விரும்பாத விருந்தாளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 1,372 
 
 

சின்னானின் பெயர் சின்னத்துரை. என்னோடு நடுநிலைப்பள்ளி வரை படித்து அரசுப் பள்ளியில்கூட படிக்க வசதியின்றி அத்தோடு படிப்பை நிறுத்திவிட்டான். தேர்வுகளில் மதிப்பெண் பெறுவதில் நாங்கள் இருவரும் மாறிமாறி தர வரிசையில் முதல் மூன்று இடத்தில் இருப்போம். பெரும்பாலும் அவனே முதல் இடம். அப்போது வாடா போடா என்று தான் கூப்பிட்டுக் கொள்வோம். எல்லோரும் அவனை சின்னான் என்று அழைப்பார்கள். பிறகு நான் அவனை மற்றவர்களிடம் அவர் என்பேன். நேரில் காம்ரேட் என்பேன். இந்த கதையில் சின்னான் என்றாலோ அவர் என்றாலோ அல்லது அவன் என்றாலோ அவன் மீது அல்லது அவர் மீது நான் வைத்திருக்கும் மதிப்பில் எந்த குறைபாடுமில்லை என்பதை நீங்கள் உணரத்தான் வேண்டும். பெயரில் என்ன பிரமாதம் இருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சாக்ரட்டீஸ் என்பவன் ஏழாம் வகுப்பு படித்தான். நான் ஏழாம் வகுப்பும் எட்டாம் வகுப்பும் படிக்கும் போதும் அவன் ஏழாம் வகுப்பிலே படித்தான். ஆசிரியர் கேட்கும் எந்த கேள்விக்கும் வாய் திறக்கமாட்டான். சக மாணவர்களிடம் கூட அப்படித்தான். அவன் வீடு என் வீட்டிற்கு அருகில் இருந்தது என்பதால் பள்ளிக்கு எப்போதேனும் சேர்ந்து போகும் போதும் வரும் போதும் அத்தி பூத்தார்போல சில வார்த்தைகள் அவன் வாயிலிருந்து எனக்காக மலரும். ஒரு நாள் சாக்ரட்டீஸ் என்ற அந்த அத்தி மரம் வகுப்பிலும் பூத்துவிட்டது. ஆனால் அத்திப்பூ இல்லை. ஒற்றை ரோஜா. ஆசிரியர் திருக்குறளை இயற்றியது யாரென்று கேட்க, திருநாவுக்கரசர் என்றானே பார்க்கலாம். ஆசிரியர் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீத்தி அவனிடம் வந்து கரையேறி கட்டிப் பிடித்து ‘வாய் திறந்ததே போதும்டா’ என பாராட்டினார். அவர் பெற்ற இன்பத்தை பக்கத்து வகுப்பு ஆசிரியர்களும் பெரும்படி. சிலருக்கு அவர்களது பெயர் எதிர்மாறாக போய்விடுகிறது. எனக்கு அழகன் என்று பெயர் இருப்பது போல. நான்கூட என் பெயரை அக்லி என்று மாற்றிக் கொள்ளலாமென நினைத்து அந்த வார்த்தை மேலும் அக்லி ஆகிவிடும் என்று விட்டுவிட்டேன். நீங்கள் என்னை அப்படியும் அழைக்கலாம்.

தங்கையின் கல்யாணத்திற்கான நோட்டீஸ் கொடுத்தான் சின்னான். ஆம்: அழைப்பிதழை அவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். பத்திரிகை, இன்வெட்டேஷன் என்ற வார்த்தைகள் எல்லாம் இருந்தும் அதை அவர்கள் பயன்படுத்தாத முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. இதுவும் அத்திப்பூ போல ரோஜாப்பூ போல ஏதோ ஒரு பூவேதான்.

அந்த காலத்திலும் கூட மற்ற ஊர்களை ஒப்பிடும்போது எங்கள் ஊர் எல்லாவற்றிலும் சிறப்பாக இருந்தது.

பக்கத்து ஊரில் உள்ள தொழிற்சாலையில் வெளியூரிலிருந்து வந்து வேலை பார்த்த ஒர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இங்கேயே வீடு கட்டி வசித்து வத்தார்கள். அவருக்கு இரு மகன்கள் என்பதால் இரண்டு இஸ்லாமியக் குடும்பங்களாயின. தொழுகைக்கென்று இங்கே மசூதி இல்லை. வீட்டிலே தொழுது கொள்வார்களாம். அவர்களின் குழந்தைகள் பெரும்பான்மை இந்துகளின் இளைஞர்களோடு வாடா, போடா, மச்சி என்றுதான் பழகுவார்கள். தீபாவளி பலகாரம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். வேறு மத தெய்வத்திற்கு படைத்தது என ஒதுக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் ரம்ஜான் பிரியாணி யாருக்கும் தர மாட்டார்கள். ‘எங்கடா ரம்ஜான் பிரியாணி’ என கேட்டால், ‘எத்தன பேருக்குடா தாரது போங்கடா’ என்பான் இஸ்மாயில். அரட்டி மிரட்டி ஆளுக்கு ஒரு ஜாக்லெட்டாவது வாங்கி விடுவோம்.

ஓரே ஒர் ஐயர் குடும்பம். இந்த தலைமுறையின் தாத்தா எல்லோரையும் ‘வாடா’ போட்டுதான் அழைப்பார். பக்கத்தில் யாரேனும் போனால் ‘ஒத்திக்கோ ஒத்திக்கோ’ என ஒதுங்கச் சொல்லி கையால் சைகை செய்வார். அவரின் மகன் சுத்தமாக மாறிவிட்டார் அனைவரையும் வாங்க, போங்க என்பார். இப்போதிருக்கும் ஐயர் எங்களை ‘வாங்க ஐயா’ என்பார். எங்களின் நண்பனும் கூட.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆவணி அவிட்டத்திற்கு முதல் நாள் நகரத்துக்கு சைக்கிளில் போன என்னைப் வழியில் பார்த்த ராமகிருஷ்ண ஐயர் “என்னய்யா டவுனுக்கு போறிங்களா?” என்றார்.

“ஆமாய்யா” என்றேன்.

“நாளைக்கு ஆவணி அவிட்டம்”

“அதுக்கு என்னை பூணூல் போடச் சொல்றீரா?”

“அந்த குசும்புதான வேண்டாங்குறது. கந்தசாமி பிள்ள கடையில டொய் நூல் ஒரு கண்டு வாங்கிக்கிட்டு வரணுமே”

“சரி”

“காசு இப்ப இல்ல. வீட்டுல போய் எடுத்தாறேன் வெயிட் பண்ணுறிங்களா?”

“வாங்கியாந்து கொடுத்துட்டு சாயங்காலம் பணம் வாங்கிக்கிடுறேன்”

“மறந்துடாம வாங்கியாங்க அய்யா”

“நீர் கவலைப்படாம போகலாம். வேணுமுன்னு மறந்திட மாட்டேன் “

“அப்ப வேண்டாமுன்னு மறப்பீரோ”

“தேவ்டா தேவ்டா” என்று சைக்கிளை வேகமாக அழுத்தினேன்.

நாங்கள் பூணூல் அறுக்கும் பார்ட்டிகள் இல்லை. பூணூல் வாங்கிக்கொண்டு வந்து தரும் நண்பர்கள். ஆனால் பணம் வாங்கிக் கொண்டேன். இருநூறு குடும்பங்கள் உள்ள எங்கள் ஊரில் ஐயர் புள்ளி ஐந்து சதவிகிதம்.

சில கிருஸ்தவ குடும்பங்கள் இருக்கின்றன. இந்துக்களில் சிலர் மாதா கோவிலுக்குப் போவார்கள். திருவிழா என்றால் பெரும்பாலோர் அதில் கலந்து கொள்வதுடன் முன் முயற்சி கூட எடுப்பார்கள். நான் பள்ளியில் படிக்கும் போதே தேவலாயத்திற்குச் செல்வேன். “அருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர். . ” எனத் தொடர்ந்து அந்த வேதத்தை காதால் கேட்டே சொல்லுமளவுக்கு மனப்பாடம் செய்தவன். அப்போது இருந்த பாதிரியார் என்னிடம் அன்பாகப் பழகுவார். அவர் பரிசுத்த வேதாகமம் என்ற வேத நூலை எனக்குக் கொடுத்தார். கிருஸ்தவர்களும் இந்து கோவிலுக்கு வருவார்கள். என் நண்பர்கள் சிலர் கோவிலில் விபூதி வாங்கி பூசிக் கொள்வார்கள்.

ஊரில் தெருக்கள் என்றெல்லாம் கிடையாது. வடகாடு, நடுக்காடு, தெற்கு காடு என்ற மூன்று பகுதியில் தெற்கு காட்டில்தான் முடுக்குவெளி என்ற சேரி இருக்கிறது. ஊரில் எங்கும் வரிசையாக வீடுகள் கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் சில இடங்களில் ஏழெட்டு வீடுகள் சாரியாய் அமைந்திருக்கும். அடக்குமுறை ஆதிக்க சக்தியெல்லாம் இங்கு அவ்வளவாக கிடையாது. சார் மன்னர் ஆட்சி காலத்தில் ருஷ்யாவில் இருந்ததைப்போல நிலப் பிரபுக்கள் இருந்திருந்தால் ஒருவேளை அடக்குமுறை தலை தூக்கியிருக்கலாம். கிராமக் குடிகலெல்லாம் நடுத்தர மற்றும் வறுமையில் போராடும் மக்கள்தான். குடியானவர்கள் என சொல்லிக் கொள்ளும் பாதி பேர் கூலி வேலைக்கு சேரி வாழ் மக்களோடுதான் செல்வார்கள். மனதிற்குள் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை மெல்ல நீர்க்க வைக்கும் சக்தி சமத்துவத்திற்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அது மேல் நிலையோ கீழ்நிலையோ. நேரு வீட்டு வசதி திட்டத்தின்கீழ் வரியவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு முன் வந்தபோது இரண்டு மூன்று கடைகள் கொண்ட கடைத்தெரு என அழைக்கப்பட்ட வடகாட்டு மையப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தி சேரி வாழ் மக்களுக்கு இருபது குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்தபோது சேரி நடுமனையில் வருகிறது என விரல் விட்டு எண்ணுமளவில் சிலர் அரல் புரலாக முணுமுணுத்தார்களே தவிர யாரும் எதிர்க்கவில்லை. இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வி.ஐ.பி.கள் என சொல்லிக் கொள்ளும் சிலர், பஞ்சாயத்து தலைவர் பதவி ஆசையில் எப்பொதும் இருப்பதால் நேரடியாக எதிர்க்க முன் வராததுதான் அது. அவர்கள் யாருக்கு வோட்டு போடுகிறார்களோ அவர்களே தேர்தலில் வெல்வாரென்றால் வேறு வழி. புதிய வீடுகளுக்கு சீட்டுப்போட்டு இருபது பேரை தேர்ந்தெடுத்து வீடு ஒதுக்கியது போக பத்து பனிரெண்டு குடிகளே அப்போது சேரியில் இருந்தார்கள். அதில் சின்னான் குடியிருப்பும் அடங்கும்.

நான் கடைதெருவில் நண்பர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருந்தபோது எனக்கும் நண்பன் எழிலுக்கும் தங்கையின் திருமணப் பத்திரிகை கொடுத்து அழைத்தான் சின்னான்.

அவன் நகர்ந்ததும் “ஏய் என்னடா உங்களுக்கு மட்டும் பத்திரிகை கொடுத்துட்டுப் போறான் சின்னான்” என்றான் ஒருவன்.

“ரெண்டு பத்திரிகைதான் இருந்திருக்கும் அதான் ரெண்டு பேருக்கு மட்டும் கொடுக்குறான்” மற்றொருவன்.

“டேய் ஃபூல்ஸ். அவன் எங்களோட படிச்சவன்டா அதான் கொடுக்குறான்” என்றேன் நான்.

“மொய் பணத்த இப்பயே கொடுத்து அனுப்பி இருக்கலாமில்ல”

“மேரேஜுக்கு போவாம இப்பயே எப்டிடா கொடுக்கிறது?” என்றேன்.

“மேரேஜுக்கு அங்கப் போறியா?”

“ஆமான்டா. போப்போறேன். போன என்ன. அவனும் மனுஷன் தான்டா”

“எங்க வீட்டுல யாரு இப்படி நோட்டீஸ் கொடுத்தாலும் கையோட அப்பயே மொய் பணத்த வச்சிக் கொடுத்துடுவோம். அங்க எல்லாம் போமாட்டோம் .” என்றான் நாட்டாமையென அழைக்கப்படும் ஒரு நண்பன்.

நானும் நண்பனும் திருமணத்திற்குப் போனோம். முகூர்த்தம் பத்தரையிலிருந்து பனிரெண்டுக்குள். பதினொன்னரை மணிக்குதான் போனோம். நாங்கள் இதுவரை பார்த்திராத சூழலில் திருமண வீடு இருந்தது. அப்போதெல்லாம் கிராமப் புறங்களில் திருமண மண்டபங்கள் அருகில் கிடையாது. விசேஷங்கள் பெரும்பாலும் வீட்டில்தான் நடக்கும். அரிதாய் கோவிலில் நடத்தினாலும் அங்கு போதிய இட வசதி இருக்கா தென்பதால் விருந்துக்கு வீட்டிற்கு வந்து விடுவார்கள். வீட்டின் முன்பு தென்னங் கீற்றுக்களைக் கொண்டு பந்தல் போடுவார்கள் வரிசையாக வீடு இருந்தால் தொடர்ந்த வீடுகளையும் அடைத்து நீளமாக பந்தல் அமைந்திருக்கும். கீற்றுகள் கீழே தெரியாத வகையில் சலவைத் தொழிலாளி வெள்ளை கட்டுவார். அதற்கென்று வேட்டிகளை நீள வாக்கில் தைத்து வைத்திருப்பார். மேற்கூரை ஓரே வெள்ளை நிறமாக இருக்கக் கூடாதென்பதற்காக பல வண்ணங்களில் பேப்பர்களை வாங்கி வந்து பல்வேறு வடிவங்களில் வெட்டி தோரணமாக சணல் இழையில் கட்டி பந்தலை அலங்கரிப்பார்கள். அதை பல டிசைனில் நறுக்குவதற்கென்றே தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். இதெல்லாம் அப்பகுதியில் பழக்கப்பட்ட நபர்கள் பங்காளிகள் முன்னெடுத்து செய்வார்கள். திருமணம் என்றால் ஒருவாரம் முன்பாகவே இந்த வேலைகள் தொடங்கி விடும். குறைந்தது அந்த காலத்தில் பத்து நாட்கள் திருமண வீடு வேலை, விருந்து, சீட்டாட்டம் என ஜேஜேயென இருக்கும். தென்னங்குலைகள் பனங்குலைகளை காய் உதிராமல் கயிறு போட்டு வெட்டி இறக்கி பந்தலின் முகப்பு மற்றும் பார்வைப்படும் பக்கவாட்டு பகுதியில் கட்டித் தொங்கவிட்டு அலங்கரிக்கப்படும் . பந்தலின் முன் பகுதியே ஒரு சிறிய அறைபோல உருவாக்கி வரவேற்பு பகுதியாக்கப்படும். கீற்றுக்களை வளைத்து நெளித்து வகை வகையான வடிவங்களாக்கி முகப்பு அலங்கரிக்கப்படும். இப்படியெல்லாம் திருமண வீட்டை நாங்களே அலங்கரித்தும் பார்த்தும் பழக்கப்பட்ட எங்களுக்கு சின்னான் வீ்டும் திருமணப் பந்தல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதை நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் இவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என நினைக்கவில்லை. அது எளிமை இல்லை. ஏழ்மை.

பந்தல் போட்டிருந்தார்கள் வெள்ளைகூட கட்டவில்லை. பக்கவாட்டில் அடைப்பெல்லாம் கிடையாது. ஓவென்று இருந்தது. எங்களைக் கண்டதும் சின்னானின் தம்பி ஒரு பெஞ்சை தூக்கிக் கொண்டு வந்து பந்தலில் பக்கமாகப் போட்டு அமரச் சொன்னார். நாங்கள் கீழே மற்றவர்களுடன் உட்கார்ந்து கொள்ளப் போனபோது “வேண்டாம் காம்ரேட் பெஞ்சிலேயே உட்காருங்கள்” என வற்புறுத்தினார் சின்னான். பெஞ்சின் காலி இடத்தில் சிறுவர்கள் சிலர் ஓடிவந்து உட்கார்ந்து கொண்டார்கள். பந்தலில் இருந்த ஒருவர் எழுந்து வந்து அவர்களை அடித்து விரட்டினார். ‘இருக்கட்டும் ஏன் விரட்டுறிங்க’ என்றேன். அவர் கேட்பதாக இல்லை அவர் விரட்டிய விரட்டலில் பிறகு எந்த சிறுவனும் பெஞ்சில் வந்து உட்கார முயற்சிக்க வில்லை. ஒலிபெருக்கியை போட்டு யாரும் பேசிக்கொள்ள இயலாத வகையில் காதை கிழிக்க வைத்திருந்தனர். அவர்களுக்கு பிடித்தமான எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் இசைக்கப்பட்டன. அவரே நேரில் வந்து பாடிக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு.

பந்தலுக்கு பின்புறம் இரண்டு பெண்கள் திருமண விருந்து தயாரித்துக் கொண்டிருந்தனர்.

“வெயிலா இருக்குடா. மேல எதாவது மறப்பு வச்சித்தாடா” என்றாள் சின்னானின் தம்பியிடம் ஒரு பெண்மணி.

“இப்ப எங்கப் போறது பந்தப் போட. ஏன் நீங்க வெயில்ல நின்னு வேல செஞ்சதே இல்லையா? மெதல்ல சமயல பாருங்க” என்றார்.

“மடப் பய மொவன! புது சீல வெய்யிலுல வேர்வ பட்டு பழசாயிடுண்டா” என அதட்டால் விட்டாள்.

பின்னர் பந்தலில் இருந்த இருவரை அழைத்து பக்கத்து வீடுகளில் இருந்து வாசலில் கதவாகப் பயன்படுத்தும் இரண்டு தட்டிகளை எடுத்துக்கொண்டு வந்து இரு மரங்களை நட்டு பந்தலோடு சேர்த்து நிழலை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

சின்னான் வீட்டு ஓரமாக நின்று கொண்டு என்னை அங்கு வருமாறு சைகை செய்தார். நான் மட்டும் எழுந்து போனேன்.

“வெத்ல பாக்கு வாங்க பணம் இல்ல. ஒரு இருபது ரூபா தாங்க. மொய் விழுந்ததும் கொடுத்துடுறேன்” என்றார்.

நான் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொடுக்க முயற்சித்து பந்தல் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு கொடுத்தேன்.

“இருபது ரூபாய் போதும் தோழர்” என்றார்.

“பரவாயில்லை வச்சிகிடுங்க” என்றேன்.

“மொய் விழுந்ததும் தந்திடுறேன். நன்றி தோழர்” என்றார்.

பந்தலில் உள்ள விருந்தினர்களுக்கு தேநீர் கொடுத்தார்கள் எனக்கும் எழிலுக்கும் இரண்டு கலர் பாட்டிலில் கொண்டு வந்து தந்தார்கள். பார்த்தால் யாரும் கேட்பார்கள் என்று யாருக்கும் தெரியாமல் அதை வீட்டுக்குள் எங்கோ பதுக்கி வைத்திருந்திருக்கிறார் என தெரிந்து கொண்டேன். கலர் என்றால் புரியாதென நினைக்கிறேன். எங்கள் பகுதியில் அந்த காலத்தில் டொரினோ, லிம்கா, கோக் என்கிற கோக்க கோலா பானமெல்லாம் கிடையாது. உள்ளூரில் தயாரிக்கின்ற சோடா, ஜிஞ்சர், கலர் அவ்வளவுதான். சோடா செரிமானத்திற்கு, இஞ்சியில் தயாரிக்கும் ஜிஞ்சர் மேல் வலியை போக்க. அதுதான் உடல் வலிக்கு. கலர் ஸ்டைல் ட்ரிங்க்ஸ். அதை கோலா என்றும் சிலர் அழைப்பார்கள். கலர் என்பது ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தண்ணீரில் கருப்பு சாயத்தை ஊற்றி

சாக்ரினை கலந்து கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை எற்றி வைத்திருப்பார்கள். நகரங்களில் விற்பனையாகி ஒரு முறையோடு தூக்கி எறியும் கோக், லிம்கா, டொரினோ காலிப் பாட்டில்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து அந்த பாட்டிலில் உள்ளூர் சோடா, கலரை அடைத்து விற்பார்கள் பார்ப்பதற்கு ராயல் ட்ரிங்க்ஸ் போல இருக்கும் உள்ளே சரக்குதான் சாக்ரின் தண்ணீர். ராவாக அடிக்க விரும்பாத சரக்கடிக்கும் மதுப்பிரியர்களுக்கு அதுதான் மிக்ஸிங்க். ஆனால் அதில் பூச்சிக் கொள்ளி மருந்து கலக்க மாட்டார்கள் என்பது உண்மை. அதை திறப்பதற்கேன்றே தனிப் பயிற்சி தேவைப்படும். கொஞ்சம் அலட்சியமாகத் திறந்தால் கேஸ் பொங்கி முகத்தில் அடிப்பதோடு முக்கால் வாசி கருப்பு தண்ணீர் வீணாகி பாட்டிலின் அடியில் கிராம பாஷையில் சொன்னால் கொஞ்சுன்டு கிடக்கும். திறந்ததும் கேஸ் சீறி அடிக்க முற்பட்டால் பாட்டிலை லேசாக கீழ் புறம் சாய்த்தால் காற்றை விட கனமான அந்த கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு வெளியேறி கலர் சாந்தமாகி விடும். குடிக்கும் போதே சுள் சுள்ளென்று நாக்கில் குத்தும். குடித்தபின் கால் மணி, அரை மணி நேரம் கழித்து அடி வயிற்றிலிருந்து கிளம்பும் கேஸ் மூக்கில் வந்து குத்தி ஆளையே ஒரு ஆட்டு ஆட்டிவிடும். அது அப்போது ஐம்பது பைசா. கோக் நகரத்தில் ஐந்து ரூபாய். கதையை விட்டு வெளியில் போனால் கூட இதையெல்லாம் நகரவாசிகள் தெரிந்து `கொள்வது போது அறிவை வளர்க்கலாம் என விபரித்தேன். சரி கதைக்கு வருவோம். கலர் குடித்தோம்.

பந்தலில் சிலர் பட்டச் சாராயம் அடித்திருந்தது அவர்களின் நடவடிக்கை மூலமும் குப்பென வந்தடிக்கும் வாடை மூலமாகவும் பரிமாறும் தேநீரை வேண்டாம் என மறுப்பது மூலமும் தெரிய வந்தது. அதொன்றும் தப்பில்லையென்னும் அளவுக்கு சமுதாயம் மாறிவிட்டது. பணக் கொழுப்பு உள்ளவன் ஜானி வாக்கர் அடிக்கிறான். சாப்பாட்டிற்கு வழியில்லாதவன் பட்டச் சாராயம் அடிக்கிறான். எல்லாம் போதைதான். எல்லா விசேஷத்திலும் தான். தண்ணி அடிக்காதவனை எவன் மதிக்கிறான் இப்போ. தனியாக உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

பந்தலுக்கு வெளியே வீட்டை ஒட்டினார் போல் சின்னானின் தம்பிக்கும் மாப்பிள்ளையின் தமக்கைக்கும் கடுமையான வாக்கு வாதம் நடப்பது ஒலிபெருக்கி சத்தத்தின் ஊடே அரசல் புரசலாக கேட்டது. பந்தலில் இருந்த பெரியவர் ஒருவர் “முகூர்த்த நேரம் முடியப் போவுது. உங்க பஞ்சாயத்த அப்பறம் வச்சிக்கிடலாம். போண்ணு மாப்ளைய ரெடி பண்ணுங்க” என முகூர்த்த நேரம் முடிந்து போனது அறியாமலே கூவினார். மதியம் பனிரெண்டு மனி கடந்து காலம் எமகண்டத்தில் தலை தெரிக்க ஓடியது. யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லையா ? தெரியாதா? தெரியாது.

அந்த கசமுச சண்டையில் மேலும் சிலர் கலந்து கொண்டு ஒலிபெருக்கி சப்தத்தை கம்மி பண்ணியது. பந்தலில் இருந்த ஒருவர் “போண்ணு மாப்ளய உக்கார வைக்க ஒரு பெஞ்சு கொண்டாங்கப்பா” என்றார்.

“இப்ப கேட்டா பெஞ்சுக்கு எங்க போறது?” இன்னொருவரின் பதில்.

நாங்கள் உட்கார்ந்திருக்கும் ஒரு பெஞ்சைத் தவிர வேறு இல்லையென்பதை அறிந்து கொண்ட நான் நண்பனிடம் குசுகுசுத்தேன். பெஞ்சை காலி செய்து வெளியில் வந்து சின்னானை தனியே அழைத்து ஆளுக்கு ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை கையில் திணித்துவிட்டு வெளியேறினோம்.

நாங்கள் திருமணத்திற்கு சென்று வந்த கதையை கேட்ட நண்பர்கள் ஒரு வார காலம் எங்களை கிண்டல் அடிக்க கரு கிடைத்ததில் மகிழ்ந்தனர். நானும் எழிலும் அவர்களின் வறுமை நிலை குறித்து ஒரு வார காலத்திற்கு விடாமல் அதையே விவாதித்தோம். நாங்கள் பாதியில் எழுந்து வந்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்தோம். அவர்கள் உழைத்து உழைத்து நாற்பது ஐம்பது வயதிலேயே கிழடு தட்டி சீக்கிரமாக செத்து போகிறார்கள். பரம்பரை பரம்பரையாய் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உயரவில்லையே ஏன்? உழைப்பு உயர்வைத் தரும் என்பதெல்லாம் பொய்தானா? உணவகத்தில் பெஞ்ச் துடத்த பில்கேட்ஸ் பணக்காரணாக ஆயிட்டான். உழைப்புதான் அதற்கு காரணம் என கட்டுரை எழுதுகிறார்களே. எல்லா பெஞ்ச் துடைப்பவர்களும் உழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிகமாகப் போனால் சர்வர் ஆகலாம். அதுதான் எதார்த்தம். ‘பெஞ்ச் துடைத்தபோது போட்டிருந்த உடையையா பில்கேட் இன்னும் போட்டுருக்கார். சின்னான்களுக்கும் வசதியும் வாய்ப்பும் கிடைத்து விட்டால் இன்னும் சிறப்பாக இருப்பார்கள். ஏழ்மைதானே இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது. ஜாதியோ, மதமோ, மயிரோ, மண்ணாங்கட்டியோ இல்லை. நாலு காசு வந்துவிட்டால் எல்லா நாயும் வாலாட்டும்’. நண்பனின் ஒரு இடத்து காரசாரமான விவாத முடிவு இது.

நாங்கள் பாதியில் எழுந்து வந்தமைக்கு சின்னான் ஒன்றும் வருந்தியதாகத் தெரியவில்லை. திருமணம் முடிந்து நான்கு ஐந்து நாள் கழித்து கடனாக வாங்கிய ஐம்பது ரூபாயை திருப்பிக் கொடுத்தபோது கல்யாணத்திற்கு வந்ததற்கு நன்றி தோழர் என தனித்தனியே நன்றி சொன்னான். ஒருவேளை நாங்கள் விரும்பாத விருந்தாளியாக இருந்திருக்கலாம். ஆனால் வேண்டாத விருந்தாளி இல்லை என்பதை உணர முடிந்தது.

சம்பவங்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. எல்லாம் நினைவில் நிற்பதில்லை. பிறந்தநாள், திருமண நாள் கூட மறந்து போகின்றன. சிலருக்கு ஏன் வருகிறது என எரிச்சல் ஊட்டுகிறது. ஜெயகாந்தன் ஒரு சிறுகதையில் சொன்னது போல “வாழ்கிறார்கள் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது” என முடிவு கட்டி விடவும் முடியாது. ஏனெனில் வாழ்வென்பது பெரும் துயர். நீரோட்டத்தை எதிர்த்து நீந்த வேண்டிய கட்டாயத்தில் எல்லாம் மறந்து போகின்றன. அவை ஜன நடமாட்ட கடற்கரை வெளியில் பதிந்த காலடித் தடம் போன்றது. அடிமேல் அடிபட்டு அடியில் பட்ட அடி அழிந்து போகிறது. கஷ்டங்களுக்கு நடுவிலும் சில பெண்கள் திருமண நாளை நினைத்து வைத்திருந்தாலும் பெரும்பாலும் புதுச் சேலையோடு அது நிறைந்து போகிறது. கண் மண் தெரியாமல் ஓடுகிறோம். எல்லாம் பின்னோக்கி ஓடும் வேகத்தில் அடையாளம் காணவோ நிலை நிறுத்தவோ முடியாத நிர்ப்பந்தங்கள்.

சின்னான் வீட்டு திருமணத்திற்கு பிறகு எத்தனையோ திருமணங்களுக்கு சென்று வந்துள்ளேன். நண்பர்கள், உறவினர்கள், அலுவலக பணியாளர்கள், தெரிந்தவர்கள் என்று. அவற்றில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தாலி கட்டும்போது அட்சதை தூவுவது, மொய் எழுதுவது, விருந்து உண்பது என்று. பாய் வீட்டு திருமணம் என்றால் பிரியாணி, உயர் அதிகாரி வீட்டு திருமணத்தில் பஃபே சிஸ்டம், ராமசாமி திருமணத்தில் கூட்டு எல்லாமே நன்றாக இருந்தது. மோகன் திருமணத்தில் சப்பாத்தியை ரொட்டி போல கடித்து தின்றேன். இவைகள் தவிர வித்தியாசம் பெரிதில்லை. ஆனால் இந்த திருமணம் நினைவில் நிற்க வைக்கும் படியாக அமைந்து விட்டது.

திருமண மண்டபம் உள்ள தெருவோடு பக்கத்தில் உள்ள தெருக்களையும் அடைத்து திருமணத்திற்கு வந்தவர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கோவைக்கே உரித்தான தொழிலதிபர்களின் காண்டசா கிளாசிக் கார்கள்தான் அவற்றில் அதிகமாக இருந்தன. மண்டப வாசலில் ஆடாமல் ஒரு யானை அசைந்து கொண்டிருந்தது. எனக்கு என்னமோ யானையை அன்றுதான் முதன் முதலில் பார்ப்பதுபோல இருந்தது. அதற்கு போர்த்தப்பட துணியே பல ஆயிரம் பொரும். அதில்தான் மாப்பிள்ளையை அழைத்து வந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். அந்த யானை மதம் கொள்ளாது என்ற நம்பிக்கையில் பாகன் அதனை தனியே விட்டு விட்டு தூரத்தில் அங்குசத்துடன் நின்றுகொண்டிருந்தான். மண்டப வாசலுக்கும் யானை நிற்கும் இடத்திற்கும் நடுவில் பக்கத்துக்கு பத்து பேராக நின்றுகொண்டு காது கிழியும் அளவில் செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்தனர். அந்த வலாந்தலை பக்க வாசிப்பின் பின்புறம் இருமருங்கும் ஒன்றுவிட்ட

ஒன்றாக கேரளத்து ஆண்களும் பெண்களும் முன்னும் பின்னும் அசைந்து ஆடிக்கொண்டு ஜால்ரா கருவியை இசைத்தவாறு இருந்தனர். உள்ளே நுழைந்ததும் மண்டபம் நிறைந்த கூட்டம். வசதி படைத்த மனிதர்களாக எல்லோரும் தெரிந்தனர். இங்கொன்றும் அங்கொன்றுமாகவே சாதாரணமானவர்களை காண முடிந்தது. கோவையில் உள்ள பெரிய திருமண மண்டபம் அதுதான். முழுவதும் குளிரூட்டப்பட்டது. மாப்பிள்ளையை அழைத்து வந்தார்கள். கோவில்களில் உற்சவர் வெளிப் பிரகாரம் வரும்போது குடை பிடித்து வருவார்களே அதேபோல் ஜில்லிட்ட மண்டபத்துக்குள் வண்ணக் குடை பிடிக்க வந்து பல லட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் அமர வைத்தனர். ஒன்பது தோழிகள் ஓரே நிற சேலைகள் அணிந்து கூட வர அதிகமான நகை அணிவித்து அழகிய பெண்ணை அலங்கோலம் செய்யாமல் எளிய குறைந்த நகை அணிவித்து தமிழ்ப் பெண்ணைப் போல மணமகளை அழைத்து வந்து மணமகனுக்கு துணையாக்கினர். உள்ளே நாதஸ்வரம், மேளம் முழங்க பெரிய பெரிய டிஜிட்டல் திரைகளில் விழா ஒளிபரப்பு தெரிய இவ்வளவு பிரபாண்டமான திருமணத்தை இன்றுதான் நான் பார்ப்பது போல பார்க்கும் போது திருமணம் இனிதே நடந்தேறியது. உயர்தர உணவு வகைகள். எல்லாம் பஃபே சிஸ்டம். உணவு உண்டு ஒரு ஐஸ்கிரிமோடு டைனிங் ஹாலைவிட்டு மண்டபத்துக்கு வந்த என்னை ஓடி வந்து கட்டி பிடித்து ஆரத்தழுவி நன்றி தோழர் நன்றி என்றான் சின்னான். கூட வந்த அவனது தங்கை வாங்க சார் வாங்க என அன்பொழுக அழைத்தாள். கரைகளின் உச்சியை தொட்டுக்கொண்டு மகிழ்ச்சி வெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சின்னானை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா முப்பது ஆண்டுக்கு முன்னர் தங்கையின் திருமணத்திற்கு நோட்டீஸ் கொடுத்தானே அதே சின்னான். அவனது தங்கை மகன் திருமணத்திற்கும் என்னை இன்வெட் பண்ணியிருந்தான். நானும் கோவையில் பணிபுரிந்து வந்தமையால் கலந்து கொள்வதில் சிக்கல் இல்லாமல் போனது.

இந்த வசதியும் வளர்ச்சியும் எப்படி வந்தது? சின்னான் தங்கையை திருமணம் செய்து கொண்டவன் குடித்தே கல்லீரல் அழுகி இரண்டாண்டிலேயே செத்து தொலைந்துவிட்டன். அவனின் மிச்சம் ஒரு ஆண் குழந்தை. விரக்தியடைந்த சின்னான் தங்கையோடு உறவினர் ஒருவர் ஏற்கனவே வசித்து வந்த திருப்பூருக்கு குடிவந்து பனியன் கம்பெனியில் வேலை செய்ய, சின்னானின் தங்கை பூக்கட்டி விற்க தெருவில் சரியாக யாரும் வாங்காததால் ஒரு கோவிலின் முன் விற்று வந்தாள். ஓரளவு வியாபாரம் சூடு பிடிக்க அண்ணனும் தங்கையும் வாயை வயிற்றைக் கட்டி பையனை படிக்க வைத்து சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்ச்சி பெற்று மும்பை ஐ.ஐ.டி.யில் எம்.பி.ஏ முடித்து திருவனந்தபுரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறான். கோவையிலும் அதற்கு பல கிளை நிறுவனங்கள் உள்ளன. அவனது உழைப்பு, அர்ப்பணிப்பு, குணத்தைக் கண்ட நிறுவனத் தலைவர் தனது மூன்று பேத்திகளில் கடைக்குட்டியை அவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

சின்னான் மற்றும் அவன் தங்கையிடம் விடைபெற்று இருசக்கர வாகனத்தில் இருப்பிடம் வந்தபோது சாலையின் ஒரு புறம் சற்றுத் தள்ளி நின்ற ஓர் ஒற்றைப் பனை மரம் என்னிடம் மௌனம் பேசியது. திருமணமே செய்து கொள்ளாத சின்னான். மறுமணம் செய்துகொள்ளாத அவன் தங்கை. யார் அதில் இது? அதன் பின்னே தூரத்தில் ஒரு பனந்தோப்பும் கண்ணில் பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *