வீடெல்லாம் வீடு அல்ல

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,661 
 

பிற்பகல், 3:00 மணி இருக்கும்.
நாராயணனும், மணியும், திருத்தணி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தனர். அறுபது வயது கடந்த நாராயணன் நிலக்கிழார். ஊரில் பல ஏக்கர் நஞ்சை, புஞ்சை, தோட்டம் உண்டு. ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம். ஒரே மகன் கருணாகரன், திருமணத்திற்குப் பின், சென்னையில் செட்டிலாகி இருந்தான். அவனும், அவன் மனைவியும், பெரிய உத்யோகங்களில் இருந்தனர்.
ஊரில் நிலங்கள், நாராயணன் மேற்பார்வையில் தான் இருந்தன என்றாலும், வரவு-செலவுகளை, மகன் தான் கவனிப்பான். பண விஷயத்தில், அப்பாவை விட, அவன் கெட்டி; அவன் அப்படி இருப்பதில், நாராயணனுக்கு சந்தோஷம் தான்.
வீடெல்லாம் வீடு அல்லமூன்று மாதத்திற்கு ஒருமுறை, சென்னை போய், மகனிடம் கணக்கு காட்டிவிட்டு, பணத்தையும் கொடுத்துவிட்டு வருவார்.
இந்த முறையும், அதுபோல் ஒரு பயணத்தை முடித்து, ஊர் திரும்பும் போது தான், குருசாமி மகன், குமரன் வீடு நினைவுக்கு வர, திருத்தணியில் இறங்கிக் கொண்டார்.
நாராயணன் கேட்டார்… “”ஏண்டா மணி… குமரன் வீடு எங்க இருக்குன்னு தெரியுமா?”
“”அட்ரஸ் தெரியும் மாமா; வீடு தெரியாது…”
“”அட்ரஸ் தெரிஞ்சா, வீடும் தெரிஞ்ச மாதிரி தானே…”
“”திருத்தணி முன்ன மாதிரி இல்லே மாமா… பெருத்துப் போச்சு…”
“”குமரன் அப்பா குருசாமி, போன வருஷம் கிரகபிரவேசத்துக்கு பத்திரிகை வச்சான்.”
“”கையோடு, மொய் பணம், இருபது ரூபாய் கொடுத்துட்டீங்க…”
“”தேவையில்லாததை எல்லாம் ஞாபகம் வச்சிக்கிறடா நீ?”
“”எப்படி மறக்க முடியும் மாமா… குமரன் என் பிரண்டு. நானாவது போயிட்டு வர்றேன்னதுக்கு, கூப்பிட்டாங்கன்னதும், உடனே ஓடிடக் கூடாதுடா… நமக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு. நமக்கு வசதிப்பட்ட நாள்ல தான் போகணும்ன்னு தடுத்திட்டீங்க…”
“”ஆமாம்டா… செய்ய வேண்டிய வேலை தலைக்கு மேல இருந்திச்சு அப்ப…”
“”சமாளிக்கறீங்க… இப்ப மட்டும் வேலையில்லையா… தோப்புக்கு மருந்து அடிக்கற வேலைய ரெண்டு நாள்ல முடிக்கச் சொல்லி, சாப்பிடக் கூட விடாம, சாட்டைய சுண்டுன மாதிரி துரத்தி விட்டிருக்காரே உங்க மகன்…”
“”கொஞ்சம் விட்டா பேசிக்கிட்டே போவியே. பார்த்துதான் ஆகணும்ன்னு கட்டாயம் இல்லை. மகன் கட்டின வீட்டைப் பத்தி, “ஆஹா… ஓஹோ…’ன்னு குருசாமி சொல்லிக்கிட்டிருந்தான். அப்படியென்ன அவன், மாட மாளிகையும், கூட கோபுரமும் கட்டிட்டான்னு தெரியல. இதுல, குருசாமியும், அவன் சம்சாரமும், ஊரை விட்டுட்டு, பையனோடு வந்து சேர்ந்துட்டாங்க… ஒரு எட்டு பார்த்திருவோம். அதை ஒரு குறையா பேசிகிட்டிருப்பா, குருசாமி சம்சாரம். கழுதைங்க… பங்காளிகளா வேற போயிட்டாங்க. வழியைச் சொல்லு…” என்று, மணியின் பின் நடந்தார்.
“”குமரன், எண்.70, பாரதியார் தெரு, ராமேஸ்வரம் நகர், மே.திருத்தணி; எந்த இடத்தில் வரும்?”
ஒரு கடையில் விசாரித்தனர்.
அந்த ஏரியாவைப் பார்த்ததும், திக்கென்றது நாராயணனுக்கு .
புதிதாக உருவாகியிருந்த அந்த பகுதியில், பெரிய, பெரிய வீடுகளாக இருந்தன. எல்லாம், நவீன மோஸ்தரில் கட்டப்பட்ட அழகழகான வீடுகள். ஒவ்வொரு வீடும், 10 – 20 லட்ச ரூபாய்க்கு குறையாது.
இந்த இடத்தில் ஒருவன் வீடு கட்டி குடியிருக்கிறான் என்றால் சாதாரணமில்லை… சந்தேகமாக கேட்டார்…
“”மணி… தவறான அட்ரசுக்கு வந்துட்டோம்ன்னு நினைக்கிறேன்…”
“”ஒரு முறைக்கு, நாலு முறை விசாரிச்சுட்டேன் மாமா… ராமேஸ்வரம் நகர் இதானாம். வாங்க நம்பர் 70ஐ தேடுவோம்…” என்று நடந்தவன், நின்று திரும்பி, “”முதல் முதலா போறோம்… வெறும் கையோட போறது நல்லாயிருக்காது. நானாவது, ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிகிட்டு வர்றேன்…” என்று, கடைக்கு ஓடினான் மணி.
தெரு முனையிலேயே அவர் கால்கள் நின்று விட்டன.
இரண்டு பக்கமும், புத்தம் புது வீடுகள், கம்பீரமாக எழுந்து நின்று, அவரை அலட்சியமாய் பார்ப்பது போல் இருந்தது.
குருசாமியை இப்படியொரு அந்தஸ்தான வீட்டில் பார்க்க, அவர் தயாரில்லை. கழுதைங்களுக்கு இங்கே வீடு கட்ற அளவுக்கு எப்படி வசதி வந்தது.
திரும்பி விடலாமா என்று நினைத்தார்.
அதற்குள், அவருக்கு முன் தெருவுக்குள் பிரவேசித்து, 70ம் நம்பரை, மணி தேடத் துவங்கவே, வேறு வழியில்லாமல் பின் தொடர்ந்தார். ஒவ்வொரு வீட்டை பார்க்கும் போதும், “இது, அவர்கள் வீடாக இருக்கக் கூடாது…’ என்று, வேண்டிக் கொண்டார். கடைசியாக, 70ம் எண்ணிட்ட வீட்டின் முன் நின்றபோது, தன்னையும் மீறி, பக்கென்று வாய்விட்டு சிரித்து விட்டார்.
தெருவின் கடைக்கோடியில், யானைகள் வரிசையில், ஒரு நாய்க்குட்டி நின்றிருப்பது போல், சின்னஞ் சிறியதாக இருந்தது குருசாமி இல்லம்.
கேட்டை தட்டிவிட்டு, தலை குனிந்து தான் உள்ளே நுழைந்தனர்.
வீட்டில் தான் இருந்தான் குமரன்.
நாராயணனைப் பார்த்ததும், ஆச்சரியமும், பரவசமும் அடைந்தான்.
“”வாங்க பெரியப்பா… வாங்க… வாங்க…” என்று வரவேற்றான்; நாற்காலி போட்டான்.
“”என்ன சாப்பிடறீங்க?”
“”ஒண்ணும் வேணாம்… எல்லாம் முடிச்சுட்டு தான் வந்தோம். புது வீடு கட்டியிருக்கே… எப்படியிருக்குன்னு பார்க்கலாம்ன்னு வந்தோம்…” என்றார் வீட்டை ஆராய்ந்தபடி.
குமரன் மனைவி, எலுமிச்சை ஜூஸ் கொடுத்தாள். குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தன. ரகசியமாய் கை குலுக்கினான் மணி.
“”சாதிச்சுட்டே குமரா… வீடு வாசல், மனைவி மக்கள்ன்னு செட்டிலாயிட்டே. எனக்கு தான் இன்னும் விடிவு வரலை. மாமன் பின்னாடி கணக்கு புத்தகங்கள தூக்கிட்டு, “லோலோ…’ன்னு அலையறேன்…”
“”தாமதமாவதும் நல்லதுக்குத் தான்; உனக்கு சிறப்பான வாழ்க்கை அமையும் பார்…”
“”நல்ல மனசுடா உனக்கு…” என்றபடி, பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்து, “”குழந்தைகளுக்கு கொடு…” என்றான்.
நாராயணன் குறுக்கிட்டார், “”எங்கே உங்க அப்பா, அம்மா?”
“”அவங்க டூர் போயிருக்காங்க மாமா…”
“”டூரா?”
“”ஆமாம்… அக்கம் பக்கத்துலருந்து, தஞ்சாவூர் நவகிரக கோவில்களுக்கு போனாங்க… கூட அனுப்பி வச்சிருக்கேன்…”
“”வீடு என்ன, இப்படி ஒரேயடியாய் புழுங்குது. காய்ஞ்ச நெல்லை பரப்பி வச்சால், தானாகவே வெந்துரும் போலிருக்கே…”
“”மத்யானத்துல வெக்கையா இருக்கும்; சாயங்காலம், பீச் காத்து போல வீசும். வாங்க… வீட்டை சுத்தி பாருங்க…”
“”உட்கார்ந்த இடத்துலயே எல்லாந்தான் தெரியுதே…” என்றபடி எழுந்தார். படுக்கையறை, பூஜை அறை, சமையலறை, பாத்ரூம், கிணறு, அதையொட்டி சின்ன தோட்டம், மாடி. அப்பா, அம்மாவுக்கு என்று கட்டிய தனி அறை என, ஒவ்வொன்றையும் பெருமையாக காண்பித்துக் கொண்டு போக, நாராயணன் உதட்டை பிதுக்கிக் காட்டி, வெறுமென தலையசைத்து, வெற்றுப் பார்வை பார்த்து, “”உங்க அப்பன் சொன்னதைப் பார்த்தால், ஏதோ இரண்டு கிரவுண்டுல மாளிகை தான் கட்டிட்டியோன்னு நினைச்சுட்டேன். அது சரி… மண் குடிசைல வாழ்ந்த மனுஷனுக்கு, இது பெரிய விஷயம் தான். ஆமாம்… எவ்வளவு செலவாச்சு?”
சொன்னான்.
“”உன் சக்திக்கு, பெரிய தொகை… பணம் எப்படி புரட்டின?”
“”லோன் தான்…”
“”மாசா மாசம் கட்டணும்; தவறினால், பேப்பர்ல போட்டு மானத்தை வாங்கிப்புடுவான். ஜப்தி தான்…”
“”அப்படி ஆகாமல் பார்த்துக்குவேன்…”
“”அதுக்கு ரொம்ப சிக்கனமா இருக்கணும்; ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு பார்க்கணும். நெருக்கடியில, அப்பனும், ஆத்தாவும், ஊர் சுத்தப் போயிட்டாங்களே…”
“”அப்பா, அம்மா எனக்காக நிறைய பாடுபட்டிருக்காங்க, ஒரு சுகத்தையும் அனுபவிக்காம… வாயக்கட்டி, வயித்தைக்கட்டி வளர்த்தாங்க. அவங்கள சந்தோஷமா வச்சிக்க வேண்டியது என் கடமையில்லையா?”
“”அது சரி…” என்றவர், படியிறங்கும் போது, “”என் மகன் வீட்டைப் பார்த்திருக்கியா?” என்றார்.
“”கிரகப்பிரவேசத்துக்கு நானும் வந்திருந்தேனே…”
“”அது அப்ப… இப்ப போய் பாரு… என்னமா பண்ணியிருக்கான். தோட்டம், பசங்க விளையாட மைதானம், மாடியில நீச்சல் குளம் கட்டியிருக்கான்டா… நாய்க்கு ஒரு வீடு கட்டியிருக்கான்; உன் வீட்டு அளவு இருக்கு…”
“”நீங்க நிறைய சேர்த்து வச்சீங்க… அவங்களும் சம்பாதிக்கறாங்க. வசதியான பெரிய வீடு கட்டி வாழறதுல ஆச்சரியமொன்னு மில்லையே…” என்றான் மணி.
பெருமிதமாய் சிரித்தார் நாராயணன்.
“”எங்க அந்தஸ்தை, இந்த ஜென்மத்துல யாரும் எட்டி பிடிக்க முடியாதுல்ல. ஏதோ உன் சக்திக்கு கட்டியிருக்க. இவ்வளவு தான் உன்னால முடியும். கடன நல்லபடியா கட்டி முடிச்சுடு. அதுக்குள்ள பசங்க வளர்ந்துடுவாங்க… இத்துனூண்டு இடத்துல என்ன பண்ணுவியோ… வரட்டுமா?” என்று எழுந்தார்.
“முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கார். ஏதோ, நம்மால் முடிஞ்ச அளவு ஒரு வீடு கட்டி யிருக்கோம். நல்லதா ஒரு வார்த்தை வருதா, பெரிய மனுஷன் கிட்ட… இவரெல்லாம் வரலைன்னு யார் அழுதாங்க. இவர் பணக்காரப் பெருமைய காட்டிக்க இதுதான் நேரமா… லோன் கட்ட முடியலன்னா, இவர் மடியையா பிடிக்கப் போறோம். அவருக்கு போய் ஓடோடி பதில் சொல்லிகிட்டிருக்காரு இந்த மனுஷன்…’
— குமரன் மனைவி முணுமுணுப்பது மணி காதில் விழுந்தது.
“”அதை பெருசா எடுத்துகிட்டு, பீல் பண்ணாத சிஸ்டர். பெரியவருக்கு, வசதி அதிகம்; மனசு சின்னது…” என்று ஆறுதல் சொன்னான்.
“வேண்டாம்…’ என்று சொல்லியும், டிபன் கொடுத்தனர்.
வீட்டை விட்டு வெளியில் வந்த போது, ஓரப் புன்னகை செய்தார் நாராயணன். அதற்கு என்ன பொருள் என்று மணிக்கு தெரியும்…
“நான் கூட என்னமோ நினைச்சுட்டேன் மாமா… குமரன் கோட்டை கட்டலைனாலும், வசதியான வீட்ட கட்டிட்டானோன்னு… கடைசியில பார்த்தால்…’
“”ஏண்டா மணி!”
“”சொல்லுங்க மாமா…”
“”இதுக்கா… குருசாமி இந்த அலட்டு அலட்டினான்.”
“”கிணத்து தவளைக்கு, சமுத்திரம்னா என்னன்னு தெரியுமா மாமா… உலகத்திலேயே அந்த கிணறு தான் பெருசுன்னு நினைக்கும். இது வீடுன்னு கூட சொல்ல முடியாது; கான்க்ரீட் குடிசை…”
“”என் மகன் கட்டியிருக்கிற வீட்டுல, பத்துல ஒரு பங்கு இருக்குமா?”
“”என்ன மாமா நீங்க… எதோடு, எதை ஒப்பிடறீங்க. உங்க மகன் வீட்டுமனையே ஒரு கோடி; இந்த வீடு இருக்கிறதோ தெருக் கோடி…”
அவன் ஹாஸ்யத்துக்கு, தெருவென்றும் பாராமல், வாய் விட்டு சிரித்தார் நாராயணன்.
“”ஆனால், மாமா… ஒரு விஷயத்துல குமரன் வீடு உசத்தி தான்.”
“”எப்படி?”
“”கப்பல் மாதிரி வீடிருந்தாலும், அப்பா வந்தால், ரெண்டு நாள் தங்கியிருக்கவே விடாமல், துரத்தியடிக்கிற பிள்ளைகள் மத்தியில, குருவிக்கூடு மாதிரி சின்ன வீடுன்னாலும், தாய், தகப்பனை கூட்டி வந்து, அவங்களை சந்தோஷமா வச்சிருக்கிறானே… அந்த வகையில், அது வீடில்லை மாமா… கோவில்!” என்றான்.
அவன், என்ன சொல்ல வருகிறானென்று அவருக்கு புரிந்தது.
தன் மகன், “ஓகோ…’வென்று வாழ்ந்தாலும், அப்பா என்ற பாசம் இல்லாமல், ஒரு வேலைக்காரனைப் போல் தன்னை நடத்துவதும், வீடு தேடி வந்தால் கூட, “இரண்டு நாள் இருந்து விட்டு போப்பா…’ என்று சொல்லாமல், வந்த சுவட்டோடு திருப்பி அனுப்புவதும், வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளுக்குள் வேதனையாகத் தான் இருந்தது.
மணியும், அதை உடனிருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். அவன் எது பேசினாலும், சப்தம் போட்டு வாயடைத்து விடும் அவருக்கு, இப்போது ஏனோ பேச்சு வராமல் வாயடைத்துக் கொண்டது.
பதில் சொல்ல முடியாமல், “”ம்… சீக்கரம் நட… பஸ்ச பிடிக்கணும்…” என்று, கால்களை வீசிப் போட்டு நடந்தார், நாராயணன்.

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *