கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2024
பார்வையிட்டோர்: 213 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பங்கேற்பாளனாய் இருப்பதைவிட பார்வையளானாய் இருப்பதே மேல், என்பதை நுட்பமான உணர்வுகள் சம்பந்தப்பட்ட விவாதங்களில் நான் கடைப்பிடிக்கும் அணுகுமுறை.

°மீனையும் தானே கொன்று சாப்பிடுகிறீர்கள், அது மட்டும் எப்படி எந்த சடங்கும் இன்றி ஹலால் ஆகின்றது” தன்னுடையை சீண்டலை, அறிவார்ந்த கேள்விமாதிரி வாசுதேவ் ஷாகித்திடம் கேட்டான்.

ஷாகித் பதில் சொல்லவில்லை. வாசுதேவ் என்னைப் பார்த்து “பார்த்தியா, மடக்கிட்டேன்” என்ற வகையில் கண் சிமிட்டினான். வர வர வாசுதேவின் மேல் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, குறைந்த பட்சம் கிரிக்கெட் பற்றி பேசுவதற்காகவது, அவனுடன் இருக்க வேண்டி இருக்கின்றது.

பாகிஸ்தானிலிருந்து ஷாகித் வந்தபின்னர், தமிழ்நாட்டு வழக்கமான, இயல்பான இஸ்லாமிய இணக்க வளர்ப்பு சூழலினால் அவனுடன் நட்பாக முடிந்தது. ஆனால் வடநாட்டு வாசுதேவிற்கு சீண்டலையும் கேலியையும் மட்டுமே கொடுக்கத் தெரிந்தது.

வழமையான புன்னகையைக் கொடுத்துவிட்டு, எங்களது ஆராய்ச்சிக்கூடத்தின் முதல் தளத்திற்கு ஷாகித்தின் மதிய தொழுகைக்கு சென்றுவிட்டான்.

ஷாகித் இந்த மீன் ஹாலால் பற்றிய விளக்கத்தை ஏற்கனவே எனக்கு தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கின்றான். “செதில் வைத்த எல்லா மீன்களும் ஹலால், சாப்பிடலாம். வெப்பரத்தப் பிராணிகளுக்கும் குளிரரத்தப் பிராணிகளுக்கும் ஏக வித்தியாசமுண்டு. மீன்களின் ரத்த ஓட்டம், அதன் ரத்தவகையும் நிலவாழ், பறவைகளைக் காட்டிலும் வேறானது. ஆகையினால், தேர்ந்த முறையில் மீன்களை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை” என அவன் சொன்ன அந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.

“புலாலில் ஹலால் என்பது சுத்த வியாபரத்தந்திரம், அவங்க ஆட்கள் கடைகளில் மட்டுமே வியாபரம் நடக்க வேண்டும் என்று போடப்பட்ட சூட்சுமம்” வாசுதேவனின், சீண்டல் பொருளாதாரக் கோணம் எடுத்தது.

ஒருவேளை பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் கூட, அதுவும் சரிதானே… நான் கூட 25 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, ரோம் நகரத்திற்கு வெளியே இருக்கும் ஈழத்தமிழர் கடையில் தான் போய் அரிசி, பருப்பு இன்ன பிற வகையறாக்கள் வாங்குவேன்.

என்னைப் பொறுத்தவரை, என் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காதவரை எந்தக் கோட்பாடுகளைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. ஆடோ, மாடோ, பன்றியோ… ஏன் ஒணானாக இருந்தாலும் என் வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு ஜீரணம் ஆகும் அனைத்து உணவு வகைகளும் ஹலாலே…. அவரவருக்கு சரி என்பதை அவரவர் பின்பற்றுகிறார்கள். நல்லதே ஆனாலும் திணிக்கப்படும்பொழுதுதான் பிரச்சினை.

ஷாகித்திடம் ஒரு நல்ல குணம் உண்டு, அன்புடன் வற்புறுத்தினால்,

“அன்பிற்காக சில விதிவிலக்குகளை பின்பற்றலாம்” நான் கொண்டு வந்திருக்கும் ஹலால் அல்லாத கோழிக்கறியை சிறிதளவேனும் ருசி பார்ப்பான்.

“எப்படித்தான் பிணத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ” ஒரு நாள் நான் கோழிக்கறி வறுவல் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது வாசுதேவ் கேட்டபிறகு அவனுக்கு மட்டும் தெரியும் படி, சைவச் சாப்பாட்டுப் பிரியர்களைக் கேலி செய்யும் சித்திரங்களையும் தகவல்களையும் பேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். தாவரங்களுக்கும் உயிருண்டு என்பதைக் கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகப்போகின்றது என்பதை பல சைவப்பிரியர்கள் மறந்துவிடுகிறார்கள். நடுநிலை என்பதைவிட, சமனிலைப் படுத்தும் காரணியாக நான் இருந்ததால், ஷாகித்தை, பலசமயங்களில் வாசுதேவ்வின் உள்குத்துகளில் இருந்து காப்பாற்ற முடிந்தது.

சில மாதங்களுக்குப் பின்னர், ஷாகித்திற்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதால், அவன் வீட்டில் விருந்துக் கொடுக்க முடிவு செய்தான். வாசுதேவ் வரவில்லை என்று சொல்லிவிட்டான். இருந்த போதிலும் நான் ஷாகித்திற்கு அறிமுகப்படுத்தி இருந்த வேறு துறை மாணவர்கள் ரங்கநாதனும் ஸ்ரீராமும் வருவதாக சொன்னார்கள்.

விருந்து தினத்தன்று, அவனுக்கு உதவுவதற்காக காலையிலேயே சென்ற பொழுது, சமையலறையில் புதுப்பாத்திரங்களாக அடுக்கி வைத்திருந்தான். இரண்டு குழம்பு வைக்கும் சட்டிகள், அரிசி வைக்கப் புதுப்பாத்திரம், வாணலி, கரண்டிகள் என எல்லாம் முந்தைய நாள் வாங்கியவை.

“எதற்கு இந்தப் புதுப்பாத்திரங்கள், கல்யாணப்பையன் காசு சேர்க்க வேண்டாமா”

“இல்லை கார்த்தி, ஸ்ரீராமும் ரங்காவும் சைவர்கள், மாமிசம் சமைத்த எனது பாத்திரங்களில் சாப்பாடு செய்து கொடுத்தால், ஒரு வேளை அவர்களுக்கு அசூயையாக இருக்கக் கூடும், நான் கொடுக்கும் விருந்து அவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்”

ஷாகித்தின் மேல் இருக்கும் மதிப்பு உயர்ந்தது. அடுத்த முறை, ஹாலால் கோழி வாங்கி, ஷாகித்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என மனதினுள் முடிவு செய்தேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *