இடம் மாறும் நியாயங்கள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 4,053 
 

கோவிலை விட்டு வெளியில் வந்ததும், நந்தினியின் கண்கள், அனிச்சையாய் கோவில் எதிர்பக்க சந்தின் மீது பட்டு, லேசான பயத்துடன் திரும்பியது.

அவள் பார்வை சென்று திரும்பிய திசையைப் பார்த்த, அம்மா, வேணி, “நந்தினி, அங்கே என்ன பார்வை… எதை வேணாம்ன்னு சொல்றமோ, அதை நோக்கி நகர்றதே, உன்னை மாதிரி பிள்ளைகளுக்கு வேலையாகிப் போச்சு… முதல்ல இப்படி திரும்பி சாமியை பாரு… 10வது பரிட்சையில நல்ல மார்க் வாங்கணும்ன்னு பிரார்த்தனை பண்ணு,” என்ற அதட்டல், காதுகளில் ஏறியது; ஆனால், மனசில் ஏறவில்லை.

வெளியில் வந்து செருப்பு மாட்டி, அப்பா பிரபு, நகர, இருவரும் பின் தொடர்ந்தனர். வண்டியில் ஏறியதும், அனிச்சையாய் திரும்பிப் பார்த்தாள், நந்தினி.

தெரு விளக்கு வெளிச்சத்தில், அவள் இப்போது நன்றாகத் தெரிந்தாள். எண்ணெய் கண்டு பல நாட்களான தலை, அழுக்கான உடல், வெறித்த பார்வை, மட்டித் துணியில் சாயம்போய் கிடந்த நைட்டி. அதற்கு மேல், ஆண்கள் அணியும் ஒரு கிழிந்த மேல் சட்டை.

நந்தினி, நித்தமும் இந்த வழியாகத்தான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட, 10 ஆண்டுகளாய் இந்த வழியாகத்தான் போய் வருகிறாள். ஆனால், இந்தப் பெண்ணை நான்கைந்து மாதமாகத் தான் பார்க்கிறாள்.

முதலில் சின்ன ஆச்சர்யத்தையும், பிறகு அச்சத்தையும் ஏற்படுத்தினாள், அந்தப் பெண். பேரும் தெரியாது, ஊரும் தெரியாது. இத்தனை நாள் எங்கிருந்தாள், இனி எங்கு போவாள் என்றும் தெரியாது. மழை நாளின் பாதையில் பூத்த நாய்க்குடை காளான் போல், எங்கிருந்தோ சட்டென்று முளைத்து, கவனம் ஈர்த்துக் கொண்டிருந்தாள்.

தெரு விளக்கின் கீழ் படையெடுத்துக் கொண்டிருந்த கொசு கூட்டம், அவளை பதம் பார்த்து கொண்டிருந்தது. ஆனால், அதை அவள் சட்டை செய்யாமல், எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

வீட்டில் அறைக்கு ஒன்றாய், அனல் மூட்டும் கொசு விரட்டிகளும், மின் மட்டைகளும், சுற்றி சுற்றி களைக்கும் மின்விசிறிகள் இருந்தாலும் போதாதெனும் போது, இவளால் மட்டும் எப்படி முடிகிறது என்ற கேள்வி எழுந்தது, நந்தினிக்கு.

பள்ளி விட்டு வரும்போது, பெரும்பாலும், தெருவோரம் படுத்துக் கிடப்பாள். சில நேரம் யாராவது தந்ததை சாப்பிட்டபடி இருப்பாள்.

மாலையில் பள்ளித் தோழியரோடு வரும்போது, அவளை சன்னமாய் திரும்பி பார்த்தபடி வேகமாய் நடையை விரைந்து போடுவாள். அந்த சமயங்களில், ‘இவள் என்ன செய்து விட்டாள்… எதற்காக இவளை கண்டு இத்தனை அஞ்சுகிறோம்…’ என, மனதிற்குள் கேள்வி எழும்.

வீட்டிற்கு வந்து, மின் விசிறியைச் சுழல விட்டதும், அந்த பெண்ணின் நினைவு தன்னிச்சையாக மனதில் வந்து போனது, நந்தினிக்கு. யோசனையாய் விட்டத்தை வெறித்து நின்றவளின் தலையில் தட்டினாள், அம்மா.

“என்ன யோசனை, நந்து?”

“இல்லம்மா, அந்த பைத்தியம், நாம பார்த்தோம் இல்ல… அது, இந்த நேரத்துல என்ன பண்ணும்?”

இவளுடைய கேள்வி, வேணியின் நெற்றியை லேசாக சுருங்க வைத்தது.

“இப்போ எதுக்கு, உனக்கு சிந்தனை அங்கே போகுது?”

“இல்லம்மா, சும்மா கேட்டேன்.”

“பைத்தியம் எல்லாம் என்ன பண்ணும்ன்னு என்னைக் கேட்காதே… உன் அப்பாவைப் போய் கேளு… அவர் தான் சரியா சொல்வாரு…” என்றாள்.

“அவ சரியாத்தான் கேட்டிருக்கா… உன் அத்தையோட பேத்தி, ரொம்ப நாளா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாள்ல… அப்போ என்ன நடந்ததுன்னு உனக்குத் தானே தெரியும்…” என, ஈவு இரக்கம் இல்லாமல் வாரினான், பிரபு.

அவர்கள் இருவரின் பேச்சிலும், நந்தினிக்கு, கவனம் திரும்பவில்லை. கொட்டிக் கிடந்த இருளும், அதில் ஒட்டி இருந்த அச்சத்தின் முகமும், அந்த பெண்ணை என்ன செய்யும் என்ற புதுவிதமான சிந்தனையை, அவளுக்குள் கிளர்ந்து எழச் செய்திருந்தது. வலுக்கட்டாயமாக கண்களை மூடிக் கொண்டாள்.

அம்மா தந்த சப்பாத்தி ரோலை எடுத்துக் கொண்டாள். ‘யூனிபார்மை’ உடுத்தி, இப்படியும் அப்படியும் பார்த்துக் கொண்டாள்.

வழக்கமான அறிவுரையோடு, முன்னே வந்து நின்றாள், அம்மா.

“பார்த்து ஓரமாக போகணும்… ஸ்கூல் விட்டா நேரா வீட்டுக்கு வரணும், நந்து.”

“சரிம்மா.”

“காலி பசங்க பின்னாடி வந்தாலோ, இல்ல வேற மாதிரி நடந்துகிட்டாலோ, அம்மாகிட்ட சொல்லத் தயங்கக் கூடாது.”

“ம்மா… நம் தெருவுல இடியாப்பம் விக்கிறார்ல…”

“ஆமாமாம், கன்னியப்பன்… அவனுக்கென்ன… உன்கிட்ட எதுவும் தப்பா நடந்துட்டானா…” என்ற, வேணியின் குரலில் பதற்றம் அப்பியது.

“வெயிட் வெயிட்… அவர்கிட்ட கேட்டு, ‘டேப் ரிக்கார்டர்’ வாங்கி வச்சுக்கங்க… திரும்ப திரும்ப இடியாப்பம்ன்னு சொல்ல சங்கடப்பட்டுகிட்டு, ‘ரெகார்ட்’ பண்ணி வச்சிருக்கார். என்னம்மா, தினமும் ஒரே டயலாக்…” என, ‘ஷு லேசை’ இறுக்கிய மகளை, லேசான கவலையோடு பார்த்தாள்.

“உனக்கென்ன தெரியும்… பொம்பளைப் புள்ளைங்களை பெத்து, வெளியில் அனுப்பிட்டு வயித்துல நெருப்பை கட்டிட்டு காத்திருக்கற, தாய் – தகப்பனுக்குத் தான், என் கஷ்டம் புரியும்.”

எப்போதும் காலையில் பள்ளி வேன் வந்து விடும். 10ம் வகுப்பு என்பதால், சிறப்பு வகுப்பு முடிந்து வீடு திரும்ப நேராமாகும். அதனால், நடந்து தான் வருவாள்.

இன்று, திரும்பி வரும்போது, அந்த பெண் அங்கேதான் படுத்திருந்தாள். அவள் முகத்தில் தீராத அவஸ்தை வழிந்தது. என்னவென்று இவள் கண்களால் இனம் காண முடியவில்லை. தயக்கமாய் நின்றாள்.

காலையில் அம்மா கட்டித்தந்த சப்பாத்தி ரோல் சாப்பிடாமல், அப்படியேதான் இருந்தது. அந்தப்பெண்ணும், நந்தினியை, ஒருநொடி பார்த்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டாள். சப்பாத்தி ரோலை அவள் அருகில் வைத்துவிட்டு, வேகமாக ஓடி வந்து விட்டாள், நந்தினி.

எட்ட முடியாத துாரம் என்று, இவள் மனதில் திட்டம் போட்டு வைத்திருந்த இடம் வந்ததும், மெதுவாய் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெண் ஆவலோடு அதை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது.

நியாயமான பசியை போக்க, அந்த உணவு பயன்பட்ட சந்தோஷம் மனதிற்குள்.

காலையில் எழுந்து பள்ளிக்கு கிளம்பும்போதே அடிவயிற்றில் சுளீரிட்ட வலி. ‘அந்த மூணு’ நாள் அவஸ்தை என்று புரிந்தது. சுணங்கி வந்து நின்ற மகளை, பார்வையால் உணர்ந்தாள், அம்மா.

“இதெல்லாம் சகஜம், நந்து… இப்பயாவது ஆயிரத்தெட்டு நவீனங்கள் இருக்கு… ஆனா, எங்க காலத்துல அதெல்லாம் ஏது… அத்தனை கஷ்டங்கள் நடுவே தான், நான் எல்லாம் பள்ளிக்கு போய் படிச்சேன்.”

“அம்மா…”

“என்னடா?”

“அந்த பொண்ணு, அங்கே உட்கார்ந்து இருக்குல்ல… அதுக்கும் இதே மாதிரி கஷ்டம் எல்லாம் இருக்கும் தானே… அந்த வெட்ட வெளியில, இதுக்கெல்லாம் அவங்க எங்கே போவாங்க…” என, அவள் கேட்ட போது, துணுக்குற்றுப் போனாள், வேணி.

“நந்துமா… இப்பயெல்லாம் நீ தேவையில்லாத விஷயங்களை நிறைய சிந்திக்கிற… எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே நீ மாறுகிறாய்னு கேள்விப்பட்டதில்லையா… நீயேன் பைத்தியத்து இடத்துல உன்னை வச்சே சிந்திக்கிற…”

“ஏன்மா இப்படி யோசிங்களேன்… என் இடத்துக்கு அந்த பொண்ணு வந்துடக் கூடாதான்னு, நான் நினைக்கிறேன்னு… பாவம், மூளையில தானே கோளாறு… உடம்புல இல்லையில்ல… அப்போ இந்த மாதிரி விஷயங்கள் அவங்களுக்கு நடக்கும் தானே…”

மகளின் கேள்வியில் திணறிப் போனாள்.

மாலையில் வீடு திரும்பும்போது, அம்மாவிற்கு தெரியாமல் எடுத்து வந்திருந்த, ‘நாப்கின் பாக்கெட்’டை, அந்தப்பெண் முன் வைத்துவிட்டு, வேகமாய் இடத்தைக் கடந்தாள். வழக்கமான பாதுகாப்பு எல்லைக்கு வந்ததும், திரும்பிப் பார்த்தாள்.

அந்தப்பெண் அந்த பாக்கெட்டை எடுத்து, திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதன் உபயோகம் அவளுக்கு புரியுமா என்று தெரியாவிட்டாலும், தனக்குள் விளைந்த ஆத்ம திருப்தியை, அவளால் உணர முடிந்தது.

அன்று, பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து, வீடு திரும்பும் போது, லேசாய் இருட்டி விட்டது. சின்னதாய் சாரல் மழை.

அந்த இடத்தைக் கடக்கும் போது, அந்தப் பெண்ணைச் சுற்றி நான்கைந்து குடிகாரர்கள் நின்று, வம்பு வளர்த்து கொண்டிருந்தனர்.

அவளுடைய பிஞ்சு மனது, வேகமாக துடிதுடிக்க ஆரம்பித்தது. நடையை எட்டிப் போட்டு இடத்தை கடப்பதா அல்லது உதவிக்கு, யாரையும் அழைப்பதா என்று அறிய இயலாமல் தவித்தாள். ஆனால், கடந்து போன பலருக்கு, அது ஒரு வேடிக்கையாய் தெரிந்ததே அன்றி, புத்தி சுவாதீனம் இல்லாத பெண்ணிற்கு நிகழும் அத்துமீறலாய் தெரியவில்லை.

சிலர், முணுமுணுத்தபடி கடந்து சென்றனர். ஒற்றைக் கையால் தலையை சொறிந்தபடி, கையில் இருந்த அலுமினிய தட்டை பெரிய கேடயமாக்கி, அவர்களை அடித்து, தன்னை தற்காத்து கொண்டிருந்தாள்.

எதிர் வரிசையில் இருந்த பெட்டிக் கடைக்கு ஓடினாள், நந்தினி. போனில் படம் பார்த்து கொண்டு இருந்த கடைக்காரர், இவளை நிமிர்ந்து பார்த்தார்.

“என்ன பாப்பா வேணும்?”

“அங்கிள், அங்கே பாருங்களேன்… அந்த அக்காட்ட எல்லாரும் வம்பு பண்றாங்க,” என, அவள் கை காட்டிய திசையில், நிமிர்ந்து பார்த்தவரின் முகம், அலட்சியத்தை உமிழ்ந்தது.

“அதா… அந்த பைத்தியத்துகிட்ட யாராவது வம்பு பண்றது தான் வேலையே… நீ கிளம்பு,” என்றவர், போனில் கண்களைத் தொலைக்க, அதிர்ந்து நின்றாள், நந்தினி.

அங்கே அந்தப் பெண்ணின் போராட்டம் தொடந்து கொண்டே தான் இருந்தது. பையில் இருந்த ஒற்றை ருபாயை எடுத்து, ‘காயின் பாக்சில்’ போட்டு, அம்மாவின் எண்ணை சுழற்றினாள்.

எதிர்முனை எடுத்ததும், இவள் குரல் கேட்டு அதிர்ந்தது.

உடனே புறப்பட்டு வரச் சொன்னாள். அடுத்த, 10வது நிமிடம், ஆட்டோவில் வந்து இறங்கினாள், வேணி.

அதற்குள் நிறையவே வியர்த்து இருந்தாள். தாய்மையின் பரிதவிப்பு, அவள் பதற்றத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. மகளை அங்கே முழுசாய் பார்த்ததும் தான், நிம்மதியே பிறந்தது.

“நந்தினி… என்னடா ஆச்சு?”

“அம்மா, அங்கே பாருங்களேன்…” என, மகள் கை நீட்டிய இடத்தை பார்த்தவளுக்கு, இப்போது நெஞ்சுக்குழியில் பதற்றம் ஒட்டிக் கொண்டது.

“அடக்கடவுளே… நந்தினி, நீ என்ன பண்ணிட்டு இங்கே நிக்குற… முதல்ல கிளம்பு,” மகளின் கைகளைப் பற்றி இழுத்தாள்.

நந்தினியின் முகத்தில் குழப்ப ரேகை படர்ந்தது.

“அம்மா, அவங்களுக்கு உதவ வேணாமா?”

“என்னத்த உதவறது… முதல்ல நம்மை பாதுகாக்கணும்… அதுதான் புத்திசாலிதனம்.”

“எல்லாரையும் மனுஷங்களா பார்க்கணும்… அதுதான்மா மனிதாபிமானம்.”

குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை எல்லா நேரங்களிலும் பெற்றவர்கள் ரசிப்பதில்லை.

“இப்போ நீ நடக்கப் போறியா… இல்ல, உன் அப்பாவுக்கு போன் பண்ணவா…”அம்மாவின் வார்த்தைகளில் அவள் அமைதியானாலும், மனம் என்னவோ அந்த காட்சியிலிருந்து விலக முடியாமல் தவித்தது.

அவளுடைய அமைதி, வேணியை என்னவோ செய்தது.

“நந்தினி…. நீ சின்ன பொண்ணு, இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்க கூடாது.”

மகளின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.

“தெளிவா புரிஞ்சுகிட்டேன். எளியவங்களுக்கு இந்த உலகத்துல எதுவுமே இல்ல. பசி, தாகம், உபாதை, வலி, கற்பு எல்லாம் நமக்கு இருக்குன்னு, முதல்ல இந்த உலகம் புரிஞ்சுக்கணும்ன்னா, நிறைய பணம் வேணும் இல்லையாமா,” என்ற, அந்தக் கேள்வியில் தொக்கிக் கிடந்த வலியும், குழப்பமும், ஒரு நிமிஷம், வேணியை உலுக்கியது.

“எல்லாருக்கும் எல்லாமே பொதுதானே… மனநலம் இல்லாத அந்த ஏழைப் பெண்ணுகிட்ட இருக்கிற கற்பு மட்டும், விலை மலிவானதா என்ன… தன்னை பாதுகாக்க முடியாத அவளை, யாருமே ஏன் ஒரு பொருட்டா நினைக்க மாட்டேங்கறாங்க… அவளுக்கும், வலி, பசி எல்லாமே இருக்கும். ஆனால், சொல்லத் தெரியல; பாவம்…” நந்தினியின் வார்த்தையில், நெகிழ்ந்து போனாள், வேணி.

நமக்கு நடக்க கூடாது என்று ஆசைப்பட்ட கோரங்கள், மற்ற யார் வாழ்விலும் நடக்காமல் காப்பாற்ற தவறிய யாருக்கும், தனக்கான பாதுகாப்பை யாசிக்க, எந்த அருகதையும் இல்லை.

வேகமாக மொபைலை எடுத்து, காவலன் செயலியை அழுத்தினாள்.

– ஜூன் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *