கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 4,029 
 
 

(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எஸ். விசுவநாதையர், பி.ஏ., பி.எல். மதுரையில் புதுத்தெருவில் வசித்து வந்தார். வக்கீல் தொழிலை ஆரம்பித்து எட்டு வருஷங்களாயின.

ஒத்துழையாமையின் உன்னத நாட்களில் அந்தக் கிளர்ச்சிச் சுழலில் அகப்படாத வாலிபர்களில் அவர் ஒருவர். காந்தியை மகான் என்றார். அவருடைய வழி தனி நபர்களுக்கேற்ற ஒரு ஸாதனையே ஒழிய, ஒரு சமூகத்தைத் தீங்கில்தான் இறக்குமென்று கருதினார். ‘காந்தி வெறி’, ‘அகால மழை’, ‘காந்தியும் சாந்தியும்’ முதலிய புஸ்தகங்களில் ஸத்தியாக்கிரஹ தத்துவத்தைப் புகழ்ந்தும், அதை ராஜீயத்தில் உபயோகிப்பதைத் தாக்கியும் எழுதினார். ராஜதந்திரத்திற்கும் ஸத்தியத்திற்கும் விரோதம். ‘சத்திய சோதனை’யைப் பற்றி எழுதியதில், எவ்வித அடிமைத்தன மனப்போக்கையும் கண்டிக்கும் காந்தி, உலக வாழ்க்கைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு சத்திய தத்துவத்துக்கு எப்படிப்பட்ட பரிதாபகரமான அடிமையாக இருக்கிறார் என்பதைக் காட்ட முயன்றார்.

தத்துவங்களையே புகழ்ந்து போற்றிய காலேஜ் மாணவன் விசுவநாதனா வக்கீல் விசுவநாதையராகி இந்த யுகத்திற்கே ஓர் ஆட்டும் கருவியான இணையற்ற ஊக்கத்தை இப்படிக் கண்டித்தான்? காரணம் என்ன?

இளைஞன் தன் மனோபாவத்தின் ஏகாந்த மாளிகையில் வாசம் செய்கிறவரையில் அவன் போக்குகளெல்லாம் காலையின் கனகமய மான நிறத்தைப் பெற்று ரமணீயமான ஆறுதலை அளிக்கின்றன. அதாவது உலக வாழ்க்கையில் ஒரு துறையிலும் அடிபடாத இளைஞன் அதன் படுகுழிகளை அறிவதில்லை. ‘துரத்துப் பச்சை’ என்பதுபோல வாழ்க்கையைத் தன் அநுபவக் கண்ணாடியின்றிப் பார்க்கிறான். அப்படித் துரப்பார்க்கும்போது அதன் குழிகளும், கரடு முரடுகளும் கற்களும், முட்களும் அவன் கண்களில் படுவதில்லை. ‘உலகம்’ என்று சொல்வது ஒரு குற்றங் குறைவற்ற சிங்காரச் சித்திரம்போல அவன் இளமைக் கண்களில்படுகிறது. அந்தக் கள்ள உலகுதான் நிஜமென்று ஏமாந்து, அதை அஸ்திவாரமாகக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை உயர்த்த வேட்கை கொள்ளுகிறான்.

விசுவநாதன் காலேஜில் கேவலம் பரீக்ஷையில் தேறும் எண்ணத்தை மட்டும் கொண்டு படிக்கவில்லை: ஆராய்ச்சியின் ஆழத்தை அறிய வேண்டுமென்று மூச்சுப் பிடித்தான்; ‘விழுந்து விழுந்து’ படித்தான். உயரிய நோக்கங்களே ஒரு சமூகத்தைக் கடைத்தேற்றுமென்றும், அந்த நோக்கங்களைக் கிளர்த்தி ஓங்கச் செய்யும் கலைஞானம் ஒவ்வொருவனும் அடையக்கூடியதாயிருக்க வேண்டுமென்றும், ஸ்திரீ புருஷர்கள் ஸமானஸ்தர்களாய் அவ்வேலையில் ஈடுபட்டால்தான் சமூகம் முன்னேற்றமடையுமென்றும், தன் கல்லூரிப் பத்திரிகையில், அவன் அழகான ஆங்கில நடையில் எழுதிய கட்டுரையை, அவனுடைய ஆசிரியர்கள் முதற்கொண்டு புகழ்ந்து கொண்டாடினார்கள். தானும் தன் வாழ்க்கையின் இரு பிரிவுகளான இல்லறம் தொழில்-இவைகளில் எப்போதும் அதே கருத்துடன் தன்னாலியன்ற மட்டும் மேனாட்டு எழுத்தாளர்போல உழைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டான்.

அதற்கேற்றாற்போல் அவன் இஷ்டப்படி மனைவியும் வாய்த்ததாகத் தோன்றிற்று. கல்யாண காலத்தில் பதினாலே வயசானவனானாலும் விசாலாக்ஷி நல்ல புத்திசாலியாக இருந்தாள். அழகுங்கூட அவன் மனம் போலவே அமைந்திருந்தது. அந்த வயசிற்கு ஏற்பட்ட ஊக்கத்துடனும் உணர்ச்சியுடனும் அவளைத் தன் மனப்போக்குக்கு ஒத்தவளாகச் செய்யக் கருதினான். மாமனாரின் உபத்திரவத்தால் பி.எல். பரீட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால் அந்தத் தொழிலின் ‘தில்லும்முல்லும்’ அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏராளமான ஏற்பாடுகளுடன் தன் சொந்த ஊராகிய மதுரையில் வசித்துக்கொண்டு, எழுத்தாளர்களின் தொழிலை ஆரம்பித்தான். உலகத்துக்கே வழி காட்டிகள் எனக் கருதப்படும் பெரிய எழுத்தாளர்களின் கொள்கைகளையெல்லாம் தீர ஆராய்த்து, அவற்றின் ஸாராம்சத்தை ஒரு புத்தகமாக இயற்றி வெளியிட்டான். ‘அடுத்த அடி என்று அதற்குப் பெயரிட்டான். அவ்வளவு சிரமப்பட்டுத் தான் அதை அவ்வளவு சிக்கலில்லாமலும் தெளிவாகவும் எழுதியிருப்பதால், அது உடனே ஜனங்களின் மனசில் பாய்ந்து பயனளிக்கு மென்று பரவச மடைந்து மேலும், ‘இந்தியக் கலைக்கோடி’, ‘புனருத்தாரணம்’ என்று இரண்டு நூல்கள் எழுதினான். முகவுரைகளின் தன் மனைவியின்றி அந்தப் புத்தகங்கள் வெளியாயிருக்கா என்று எழுதினான்.

உண்மையாக இந்தச் சரீரத்தின் தொல்லைகள் இல்லாவிட்டால் எவ்வளவு கவலையில்லாமலிருக்கும்! கனவுவகிவ் அப்படியே மிதக் கலாம் அல்லவா? புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதிக்கொண்டே இருக்கலாம் அல்லாவா? பாவம்! விசுவநாதனுக்கு ஒரே வருஷத்தில் வாழ்க்கையின் நெருக்கடி வந்து சேர்ந்துவிட்டது. புத்தகங்கள் பதிப் பித்ததில் ஐயாயிரம் ரூபாய் நஷ்டம். பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்காக இனாமாக அனுப்பிய புத்தகங்கள் போக, பாக்கி வீட்டில் சுட்டுக் கட்டாகக் கிடந்தன. கையிலிருந்த பணம் கரைந்தது. மனைவியின் நகைகளும் சில மறைந்தன. தாய் காசத்தால் இறந்தாள். மனைவி பிரசவ காலத்தில் இறக்கும் தறுவாயிலிருந்து பிழைத்தாள். செலவுகள்! ‘எழுத்தாளனுக்கு வறுமை கூடப் பிறந்தது’ – என்று எவ்வளவு தேறுதல் சொல்லிக் கொள்ள முடியும்? சிறுகதை எழுதினால் சோறாகுமா?

சமூகத்தில் இவ்வளவு படிப்பின்மையா! அறிவீனமா! சீ! இந்த நன்றி கெட்ட சமூகத்திற்காக நாம் ஏன் உயிரை விடவேண்டும் ? எழுத்தைப் போற்றாத ஒரு தேசமா உருப்படப்போகிறது ? இல்லவே இல்லை. எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும். வக்கீலாக இருந்தாலும் சுகமாக இவ்வறத்தையாவது அநுபவிக்கலாமே, வறுமையில்லாமல்?

ஆகவே இப்போது ‘எஸ்.விசுவநாதையர், பி.ஏ., பி.எல்., வக்கீல்’ என்ற பலகை வாசலில் தொங்குகிறது. கக்ஷிக்காரர்கள் கூடவல்லவா யோக்கியதையை அறிய மாட்டேனென்கிறார்கள்? அல்லது உலகந்தான் திடீரென்று கக்ஷியற்றுக் கவகமற்றுப் போய்விட்டா வரும்படி இல்லை… சோர்வு, கோபம், கவலை, வறுமை.

வாழ்க்கைக் காட்சி

‘என்னைத்தான் இப்படி நிறுத்தியிருக்கிறீர்கள். குழந்தைகள் எவ்வளவு தாள் இப்படி இருக்கிறது? ஆச்சு; நவராத்திரி வர்றது-ராஜத்துக்கு ஒரு புதுப் பாவாடைகூடக் கிடையாது’.

‘என்ன பண்ணச்சொல்லுகிறாய்?’

‘அன்றே சொன்னேன். எங்களூருக்குப் போவோமென்று’

‘போயிருந்தால் உங்கப்பன்.’

‘வேறொன்றும் ‘இல்லாவிட்டாலும்-‘

‘நான் எங்காவது போய்விடுகிறேன். உன் உபத்ரவம்’

‘நான் தொலைகிறேன். இதுகளை இழுத்துக்கொண்டு. நீங்கள் கொஞ்சநாள் சௌக்கியமாக இருங்கள்’.

‘அப்படியாவது தொலை!’

இப்பொழுது விசுவநாதையர் எதிலும் நம்பிக்கையற்றவராக இருக் கிறார். தேசீயத்தை எதிர்க்கிறார். ஜட்ஜுகளைத் திருப்தி செய்வதில் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஏதோ காலக்ஷேபம் நடக்கிறது போல் இருக்கிறது. ஆகையால்தான் ஒரு நாளிரவு தற்கொலை செய்து கொண்டாரென்று பத்திரிகையில் வரவில்லை.

– மணிக்கொடி,11.11.1934

Print Friendly, PDF & Email

1 thought on “மனக்கோட்டை

  1. Well written reflecting the times of the Authour.
    But on retrospective thinking how far we as a Society have become a Civil Society in 2023.
    No wonder our Lawyer Shri Viswanathaiyar committed suicide seeing the hopeless conditions around him (“Thillu Mullu”).
    In the current context instead of suicide born out of naive idealism ( 1934 ) everyone who wants to succeed in life in monetary terms is prepared to do anything and live by the ideals of Chanakya’s guidelines.
    Thanks for sharing .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *