கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 3,336 
 

வசந்தகாலப் பரபரப்பில் இத்தாலியத் தெருக்கள்…

நள்ளிரவு கடந்த பின்பும் தெருக்களில் சன நடமாட்டம் சிறிதும் குறையவில்லை.

கடல் அலையின் ஒசை காதுக்கிதமாய் ஒலிக்கிறது.

கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் “ போச்சே” பார்க்கில் அகிலாவும் அவள் தோழிகளும் …மிக மகிழ்ச்சியாய்ப் பொழுதைப்போக்கிக் கொண்டிருந்தார்கள்.

எத்தனையோ பொழுது போக்கு ஊடகங்கள் இருந்த போதும் நண்பர்கள் கூடிக் கதைப்பதில் தனிச் சுகம் இருப்பதாக அகிலா எண்ணிக்கொள்கிறாள். பல சமயங்களில் அக்கதையில் சாரம் இருப்பதில்லை. ஆனாலும் மன இறுக்கங்களைத் தளர்த்திக் கொள்ள இவ்வாறான ஒன்றுகூடல்கள் அவசியம் எனப்பட்டது அவளுக்கு.

சற்றுத் தொலைவில் அவர்களது பிள்ளைகள் பந்தடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அகிலாவின் தொலைபேசி செல்லமாய்ச் சிணுங்குகிறது. மறுமுனையில் அவளது அண்ணி,,…..

வழமையாக இரவு வேளைகளில் அவர்கள் அகிலாவை அழைப்பதில்லை.

அவள் சற்றுப் பதட்டத்துடன் அழைப்பை இணைக்கிறாள். அண்ணியின் உற்சாகக் குரல்…

அவள் பதட்டம் அடங்குகிறது. ஏதோ நல்ல செய்தி சொல்லப்போவதாய்…. அவள் உள்ளத்திலும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அவள் ஊகம் சரியாகவே இருந்தது.

அவள் ,அண்ணாவின் மகள் கார்த்திகாயினியின் திருமணம் பல காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது.

அண்ணன் உதயன் வீடு தோட்டம் என்று நல்ல பசையோடு தான் இருந்தார். கார்த்தி அவர்களின் ஒரேமகள்.

ஆனாலும் அண்ணியதும் கார்த்தியினதும்..எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்ததாலோ என்னமோ வயது முப்பதைக் கடந்தபோதும் அவளுக்கு திருமணம் கைகூடாமல் இருந்துவந்தது..

முன்பு ஒரு சம்பந்தம் கலியாணத்துக்கு நாள் குறிக்கும் தறுவாயில் குழம்பிப் போனது….அந்த ஏமாற்றத்திலிருந்து அவர்கள் மீண்டுவரச் சில காலம் தேவையாய் இருந்தது…

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே சம்பந்தம் கூடிவந்திருக்கும் கதையை அண்ணி மிகச் சுவாரசியமாய் சொல்லிக் கொண்டிருந்தா…அகிலாவும் சில கேள்விகளைக் கேட்டவளாய் அவவின் உற்சாகத்துடன் கரைந்துகொண்டிருந்தாள்.

அவணி 24இல் கலியாணத்தேதி முடிவாயிருந்தது.

அண்ணியிடம் போனை வாங்கி உதயன் அண்ணாவும் கார்த்திகாவும் கதைக்கிறார்கள்.

எல்லோருமே கலியாணத்துக்கு வர வேண்டும் என்ற கட்டாய வேண்டுகோளை முன் வைக்கிறார்கள்.

அதிலும் கார்த்திகா ஒருபடி மேலே சென்று, “அத்தை நீங்கள் வராவிட்டால் நான் பேந்து கதைக்க மாட்டன்” எனச் சினுக்கமாய் கட்டளையிடுகிறாள்.

அந்த அழைப்பு ஆத்மார்த்தமானது என்பதை அகிலாவால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது

கார்த்தி குழந்தையாக இருந்தபோது அவளின் பொழுது அப்பம்மா வீட்டிலேயே அதிகம் கழிந்தது,.அவளே கந்தசாமி தம்பதியரின் முதல் பேர்த்தியென்பதால் ஒரு குட்டி இளவரசியாகவே அவர்கள் வீட்டில் உலவிவந்தாள்.

அகிலாதான் குட்டி இளவரசியின் மந்திரி.விளையாட்டுத் தோழி,

ஆசிரியை. ….கதை சொல்லி…

அகிலா இத்தாலிக்கு வரும் போது கார்த்திக்குப் பத்து வயது.. அவள் அகிலாவின் பிரிவைத் தாங்காது இரண்டு நாட்கள் சரியாகச் சாப்பிடாது அழுது கொண்டே இருந்தாள் .

இன்று அவள் பருவ மங்கையாகி…அவளை அன்பொழுக அழைக்கிறாள்

அகிலாவுக்கு நாளையே ஊருக்குப் போனால் என்ன என்று இருக்கிறது. கார்த்தியின் கலியாணக் கோலத்தை கண்குளிரக் காணவேண்டும் ..உறவுகள் எல்லோரையும் சந்திக்க வேண்டும் .பிறந்து வளர்ந்த ஊரை ஒருமுறை கண்டு வரவேண்டும். உற்சாகம் பொங்கி வழிகிறது…

ஆனால் ……அவளது பொருளாதாரம்?

குடும்பத்தில் ஐந்து பேரும் போய் வருவதானால், அதுவும் ஆகஸ்டு மாதம் டிக்கற்விலை இரண்டு மடங்காய் இருக்கையில்…டிக்கற்றுக்கு மட்டும் 5000யூரோக்கள் வேண்டுமே…

அகிலாவின் கணவர் கரன் பொறுப்பில்லாதவர். குடியில் பல சமயங்களில் மயங்கிக் கிடப்பவர். அவ்வப்பொழுது வேலையில்லாது இருப்பது அவருக்கு ஒன்றும் புதியதல்ல. வேலையில்லை என்பதற்காக அவர் கவலை கொண்டதும் இல்லை..

அகிலா கரனுக்கு மூன்று பிள்ளைகள்.மூத்த மகள் நிவேதாவுக்கு 18 வயதாகிறது.அவள் பள்ளி இறுதியாண்டில் படிக்கிறாள். விநயன், 16வயது வினோத் 10 இவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள்.

பதிமன் வயதில் இருக்கும் இவர்களைப் பற்றியும் கரன் அதிகம் அலட்டிக் கொண்டதில்லை…..

இந்த நிலையில் குடும்பத்துக்காக இடை விடாது உழைத்துக் கொண்டு வீட்டுப் பொறுப்பையும் அகிலா ஒருத்தியே சுமக்கிறாள்.

போன வருடம் கரனின் சகோதரியின் மகளின் கலியாணம் இந்தியாவில் நடந்தது. அதற்குக் கட்டாயமாக தான் குடும்பத்தோடு சென்றுவர வேண்டும் எனக் கரன் விரும்பினான். அவனை மட்டும் போய்வருமாறு அகிலா கேட்டுக் கொண்ட போதும்” அக்கா கோபித்துக் கொள்ளுவா “எனப் பிடிவாதமாகக் கரன் நின்ற போது வேறு வழியில்லாது அவர்கள் இந்தியாவுக்குப் போய் வந்தார்கள்.

அப்போது வாங்கிய 10000யூரோவுக்கு வட்டிகட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் செலவு செய்வதென்பது தனக்குத் தானே படுகுழி வெட்டுவதற்கு சமமானது …..

அகிலாவின் அக்கா இருவர் இலண்டனில் இருக்கிறார்கள். அண்ணா ஒருவர் என்சினியராய் அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்.. இவர்கள் அடிக்கடி குடும்ப நிகழ்வுகளுக்காக இலங்கை சென்று வருகிறார்கள். அகிலா ரெலிஃபோனில் வாழ்த்துச் சொல்வதோடு சரி.

கார்த்தியின் கலியாணத்துக்கும் ஊருக்குப் அவர்கள் நிச்சயம் போவார்கள்.

“அவர்கள் போல நானும்…..”

அகிலா தன் ஆசைகளை தலையில் குட்டி மெல்ல மனதுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறாள்.

இம்முறை குடும்பத்தின் முக்கிய நிகழ்வு இது என்பதால் கட்டாயம் அகிலா வருவாள் என அண்ணி உறுதியாக நம்பினா என்பது அவவின் கதையிலிருந்து விளங்கியது.

அப்போதைக்கு பார்க்கலாம் ..என்றுகூறி இணைப்பைத் துண்டிக்கிறாள் அகிலா.

கலியாணத்துக்கு போகவில்லை என்பது அகிலாவுக்கு மட்டுமல்ல அண்ணா அண்ணிக்கும் வருத்தத்தை தந்தது .

கார்த்தியின் கலியாணம் முடிந்து இரண்டு வருடங்களாகிவிட்டன..ஒரு குழந்தக்குத் தாயாகியும் விட்டாள்..

அகிலாவுக்கோ போராட்டங்களோடு வாழ்க்கை நகர்கிறது..…..

அவள் மதியச் சமையலுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறாள்.

வெளியில் கருமேகம் கூடியிருந்தது.மழை பெய்யவில்லை..குளிர் காற்று வீசியது…..ஆனாலும் ஒருவகைப் புழுக்கம் ..

அகிலாவின் மனதில் ஏதோ வெறுமை…… குழப்பம்…. பதற்றம்…

இனம்புரியாத சோகம் மனதைக் கவ்வியதாய் …

வீட்டு ரெலிஃபோன் அலறியது…ஒருவகை அலுப்புடன் அதை எடுக்கிறாள்

எதிர்முனையில் கார்த்தியின் அழுகுரல்… குழறி அழுகிறாள் .

அகிலா செய்வதறியாது சிலையாகிறாள் …

அம்மா…அம்மா….” அழுகையிடையே தெறித்த வார்த்தைகள் இவைதான்…

அவளிடமிருந்து போனைவாங்குகிறார் அவள் கணவர் முரளி .

“மாமி பின்னேரம் நடந்த ஒரு விபத்தில் சம்பவ இடத்திலேயே இறநதிட்டா…மாமா சின்னக்காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்..”

இதுவே முரளி சொன்ன செய்தி

மென்மையான மனதில் பெருங்கல்லை தொப்பெனப் போட்டது போல வலியால் துடித்துப்போகிறாள் அகிலா.

“மாமியின் உடல் டிப்பர் ஏறினதால சிதைஞ்சுபோட்டுது ..அதால எம்போம் பண்ண முடியாது. நாளையே உடலை எடுக்கவேண்டியிருக்குது..”

முரளி இன்னும் எதோ சொல்லுகிறார். அகிலாவுக்கு தலை சுற்றுவதுபோல இருக்கிறது.

அண்ணியாகவில்லாது சொந்தச் சகோதரி போல அன்பு செலுத்திய அண்ணியின் இழப்பு அவள் மனதில் வேதனையாகக் கொப்பளிக்கிறது. இந்தச் செய்தி பொய்யானதாக இருக்க்கக்கூடாதா என மனம் ஏங்குகிறது.

அவள் பொத்தென செற்றியில் சாய்கிறாள் ..சுயநிலையடைய சில நிமிடங்கள் தேவைப்படுகிறது..

அவர்கள் அகிலாவுக்குச் செய்தியைச் சொல்லிவிட்டார்கள். இப்பொது அவள் ஊருக்கு போவதைப்பற்றி முடிவெடுக்க வேண்டும்.

உடல் பார்க்கக் கூடியதாக இருந்தால் அவளாவது ஊருக்குப் போய்வரலாம் …அதுவும் முடியாத நிலை..

விசா முடிந்த நிலையில் விசாவைப் புதுப்பிக்க டோக்கிமன்சை வேறு அனுப்பியிருந்தாள்.

பொங்கிவந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாதவளாய் விக்கி விக்கி அழுகிறாள்..

அழுகை அண்ணியின் இழப்புக்காக மட்டுமல்ல…அகிலாவின் இயலாமைக்குமானதால் மணிக்கணக்காய் தொடர்ந்தது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *