நிழல் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 5,244 
 

இதுவும் நான் லக்னோவில் இருந்த போது நடந்தது.

அப்பாசாமி என் ஃப்ரெண்ட். பாட்டனியில் பி‌எச்‌டி செய்துகொண்டிருந்தான். அவன் guide லக்னோ யூனிவர்சிட்டியில் பெயர் வாய்ந்த புரொஃபசர். அப்பாசாமிக்காக ஒரு வீடு எடுத்துக் கொடுத்திருந்தார். அதிலே அவன் ஒரு சிறிய Lab வைத்திருந்தான். வீட்டைச் சுற்றியும் தோட்டம். இவனது ஆய்வுக்குத் தேவையான செடி கொடிகள்.

அவனது guide professorக்காக அந்த வீட்டில் ஒரு ஆஃபிஸ் இருந்தது. அப்பாசாமி அவர் ஸ்டூடண்ட் மட்டுமல்ல. அவருக்கான ஒரு செக்ரட்ரி கூட. அந்தப் புரொஃபசர் வெளிநாடு எல்லாம் போவார். அவர் சம்பந்தப்பட்ட தபால் எல்லாமும் அப்பாசாமிதான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அது தொண்ணூறுகளின் ஆரம்பம். அவன் எடுத்த வீடு சீதாபூர் ரோடில் இருந்தது. அது சற்று அமைதியான இடம்.

அவனும் என்னைப் போல ஒரு பேச்சிலர். நான் மஹாநகரில் குடியிருந்தேன். எங்களுக்குள் எப்படி நட்பானது என்று மறந்து விட்டது. ஆனால் வார இறுதிகளில் அவன் என் ரூமுக்கு வருவதோ நான் அவன் வீட்டுக்குப் போவதோ பழக்கம்.

ஒருமுறை அப்படி அவன் என் ரூமுக்கு வந்தபோதுதான் என்னிடம் ஒரு விஷயம் சொன்னான். அவன் அக்காவுக்கு திருமணம் நிச்சயம் ஆவது போல இருக்கிறதாம். குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது இவன் தர வேண்டும் என்று இவன் அப்பா கடிதம் எழுத்தியிருக்கிறாராம். என்னடா செய்வது என்று துக்கம் அழுத்த என்னிடம் கேட்டான்.

நான் என்ன சொல்வேன்? அந்தக் காலத்தில் எனக்கு பாங்கில் சம்பளம் சுமார் ஆயிரம் ரூபாய்தான். அதற்குள்தான் வாடகை, மெஸ் பில், டிரான்ஸ்போர்ட், டிரஸ் எல்லாமும்.

என்னால் முடிந்தது ஒரு ஆயிரம் ரூபாய் தரமுடியும் என்று சொன்னேன். அவன் என்னை வருத்தத்துடன் பார்த்தான். ஒன்று சொல்லவில்லை. சீக்கிரமே கிளம்பி தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

அதற்கு அடுத்த வாரம்தான் அந்தச் சம்பவம் நடந்தது. பாபர் மசூதி இடிப்பு. லக்னோவே பற்றி எரிந்தது. நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த மெஸ்ஸை மூடிவிட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பாசாமிதான் சொன்னான் தன் வீட்டுக்கு வந்துவிடும்படி. அவன் வீட்டில் கிச்சன் இருந்தது. ஏதாவது சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். எனக்கு சரியென்று தோன்றவே அவன் வீட்டுக்குச் சென்று விட்டேன்.

அவன் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய ஸ்வீட் ஷாப் இருந்தது. அதில் பால் பாக்கெட்டும் விற்பார்கள். அங்கிருந்து பால் வாங்கிக் கொண்டோம். அவனும் அதன் பிறகு கடையை மூடி விட்டான். அன்று இரவு வெகு நேரம் முழித்துக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்தோம். சுமார் ஒன்றரை மணியளவில் திடீரென்று வெளியில் ஒரே இரைச்சல்.

மாடி பால்கனியில் இருந்து பார்ப்பதற்காக வெளியில் வந்த எங்களை வியப்பில் ஆழ்த்தியது நாங்கள் கண்ட காட்சி. அப்பாசாமி வீட்டின் அருகில் இருந்த அந்த ஸ்வீட் ஷாப் திறந்திருந்தது. கடை வாசலில் ஐந்தாறு பேர் நின்றிருந்தார்கள் . அவர்கள் ஜிலேபி தின்று கொண்டிருந்தார்கள். சூடான பால் அருந்திக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அதில் ஒருவன் நிமிர்ந்து எங்களைப் பார்த்தான். ஸ்னேகமாக சிரித்தான். நானும் சிரித்தேன்.

பிறகு நாங்கள் உள்ளே வந்துவிட்டோம். சிறிது நேரம் கழித்து அந்தக் கடை மூடும் சப்தம் கேட்டது. அதன் பிறகு சிறிதுநேரத்தில் எங்கள் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம். போய் பார்த்தால் அந்தக் கூட்டம்தான் நின்று கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கு கான்பூர் போக வேண்டும். ஆனால் இன்றிரவு முடியாது. நீங்கள் அனுமதித்தால் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கிறோம் என்று வினோதமாக வேண்டுகோள் விடுத்தான் என்னை முன்னர் ஸ்னேகமாக பார்த்துச் சிரித்தவன்.

அப்பாசாமிக்கு அவ்வளவாக ஹிந்தி வராது. நான் மொழிபெயர்த்துச் சொன்னததும் சரியென்றான். அவர்களுக்கு ஒரு ரூமை ஒழித்துக் கொடுத்தோம். அவர்கள் வெகு ஆச்சர்யத்துடன் அவனது labஐ சுற்றிப் பார்த்தார்கள். அவன் குவியலாக வைத்திருந்த இலை தழைகளை பார்த்தார்கள்.

அப்புறம் வெளியில் வந்து சிறிதுநேரம் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் மதராசிகள் என்று தெரிந்ததும் பஹுத் தார்மிக் லோக் ஹோ ( very religious) என்றார்கள்.

அந்தச் ஸ்னேகச் சிரிப்பாளன் திடீரென்று என்னிடம் அப்பாசாமிக்கு என்ன பிரச்சனை என்று கேட்டான். என் வியப்புக்கு எல்லை இல்லை. என்னைப் பார்த்து சிரித்தான். நான் சொல்லலாமா வேண்டாமா என்று மனதுள் toss போட்டுப் பார்த்து பிறகு அப்பாசாமி விஷயம் சொன்னேன்.

அவன் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு அவர்கள் தூங்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்களும் எங்கள் அறைக்குச் சென்று விட்டோம்.

காலையில் விழித்துப் பார்த்தால் மணி ஒன்பது. வந்த விருந்தினர்கள் எங்களிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்றிருந்தார்கள்

நானும் அப்பாசாமியும் அந்தக் கடை திறந்திருந்ததால் டீ குடிக்கச் சென்றோம். எங்களுக்கு டீ தந்த கடைக்காரனிடம் என்ன திடீரென்று இரவு கடை திறந்தாய் என்று கேட்க அவன் சொன்ன பதில் என்னை உறைய வைத்தது. அதன் சாராம்சம் இதுதான்.

வந்தது மனிதர்கள் இல்லையாம். அவர்கள் Chalawa என்று ஹிந்தியில் அழைக்கபடும் நிழல்/ஆவிகளாம். ஆனால் சலாவா யாருக்கும் தீங்கு இழைக்காதாம். அமாவாசை இரவுகளில் அவை வெளியில் வருமாம். அந்த நாட்களில் கடை திறந்து வைப்பார்களாம். அவை இனிப்புப்பண்டங்களை விரும்பி உண்ணுமாம், அவை எந்தக் கடையில் உண்டதோ அந்தக் கடையில் வியாபாரம் மிக நன்றாக நடக்குமாம்.

இதைச் சொல்லிவிட்டு அவன் கேட்டான். உங்கள் வீட்டுக்கு சலாவா மனிதர்கள் வந்ததைப் பார்த்தேன். உங்களுக்கும் நல்லதே நடக்கும் என்றான்.

நாங்கள் ஒன்றும் சொல்லாமல் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தோம். ஹாலில் உட்கார்ந்து ரேடியோவில் செய்தி கேட்டோம். லக்னோவில் பல இடங்களில் curfew. செய்தி கேட்டுக் கொண்டு இருக்கோம்போது திடீரென்று ஒரு பொறி தட்டியது. நான் வேகமாக எழுந்து lab கதவைத் திறந்து உள்ளே சென்றேன்.

அந்த இலை தழை குவியலில் கையை விட்டு அளைந்தேன். பின்னாலேயே வந்த அப்பாசாமி ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்தான். அளைந்து கொண்டிருந்த கைகளுக்கு ஏதோ தட்டுப்பட அதை வெளியில் எடுத்தேன்.

நூறு ரூபாய் கட்டு ஒன்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *