற மனித ஓநாய்கள்
காறி உமிழும் உமிழ்நீரில் இவர்கள் தினம் தினம் நனைந்து
துன்புறுகிறார்கள்.

பசியாறும் வழியறியாதுத் தவித்துக் கொண்டிருக்கும் இவனது
கண்களுக்கு இதோ தெருநாயொன்று தின்று, மிச்சம் வைத்த
ரொட்டித்துண்டு கண்ணிலகப்பட்டுவிட்டது.

ஓ!

ஓடி அதை எடுப்பதற்குள் மற்றோர் நாய் ஓடிவந்து அதை
அபகரித்துக்கொண்டதே!

துக்கத்தை இனியும் அடைத்து வைக்கவொண்ணாமல் ‘ஓ’வென்று
அவன் கதறி அழ,

அவன் அழுகுரலில் இளகிப்போய், கால் நடையாய் நடந்துச் சென்ற
பெரியவர் ஒருவர்,

‘தம்பி எதுக்கு அழற?”
என அவனிடம் நெருங்கி வந்து கனிவுடன் வினவ…,

அவன் ஆழ்மனத்தின் வலியை வாரிக்கொண்டு பிரவகிக்கும் அவன்
அழுகுரல் நிற்கவில்லை. இன்னும் தீனமாய் ஒலித்தது.

“அழாதே. இந்தா பழம்!”

தன் கைப்பையிலிருந்து பழமொன்றை எடுத்து அவர் அன்புடன் நீட்ட,
வேண்டாமென அவன் அதை வேகமாய் மறுத்தான்.

“பணம் வேணுமா?”

வேண்டாமென அவன் அதை வேகமாய் மறுத்தான்.

“எதுக்குதான் அழறே?”

“………”

“சொல்லு. சொன்னாதானே தெரியும்?”

அழுதவாறே நிமிர்ந்து பார்த்த இவன் பார்வைக்கு, பெரியவரின் கண்களுள்
இருந்த காருண்யம் என்னவோ செய்தது.

விம்மியவாறே சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தவன்,
“நா ஒன்னு கேட்டா செய்வீங்களா தாத்தா?” என பெரியவரிடம் வினவினான்.

“என்ன செய்யனும்னு சொல்லு, முடிஞ்சா செய்யறேன்”

இதைக் கேட்டமாத்திரத்தில், அருகில் எரிந்தணைந்து போன
குப்பையிலிருந்து கரித்துண்டு ஒன்றை அவன் வேகமாய் ஓடிச்சென்று
எடுத்துவந்தான்.

“இது எதுக்குப்பா?” பெரியவர் புரியாமல் சிறுவனிடம் வினவினார்.

“இந்த கரியால நா சொல்றத அந்த குப்ப தொட்டிக்கு மேல
எழுதறீங்களா தாத்தா?” அவன் விம்மல் இன்னும் அவனிடமிருந்து
விடுபடவில்லை.

“என்ன எழுதணும்?”

“வாங்க சொல்றேன்”

என்ன எழுதச் சொல்வானோ என எண்ணியவாறே அவனைப்
பின்பற்றிச் சென்றார் பெரியவர்.

சென்றபின் அங்கே சிறுவன் சொல்ல, பெரியவர் அதனை எழுதி முடித்துத்
திரும்ப, இதோ நம் புறக்கண்களுக்குப் புலப்படுவது,

“இங்கே குப்பையை மட்டும் போடுங்கள்” எனும் வலிதரும் வாசகம்! 

தொடர்புடைய சிறுகதைகள்
“பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா”தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை ஆசிர்வாதம் செய்தார்.“தாத்தா! பூப்போட்டு ஆசிர்வாதம் பண்ணி எஸ்கேப் ஆகற டக்கால்ட்டி வேலைலாம் இங்க செல்லாது. அண்ணாக்கு வருஷா வருஷம் பர்த்டே கிஃப்ட் ...
மேலும் கதையை படிக்க...
என்மகள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். என்றும் போலவேதான் இன்றும் தன் வகுப்பிற்கு சென்று வந்தாள். அவள் அருந்துவதற்கு கொஞ்சம் பாலை, அவள் எழுதிக்கொண்டிருந்த மேஜையில் வைத்துவிட்டு, அவளை நோக்கினேன். நிமிர்ந்து சில நொடிகள் என்னை பார்த்தவள், புன்னகைத்துவிட்டு மீண்டும் எழுதுவதில் ஆழ்ந்து போனாள். அவளெதிரில் உள்ள சோபாவில் அமர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
சந்துதான் அது. நான்கிலிருந்து ஐந்தடிகள்வரைதான் அதன் அகலமிருக்கும். அதில்பாதியை, கொட்டிவைத்திருந்த சாமான்களும் ஆங்காங்கே காய்ந்துகொண்டிருக்கும் கொஞ்சம் விறகுகளும் அடைத்துக்கொண்டிருக்க, நாய்களும், பூனைகளும், சில குழந்தைகளும், மீதமிருந்த இடைவெளியில் நடந்தும், உட்கார்ந்தும், விளையாடிக்கொண்டுமிருந்தன. களிமண்குழைத்து எழுப்பின சுவர்களின்மீது மூங்கில் குச்சிகளை நிறுத்தி, மேலே பனையோலை ...
மேலும் கதையை படிக்க...
காலையில் கண் விழித்ததும் நான் கண்ட காட்சியில் உண்டான என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சில தினங்களாய் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த என் வெளி நாட்டுப் பயணத்திற்கான விசா, மேசையின் மேல் எனக்காக காத்திருந்ததுதான் அதற்குக் காரணம். நேற்று இரவே நிரஞ்சன் அதைப் பெற்றுக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
நான், அம்மாவைப் பற்றி இதற்கு முன்னர் சிந்தித்ததாக நினைவில்லை. பால்ய வயதிலும் சரி. பருவ வயதிலும் சரி. அவளுடனான அளவளாவல்களில் அத்தனை ஆதுரமாய் பங்கு கொண்டதுமில்லை. “பசிக்குதும்மா” “என் சட்டைய எங்க வச்ச?” என நானும், “சாப்பாடு வச்சிருக்கேன் பாரு” “அலமாரியில் இருக்கே?” என அவளும் ...
மேலும் கதையை படிக்க...
வரந்தரும் தெய்வம்!
நின்னை சரணடைந்தேன்…
தீபாவலி
அன்பின் வழியது….உயர்நிலை!
மனசு!

குப்பைத்தொட்டி’ல்’! மீது 2 கருத்துக்கள்

 1. yembee says:

  குழ்ந்தை வரம் கேட்கும் தாயின் தொட்டில்கள் ஏராளம் கோயில் மரங்களில் …
  ஒரு தாயில்லாமல் தவிக்கும் சிசுக்கள் ஏராளம் அனாதை இல்லங்களில் …

  மனம் கனக்கிறது நண்பரே

  • குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும் தொட்டில்களில் கூட சோகம் அதிகமாக சுமக்கப்படுவதில்லை.

   ஆனால் தாய்க்காக ஏங்கித்தவிக்கும் இத்தகைய சிசுக்களின் சோகச்சுமையை சுமக்க எந்த தொட்டில்களும் வலு படைத்ததல்ல.

   தங்களுக்கு எனது நன்றிகள் நண்பரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)