ஆண்களெல்லாம் எப்போதும் மணமகனாக

 

பவுனு பரிதவித்துக் கொண்டிருந்தாள்.

இன்றைக்கு இருக்கும் தம்பதிகள் எல்லாம் எவ்வளவோ புத்திசாலியா இருக்காங்க. இல்லாவிட்டா, என்னைப்போல மூணு புள்ளைக, அதுவும் பொம்பள புள்ளைகளா பெத்துப்போட்டு, கண்ணுக்கு உறக்கமும் இல்லாம, நெஞ்சுக்கு நிம்மதியுமில்லாம இருப்பனா? என்று நினைத்து, நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த பவுனுக்கு அவ்வப்போது வரும் புருசனின் நினைவு இப்போதும் வந்தது.

ஆண்களெல்லாம் எப்போதும்மூத்தது இரண்டும் பொண்ணாக பிறந்து விட்டதில் அவளுக்கு மட்டும் இல்லை, அவள் புருசன் சங்கரனுக்கும் வருத்தம்தான். மூணாவதாக அவள் பிள்ளை உண்டாகி இருக்கையில், இந்தப் பிள்ளையாவது ஆண்பிள்ளையாக பிறக்க வேண்டுமென்பதற்காக அங்கே பக்கத்திலிருந்த கோயில்களுக்கெல்லாம் போய் வந்தாள். நினைவுக்கு வந்த தெய்வங்களையெல்லாம் வேண்டினாள். இதனால் வயிற்றிலிருக்கும் சுமை போதாதென்று நெஞ்சிலும் சுமையேற, எந்த நேரமும் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் இவள் ஆசைகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு மூன்றாவதும் பெண்ணாகத்தான் பிறந்தது. என்ன குழந்தை பிறக்கப்போகிறது? என்று வாசலில் தவித்துக்கொண்டிருந்த சங்கரனிடம், “”இப்பவும் பொண்ணுதேன் பொறந்திருக்கு.” என்று நர்ஸ் சொன்னதுமே, “”பொம்பளப் புள்ளையா பெத்து தள்ளுறவகிட்ட இனிமே குடும்பமா இருக்க முடியாது” என்று அன்று வெளியேறியவன்தான், இதோ இன்று மூத்தவள் வளர்மதிக்கு முப்பது வயது நெருங்கப் போகிறது. இன்னும் அவன் வரவில்லை.

பவுனால் அவனைப்போல் இருக்கமுடியுமா? பெண் ஜென்மமாச்சே! அதிலும் பெண்களைப் பெற்ற தாயாகிப் போனாளே. மூன்று பெண்களைப் பெற்ற பின்னும் இன்னும் கொஞ்சம் வனப்போடு இருக்கும் தனக்கு ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டால், பின்னாளில் அந்தப் பெயர் தன் பிள்ளைகளைப் பாதித்து விடுமோ? என்று ஆண்களை நெருங்கவே அஞ்சினாள். ஆனாலும் பிச்சை எடுப்பதை தவிர்த்து இரவு, பகல் என்று பார்க்காமல் உழைத்தாள். இவளுடைய நன்னடத்தையும், பணிவும், கைச்சுத்தமும் பணக்காரர்களிடையே ஒரு பிரியத்தையும் அனுதாபத்தையும் கொடுக்க, ஒவ்வொருவரும் இவளை வேலை ஏவியதோடு இல்லாமல், தங்களிடமிருந்த மிச்சம், மீதி என்று கொடுக்க பவுனு தன் பெண்களைப் பட்டினி போடாமல் வளர்த்ததோடு படிக்கவும் வைத்தாள்.

தன் அம்மாவின் கஷ்டங்களையும், கண்ணீரையும் அறிந்த பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் படிப்போடு முடித்துக் கொண்டு தாங்களாகவே ஆளுக்கு ஒரு வேலையாக தேடிக்கொண்டார்கள். “எப்போதுமே அடிதட்டு ஏழைகளை மனதில் வைத்து அவர்களின் நல்லதுக்காக ஆட்சிகள் நடப்பதில்லை’ விலைவாசிகள் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்க அதிலும் இந்த ஏழைகள் வாழ்ந்துதானே ஆக வேண்டும்? அதனால் தன் தகுதிக்கேற்ற மாப்பிள்ளையாய் பார்க்கும்படி புரோக்கர்களிடம் சொல்லியிருந்தாள். “”கொஞ்சம் வயதானாலும் சரி. அல்லது இரண்டாம் தாரமாயிருந்தாலும் பரவாயில்லை” என்று பவுன் சொன்னபோது, “”நீ கவலய விடு தங்கச்சி. இப்பவெல்லாம் பயக பொண்ணு கிடைக்காம திண்டாடுதாக. நானு உனக்கு நல்ல மாப்பிள்ளையா கொண்டுக்கிட்டு வாரேன்.” என்று அவளை உற்சாகப்படுத்திய புரோக்கர் அவளிடம் செலவுக்காக நூறு ரூபாயையும் வாங்கிக் கொண்டு போனான்.

ஒரு வெள்ளிக்கிழமை காலையிலேயே, “”இன்னைக்கு உன் பொண்ணப் பார்க்க மாப்பிள்ளை வரான்.” என்று சொன்னதும் பவுனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.

“”நீங்க நல்லா இருப்பீங்கண்ணே! உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கும்.” என்று சொன்னதும் புரோக்கருக்கு முகம் சுண்டியது.

“”எனக்கு கல்யாணமே ஆகல. பெறகெங்க புள்ளயும், குட்டியும்?”

“”என்னண்ணே சொல்றீங்க?”

“”ஆமா தாயி, இந்தப் புரோக்கர் தொழிலை நம்பி ஒருத்தியைக் கட்டிட்டு வந்தா அவ்வளவுதான். சரி, சரி என்னை விடு. வார மாப்பிள்ளைக்கு வயசு நாப்பது இருக்கும். தானா பொங்கி சாப்பிடுறதினால அவரப் பாத்தா கொஞ்சம் கூடுதல் வயசு மாதிரி தோணும். எந்த கெட்டப் பழக்கமும் இல்ல! ஓர் அச்சாபிசுலே வேல. நாலாயிரம் ரூவா சம்பளம். சொந்தமா ஒரு சின்ன வீடு” என்றதுமே, “”அண்ணே” என்று அலறினாள் பவுனு.

“”அட, நீ என்னம்மா நானு சொன்னத வேற அர்த்தத்துல எடுத்துக்கிட்டே போலே இருக்கு. இந்த அலறு, அலறுதே. குடியிருக்க சின்னதா ஒரு ஓடு போட்ட வீடு இருக்கின்னு சொல்ல வந்தேன்.” என்றதும் நிம்மதியாக பெருமூச்சுவிட்டாள் பவுனு.

“சின்ன வீடுன்னதும்’ “”என் மனசு என்னம்மா பதறிபோச்சு தெரியுமா? எது எப்படி இருந்தாலும் என் பொண்ண நல்லா வச்சிக்கிட்டா போதுண்ணே.”

“”அதெல்லாம் நல்லா வச்சிக்கிடுவாரு. நீ பயப்படாத. சரி சாயங்காலம் நாலு மணிக்கு மாப்பிள்ளயோட வாரேன். செலவுக்கு ஒரு நூறு இருந்தாக் கொடு” என்று மீண்டும் அவளிடம் நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு போனான்.

புரோக்கர் சொன்னபடி சரியாக நாலுமணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள். அவர்களை வரவேற்றாள் பவுனு. டை அடித்த மண்டையில் முன் வழுக்கை பளிச்சென்று தெரிந்தது. கையிலிருக்கும் ரேகைகளாய் அவன் முகத்தில் சுருக்கங்கள் அவனுக்கு வயது நாற்பதுக்கு மேலேயே இருக்கும் என்று பதிவு பண்ணியிருந்தன. அதோடு இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்ற நினைவு அவள் நெஞ்சின் ஓரத்தில் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கும் மகளை அவசரப்படுத்திவிட்டு வந்தவள் மீண்டும் மாப்பிள்ளையை நோக்கியபோது, அவனின் இடதுபக்க சுருட்டை காது அவள் கண்ணில்பட, அடிவயிறு பகீரென்றது. நெருப்புக்குழிக்குள் இறங்கியவள் போல் உடம்பெல்லாம் எரிய, அவளுக்குப் படபடப்பாய் வந்தது. தன்னை சமாளித்துக் கொண்டவள் புரோக்கரை மட்டும் தனியாய் அழைத்தாள்.

“”என்னம்மா?” என்று கேட்டவாறே வந்தவனிடம், “”மாப்பிள்ளை பேரு சங்கரன்தானே?’ என்று கேட்டதும், “”இல்லையே எம்பேரு முத்துராசுன்னுல்ல சொன்னாரு” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே, “அவனக் கூட்டிக்கிட்டு நீ இப்பவே வெளியேறிரு’ என்றாள் பவுனு. ஆத்திரத்தில் அவள் முகம் கனன்று கிடந்தது.

“”என்னம்மா பொண்ணப் பாக்க வேண்டாமா?”

என்று புரோக்கர் கேட்க, “”இனியும் ஒரு வார்த்த பேசுன மானம் கெட்டுப்போவும் போயிரு” என்று பவுனு உறும, புரோக்கர் எதுவும் புரியாதவனாய் மாப்பிள்ளையோடு வெளியேறினான். சற்றுமுன், கலகலப்பாய் இருந்த வீடு இப்போது வெறிச்சிட்டுக் கிடந்தது.

அவர்கள் போனதும் வாழ்க்கை தனக்கு இழைத்த கொடுமையையும், இப்போது தான் இருக்கும் அவல நிலையையும் நினைத்து “கோ…’வென்னு கதறினாள் பவுனு. அம்மாவின் அழுகைக்குக் காரணம் புரியாமல் எல்லோரும் அவளைச் சுற்றியவாறு திகைத்து நிற்க, அவர்களுக்குத் தெரியுமா?

முப்பது வருசத்துக்கு முன்னால் இந்த சங்கரன்தான் முதன்முதலாக அவளைப் பெண்பார்க்க வந்தானென்று.

- ஜனவரி 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
வேட்டை நாய்! பத்ரகாளிக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ளைக. மூத்தவன் கருப்பழகு, அப்புராணி. வாயத் தொறன்னா கண்ணத் தொறப்பான். சுந்தரம் இளையவன். வாய் சவுடாலு. எப்பவும் சில்லுனு வெள்ளை வேட்டி & சட்டையோட ஊரைச் சுத்திக் கிட்டுத்தேன் அலைவான். இவங்களுக்கு ஒரு அத்தை மக இருந்தா. ...
மேலும் கதையை படிக்க...
அல்லி ராச்சியம்! தன் மகளைப் பார்த்து பார்த்து, சீதா பூரிச்சுப் போனா. கனிஞ்ச எலந்தைப் பழத்தைப்போல ஒரு நெறம். சின்ன செப்புவாய், உருட்டை உருட்டையான காலும் கையுமா.. அது நிமிசத்துக்கொருதரம் அழுறதும் சிரிக்கிறதுமா வேடிக்கை காட்டுறதைப் பார்க்க நிஜமாவே கொடுத்து வைச்சிருக்கணும். ஆனா, ...
மேலும் கதையை படிக்க...
இளவரசி காதல் தன்னோட ஒரே மகன்... வருங்கால பட்டத்து இளவரசனாகப் போறவன்... ஒரு ஏழைப் பொண்ணை கல்யாணம் முடிச்சுக்கிட ஆசைப்படுறான்னு கேள்விப்பட்டதும் மன்னர் மகேந்திரர் திகிலடிச்சுப் போய்ட்டாரு. மகன் பிரபுவைப் பத்தியும், அவன் கல்யாணத்தை எப்பிடியெல்லாம் நடத்தணும்கிறதைப் பத்தியும் ஏகப்பட்ட கனவு கண்டிருந்தாரு. ...
மேலும் கதையை படிக்க...
பட்டணத்தில் பெரிய படிப்பு படித்துக் கொண்டிருந்த ரங்கநாதனின் ஒரே செல்ல மகன் பாண்டியனுக்கு, சொந்த ஊருக்கு வரவே மனசில்ல. ஆனா, காலேசு படிப்பு முடிஞ்சி போச்சு. அவன் அய்யா வேற கடுதாசிக்கு மேல கடுதாசியா போட்டு அவனை வரச் சொல்லிக்கிட்டிருக்காரு. ஊருன்னு சொன்னாலே ...
மேலும் கதையை படிக்க...
கொலுசுக்காரி! பெத்த மக ரஞ்சனியை நினைச்சாலே வேதாசலத்துக்கும், அவர் பொண்டாட்டி ராசம்மாவுக்கும் ரொம்பப் பெருமையா இருந்துச்சு. அழகும் அறிவும் ஒரு எடத்துல சேந்தமான இருக்காதுனு சொல்லுவாங்க. ஆனா, ரஞ்சனி பொட்டுவம் கணக்கா அம்புட்டு அழகா இருந்தா. கனிஞ்ச மாம்பழம் கணக்கா நெறமும், மல்லிகைப்பூவ ...
மேலும் கதையை படிக்க...
கரிசல் காட்டு காதல் கதைகள்!
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 14
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 3
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 2
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)