குருதிக் கொடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 803 
 
 

ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம். மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. பூட்டியிருந்த மாளிகை போன்ற வீட்டு வாசல் படிக்கட்டில் பருமனான உடல்வாகு கொண்ட நடுத்தர வயது நபர் அமர்ந்து இருந்தார். அவரைச் சுற்றி நான்கைந்து இளைஞர்கள் இருந்தனர். ஓர் இளைஞன் பேசினான் :

‘மாணிக்கம் அண்ணன் வாக்கிங் போகும் போது எல்லாம் இந்த வீட்ல ஏன் உட்காராருன்னு….’

‘யார் கேட்டது சுரேஷ்’ என்றார் மாணிக்கம்.

மற்றொரு இளைஞன் ரமேஷ் சொன்னான்

‘இவனே தான் அண்ணே கேட்கறான்’

‘ஆமாம்பா நாளையிலிருந்து இங்க வரக்கூடாது. மாணிக்கம் ரொம்ப நாளா பூட்டி இருக்கும் வீட்டை அபகரிக்க பார்க்கறான்னு கிளப்பி விட்டுடுவாங்க ‘என்றார் மாணிக்கம்.

‘நீங்க சொக்கத் தங்கமாச்சே ஒங்கள யார் அப்படி சொல்லுவாங்க’ ரமேஷ் சொன்னான். அப்போது சைக்கிளை நிறுத்திவிட்டு ஓர் ஒடிசலான சூரிதார் உடை அணிந்த இளம்பெண் மாணிக்கம் அருகில் வந்தாள். படபடவென்று பேசினாள் –

‘என்ன மாமா.. பூட்டிய வீட்டு முன்னாடி என்ன பண்றே… இத்தனை பேரு கூட இருக்காங்க ட்ராமா ட்ரூப் ஆரம்பிச்சு இருக்கியா ஒத்திகையா… மூஞ்சிய ரப்பா வெச்சுக்காதே… உனக்கு நல்லா இல்லை… டான்ஸ் கிளாஸுக்கு நேரமாச்சு நான் வரேன்’

திரும்பிச் சென்ற அந்த இளைஞி, சைக்கிளில் ஏறி சிட்டாகப் பறந்து விட்டாள்.

‘என்ன இந்த பொண்ணு. என்கிட்ட இவ்ளோ உரிமையா பேசுது அன்னிக்கு நான் தியேட்டர் அருகில் நின்னப்ப ட்யூட்டிக்கு போகாம ஏன் இங்க நிக்கறே ன்னு கேட்டுச்சு… துப்பறியும் சிங்கம் தமிழ் தம்பி சொல்லு யார் இந்த பொண்ணு?’ என்றார் மாணிக்கம்.

தமிழ் தம்பி அவர் அருகில் வந்தான்.’இவன் துப்பறியும் ஓணான்னு சொல்லுங்க ‘ என்றான் ரமேஷ். தமிழ் தம்பி அவனை முறைத்துப் பார்த்தான்.

‘நீ சொல்லுப்பா ‘என்றார் மாணிக்கம்.

தமிழ் தம்பி பேசினான் –

‘அண்ணே உங்களைப் போல் ஒருவன் ‘

‘அப்படின்னா….’

‘அண்ணே இந்த பொண்ணு பேரு மீனா.. இவங்களோட தாய் மாமா பேராசிரியர் ஜெகன். . அவர் அச்சு அசலாக ஒங்கள மாதிரியே இருப்பாரு எம் ஆர் காலேஜ்ல ஒர்க் பண்றாரு அவர் ன்னு நெனச்சு ஒங்க கிட்ட இவங்க பேசிட்டு போறாங்க’

சுரேஷ் பேசினான் –

‘அண்ணன் மாணிக்கம் டிகிரி முடிக்க முடியாமல் போச்சுன்னு வருத்தப்படறாரு இல்ல.. டிஸ்டன்ஸ் கோர்ஸ்ல அண்ணண சேர்த்து விட்டு படத்துல வர்ற மாதிரி அவரை எக்சாம் எழுத வைச்சுடலாம் ‘ மாணிக்கம் அவனை முறைத்தார்.

‘அப்படித்தான் அந்த டிகிரியை வாங்கணுமா…? சரி வாங்க போகலாம்’

தூறலில் நனைந்தபடி அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தென்றல் மருத்துவமனை. அறுவை சிகிச்சை பிரிவு முன்னால் இளம்பெண் மீனா கவலையுடன் நின்று இருந்தாள். ஒல்லியான, நடுத்தர வயது கொண்ட செவிலிப் பெண்மணி அவள் அருகில் வந்தார்.’ சிஸ்டர்… அம்மா ஆபரேஷனுக்கு இரத்தம் கேட்டு வாட்ஸ் அப் ல போட்டு இருந்தேன்… யாரும் வரலை’ என்றாள் மீனா.

‘கவலைப்படாதே கண்ணு ஒங்க மம்மிக்கு பொருத்தமான இரத்தம் கிடைச்சுடுச்சு..இன்னிக்கே ஆபரேஷன் முடிஞ்சுடும்.. கொடுத்தவர் அதோ போறாரு பாரு அவர்தான்….’ என்றார் செவிலிப் பெண்மணி. அவர் காட்டிய திசையில் பார்த்தாள். மாமா.. என்று மீனா கூப்பிடுவதற்குள் அந்த உருவம் மறைந்து விட்டது. அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் மீனா.

சற்று நேரத்தில் பேராசிரியர் ஜெகன், மீனாவின் அருகில் வந்து நின்றார்.

‘மீனு.. அம்மாவுக்கு எப்படி இருக்கு? தேவைப்பட்ட இரத்தம் கிடைச்சுதா?’ கேட்டார்.

‘என்ன மாமா நீ இரத்தம் கொடுத்துட்டு நீயே கேட்கறே’

‘என்ன சொல்றே.. நான் இப்பதான் ஆஸ்பத்திரிக்கு உள்ளே நுழையறேன்’

‘அப்படின்னா… அவரு தான் கொடுத்து இருக்காரு….’

‘யாரை சொல்றே’

‘ஒன்ன மாதிரியே இந்த ஏரியால ஒரு பெரிய மனுஷன் இருக்காரு .. மாணிக்கம் சார்… நீன்னு நெனச்சி இரண்டு தடவை அவர் கிட்ட உரிமையோட கலாய்ச்சிட்டேன். அப்புறம் தான் அவரைப் பத்தி என் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க… அவர் தான் அம்மாவுக்கு இரத்தம் கொடுத்து விட்டு வந்தது தெரியாம போய்ட்டாரு….’

ஜெகனின் விழிகள் வியப்பில் விரிந்தது.’ நீ சொன்னா மாதிரி அவர் பெரிய மனிதர் தான்’ என்றார்.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *