வெளியேற்றப்பட்டான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 786 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று குளிர் ‘பட பட’ என அடித்துக் கொண்டிருந்தது. இரவு பூராவும் கவிந்து கிடந்த பேயிருட்டு சிறிது சிறிதாக விலக முனைந்தது. கீழ் வானம் வெளுக்க ஆரம்பித்தது. எங்கோ உரக்கக் கூவிக் கொண்டிருந்த சேவலின் குரல் குடங்கிக் கிடந்த அவன் காதுகளில் துளாவியது. அந்தக் குரல் பட்டினி கிடக்கும் மனித இனத்தின் அபயக் குரலாக ஒலித்தது. வேலை ஸ்தலத்திலும் வீட்டு ஓரத்திலும் புழுப்போல் துடிக்கும் மனித குலத்தை எதிர்நோக்கி யுள்ள கோரத்தின் அபாய அறிவிப்பாக அது அலறியது.

அவன் துடித்தெழுந்தான். படுத்த சாக்கையும் – தலை வைத்த மரக்குத்தியையும் ஒரு மூலையில் போட்டான். மறுபக்கத்தில் சோர்ந்து துவண்டு கிடந்த தன் மனைவியை தட்டி எழுப்பினான். தூக்கத்தை முறித்து அலட்டிப் புடைத்துக் கொண்டு எழுந்தாள். சத்து வாங்கப்பட்ட சக்கைகள் அந்த இரண்டு மனிதப் பிராணி களும்.

அவசர அவசரமாக காலைக் கடனை முடித்துவிட்டு, கசக்கிப் போட்டிருந்த கந்தல் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். பானையிலே எஞ்சியிருந்த பழங்கஞ்சியை குடித்ததும் குடியாதது மாக வாயில் ஊற்றிவிட்டு புறப்பட்டான். இந்த ஆரவாரத்தில் எலும்புக் குவியல்களாக மூலை ஒதுக்கில் சுருண்டு கிடந்த குழந் தைகள் விழித்துக் கொண்டன. அவர்களின் கூச்சலையும் பொருட் படுத்தாது அவன் வெளியேறினான். இரண்டு பையன்களுக்கு ஜுரம் ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு ஏதாவது மருந்து வாங்கி வருவதற்காக நகரத்திலிருந்த ஒரு வைத்தி யரிடம் அவன் சென்று கொண்டிருந்தான்.

வைத்தியர் வீட்டை அடைந்ததும் அங்குமிங்கும் தன் விழி களை ஏவி விட்டான். அப்போதுதான் கொட்டாவி விட்டுக் கொண்டு கால் கைகளை வீசி எறிந்தபடி படலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருக்கு முன்வந்த நாய் அவனை வரவேற்றது. அதன் பிசாசு போன்ற தோற்றத்திலும், வெறிபிடித்த குரைப்பிலும் அவன் மிரண்டுபோய் நின்றான். அந்த நாய் அகங்காரம் பிடித்த ஒரு பட்டாளத்தின் விஸ்வருபமாக நின்றது.

பெரிய இடத்துப் பேர்வழிகள் தங்கள் செல்வத்தை – சொத்து சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக நாய்களை வளர்க்கிறார்கள். அவர்களின் ஆட்சியும் துப்பாக்கிப் படை நாய்களை வைத்துத் தன் ஆதிக்கத்தை காப்பாற்றுகிறது.

வைத்தியரிடம் தன் குழந்தைகளின் நிலைமைகளைப் பற்றி பிரலாபித்தான். செல்வக் குழந்தைகளின் உயிரைக்காப்பாற்ற மருந்து கேட்டான். வைத்தியரை கூட்டிப் போக அவனிடம் எங்கே பணம் இருக்கப் போகிறது. வைத்தியரும் ஏதோ குளிசைகளை ஒரு சரையிலும் வேறோரு கலரையும் தயார் செய்தார் அவற்றை கொடுத்தவாறே பணத்திற்காக ஒரு கரத்தை நீட்டினார். அவன் வேட்டி முடிப்பைப் பார்த்தான். முடிச்சுக் காணப்படவில்லை. திகைத்துப் போனான் மருந்துக்காக முதல் நாள் இரவு அடுத்த வீட்டில் எடுத்தக் கடன் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவன் அவசரத்தில் அதை மறந்துவிட்டான்.

“ஐயா பணத்தை வீட்டில் விட்டு வந்து விட்டேன். சாயந் தரம் வந்து தருகிறேன்” என்றான்.

வைத்தியர் இரு கரங்களையும் பின்வாங்கினார். அவர் பார் வையில் முறைப்பும் கழுகுத் தன்மையும் தொனிந்தது “பணத்தை கொடுத்து விட்டு எடுத்து போ” அவர் குரலில் கரடு முரடு காணப் பட்டது.

குழந்தையின் பயங்கரமான நிலையை எடுத்துச் சொன்னான்; உயிர் பிச்சைக்காக மன்றாடினான். ஆனால் மனிதம் என்று சொல்கின்றார்களே அது துளிகூட எங்கும் ஊறவில்லை. மனித இதயங்களை வெறும் சல்லடையாக்கிவிட்ட இந்த சமுதாயத்தின் அந்த வைத்தியரும் ஒரு பிராணிதானே. பணம் அவர் உள்ளத்தை கொன்று விட்டது. மனிதத் தன்மையை இழந்த கோடானு கோடி மனித மரக்கட்டைகளில் அவரும் ஒருவர்.

அவன் திரும்பினான் ஆத்திரமும் – ஏமாற்றமும் மரத்துப் போய் இருந்த அவன் உள்ளத்தில் நச்சரித்தன. அவன் வெறுப் பெல்லாம் பைத்தியக்காரனின் மீது பொதுக்கிட்டது. பாவம் அவன் ஏழை. உலக இயல்பை – சமுதாய உண்மையை அறியாதவன். தானும் தன்னைப் போன்ற லட்சோப லட்சம் மக்களும் அதே சமுதாயத்தின் கோளாறுக்கு பலியானவர்கள் என்பது அவனுக்கு எங்கே தெரியப்போகிறது. நல்லவர்கள் – நல்லவர்களாக வாழப் பிறந்தவர்கள். இந்த சமுதாயத்தில் கெட்டவர்களாக்கப்படுகிறார்கள் – வாழ்வு மறுக்கப்படுகிறார்கள் என்ற போதம் அவனுக்கு இன்னும் வரவில்லை .

தலை கிறுகிறுக்க முயல்பாச்சலில் அவன் கால்கள் தாவின. வீட்டில் குழந்தைகள் தாங்க முடியாத ஜுரத்தால் துடித்துக் கொண்டிருந்தார்கள். மனைவியோ திக்பிரமை பிடித்தவள் போல தன் செல்வங்களை ஏக்கத்தோடு பார்த்தபடி இருந்தாள். ஈக்கள் ‘படைத்தாக்குதல்’ நடத்திக் கொண்டிருந்தன. முடை நாற்றம் வேறு.

அழுக்குப் பிடித்து கிடந்த துணியில் முடிச்சுப்போட்டு வைக்கப்பட்ட பணத்தை அவசர அவசரமாக அவிழ்த்தான். அந்த இரண்டு ரூபா நோட்டை மனைவியிடம் நீட்டி வைத்தியரிடம் போகுமாறு கூறினான்.

”பணத்தை மறந்து விட்டேன் வைத்தியர் மருந்து தர மறுத்துவிட்டார்” என்றான்.

எங்கோ மணி ‘டாங் டாங்’ என்று அடித்து முடித்தது. கதிரவனும் வானத்தின் உச்சியை நோக்கி தாவ முயன்று கொண் டிருந்தான். காற்று உஷ்ணம் ஏறிப்போய் ஜுரம் பிடித்த அந்த குழந்தைகளின் அனல் கக்கும் மூச்சுடன் போட்டி போட்டிக் கொண்டிருந்தது. வேலைக்குச் சுணங்கி விட்டது. குழந்தைகளின் உடம்பைத் தொட்டுப் பார்த்தான். கொல்லன் பட்டடை மாதிரி கனன்றது. வெறி பிடித்தவன் போல வெளியேறினான். அவன் மனைவியும் நடக்க ஆரம்பித்தாள். கைக்குழந்தை கதறியது.

அன்னை போய்விட்டாள்.

வேலை ஸ்தலத்தில் சுணங்கியதற்காக அதிகாரி அவன் மீது சடைத்தார். இது மாதிரி சுணங்கினால் கல்தா கொடுத்துவிடுவதாக பயமுறுத்தினார். அதன் பிறகு.

“மேன்மை தங்கிய மகாராணியார் எங்கள் நாட்டிற்கு விஜ யம் செய்கிறார். அப்போது இங்கும் வருவார். எங்கள் ‘றெஸ்ட் ஹவுஸை’ புனர் நிர்மாணம் செய்யுமாறு அரசாங்கம் உத்திர விட்டுள்ளது. இன்றே வேலை ஆரம்பித்தாக வேண்டும்.” கூடி யிருந்த தொழிலாளிகள் பரக்கப் பரக்க விழித்தார்கள். அவர்கள் முகங்களில் ஒரு வித வேண்டா வெறுப்பும் அசூசையும் ரேகை கிழித்தன.

“மகராணியார் வருவது எங்கள் நாடு செய்த தவப் பாக்கியம். நகரம் பூராவும் நாம் தோரணமும் – தோப்பும் போட வேண்டும். வீதிகளெல்லாம் தீபாலங்காரம் எடுக்க வேண்டும். மேன்மை தங்கிய ராணியாருக்கு விஸ்வாசமுள்ள பிரஜைகளாக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” அவர் ஏதோ மேடைப் பிரசங்கிபோல அடுக்கிக் கொண்டே போனார்.

தொழிலாளர்களுக்கு இது ஒன்றுமாய்ப் புரியவில்லை. அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளமோ அரை வயிறு நிரம்பவும் போதாது. நித்தம் பட்டினியும் – பரிதவிப்பும் தான் வாழ்வெல்லாம். கடுமையான உழைப்பு அவர்கள் மென்னியைப் பிழிந்து உதிரத்தை குடித்துவிட்டிருந்தது. குமுறும் ஆத்திரம் – கொந்தளிக்கும் அதிருப்தி – இது தான் அவர்கள் வாழ்வுப் பிதுரார் ஜிதம். இந்த நிலையில் கடுமையாக உழைக்க வேண்டுமாம் – யாரோ ராணியார் வருகிறாராம். இதெல்லாம் அவர்களுக்கு அந்த உழைத்துக் கெட்ட பஞ்சையர்களுக்கு ஆத்திரத்தைத்தான் கொடுத் தது. முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டார்கள்.

அன்று வேலை முடிந்து அவன் வீடு திரும்பிக் கொண் டிருந்தான். ஏதாவது ரொட்டித்துண்டு வாங்கிப் போவதற்காக ஒரு கடைக்குள் புகுந்தான். யாரோ இருவர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்னை அறியாமலே உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ராணியார் இலங்கைக்கு வருகிறாராம். பொலனறுவைக்கும் வருவார். இங்கு றெஸ்ட் ஹவுஸில் ஒரு நாள் தங்குவார்” என்றார் ஒருத்தர்.

“ஆ. வருகிறாரா அந்த அம்மையை தரிசிக்கும் பேறு நமக்கெல்லாம் கிட்டும்” புளகாங்கிதமடைந்தவர் போல ராஜ விசுவாசத்துடன் மற்றவர் கூறினார்.

“ஆம் கிடைக்கும் – நிச்சயமாகக் கிடைக்கும். ஏழை மக்க ளின் கண்ணீ ரிலே, ரத்தக் குழம்பிலே அவர் பவனி வருவார்” அவன் வார்த்தைகள் சூடேறிக் கொண்டிருந்தன.

“அப்பா அப்படிப் பேசாதே, அவர் நம் மகாராணி”

“யாருடைய மகாராணி, இந்த நாட்டின் ராமசாமிகளின் – மீனாட்சிகளின் ராணியா? சுதுபண்டாக்களின் – சோமாவதிகளின் மகாராணியா? எங்களை அடக்கி ஆண்ட – ஆளும் கூட்டத்தின் ராணி அவர். மலாயாவிலும், கென்னியாவிலும் மனித வேட்டையாடும் சாம்ராஜ்ய தலைவெட்டிகளின் ராணி அவர்.”

“ஏன் நீ அவ்வளவு ஆத்திரப்படுகிறாய்?”

“ஆத்திரமா – எங்களை சுரண்டிய, சுரண்டும் பைசாச சாம்ராஜ்யத்தின் முடிசூட்டிய பிரதிநிதி இந்த ராணி. அவர்கள் ஆதிக்கம் இன்று கரைந்த மண்ணாகிறது. சாய்ந்துவரும் சாம்ராஜ் யத்தை, இடிந்துவரும் ஏகாபதிபத்தியக் கோட்டையை காப்பாற் றவே லட்சோபலட்சம் செலவில் ‘பரலோகபவனி’ ஆரம்பித்துள் ளார்கள். இங்கும் இவருக்கு தண்டனிட 20 லட்சம் ரூபாவாம். பொலநறுவா றெஸ்ட் ஹவுஸில் ஒரு இரா தங்குவதற்கு 85 ஆயிரம் ரூபா. கக்கூசுக்கு 40 ஆயிரம் ரூபா” அவன் கொதிப் பேறியவன் போல ஆக்ரோஷத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.

இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பனுக்கு தூக்கி வாரிப்போட்டது. ‘யாரோ ஒருத்தி, ஒரு இரவு தங்க 85 ஆயிரம் ரூபா” இது அவன் இதயத்தை பிளந்தது. ஜுரமேறிய குழந்தைகளின் ஞாபகம் வரவே ‘விர்’ என்று வெளியேறி நடந் தான். வீட்டை சமீபத்ததும் ஏதோ கூக்குரல் அவன் காதுகளில் ஒலித்தது. குடிசையைச் சுற்றி ஒரு சிறு ஜனக்கூட்டம் கூடியிருந் தது. திடீர் திப்பென்று மக்கள் கூட்டத்தை இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே போனான். குழந்தைகள் பிணமாகிக் கிடந்தன. அவன் மனைவி ‘சந்திரமதி ‘ போல தலைவிரி கோலமாக அந்த உயிரற்ற உடலங்களை கட்டித் தழுவிக் கதறிக் கொண்டிருந்தாள்.

அவன் சிறிது நேரம் மூச்சுப் பேச்சில்லாது நின்றான். ராணி யார் வருகை பற்றி கடையில் நடந்த பேச்சு – இங்கு வைத்திய வசதியில்லாது செத்துக் கிடந்த குஞ்சலங்கள் – அவன் சிந்தனை நீண்ட நேரம் ஸ்தம்பித்து நின்றது.

தொலைவிலுள்ள ஒரு சவக்காட்டில் அந்த இரு உடல்களும் – பெற்று வளர்த்த தங்கங்களின் பிரேதங்களும் தாக்கப்பட்டன. அதன் மீது ஒரு பிடி மண்ணை அள்ளி வீசினான். அவனது – அவனைப் போன்ற மனித ஜெந்துக்களினது அபிலாஷை, வாழ் வெல்லாம் வெறும் பிணக் காடுதான். அந்த மோனத்தை அறிந் தவன் போல அவன் வீடு திரும்பினான்.

வழக்கம் போல எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. ராணியார் வருகைக்காக ஆரம்பித்த திருத்த வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.

அன்று அவன் ‘றெஸ்ட் ஹவுஸி’ன் கூரையில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தான். கீழேயிருந்தபடி அதிகாரி ஏதோ அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். சிம்ப சொப்பனம் கேட்டது போல நடுங்குற்ற அவன் கால் தவறியது. உடல் புரண்டது. தரையிலே ஒரு பிடி ரத்தம் கொட்டிக்கிடந்தது. அவன் ஆஸ்பத்திரிக்கு மூர்ச்சித்த நிலையில் எடுத்துச் செல்லப் பட்டான்.

இரு வாரங்களுக்குள் ஆஸ்பத்திரியிலிருந்து சீட்டுக் கிழிந்தது. ஆறு மாதங்களுக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. இடிப்பு ஒடிந்துவிட்டிருந்தது.

டாக்டர்கள் பத்திரத்தோடு நஷ்டஈடு கோரி அவன் மனுப் போட்டான். கவலையீனம் காரணம் என்று அதிகாரிகள் தீர்ப்புக் கட்டினர். குடும்பத்துடன் பல நாட்கள் பட்டினி கிடந்த அவன் அதிகாரிகளிடம் கருணைக்காக மன்றாடினான். இறுதியில் ரூபா 250 கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அக்கம் பக்கத்து வீட்டாரிடம், லேவாதேவிக்காரிடம் அவன் பட்ட கடனுக்கு இது ‘ஆனைக்கு அவல்’ போன்றது.

விட்டுப் போயிருந்தார்கள். உணவிற்கே பணமில்லை. இந்த நிலையில் கொட்டாவிவிட்ட படியே திண்ணை ஓரத்தில் சாய்ந்து கிடந்தான். உயர்ந்து நெட்டையாக இருந்த இருவர் வந்தார்கள். அவர்கள் தொழிற்சங்க ஊழியர்கள். அவனுடன் பல மணிநேரம் பேசிவிட்டுப் போனார்கள். நல்ல நஷ்டஈடு கிடைக்கலாம் என்று ஒரு தெம்பு அவன் உச்சளத்தில் அவனை அறியாதே ஏற்பட்டது.

அன்று கடன் கொடுத்தவர்கள் வந்து அவனை பயமுறுத்தி வந்த அந்த ஊழியர்கள் சங்கம் மூலம் நடவடிக்கை எடுத்தார்கள். தொழிலாளிகள் கூட்டம் கூடி தக்க நஷ்டஈடு கொடாவிட்டால் செயலில் இறங்க நேரிடும் என்று அறிவித்தார்கள். இதைக் கேட்ட அரசாங்கம் சீறியது. முக்கிய தொழிலாளிகள் சிலரை நீக்குவதாக அறிவித்தல் செய்தது. இதை எதிர்த்து தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆரம்பித்தனர். இறுதியில் நிர்வாகம் பணிந்தது. தொழி லாளர்களை, நீக்குவதில்லை என்றும், சுப்பனுக்கு ரூபா 1000 நஷ்டஈடு கொடுப்பதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

தொழிலாளிகள் அன்று ஊர்வலம் போய்க் கொண்டிருந் தார்கள். வெற்றிவிழா நடத்தினார்கள். ஊர்வலம் சுப்பனுடைய குடிசையை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆர்ப்பரித்து புளகாங்கித மடைந்த சுப்பன் தன்னை சமாளித்தவாறு எழுந்து தெருவோரம்

வந்தான். நஷ்டஈடாக கிடைத்த ரூபா 1000 இல் ரூ 100ஐ எடுத்துக் கொண்டு ஊர்வலத்தின் முகப்புக்குப் போனான் தலைமை வகித்து வந்து கொண்டிருந்த தலைவரைக் கட்டித் தழுவிக் கொண்டே சங்க நிதிக்கு என்று கூறி ரூபா 100 நோட்டைக் கொடுத்தான். தொழி லாளர்கள் கோஷம் போட்டு ஆரவாரித்தனர்.

”நாம் ஒன்றுபட்டால் நமது சக்தியை யாராலும் ஒடுக்க முடியாது. உலகத்தைப் படைத்துக் காக்கும் மகாசக்தி நாம். தூங்கிக் கிடக்கும் உழைப்பாளி வர்க்கம் விழித்தால் ஆளும் வர்க்கம் அழியும். எமது ஒற்றுமையை வளர்க்க வேண்டும்” என்று தலைவர் கூறினார். தொழிலாளர் நெஞ்சில் ஒரு வீறு பீறிட்டது.

குருதி ஓட்டத்தில் ஒரு வீராப்பு கரை புரண்டது.

நாட்கள் ஓடின. ராணியார் வருகை ரத்துச் செய்யப்பட்டது. “அப்பாடா” என்றது அவன் உள்ளம். அன்னிய ராணி வருவதற்கு கொட்டி அளக்கப்படும் லட்சோப லட்சம் ரூபா மிஞ்சிவிடும் என்று அவன் பூரித்தான்.

மாதங்கள் கழிந்தன. ராணியார் வருகை பற்றி மீண்டும் நாடாளும் கூட்டம் அல்லோல கல்லோலம் செய்தது. இந்த செய்தி கேட்டு அவன் இருதயம் மீண்டும் குறுகுறுத்தது. ராணியார் வருகையை ரத்து செய்யுமாறு தொழிலாளர் சங்கத்தில் ஒரு தீர்மானமும் கொண்டு வந்தான்.

அன்று ஒருநாள் காலை. மணி 10 இருக்கலாம். நல்ல சுகம் இன்னும் இல்லை. படுத்துவிட்டபடியே மனைவியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

திடீர் தொப்பென்று ‘பூட்ஸ்’ சப்தம் கேட்டது. கதவை நோக்கி முகத்தை திரப்பினான். ஐந்துதாறு பொலீஸ் சூரர்கள் ‘திபு திபு’ என உள்ளே வந்தார்கள்.

‘நீதான் சுப்பனா?’

‘ஆமா, நான்தான்’

‘நீ தொழிற்சங்கத்தில் சேர்ந்திருக்கிறாயா?’

‘ஆமா’

“இன்னும் சில நாட்களில் மேன்மை தங்கிய மகாராணியார் இங்கு வருகிறார். அபாயகரமான பேர்வழிகளை வெளியேற் றும்படி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.”

“நான் ஒன்றும் அப்படிப்பட்டவனல்ல . நான் அப்பாவி” “நீ சங்கத்தில் சேர்ந்துள்ளாய். நீ பயங்கரமானவன்.”

அவன் உதடுகளில் சிரிப்பு பூத்தது. கேலிச் சிரிப்பு அது. சங்கத்தில் சேர்ந்தது குற்றமா? சங்கம் தானே அவனுக்கு வாழ் வளித்தது.

அவன் லாரியில் ஏற்றப்பட்டான். கணவனும் ஆசை மனை வியும் சட்டத்தால் பிரிக்கப்பட்டனர். அவள் கண்ணீர் துளிகளை சிந்திக் கொண்டே மரக்கட்டை போல விறைத்து நின்று கொண்

டிருந்தாள்.

லாரி ‘குபீர்’ என்று நகரத்தைக் தாண்டி ஓடியது. அவனுக்கு ஊர் பிரஷ்டம், அவன் ‘ஆபத்தானவன் – பயங்கரவாதி’ ‘சூரியன் அஸ்தமியாத சாம்ராஜ்யம்’ என்று இறுமாப்புற்ற ஏகாதிபத்தியம் அவனைக் கண்டு கலங்கியது. அந்த தொழிலாளியின் – அவன் போன்ற தொழிலாளி வர்க்கத்தினரில் தனது சாவின் முடிவைக் காண்கிறது சாம்ராஜ்யம்.

மயானத்தை லாரி தாண்டிக் கொண்டிருந்தபோது அவன் வெளியில் பார்வையைச் செலுத்தினான். அவனுடைய குழந்தைகள் புதைக்கப்பட்ட குழி அவன் கண்களில் பட்டது. கண்ணீரைப் ‘பொல பொல’ எனக் கொட்டினான். அவன் நட்ட ரோசாச் செடி பூத்து, மலர்க் கொத்துகள் தொங்கிக் கொண்டிருந்தன.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *