நம்பிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2013
பார்வையிட்டோர்: 10,185 
 

கையில் திருப்பதி பிரசாதத்துடன் வீட்டு வாசலில் நின்ற பக்கத்து வீட்டு சுதாவை புன்னகையோடு உள்ளே வரவேற்றாள் சந்தியா.

“அடடே, உள்ளே வா சுதா. திருப்பதியில இருந்து எப்ப வந்தீங்க?.  தரிசனமெல்லாம் எப்படி இருந்துச்சு! கூட்டமெல்லாம் அதிகம் இல்லயே?”, என்று சந்தியா கேள்விகளை அடுக்கிகொண்டே போனாள்.

“காலைலதா வந்தோம். தரிசனமெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. பிரசாதம் கொடுத்துட்டு போகலான்னு வந்தேன். எங்க அண்ணனை காணோம்?”.

“ஆபீசுக்கு போயிருக்காரு. இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே!”.

“இன்னைக்கு என்ன ஆபீஸ்?”.

“ஏதோ முக்கியமான வேலையாம், சீக்கிரம் வந்துருவேன்னு சொன்னாரு”, மழுப்பலாக பதில் சொன்னாள் சந்தியா.

“என்னடா இவ, இப்படி சொல்றாளேன்னு நீ என்ன தப்பா நெனைக்காத. போன வாரம் அவரு ஹோட்டலுக்கு போயிருந்தப்ப, திவாகர் அண்ணனை ஹோட்டல்ல பாத்துருக்காருன்னு’, சுதா இழுத்தாள்.

“இதுல தப்பா நெனைக்க என்ன இருக்கு?. சாப்பிடறதுக்காக ஹோட்டலுக்கு போயிருப்பாரு”.

“அண்ணன மட்டும் பாத்திருந்தா எதுக்காக என் வீட்டுக்கார் இந்த விஷயத்த என்கிட்ட சொல்ல போறாரு. அண்ணன் கூட ஒரு பொண்ணும் இருந்தாளாம். ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டாங்களாம்”.

“அந்த பொண்ணு, அவரோட ப்ரெண்டா கூட இருக்கலாம், இல்லேனா ஆபீஸ்ல கூட வேலை பாக்குறவங்களா இருப்பாங்க”, என்று திவாகரை விட்டுக்கொடுக்காமல் புருஷனுக்காக வக்காலத்து வாங்கினாள்.

மேற்கொண்டு பேச வாய்யெடுத்தவளை பேசவிடாது தடுத்தாள்.

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது சுதா. எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு. ஒரு நாளும் அவர் எனக்கு துரோகம் செய்யமாட்டாரு”.

சுதா ஒரு அசட்டுத்தனமான புன்னகையை உதிர்த்தாள்.

“உன் சிரிப்போட அர்த்தம் எனக்கு புரியுது சுதா. இவளும் மத்த பொண்ணுங்க மாதிரி, புருசன் மேல இருக்குற கண்மூடித்தனமான நம்பிக்கையில பேசுறான்னுதானே நீ நெனைக்கிற?. ஒவ்வொரு பொண்ணுமே தன் புருசன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சுருப்பா. அந்த நம்பிக்கைக்கு சக்தி அதிகம், சுதா”.

சுதா விடைபெற வீட்டுக்குள் நுழைந்தான் திவாகர்.

வந்தவன் சந்தியாவிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் நேராக ரூமுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.

என்னதான் சுதாவிடம் புருசனை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும், சுதாவின் மனதில் எழுந்த சந்தேகம் சந்தியாவின் மனதுக்குள்ளும் எழாமல் இல்லை.

சுதா சொன்ன விசயத்தை கேட்டதும், சந்தியாவின் சந்தேகம் இன்னும் அதிமானது. இப்பலாம் திவாகர் சந்தியாகிட்ட சிரிச்சு பேசியே ரொம்ப நாள் ஆச்சு. ஆபீஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வரும் திவாகர், நேரம் கழித்து வருவதும், வந்தவுடன் ரூமுக்குள் போய் அடைந்து கொள்வதும், எப்பபாத்தாலும் போன்ல யார்கிட்டயோ குசுகுசுன்னு பேசுறதுன்னு, இப்படி ஒவ்வொன்னா நெனச்சு பார்க்கையில் சந்தியாவிற்கு கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

இரவுக்கான உணவை தயார் செய்து கொண்டிருந்த சந்தியாவை திவாகர் அழைத்தான். முந்தானையால் கையை துடைத்துக்கொண்டே அவன் முன் வந்து அமைதியாக நின்றாள்.

“உட்காரு சந்தியா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நாம இப்படி உட்காந்து பேசி ரொம்ப நாள் ஆச்சுல?”, அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான்.

“தாங்ஸ், சந்தியா”.

“தாங்சா எதுக்கு?”.

“காலைல நீயும் சுதாவும் பேசிக்கிட்டு இருந்தத நான் கேட்டேன். வேறொரு பொண்ணா இருந்தா இந்நேரம் சுதா சொன்ன விஷயத்த கேட்ட உடனேயே, அவளுக்கு தன் புருசன் மேல கோவமும் சந்தேகமும் கொப்பளிச்சுக்கிட்டு வந்திருக்கும். எனக்கு தெரியும், அந்த நேரத்துல உன் மனசுக்குள்ளயும் என் மேல உனக்கு ஒரு சின்ன சந்தேகம் எழுந்திருக்கும், என்னதான் மனசுக்குள்ள சந்தேகம் இருந்தாலும், அந்த எடத்துல என்னை விட்டுக்கொடுக்காம பேசினேல அதுக்குதான், இந்த தாங்ஸ். உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையாவும் சந்தோசமாவும் இருக்கு சந்தியா. இப்ப நான் எதுக்கு ஒரு பொண்ணோட அந்த ஹோட்டலுக்கு போனேன்னு சொல்லட்டா?”.

“ம.;…”

சந்தியா தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டினாள்.

“எல்லாம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலான்னுதான் , என்ன அந்த சர்ப்ரைஸ்ன்னு நெனைக்கிறயா?. நீ ஊர்ல இருக்குற ஒவ்வொரு குழந்தைகளின் முகத்த ஏக்கத்தோட பாத்து மனசுக்குள்ள தவிக்கிறத என்னால சகிச்சுக்க முடியல, அதான் உன்னோட தவிப்ப போக்குறதுக்கு என்ன செய்யலான்னு யோசிச்சேன். ஒரு நாள் எங்க ஆபீசுக்கு ஒரு லேடி தன்னோட அனாதை இல்லத்துல இருக்குற குழந்தைகளோட படிப்பு செலவுக்காக உதவி கேட்டு வந்துருந்தாங்க. அப்பதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சி. ஏன் நாமளும் ஒரு குழந்தையை தத்தெடுக்க கூடாதுன்னு. இந்த விசயத்தபத்தி பேசுறதுக்காகதான், நானும் அந்த லேடியும் ஹோட்டலுக்கு போனோம். உனக்கு இந்த விசயம் சர்ப்ரைஸ்சா இருக்கனுன்னு நினைச்சதால்தான் அடிக்கடி, அந்த லேடிகிட்ட இருந்து வந்த போன கூட உனக்கு தெரியாம ரகசியமாவே பேசினேன் . பார்மாலட்டிஸெல்லாம் முடிஞ்சாச்சி. நாளைக்கு, இந்நேரம் உன்னோட கையில நம்மளோட குழந்தை இருக்கும்”, என்றான் கபடம் இல்லா சிரிப்போடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *