மலைக்காட்டு மர்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 43,104 
 
 

இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான இடம். உயர்ந்த மலைகளைப் பற்றிப் படர்ந்த பசுமையான காடு, காட்டை நிறைத்திருந்தன பல நூறு வருடங்களைத் தாண்டிய பல பெரிய பெரிய இராட்சத மரங்கள். இருகைகளால் இணைத்துப் பிடிக்க முடியாத அகன்ற தண்டுகளுடன், அதன் கிளைகளோ பாசிபடிந்து ஒட்டுன்னிக‌ளின் உறைவிடமாய் பூமியை தொட்டுக் கொன்டிருந்தன. அந்த மலைக்காட்டில் அமைந்திருந்தது இயற்கையின் எழில் நடனமாய் காணும் போதே குளிர்ச்சியூட்டும் ஓர் அழகான நீர்வீழ்ச்சி..!

உயர்ந்த மலையிலிருந்து பொங்கிப் பெருகி நுரைகள் பளீரிட பாலைப்போல மலையிலிருந்து குதிதோடி வந்து குளிரூட்டியது அந்த நீர்வீழ்ச்சி. பளிங்கு போன்று மிக மிக சுத்தமான நீர். அந்த நீர்வீழ்ச்சி அருகாமையிலிருந்த குடியிருப்பாளர்களுக்கு ஒரு குட்டி சொர்க்கத்தையே சிருக்ஷ்டி செய்து வைத்திருந்தது.

வாரக்கடைசி நாட்களில் மக்கள் கும்பல் கும்பலாகவும், ஜோடி ஜோடியாகவும் அங்குள்ள நீரோடும் நீர்நிலைகளில் குளித்து மகிழ்வர். அக்கம் பக்கத்திலும் பிரபலமாகி நாளடைவில் வளர்ந்து வரும் ஒரு சுற்றுலா தள‌மாகவும் புகழ்பெற்றது அந்த நீர்வீழ்ச்சி. அதன்பின்னர்…!

அந்த இடத்தைக் குறித்து பயங்கரமான வதந்திகள் கால் முளைத்து உலா வரத் தொடங்கின. மர்மமான முறையில் சில இற‌ப்புகள் அங்கே நிகழ்ந்தன‌. அந்த இடம் கறுப்புப் பிரதேசம் என அங்குள்ளவர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. பலருக்கு அங்கே ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள் கதை கதையாகச் சொல்லப்பட்டன.

மக்களின் உல்லாசத்தளமாக புகழ் பெற்ற அவ்விடம் அதற்குப் பின் ஆள் அரவமற்ற பகுதியானது. விவரம் அறியா மக்கள் மட்டுமே அங்கே சென்று பொழுது போக்குவதும், பளிங்கு போன்ற‌ நீர்நிலைகளில் குளித்து மகிழ்வதும் நிகழ்ந்த‌து. உள்ளூர்வாசிகளுக்கு அவ்விடம் என்றாலே பதற்றமும் பீதியும் பற்றிக்கொன்டது. பெரியவர்கள் தங்கள் வீட்டுப்பிள்ளைகளிடம் அந்த நீர்வீழ்ச்சிப் பக்கம் போகவே கூடாது என தடை உத்தரவு பிற‌ப்பித்து வைத்திருந்தனர்.

அன்று காலை இரு பள்ளி மாண‌வர்கள் அந்த மலைக்காட்டு நீர்வீழ்ச்சிக்கு பெற்றோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக வந்துகொன்டிருந்தனர் பள்ளிக்குப் போவதாய் பாவனை செய்துவிட்டு அந்த மலைக்காட்டுக்குள் புகுந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு காத்திருக்கும் அபாயம் அறியாமல்..!

அவ்விருவரும் காட்டுக்குள் அலைந்து திரிந்துவிட்டு நன்பகலில் நீர்வீழ்ச்சியை அடைந்தனர். நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் கிடந்த பெரிய கற்பாறைகளில் கால் வைத்து நடந்து கொன்டே பிரவாகமெடுத்துப் பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியில் பார்வையை பதித்தனர்.

அங்கே அவர்களுக்கு முன்னே யாரோ ஒரு பெண் எதிர்ப்பக்கம் பார்த்துக்கொன்டு குளித்துக்கொன்டிருக்கும் காட்சியைக் கண்டனர் ஒருவன் பயத்துடன் மற்றவனிடம் “டேய் அங்கே யாரோ குளிச்சிக்கிட்டு இருக்காங்கடா, அங்கே போக வேணாம், தெரிஞ்சவங்களா இருந்தா மாட்டிவிட்டிடுவாங்க என்றான் . தைரியசாலியான இன்னொருவனோ, பயப்படாதடா, இது தெரிஞ்சவங்கள்ளா இருக்காது, இங்கேதான் யாரும் வரமாட்டாங்களேடா, இது வெளியிடத்திலிருந்து வந்த யாரோவாக இருக்கும் வா கிட்டப்போயி பார்க்கலாம் என்று மற்றவனை தூண்டி அவனுடன் அழைத்துக்கொன்டு நீர்வீழ்ச்சியை நெருங்கினான்.

கதகதப்பான காலைச்சூரியனின் ஒளிக்கிரணங்களால் இள‌ஞ்சூடான நீரில் காடுகள் சூழ்ந்த மங்கிய ஒளியில் அந்த மங்கை தோள்பட்டை வரை நீரில் மூழ்கி குளித்துக் கொன்டிருந்தாள், நீரில் படர்ந்த கேசம் அவளின் சந்தண நிற முதுகுப்பகுதியை மறைத்திருந்தது.

அந்த மாண‌வர்கள் இருவருக்கும் 17 வயதிருக்கும். மீசையும் துளிர்த்திருந்தது. குளித்துக்கொன்டிருந்த பெண்ணிடம் வம்பு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ அவர்கள் வந்ததை அறவே கவனியாதது போல் இவர்கள் பக்கம் திரும்பாமலேயே எதிர்பக்கம் பார்த்து குளித்துக்கொன்டிருந்தாள்.

இருவரும் மெல்ல நடந்து போய் அந்தப் பெண்ணுக்கு பின்புற‌ம் இருந்த பெரிய கற்பாறையில் அமர்ந்து கொன்டனர். ஒருவன் சீட்டியடித்தான், மற்றொருவன் அப்பெண்ணிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். இவன் பேச்சுக்கு பதிலாக அவள் கலகலவென சிரிக்க அது காடு முழுதும் எதிரொலித்தது. இன்னும் கொஞ்சம் தைரியம் அடைந்து “கொஞ்சம் திரும்புங்கள் உங்களைப் பார்க்கனும்” என்றான் அவர்களில் ஒருவன்.

மறுகணம் அதுவரை பெண் என நினைத்திருந்த அந்த உருவம் சரேலென்று அவர்களை நோக்கி திரும்பியது. அந்தக் காடே சிலகண‌ங்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போனது!

உயிரையே உறைய வைக்கும் கோரக் காட்சியாய் எதிரே நின்ற அந்த உருவத்தின் உச்சந்தலையிலிருந்து உடல்முழுதும் கண்கள் ! இடைவெளியில்லாத ஆயிரமாயிரம் அடர்த்தியான கண்கள் ! கோபக்கனல் தெரிக்கும் ஆவேசம் நிறைந்த செக்கச் சிவந்த கண்கள் ! வன்மம் சுமந்து நெருப்பை உமிழும் மரண‌க்கால்வாய்களாய் அந்தக் கண்கள் அவர்களின் உயிரை ஊடுருவி நின்ற‌ன‌.அகலத் திற‌ந்து அவர்களை கொலை வெறியுடன் உறுத்துப் பார்த்தன. பார்த்துக்கொன்டேயிருந்தன‌ அந்த பேய்க்கண்கள் .

அந்தக் காட்சியைக்கண்ட இருவரும் அதிர்ச்சியில் மயக்கமடையும் நிலையை அடைந்தனர் எனினும் தாக்குப்பிடித்துக்கொன்டு அவர்களில் ஒருவன் தப்பித்து ஓட எத்தனித்து அந்த நீருக்குள்ளேயே விழுந்தான். மற்றொருவனோ நண்பன் நீருக்குள் வீழ்ந்த‌தும் அறியாது தன்னை மறந்து காட்டுக்குள் ஓடத்துவங்கினான்.

எதிரிலிருந்த மரங்கள் செடி கொடிகளில் மோதி, விழுந்து எழுந்து கண்மண் தெரியாமல், திக்குத் திசை மறந்து அவன் ஓடினான், தன்னை கொடூரக்கண்கள் கொன்ட அந்த உருவம் இன்னும் தொடர்ந்து விரட்டுவதாய் மிரண்டு வெறிபிடித்தவன்போல் ஓடிக்கொன்டேயிருந்தான் .

அன்று மாலை அந்தப் பகுதியே கலவரத்திலாழ்ந்தது, காணாமல் போன மாண‌வர்களைப் பற்றிய செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அவர்கள் அந்தக் காட்டுக்குள் போனதைக் கண்டதாக யாரோ ஒரு நபர் தெரிவித்துப் போனதையடுத்து அந்த இரு மாண‌வர்களின் குடும்பமும் பதறித்துடித்து கண்ணீரும் கம்பலையுமாக அந்தக் காட்டில் அவர்களைத்தேடி அலைந்தது. ஊரும் உற‌வுகளும் அவர்களுடன் ஒன்றுகூடி அவர்களைத் தேடி அலைந்தன‌, மீட்புப்படையும் வந்தது.

அந்த மலைக்காடும் நீர்வீழ்ச்சியும் அங்குலம் அங்குலமாய் அலசப்பட்டது, இறுதியில் நீரில் மூழ்கி ஒருவனும், காட்டில் மூக்கிலும் வாயிலும் இரத்தம் ஒழுக இன்னொருவனும் பிண‌மாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

இன்னுமொரு கறுப்புக்கறை சுமந்து அடுத்த பலிக்கு மெளனமாய் காத்திருந்தது அந்த மலைக்காடும் ஆயிரமாயிரம் கண்கள் கொன்ட அந்த நரக‌ நீர்வீழ்ச்சியும்….!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *