கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 754 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பண்டாரம் என்னமோ சிவப்புத்தான். என்றாலும், அவனை அந்த அலுவலகத்தில், எல்லோரும் காக்கா’ என்றே அழைப்பார்கள். உருவத்தையோ நிறத்தையோ பொறுத்த அளவில், அவனுக்கும் காக்காவுக்கும் காத தூரம். சொல்லப் போனால் அவன் விசுவாசி. ‘ஆகாயத்தில் வெள்ளைக் காக்கை பறந்தது’ என்றால் ‘ஆமாம், நானும் பார்த்தேன்,’ என்று சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால் அது ஆபீசருக்குச் சரிநிகர் சமானமாய்ப் பேசியதாய் ஆகிவிடுமாம். ஆகைால், ‘நீங்கள் வெள்ளைக் காக்கையைப் பார்த்ததை நானும் பார்த்தேன்’ என்று கீழ்ப்படிதலாகத்தான் சொல்லுவான்.

இந்த அளவுக்குப் பக்குவமாக நடக்கும் பண்டாரத்திடம், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் மானேஜர், அவன் வசியத்திற்கு மசிவதாகத் தெரியவில்லை . அவன், ஒரு ஜெனரல் மானேஜருக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கக் வடாது என்று நினைத்தானோ, அத்தனையும் புதியவரிடம் இருந்தன. அவரிடம் இருந்த சுயமாகச் சிந்திக்கும் மூளை, நேர்மை, நாணயம், பாரபட்சமற்ற மனப்பான்மை ஆகிய பண்புகள், பண்டாரத்தின் வசிய ைேலக்குக் கடுக்காய் கொடுத்தன. அத்தோடு அவரிடம் பெண் மோகம் கடுகளவுகூடக் கிடையாது. இதுதான் பண்டாரத்திற்குப் பெரிய வேதனையாக இருந்தது. ஆசாமியை எப்படி மடக்கிப் போடலாம்…?

ஜெனரல் மானேஜர், ஊழியர்களை அறிமுகப் படுத்திக் கொள்வதற்காகவும், அவர்களின் பிரசினைகளைப் புரிந்து கொள்வதற்காகவும், ‘கான்பரன்ஸ் ஹாலில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். எல்லா ஊழியர்களும் முன்னதாகவே வந்து உட்கார்ந்தார்கள். பண்டாரம், வாசலுக்குப் பக்கத்தில் முதல் வரிசையில் முதல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். ஜி.எம்., தன் அறையிலிருந்து அடியெடுத்து வைத்தார். அவ்வளவுதான்,

பண்டாரம் அவரை நோக்கி ஓடினான். அவர்கையை இழுத்து ஒரு குலுக்குக் குலுக்கி, அவரோடு நடந்து வந்தான். ஊழியர்கள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் தான், மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். சுரேஷ் மட்டும் ‘சீச்சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு,’ என்று பாரதியாரிடம் போய்விட்டு, பிறகு இந்தப் பயல், நம்மவர்க்கத்துக்கே ஒரு அசிங்கம் என்று ,’ என்று பலமாகக் கூற, ஊழியர்கள் சிரித்தார்கள். சிலர் கேவலம் என்றார்கள். ஆனால், ஜெனரல் மானேஜர், பண்டாரம், தன்னிடம் வந்து கை குலுக்கியத்தைக் கேவலமாக நினைக்கவில்லை. அவன், ஊழியர் சங்கச்செயலாளராக இருப்பான். ஆகையால்தான் தன்னை எதிர் கொண்டு வரவேற்றிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டார்.

அலுவலர்களிடம் பேசினார் ஜி.எம்… உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசர அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். பண்டாரம் அன்று மாலையில் கழுத்துக்கு எண்ணெய் தடவி நீவிக் கொண்டான் என்றால், அவரின் பேச்சுக்கு எந்த அளவிற்குத் தலையாட்டியிருப்பான் என்பதை எடுத்துரைக்க வேண்டியதில்லை. ஊழியர்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என்று ஜி.எம். முடிவுரை கூறிவிட்டு பேச்சை முடித்தார். கரேஷ், ஏதோ சந்தேகம் கேட்க எழுந்தான். அதற்குள் பண்டாரம் ஜி.எம்.மின். அருகில் போய், ‘சோடா வேணுமா சார்?’ என்று ரகசியமாய்க் கேட்டான். அவர் வேண்டாமென்று தலையாட்டினார். ஊழியர்களின் மத்தியில் ஒரு லஞ்ச் கலகலப்பு’. பண்டாரம் ஏதோ யோசனை கூறி இருக்கிறான்… ஜி.எம். நிராகரித்து விட்டார்.

பண்டாரத்திற்கும் என்னவோ போலிருந்தது. இருந்தாலும் மனத்தைத் தளரவிடவில்லை . அப்போது பார்த்து பியூன், ஜி.எம்.மின் அறையில் இருந்து, ஏதோ செய்தி கொண்டு வருவதுபோல் வேகமாக வந்தான். பண்டாரம், எழுந்தான் . நடந்தான். பியூனை மடக்கி, அவன் கொடுத்த செய்தியைச் சுமந்து கொண்டு வந்து, ஜி.எம்மிடம், ‘உங்களுக்கு போன் வந்திருக்காம் சார், என்றான். அதற்கு, யார் பேசினாலும், ஒரு மணிநேரம் கழித்து போன் செய்யும்படி, பியூனை ரிப்ளை செய்யுமாரும், பண்டாரத்திடம் கூறினார்.

பண்டாரம் எளிமையானவன். ஆகையால்….. பியூனுக்கப் பதிலாக, அவனே ஜி.எம். அறைக்குப் போய் போனில் பதில் சொன்னான். போனில் பேசியவரை ஆழம் பார்த்தான். அப்படியாவது ஜி.எம்.மின். வீக்னெஸ்’ சங்கதிகள் கிடைக்குமா என்று குழைந்தும், இழைந்தும் பேசினான்…

ஊஹூம்… பண்டாரம் நேராக ஜி.எம்மிடம் வந்து, அவர் காதிற்கு மட்டும் கேட்கும்படியாக, ‘சொல்லிவிட்டேன் சார்’, என்று ஒரு பெரிய ரகசியத்தைத் தெரியப்படுத்தினான். அவரும், ‘தாங்ஸ்’ என்றார். ஊழியர்கள் வெவெலத்துப் போனார்கள். ஆக, புதிய ஆசாமியையும் பண்டாரப் பயல் பைக்குள் போட்டுக் கொண்டானா? அவன் சொன்ன யோசனையை அவர் அங்கீகரித்து விட்டார் போலிருக்கே…. இனிமேல் யார் யாருக்கு என்ன ஆபத்தோ? அவன் எத்னை பேரைத் ‘தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப் போகிறானோ…..? எத்தனை பேருக்கு ‘பெஸ்டிவல் அட்வான்ஸும்’ ‘இன்க்கிரிமென்டும்’ கிடைக்காமல் போகப் போகிறதோ?

பண்டாரமும் பொருமினான். இன்னும், அவன், ஜெனரல் மானேஜரைப் பிடிக்க வேண்டிய அளவிற்குப் பிடிக்கவில்லை. அவரும் பிடி கொடுக்க வேண்டிய அளவுக்குக் கொடுக்கவில்லை. எத்தனையோ பேரை ஒரே நாளில் மடக்கிப் போட்ட பண்டாரத்திற்கு, புதியவர் பிடிபடாமல் இருப்பது, தன்மானத்திற்கும் சுய திறமைக்கும் விடப்பட்ட சவாலாகத் தோன்றியது. அடிமேல் அடிவைத்தால் அம்மியே நகரும்… இந்த ஆசாமி மட்டும் என்ன விதி விலக்கா ….?

மறுநாள் காலை மணி பத்திருக்கும். பண்டாரம் அலுவகத்தின் வாசலுக்கருகே நின்று கொண்டான்.

எதிரே ஜி.எம். வந்துகொண்டிருந்தார். உடனே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். பராக்குப் பார்த்துக்கொண்டு இருப்பது போல் பாவனை விட்டான். பிறகு அப்போதுதான் ஜிஎம் மைப் பார்ப்பதுபோல பாவ்லா செய்து கொண்டு, சிகரெட்டை டப்பென்று அணைத்து விட்டு, ஆட்டோ ரிக்ஷா மாதிரி உடம்பை ஆட்டிக் கொண்டே, ஐ ஆம் சாரி சார். நீங்க வருவதைப் பார்க்காமே சிகரெட்டை’ என்று இழுத்தான். டில்லியில் தன் முகத்தில் படிந்த சிகரெட் புகைகளால் கண் எரிந்து, கண்ணாடி போட்டுக் கொண்ட மானேஜர், அவனைக் கனிவோடு பார்த்து முதுகில் தட்டிவிட்டுச் சென்றார். (பண்டாரத்திடம் இதுவரை புகை பிடிக்கும், கெட்ட பழக்கம் மட்டும் கிடையாது என்பதும், இப்போது பிடித்த சிகரெட்டால் ஒருவாரம் வரை , அவன் இருமினான் என்பதும் தெரிவிக்க வேண்டிய சங்கதிகளாகும்.)

இதனால், பண்டாரம் ஜி.எம்.மிடம் கொஞ்சம் நெருங்கி விட்டான். என்றாலும் நெருங்க வேண்டிய அளவுக்கு நெருங்கவில்லை.

ஜி.எம்.மின் கார் சர்வீஸுக்குப் போயிருப்பதை, கடன் வாங்கிக் காலம் தள்ளும் பியூன் மூலம் பண்டாரம் தெரிந்து கொண்டான். ஒரு ஸ்கூட்டரை நண்பனிடம் ஓசியாக வாங்கிக் கொண்டு, அவர் வீட்டருகே, தலைமறைவாக நின்றான். ஜி.எம்., ஒரு டாக்சியைக் கை தட்டி கூப்பிடப் போன சமயத்தில், பண்டாரம் ஸ்கூட்டரோடு தற்செயலாக வருவது போல வந்து, ‘ஏறிக் கொள்ளுங்கள் சார், என்று நெளிந்தான். அந்த நெளிவை

அவரால் தட்ட முடியவில்லை.

இருவரையும் ஒரே வண்டியில் பார்த்த அலுவலர்கள், அதிர்ந்து போனார்கள். ஜெனரல் மானேஜருக்காக அவர்கள் அடித்த சல்யூட்களை பண்டாரமும் தலையாட்டி அங்கீகரித்தான்.

ஜெனரல் மானேஜர், பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை பிஸியாக இருப்பார். யாரும் அவரை நெருங்க முடியாது… கூடாது. பிறகு ஓர் அரைமணி நேரம் ரிலாக்ஸ்’ செய்வார். மீண்டும் இரவு எட்டு மணி வரை பைல்களைப் பார்ப்பார். இதைப் புரிந்து கொண்ட பண்டாரம், மாலை ஐந்து வரை வெளியே சுற்றுவான், சரியாக இரவு ஏழரை மணிக்குத் தன் கதவுகளைத்திறந்துவைத்துக் கொண்டு – பைலை புரட்டுவான்.

பண்டாரத்தின் அறையைக் கடந்துதான் ஜெனரல் மேனேஜர் படியிறங்க வேண்டும். அந்த வழியாக வரும் அவர் முகத்தை வேறுபுறமாக வைத்துக் கொண்டால், அவரது கவனத்தைக் கவருவதற்காக இருமுவான். நாற்காலியை இழுப்பான். இரவில் தனித்து நிற்கும் ஜி.எம்., தவித்து நிற்கும் பண்டாரத்தைக் கனிவுடன் பார்ப்பார். சில சமயம் மறுநாள் காலையில் இன்னின்ன விஷயங்களைத் தனக்கு நினைவு படுத்தும்படி கூறுவார். மறுநாள் காலையில் அவருக்கு முன்னதாகவே பண்டாரம் அவர் அறையில் முன் வீட்டில் உட்கார்ந்து கொள்வான்.

ஆக, இப்போது பண்டாரம் ஜெனரல் மானேஜரை ஜேபியில் போட்டுவிட்டான். அலுவலகமே அவனைக் கண்டு ஆடியது. புதிய ஜெனரல் மானேஜரிடம் கண்ட நேர்மையாலும், டைப்பிஸ்டுகளைப் பார்த்து பல் இளிக்காத ஒழுக்கத்தாலும், பாரபட்சமற்ற நிர்வாகத் தாலும் ஏற்பட்ட புதிய காற்றை சுவாசித்த சில விசுவாச ஊழியர்கள் ‘ஜி.எம்., கரியமலவாயுவாகி விடக்கூடாதே’ என்று வருந்தினார்கள்.

நாட்கள் நகர்ந்தன.

இரவு மணி எட்டாகி விட்டதால், ஜெனரல் மானேஜர், தன் அறையை விட்டு எழுந்தார். பண்டாரம், தன் அறையில் இருமிக் கொண்டிருந்தான்.

“என்ன மிஸ்டர் பண்டாரம் ! டாக்டரைப் போய்ப் பார்க்கக் கூடாது?’ என்றார் ஜி.எம்.

“உழைக்கிறவனுக்கு ஒரு நோயும் வராது. வந்தாலும் போயிடுமுன்” னு நீங்க சொன்னது என் மனசிலே அப்படியே பதிஞ்சிட்டுது சார்… இந்த இருமலை உழைப்பாலேயே போக்கிடுவேன்.”

“அப்புறம் ஒரு விஷயம். நம்ம ஆபீஸிலிருந்து திறமையான ஒரு இளைஞனை பம்பாய்க்கு மாத்தணுமுன்னு மானேஜிங் டைரக்டர் எழுதியிருக்கார்…. யாரை அனுப்பலாம். மிஸ்டர் பண்டாரம்?”

பண்டாரம் சிந்தித்தான். சுரேஷ் பயல் வசமாய் மாட்டிக் கொண்டான். முகத்துக்கு எதிரேயே காக்காய் என்கிறவனை விட்டு வைப்பதா? ஒருநாள் ‘உனக்கெதுக்குடா பேண்டும் சட்டையும்? என்று வேறு இவனைக் கேட்டிருக்கிறான். டேய் சுரேஷ்! இந்த பண்டாரத்தையா பகைத்தாய்?

“மிஸ்டர் பண்டாரம்… யாரை அனுப்பலாம்? சும்மா சொல்லுங்க…. தயங்க வேண்டாம்.”

“நம்ம சுரேஷ் டயனாமிக் பெல்லோ சார்.”

“சுரேஷா…. நேற்றே அவர்கிட்ட கேட்டேன். பம்பாய்ல வீடு கிடைக்காது’ என்று அழாக் குறையாச் சொன்னாரு…”

“ஆபீஸ் விஷயத்துல அதெல்லாம் பார்த்தால் முடியுமா சார்? என்னோட சித்தப்பா பம்பாய்ல இரண்டு வீடு கட்டிக்கிட்டு வசதியாய் இருக்காரு… அவருக்கு , லெட்டர் எழுதி சுரேஷுக்கு ஒரு போர்ஷனை விடும் படியா ஏற்பாடு பண்ணிடுறேன்.”

“அதோடு, கரேஷுக்குக் கல்யாணம் ஏற்பாடாகப் போகிறதாம். அதனாலே முடியாதுங்கறார்.”

“அவன் யங் பெல்லோ தானே சார்? அடுத்த வருடம் பண்ணிக்கிட்டா போச்சு. குடியா முழுகிடும்?”

“அது மட்டுமில்லையாம். அவங்க அப்பாவுக்கு நோயாம். இவர் தான் ஒரே மகனாம்.”

“சாக்கு சொல்லணுமுன்னா ஆயிரம் சொல்லலாம் சார்…”

“ஓகேமிஸ்டர்பண்டாரம்! நான் யோசிக்கிறேன். தாங்க்யூ பார் யுவர் சஜ்ஜஷன் வாரீங்களா… வழியிலே டிராப் பண்ணிடுறேன்.”

“நோ, தேங்க்ஸ் சார். வேலை நிறைய இருக்கு நான் புறப்பட மணி பத்தாயிடும். எப்படி உழைக்கணும் என்கிறதுக்கு நீங்க முன்னுதாரணமாய் இருக்கீங்க.”

“குட் நைட் மிஸ்டர். பண்டாரம்.” “குட் நைட் ஸார்” பண்டாரம், ஆனந்தக் கூத்தாடினான்.

மறுநாள், பண்டாரம் அலறியடித்துக் கொண்டும், ஒரு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டும் ஜெனரல் மானேஜர் அறைக்குள் ஓடினான்.

“சார், கடைசியிலே என்னை பம்பாய்க்கு மாற்றி இருக்கீங்களே….”

“டேக் இட் ஈஸிமிஸ்டர். பண்டாரம். மிகத்திறமையான, அதே நேரத்தில் இரவு பகலுன்னு பாராமல், உழைக்கிற இளைஞரை அனுப்பணுமுன்னு இருக்கிறதுனாலே… உங்களையே அனுப்ப வேண்டியதாய்ப் போச்சு.”

“கரேஷ் என்னைவிட திறமைசாலி சார்…”

“இருக்கலாம். ஆனால் உங்களை மாதிரி அவராலே கஷ்டப்பட்டு உழைக்க முடியாது. நீங்க இரவு பத்து மணி வரைக்கும் வேலை பார்க்கிறதை, என் கண்ணால் பார்த்திருக்கேனே.”

“சார், சார், பம்பாயிலே வீட்டுப் பிரச்சினை பயங்கரப் பிரச்சனை.”

“உங்க சித்தப்பாவுக்குத் தான் ரெண்டு வீடு இருக்கே.”

“அது மட்டுமில்ல சார். இந்த ஆவணியில் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சார்.”

“நீங்க யங்-மேன்… அடுத்த வருஷம் பண்ணிக்கிட்டா குடியா முழுகிடும்”

“சார், சார். தயவு செய்யுங்க சார். அப்பாவுக்கு டி.பி. அம்மாவுக்கு ஆஸ்த்மா .. சிஸ்டருக்கு வளைக்காப்பு…”

“சாக்கு சொல்லணுமுன்னு நினைச்சா ஆயிரம் கிடைக்கும்.”

பண்டாரம், மழையில் நனைகிற காக்காய் மாதிரி ஆடினான். ஜெனரல் மானேஜரின் முகத்தில் படர்ந்த உறுதி, அவர், அவன் ஜிகினா வேலைக்கு மசியமாட்டார் என்று தெரிந்தது. மாற்றல் உத்தரவையே வெறித்துப் பார்த்தான்.

ஜெனரல் மானேஜரோ, ஆயிரம் பண்டாரங்களைச் சாப்பிட்டவர்போல் கன்னத்தை உப்பினார். பண்டாரம் எல் போர்டு ஆசாமி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வது மாதிரி, காலைத் தரையில் உதைத்துக் கொண்டே, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் வெளியேறினான்.

– குமுதம் – 1975

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *