அக்கா என்றால் அம்மா

 

இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் எனது மருத்துவப் பட்டப் படிப்பை படித்து முடித்து எம்.பி.பி.எஸ். பட்டத்தை பெற்றுக்கொள்ளும் நான் பட்டம் பெறுவதை பார்த்து பெருமையடையவும் அதன் பின் என்னை வாழ்த்திக் குதூகலமடையவும் என் பெற்றோரும் என் தம்பியும் வந்திருந்தார்கள். ஆனால் இதனால் எல்லாம் என்னால் சந்தோசம் அடைய முடியவில்லை.

அதற்குக் காரணம் அந்த உன்னத நிலையை நான் அடையக் காரணமாக இருந்த என் அக்கா இன்று என்னுடன் இல்லை. எனக்கு அம்மா இருந்தாலும் என் அக்காதான் அம்மா ஸ்தானத்தில் இருந்து என் சுக துக்கங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டவள். அவள் சில மாதங்களுக்கு முன்புதான் விசக்கிருமித் தொற்றுக்கு ஆளாகி கடுமையான நோய் வாய்ப்பட்டு இருதயம் பாதிக்கப்பட்டு இறந்து போனாள். அவளுக்கும் எனக்கும் மூன்று வயதுதான் வித்தியாசம். ஆனால் அவள் என்னை அரவணைத்து அம்மாவைப்போல் அன்பு காட்டினாள்.
அக்கா என்றால் அம்மா
எனக்கு ஆறு வயதாகும்போதுதான் என் தம்பி பொறந்தான். அவன் தாமதமாக பொறந்ததாலோ என்னவோ, இல்லாட்டி அவன் ஆண் குழந்தை என்ற காரணத்தாலோ அவன் பொறந்த பிறகு அம்மா எங்கள் மீது அதிகம் அக்கறை கொள்ளவில்லை. தம்பி பொறந்த பின்னர் நானும் அக்காவும் பலமுறை அம்மாவின் இந்த புறக்கணிப்பை எண்ணி எண்ணி குடைந்துபோய் அழுதிருக்கிறோம். அதன்பின் அக்கா என்னை ஒரு நாள் கட்டி அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னாள். “உனக்கு நான் இருக்கிறேன்டா கண்ணே” என்று. அதன் பின் நான் அவளுடன் ஒட்டிக் கொண்டு விட்டேன்.

அக்கா இறந்த அந்த நாளை எனக்கு மறக்க இயலாது. நான் பல்கலைக்கழகத்தின் விரிவுரை மண்டபத்தில் இருந்தேன். எனக்கு ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக அலுவலகத்தில் இருந்து செய்தி வந்தது. நான் ஓடிப்போய் என்னவென்று கேட்டேன். அக்காவுக்கு ஆஸ்பத்திரியில் றொம்ப முடியாமல் இருக்கிறதென்றும் உடனே வரும்படியும் அம்மா கூறினா. நான் கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு விறைந்தேன். அக்கா படுக்கையில் இருந்து எழ முடியாமல் கண்ணீர் தழும்ப கை நீட்டி என்னை அணைத்தாள். “நான் போகப் போறேன்டி இனி நீதான் உன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும்” அதுதான் அவள் கூறிய கடைசி வார்த்தைகள். அதன் பின் சில கணங்கள் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன்பின் அப்படியே அவள் தலை சரிந்து போய்விட்டது.

அவளது மரணம் என்னை அப்படி. சிலுவையில் ஆணி வைத்து அறைந்தது போன்ற வலியைத் தந்தது. அவள் இறந்தது எல்லாரையும் விட எனக்குத்தான் பேரிழிப்பு. நான் என் அன்புத் தோழியை இழந்துவிட்டேன்.

என்னை அவள் வாழ்நாள் முழுதும் கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக் கொண்டாள். என்னை மாத்திரமல்ல என் தம்பி மீதும் அவள் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள். அவன் கற்றுக் கொள்வதிலும் கிரகித்தலிலும் ரொம்ப மக்கானவனாக இருந்தான். அதனால் அவனுக்கு டியூசன் எடுத்து பாடம் சொல்லிக் கொடுப்பாள். அவன் மண்டையில் பாடம் ஏறும்வரைக்கும் கேள்வி கேட்டு பதில் கண்டுபிடிக்க வைப்பாள். அவன் சோர்ந்து போனபோது, வெளியில் அழைத்துச் சென்று ஐஸ்கிறீம் வாங்கித் தருவாள். எனக்கும் சேர்த்துத்தான்.

எங்கள் வீட்டில் அக்காவுக்கென தனியான ஒரு அறையிருந்தது. அதை அவள் சுத்தமாக மிக ஒழுங்காக பொருட்களையெல்லாம் அழகாக அடுக்கி கண்ணைக் கவரும் விதத்தில் வைத்திருப்பாள். நான் என் அக்கா பற்றிய நினைவுவரும் போதெல்லாம் அந்த அறைக்குச் சென்று அக்காவின் கட்டிலில் சற்று நேரம் அமர்ந்திருப்பேன். அவளுக்கு ஊதாக் கலரொன்றால் மிகவும் பிடிக்கும். அவள் கட்டிலில் ஊதாக்கலர் படுக்கை விரிப்புத்தான் விரித்திருந்தாள். அவள் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது, எப்படி அது விரிக்கப்பட்டிருந்ததோ அதேபோல் இப்போதும் அப்படியே கசங்காமல் காணப்பட்டது.

அவளுக்குப் பாரதியார் பாட்டென்றால் ரொம்ப பிடிக்கும். கண்ணம்மா பாட்டை அவ்வப்போது முணுமுணுப்பாள். அவளுக்கு இயல்பாகவே ஓவியக்கலை வாய்த்திருந்தது. அவள் தனக்குப் பிடித்த முண்டாசு மீசைக்கவிஞன் பாரதியின் படத்தை தானாகவே வரைந்து பெரிய அட்டையில் ஒட்டி அதனை சுவரில் மாட்டியிருந்தாள். அந்தக் கவிஞன் இப்போதும் யாரையோ பார்த்து புன் சிரிப்புக்காட்டிக் கொண்டிருந்தான்.

அவள் மிருகங்கள், பறவைகள் மீதும் அன்பு பாராட்டினாள். எங்கள் வீட்டில் மணி என்ற நாய் இருக்கிறது. அது அவளைக் கண்டால் மாத்திரமே வாலாட்டி சிணுங்கி குலையும். அவள் இறந்த பிறகு அந்த நாயும் சிலகாலத்தில் இறந்து போய்விட்டது. அவள் வீட்டிலிருந்த நாய், பூனைகளுக்கு மாத்திரமல்லாமல் வெளியில் இருந்த அணில்கள், கிளிகள், மைனாக்களுக்கும் உணவு, தண்ணீரும் வைக்கத் தவறமாட்டாள். அவையும் கூட அவளது அறையின் ஜன்னலோரம் வந்து கீச் கீச் சென்று கத்திக் கொண்டு அவளைத் தேடும்.

அவள் தனது கட்டிலில் வரிசையாக நாய், பூனை, அணில், முயல், கரடி, வாத்து அன்னம், குருவிகள் ஆகியவற்றின் பொம்மைகளை அடுக்கி வைத்திருந்தாள். தான் ஆனந்தித்திருக்கும் போதெல்லாம் அவற்றை எடுத்துக் கொஞ்சுவாள். அவள் பாடசாலையிலும் படிப்பிலும் விளையாட்டிலும் திறமைமிக்க மாணவியாகத் திகழ்ந்தாள். அவள் தன் திறமைக்குப் பரிசாகப் பெற்ற கோப்பைகளும் கேடயங்களும் அலுமாரியில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அவள் பெற்ற பதக்கங்கள் வண்ண ரிபன்களில் கோர்க்கப் பெற்று தொங்கவிடப்பட்டிருந்தன.
எனது அக்காவின் மனது எப்போதும் திறந்த மனதாகவே இருக்கும். அவளைச் சுற்றி எப்போதும் நண்பிகள் கூட்டம் சூழ்ந்து இருந்து கொண்டே இருக்கும். அவள் யாருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் இரண்டும் தரம் யோசிக்காமலே செய்வாள். அவள் யாருக்கும் துன்பம் ஏற்பட்டுவிடத்து அவர்களை அரவணைத்து ஆறுதல் சொல்லத் தவறுவதில்லை.

இப்போதெல்லாம் அவளது அந்த கலகலப்பான அறையும் எங்கள் வீடும் மௌனமாகவே கண்ணீர் வடிக்கின்றன. நானும் கூட இருந்திருந்து அந்த அறைக்குச் செல்வதெல்லாம் அவள் இல்லாத சோகத்தை நினைத்து இரண்டு சொட்டுக் கண்ணீரை வடித்து என் சோகத்தை போக்கிக் கொள்ளத்தான்.

எனக்கு நல்லாவே புரிகிறது. இப்படி எல்லா நாளும் அக்கா இல்லாத சேகத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்க முடியாதென்பது. அவள் எத்தனையோ நல்ல விடயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள். வாழ்க்கையை பொறுமையுடனும் விட்டுக் கொடுத்தலுடனும் அணுக வேண்டும் என்பது அவள் கற்றுக் கொடுத்த பாடம்தான். அந்த பழக்க வழக்கங்களுக்கூடாக என் உயிர் இருக்கும் வரைக்கும் என்னுடன் அவள் வாழ்வாள்.

இப்போது அவள் இல்லாத நிலையில் என் தம்பியும் அம்மா, அப்பாவும்தான் எனக்கிருக்கும். உறவுகள். என் அக்கா எனக்காக எப்படி வாழ்ந்தாளோ அது போலவே இனி நான் எஞ்சியிருக்கும் என் உறவுகளுக்காக வாழ்வேன். வாழ்க்கை என்பது அத்தனை இலகுவானதல்ல என்பதனை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நாம் தான் அதனை அர்த்த முள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நான் வாழ்க்கையின் கடினமான ஒரு விளிம்பு நிலையில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு விட்டேன்.

இன்று இந்த மகிழ்ச்சிக்கரமான கணத்தில் என் அக்கா என்னுடன் இல்லாதிருந்தாலும் அவள் எங்கிருந்தோ என்னை வாழ்த்திக் கொண்டுதானிருப்பாள். என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். இந்தக் கற்பனையுடன் நான் எனக்கான பட்டப்படிப்புச் சான்றிதழையும் நான் எனது பாடங்களிலும் ஏனைய செயற்பாடுகளிலும் அதிக திறமையைக்காட்டியமைக்கான தங்கப் பதக்கங்களையும் கேடயங்களையும் பெற்றுக் கொண்டு என் தம்பி மற்றும் என் பெற்றோர் அமர்ந்த இடத்தைப் பெருமையுடன் பார்த்தபோது அங்கே அவர்களுடன் என் அக்காவும் அமர்ந்திருப்பது எனக்குத் தென்பட்டது.

- மே 2018 

தொடர்புடைய சிறுகதைகள்
"நாளைக்கு எப்படியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். நான் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். எடுத்த எடுப்பில் வேலையை நிறுத்திப்புட்டார் என்ன செய்வது.... அதையுந்தான் பார்க்கலாம்'' சீனிவாசகத்தின் நெஞ்சில் ஓடிய உரத்த எண்ணங்கள் போலவே அவனுடைய மண் வெட்டியும் பலமாக நிலத்தைக் கொத்திக் ...
மேலும் கதையை படிக்க...
"அத்தை இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வா'' என்று வந்திருந்த அந்தச் செய்தியை நான் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். சந்திரா அத்தை இறந்து விட்டார் என்ற செய்தி என்னில் பெரும் சோகத்தை தோற்றுவிக்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் சந்திரா ...
மேலும் கதையை படிக்க...
வசந்தி நீண்ட காலத்துக்குப் பின்னர் தனது ஆருயிர்த் தோழி சுந்தரவள்ளியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். பாடசாலைப் பருவத்தின் அந்த இனிய நாட்கள் இன்னும் பசுமையாக அவள் மனதில் பதிந்து போயிருந்தன. அவள் எத்தனையோ முறை அவளைச் சென்று பார்த்துவிட்டுவந்துவிட வேண்டுமென்று யோசித்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பல உன்னத வரலாறுகள் ஆங்காங்கே ஆழப்பதிந்து காணப்படுகின்றன. அத்தகைய வரலாறுகள்தான் இன்றும்கூட மானிடவியல் வரலாற்றுக்கு அணி சேர்ப்பனவாக உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் நியூரம்போக் பிரதேசத்தின் கிராமமொன்றில் ஒரு ஏழைத்தொழிலாளியின் மகனாகப் பிறந்த அல்பிரெச்ட் டூரர் என்பாரின் வரலாறும் ...
மேலும் கதையை படிக்க...
பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து வட்டாரத்தில உள்ள பத்துத் தோட்டங்களும் தெரியும். எங்க தோட்டத்திலேயே ரொம்ப ஒசரமான ஒரு எடத்துல அது கம்பீரமா ஒரு பாறைக்குன்று ...
மேலும் கதையை படிக்க...
நேர்கோடுகள் வளைவதில்லை
நெஞ்சினலைகள்
வசந்தியின் நட்பு
உழைக்கும் கரங்கள்
சூடேறும் பாறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)