வேக்ஸினேஷன் வைபவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 2,216 
 

‘ஓ காட்!’ என்று கூச்சலிட்டாள் மைதிலி. ‘இந்த ஜனசமுத்திரத்தில் இறங்கினால் நமக்குத் தடுப்பூசி கிடைக்கிறதோ இல்லையோ, கரோனா வைரஸ் கட்டாயம் கிடைக்கும். திரும்பிப் போயிடலாம், வாங்கோ.’ முகக்கவசத்தை ஒரு கையால் அழுத்திக்கொண்டு இன்னொரு கையால் திறந்த கார் கதவை மூடி கண்ணாடியையும் ஏற்றினாள்.

இருநூறு இருநூற்றைம்பது பேர்களை ஜனசமுத்திரம் என்று சொல்லமுடியாது. ஆனால் அந்த குறுகிய சந்தில் குடிசைகளுக்கு நடுவில் ஒரு தீப்பெட்டி மேல் இன்னொன்றை வைத்ததுபோல இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டிருந்த அந்த ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மையத்தின் முன் முட்டிமோதி, முன்னுக்குச்சென்றும், பின்னுக்குத் தள்ளப்பட்டும் தடுமாறிய மக்கள் கூட்டம் கடல் அலைகளின் எழுச்சியையும், பின்னடைவையும் ஞாபகப்படுத்தாமலில்லை.

நாங்கள் இருவரும் மூத்த குடிமக்கள் என்று சொல்லப்படுபவர்கள். எனக்கு எழுபது வயது, மைதிலிக்கு அறுபத்தேழு. ஐம்பத்தைந்து நாட்களுக்கு முன் கோவிட் தடுப்பூசி முதல் தவணையைப் போட்டுக்கொண்டோம். கோவிஷீல்ட் என்ற பெயருடைய அந்த தடுப்பு மருந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் நாங்கள் போட்டுக்கொண்டபோது எங்களுடன் வயதானவர்கள் பத்து பன்னிரண்டு பேர்களுக்குமேல் இல்லை. அப்போது இருபத்தெட்டாம் நாள் இரண்டாவது தவணையைப் போடவேண்டும் என்று சொன்னார்கள். இருபத்தைந்து நாட்கள் கழித்து இரண்டாவது தவணைக்குப் பதிவு செய்வதற்காக அரசாங்கம் நிறுவியிருந்த கோவின் வலைத்தளத்துக்குச் சென்றேன். எந்தத் தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசி இருப்பதாகக் கோவின் காட்டவில்லை. பல தனியார் மருத்துவமனை டாக்டர்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர்கள்; சிலர் என் பழைய மாணவர்கள். அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தடுப்பு மருந்து பற்றாக்குறை காரணமாக தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை என்றார்கள். அரசாங்க மருத்துவமனைகளில் தடுப்பூசி இருந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தில் போய் எப்படி நிற்பது? அங்கு சமூக இடைவெளி என்பது எப்படி சாத்தியம்? ‘அங்கு போகாதீர்கள்,’ என்று எச்சரித்தார் ஒரு மருத்துவ நண்பர். ‘படுக்கைகள் காலியில்லாமல் நடைபாதைகளிலெல்லாம் நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டியல்லவா உள்ளே போகவேண்டும்!’

என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கும்போது ஓர் அறிவிப்பு வந்தது. கோவிஷீல்ட் இரண்டாவது தவணையை எட்டு வாரங்கள் முடிவதற்கு முன் போட்டுக் கொண்டால் போதும் என்று அரசாங்கம் அறிவித்தது. நாங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கிறது; அதற்குள் தனியார் மருத்துவமனைகளுக்குத் தடுப்பு மருந்து வராமலா போகப்போகிறது?

ஆனால் ஐம்பது நாட்கள் கழித்தும் கோவிஷீல்ட் வரவில்லை. ஒவ்வொரு வாரமும் நான் கோவினில் செய்த பதிவு அந்த வார இறுதிக்குள் ரத்து செய்யப்பட்டது.

ஐம்பத்தாறு நாட்கள் கடந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை. மல்லிகார்ஜுனராவ் போன் பண்ணினான். மல்லி என் பழைய மாணவன்; கல்லூரியை விட்டுச்சென்று முப்பது ஆண்டுகள் ஆனபின்பும் என்னுடன் தொடர்பில் இருப்பவன். முனிசிபல் கார்ப்பரேஷனில் சீனியர் சூப்பரின்டெண்டிங் என்ஜினியராக இருக்கிறான்.

‘நமஸ்காரம், ஸார். பாகுன்னாரா?’ என்று ஆரம்பித்தான்.

இந்த ஒரு வருட காலத்தில் யார் பேசினாலும் முதலில் வருவது கரோனா பற்றிய சம்பிரதாய விசாரணையும், அறிவுரையும்தான். இங்கிலீஷிலும் தெலுங்கிலும் இந்த சம்பிரதாயங்களை முடித்துவிட்டு மல்லி கேட்டான்: ‘ஸார், தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா?’

சொன்னேன்.

தன்னிடம் ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று தெலுங்கு கலந்த இங்கிலீஷில் செல்லமாகக் கோபித்துக்கொண்டான். ‘டோன்ட் ஒரி, ஸார். நேனு அரேஞ்ஜ் சேஸ்தானு (நான் ஏற்பாடு செய்யறேன்). நாளைக்கு உங்களுக்கு தடுப்பூசி ரெண்டாவது டோஸ்.’

‘எங்கே?’

‘ஓர் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மையத்தில்.’

‘ப்ரைமரி ஹெல்த் சென்டரிலா? ஓ, நோ!’ நான் குரலை உயர்த்தித் தீர்மானமாகச் சொன்னேன். ‘நான் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்குப் போகமாட்டேன்.’

‘நாமீது நம்பகம் லேதா, ஸார், மீக்கு?’ என்று மறுபடியும் கோபித்துக்கொண்டான். ‘நான் ஏற்பாடு செய்யற பி.எச்.ஸி.யில நாலஞ்சு பேர்கூட இருக்கமாட்டாங்க. ஏன் தெரியுமா? ரெண்டு வாரமா கவர்ன்மென்ட் ஹாஸ்பத்திரிகள்ல கூட தடுப்பு மருந்து கெடயாது. நேத்து காலைல மச்சிலிபட்டணத்துக்கு ஒரு பெரிய கன்சைன்மென்ட் வந்தது. இன்னிக்கு அத விநியோகம் பண்ணுவாங்க. ஆனா இந்த விஷயம் ஜனங்களுக்குத் தெரிய ரெண்டு மூணு நாள் ஆகும். அதுமட்டுமில்ல, ஸார். அங்க நீங்க காத்திருக்கவேண்டிய அவசியம் இல்ல; ரெண்டு நிமிஷத்திலே மொத்தம் முடிஞ்சுடும். அதுக்குண்டான ஏற்பாடு நான் செய்யறேன்.’

நான் அரை மனதுடன் ஒப்புக்கொண்டேன்.

‘நானே நேரில் வந்து அழைத்துச்செல்வேன், ஸார். ஆனால் நாளைக்கு முனிசிபல் கமிஷ்னருடன் பவானிபுரம் போகணும். என் வொர்க்ஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தனை அனுப்பறேன். யங் ஃபெலோ; கெட்டிக்காரன். அவன் பத்து மணிக்கு என் காரில் வந்து உங்களை அழைத்துச்செல்வான்.’

‘அதெல்லாம் வேண்டாம், மல்லி. இடத்தைச் சொல்லு. நாங்க போய்க்கிறோம். நீதான் மெடிகல் ஆபீசரிடம் பேசி ஏற்பாடு செய்யப்போகிறாயே.’

அவன் மறுபடியும் கோபித்துக்கொண்டான். இப்படி இங்கிலீஷிலும் தெலுங்கிலும் அடிக்கடி கோபித்துக்கொள்பவனுடன் என்ன செய்வது? ‘அதில்லை, மல்லி…’ என்று ஆரம்பித்தேன்.

‘மீறு ஏமி மாட்லாடக்கூடது, மாஸ்ட்ராரு. ரேப்பு இஸ்மாயில் ஒஸ்தாடு, தீஸ்கெல்தாடு. அந்தே. (நீங்க ஒண்ணும் பேசக்கூடாது, ஸார். நாளைக்கு இஸ்மாயில் வாரான், கூட்டிண்டு போறான். அவ்வளவுதான்.)’

‘கோவின்னில் ஷெட்யூல் செய்யவேண்டாமா?’

‘அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், ஸார். ஆதார் நம்பர்களை மட்டும் வாட்ஸாப் பண்ணுங்க.’

மறுநாள் திங்கட்கிழமை. இஸ்மாயில் என்பவன் சரியாகப் பத்து மணிக்கு வந்துவிட்டான். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் வரும் பீம்பாய், ‘தேவர் மகன்’ கமலஹாசனுடைய முறுக்கு மீசையுடன் வந்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தான். முகவாய்க்கட்டையின்மேல் பச்சைக்கலரில் தளர்ந்து தொங்கிய ஒரு மாஸ்க் அணிந்திருந்தான். அதற்கு மேலும், முறுக்கு மீசைக்கு கீழும் உள்ள பாகம் நிறுத்தாமல் பேசிக்கொண்டே வந்தது.

‘இஸ்மாயில், அதைத் தூக்கி விட்டுக்கோப்பா,’ என்றாள் மைதிலி.

‘ஸார் ஏறக்கச்சொன்னரே, மேடம்? தூக்கிவிட்டு ஏஸியைப் போடவா?’

‘ஐயோ, கார் கண்ணாடிகள் இல்லேப்பா; உன் மாஸ்க். மேலே இழுத்துவிட்டு முகத்தை நன்னா கவர் பண்ணிக்கோ.’

‘மேடம் பயப்படறாங்க, ஸார். எனக்கு ஒண்ணும் இல்லே, மேடம். எந்த வைரஸும் எங்கிட்ட வரமுடியாது.’ சொல்லிவிட்டு முன்சீட்டிலிருந்து திரும்பி மைதிலையைப் பார்த்து இடிஇடியென்று சிரித்தான். பிறகு மாஸ்க்கை மேலே இழுத்துவிட்டான். அது பாதி வாயைக்கூட மூடமுடியாத கஞ்சத்தனமான மாஸ்க். அந்த வாயும் எந்தக் கவசத்தாலும் மூடமுடியாத வாய். ஒரு டபுல் லேயர் காட்டன் மாஸ்க் மீது த்ரீப்ளை சர்ஜிக்கல் மாஸ்க்கும், அதன் மீது பிளாஸ்டிக் ஷீல்டும் போட்டுக்கொண்டிருந்தாலும், மைதிலியின் உடல் பயத்தால் நடுங்கியது. நான் அவள் கையைப் பிடித்துக்கொண்டேன்.

கார் ரிங்ரோட் ஃப்ளையோவர் மேல் ஏறி, பென்ஸ் சர்கிலில் யூடர்ன் போட்டு, பந்தர் ரோடில் நுழைந்தது. தெலுங்கு கலந்த இங்கிலீஷில் விடாமல் பேசிக்கொண்டே காரை மாண்டஃபோர்ட் ஸ்கூல் சாலையில் திருப்பினான் இஸ்மாயில். கார் பள்ளிக்கூடச் சாலையைக் கடந்து, ஒரு கூரை வேய்த ஜெபவீட்டைத் தாண்டி, குறுகலான சந்து ஒன்றுக்குள் நுழைந்தது. இரண்டு புறமும் குடிசை வீடுகள். நாற்பத்தைந்து வருடங்களில் நான் பார்த்திராத இடம் இது. ஒரு டீக்கடை அருகில் வந்ததும் கார் மேலே போகமுடியாதபடி சாலையில் மக்கள் கூட்டம். ‘வந்துவிட்டோம், ஸார்’ என்று வலது பக்கத்து திருப்பத்தில் பரிதாபகரமாக இருந்த ஒரு சிறிய, செவ்வக வடிவ இரண்டடுக்குக் கட்டிடத்தைக் காண்பித்தான் இஸ்மாயில். கட்டிடத்தின் மேலும், கீழும், சுற்றியும் மக்கள் திரள். அதைப் பார்த்துதான் மைதிலி அலறினாள்.

இஸ்மாயிலை காரை விட்டு இறங்கவேண்டாம் என்று சொன்னேன். ‘எங்களுக்கு வேக்ஸினேஷன் வேண்டாம்; வீட்டுக்குப் போயிடலாம்.’

‘ஸார், நான் கார்ப்பரேஷன் அதிகாரி. ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. என்ன நடக்குதுன்னு பாருங்க.’

இஸ்மாயில் காரிலிருந்து வீராவேசத்துடன் இறங்கினான். அவன் மாஸ்க்கும் முகவாய்க்கட்டைக்குக் கீழே இறங்கி தொங்கியது. அவன் எதிரில் ஜனசமுத்திரம். பேரிரைச்சலுடன் மோதிக்கொண்டிருந்த அலைகளின் பின்னால் நின்று இரண்டு கைகளையும் உயரத்தூக்கி எனக்குப் புரியாத தெலுங்கில் என்னமோ சொல்லி கத்தினான். எனக்கு ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ படம் ஞாபகம் வந்தது. ஆறாயிரம் யூதர்களை எகிப்திலிருந்து வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்துக்கு வழி நடத்திச் செல்கிறான் மோஸஸ். எதிரில் செங்கடல்; அதைக் கடந்தால்தான் மேலே செல்லமுடியும். சமுத்திரக்கரையில் நின்று கைகளைத் தூக்கி கடவுளிடம் முறையிடுகிறான். கடல் பிளந்து வழி விடுகிறது. அந்த அதிசயத்தை இஸ்மாயிலும் செய்யப்போகிறானா?

நான் ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ நினைவலைகளில் வெகுநேரம் சஞ்சரிக்க முடியவில்லை. ஏனென்றால், இப்போது இஸ்மாயில், தான் ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி என்று திரும்பத் திரும்ப கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். (சால்டன் ஹெஸ்டன் இந்த மாதிரியெல்லாம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.) ஆனால் அலைகள் மேலும் பேரிரைச்சலோடு வீசினவே ஒழிய வழிவிடவில்லை. இஸ்மாயில் சட்டென்று திரும்பி காருக்குப்பின்னால் பூரண முகக்கவசத்துடன் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கும் வயதான யூதத் தம்பதியரைப் பார்த்தான். அவனுக்கு கோபம் வந்தது; கோபத்துடன் சேர்ந்து ஞானமும் வந்தது என்று நினைக்கிறேன். ‘இது செங்கடல் அல்ல; இந்திய சாகரம். இங்கு மோஸஸ் உத்தி வேலைக்கு ஆகாது; விருமாண்டி வழிதான் சரி,’ என்று எண்ணியிருக்கக்கூடும். ஆர்ப்பரிக்கும் அவ்வலைகடலுக்குள் வீரன் விருமாண்டியின் ஆவேசத்துடன் குதித்தான். அவன் புஜபலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அலைகள் தத்தளித்தன. முரட்டுத்தனமாக முன்னேறி ஹாஸ்பத்திரி கட்டிடத்தில் நுழைந்து, மளமளவென்று குரங்குமாதிரி குதித்தும், தொத்தியும், தாவியும் மாடியேறி, அங்கிருந்து ஒரு வினாடி நின்று, குனிந்து ஒரு விருமாண்டி பார்வை பார்த்து, எங்கள் பிரமிப்பு நீங்கும் முன்பே சடக்கென எங்கோ நுழைந்து மறைந்துவிட்டான்.

இப்போது மைதிலி கேட்டாள், ‘வேக்ஸினேஷன் யாருக்கு?’

‘என்னது?’

‘இல்லை, தடுப்பூசி நமக்கா, இல்லை இஸ்மாயிலுக்கா?’

நான் பதில் சொல்லவில்லை. என் கைப்பேசியை எடுத்து மல்லிகார்ஜுனராவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னேன். ‘ஸோ, இந்தக் கூட்டத்தில எங்களால் நுழைய முடியாது, மல்லி. இஸ்மாயில் கீழே வந்ததும் நாங்க வீட்டுக்குத் திரும்பறோம்.’

‘ஸாரி, ஸார். நான் நாலஞ்சு பேருக்குமேல எதிர்பாக்கலே. திடீர்னு நாப்பத்தஞ்சு வயசுக்குமேல இருக்கவங்க எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க இல்லையா? அதனால்தான் இந்த ரஷ். நான் மெடிக்கல் ஆபீசர்கிட்டே பேசிட்டு அஞ்சு நிமிஷத்தில கால் பண்றேன், ஸார். அஞ்சே நிமிஷம், வெய்ட் பண்ணுங்க.’

ஐந்து நிமிடம் கழிந்து மைதிலியின் கைப்பேசி ‘டுங்’ என்றது. எடுத்துப் பார்த்துவிட்டு ‘இதென்ன கூத்து!’ என்றாள்.

‘என்ன ஆச்சு?’

‘நீங்களே பாருங்கோ.’

கோவின் வலைத்தளத்திலுருந்து வந்திருந்த குறுஞ்செய்தி அது: ‘அன்புள்ள மைதிலி, நீங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் அளவை வெற்றிகரமாகப் போட்டுக்கொண்டுவிட்டீர்கள். தடுப்பூசிச் சான்றிதழை இப்போது தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.’

இப்போது என்னுடைய போனும் ஒலித்தது. எடுத்துப்பார்த்தேன். ‘அன்புள்ள கிருஷ்ணன்…’

‘வாட் த ஹெல் டஸ் திஸ் மீன்?’ என்றேன் திகைப்புடன்.

‘நமக்கு வேக்ஸினேஷன் ஆகிவிட்டது என்று அர்த்தம்.’

‘ஹாஸ்பத்ரிக்குள் போகாமலேயா?’

‘யார் கண்டது, நம் சார்பாக இஸ்மாயிலே போட்டுக்கொண்டுவிட்டானோ என்னமோ!’

இருவரும் சிரித்தோம். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

‘ஆனா சீரியஸ் நோட், இது ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது, மைதிலி. அரசாங்கப் பதிவுகள்படி நம்ம ரெண்டு பெருக்கும் வேக்ஸினேஷன் ஆயிடுத்து. இனிமேல் நாம வேற எந்த மருத்துவமனைக்கும் தடுப்பூசிக்குப் போகமுடியாது.’

இதற்குள் இஸ்மாயில் வந்து சேர்ந்தான். ‘வாட்ஸ் திஸ்?’ என்று கோபத்துடன் அவனிடம் குறுஞ்செய்தியைக் காண்பித்தேன். பல்லை இளித்தான்.

‘வாங்க ஸார், வேக்ஸினேஷனுக்குப் போகலாம். பார்மாலிடிஸ் எல்லாம் முடிஞ்சுபோச்சு. உங்களுக்காகக் காத்திண்டிருக்காங்க.’

‘இந்தக்கூட்டத்தைத் தாண்டி எப்படிப் போவது?’ என் குரல் எனக்கே பலவீனமாக ஒலித்தது.

‘நான் எதற்கு இருக்கேன், ஸார்? என் பின்னாலயே வாங்க.’

அலைகள் சீற்றத்துடன் வந்து மோதியவண்ணம் இருந்தன. இஸ்மாயில் அவற்றைப் பிளந்துகொண்டு உள்ளே சென்றான். நாங்கள் பின்தொடர முயற்சி செய்தோம். ஆனால் அலைகள் பேரிரைச்சலுடன் அவன் பின்னால் மூடிக்கொண்டன. இப்போது எங்களுக்குப் பின்னால் ஆவேசமாக ஒரு பெரிய அலை அடித்தது. அதன் தள்ளலில் எந்தவிதப் பிரயத்தனமும் இல்லாமல் நாங்கள் மேலே போய்க்கொண்டிருந்தோம். விழுந்து வாரி கடைசியில் நிலைத்து நின்றபோது, ஒரு பழைய வீட்டு மாடியில் சிவப்பு ஆக்சைட் பூசிய தரையுடன் கூடிய குறுகிய ஆளோடியில் இருப்பதாக உணர்ந்தேன். அதைத்தாண்டி, இஸ்மாயிலைப் பின்தொடர்ந்து ஒரு சிறிய இருண்ட கூடத்தில் நுழைந்து, வலது பக்க வளைவில் திரும்பி நின்றபோது, ஒற்றை ஜன்னலுடன் கூடிய ஒரு ரேழியில் இருந்தேன். மூச்சு வாங்கியது; உடல் வியர்த்துக்கொட்டியது; தொண்டை வறண்டது. அந்த மங்கலான வெளிச்சத்தில் என்ன நடக்கிறது, மைதிலி கூட இருக்கிறாளா என்று புரிந்துகொள்வதற்குள், இடது கையில் சுருக் என்று ஊசி குத்தியது. பஞ்சை வைத்து அழுத்தி அந்த இளம் பெண் முகக்கவசத்துடன் சிரித்தபோது, கடல்கடந்து, மலையேறி, ப்ராணாவஸ்தைப்பட்டு அந்த ரேழிக்குள் வந்து விழுந்த அனுபவம் அவ்வளவு கஷ்டமானதாகத் தெரியவில்லை.

இப்பொது என்னால் எல்லாவற்றையும் பார்க்கமுடிந்தது; இருட்டுக்குக் கண்கள் பழக்கப்பட்டுவிட்டன. மைதிலி பஞ்சை அழுத்திக்கொண்டு அறையின் இன்னொரு மூலையில் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது நர்ஸ். எனெக்கெதிரில் சுவரில் கனகதுர்கா அம்மவாரு, மற்றும் அலர்மேல்மங்கை உரைமார்புடன் திருவேங்கடத்தான். வடகிழக்கு மூலையல்லவா? ஒருகாலத்தில் பூஜையறையாக இருந்திருக்கவேண்டும்.

‘இந்த பக்கம் திரும்புங்க, ஸார்,’ என்றான் இஸ்மாயில்.

‘இந்தச் சின்ன வீட்டில் எவ்வளவு அறைகள் பார், மைதிலி. வெளியிலேந்து பாக்கும்போது தீப்பெட்டி மாதிரி இருந்தது. என்ன சாமர்த்தியமாகக் கட்டப்பட்ட வீடு! பாரம்பர்யமான கட்டமைப்பு. யாரோ பரோபகாரி நன்கொடையாக் கொடுத்திருக்கார்,’ என்று சொல்லிக்கொண்டே இஸ்மாயிலைப் பின்தொடர்ந்து முற்றத்தில் இறங்கினேன். முற்றம் வெளிச்சமாக இருந்தது. அதைத் தாண்டி வெளியே செல்ல முயற்சித்தபோது இன்னொரு பெண் எனக்குத் தடுப்பூசி போட வந்தாள். ‘ஒரு கையில் ஆயிடுத்துமா; போறும்,’ என்று சொல்லி அவளுக்கு நன்றி தெரிவித்தேன். அவளும் சிரித்தாள்.

‘என்ன உபசரிப்பு பார்த்தியா, மைதிலி? எத்தனை ஊசி வேணொன்னாலும் போடுவா. எல்லாம் இஸ்மாயில்!’ என்றேன். அவள் முகம் சுளித்தாள். இஸ்மாயில் ஹாண்டில்பார் மீசையைத் தடவிக்கொடுத்தான்.

தட்டுத் தடுமாறி கீழே வந்து காரில் உட்கார்ந்து மூச்சுவிடுவதற்குத் திணறிக்கொண்டிருந்தபோது, இஸ்மாயில் என்னிடம் இரண்டு அச்சிட்ட தாள்களைக் கொடுத்தான். கெட்டிக்காரன்; எங்கள் தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொண்டுவந்துவிட்டான். தாளின் அடிப்பகுதியில் பிரதமர் மோடி இருந்தார். நீண்ட வெண்தாடியுடன் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ மோஸஸ் மாதிரியே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்தார்.

இப்போது ஐஃபோன் ஒலித்தது. எடுத்துக் காதில் வைத்தேன். என் நண்பன் ராமஷர்மா. ஆயுஷ் மருத்துவமனையில் இருதயநோய் நிபுணன்; எங்கள் குடும்ப நண்பன்.

‘கிருஷ்ணா, என்ன பண்ணிண்டிருக்கே?’

‘டென் கம்மாண்ட்மெண்ட்ஸ்’ ‘விருமாண்டி’ ரெண்டையும் பாத்துண்டிருக்கேன். முடியப்போறது.’

‘அடி சக்கை! ஒரே சமயத்திலே ரெண்டு படமா? சரி, தடுப்பு மருந்து –கோவிஷீல்டு – வந்தாச்சு. உங்க ரெண்டுபேருக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். மைதிலியைக் கூட்டிண்டு உடனே வா.’

நன்றி: https://solvanam.com, 13 June 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *