இட ஒதுக்கீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 252 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அவர்கள், அம்பாசிடர் காரில் போகுமளவிற்கு கிளாஸ் ஒன்’ அதிகாரிகளும் அல்ல. அதே சமயம் அரசாங்க சைக்கிள்களில் சவாரி செய்யும் கிளாஸ் போர் ஊழியர்களும் இல்லை. அதோ அந்த அலுவலகம் முன்னால் நிற்கும் ஜீப்பில் ஏறக்கூடிய கெஜட்டட் அதிகாரிகள். இந்த வகையில் இரண்டுபேர். இவர்களுக்கு ஒத்தூதும் உதவியாளர்கள் இருவர். ஜூனியர் அஸிஸ்டென்ட்களோ அல்லது அஸிஸ்டென்ட் ஜூனியர்களோ… இன்னொருத்தர் காக்கி பாண்ட் காக்கி சட்டை வாலிபன். யூனிபாரமாக அதை போட்டிருந்தானா, அல்லது அதுதான் அவன் ஆடையா என்பது அவனுக்கே தெரியாது.

எல்லோரும் படியிறங்கி வந்து அந்த ஜீப்பையே மொய்த்தார்கள். காக்கிச் சட்டை வாலிபன் மட்டும் டிரைவர் இருக்கைப் பக்கம் நின்று ஸ்டியரிங்கை துடைத்துக் கொண்டு இருந்தான். அவர்கள் பேச்சு நிற்காது என்பது அறிந்தவன் போல் ஒரு துணியை எடுத்து இருக்கையை துடைத்தான். பிறகு ஜீப்பின் மோவாயை ஒரு தட்டுத் தட்டிப் பார்த்தான் . டயர்களை ஒரு அமுக்கு அமுக்கிப் பார்த்தான்.

இதற்குள் கெஜட்டட் அதிகாரிகளில் ஒருவர் அருகே தெரிந்த வெற்றிலை பாக்குக் கடையை நோக்கி நடந்தார். உயரம் குறைவு. உடல் சதை அதிகம். நடையோ நாட்டியம். ஜீப் அருகே நின்ற இன்னொருத்தர் உயரமும், சதையும் ஒரே வாகில் அமைந்தவர். ஆட்களை அமுக்கிப் பார்க்கும் கண்காரர். கடையைப் பார்த்துப் போன கண்களை, காக்கிச் சட்டை வாலிபன் பக்கம் திருப்பிவிட்டுக் கேட்டார்:

“யோவ் கந்தா, பெட்ரோல் போட்டுட்டியா?” “நேற்று நைட்லயே போட்டுட்டேன் சார்…”

“குட்… சில டிரைவருங்க புறப்படும் போதுதான் தும்மல் வாரது மாதிரி பெட்ரோல் பங்க பார்த்து விடுவாங்க. அப்புறம் நாளைக்கு நான் சொன்னது?”

“மறக்க மாட்டேங்க…. காலையிலேயே அம்மாவையும் பிள்ளிங்களையும் முருகன் கோயிலுக்கு…..”

“யோவ்…. ஏன்யா பராக்குப் பாக்கீங்க… ஜீப்புல ஏறுங்களேன்யா …”

அந்த அதிகாரி, டிரைவரிடம் பெட்ரோல் பற்றிக் கேட்டபோது அக்கறை காட்டாமல் நின்றுவிட்டு, அம்மாவையும் பிள்ளிங்களையும் அரசு ஜீப்பில் ஏற்றும் செயல்திட்டம் பற்றி அதிகமாய்த் தெரிந்து கொள்ள அந்த ஜூனியர் அஸிஸ்டென்ட்கள் சிறிது நெருங்கி நின்றது, அவருக்குப் பிடிக்க வில்லை . ஆகையால், அவர் குரலி ட்டதும், அவர்களும் அவர் சொல்வதை பயபக்தியோடு கேட்பதுபோல் பாவலா செய்துகொண்டு, பின்பக்கமாக ஜீப்பில் ஏறினார்கள். ஆனாலும், அவர்கள் கண்கள் என்னமோ இன்னும் அதிகாரி டிரைவர் உரையாடலில்தான் நிலைகொண்டது. ஜூனியர்கள் ஒருவர் கண்ணில் ஒருவர் முகம் படும்படி, கண்ணடித்துக் கொண்டார்கள்.

இதற்குள், டிரைவர் கந்தன், ஜீப்பை உரும வைத்தான். ஆனாலும் அவனிடம் பேச்சுக் கொடுத்த அந்த அதிகாரி, இன்னும் அதில் ஏறாமல், வெற்றிலை பாக்குக் கடையில் ” ஊதிக்” கொண்டு வந்த அடுத்த கெஜடட் அதிகாரிக்கு காத்திருப்பவர் போல் நின்றார். இந்தக் காத்திருத்தலுக்கு ‘ ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. எந்த அரசுஜீப்பிலும் ஜன்னலோர இருக்கையில் சீனியர் அதிகாரி உட்காருவார். அவருக்கும், டிரைவருக்கும் மத்தியில் ஜூனியர் உட்கார வேண்டும். கடையிலிருந்து வருகிறவரும், கிடையில் நிற்பது போல் நிற்பவரும், ஒரே ராங்க் அதிகாரிகள் வந்து கொண்டிருப்பவர், கெஜட்ட அதிகாரியாகப் பதிவி பெற்று, முப்பத்தைந்து வயதைத் தட்டியவர். நிற்பவர், கிளார்க்காகச் சேர்ந்து கெஜடட் ராங்கிற்கு வந்திருப்பவர். முன்னவர் நேரடி நியமனக்காரர். பின்னவர் புரமோட்டி’. இந்த இருதரப்பு புரமோட்டி – நேரடி நியமன அதிகரிகளுக்கும் இப்போது சீனியாரிட்டி சண்டை . விவகாரம் கோர்ட்டுக்குப்போயிருக்கிறது. அதுவரைக்கும் யார்யாருக்கு சீனியர் என்பது செட்டியார் முடுக்கு மாதிரி. ஆகையால் நின்று கொண்டிருக்கும் ஐம்பது வயதுக்காரர், வருகிறவரை ஜூனியராக அனுமானித்து அவரை உள்ளே தள்ளிவிட்டு, ஓரச் சீட்டில் உட்கார காத்து நின்றார். ஆனால், வருகிறவோதனது ஜீனியர் ஏன் இன்னும் நடுப்பக்கம் போய் உட்காராமல் இருக்கிறார் என்று சிந்தித்துக் கொண்டே வந்தார்.

நடப்பவர் நெருங்கியதும், நிற்பவர் கேட்டார்.

“உன் ஒய்ப்புக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னீயே…. இப்ப எப்படிப்பா இருக்குது?” (அப்படியாவது குசலத்துக்கு மயங்கி போய் உட்காருவான்னா என்று பார்ப்போம்) “சரி ஜீப்புல ஏறு, நீங்க ஏறினால் தானே நான் ஏற முடியும்?”

“ஊளைக்காற்று வீசுது பாரு…. எனக்கு கொஞ்சம் ஆஸ்துமா… ஒத்துக்காது. நீ மொதல்ல ஏறு…..

நின்றவருக்கு ஆஸ்துமா என்ற ஒரே காரணத்திற்காக, தான் நடுப்பக்கம் உட்கார இசைந்ததாக புரமோட்டி மீது ஒரு பரிதாபப் பார்வையை வீசிக்கொண்டே, ‘நேரடி நியமனம் முதலில் ஏறினார்.

டிரைவர் கந்தன், இருக்கையில் எகிறிக் குதிக்காமல், அவர்களைப் பயபக்தியோடு பார்த்துக் கொண்டே, பணிவோடு ஏறினான். அவனுக்கு அவசரம். பிள்ளைத்தாய்ச்சி பெண்டாட்டி. சீக்கிரம் திரும்ப வேண்டும். விபத்து கிபத்து நடக்காமல் இருப்பதற்கு, சாமியைக் கும்பிடுவது போல், அவன் கைகளை குவித்தபோது, அந்த பாடாவதி ஜீப் போட்ட சப்தம் அசல் அமங்கலமாய் ஒலித்தது.

எப்படியோ, அந்த ஜீப் அங்குமிங்குமாய் புதுமணப் பெண்போல் நாணிக்கோணி , மேடையாடும் ரிக்கார்டு ஆட்டக்காரிகள் போல் குதித்துக் குதித்து, மெயின் ரோட்டுக்கு வந்தது. டிரைவர் ஆக்ஸிலேட்டரை எழுவது கிலோ மீட்டருக்கு அழுத்தப் போனபோது, ஒரு வெள்ளை யூனிபார போலீஸ், வண்டிய நிறுத்தச் சொல்லி கையை குறுக்காகப் போட்டது. கந்தன் கேட்டான்:

“என்ன சார்…” “துரை கீழே இறங்கிப் பேச மாட்டீங்களோ….”

சிவபெருமான் கழுத்து பாம்புபோல் தன்னை நினைத்துக் கொண்ட கந்தன், அந்த கெஜட்டட் அதிகாரிகளைப் பார்த்தான். அவர்கள், அந்த வெள்ளைப் போலீஸை மிரட்டுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவர்களோ, அது அவன் பிரச்சனை என்பது போல் சொல்லி வைத்ததுபோல், வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டார்கள். பிறகு தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்களாம். அந்த எம்.எல்.ஏ. கலெக்டரை…. அடிக்கத்தான் வந்தானாம். ஆனா அப்போ கையில கிடைச்சது ஸ்டேனாதானாம்.’

கந்தன், வெறுப்போடு கீழே குதித்தான். வெள்ளைப் போலீஸ், அவனை சாலையின் மறுமுனைக்கு கூட்டிப்போனது. கந்தன் கேட்டான் :

“நான் என்ன சார் தப்புப் பண்ணினேன்?”

“அதுகூட உனக்குத் தெரியலையா? ஜீப்போட லைட்டு கண்ணைப் பறிக்கும்படியா பிரகாசமா இருக்கப்படாதுன்னு கவர்ன்மென்டல ஒரு ஜீ.ஓ . வந்திருக்கே… அதோ பார்… உன் ஜீப்பை ….”

“ஆமா சார்.. லைட்ட ஆப் செய்ய மறந்துட்டேன்…. சொன்னதுக்கு நன்றி சார்.”

“நன்றி வேணாம். அபராதந்தான் வேணும். ஆமா உன் பெயரென்ன?”

“தெரியாமத்தான் கேனே. லைட்டால கண்ணு கூசி அதினால் எதிர் வண்டிங்களுக்கு, இடைஞ்சல் வரக் கூடாதுன்னுதான், அரசாங்கத்துல இப்படி ஒரு கண்டிஷனக் கொண்டு வந்திருக்காங்க…. இப்போ பட்டப்பகலு. சூரியன் வேற கடுது. அந்த லைட்டு எப்படி சார் கண்ணக்கூச வைக்கும்?”

“கூடக்கூடவா பேசுறே…. சரி உன் பேரென்ன? எது பேசணுமுன்னாலும் கோர்ட்ல வந்து பேசு.”

“சார்…. சார்…. எனக்கு யாருமில்ல சார்…. இன்னும் நான் வேலையில் பெர்மனன்ட் ஆகலை சார். புதுசா கல்யாணம் ஆனவன் சார்.”

“உன்னைப் பார்க்க பாவமாத்தான் இருக்கு. அதோ முன்னால் இருக்கான் பாரு பொதிமாடு மாதிரி. அந்த ஆசாமிய இங்க வரச்சொல்லு… உன்ன இந்தத் தடவ மன்னிச்சிடணுமுன்னு என்கிட்டச் சொல்லச் சொல்லு…”

வெள்ளை போலீஸ் கையில் வைத்திருந்த பெரிய ரசீது’ புத்தகத்தைத் திறந்து அதன் மத்தியிலிருந்தபென்சிலை பாதிவரை தூக்கி, வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தது.

டிரைவர் கந்தன், அலறியடித்து ஜீப் பக்கம் ஓடினான். ஓர இருக்காரைக்காரர் ஓய்யாரமாகக் கேட்டார்:

“என்னையா தலையைச் சொறியரே?”

“அய்யா அங்கே வந்து என்னை விட்டுவிடும்படியா போலீஸ்காரர்கிட்ட சொன்னால், அவருவிட்டு விடுவாராம்ஸார்…”

“என்னய்யா நினைச்சுக்கிட்டான் அவன்? நான் கெஜட்டட் ஆபீஸர். அவன் கண்டைக்காய் டிராபிக் சார்ஜண்ட். நான் போய் அவன்கிட்ட கெஞ்சணுமா? போப்போ.. நீயுமாச்சு… அவனுமாச்சு…”

அவரை நம்ம முடியாததுபோல் பார்த்த கந்தன். சாட்சிக்காரனைவிட சண்டைக்காரன் தேவலை என்பதுபோல், அந்த சாலையின் மறுமுனைக்குச் சென்று வெள்ளை யூனிபாரத்தின் முன்னால் தலையைச் சொறிந்தான். அவரோ, அவன் பேசப் பேச கேஸ் புக்காகவும், கேஷ் புக்காகவும் பயன்படும் அந்த சார் ஷீட் புத்தகத்தைத் திறந்து அவனைப் பற்றிய புதுக்கவிதை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். கந்தன், அவர் மோவாயைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

“சார்… சார்… நான் இன்னும் பெர்மனன்ட் ஆகலை சார்…. கோர்ட்ல ஏதாவது ரிமார்க் வந்தா அம்போன்னு ஆயிடுவேன்… சார்….”

“அதோ இருக்காரே உங்க ஆபீசரு… அவன்கிட்ட சொல்லு. அவனால் உன்னை காப்பாத்த முடியுமான்னு பார்த்துடலாம்….. இந்தா பிடி….”

பழைய காலத்து முனிவர் போல், போலீஸ்காரர் கொடுத்த அந்த சாபக் காகிதத்தை, கந்தன் வாங்கிக் கொண்டு, சிறிது நேரம் நின்றான். பிறகு ஜீப் நின்ற பக்கம் வந்தான். அதில் ஏறிக் கொண்டான். எரிந்து கொண்டிருந்த லைட்டை ‘ஆப் செய்யவில்லை. ஜீப்பை விட்டான். “அடப்போய்யா… லைட்டு… பொல்லாத லைட்டு இந்த நாட்ல பகலே இருட்டாகுது….”

ஓரக்காரர் உபதேசித்தார்.

“ஒன் டூட்டியை நீதான் சரியாச் செய்யணும். அப்படிச் செய்திருந்தால் இப்டி மாட்டிக்க வேண்டாம் பாரு…. சரி… சரி….

ஜீப்பை பார்த்து ஒட்டு…”

ஜீப்பின் பின்னிருக்கையில் கிடந்த ஜூனியர் உதவியாளர்களில், ஒருத்தர் ஒட்டகங் சிவிங்கி மாதிரி தன் முகத்தை கெஜட்டட் அதிகாரிகளின் தலைகளுக்கு மத்தியில் நீட்டிக் கொண்டே, போலீஸ்காரருக்கு கந்தன்மேல் கருணை படாமல் இருப்பதற்கான காரணத்தைச் சொல்லாமல் சொன்னார்.

“அந்த டிராபிக் போலீஸ்காரர்… நம்ம ஆபீசுக்கு முந்தாநாள் வந்திருந்ததார்… ஏதோ ஒரு சலுகை கேட்டு வந்தப்போ, நீங்க அவர உட்காரக்கூடச் சொல்லலையாம். எங்கிட்ட வந்து எனக்கும் காலம் வரும் கவனிச்சுக்கிறேன் னு முனங்கிக்கிட்டே போனார்…”

“கெஜடட் ஆபீஸர் நான்… ஆப்டர் ஆல் அவன் ஒரு நான்- கெஜட்டட் சார்ஜண்ட்….. எப்படியா உட்கார சொல்ல முடியும்? எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே? யோவ்! வண்டியை ஸ்பீடா ஓட்டேன்யா…”

டிரைவர் கந்தன், கோர்ட்டில் வாங்கப்போகும் ரிமார்க்கைப் பற்றியே நினைத்ததால், ஜீப்பை ரிமார்க்க பிளாக ஓட்ட முடியவில்லைதான். ஆனாலும், அவன் ஒரு தொழில் விசுவாசி. அப்படிப் பட்டவர்களுக்கு எத்தகைய சிரமங்களும் தூசாகத் தெரியுமே அப்படிப்பட்ட தூசை துடைத்த தோரணையில் சிந்தனை வாதையிலிருந்து விடுபட்டு, ஜீப்பை ஏவினான்.

அந்த ஜீப், கடலில் கப்பல் மிதப்பது போல் சென்றது. முப்பது கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலையில் பாய்ந்து, அங்கிருந்து கப்பிச்சாலைக்குப் பிரிந்து, பிறகு ஒரு மண்சாலை வழியாக ஓடியது. ஒருமணி நேர ஓட்டத்திற்குப் பிறகு, மண் பாதையில் நடப்பதுபோல் நின்று, பிறகு மடமடவென்று பாய்ந்தது. அந்தச் சமயம் பார்த்து நம்ப முடியாமல் ‘பேய்மழை நானிருக்கிறேன்’ என்பது மாதிரி தரையில் இறங்கியது. மண்பாதையோ, உடனே ஜீப்பை தனக்குள் இறக்கியது. போதாக்குறைக்கு, ஜீப் மக்கர். கந்தன் எஞ்சினை ஏற்றிவிட்டு கீழே குதித்தான். ஜீப்பின் மோவாய் மாதிரியிருந்த பானெட்டைத் திறந்து, உள்ளேயிருந்த அதன் இயந்திரப் பற்களை அங்குமிங்குமாக ஆட்டினான். முன்னிருக்கைக் கெஜட்டட் அதிகாரிகள் முணுமுணுத்தார்கள். ஆனாலும் அவனை அரட்டவில்லை. காரணம், நான்கு நாட்களுக்கு முன்பே, வண்டிக்கு நோய் வந்திருக்கிற விவகாரத்தை இந்தக் கந்தன் அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் கண்டுக்கவில்லை.

கந்தன், சளைக்கவில்லை. டிரைவர் இருக்கையில் இருந்த ஒரு கத்தை ஸ்பேனர்களை எடுத்து ஜீப்பிற்கு வைத்தியம் செய்தான். அரைமணிநேர ஆப்ரேசனை கொட்டு மழையில் செம்மையாய்ச் செய்துவிட்டு இருக்கையில் ஏறிய கந்தன், வண்டி நகரத் துவங்கியதும் அனைவரையும் பெருமிதமாகப் பார்த்தான். ஆனால், உடலெங்கும் பாண்ட்டும் சட்டையும் அவன் உடம்பில் கோந்து மாதிரி ஒட்டிவிட்டது. தலையிலிருந்து மழைத்துளிகள் தோளில் சொட்டின….

அந்த மழையின் வேகத்தைப் போலவே, ஜீப்பும் பறந்தது. கல்லும் மண்ணும் கலந்த யூனியன் சாலையில் தக்காரும் மிக்காரும் இல்லாமல் ஓடியது. பிறகு ஒரு கண்மாய்க்கு அருகே நின்றது. அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஓடி, ஒரு கசிவு நீர்க்குட்டையின் பக்கம் கரையை உராய்ந்தபடி குந்தியது. பிறகு ஒரு பத்துக்கிலோ மீட்டர் ஓட்டம். ஆனால் அதற்கு மேல் போக முடியாதபடி, ஒரு சின்னப் பாலம் உடைந்து, தண்ணீர் வெள்ளம் அந்த உடைப்புகளின் இடுக்குகளின் வழியாகப் பாய்ந்தது. ஒரு கிளை பாதை வழியாகப் போகலாம் என்றால், அதன் குறுக்கே ஒரு காட்டு வாகை மரம் விழுந்து கிடந்தது.

வேறுவழியில்லாமல், அந்த ஜீப் வந்த வழியில் திரும்பியது. ஜீப்பில் வைப்பர்’ வேறு அவுட். ஆனாலும் கந்தன், தனது கைக்குட்டையால் அதைத் துடைத்துத் துடைத்து வழிதேடி ஓடினான். அந்த கெஜட்டட் அதிகாரிகளுக்கும், ஒரே பசி வெள்ளத் சேதத்பை பார்வையிட வந்த அவர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தனது அலுவலகத்தில் மட்டன், சிக்கன், வடை, பாயாசம் ஆகியவற்றுடன் காத்துக் கொண்டிருப்பார். ஆனால், பாழும் பாலம் எந்த நேரத்தில் கீழே விழுந்ததோ அவர்கள் வயிற்றை அடித்துவிட்டது. இப்போது நடுபக்க கெஜட்டட் ஆணையிட்டது.

“கந்தா! வழில ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து ஜீப்ப நிறுத்து”

கந்தனுக்கும் பசி… காலையில் சாப்பிடவில்லை . அவன் புறப்படும்போது பிள்ளைத்தாய்ச்சி மனைவி கத்தினாள். ” இப்படி ராவும் பகலும் வேலை பார்த்தா உடம்பு என்ன ஆகும்?” என்று கேட்டாள். அவனும், இப்படித்தான் ஆகும் என்பதுபோல் திருப்பிக் கத்தினான். அவள் கொடுத்த இட்டலியை உடனடியாக உட்கொள்வது, அவனுக்கு நாகரீகமாகத் தோன்றாததால், வெளியேறிவிட்டான். இப்போது, கொட்டும் மழை. நேற்றைய மழையிலேயே அவனது வீட்டுத்தரை, மனைவியின் வயிறு மாதிரி உப்பியது. இப்போது எப்படி இருக்குதோ….. இருக்காளோ…..

அந்த ஜீப், ஒரு சாதாரண டவுன் வழியாக அங்குமிங்கும் ஆடியாடி போனது. பல ஹோட்டல்களை கழித்து விட்டும், கடந்துவிட்டும், ஒரு முனியாண்டியின் முன்னால் அதற்குக் கட்டுப்பட்டு நிற்பதுபோல் நின்றது. எல்லோரும் இறங்கினார்கள். அவசர அவசரமாய் ஓட்டலுக்கும் புகுந்தார்கள். ஒரே கூட்டம். சாப்பிடுகிற ஒவ்வொரு ஜீவராசிக்கும் அருகே, இன்னொருத்தர் நின்று கொண்டிருந்தார். அப்படியும் எவரும் இடையில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக சாப்பாட்டு டோக்கன் காகிதங்களை எச்சில் டேபில்களில் ஒட்டி வைத்திருந்தார்கள். அதோடு சாப்பிட்டு முடிந்தவர்களோ, நாற்காலிகளை விட்டு நகராமல் ஜம்மென்று இருந்தார்கள். எவன் வெளில போய்… மழையில் நனைவான்?

டிரைவர் கந்தன், கல்லாவில் இருந்தவரின் காதைக் கடித்தான்.

அதிகாரிகளைச் சுட்டிக்காட்டி, அவர்கள் எப்பேர்பட்டவர்கள் என்று விளக்கினான். உடனே கல்லாக்காரர், சாப்பிடுபவர்களின் கைகள் கீழே போகும்போது அவர்களது வாழை இலைகளையும், மேலே போகும்போது அவர்களது வாய்களையும் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளின் முன்னால் போய் சல்யூட் அடித்தார். பிறகு அவர்களை பேமிலி ரூமிற்குள் கூட்டிப்போய், அங்கே பீடா போட்டுக் கொண்டிருந்த இருவரை தூரத்திவிட்டு, உட்கார வைத்தார். ஒரே ஒரு மேஜை… நான்கு நாற்காலிகளில் இரண்டில் வேகன்சி. கெஜட்டட் அதிகாரிகள் அதில் எதிரும் – புதிருமாக உட்கார்ந்தார்கள். ஜூனியர் அசிஸ்டெண்ட்கள் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டார்கள். கந்தனுக்குத்தான் இடமில்லை. அவன் காத்திருந்தான். இடமிருக்கிறதா என்று எல்லா இடங்களையும் கண்ணால் நோண்டினான்…. காலி இல்லை.

கந்தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்டாட்டியை நினைத்துக் கொண்டும் பசிப்பிரசவவேதனையில் அல்லாடினான். இதற்குள் புரமோட்டி’ கெஜட்டட் அதிகாரியின் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து கோழி பிரியாணி சாப்பிட்ட ஒருவர் எழுந்துவிட்டார். ஆசாமிக்கு குமட்டல் கந்தன் டபக்கென்று அதில் உட்கார்ந்தான். மியூசிக்கல் சேர் போட்டியில் உட்காருவார்களே அப்படி…..

புரமோட்டி கெஜட்டட் ஆபீஸருக்கு வாயில் கடித்துக் கொண்டிருந்த கோழித்துண்டுக்கு மேல் கோபம் கொப்பளித்தது. கெஜட்டட் ஆபீஸருக்கு இணையாக எப்படி உட்காரலாம்? இன்டிசிப்பிளின் … வாய்க்குள் இருந்த கோழிக்கறி வெளியே நாக்குமாதிரி துருத்தும்படி, கண்டிப்பாகச் சொன்னார்.

“இந்தாப்பா… உனக்கு வேற பக்கத்தில் இடம் கிடைக்கலையா?”

இதுவரை டிரைவரிடம் அதிகமாகப் பேசாத நேரடி நியமனமும், அவனுக்கு அறிவுரை சொன்னது.

“வேற பக்கமா போய் உட்காரேன்…”

கால் வலித்த கந்தன், இப்போது மனம் வலித்து எழுந்தான். இதற்குள் அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஜூனியர் அஸிஸ்டென்ட்கள் தத்தம் இருக்கையில் இருந்து எழுந்து இரண்டு மொட்டை நாற்காலிகளை ஒரே இருக்கையாக்கி அவனை தங்கள் பக்கம் வரும்படி கையசைத்தார்கள். அவனுக்கு இட ஒதுக்கீட எதிர்மறையால் செய்துவிட்டு, எஞ்சிய இடங்களில் உட்கார்ந்தார்கள். கந்தன் அவர்களைப் பார்த்துத் தலையாட்டினான். பிறகு தலையைத் தொங்கப்பொட்டுக்கொண்டே வெளியேறினான். அவனுள் எழுந்த சீற்றமோ , சிறுமையோ ஏதோ ஒன்று அவன் பசியைப் புசித்துவிட்டது.

வெள்ளச் சேதத்தை ஈடுகட்டுவதற்குப் பதிலாக வயிற்றுச் சேதத்தை ஈடுகட்டிய கெஜட்டட் அதிகரிகள், பீடாவைக் குதப்பிக் கொண்டே வெளியே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இருக்கையில் இருந்து கீழே குதிக்கும் கந்தன் ஜீப்பில் அசையாமல் இருப்பதைப் பார்த்தவிட்டு ஆச்சரியப்பட்ட புரமோட்டி ஆபீஸர் அவனுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

“கெட்டிக்காரன்யா நீ… இதுக்குள்ள சாப்பிட்டுட்டியே….. நாராயணா….ஏறேம்பா….”

“ஒரு சேஞ்சுக்கு இப்போ நீங்க உட்காருங்களேன்.”

நடுப்பக்கத்து நேரடி நியமன நாராயணன் ஓரங்கட்டி நின்றபோது, ஓரங்கட்டி நின்றவர் சிறிது யோசித்துவிட்டு பின்னர் ஜீப்பில் ஏறி நடுப்பக்கம் உட்கார்ந்தார். அவர் ஓரத்திற்கு வந்துவிடக் கூடாதே என்பதுபோல் அடுத்தவரும் உடனடியாய் ஏறினார்.

“கந்தன் சாவியை போட்டு ஜீப்பை உருமவிட்டான். ஆனால், அது உருமி உருமி மீண்டும் நிசப்தம் ஆனது. சங்கலிக் கோர்வையாய் சப்தமிடவில்லை. உடனே, கந்தன், கீழே குதித்து பேனட்டை திறந்து எஞ்சின் தலையில் தட்டினான். அதிகாரிகள் அவனை பொருள்பட பார்த்த போது, இவன், ஒரு அலட்சிய பார்வையை வீசியபடியே, மீண்டும் இருக்கையில் குதித்தான். சாவியை திருப்பினான், இப்போது லேசான உருமல் கூட கேட்கவில்லை. கந்தன் சிறிது அதிகார தோரணையிலே ஆணையிட்டான்.

‘சார் வண்டியில டைனமோ கோளாறு தள்ளி விட்டாத்தான் ஓடும்’.

அந்த இரண்டு அதிகாரிகளும் எஞ்சி உள்ள அலுவலர்களும் கீழே இறங்கி, ஜீப்பை தள்ளோ தள்ளு என்று தள்ளுகிறார்கள். கந்தன், பல்லக்கில் உட்கார்ந்து இருப்பதுபோல் சும்மாவே இருந்தான். இனிமேல் தான் ஜீப்பிற்குள் சாவியை திருப்ப வேண்டும்.

கந்தன், சாவியைத் திருப்பியபடியே, அருகே உட்கார்ந்த புரமோட்டி அதிகாரியிடம் காதைக் கடிக்காமல், ஜிப்புக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, வழிப்போக்கர்களுக்கும் கேட்கும்படி விவரம் சொன்னான். பணிவுக்குரலில்தான் பேசினான். அதேசமயம், பின்புறம் திரும்பி, சாட்சிகளை வைத்துக் கொண்டு பேசுவதுபோல் பேசினான்.

“சார்! நாளைக்கு நீங்க கேட்டது மாதிரி ஒங்க வீட்டுக்கு வரமுடியாது சார்.. அம்மா கோயிலுக்கு போறதுக்கு வேற ஏற்பாடு செய்துக்கலாம்… இனிமேல், அபிசியலாத்தான் ஜீப்போ காரோ ஓட்டுவேன். இல்லாட்டி, நானும் மாட்டிக்குவேன் பாருங்க….”

– செம்மலர் 1992

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *