கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 18,779 
 

வாசலில் கார் வந்து நிற்கிற சப்தம். ஹாலில் இருந்தே எட்டிப் பார்த்தேன்.

அட, எங்களுடைய தூரத்து உறவினர் வாசுதேவனும், அவர் மனைவி யமுனாவும்.

அடடட… வாங்க வாசுதேவன்… வாங்க…” என அவர்கள் இருவரையும் கை கூப்பி வரவேற்றேன். என் மனையாளும் சிரித்துக் கொண்டே யமுனாவின் கைபற்றி உள்ளே அழைத்து வந்தாள்.

என் கடைசிப் பையன் நவீனுக்குக் கல்யாணம் கண்டிப்பா வந்துடணும்” என்றபடி பத்திரிகையை நீட்டினார். கூடவே குங்குமமும், அட்சதையும்.

பொண்ணு மைலாப்பூர்தான் ஐ.பி.எம்.ல இருக்கா. நல்ல லட்சணம். நவீனுக்கும் பொண்ணை பிடிச்சது… சரின்னு முடிச்சுட்டோம்.”

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு காஃபி கொடுத்து வாசல் வரை சென்று வழியனுப்பினோம்.

ஒரு வாரம் ஓடியது. திடீரென்று மொபைல் ‘நிதி சால சுகமா?’ என்று பாடியது. ‘ஆன்’ செய்த போது வாசுதேவன் காத்திருந்தார்.

குட்மார்னிங் வாசுதேவன்… என்ன விஷயம்? கல்யாண ஏற்பாடெல்லாம் நல்லா போகுதா…?”

சாரி சார்… கல்யாணம் நின்னுப் போச்சு…”

என்ன சொல்றீங்க… என்ன ஆச்சு?”

சொல்றதுக்கே சங்கடமாய் இருக்கு…” பொண்ணு, அவ கூட வேலை பார்க்கற ஒரு பெங்காலியோட கல்கத்தாவுக்கு ஓடிப் போயிட்டாளாம்… பரசுராமன் – அதான் பொண்ணோட அப்பா அப்படியே அழுதுட்டே கால்ல விழுந்துட்டாரு!”

அடிப்பாவி… கல்யாண மண்டபமெல்லாம் ஏற்பாடு செஞ்சு, கேடரிங்குக்கெல்லாம் அவ அப்பா அட்வான்ஸ் குடுத்து… உம் நாசமாக்கிட்டாளே அந்தப் பொண்ணு? அவ வீட்டுக்கு மட்டுமில்லே… உங்களுக்கும் தலை குனிவு ஆச்சே? நீங்க சரியா விசாரிச்சிருக்கணும்…”

எல்லாம் விசாரிச்சோம் சார்… நல்ல இடம்னு சொன்ன பின்னாலதான் நாங்க ஒத்துகிட்டோம்… நல்ல காலம்… கல்யாணம் முடிஞ்சதும் ஓடிப் போகாம இருந்தாளே?”

எதிர் முனையில் வாசுதேவன் சோகமாகப் பேசினார்.

சாரி வாசுதேவன்… யமுனாவைத் தேத்தப் பாருங்க… நவீனுக்கு இன்னும் நல்ல இடமாய் கிடைக்கும். பகவான் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வார்… கவலைப்படாதீங்க…”

இருவரும் போனை ‘ஆஃப்’ செய்தோம்.

யாரு போன்ல?…” என மனைவி கேட்டாள். விஷயம் தெரிந்தவுடன் ஐயயோ… என்ன கண்றாவி இது…?’ என்று அங்கலாத்தாள்.

ஆனால் எனக்குதான் இருப்பு கொள்ளவில்லை. இந்த மாதிரி விஷயம் என்று கேள்விப்பட்டு எப்படி வாசுதேவன் சும்மா இருந்தார்? பொண்ணோட அப்பாவிடம் நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டாமா?

இரண்டு நாள் கழித்து வேளச்சேரி பக்கம் போன போது, அந்தக் கல்யாண மண்டபம் கண்ணில் விழுந்தது. என் காரை நிறுத்திவிட்டு கல்யாண மண்டப மேனேஜரிடம் பேசினேன். அவர் பெண்ணின் தந்தை பரசுராமனின் முகவரியைக் கொடுத்தார்.

மைலாப்பூரில் பரசுராமனின் வீட்டைத் தேடி அழைப்பு மணியை அழுத்தியதும் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கதவைத் திறந்தார்.

என் பெயர் ராமச்சந்திரன். அடையார்ல இருக்கேன்… வாசுதேவன் எனக்கு தூரத்து சொந்தம்…” மெதுவாக ஆரம்பித்தேன்.

ஓ!” – வியப்பால் அவரது கண்கள் விரிந்தன.

வாசுதேவன் ரொம்பவே உடைஞ்சு போய்ட்டார்… அவர் சம்சாரம் யமுனா அழுதுகிட்டே இருக்கா…” தயக்கத்துடன் சொன்னேன்.

அவர் ஏன் உடையணும்? நான் தான் உடையணும்… பெரிய எடத்துல பொண்ணைப் புடிச்சுட்டாரே,,,?”

என்ன சொல்றீங்க பரசுராமன்?”.

ஆமா சார்… அவருக்கு என்னை விட மிகப்பெரிய சம்பந்தம் கிடைச்சுடுச்சு… என்னை கை விட்டுட்டார். சந்திரன் குரூப் ஆஃப் இன்ஸ்ட்ரீஸோட ஒரே கோடீஸ்வரப் பொண்ணு கிடைச்சுட்டாள். இந்த ஏழை டெபுடி செக்ரட்டரியோட பெண்ணை கை விட்டுட்டார்.”

பரசுராமன் நிதானமாகவே பேசினார்.

நான் ஒன்றும் பேசவில்லை. அவர் சொல்வது உண்மைதானா? இல்லை, பொண்ணு ஒரு பெங்காலிப் பையேனோட ஓடிப் போனதை மறைக்கப் பார்க்கிறாரா? வாசுதேவன் சொன்ன செய்தியை இவரிடம் எப்படிச் சொல்வது…

பரசுராமன் விவரமான ஆளா இருப்பார் என தெரிந்தது. என் மனத்தில் ஓடுவதைப் புரிந்து கொண்டிருப்பாரோ என எனக்கு சந்தேகம்.

சாந்தி… சாந்தி… இப்படி வாம்மா…”

அழகான ஓர் இளம் பெண், என்னப்பா?” என்று வந்து நின்றாள்.

மிஸ்டர் ராமச்சந்திரன்… இவள் தான் கல்யாணப் பொண்ணு… சாந்தி… ஐ.பி.எம்.ல வேலை பார்க்கறா…”

சார் யாருப்பா…?”

சார் பேர் ராமச்சந்திரன். என்னோட சினேகிதர்… சும்மா இந்தப் பக்கம் வந்தாராம்… அப்படியே என் ஞாபகம் வரவே வீட்டுக்கு வந்திருக்கார்.”

அந்தப் பெண் நமஸ்தே!” சொல்லிவிட்டு உள்ளே போனதும் பரசுராமன் பீரோவைத் திறந்து என்னிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.

என்ன சார் இது,,,?”

திறந்து பாருங்க…”

கவரினுள் ஐந்து லட்ச ரூபாக்கு பரசுராமன் பெயரில் ஒரு செக் இருந்தது.

கல்யாணம் மண்டபம், சமையல்காரர், வாத்தியார் செலவுன்னு எவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருப்பேன்னு கணக்கு பண்ணி என் பெயருக்கு செக் கொடுத்துட்டுப் போனார் வாசுதேவன். நான் நஷ்டப்பட்டுடக் கூடாதாம். எத்தனை நல்ல மனசு பாருங்கள்… கல்யாணம் நின்னுப்போனது எனக்கு எத்தனை அவமானம்னு அவருக்குத் தெரியலை.

என்னுடைய மானம் போனதுக்கு அவரால் நஷ்ட ஈடு கொடுக்க முடியுமா? உறவுகள், நண்பர்கள், என் கூட வேலை பார்ப்பவங்கன்னு எல்லோருக்கும் பத்திரிகை கொடுத்தாச்சு…. இப்போ சட்டுன்னு கல்யாணம் நின்னுப் போச்சுன்னு சொன்னா என்னையும் என் குடும்பத்தையும் என்ன நினைப்பாங்க சார்? போலீசுக்குப் போகலாமா? கோர்ட்டுக்குப் போகலாமா? ஜெயிச்சுடலாம் சார்… ஆனா என் பொண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா? சொல்லுங்க சார்…” உரத்தக் குரலில் ஆத்திரத்தோடு பேசியவரை என்னாலோ, அவருடைய மனைவியினாலோ, பெண் சாந்தியாலோ சமாதானப்படுத்த முடியவில்லை.

‘எவ்வளவு பெரிய துரோகம் இது? வாசுதேவனுக்கு மனசாட்சியே கிடையாதா?’

எனக்கு பரசுராமனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. பேசிக் கொண்டிருந்தவருக்கு பிளட் பிரஷர் எகிறியிருக்க வேண்டும். சாந்தி ஏதோ ஒரு மாத்திரையும், தம்ளரில் நீரும் கொண்டு வந்து கொடுத்தாள்.

கையில் பி.பி. மானிடரை கட்டி, ஏம்ப்பா இப்படிப் பண்றீங்க? 190க்கு 110ன்னு இருக்கு. கல்யாணமும் வேண்டாம்… ஒண்ணும் வேண்டாம்… பிரம்ம குமாரிகள் மாதிரி சன்னியாசினியாகவே இருந்துடறேன். எனக்கு நீங்க தான் பா முக்கியம்…”

எப்பேர்ப்பட்ட அருமையான பெண்? இவளையா உதாசீனம் செய்தார் வாசுதேவன்?

ஏன் சார்… கல்யாண மண்டபம், கேடரிங் இவங்களுக்கெல்லாம் கேன்சல்னு சொல்லிட்டீங்களா?

இல்லை… இனிமேல்தான் சொல்லணும்… மெட்ராஸ்ல இருக்கற சொந்தக்காரங்களுக்கு போன்ல கேன்சல்னு சொல்லணும்… வெளியூர் சொந்தக்காரங்களுக்கு சாந்தியே ஃபேஸ்புக்ல நியூஸ் குடுத்துடுவா… என்ன காரணம்னு கேட்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னுதான் தெரியலை…” வேதனைப்பட்டார் பரசுராமன்.

காரணம் என்ன? பையன் வேற யாரோ ஒரு பொண்ணைக் காதலிச்சிருக்கான். அவளோட ஓடிப் போயிட்டான்னு சொல்லிடுங்க…”

ஓர் அற்பப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார் பரசுராமன்.

ச்சே… பாவம் சார்.. வாசுதேவன் செஞ்ச பாவத்துக்கு அந்தப் பையன் பலியாகணுமா?”

அடடா… எப்பேர்பட்ட மனிதர்? எவ்வளவு நல்ல சம்பந்தம்? வாசுதேவன் தவறு செய்துவிட்டார்.

சட்டென்று அவரிடம் சொன்னேன்.

சார்… மண்டபம், கேட்ரிங், புரோகிதர் யாரிடமும் கல்யாணம் நின்னுப் போச்சுன்னு சொல்லிடாதீங்க… அதே தேதில, அதே மண்டபத்துல சாந்திக்குக் கல்யாணம் நடக்கும்… கவலையை விடுங்க…”

அனைவரும் என்னை ஏறிட்டுப் பார்த்தனர்.

என்னோட தம்பி மகன் ஒருத்தன். சுகுமார்னு பேரு; முப்பது வயசாகுது. எம்.டெக் படிச்சுபெரிய கம்பெனில வேலைல இருக்கான். பெங்களூரில் சொந்தமாக பெரிய ஃபிளாட் இருக்கு. இன்னும் கல்யாணம் ஆகலே. பையன் சூப்பரா இருப்பான். அவனுக்கு பெண் பார்த்துகிட்டிருக்கோம். ஜாதகமெல்லாம் வேண்டாம். மனசுதான் மனுஷாளுக்கு முக்கியம். நீங்க சரின்னு சொல்லுங்க… அவன் என் பேச்சை மீற மாட்டான். உங்களுக்கு ஓ.கேன்னா பையன் சம்பந்தப்பட்ட மற்ற விவரங்களை இப்பவே காட்டறேன்.”

சாந்தி சற்றுத் தயங்கினாலும், நான் அவளுடைய லேப் டாப்பை இயக்கி, சுகுமாரின் ப்ரஃபைலை ஓப்பன் செய்து காட்டினேன். சாந்தியின் முகத்தில் புதிய வெளிச்சம் தெரிந்தது!

பின் குறிப்பு: சாந்தி – சுகுமார் திருமணப் பத்திரிகையை நான் வாசுதேவனுக்கு அனுப்பவில்லை!
——————————————————————————-
“இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தான் ‘தேவன்’ அன்று”

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

1 thought on “கறுப்பு – வெள்ளை

  1. இப்படியும் பணத்துக்காக துரோகம் செய்யும் அற்ப மனிதர்களை திரு பாசி.ராமச்சந்ப்திரன் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். அழகான கதை. – ஜே.வி.நாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *