ஏனிந்த முடிவு?

 

தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”.

அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது.

“அண்ணன் குடும்பத்தோட சண்டையோ, பூசலோ, இந்தச் சமயத்தில விட்டுக்குடுக்கலாமா? நான் போய் பார்த்தேன். உடம்பெல்லாம் நீலம் பாரிச்சு..!”

அதற்குமேல் கேட்க முடியவில்லை சுதாவால். இயற்கையான சாவு நேர்ந்தால் உடலில் உடனே நிறமாற்றம் உண்டாகுமா?

`இது தற்கொலைதான்!’ என்று அவளது அந்தராத்மா கூவியது. ஏனெனில், இது திவாகரின் முதல் தற்கொலை முயற்சி அல்லவே!

அம்மா தன்பாட்டில் பேசினாள்: “திவாவோட சாவுக்கு ஆளுக்கு ஒரு காரணம் சொல்றாங்க. விஷக்காய்ச்சல்னு சிலபேர். ரெண்டு தங்கைகளுக்கு கடன் வாங்கிக் கல்யாணம் செஞ்சு குடுக்கறதுக்காக வாங்கின கடனை அடைக்க முடியாம்போன அதிர்ச்சியில மாரடைப்புங்கிறாங்க மத்தவங்க”.

ஏதாவது பேசியாக வேண்டுமே என்று சுதா வாயைத் திறந்தாள். “எப்படிப் போனா என்னம்மா? போயிட்டான். அவ்வளவுதான். கல்யாணமாகி ஒரு வருஷம்தானே ஆச்சு! பாவம், அவ!” தான் பார்த்தே இராத பெண்ணுக்காகப் பரிதாபப்பட்டாள்.

“நீ வேற! பிணம் இந்தப் பக்கம் போகுது, அவன் பெண்டாட்டி அந்தப் பக்கம் அவங்கப்பா வீட்டுக்குப் போயிட்டா. சம்பிரதாயத்துக்குக்கூட அழவே இல்ல! என்னத்த சொல்றது! நல்லாவே இல்லே, போ!”

அப்படியானால், அந்த தம்பதியருக்குள் எத்தகைய உறவு இருந்திருக்கும்? இத்தனைக்கும், ஓராண்டு காலம் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்! யோசிக்க ஆரம்பித்தாள் சுதா.

அவளுடைய பெற்றோரின் வீடு மாடியும் கீழுமாக விசாலமாக இருந்தது. அங்கு அவனுக்கென்றே தனி அறையை விட்டிருந்தார்கள். சுவற்றை ஒட்டிய புத்தகங்களுடன் வாசகசாலையை ஒத்திருக்கும். அவனுடைய தாய் வீட்டில் ஒரே ஹாலில் சகோதரிகளுடன் படுப்பதைவிட இங்கு எவ்வளவோ சுகமாக இருந்தது. ராஜி அத்தைக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அவனைத்தான் அழைப்பாள்.

“எதுக்கு அத்தை என்னை அவ்வளவு அவசரமா வரச்சொன்னீங்க?”

“நம்ப வீட்டுக்கு ஒங்க மாமாவோட சிநேகிதர் வந்திருக்காருடா, திவா. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. ஒனக்குப் பள்ளிக்கூடம் லீவுதானே! அதான்! சுதாவை எப்படித் தனியா விட்டுட்டுப் போறதுன்னு யோசிச்சேன்”.

திவாகர் சிரித்தான். “சுதாவுக்கு நான் காவலா? நல்ல வேடிக்கைதான்! அவகிட்ட வாலாட்டறவங்களை சும்மா விட்டுடுவாளா? ஒதைக்க மாட்டா?”

என்னதான் மகள் தற்காப்புக் கலையில் கறுப்புப்பட்டி ஜெயித்திருந்தாலும், பதினெட்டு வயதுப் பெண்ணை யாரோ ஒரு ஆணுடன் தனியாக விடலாமா? தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

“அட, இதுக்குப் போய் கெஞ்சணுமா? என்ன அத்தை நீங்க!”

“நீ ஏதாவது புஸ்தகத்தை எடுத்துப் படிச்சுக்கிட்டிரு, திவா. சுதா கீழே படிச்சுக்கிட்டிருக்கா. பாத்துக்க. சீக்கிரமே அந்த அங்கிள் வெளியில் கிளம்பிடுவார்,” என்று ரகசியக்குரலில் கூறிவிட்டு ராஜி அத்தை பறந்தாள்.

மாடியில் தொலைகாட்சிமுன் அமர்ந்திருந்த மனிதர் அவனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியாது, அவன் தன் அறைக்குப் போய் கட்டிலில் படுத்தான்.

“திவா! கதவைச் சாத்திக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டிருக்கே?” இரண்டு நிமிடங்களுக்குமேல், கதவை உடைக்காத குறையாகத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்தாள் அவள். “எனக்கு அங்க ஒரு புஸ்தகம் வேணும். திறக்கப்போறியா, இல்லையா?”

சிறிது தாமதமாக அவன் கதவைத் திறந்தபோது, கட்டிலில் படுத்திருந்த விருந்தாளி சற்று புரண்டு படுத்ததைக் கவனித்தாள்.

உள்ளை போக யத்தனித்தவளிடம், “நீ இரு,” என்றவன் கதவை வெளியில் சாத்தினான். “தாங்க்ஸ்!” என்றான் முணுமுணுப்பாக.

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் சுதா. அவன் முகம் அழுவதுபோலிருந்தது. தலை மிகக் குனிந்திருந்தது.

“அத்தைகிட்ட சொல்லிடாதே!” என்றான் கெஞ்சலாக. அவனுக்கிருந்த படபடப்பில், தவறு யார்மேல் என்று ஆராயத் தோன்றவில்லை.

எவ்வளவு பெரிய இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றி இருக்கிறாள்! இவள் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பக்கபலமாக இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது.

முதலில் படிப்பு, பின்பு சுதாவின் கல்யாணப்பேச்சு எடுக்கப்படும்போது தன் எண்ணத்தை அத்தையிடம் தெரிவித்தால் மறுக்கவா போகிறாள் என்று பொறுத்துப்போக எண்ணினான்.

ஆனால் திவாகரால் நீண்ட காலம் பொறுமையாக இருக்க முடியவில்லை.

ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ராஜி.

“இந்த திவா என்ன நினைச்சுக்கிட்டிருக்கான்? எனக்கு காதல் கடிதம் எழுதியிருக்கான்மா. அதுவும் காலேஜூக்கு!”

“எங்கே, கொண்டா!”

“அது.. எனக்கு வந்த கோபத்திலே ஒடனே கிழிச்சுப் போட்டுட்டேன். பிரின்சிபல் கைக்குப் போயிருந்தா..?”

“ரொம்ப நல்லவன்மாதிரி நடிச்சானே, ராஸ்கல்! இவனையெல்லாம் வீட்டிலேயே சேர்த்திருக்கக் கூடாது!”

அந்த சிறிய சமாசாரம் பூதாகாரமாக உருவெடுக்க, அண்ணன் தங்கை உறவு அறுபட்டது. ஆனால், திவாகர் மனம் தளரவில்லை.

“சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” கட்டைக்குரல் கீச்சுக்குரலோடு கலந்து ஒலித்தது. தன்னையுமறியாமல், அவ்வப்போது கீச்சுக்குரலில் பேசுவான். `வேடிக்கை’ என்றெண்ணி பிறர் சிரிக்க, அப்போதெல்லாம் அவமானத்தால் அவன் முகம் சிவந்துவிடும்.

அவனை ஏறெடுத்துப் பார்த்த சுதா திகைத்தாள். முன்பு பார்த்துப் பழகிய திவாவா இவன்!

உலகிலேயே அழகில் தன்னை மிஞ்சுபவர்கள் கிடையாது என்ற கர்வம் பதின்ம வயதினருக்கு எழுவது இயற்கை. திவாகர் தன் உருவத்தில் செலுத்திய கவனத்தால் பிற ஆண்பிள்ளைகளின் கேலிக்கு இலக்காகி இருந்தானே! ஈரத்தலை சொட்டச் சொட்ட அவன் அரைமணி நேரம் தலை சீவிக் கொண்டது மறக்கக்கூடியதா!

இப்படி கலைந்த தலையும், குழிவிழுந்த கன்னங்களுமாக, ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவன்போல் காட்சி அளிக்கும்படி அப்படி என்ன நேர்ந்துவிட்டது?

அவளுக்கு முன்பு எப்போதோ நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

`ஐயே! எங்க வீட்டில பொம்பளை ராஜ்ஜியம்! யாருக்கு அங்க இருக்கப் பிடிக்கும்!’ என்றான் திவா. அவனுக்கு மூன்று தங்கைகள், ஒரு அக்காள்.

அப்போது சிரித்தபடி வந்தான் அண்ணன் சிவா. `அதான் நீயும் பொம்பளைமாதிரி ஆகிட்டியா, திவாகரி?’

`அண்ணா! அசிங்கமாப் பேசாதே!”

அவனுக்கு அன்று பரிந்ததைத் தவறாக எடுத்துக்கொண்டுவிட்டானோ! இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறானே! தான் எப்போது, எங்கு போவோம் என்று கவனித்து, வாசகசாலைக்கும் வந்துவிட்டான்!

“சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” மீண்டும் கேட்டான் திவாகர்.

அண்ணனுடனும் அவனுடனும் சிறு வயதிலிருந்தே விளையாடி இருக்கிறாள். படித்த புத்தகங்களைப்பற்றி விவாதித்து இருக்கிறாள். ஒரே வயது மூத்தவனான அவனிடம் பாடங்களில் சந்தேகம் கேட்டிருக்கிறாள். இப்போதோ அவனைப் பார்த்தாலே அருவருப்பாக இருந்தது.

“ஃபார் ஹெவன்ஸ் ஸேக்! (For heaven’s sake)” என்று அடிக்குரலில் கர்ஜித்தாள். “என்னைத் தொந்தரவு செய்யாதே!”

திவாகர் எந்த நிமிடமும் அழுதுவிடுவான் போலிருந்தது. தளர்நடையுடன் அங்கிருந்து சென்றான்.

மறுநாள் வாசகசாலை நிர்வாகி, “ஒங்க சொந்தக்காரராமே! இதை ஒங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்!” என்று ஒரு சிறு கவரைக் கொடுத்தபோது, தன் முகபாவம் மாறாமலிருக்கப் பெரும்பாடு பட்டாள் சுதா.

அதைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு விரைந்தாள்.

அதில் ஒரே வரி: என் தற்கொலை முயற்சி என் நண்பர்களால் தடுக்கப்பட்டது.

அந்த எழுத்துக்களின்மேல் ஒரு மெல்லிய கோடு. எழுதிவிட்டு, பிறர் கண்ணில் படாமலிருக்க அடிக்கிறானாம்!

ராஜியும் சுதாவும் சேர்ந்து சிரித்தார்கள். “பைத்தியம் பிடிச்சிருக்கு இவனுக்கு!” என்றாள் ராஜி. “இனிமே நீ தனியா எங்கேயும் போகவேண்டாம், சுதா! பாக்கறவங்க லைப்ரரிக்காரன்தான் ஒனக்கு லவ் வெட்டர் எழுதி, எழுதிக் குடுக்கிறான்னு நினைக்கப்போறாங்க!” என்றவள், `சீக்கிரமே இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுடணும். இல்லாட்டி இது எங்கே போய் முடியுமோ!’ என்று முடிவெடுத்தாள்.

`பட்டப்படிப்பு முடிந்ததுமே கல்யாணமா!’ என்று சுதா அடம் பிடிக்கவில்லை. இனி திவாவின் தொல்லை இருக்காது என்ற நிம்மதி பிறந்தது.

“திவாகருக்கு கல்யாண இன்விடேஷன் அனுப்ப வேண்டாம்னு பாக்கறேன்!”

தாயின் யோசனையை ஏற்கும்விதமாக சுதா தலையசைத்தாள்.

அடுத்த ஆண்டே ஒரு பெரிய காகித உறை — அழகிய பூ வேலைப்பாட்டுடன், சரிகை மின்ன, பூமாலையணிந்த ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் இருந்த படத்துடன் — தபாலில் வந்தது. பிரிக்காமலேயே அது யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று புரிந்து போயிற்று சுதாவுக்கு.

வேறு யார்! `உன்னைவிட்டால் எனக்கு வேறு பெண்ணே கிடைக்கமாட்டாளோ?’ என்று திவாதான் சவால் விட்டிருக்கிறான்!

திவாகரை, `திவாகரி,’ `பொம்பளை’ என்று பிற பையன்கள் பலவாறாக கேலி செய்ததில் ஏதோ உண்மை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அன்று அந்த மனிதர் அவ்வளவு துணிச்சலுடன் அவனிடம் முறைகேடாக நடக்கத் துணிந்திருப்பாரா?

தானே ஒத்துக்கொள்ள விரும்பாத இயல்பை அவன் உணர்ந்து அதிர்ந்த தருணமோ அது?

அதை ஏற்கத் துணிவில்லாது, `ஒரு பெண்ணை மணந்தால் எல்லாம் சரியாகிவிடும்!’ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும். அந்த பயத்தில்தான் தன்னை அப்படித் துரத்தியிருக்கிறான்!

அப்படியானால், கல்யாணமாகி ஒரு வருடத்துக்குள் ஏனிந்த முடிவை எடுத்தான்?

சுதாவின் கற்பனை கட்டுக்கடங்காமல் ஓடியது.

திவாகரால் இன்னொரு பெண்ணுடன் இணைந்து, ஓர் ஆண்மகனாக வாழ முடியாமல் போயிருக்கும். எந்தப் பெண்ணுக்கும் உற்ற கணவனாக அவனால் இருக்க முடியாது என்ற உண்மை தந்த அதிர்ச்சியைத் தாங்காதுதான்..!

“பாவம், திவா!” என்றாள் சுதா. உரக்கவே. 

தொடர்புடைய சிறுகதைகள்
டான்ஸ் டீச்சர் சுந்தராம்பாள் மேடையே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள். “யார்தான் விமரிசனம் எழுதறதுன்னு ஒரு இது..,” சரியான வார்த்தைக்காகச் சற்று யோசித்தாள். ஆத்திரத்தில் ஒன்றும் பிடிபடாததால், அதையே திருப்பிச் சொன்னாள். “..ஒரு இது வேண்டாம்? நம்ப மாணவிங்களைக் குறை சொல்ல இவன் ...
மேலும் கதையை படிக்க...
கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது. பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான ...
மேலும் கதையை படிக்க...
பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நொ¢யும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சோ¢ கூடுதலாக ஒலிக்கும் என்று எண்ணுபவள் நம் கதாநாயகி. அதனால், அக்காலங்களில் வீட்டிலேயே பூசையை முடித்துக் கொள்வாள். `கதாநாயகி` என்றதும், ஒர் அழகான இளம்பெண்ணை வாசகர்கள் கற்பனை ...
மேலும் கதையை படிக்க...
அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்! `ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல் தப்பிக்கலாம். வேலையும் மிச்சம்!’ என்று எப்போதோ எண்ணியது தவறோ என்ற சிந்தனை உதித்தது. “வேலை ...
மேலும் கதையை படிக்க...
“ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி -- சுருக்கமாக, கு.ரங்கு. “ஒனக்குக் கல்யாணமாகி இன்னும் அம்பது நாள்கூட ஆகலியே! ஆசை அறுபது நாளுன்னு இல்ல சொல்லி வெச்சிருக்காங்க! அப்படிப் ...
மேலும் கதையை படிக்க...
கையில் பிரித்த பத்திரிகையுடன் தன்னை நோக்கிவந்த மகளைக் கவனிக்காது, மும்முரமாக இட்லி மாவை வார்த்துக் கொண்டிருந்தாள் ராஜம்மா. “அம்மா! இன்னிக்கு என் கதை வந்திருக்கு!” அம்மா தன் உற்சாகத்தில் பங்கு கொள்ளமாட்டாள், குறைந்தபட்சம் அதைப் புரிந்துகொள்ளக்கூட அவளால் முடியாது என்பது தெரிந்திருந்தும், தேவியால் அந்த ...
மேலும் கதையை படிக்க...
அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா. பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது அல்லது எண்பதாவது பிறந்தநாளை ஒட்டி நடத்திய விழா. இதெல்லாம் முன்னேபின்னே பார்த்தறியாத `நண்பர்’களுக்காக. பிடிக்கிறதோ, இல்லையோ, எல்லாவற்றையும் அவர்களும் பாராட்டிவைப்பார்கள். அப்போதுதானே, நாளைக்கு அவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
தன் சிநேகிதி வீட்டுக்குப் போய் திரும்பிய கமலம் படபடத்தாள்: “கன்னாபின்னான்னு பேர் வெச்சா இப்படித்தான் ஆகும்!” புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ரேணுகா நிமிர்ந்தாள். எதுவும் கேட்கவில்லை. அம்மா தானே சொல்வாள் என்று காத்திருந்தாள். “மீனாட்சியோட பொண் வயத்துப் பேரனுக்கு துருவன்னு பேரு வெச்சா. ஸ்டைலா கூப்பிடறது ...
மேலும் கதையை படிக்க...
“சங்கர் முந்திமாதிரி இல்லேம்மா. சிடுசிடுங்கிறாரு!” சங்கரை அனுபமா தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியபோது, தான் உண்மையை மறைக்காது சொன்னது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது! ‘இவங்கப்பா காண்ட்ராக்டில வீடு கட்டற தொழிலாளியா இருந்தவரு. வேலை பாக்கிறப்போ ஒரு விபத்திலே போயிட்டாரு,’ என்று ஆரம்பித்து, ...
மேலும் கதையை படிக்க...
“முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட குழந்தைங்கதான்’னு சொல்லி, நாம்ப செய்யற வேலையைக்கூட அவரு செஞ்சாராம். அவரு மகாத்மாடா. அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன்!” தொட்டியிலிருந்த தண்ணியை ...
மேலும் கதையை படிக்க...
டான்ஸ் டீச்சர்
கோந்து ஸார்
படப்பிடிப்பு
தாம்பத்தியம் = சண்டை + பொய்
சண்டையே வரலியே!
தோழி வேறு, மனைவி வேறு
முகநூலும் முத்துலட்சுமியும்
பெயரில் என்னமோ இருக்கு!
காத்திருந்தவன்
காந்தியும் தாத்தாவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)