ஒரு ரூபாய் தொலைப்பேசி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,378 
 

ராமாயி எழுந்தாள். லேசாக தலை சுற்றியது. எழுந்து தூணைப் பிடித்து நின்றவள் மறுபடியும் அமர்ந்தாள். ஓரிரு விநாடிகள் கழித்து தலைசுற்றல், தலைக்குள்ளேயே எங்கோ ஒளிந்து கொண்டது போல் உணர்ந்தாள். இப்போது தெம்பாய் இருந்தது.. ரெண்டு மூணு மாசமாகவே இதுமாதிரி அவ்வப்போது ‘ரொய்ங்’ என்று ரெண்டு சுற்று சுற்றி விட்டு அதுக்கப்புறம் காணாமல் போய் விடுகிறது. இப்போதெல்லாம் சாப்பாட்டை விட இதற்கான கஷாயமும் லேகியமும்தான் ஜாஸ்தியாக இருக்கிறது.

ஒரு ரூபாய் தொலைப்பேசி!

மெதுவாக தெருவில் நடந்து போஸ்ட் ஆபீஸ் அருகே வந்தாள். கையில் சில்லறைக் காசுகளாக ஒரு ரூபாய் நாணயங்கள் ஏழெட்டு இருந்தன.

போஸ்ட்மாஸ்டர் இவளைப் பார்த்து சிரித்தார். ‘‘என்ன பெரியம்மா.. மகனுக்கு போனா?’’

‘‘ஆமாய்யா.. போட்டுக் குடு.’’

‘‘பேசாம ஒரு செல்போனோ, வீட்டு போனோ வாங்கிக் குடுக்கச் சொல்ல வேண்டியதுதானே உன் மகன்கிட்ட?’’

‘‘அவங்கூட சொன்னான்யா.. நான்தேன் வேணாம்னுட்டேன். கேஸ் அடுப்பு பத்த வைக்கவே எனக்குத் தெரியாது.. இன்னம் வெறகுதான்.. இதுல அந்தக் கழுதைய வச்சுச்சிட்டு என்ன பண்ண! நமக்கு வேணாஞ்சாமி அந்தக் கருமாயம் எல்லாம்.’’

‘‘சரி, நம்பர் சொல்லு.’’

‘‘நம்பரா?’’ அவள் லேசாக நடுங்கும் தனது கரங்களால் சுருக்குப் பையை பிரித்தாள்.. காகிதம் ஒன்றை எடுத்தாள். அது கசங்கிப் போய் அடுத்துப் பிரித்து மடித்தால் கிழிந்து விடும் நிலையில் இருந்தது.

‘‘ஏம் பெரியம்மா! இதை வேற ஒரு காயிதத்தில எழுதி வச்சிக்கிரக் கூடாதா?’’

‘‘நான் எங்க.. நீயே எழுதிக் குடுத்திடு சாமி. இது அவன் தீவாளிக்கு ஊருக்கு வந்தப்ப எழுதிக் குடுத்தது!’’

போஸ்ட்மாஸ்டர் காசைப் போட்டு நம்பர்களை அழுத்தினார்.

‘‘ரிங்க் போகுது.. பேசு பெரியம்மா’’ அவர் ரிசீவரை காதில் வைத்தார்.

ரிசப்ஷனில் இருந்த உலக அழகி போனை எடுத்தாள்.

‘‘ஹலோ.. திஸ் இஸ் கே.எம் இன்ஃபோடெக்.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?’’

& பாட்டிக்கு நா வறண்டு ஒட்டிக் கொண்டு விட்டது. ‘அங்க எம்மகன் முருகன் இருக்கானா?’ என்று கேட்க நினைத்தாள்.. காற்றுதான் வந்தது.

‘‘ஹலோ.. ஹலோ.. ஹ¨ இஸ் தேர்? மே ஐ நோ ஹ¨ இஸ் ஸ்பீக்கிங்?’’

ராமாயிக்கு ரிசீவர் வழுக்கி காதிலிருந்து கன்னத்துக்கு வந்து விட்டது.. மறுபடி, தலை சுற்றுவது போல் இருந்தது.

& ‘‘ஷிட்’’ என்று கட் செய்தாள் அந்தப் பெண். அவள் பெயர் ஷ்ரேயாவாகவோ, மதுமிதா வாகவோ இருக்கலாம்.

போஸ்ட்மாஸ்டர் ராமாயியின் முகத்தை கவனித்து ரிசீவரை வாங்கினார்.

‘‘அலோ.. அலோ.. அட.. கட் ஆயிப் போச்சு!’’

ராமாயி சொன்னாள். ‘‘ஒரு பிள்ளை இங்கிலீஷ் பேசிச்சுப்பா.. எனக்கு வாயே வரலை. முருகனை நீ கூப்பிடேன்.. கூப்பிட்டு எங்கிட்ட பேச வை சாமி.. உனக்கு புண்ணியமா போகும்..’’

அவர் யோசித்தார்.. ‘‘சரி.. காசைக் குடு!’’

& மறுபடி போன் ஒலிக்க, அந்தப் பெண் எடுத்தாள்.

‘‘ஹலோ.. திஸ் இஸ் ‘கே.எம் இன்ஃபோடெக்’.. ’’

‘‘அலோ மேடம்.. ஐ ஆம் சுந்தரபாண்டி.. போஸ்ட் மாஸ்டர் ஃப்ரம் ராசக்காப்பட்டி ஸ்பீக்கிங் மேடம்!’’

அவரது பதற்றம் நிறைந்த ஆரம்பப் பள்ளி ஆங்கிலம் இவளுக்கு சிரிப்பை வரவழைத்தது..

‘‘தமிழ்லயே சொல்லுங்க.. என்ன விஷயம்?’’

‘‘அங்க முருகன் இருக்காப்லீங்களா? செல்வமுருகன்னு கறுப்பா ஒல்லியா வளத்தியா இருப்பான்..’’

‘‘யூ மீன்.. செல்வா?’’

‘‘அது.. நாங்க முருகன்னுதாங்க சொல்வோம்.’’

‘‘அப்படியா! ஜஸ்ட் எ மினிட்.. ஐ திங்க் ஹி இஸ் இன் எ மீட்டிங்.’’

‘‘என்னாங்க மேடம்?’’

‘‘மீட்டிங்ல இருக்காரு.. ஒரு நிமிஷம் லைன்ல இருங்க.’’

போஸ்ட்மாஸ்டரின் காதில் ஒரு ஆங்கில இசை ஒலித்தது..

‘‘என்னாய்யா.. முருகன் வன்ட்டானா?’’

‘‘எங்க பெரிம்மா.. அதுக்குள்ள என்னமோ பாட்டுப் போட்டு விட்டுடாய்ங்க..’’

அங்கே அந்தப் பெண் முருகனைத் தேடிப் பிடித்து லைன் தருவதற்குள் ‘பீப்.. பீப்..’ என்று காய்ன் பாக்ஸ் போனில் மணி அடித்து, அது ‘கட்’ ஆகி விட்டது.

‘‘போச்சுடா! கட் ஆயிடுச்சு. பெரியம்மா.. இன்னும் ஒரு ரூபா குடு.’’

& மீட்டிங் ஹாலில் இன்ட்டர்காம் போன் அடிக்க.. ராகவ் எடுத்தான். ‘‘யெஸ்.. செல்வா.. கால் ஃபார் யூ.’’

அதை வாங்கிய முருகன், பாஸ் தன்னையே உற்றுப் பார்ப்பதை உணர்ந்தான்.

‘‘யெஸ்.’’

‘‘செல்வா.. கால் ஃபரம் யுவர் வில்லேஜ்.’’

சற்று மௌனம்.

‘‘ஸாரிப்பா.. கட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.’’

‘‘ம்’’ போனை வைத்து நிமிர்ந்தவனை பாஸ் ஓரிரு விநாடிகள் அசங்காமல் பார்த்தார்..

‘‘வாட்ஸ் திஸ் செல்வா.. வீ ஆர் இன் மீட்டிங்.. ப்ளீஸ் ஜென்டில்மென்.. ஸ்விட்ச் ஆஃப் யுவர் மொபைல்.’’

அங்கிருந்த ஏழு பேரும் தங்கள் மொபைலை சைலன்ட் மோடில் போட, மறுபடி இன்ட்டர்காம் போன் ஒலித்தது.

பாஸ் மறுபடி முருகனைப் பார்க்க.. போனை எடுத்தவன்.. ‘‘மீட்டிங் இஸ் கோயிங் ஆன். நோ கால்ஸ் ப்ளீஸ்’’ என்று சொல்லி ‘படக்’ என்று வைத்தான். அதை அந்தப் பெண் சொல்ல, போஸ்ட்மாஸ்டர் தொங்கிப் போன முகத்துடன் ரிசீவரை கொக்கியில் மாட்டினார்.

‘‘இப்ப பேச முடியதாம்.’’

ராமாயி முகம் வாடியது.. ‘‘ப்ச்.. இதோட ரெண்டு மூணு தடவை ஆயிப் போச்சு.. அவங்கிட்ட எங்க பேச முடியுது?’’

‘‘இப்ப நீ என்ன பேசணும் உன் புள்ளைகிட்ட?’’

‘‘ப்ச்! பேசணும்யா.. அம்புட்டுதேன்’’ பெருமூச்சு விட்டாள். ‘‘என்ன பொழப்பு இது! உஸ்ஸ்!’’

‘‘என்ன சலிச்சுக்கிறே? களை எடுத்து, கஷ்டப்பட்டு படிக்க வச்ச.. உம் மகன் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சு பெரிய வேலை பாக்கிறான்.. மாசா மாசம் பணம் அனுப்புறான்.. உனக்கு என்ன குறைச்சல்.. மகாராணி மாதிரி ஜம்னு இருக்க வேண்டியதுதானே! என்கிட்டயே உன் துட்டு முப்பதாயிரம் இருக்கு..’’

‘‘துட்டு இருந்து என்னய்யா செய்ய? அவனைப் பாக்கணும்.. பேசணும்.. ப்ச்! எங்கன முடியுது?’’

சலிப்போடு சொல்லிவிட்டு மெதுவாக வீட்டுக்கு நடந்தாள்.. கூரை வீடாக இருந்ததை மகன்தான் ஓட்டு வீடாக மாற்றி இருந்தான். ஒரு கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டிருக்கிறான். ஆனால், இது தரையி லேயே படுத்துப் பழகிய கட்டை. சுத்தமாகத் தரையைக் கூட்டி விட்டு சேலை முந்தியை விரித்து அதிலேயே படுத்துத் தூங்கித்தான் பழக்கம்.

வீட்டில் வந்து அமர்ந்து மேலே வெறித்துப் பார்த்தாள். மகனின் போட்டோ மாட்டி இருந்தது.. கெட்டிக்காரப் பிள்ளையைத்தான் பெற்றிருக்கிறாள். களையெடுக்கும் கூலிக்காரக் குடும்பத்தில் பிறந்து கருத்தாகப் படித்து.. வேலைக்கும் போய்ட்டான்.

மாசா மாசம் ஐந்தாயிரம், மூவாயிரம் என்று பணம் அனுப்புகிறான். இவளுக்கு ஏது அவ்வளவு செலவு? காசை போஸ்ட் ஆபீஸில் போட்டு வைத்திருக்கிறாள்.. மகன் வரும்போது அவனிடமே கொடுத்துவிட வேண்டியதுதான்.

ராமாயிக்கு மகனுடன் நாள் கணக்கில் நிறைய பேச வேண்டும்.. அவ்வளவுதான். ‘வயசு வேற ஆகுது.. ஒரு கலியாணத்தைப் பண்ணிப் பாக்கணும்.. விவரமாப் பேசணும்.. எங்க முடியுது? அதுக்காக பட்டணத்துல அவன் கூடப்போய் இருக்க முடியாது.. அவன் அடிக்கொரு தடவை போன் பண்ணிப் பேசினாலப் போதும்.. ப்ச்!’ & பெருமூச்சு விட்டாள்.

மீட்டிங் முடிந்து செல்வமுருகன் ரிசப்ஷனுக்கு வந்தான்.

‘‘ஹாய் செல்வா.. உன் வில்லேஜ்ல இருந்து போன் வந்துச்சுப்பா.. அதான்.’’

‘‘மீட்டிங்ல இருக்குறப்போ குடுக்காதே.. பாஸ் கடுப்பாகுறார்.. கால் வந்தா நான் என்ன பண்ண முடியும்? என்னை முறைக்கிறாரு பெரிசு.. சரி யார் பேசினது?’’

அவள் சிரித்தாள், ‘‘போஸ்ட்மாஸ்டர் ஃப்ரம்.. அதென்ன பட்டி? உன் ஊர் பேரு சொல்லு.’’

அவன் சற்று கூச்சத்துடன் ‘‘ராசக்காப்பட்டி’’ என்றான்.

‘‘யா! தட்ஸ் இட்.’’

‘‘நம்பர் பார்த்து சொல்லு.’’

அவள் கால் வந்த நம்பரைப் பார்த்துச் சொல்ல, செல்வமுருகன் தன் மொபைலில் அழைக்க.. போஸ்ட்மாஸ்டர் எடுத்தார்..

‘‘சார் நான் முருகன் பேசறேன்.. போன் பண்ணீங்களாமே.. என்ன விஷயம்?’’

‘‘அம்மா வந்திருந்தாங்கப்பா. உன்கிட்ட பேசணும்னாங்க.’’

‘‘என்ன விஷயமாம்?’’

‘‘சும்மா பேசணுமாம்.’’

‘‘சும்மா பேசணுமா? வேற வேலையில்லையா இங்க?’’ அவன் குரலில் எரிச்சல் ஏறியது.

‘‘நானே இங்க ஆயிரத்தெட்டு டென்ஷன்ல இருக்கேன். சரி, பணம் ஏதும் அனுப்பணுமா அவங்களுக்கு?’’

‘‘இல்லைப்பா.. இங்க நம்ம போஸ்ட் ஆபீஸ் எஸ்.பி&யிலயே காசு கிடக்கே.. அவங்க சும்மாதான் உன்கிட்ட பேசணும்னாங்க..’’

‘‘நான் என்ன சும்மாவா இருக்கேன்? சார், இனிமேல் அவங்க வந்தா சண்டே நானே போன் பண்றேன். அதுவரை தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லிருங்க.. ஆபீஸ்ல தேவையில்லாத டிஸ்டர்பென்ஸ் சார். அவங்களுக்குப் புரியாது.. வந்தா சொல்லிருங்க.. என்ன? பணம் வேணும்னா எடுத்து அவங்க கைல குடுங்க. செலவு பண்ணிக்கட்டும்.. சரியா?’’

‘‘ம்.’’

போன் கட் ஆனது. போஸ்ட்மாஸ்டர் போனை வைத்தார்.

கொஞ்ச தூரத்தில் ராமாயி வருவது தெரிந்தது. மெதுவாக வந்து கொண்டிருந்தாள்.

மறுபடி போன் பண்ணத்தான் வருகிறாள்.

– நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *