கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 1,108 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘முடமான இளமறியைத் தோளில் ஏந்தி, சகல உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும்படி போதித்த போதிமாதவனே! அன்பின் அறவழி போதித்த அண்ணலே! நீங்கள் கற்பித்து நிலை நிறுத்திய சீலவழி நடக்கும் அந்தப் பிக்குவானவர், என் வேண்டுதலின் பிரகாரம், இன்றாவது என் இல்லம் வந்து தானம் ஏற்றுக் கொள்வாரா? முன்பு ஒரு சமயம், நீங்கள் பரிநிப்பாணம் அடைவதற்கு முன்னர், பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இலர் என்ற போதனையைச் சாதனையில் காட்ட, நீங்களே நகர சோபினி ஒருத்தியின் இல்லம் சென்று அவளிட்ட தானத்தை ஏற்று அருள்புரிந்தீர்கள் . அந்த நகர சோபினிக்கு ஏற்பட்ட பாக்கியம் போல் எனக்கொரு பாக்கியம் கிடைப்பது எப்போ?’- புத்தர் சிலை மீது மலர்கள் தூவி, கல்யாணி தன் பிரார்த்தனையை முடித்து விழி திறந்தாள்.

இருப்பினும், அவள் மனசிலே அமைதி வசமாகவில்லை. இனந்தெரியாத அலைக்கழிவு.

எதையோ சடுதியாக நினைத்துக் கொண்டவளைப் போல, உள்ளே திரும்பி, “ஊர்மிளா…! ஊர்மிளா….!” என்று அழைக்கிறாள்.

ஊர்மிளா வருகிறாள்…”அழைத்தீர்களா, அம்மா?”

நொந்து தேய்ந்த குரலில் கல்யாணி கூறினாள்; “அழைத்தேன், ஊர்மிளா. என் மனசில் அமைதியே இல்லையடி. சூறாவளியின் வசப்பட்ட துரும்பாக என் சித்தம் தத்தளித்துக் கலங்குகிறது…என் இல்லத்தில் தானம் ஏற்கவேண்டுமென்று புனிதராம் பிக்குவை அழைத்தாயல்லவா?”

“அழைத்தேன். நேற்றுடன் மூன்றாவது தடவையாக விஹாரஞ் சென்று நினைவுபடுத்தினேன்.”

“என்ன சொன்னார்? அழைப்பினை ஏற்றாரா?”

“மறுக்கவில்லை. முறுவலித்தார். ‘தானம் ஏற்க நிச்சயம் வருவேன். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாது; அதற்கான வேளை வரும்; அப்போது நானே வருவேன்; அது அதற்கு ஒவ்வொரு வேளை இருக்கிறது’ என்றாரம்மா.”

‘அது அதற்கு வேளை இருக்கிறது…!’

வாய் முணுமுணுக்க, சோர்வோடு பெருமூச் செறிந்தாள் கல்யாணி.

‘அந்த அரிய வேளை எப்போதுதான் வரப்போகிறதோ? பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது? பகவானே! எனக்குக் கடைத்தேறும் பாக்கியம் கிடைக்காதா?’

எஜமானியைப் பார்க்க ஊர்மிளாவுக்குப் பரிதாபம் மேலிட்டது. ஆனாலும், அவளது சுய பச்சாதாபம் விசித்திரமாயிருந்தது. அது அதற்கு ஒரு வேளை இருப்பது போல, அவரவர்க்கும் ஒரு தொழில் இருக்கிறது. மீறி நடத்தலாகாது என்பது போன்ற ஓர் எண்ண அலை.

‘பணத்திற்காக உடலின்பம் நல்குவதில் என்ன இன்பம் இருக்கிறது என்று கேட்டு சலிப்புக் கொள்கிறாள் என் எஜமானியம்மாள். பரத்தமைத் தொழிலைக் குலநெறியாகப் பயிலும் இவளா இப்படிக் கேட்கிறாள்! எனக்கு மட்டும் இவளுக்கிருக்கிற வனப்பும்-வாளிப்பும்-வீங்கு கட்டும்-பொங்கு கவர்ச்சியும்-சுகந்தமும் கருதியும் இருக்குமேயானால்–நாடிவரும் ஆடவரையெல்லாம் வேல்விழியால் வீழ்த்தி, மயக்கு மொழியால் மஞ்சத்திலே புரட்டி, குருத்துடலின் பட்டுத் தழுவலிலே அடிபணிய வைத்து, அவர்களை விடுதலை செய்வதற்குத் திறையாகச் சொத்துகள் முழுவதையும் சூறையாடி விடுவேன். ஒருவகையில் பார்த்தால் நகர சோபினிகளுக்கு க்ஷத்திரிய வாழ்க்கையைத்தான் மேற்கொண்டிருக்கிறார்கள். க்ஷத்திரிய வீரன் எதிரியைச் செருக்களத்திலே சந்திக்கிறான்; பொருதுகிறான்; வெற்றி கொள்கிறான். அந்த வெற்றியே அவனுடைய இன்பமாகவும் அமைகிறது. நகர சோபினிகளுடைய செருக்களம், உறுத்தாத மென்பஞ்சு மஞ்சங்கள்! அதிலே ஆணின் ஆண்மையைச் சாய்த்து வெற்றி கொள்ளுகின்றார்கள். அந்த வெற்றி கசக்கவா செய்கின்றது?’

‘பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கின்றது?’ ஊர்மிளா மனத்தில் மீண்டும் ஒலிக்கிறது எஜமானியின் பச்சாதாபக் குரல்.

‘இப்படிக் கேட்கிறாள் அவள்-என் எஜமானி. தான் பெறும் இன்பத்திற்குப் பரியப் பணமும் பெற்றுச் சுகிப்பதனால் இன்பம் இரட்டிப்பாகின்றது. இடையில், பற்றுகள் இற்ற துறவியைப் போன்று வார்த்தைகளை வீணே வீசுகின்றாள். இதுவும் ஒருவகை அகம்பாவமே…எங்கே சம்பத்துகள் குவிந்து கிடக்கின்றதோ, அங்கே அகம்பாவமும் மண்டிக் கிடக்கின்றது. இளமை குலையாத எழில் பிழியும் கட்டுடல் என்றால் கொஞ்சமோ சம்பத்து?’

அலையெனக் கிளம்பும் எண்ணங்களை வாசற் கதவு தட்டப்படும் ஓசை வந்து கலைக்கிறது. தன் எஜமானியம்மாள் வெறுப்பின் மெய்மை பொய்மை அறியத் தகுந்த தருணம் வந்ததாக எண்ணுகிறாள். ஊர்மிளா. ‘இன்பம் தேடி யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது…வீடு நாடித் திரண்டு வரும் இந்த இன்பம் கசக்கின்றது எனக் கூறி என் எஜமானியம்மாள் துரத்தி விடுகிறாளா பார்ப்போம்!’

ஊர்மிளா கதவு திறக்க விரைகிறாள்.

கதவு தட்டப்பட்ட சத்தம் கல்யாணியின் காதுகளிலும் விழுகிறது. யாராய் இருக்கக் கூடுமென நினைக்கிறாள். ‘கடன் கேட்கவா இங்கு வந்து கதவைத் தட்டுவார்கள்? எனக்கு எப் பிறப்பிலோ செலுத்த வேண்டிய கடனை இப்பிறவியில் இறுக்கத்தானே இங்கு வருகிறார்கள்!’ என வேதனையோடு எண்ணுகிறது அவளது நெஞ்சு.

யாரென்று அறியவும் ஊர்மிளாவை அழைக்கிறாள் கல்யாணி.

ஊர்மிளா தாமதமாகவே, ‘தன் கன்னங்கரிய மேனியழகில் யாராவது மயங்க மாட்டார்களா என்ற தாபத்துடன் யாரைப் பார்த்தாலும், பல்லிளித்துப் பேசுவதே அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது’ என்று கோபமாக எண்ணியபடி, “ஊர்மிளா…! அடியே ஊர்மிளா…! யாருடன் அங்கே பேசிக் கொண்டிருக்கிறாய்?” என மீண்டும் அழைத்தாள்.

ஊர்மிளா அவசரமாக வருகிறாள். “அழைத்தீர்களா, அம்மா?”

“அழைத்தேனாவா? எத்தனை தடவைகள் அழைத்தேன்? இவ்வளவு நேரமும் அங்கே நின்று யாருடன் சரஸமாடிக் கொண்டிருந்தாய்?”

“சரஸமாடுவதா? யாருடன் அம்மா நான் சரஸமாடுவேன்? உங்களைத்தான் தேடிவந்திருக்கிறார்..”

“யார்?”

“உஜ்ஜேனியிலிருந்து இங்கு வாடிக்கையாக வரும் தனவணிகன்.”

“உஜ்ஜேனியிலிருந்து வரும் தனவணிகனா? அவனோ பெரும் செல்வந்தன். இவ்வளவு நேரமும் அவனை வாசலிலே காத்திருக்க வைக்கலாமா? நோக்கமறிந்து நடப்பதற்கு நீ இன்னமும் கற்றுக் கொள்ளவில்லையே…அவன் அறிவுள்ளவனாக இருந்தாலும், அவசரக்காரன். என்மீது பித்துக் கொண்டு நத்தி வந்திருந்தாலும், தித்திக்கும் முத்தத்தில் சத்தான இன்பம் சித்திக்க வைக்கும் உத்தி தெரிந்த இளமையும், அழகின் இறுக்கமும் கொண்ட நகர சோபினிகள் பலர் வாழ்கின்றார்கள் என்பதையும் அவன் அறிந்து வைத்திருப்பான்…தாமதிக்காமல் போய் அவனை அழைத்துவா!”

மறுபடி வாசல்புறம் நோக்கி விரைந்தாள் ஊர்மிளா. ‘பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது?’ என்று கல்யாணி சொன்ன வாசகம் கிணற்றுள் குரலாய் அவள் மனத்துள் எதிரொலி செய்கிறது. போதிமர நிழல் வேதாந்தம் கையோடு பொய்த்துப் போவதை ஏளமாய் எண்ணியவாறே நடந்தாள்.

ஊர்மிளாவின் பார்வை–தொழில் முறையால், எவ்வளவு இளக்காரமாய்- போலியாய்த் தான் வாழ்வதை, அந்தப் பார்வை – கல்யாணிக்கு உறுத்துகின்றது. ஆனாலும், அவளுக்கென்று ஒரு தொழில் தர்மமும் இருக்கிறது. அவள் உடலை விரும்பி ஒருவன் வாசலில் நிற்கும்போது யாக்கை நிலையாமை பற்றி நினைப்பது தவறு…! அவளுக்கு விதிக்கப்பட்டுள்ள குலதர்மம் அது…!

வணிகன் உள்ளே வருகிறான்.

“கயல்விழியே! மயல்தேனே! கொஞ்சும் கிளியே” என்றென்றைக்கும் இளமையாக இருப்பதற்கு காயகல்பம். ஏதாவது சாப்பிட்டு வருகிறாயா? கால ஓட்டத்திலே மூப்பு வந்து சேருகிறது என்பது உலகத்தோர் அநுபவம். ஆனால், நீ…? காலத்தை எதிர்த்து எதிர்நீச்சலடிக்கும் பாங்கிலே என்றுமே உடையாத வாலை இளமையைப் பிழிந்து காட்டுகிறாய்.”

“உஜ்ஜேனியிலுள்ள உல்லாசினி ஒருத்தியுடன் பேசவேண்டிய வசனங்களை இடம் மறந்து இங்கே ஒப்புவிக்கிறீர்களா?” என்று சிரித்தாள் கல்யாணி.

கல்யாணியின் சிரிப்பில் என்ன கண்டானோ வணிகன். கோபித்தவனாகச் சொன்னான்: “உஜ்ஜேனியையும், வணிகத்தையும் மறந்து இன்பம் அநுபவிக்கலாமென்று இங்கு வந்தால்…?”

“மூக்கின் மீதுதான் உங்கள் கோபம் வாசஞ் செய்தாலும், அது முனிந்து கனியும் பொழுது உங்கள் முகத்திலே தனி அழகு படர்வதை அவதானித்திருக்கிறீர்களா? ஓ…ஒரு வேளை; காத்து நின்று கால் கடுத்ததால் இந்தக் கோபமோ…? அமருங்கள்!”

வணிகன் சினம் தணிந்து அமருகிறான்.

அங்கவஸ்திரத்தைப் பெற்று அதற்குரிய இடத்திலே அவன் வைக்கிறாள்.

வணிகனின் அழகை அள்ளி விழுங்கி நிற்கும் ஊர்மிளாவைக் கண்டு எரிச்சலடைந்தவள், தம்மிடமிருக்கும் மதுவகைகளுள் சிறந்த மதுவை எடுத்து வரும்படி ஆக்ஞாபிக்கிறாள்.

ஊர்மிளா அப்பால் நகர, அவனருகே அமர்ந்து, “உங்கள் பரந்த மார்பிலே சிலிர்த்து நிற்கும் ரோமம்…” என்று கூறி சிருங்கார நகை சிந்துகிறாள். பின், “நேற்று ஆழ்ந்த தூக்கத்தில் இனிய கனவொன்று கண்டேன்,” என்கிறாள்.

“இனிய கனவா? நீ கண்டால் அஃது இனிமையானதாகத்தான் இருக்கவேண்டும். பொற்சிலையே, எனக்கு அதைச் சொல்வாயா?”

“சொல்கிறேன்” என்றவன் கனவு காண்பவள் போல் கண்கள் கிறங்குகிறாள். “பல நாள்கள் கழித்து வசந்த ருது வந்து சேர்கிறது. நான் அதன் எழில் பருகி மெய்ம்மறந்து நிற்கிறேன். என் பின்னால் யாரோ வந்து நின்று ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து என் கண்களைக் குருடாக்குகின்றார். அந்த நிலை நீங்கிப் பார்க்கும்போது என் கழுத்திலே முத்துமாலை ஜொலிக்கிறது. பக்கத்திலே நிற்பவர் சிரித்தவாறே என்னை…தழுவுகிறார். இப்படி ஒரு கனவு கண்டால் இனிக்காதா, பின்னே?”

“அதுசரி, கனவிலே கண்ட அந்த ஆடவன் யாரோ?” என்று ஆவலோடு கேட்கிறான் வணிகன்.

“உங்களைத் தவிர வேறு எந்த ஆண்மகனை நான் கனவிலே கண்டிருப்பேன்? அந்தக் கனவை நிசமாக்குவது போல நீங்கள் என் எதிரில் வந்து நிற்கின்றீர்கள்.”

அந்த நேரம் உள்ளே வந்த ஊர்மிளா, மதுக் கலசத்தை அவர்கள் எதிரில் வைத்து, எஜமானியின் ஜாடையை எதிர் பார்த்து நிற்கிறாள். “சரி, இனி நீ போகலாம். வெளியே வெளியூர் ஆலயம் ஒன்றுக்கு நடனமாடச் சென்றுவிட்டதாகவும், நாளைக்குத்தான் திரும்புவேன் என்றும் கூறி அனுப்பிவிடு.”

“யார் வந்து கேட்டாலுமா?”

“உன் போக்கே மாறிவருகிறது. உனக்கு நான் சொல்வது புரியவில்லையா?”

“புரிகிறது அம்மா, நன்றாகப் புரிகிறது” என்று கூறி வெளியேறுகிறாள் ஊர்மிளா. “புனிதராம் புத்தரின் சிலையின் கீழே மதுவின் மயக்கமும், மங்கையின் சுவையும் ஊட்டும் உன்போக்கு யாருக்குப் புரியாமலிருக்கும்?’ என்று மனத்துள்ளே எள்ளினாள்.

ஊர்மிளா சென்றதும் வணிகன், “கல்யாணி! நீ நகர சோபினியாக இருந்தாலுங்கூட மிகவும் இனியவள். மனமறிந்து இன்பம் சுரக்கவல்ல சுந்தராங்கி…” எனச் சொல்லி நெருங்கினான்.

கல்யாணி மதுவைக் கிண்ணத்தில் ஊற்றி, “நீண்ட பயணத்தால் களைப்புடன் காணப்படுகிறீர்கள்” என்று கூறி, அவனைப் பருக வைக்கிறாள்.

“நனி சுவை தரும் மது! ஆனாலும், உன் தேன் இதழ் நிகர்த்த சுவையை இப் பூவுலகில் வேறொரு பொருளும் தரமாட்டாது…முத்துமாலையொன்று கொண்டுவரலாமென்றுதான் நினைத்தேன். இந்த மரகதமணியின் மாந்தளிர்க் கழுத்துக்கு மரகதமாலை தான் எடுப்பாக இருக்குமென்று…எனது எண்ணத்தை மாற்றினேன்”. எனக் கூறித் தன்னுடன் கொண்டு வந்திருந்த மரகதமாலையை எடுத்து அவளிடம் கொடுக்கிறான் வணிகன்.

நீங்களே அணிந்துவிடுங்களென்று, திரும்பி அமர்கிறாள் கல்யாணி.

வணிகன் மரகதமாலையை அணிவித்துவிட்டு அவளின் அடையைத் தழுவுகிறான். லாவகமாக நழுவியவள் நிலைக்கண்ணாடியில் எதிரேநின்று பார்த்து பரவசமடைகிறாள். “என்னிடமிருக்கும் எதனைக் காட்டினாலும் இதனைப் பெருநிதியமாகக் கருதிப் பாதுகாப்பேன்” என்று கூறி எழில் பிழிகிறாள்.

மஞ்சத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறாள் வணிகள்.

அவ்வேளை, வெளியே…

புத்தம் சரணம் கச்சாமி –
சங்கம் சரணம் கச்சாமி –
தர்மம் சரணம் கச்சாமி –

திடுக்குற்றாள் கல்யாணி. “இனிமையும் கம்பீரமும் சொட்டும் குரல்…நிச்சயமாக அவருடைய குரலேதான்.”

கல்யாணியின் மாற்றம் வணிகன் சற்றும் எதிர்பார்க்காதது.

“பிட்சாபாத்திரம் ஏந்தித் திரியும் யாரோ ஒரு பிக்குவின் குரல்! அவர்கள் கூட உங்களைப் போன்ற நகர சோபினிகளை ஆதரித்துப் போஷ’க்கிறார்களா? அப்படியானால் அவர்களுடைய உதடுகள் எவ்வாறு புத்தரின் புனித நாமத்தைக் கூசாமல் உச்சரிக்கின்றன?” என்று ஏளனத் தொனி வெடிக்கக் கேட்கிறான்.

“அபசாரம்! அபசாரம்!” பதறினாள் கல்யாணி.

“இந்த பிக்கு தாமரையிலை நீராகவே இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் புனிதர் – புண்ணியர். என் தானத்தை ஏற்று அருளும்படி எத்தனையோ தடவைகள் வேண்டினேன். வேளை வரும்போது வந்து ஏற்றுக் கொள்ளுவதாக வாக்குத் தந்திருந்தார். அவர் நியமித்த வேளை வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.”

“வேளையாம் வேளை! மனம் ஒன்றி, கலவி பயின்று, களிப்பு மாந்த இருவரும் படுக்கையறைக்குள் செல்லும் சமயம்தான் அந்தப் பிச்சாண்டிக்கு வேளை வந்ததா?

“அப்படியும் இருக்கலாம்”.

“நான் பரியம் தந்தேன். நீயும் ஏற்றுக் கொண்டாய். உன் உடல் இன்று என் சொத்து”.

“அது உண்மைதான். நான் மறுக்கவில்லை. ஆனால், எந்த நகரசோபினியும் தன் உடலுடன் சேர்த்து பரிசுத்தம் பற்றித்தான் பேசியிருக்கிறார்.”

“அப்படியானால்…நான் உங்களிடம் என் சித்தத்தை அடைவு வைக்கவில்லையென்று வைத்துக் கொள்ளலாம்.”

கல்யாணி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது ஊர்மிளா உள்ளே வந்தாள்.

“என்ன?” என்று கல்யாணி கேட்டாள்.

“அந்த பிக்கு வந்துள்ளார். நீங்கள் சொன்ன பிரகாரமே நீங்கள் வெளியூர் போயிருப்பதாக சொன்னேன்…”

“ஏனுடி அவரிடம் பொய் கூறினாய்?”

“நீங்கள் பணித்தீர்கள். அப்படியே சொன்னேன்.”

“போய்விட்டாரா?”

“இல்லையம்மா, நான் சொன்னதை நம்ப மறுத்து உங்களிடம் சேதியொன்று தெரிவிக்கச் சொன்னார்.”

“என்ன சேதி தெரிவிக்கச் சொன்னார்?”

“தானம் ஏற்க வேளை வந்துவிட்டதாக உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.”

“ஊர்மிளா! ஓடிப்போய்…வேண்டாம், வேண்டாம். நானே அழைத்துவருகிறேன்.” என்று வாயிலை நோக்கி ஓடினாள்.

கல்யாணியின் பேச்சும் நடத்தையும் கண்ட வணிகன், ‘செய்வதோ உடல் வணிகம். பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் உடலைக் கொடுப்பது இவளுடைய குலதர்மம். இவற்றை மறுத்து, யாக்கை நிலையாமை பற்றிப் பேசும் பிக்குகளுக்குப் பின்னால் இவள் இப்படிப் பைத்தியம் கொண்டு அலைகின்றாளே!’ என்று தனக்குள் முனகிக் கொண்டான்.

அது செவியில் விழுந்த ஊர்மிளா, “அப்படிப்பட்ட பைத்தியங்களைத்தானே நீங்களும் தேடி பைத்தியங் கொண்டலைகிறீர்கள்? என்னைப் போன்ற ஒரு குலமகள் காலடியில் வீழ்ந்து கிடந்தாலும் துச்சமாக மதிக்கின்றீர்கள்” என்றாள்.

“ஊர்மிளா! ஒன்றை அறிந்துகொள்ளக் கடவாய்! பசித்தாலும் புலி புல்லைத் தின்பதில்லை.”

“புலி மாமிசத்தைத்தான் தின்னும், சரி! என் மேனி மட்டும் மாமிசமில்லையா?”

வணிகன் சிரித்தான், “பெண்கள் எல்லோருமே மாமிச கோளங்களினாலான உருவங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். வைரத்தின் மதிப்பு எப்போதும் நிலக்கரிக்கு ஏற்படுவது கிடையாது. நிலக்கரி அடுப்பிலே எரிக்கத்தான் உதவுகிறது.”

“நிலக்கரி கறுப்பாக இருக்கலாம். அடுப்பிலே எரியலாம். ஆனால், பிறருக்குச் சக்தியூட்டுவதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளும் திருட்டாந்தமாக அது திகழ்கிறது.”

“சாமர்த்தியமாகப் பேசுகிறாய். சொவ்வை வாய்ப் பாவையரின் தத்தை மொழிதான் தித்திக்கிறது. தத்துவங்களை ஞானியர் வாய்மூலம் கேட்கும் பொழுதுதான் தெளிவு பிறக்கின்றது…உன் எண்ணம் புரிகிறது. ஆனால், கோல மயிலின் ஆட்டங் களிக்க வந்தவனுக்கு…”

ஸாதுவை உள்ளே அழைத்து வருகிறாள் கல்யாணி.

“இந்த வீட்டின் கதவுகள் எப்பொழுதும் தங்களுக்காக அகலத் திறந்திருக்கும். உங்களுக்கு எது வேளையோ, அதுவே எனக்கும் வேளை!”

“பிக்குவே! உங்களுக்கு மட்டுமல்ல, கை நிறைய பரியப் பணம் கொண்டுவரும் யாவருக்கும் கதவுகளையும் மனங்களையும், ஏன் எதையுமே அகலத் திறந்து வைக்க வேண்டியது நகர சோபினிகள் குல ஆசாரம்…!”

வணிகனின் குறுக்கீட்டை பிக்குவானவர் விரும்பமாட்டாரோ எனக் கல்யாணி அஞ்சினாள். அதனால் அவள் அவசரமாகக் குறுக்கிட்டு, “தங்கள் வருகையால் யாருக்கும் துன்பமில்லை. சுவாமி, இடக்காகப் பேசும் இவர் உஜ்ஜேனியிலிருந்து வந்திருக்கிறார்…” என்றாள்.

“அறிவேன். ஆனால், உன் நண்பர் வந்திருக்கும் நோக்கமும், நான் வந்ததின் நோக்கமும் வெவ்வேறானவை. ஆனால், இருவரும் ஒரே வேளையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதுதான் வேடிக்கை!”

“புனிதரே! யாருக்கும் எதுவித சங்கடமும் இல்லை. இதிலே அமருங்கள்.”

கல்யாணியின் விநயத்தை வணிகன் ஆட்சேபிக்கவில்லை.

பிக்கு, புத்த சிலைக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஆசனத்தில் அமருகிறார்.

அதுவரை பேசாதிருந்த வணிகன், “ஸாதுக்களே” கோபித்துக் கொள்ள மாட்டீர்களென்றால் ஒன்று கேட்கப் பிரியப்படுகிறேன். கேட்கலாமா?” என்று தொடங்கினான்.

“நானோ சினம் தவிரிந்தோன். தாராளமாகக் கேட்கலாம்.”

“நீங்கள் புனிதர், புண்ணியர், பற்றுக்கள் எல்லாவற்றையும் கடந்தவர். கையிலுள்ள பிட்சா பாத்திரமும், மேனியை மறைக்கும் சீவர ஆடையுமே சொத்துகள் என அலையும் துல்லியர். அத்தகையவர் தானம் கேட்டு இந்தப் பொதுமகளிடம் வரலாமா? தானம் தேவையென்று கூறினாற் போதும். ஆயிரம் உயர் குலத்தோர் உங்கள் விஹாரத்துக்கே அனுப்பி வைப்பார்களே…! இந்த வேசியின் வீட்டுக்கு வருவது கேவலமாகத் தெரியவில்லையா தங்களுக்கு?”

“சநாதன தர்மப்படி நீ உயர்வு-தாழ்வுகள் பற்றிப் பேசுகின்றாய். கேவலம் என்று கூறுகின்றாய். எது கேவலம்?”

“பெண்ணாசை துறந்த நீங்கள் பெண்ணின்பத்தை அங்காடிப் பொருளாக்கிவிட்ட இந்த வீட்டுக்கு வருவதுதான்.”

“நீங்கள் உன்னை உயர்குலத்தவன் என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறாய். அப்படியிருந்தும், இங்கு வருவது உனக்குக் கேவலமாகத் தோன்றவில்லையா யென்பதை ஒப்புக் கொள்கிறாயா?”

“ஒப்புக் கொள்ளுகிறேன். எனினும் நான் வந்திருப்பதின் நோக்கம் வேறு.”

“நோக்கம் எதுவாக இருந்தாலும் நீ வருவதற்கு கௌரவமானதாகத் தோன்றும் ஓர் இடம், ஏன் எனக்கு மட்டும் கேவலமாகத் தோன்ற வேண்டும்?”

“ஸாதுக்களே! உங்கள் தளம் வேறு; என் தளம்வேறு; இவள் தளம் வேறு. ஒவ்வொரு தளத்திலும் உள்ளவர்களுக்கும் ஒவ்வொரு நெறி தர்மமாக அமைகிறது. ஒரு தளத்தில் உள்ளவனுக்கு தர்மமாக அமையும் நெறி, பிறிதொரு தளத்தானுக்கு ஏற்ற நெறியாக அமைவதில்லை.”

“தளமும், தர்மமும்!” பிக்கு மனசுடன் பேசும் தொனியிலே பேசினார். ஆனாலும், வணிகன் செவியில் அவை விழுந்தன.

“ஆம், நீங்கள் உயர்ந்த நெறிகளைப் போதிப்பவர்கள். உங்கள் தளம் மிகமிக உயர்வானது. இவள் கேவலம் பரத்தை! இவள் தளம்…”

வணிகனை இடைமறித்து கல்யாணி சினங்கொணடு வெடித்தாள். “கேவலம்…பரத்தையா? இந்தப் பரத்தையைத் தேடித்தானே உஜ்ஜேனியிலிருந்து வந்திருக்கிறீர்கள்!”

“கல்யாணி! கோபம் தவிர். நான் உன் ஒருத்தியைப் பற்றித் தனிப்பட்ட முறையில் பேசுவதாக பிழைபடக் கருதத் தேவையில்லை” என்று அவளைச் சமாதானப்படுத்தினான் வணிகன். “உன் குலத்தில் தர்மத்தைப் பற்றித்தான் இங்கு பேச்சு எழுந்திருக்கிறது. நான் வைசியன். என் குல ஆசாரப்படி உன்னிடம் இன்பம் நுகர்வது தர்மமானது. நீ எதனையும் எனக்கு பிட்சாபாத்திரத்தில் இட்டுத் தரவில்லை. நீ கேட்கும் பரியப் பணத்தை நான் தந்துவிடுகிறேன். இன்னொரு வழியில் பார்க்கப் போனால், வேசிக் குலத்தை உருவாக்கியதே, குலமகளிரின் கற்புநெறியைக் காப்பாற்றுவதற்காகத்தான். குலமகளிர் சோரம் போனால் ஜாதிக் கலப்பு ஏற்படும். ஜாதி முறைமைகளும், ஆசாரங்களும் தர்ம முறைப்படி நடப்பதினாலேதான் உலகம் உய்கிறது என்று பரமாத்மாவே பகவத் கீதையில் போதித்திருக்கிறார்.”

கல்யாணி அதற்கும் ஆவேசமாகவே பதிலளித்தாள். “கீதா போதகம், ஆகமத்திலே சொல்லப்பட்டிருக்கிறது; உதநிஷதங்கள் வலியுறுத்துகின்றன என்று கூறி மக்களுள் ஒரு சாராரை பிறிதொரு சாரார் என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சநாதன தர்மத்தை நான் வெறுக்கிறேன். அவற்றினால் வருங்காலத்தில் உலகம் உய்யப் போவதும் கிடையாது. எதிர்காலம்…போதி மாதவர் போதித்த அன்பு நெறியிலேதான் உய்யப் போகின்றது. ஒரு யானை அளவு பொன்னுடன் ஓர் இளவரசனே என் வாசலில் வந்து நின்றாலும், அவனை உள்ளே அநுமதிப்பதும் அநுமதிக்காது விடுவதும் என் இச்சை. அதுபோல் பிட்சாபாத்திர தாரியான இந்தச் ஸாதுக்கள் வருவதும் போவதும் அவர்கள் இஷ்டம். அவர்கள் சுயாதீனமான முடிவு என் பாக்கியம்.”

தன் பொருட்டாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்றும், தானத்தைக் கொண்டு வரும்படியும் கல்யாணியிடம் கூறினார் பிக்கு. அவள் அப்பால் செல்லவும் பிக்கு வணிகன் பக்கம் திரும்பினார்.

“வணிகனே! நீ கல்வி கேள்விகளிலே சிறந்து விளங்குகின்றாய். நல்லது. நாம் கேவலம் பற்றிய விவகாரத்துக்கு மீண்டும் வருவோம். பிச்சையெடுப்பது கேவலமாகத் தோன்றலாம். ஆனால், அதையே நாங்கள் வாழ்க்கை முறைமையாகக் கொண்டு ஒழுகுகிறோம். வணிகனே! ஒன்றை அறிந்து கொள்வாய். கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் ஒரேயளவு மன நிறைவினை ஏற்படுத்துவதுதான் உண்மையான தானம். அந்த நிறைவு இங்கு சம்பவிக்கலாமென எண்ணித்தான் இங்கு வந்துள்ளேன். இதில் கேவலம் எங்கே இருக்கிறது?”

வணிகன் பொறுமை இழப்பது தெரிந்தது. அதை உறுதிப்படுத்தும் வார்த்தையே தொடர்ந்து பிறந்தது.

“நான்கு வர்ணத்தாருள் இவள் கடைக் குலத்தவள்!”

“அப்படியாயின், இந்தக் கடைக் குலத்தவளிடம் உடலின்பம் நுகர்வது மட்டும் ஈனமாகத் தோன்றவில்லையா?”

“அதுதான் சொன்னேனே! நான் வணிகன். வியாபாரம் என் குலதர்மம். இங்கு நான் வந்திருப்பதும் வியாபார நோக்கமாகத்தான். நான் பணம் கொடுக்கின்றேன். அவள் உடல் தருகின்றாள். என் போன்றவர்கள் இக்குலத்தாருடன் வியாபாரம் செய்ய முற்படுவதினாலேதான் இவர்களுடைய குலத்தவர்கள் வாழ்கிறார்கள்.”

“வணிகனே!” கம்பீரமாக அழைத்தார் பிக்கு. “நீ சொல்லும் கோட்பாடுகள் காலாவதியாகிவிட்டன. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து மானிடகும் கடைத்தேறுவதற்குத்தான் புத்தபகவான் அவதரித்தார்.”

பிக்குவின் வார்த்தைகளைக் கேட்டு நின்ற கல்யாணி, அறையெங்கும் புத்த ஞாயிறின் விரிசுடர் பரவுவது போன்ற ஓர் அகக்காட்சியின் வசமானாள். நூதனமான அநுபவம்.

பிக்கு தொடர்ந்தார். “நீ இப் பிறவியில் வணிகனாக இருக்கிறாய். முற்பிறப்பில் என்னவாக இருந்தாய்? அடுத்த பிறப்பில் என்னாவாய்ப் பிறப்பாய்? சொல்ல முடியுமா? யோசித்துப் பார்! இந்த நகர சோபினி ஏன் பரத்தையானாள்? மனம் ஒப்பியா? குல ஆசாரம் கருதியா? உன்னுடைய வார்த்தைகளில் சொல்வதானால் அவளுடைய உடல் அழுக்குகள் படிந்ததாக இருக்கலாம். ஆனால், அவளுடைய உள்ளம் சக்கரவாகப் புள் போன்ற தூய்மையானதாக இருக்கின்றதே! ததாதர் இதனையும் தெளிவாகப் போதித்திருக்கின்றார்…”

“நடைமுறையிலிருக்கும் தர்மங்களை உடைத் தெறியப் புறப்பட்ட புரட்சியாளர் என்ற வகையில் புத்தரைப் போற்றுகின்றீரா? அல்லது, உலகினை அரட்சிக்க வந்த புண்ணியர் என்ற எண்ணத்தில் புத்தரை மதிக்கின்றீரா?”

“புரட்சியாளர், இரட்சகர் போன்ற அடை மொழிகள் போதிமாதவருக்கு-துன்பம் துறந்த அந்த துல்லியருக்கு-பொருந்தாது. பிறவிச் சக்கரத்திலிருந்து கடைத்தேற சித்த பசிசுத்தம் தேவையென்று பூரணமாக நான் நம்புகின்றேன். ஒவ்வொருவனுடைய சித்தமே அவனவனுடைய இரட்சகர்.”

“சித்தத்தின் இயக்கத்தினை எவ்வாறு அறிந்து கொள்ளுதல் சாலும்?”

“வணிகனே! சித்தத்தின் இயக்கத்தினை நிறம், சுவை, மணம், ஒலி, தழுவல் என்ற புலனறிந்த வழிகளால் அறிய முடியாது.”

அப்போது கல்யாணி தட்டு நிறைய மலர்களையும், கனிவர்க்கங்களையும் கொண்டுவந்து பிக்குவை பவ்யமாக வணங்க, பிக்கு தானத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்.

உடனே வணிகன் கேட்கிறான். “ஸாதுக்களே! மலர்களை உங்கள் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். மலரின் அழகிலே உங்களுக்குள்ள பிரீதியினாலேதான் அவ்வாறு செய்கிறார்களென்று கூறுதல் பொருந்துமா?”

“ஒவ்வொருவனும் தன் மனப்பக்குவத்திற்கேற்பச் சிந்திக்கின்றான்…நகர சோபினியே! உனக்கு மலர் எதை நினைவூட்டுகின்றது?”

“தியாகத்தின் மகத்துவத்தை! பிறருடைய இன்பத்துக்காக மலர் தன்னையே அழித்துக் கொள்கிறது”. கல்யாணி தாமதமின்றியே பதில் கூறுகிறாள்.

“பார்த்தாயா, வணிகனே! நீ வியாபாரம் என்கின்றாய். இவளுடைய மனோபக்குவம் பிறருடைய இன்பத்துக்காக தன்னையே அழித்துக் கொள்ளும் மலரைப் போன்றது. பகவான் புத்தர் உயிருடன் இருந்த பொழுது மலர்களை விருப்புடன் காணிக்கைப் பொருளாக ஏற்றார்.”

அதைப் புரிந்து கொள்ள முடிந்தது கல்யாணியால்.

“மலர்கள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன. எந்த அந்தஸ்தில் உள்ளவராலும் மனக்குறை ஏதுமின்றி அவற்றைத் தரமுடியும். அத்துடன், அநித்ய வாழ்வின் தத்துவத்தை மலர்கள் செப்பமாக விளக்குகின்றன” என்று விளக்கிய பிக்கு, வணிகனைப் பார்த்து, “வணிகனே! மலர் உனக்க எதை நினைவூட்டும்?” எனக் கேட்டார்.

“கலவின்பத்தை” என்றான் வணிகன். “ஆணும், பெண்ணும் மனங் கலந்து இல்லற இனபத்திலே தோய்ந்து ஒரு குழந்தையைச் சிருஷ்டிக்கும் சுவையை! நீங்கள் துறவற நெறியென்று இயற்கையின் உணர்ச்சிகளை மறுதலிக்கின்றீர்கள். அதனை இயற்கைக்கு முரணாக ஆணவ வழி என நான் கருதுகிறேன்.”

“கலவி… இன்பம்…இயற்கை வழி…!” பிக்கு லேசாகச் சிரித்தார். “வணிகளே! கலவியின் மூலம் ஒரு ஜ“வன் தோன்றலாம். அந்தப் பிறப்புக்கூட பிரக்ஞை பூர்வமாக நடைபெறுவதில்லை. ஜ“வ உற்பத்தி என்ற ஒரேயொரு நோக்கத்திற்காகத்தான் கலவி நெறி பயிலப்படுகின்றதா? உன்னையே சுயவிசாரணை செய்து பார். ஜ“வ சிருஷ்டி நோக்கத்துடனா நீ இந்த நகர சோபினியை நாடி வந்திருக்கிறாய்? கலவி யென்பது மாமிச இச்சைகளைத் தீர்க்கும் பிறழ்வு வழி. அவ்வளவுதான். புதிய ஜ“வனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சித்தத்தினைக் கலவிக் கலையால் படைத்தல் சாலாது. எதற்கு ஆரம்பம் உண்டோ, அதற்கு அழிவும் உண்டு. சித்தத்தினை எந்த மனிதனாலும் படைக்க முடியாது. எனவே அதுவே நித்தியமானது. சித்தத்தின் நித்தியத்துவத்தை அறிதல் ஆணவமா? அலோப-அதுவேச-அமோக ஆகிய நற்குணங்கள் சித்த பரிசுத்தப் பணியில் ஈடபட்டிருப்பவனுக்கே சித்திக்கின்றது.”

“அப்படியானால் உடலிச்சை…அநுபவத்திற்கு மாறானதா?” வணிகளின் கேள்வியில் விவாதக் குணம் மறைந்து அறிதல் வேட்கை நிரம்பியிருந்தது.

பிக்கு சொன்னார், “உடல் என்பது என்ன? கேசம், ரோமம், நகர், தந்தம், தோல், உதிரம், மாம்ஸம், என்பு, நரம்பு, குழலட்டை, எச்சில், பித்தம், சிலேற்பனம், சலம், மலம்…இத்தியாதிகளான முப்பத்து இரண்டு அழுக்குப் பொருள்களால் ஆனதுதானே! இந்த நிலையற்ற யாக்கையின் இச்சைகளினால் சம்சார சக்கரமென்ற பிறவிப் பெருங்கடலில் அழுந்திப் பொருந்துயர் அநுபவிக்க நேரிடுகின்றது.”

“பிறவிப் பெருங்கடல்…பெருந்துயர்…கடைத்தேற மார்க்கம் என்ன, சுவாமி?”

பிக்குவின் முகத்தில் ஒளிவெள்ளம் பெருகிற்று, “துக்க, சமுதய, நிரோத, மார்க்க ஆகிய சதுராதியன சத்தியங்கள். இவ்வுலகம் துக்கமயமானது. அதனால் தான் துக்க நிலை ஏற்படுகின்றது. துன்பத்திற்குக் காரணம் இச்சைகளே என்பதை உணர்தல் சமுதய இந்த இச்சைகளை அழித்தோ அல்லது விரோதித்தோ விலகி நிற்கும் நிலையே நிரோத, இச்சைகளை அழிப்பதற்கான வழிகளை அறிதல் மார்க்க.”

“அந்த ஆரிய அஷ்டாங்க மார்க்கம் எனப்படும்…நற்காட்சி, நல்லூற்றம், நல் வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைபிடி, நல்லமைதி ஆகிய எட்டுமாம் அவை. இவற்றின் வழி ஒழுகி தியானத்திலே நல்லமைதி பெற்றால் சித்தத்தை உணரலாம்.”

“சித்த பரிசுத்தம் கிட்டினால்?”

“அரஹத் நிலை எய்தி நிப்பாண அடைகின்றோம். அதுவே நித்தியப் பேரானந்தம்.”

…மௌனம்.

சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட பிக்கு புறப்படத் தயாரானார். விடை பெற்றார்.

“சுவாமி!…” வணிகனின் குரல் தடுக்க நின்றார். என்ன என்பதுபோல் அவனை நோக்கித் திரும்பினா‘.

“நானும் உங்கள் வட வருகின்றேன்” என்றான் வணிகன்.

கல்யாணி, தூர நின்ற ஊர்மிளா இருவருமே திடுக்கிட்டனர்.

“என்கூடவா? ஏன்?”

“அமைதி தேடி இங்கே நகரசோபினியிடம் வந்தேன். அந்த நல்லமைதியை பகவான் புத்தர் வழியில் நடந்து, விஹாரத்திலே பெறமுடியுமென்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.”

சரியான முடிவென அவனை அங்கீகரித்தார் பிக்கு.

உடனே கல்யாணியும் தானும் வருவதாகக் கூறிப் புறப்பட்டாள். அதைப் பிக்கு தடுத்தார். “வரலாம். ஆனால், இப்போதல்ல. அதற்கும் ஒரு வேளை வரும்.”

“இவர் வருகிறாரே…!”

“உஜ்ஜேனி வணிகனுக்கு வேளை வந்தது. அந்த வேளை உன் இல்லத்திலேதான் சித்திக்கவிருந்தமை தெரிந்துதான் இன்று இங்கு வந்தேன்.”

பிக்கு நடந்தார். வணிகனும் பின் தொடர்ந்தான்.

புத்தம் சரணம் கச்சாமி!

சங்கம் சரணம் கச்சாமி!

தம்மம் சரணம் கச்சாமி!

பிக்குவின் குரல் தேய்ந்து மறைகிறது.

– சிறு கை நீட்டி, முதற் பதிப்பு: அக்டோபர் 1998, மித்ர வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *