கலியாணம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 4,286 
 

“அந்த சின்னப் பையன் கடிதம் கொண்டு வரும்போது வீட்டுல அண்ணா, அண்ணி, சந்துரு இருந்தான். பொடியன் எசகுபிசகா யார்கிட்டேயாவது கொடுத்துடப் போறானோன்னு எனக்கு உள்ளுக்குள் திக் திக் பயம். இப்படியாப் பண்றது…?” அனுஷா சொல்ல….

கேட்ட கலியுகனுக்குள் ,முகத்தில் கலவரம் படர்ந்தது. பயத்துடன் சொன்னவளை நோக்க… பயத்துடன் சொன்னவளை நோக்க…

“பையன் சமத்து!. யாருக்கும் தெரியாம நைசா என் கையில கொண்டு வந்து சேர்த்துட்டு நல்ல புள்ள மாதிரி வெளியே போயிட்டான்.”

‘அப்பாடா !!…’ பயம் விலகி முகத்தில் விலகி ஆளுக்குத் தெளிவு வந்தது.

“அப்புறம் நேரம் காலம் பார்த்து யாருக்கும் தெரியாம கொல்லையில் போய் பிரிச்சேன். ‘சாயந்திரம் ஆறு மணிக்குப் பாரதி பூங்கா வரவும்னு’ சேதி இருந்தது. யாருக்கும் தெரியாம வந்துட்டேன்!” சொல்லி முடிப்பதற்குள் அனுஷா முகத்தில் அதிகம் வியர்வை.

“ஏன் அனு ! வீட்ல அவ்வளவு கெடுபிடியா…?” – கலியுகன் முகத்தில் வியப்பு.

“என்ன கேட்டீங்க..? கெடுபிடியா..? பயங்கரம் ! வீட்டில உங்க பேரைச் சொன்னா…. அண்ணாவுக்கு முகம் சிவக்கும், எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அப்படி ஒரு கோபம். அண்ணிக்கு அதுக்கு மேல. என்னவோ அவா வாழ்க்கையைக் கெடுத்தாப்போல. சந்துரு கோபக்காரன். கொலை பார்வை பார்ப்பான் !” சொல்லும்போதே அவளுக்கு உடல் நடுங்கியது.

கலியுகனுக்கு அந்த உக்கிரம் புரிந்தது. அதனைத் தொடர்ந்து…

“இங்கே ,மட்டும் என்ன வாழுது..? அதே கதைதான்!” வாய் முணுமுணுத்தது.

“என்ன சொல்றேள்..?!” பயத்துடன் பார்த்தாள்.

”என் வீட்டிலேயும் அதே கதைதான் சொன்னேன். !” ஆள் முகம் விழுந்தது.

“சரி.. சரி. எல்லாம் தெரிஞ்சதுதானே ! தாமதப்படுத்தாமல் விசயத்தைச் சொல்லுங்கோ..? காலாகாலத்துல நான் வீட்டுக்குப் போகலேன்னா எல்லாரும் என்னைத் தேடுவா..!”

“சரி சொல்றேன். நாம கலியாணம் முடிக்கிறதுக்கு ஒரு திட்டத்தோட வந்திருக்கேன். !”

“என்ன திட்டம்..?”

“கிட்ட வா..!”

“ம்ம்..”

‘’ இன்னும் நெருங்கி உட்காரு. நான் சொல்றதைக் கவனமாக் கேளு….”

நெருங்கி அமர்ந்தாள்.

“நாளைக்கு நல்ல முகூர்த்த நாள். நீ என்ன செய்யுறே ராத்திரி எல்லோரும் தூங்கினதும் சரியா ஒரு மணிக்கு சத்தம் போடாம எழுந்து வீட்டை விட்டு தெரு கோடிக்கு வந்துடு..”

ஆள் சொல்லி முடிப்பதற்குள்…

“ஐயையோ..! நானா..? முடியாது! யாராச்சும் முழிச்சா வம்பு!” பதறினாள். “ச்ச்சூ! பதற்றப்படாதே! பயந்தா நாம நெனைச்சது நடக்காது!”

அனுஷா கிலியுடன் பார்த்தாள்.

“நான் ஒரு வாடகைக் காரோடு அங்கெ தயாராய் இருக்கேன்.”

“அம்மாடியோவ் !” அவளுக்குள் நெஞ்சு படபடத்தது.

கலியுகனுக்குக் கோபம் வந்து முறைக்க….

பயந்த அனுஷா…

“அப்புறம்..?” கேட்டாள்.

“நேரா திருக்கடையூர் அன்னை அபிராமி ஆலயம் போறோம். அங்கே சாமி சாட்சியாய் மாலை மாத்தி தாலி கட்டி திரும்பறோம் !”

“எங்கே..?”

“நேரா நான் இருக்கும் வீட்டுக்கு !”

“என்ன சொல்றேள். !” அனுஷா நெஞ்சு படபடத்தது.

”தாலி கட்டியாச்சு. கலியாணம் முடிச்சாச்சு. யார் என்ன செய்துட முடியும்..? என்னதான் செய்ஞ்சிடுவா..? அதையும் பார்த்துடலாம்.!!”

ஒரு நிமிடம் மெளனமாக இருந்த அனுஷா மனதுக்குள் துணிவு வந்தது

“சரி. இதுக்கெல்லாம் பணம்..?” கேட்டாள்.

“அதுக்கும் வழி இருக்கு. நீ என் பொறந்த நாளுக்கு போட்டியே ஒரு பவுன் மோதிரம் அதை வித்துடுறேன். !”

“ஐயோ ! நான் முதன் முதலா உங்களுக்கு ஆசையைச் செய்ஞ்சி போட்டது. அதையா விக்கிறீங்க…?”

“நானென்ன வேலையிலேயா இருக்கேன். வழி..?”

அனுஷாவிற்குப் புரிந்தது.

இருவரும் சிறிது நேரம் கம்மென்றிருந்தார்கள்.

“சரி..! நேரமாச்சு. நீ கிளம்பு. ராத்திரி ஒரு மணி. மறந்திடாதே ! தூங்கிடாதே !” கலியுகன் எச்சரிக்க….

இருவரும் பிரிந்தார்கள்.

திட்டமிட்டபடி திருமணம் எந்தவித தடங்களுமில்லாமல் நடந்தது.

கழுத்தில் புதுத்தாலியைப் பார்த்தா அனுஷாவின் கண்கள் கலங்கியது.

“கவலைப்படாதே அனு. நாம ரெண்டு புள்ளைகளைப் பெத்தோம். மூத்தவனை உன் அண்ணன் பொண்ணுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தோம். இளையவன் சந்துருக்கு என் அக்கா பொண்ணைக் கட்டி வச்சோம். கடமை முடிஞ்சி நாம ரெண்டு பேருமே வேலையிலிக்கிறவரை கவலை இல்லே. ஒய்வு பெற்ற பின்தான் வாழ்க்கை மாறிப் போச்சு. புள்ளைங்க ரெண்டு பேருக்குமே பாரமாகிட்டோம். ஏதோ பெத்த கடைமைக்கு ரெண்டு புள்ளைங்களும் நம்மை ஆளுக்கொருத்தனாய்ப் பிரிச்சிப் போட்டு சோறு போடுறானுங்க. அதுவும் வெட்டியாய்ப் போடல. நம்ம ஓய்வூதியத்தை வாங்கிக்கிட்டுதான் போடுறானுங்க. அதுல அவனுங்களுக்கு அவ்வளவு சலிப்பு. இதுல நம்ம அறுபதாம் கலியாண ஆசையைச் சொன்னதும்… வெட்டி செலவுன்னு குதிப்பு. முறைப்பு.

இப்போ நாம நினைச்சதை முடிச்சி மாலையும் கழுத்துமாய் போனா அவனுங்களால என்ன பண்ண முடியும்..? ஒரு முறை முறைச்சு… செலவு நம்ம கையைக் கடிக்கலைன்னு சந்தோசப்படுவானுங்க. மாறாய்…தாம் தூம்னு குதிச்சி வெளியே போன்னு சொன்னா..ஒன்னும் கவலைப் படாதே. முதியோர் இல்லம் போய் இருந்து நம்ம ஓய்வூதிய பணத்தை வச்சு பொழைச்சுக்கலாம். கவலைப் படாதே வா. !” சொல்லி கலியுகன் தன் மனைவி தோள் மீது ஆதரவாய்க் கை போட…..

ஆசை நிறைவேறிய திருப்தி….அனுஷா மலர்ச்சியாய் கணவன் மார்பில் சாய்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *