கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 8,760 
 

எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் மாதிரி காட்டும். சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அதுதான். மணல் அற்ற மைதானம். துளசி, மல்லிகை என்று செடி கொடிகள் ஓரமாய் இருக்கும் ஒரு நந்தவனமும் அதுதான். வடாம் போட, துணி உலர்த்த, கோடை காலத்து இரவில் தூங்க என்று அது எங்களுக்கு எல்லாமாக இருந்தது. அந்தக் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கொண்டு வீதியைப் பார்த்தால் பொழுது நிமிடமாய்ப் போகும். மல்லாந்த இரவில் வானத்தைப் பார்த்தால் சுருக்க விடிந்துவிடும். கைப்பிடி சுவரில் சாய்ந்து எத்தனை கல்யாண ஊர்வலம், சாமி புறப்பாடு, அரசியல் ஊர்வலம், ஆலி ஜூலா எல்லாம் பார்த்திருக்கிறோம், எதோ உப்பரிகையிலிருந்து ராஜா பார்ப்பதைப் போல.

அப்பா எப்போதாவதுதான் அங்கெல்லாம் வருவார். அன்றும் வந்தார். ஒரு பிரம்பு சாய்வு நாற்காலியை நான் கொண்டு வந்தேன். அம்மா ஏற்கனவே பாயில் உட்கார்ந்து இருந்தாள். நானும் என் இரண்டு தங்கைகளும் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தோம்.

ஜூலை மாதத்து மாலை நேரம். அருகில் இருந்த நாற்சந்தி வழக்கம் போல் ஜன சந்தடியோடு, வாகன இரைச்சலோடு இருந்தது. மூலையில் இருந்த பிள்ளையார் கோவில், அடுத்த திருப்பத்தில் இருந்த மார்க்கட், நேராகப் போனால் வரும் மெயின் ரோடு எல்லாமுமே கூட்டத்துக்கும், இரைச்சலுக்கும் காரணமாயிருந்தன. விளக்குக் கம்பங்களில் அரசியல் கட்சித் தோரணங்கள், இண்டு இடுக்கு விடாமல் வீட்டு சுவர்களில் சுவரொட்டிகள், சுதந்திரமாய்த் திரியும் மாடுகள் என்று வண்ணங்கள் கண்ணில் அடித்தன.

அப்போது அப்பா பெயர் சொல்லி யாரோ வீதியிலிருந்து கூப்பிடுவது கேட்டது. நான் எட்டிப் பார்த்தபோது சுமார் ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். கீழே போய் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்றவரைக் கூட்டிக் கொண்டு மேலே வந்தேன்.

“என்னைத் தெரியுதா” என்று கொஞ்சம் கலங்கியவாறே அவர் அப்பா அருகில் வந்தார். அப்பா அவரைப் பார்த்ததில் அவருக்குச் சட்டென்று தெரியவில்லை என்பது தெரிந்தது.

“கீழே போய் இன்னொரு சேர் கொண்டு வா” என்று அப்பா சொன்னார். நான் புறப்படும் முன், “அதெல்லாம் வேண்டாம் தம்பி” என்றவாறே அப்பா காலடியிலேயே அவர் தரையில் உட்கார்ந்து விட்டார்.

அம்மா எழுந்து “இந்தப் பாயில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றாள்.

“வேண்டாம்மா. நீங்க ஒக்காருங்க” என்று கொஞ்சம் பதற்றமாகக் கைகளாலும் சைகை செய்தபடி சொன்னவர் நிமிர்ந்து அப்பாவையே பார்த்தார்.

அப்பா கொஞ்சம் கூச்சமாகி இருந்தார். பிறகு மெள்ள, “செல்லம்… செல்லையா…” என்றார்.

“ஆமா, செல்லையாவேதான். பரவாயில்லை. ஞாபகம் வச்சிருக்கியே.” என்று நிறுத்தியவர், “எப்படி இருக்கே, நல்லா இருக்கியா.. முப்பத்தஞ்சு வருஷமாச்சு நாம பாத்து”என்றார். பிறகு அம்மாவிடம் திரும்பி, “நீங்க ஒக்காருங்கம்மா” என்றார். எங்கள் பக்கம் பார்த்து, “பசங்களா?” என்று கேட்டார்.

அப்பா “ஆமாம்” என்றார்.

“கோயமுத்தூர் போன மாசம் போயிருந்தேன். உங்க டிபார்ட்மென்ட்லே ஒன்னப் பத்தி விசாரிச்சேன். நீ மெட்றாஸ் போய் இருபது வருஷமாச்சுன்னாங்க. இங்க வந்து விசாரிச்சு உன்னப் பத்திக் கேட்டு அட்ரஸ் தெரிஞ்சுகிட்டு இங்க வரேன்….இப்ப என்ன இன்ஸ்பெக்ஷன்லே இருக்கியாமே, ஊர்லே இருக்கியோ இல்லயோன்னு நினச்சேன்”

“இப்போ மெட்றாஸ்லேதான் ட்யூட்டி. இன்னும் ரெண்டு மாசத்துக்கு.. .. நீ இப்போ எங்கே இருக்கே?”

“சீரங்கத்துலேயேதான் இருக்கேன். மலேசியா, சிங்கப்பூர், துபாய்னு போயிட்டு பத்து வருஷம் முன்னாடி ஊர் திரும்பிட்டேன். உனக்கு எப்போ ரிடயர்மென்ட் ?”

“இன்னும் மூணு வருஷம் இருக்கு. நீ என்ன பண்றே?”

“ம்….. என்னெல்லாமோ பண்ணேன்.” என்றவர் என்னைப் பார்த்து, “என்ன படிக்கிறே தம்பி” என்றார்.

“ஃபர்ஸ்ட் இயர் பி. காம்.”

“நீங்கம்மா?”

“நான் லெவென்த். இவ நைன்த்” என்று சொல்லிவிட்டு என் முதல் தங்கை அப்பாவைப் பார்த்தாள்.

அப்பா, “இவர் என் கூட திருச்சி காலேஜ்லே படிச்சவர். முப்பது முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி. நான் ஹாஸ்டல், இவர் டே ஸ்காலர்” என்றார்.

“நாம காலேஜ்ல சேந்து படிச்சதைச் சொல்றே. முக்கியமான விசயத்தச் சொல்லு” என்றவர், மெல்ல எங்கள் பக்கம் திரும்பி, “நான் உயிரோட இருக்கறதுக்குக் காரணமே உங்கப்பாதான்.” என்று சொல்லி எங்கள் மூவரையும் பார்த்தார்.

“நாங்கள் காலேஜ்ல படிக்கறப்ப காவேரிலே நான் போயிருக்க வேண்டியவன். உங்கப்பாதான் என்னைக் காப்பாத்தினார்.” இதைச் சொல்லும்போது, அவர் குரல் கொஞ்சம் விம்மியது.

இவ்வளவு நேரம் ‘யார் இந்த ஆள்’ என்று பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் கண்கள் பிரகாசமாயின.

பிறகு அவர் எங்கப்பாவைப் பார்த்து, “ நான் அன்னிக்கே போயிருக்கலாம்பா. என்னை ஏன் காப்பாத்தினே?” என்றார். உட்கார்ந்தவாறே அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவர் கண்கள் கலங்கி இருந்தன.

இரண்டு நிமிடம் யாரும் ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் கைகளை விடுவித்தவாறே தலையைக் குனிந்தவாறு பொதுவாக “ஐயாம் சாரி” என்றார்.

“உம் பிரதர் கோபாலன் எங்கே இப்ப” என்று அப்பாவிடம் கேட்டர்.

“மதுரையிலேயே ப்ராக்டீஸ் பண்ணிண்டு இருக்கார்”

“உண்மையிலேயே சொல்றேம்பா. எனக்கு உயிர் தந்ததுக்கு நான் உனக்கு என்ன வேணும்னாலும் தரலாம். நம்ம செத்துருவோமோன்னு கொஞ்சம் கூட தயங்காம தண்ணிலே குதிச்சு என்னை வெளிலே கொண்டு வந்தே. எங்கம்மாப்பா உன்னைத்தான் குலதெய்வம்பாங்க. ஆனா நான் வாழ்ந்திருக்கக் கூடாதுப்பா. என் கதை அன்னிக்கே முடிஞ்சிருக்கணும். நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்குத் தெரியாது. என்ன அப்படியே சாக விட்டிருக்கணும். ஆனா நீதாம்பா எனக்கும் கண் கண்ட கடவுள்”.

அப்பாவுக்கு கூச்சம் அதிகமாகி இருந்தது. நல்ல வேளை வேறு குடித்தனக்காரர்கள் யாரும் இன்னும் வரவில்லை.

அவர் மேலும் பேசும் முன் அப்பா, “சும்மா இரு செல்லம். அதெல்லாம் ஒண்ணுமில்லே.” என்றார். பிறகு, “நான் எங்க உன்னக் காப்பாத்தினேன். ஏதோ பதட்டத்தில தண்ணிலே குதிச்சேனே ஒழிய நானே முழுகிடுவேனோன்னு பயந்துட்டேன். நான் முழுகிப் போகாம இருக்க முயற்சி பண்ணப்ப நீயும் என் கூட வெளிலே வந்தே. அதப் பத்தி திருப்பித் திருப்பி பேசாதே. உனக்கு எத்தன பசங்க? என்ன பண்றாங்க? உன் குடும்பம் பத்தி சொல்லு.” என்றார்.

“நான் மேக்கொண்டு முப்பத்தஞ்சு வருஷம் வாழ்ந்தது ஒன்னாலேதான். நீயா என்னக் காப்பாத்தினயோ இல்லே உன் விதியோட என் விதி பிணஞ்சு நானும் தப்பிசேனோ…… ஆனா நான் அன்னிக்கே போயிருக்கலாம். ஒண்ணு தெரிஞ்சுக்க. இந்தத் தடவை ஒன்னாலே ஒண்ணும் பண்ண முடியாது. ஒன்னப் பாக்கணும் ஒருவாட்டியாவதுன்னுதான் அதைத் தள்ளிப் போட்டேன். எனக்கு என்னெல்லாம் நடந்ததுன்னு ஒனக்குத் தெரியாது, இனிமேலும் என்னப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது. உன்னாலே என்னைத் தடுக்கவும் முடியாது.”

அவரது கலைந்த தலைமுடியும், கறுக்கும் முகமும், கலங்கிய கண்களும் இதற்கெல்லாம் சற்றும் சம்பந்தமில்லாத சிறிய புன்முறுவலோடு இருந்த உதடுகளும் அவர் பயித்தியமோ என்று எண்ண வைத்தன. அப்பாவுக்குக் கூச்சத்தோடு இப்போது குழப்பமும் சேர்ந்திருந்தது. “அதெல்லாம் இருக்கட்டும். ராத்திரி இங்கே சாப்டுட்டுப் போலாம்” என்றார்.

அவர் மெல்ல சிரித்தார். முகம் தெளிவான மாதிரி இருந்தது. “இனிமே எனக்கு சாப்பாடு வேண்டாம். உன்னைப் பார்த்தது போதும். உன்னைப் பார்க்கத்தான் உயிரோடு இருந்தேன். நீ என்னைக் காப்பாத்தினபோது எங்க அப்பா அம்மாதான் இருந்தாங்க. அப்புறம் எவ்வளவோ புது சொந்தம். ஆனா இன்னைக்கு யாரும் கிடையாது. அப்பா அம்மா கூட கிடையாது. நீ மட்டும்தான் எனக்கு. அதான் உன்னைத் தேடி அலைஞ்சேன். உன்கிட்டே சொல்லிட்டுப் போக. இனிமே உன்னால் என்னைக் காப்பாத்த முடியாது.”

அம்மா இதற்குள் கீழே போய்ப் காப்பி கொண்டு வந்துவிட்டாள். அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டார். சொட்டு விடாமல் குடித்தார். நல்ல பசியோடு இருக்கிறார் என்று தெரிந்தது. சடக்கென்று எழுந்து கொண்டார். அம்மாவைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டார். “நான் யாரோ பக்கிரின்னு நினைச்சுராதீங்க. பி.ஏ.பி.எல். படிச்சு இருக்கேன். நில புலன்லாம் இருக்கு. நான் பார்க்காத ஊர் இல்லே. ஆனா இதுக்கெல்லாம் ஒண்ணும் அர்த்தம் இல்லை.” என்றார். அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் அப்பாவைப் பார்த்தாள்.

அவர் கீழே விழுந்து அப்பாவை வணங்க முற்பட்டபோது அப்பா அவரைத் தடுத்து விட்டார். “செல்லம்” என்று ஒரு அதட்டல் போட்டார்.

“இன்னும் ‘ருமாடிஸம்’ இருக்கா ஒனக்கு” என்றார் அவர். அப்பா ‘உம்’ கொட்டினார். அவர் எப்போ கிளம்பிப் போவார் என்பது மாதிரி இருந்தார்.

அவர் மறுபடியும் “ஐயாம் சாரி” என்றார். “வரேம்ப்பா” என்று அப்பாவின் இரண்டு கன்னங்களையும் தடவி விட்டு கிளம்பி எங்களிடம் “வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்து மறுபடியும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு விறுவிறுவென்று படியிறங்கிப் போய் விட்டார். எல்லாம் ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் வேகவேகமாக நடந்து விட்டன.

அப்போது வாசலில் ஒரு பெரிய ஊர்வலம் வந்தது. அரசியல் தலலவர் ஒருவரின் பிறந்த நாள். பேரிரைச்சலுடன் அலங்கரிக்கப் பட்ட வாகனங்கள், விதம் விதமான ஆட்டங்கள் என்று அந்த ஊர்வலம் சென்றது. வாழ்க ஒழிக கோஷங்கள், ஒலி பெருக்கிகளில் பிரசாரப் பாடல்கள், பேச்சாளர்கள், குழாய் விளக்குகள், ஜெனரேட்டர், போலீஸ், குதிரை, யானை என்று ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது.

இது நடந்து இருபது வருடம் ஆகி விட்டது. அதற்கப்புறம் செல்லையாவைப் பற்றி ஒன்றும் கேள்விப்படவேயில்லை. ஆனால் அவரை எப்போதுமே மறக்க முடியாதபடி ஆகிவிட்டது. அன்று இரவுதான் எங்கப்பா போய் விட்டார்.

– சொல்வனம், ஜூலை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *