கக்கூஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2024
பார்வையிட்டோர்: 217 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கடந்த இரண்டரை மணிநேர ரயில் பயணத்தில், ரயிலில் மட்டுமல்லாது, ஒவ்வொரு நிறுத்தங்களிலும் விற்ற அனைத்தையும் வாங்கித் தின்றதன் வினை, பத்து நிமிடங்களுக்கு மேலாக கக்கூஸில் இருக்க வைத்துவிட்டது. சிறுவயதில் இருந்தே எனக்கு ரயில் பயணம் பிடிக்கக் காரணம் ஒன்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பது,மற்றொன்று இந்தக் கழிவறை வசதிகள். உள்ளே நுழைந்தபொழுது இந்த இருப்புப்பாதை சந்திப்பில் நின்ற ரயில், பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கிளம்பவில்லை. என்னுடையத் தோழர்களுக்கு நான் கக்கூஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பிடிக்காது. தமிழுக்கு இடையில், வார்த்தைக்கு வார்த்தை ஷிட் உபயோகப்படுத்தும் அவர்களுக்கு டாய்லெட் என்று சொன்னால்தான் பிடிக்கும். நெடுங்காலமாகவே, கக்கூஸ் வார்த்தைத் தமிழின் கொச்சையான வார்த்தை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எதேச்சையாக ஒருநாள் பயன்படுத்த, எனது நெதர்லாந்துத் தோழி, அந்த வார்த்தையின் பூர்வீகத்தை புரியவைத்தாள். கக்கா – கழிவு, ஹூஸ் – இருப்பிடம் கழிவுகளுக்கான இடம் என்ற கக்கூஸ் டச்சுவார்த்தையில் இருந்து வந்தது எனச் சொன்னாள். தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு ஏன் இந்தோனேசிய மொழியிலும் இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் பற்றி ஆராய்ச்சிப்படிப்பு படிக்கும் அந்த நெதர்லாந்துத் தோழியின் அருகில் மீண்டும் வந்து உட்கார்ந்தேன். இவளின் ஒருவார தமிழ் நாட்டுப் பயணத்தில், இந்தியக் குடியரசின் பிரதாபங்களையும், எப்படி நாங்கள் வல்லரசு என்ற நிலையை நோக்கி, ராணுவ வலிமையிலும், பொருளாதார வலிமையிலும் நகர்கின்றோம் என்பதை எல்லாம் பெருமையுடன் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் விளக்கிக்கொண்டே இருந்தேன்.

அவள் முகத்தில் சுணக்கம் தெரிய, நெளிந்தபடியே,

“ரயில் எப்பொழுது நகரும் ” எனக்கேட்டாள்.

“தெரியவில்லை, இந்த சந்திப்பில் பொதுவாக ஐந்து நிமிடங்கள்தான் நிற்கும், ஒரு வேளை எதிர்வரும் வண்டிக்காக காத்திருக்கக்கூடும்” சிறிது இடைவெளிவிட்டு, “உடல்நிலை எதுவும் சரியில்லையா?”

“உடல்நலம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, வயிற்றைக் கலக்குகிறது, கக்கூஸைப் பயன்படுத்த வேண்டும்” என்றாள் டச்சு கலந்த ஆங்கிலத்தில்.

“அட, இதற்கென்ன, இந்திய ரயில்களின் சிறப்பம்சமே, ஒரு பெட்டியில் நான்கு கழிவறைகள் இருப்பதுதான், தாராளமாக போய் வரவேண்டியதுதானே, உடைமைகளை நான் பார்த்துக்கொள்கின்றேன்”

அவள் பதில் சொல்ல முற்படுதவற்குள் ரயில் மெல்ல நகர்ந்து வேகம் எடுக்க, தோழியும் கழிவறைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து விட்ட பதிலைத் தொடர்ந்தாள்.

“நான்கு கழிவறைகள், முதல் வகுப்புப் பெட்டிகளில் சுத்தம் அற்புதம், ஆஹோ ஓஹோ எல்லாம் சரிதான், ரயில் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது, நின்று கொண்டிருக்கும் ரயிலில் கழிவறையை உபயோகிப்பது தவறு, மேலும் உங்கள் நாட்டில் ரயில் தண்டவாளங்களில் கிடக்கும் கழிவுகளை மனிதர்கள்தான் கையை உபயோகப்படுத்தித் தான் சுத்தப்படுத்துகிறார்கள், குறைந்த பட்சம் நான் அதற்கு காரணம் ஆக மாட்டேன், வேறு ஒருவரின் மனிதக் கழிவுகளை, மற்றொருவர் சுத்தம் செய்ய வேலை வாங்குவது நாகரீகம் அல்ல “

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *