‘உண்மை’யில் எரிபவள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 921 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஊரின் பொதுவிடமான பிள்ளையார் கோவில் முகப்பில், பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருமே, அங்கு போடப்பட்டிருந்தபெஞ்சுகளில் உட்கார்ந்திருக்க, சின்ன மனிதர்கள் என்று கருதப்படுகிறவர்கள், அங்குமிங்குமாக நின்று கொண்டிருந்தார்கள். பெரிய மனிதர்கள் வந்து விட்டார்களே தவிர, மகாப் பெரிய மனிதர்கள் இன்னும் வரவில்லை. எப்போது வரவேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த அந்த உள்ளூர் லேட்’ தலைவர்களுக்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார யாருக்கும் தைரியம் வரவில்லை. ஒரு நாற்காலியில் உட்காரலாமா என்பது மாதிரி அதன் விளிம்பில் கைவைத்த ஒரு “முன்னாள் ” தலைவரை பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு ‘இந்நாள்’ தலைவர் பார்த்த பார்வையில், பார்க்கப்பட்டவர், நாற்காலியில் அழுக்குப் படிந்திருப்பதை பாரார்த்து விட்டு, மனம் பொறுக்காமல் துடித்ததற்கு அத்தாட்சியாக தன் துண்டை எடுத்து அதைத் துடைத்தார்.

இதேபோல சின்ன மனிதர்கள்தான் அங்கே நின்றார்களே தவிர, மகா சின்ன மனிதர்களை அங்கே காணவில்லை. வரவேற்பு வளைவை கட்டுவதிலும், தரிசனம் தரப்போகிற அதிகாரிகளுக்கு ராஜ நாற்காலிகளைத் தூக்கிப் போடுவதிலும், தின்பண்டங்களை தயாரிப்பதிலும் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். இன்னொன்று. இந்த மகா சின்ன மனிதர்களில் – பெரும்பாலோர், வயல் வரப்புக்களில் குளத்து மேடுகளில் அல்லாடிக் கொண்டிருக்கிறவர்கள்… அவர்கள் வரவில்லை . ஏன் வரவேண்டும்? அவர்களுக்குத்தானே அதிகாரிகள் வருகிறார்கள்!

உண்மையில் எரிபவள் ஆயிற்று.

எல்லாம் வந்துவிட்டன. எல்லாரும் வந்துவிட்டார்கள். ஜீப் சத்தத்தைத்தான் காணவில்லை. அந்தக் காலத்து விருந்தோம்பல் பொருட்களாக, நுங்கிற்குப் பதில் “ஐஸ் கிரீம் ” கள், அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இளநீர்களுக்குப் பதில், ‘பேண்டாக்கள்… பதனீருக்குப் பதில், ‘பாம்கோலாக்கள்’ ஒரு கூடை நிறைய பூமாலைகள்… அவற்றின் மேலே செண்டுகள். அவற்றிற்கும் மேலே எலுமிச்சம் பழங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலே எலுமிச்சைப் பழம் மாதிரி கண்களைத் துருத்திக்கொண்டு, ஊர் முனையையே பார்த்துக் கொண்டிருந்த பழைய பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், புதிய தலைவராக வரத்துடிக்கும் கனகலிங்கம், பள்ளிக்கூட மானேஜர் இசக்கி முத்து, கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள், பிராஞ் போஸ்ட்மாஸ்டர்ராமசுப்பு, நாட்டாண்மை பெருமாள் முதலிய மகாப் பெரிய மனிதர்கள், நாற்காலிகளில் உட்கார முடியாமலும், எழுந்திருக்க முடியாத நிலையிலும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“பால் ரெடியா இருக்கா” என்றார், பழைய பஞ்சாயத்து.

“பேசாமல் டவுனிலிருந்து ‘ஆவின்’ பாலே கொண்டு வந்திருக்கலாம்” என்றார் புதிய பஞ்சாயத்து.

“ரெண்டும் இருந்தாலும் தப்பில்லியே” என்றார் பழைய கர்ண ம்.

“இல்லாவிட்டாலும் தப்பில்லை’ என்றார் பதவி போனாலும், காணத்திடம் உள்ள பகையை மறக்காத பழைய முன்சீப்.

“பாலு பத்தாதுன்னு நினைச்சேன். ஏன்னா, ஒரு வேளை… ‘ஆர்.டி.ஓவும்’ வரலாமுன்னு தாசில்தார் என்கிட்டே சொன்னார்” என்றார் பழைய பஞ்சாயத்துத் தலைவர்.

“டி.டி.ஓ.வும்’ (டிவிஷனல் டெவலப்மெண்ட் அதிகாரி) வரலாமுன்னு பீ.டி.ஓ.’ என்கிட்ட சொன்னார்” என்றார் பஞ்சாயத்தின் எதிர்காலம்.

அதிகாரிகளின் பதவிப் பெயர்களைவிட, ‘என்கிட்ட’ என்ற வார்த்தைக்கே, இருவரும் அதிகம் அழுத்தம் கொடுத்து, அங்கேயே முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்குவது போல் தோன்றியது. இந்தச் சமயத்தில், ஒரு இடக்கு – மடக்குவாதி ” எதுக்கும்….. நிறைய பாலு வாங்கி வைக்கலாம்… சர்க்கார் போல அவங்க குடிக்க வராவிட்டால் .. அவங்க போல நாம குடிக்கலாம்” என்றார் – நாக்கைச் சப்பிக்கொண்டே, பிறகு ” அப்போ மட்டும் நமக்கா இந்தப் பயலுவ பால் தருவாங்க…. நாற்காலியில் ஒக்காந்திருக்கிறவங்க. ஒரே மொடக்கா குடிச்சுப்பட மாட்டாங்களா என்ன…” என்று நினைத்தவர்போல், உதட்டைத் துடைத்த நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டார்.

நேரம் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, ஜீப்சத்தம் கேட்கவில்லை. அந்த ஊருக்குள் எந்த ஜீப்பும் நுழைவதற்கு முன்னால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே, இழவு மேளம் மாதிரி சத்தம் கேட்கும். எதிரொலி கொடுக்கும் வகையில் பாறைகளை ஊர் உள்ளடக்கி வைத்திருப்பதே காரணம். இன்னும் சத்தத்தையே காணோம். எப்போ வந்து…. எப்போ பேசி…

தன்னிறைவுத் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழோ அல்லது மனு நீதித் திட்டம் என்ற ஒன்றின் கீழோ, ஏதோ ஒன்றின் கீழ், பெரிய அதிகாரிகள் அன்று ஊருக்கு வந்து முகாம் போட்டு மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து, முடிந்தால் அங்கேயே ஆவன செய்யவேண்டும் என்பது ஏற்பாடு. இதற்காக எப்பாடு பட்டாவது அதிகாரிகள் வரப்போகிறார்கள். நோட்டீஸ் அச்சாகி விட்டது. அது போதாதென்று தண்டோரா போட்டு சுற்றுப்புறமெங்கும் சொல்லி யாகிவிட்டது. அதிகாரிகள் வந்த பிறகு, கிராமத்தில் தேனும் பாலும் ஓடும் என்று சொல்லியாகிவிட்டது. சொன்னதுக்கு ஏற்ப பால் (அதிகாரிகளுக்கு) காய்ந்து கொண்டிருந்தது. தேனுக்குப் பதிலாக, கேசரி புரண்டு கொண்டிருந்தது. இன்னொரு பிரமுகர் வீட்டில், கோழிகள் சதை சதையாக வெந்து கொண்டிருந்தன.

திடீரென்று வண்டி வரும் சத்தம் கேட்டது. பெரிய மனிதர்கள் எழுந்து நின்றார்கள். மிகப்பெரிய மனிதர்கள், நான்கடி தூரம் முன்நோக்கி ஓடிப்போய் நின்றார்கள். சின்ன மனிதர்கள், சிறிது ஒதுங்கி நின்று கொண்டார்கள்.

வந்தது வண்டிதான். காண்டிராக்டர் துரைச்சாமியின் மோட்டார் பைக் . வரும்போதே இதோ வந்துக்கிட்டே இருக்காங்க’ என்று சொல்லிக்கொண்டே, வண்டியை அவர் ஓடித்த வேகத்தில், சற்று தொலைவில், போட்டிக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த எருமை மாடுகள் கூட , ஜீப்பை வரவேற்கப் போவதுபோல், ஊர்முனையைப் பார்த்து ஓடின. புதுப்பணக்காரரும், ஒரே சாதியில் “இரப்பாளிவம்சத்த” சேர்ந்தவருமான காண்ட்ராக்டர்மாசானம், ஒரு நாற்காலியில் உட்காரப் போனபோது, சில பெரிய மனிதர்கள், வெற்றிலைச் சாரை வெளியேற்றும் சாக்கில் ‘தூ’ என்றார்கள்.

எல்லோரும், ஜீப்பை எதிர்பார்த்து, கண்களை காக்க வைத்தபோது, நான்கைந்து பேர் தலைகளில் விறகுக் கட்டோடும். புல்லுக்கட்டோடும் வந்து கொண்டிருந்தார்கள். எந்தப் பயல்கள் வந்தாலும் நம்ம பொளப்பு மாறப்போறதில்ல. சீக்கிரமா நடங்கடா என்று ஒரு நடுத்தர விவசாயத் தொழிலாளி முணுமுணுத்தபோது ‘தலைக்கட்டு’ கூட்டம் தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. ஆனால், தலையில் விறகை வைத்திருந்த முனியம்மா மட்டும், அங்கே யாராவது விறகு வாங்குவார்களா என்று நினைத்ததுபோல், நெற்றியில் வழிந்து, கண்களுக்குக் விழப்போன வேர்வையை, வலது கை ஆள்காட்டி விரலால் கண்டி விட்டுக்கொண்டே, எம்பிப் பார்த்தாள். அறுபது வயதுக்காரி; விதவை. சொந்த பந்தம் இல்லாதவள். அவளைப் பார்த்துவிட்ட கண்டிராக்டர் மாசானம், “முனியம்மா… செத்த நேரம் நில்லு… ஒனக்கும் நல்ல காலம் பிறக்கப்போகுது…” என்றார்.

‘எனக்கா’ என்பது மாதிரி, அகலவாய் பிரித்து அவள் பார்த்த போது, திசைமாறிய தலையில் விறகுக்கட்டு தடுமாறியது. காண்டிராக்டர் கண்களைச் சிமிட்டிக் கொண்டே பேசினார்.

“ஆமாம் பாட்டி… அதிகாரிங்க ஊர்ப்பிரச்சினையைத் தீர்க்க வராங்க. ஒனக்கு முதியோர் பென்ஷன் கொடுக்க ஏற்பாடு பண்ணலாம். தாசில்தார்கிட்ட நீயும் சொல்லு. நானும் சொல்றேன்…”

இரண்டு மூன்றுபேர், மாதா மாதம் ஏதோ பணம் வாங்கப் போவதாகக் கேள்விப்பட்டிருந்த முனியம்மா, விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு, அதன் மேலேயே உட்காரப் போனாள். பிறகு அப்படி உட்காருவது அவள் செய்யும் தொழிலுக்கு மரியாதைக் குறைவானது என்று நினைத்தவள்போல், கிழிந்த புடவையை கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொண்டே நின்றாள். பெரிய மனிதர்களில் ஒருவர், காண்டிராக்டரின் விலாவில் இடித்து, “ஓமக்கு தராதரம் தெரியமாட்டக்கே” என்றபோது, காண்டிராக்டர் “சொம்மா கிடயும்… மந்திரிங்க எல்லாம், ‘டவுன் டிராடன்” – அதாவது ஏழைபாளை ஏழைபாளைன்னு பேசுற காலம். நாமும் , ஊர்க்கூட்டத்தில் ஏழைகபாளைங்கள் சேர்த்திருக்கோமுன்னு தெரியாண்டாமா?” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு பேசப்போனவர் திடீரென்று எழுந்தார்.

ஜீப் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஜீப் தெரிந்தது. அடேயப்பா…. ஒரு ஜீப் அல்ல. நான்கைந்து ஜீப்கள் வந்தன. ஒவ்வொன்றிலும் ஏழெட்டு அதிகாரிகள்….

முன்கூட்டியே , முகப்பில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய வீட்டுச் சின்னப் பிள்ளைகள், அதிகாரிகளுக்கு, சந்தன தட்டையும், வெள்ளைக் கற்கண்டு தாம்பாளத்தையும் காட்டின. அதிகாரிகள் பூசிக் கொண்டும், மென்று கொண்டும் ராசாதி ராச கம்பீரமாய் தயாராக இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

மாவட்ட கல்வி அதிகாரியின் மேல், மானேஜர் கண்களை விட்டார். இதேபோல் டெவலப்மென்ட் ஆபீசர்மேல், இரண்டு ‘பஞ்சாயத்து போட்டி’ப் பிரமுகர்களும், டெப்டிரிஜிஸ்டிரார்மேல், கூட்டுறவு சங்கத் தலைவரும், மாவட்ட சிறு தொழில் அதிகாரிமேல் உள்ளூர் பீடித் தயாரிப்பாளர்களும், என்ஜினீயர் மேல் காண்டிராக்டரும், தத்தம் கண்களைச் செலுத்தினார்கள். அவர்கள் பக்கத்தில் போய் உட்கார இடம் கிடைக்குமா என்பது மாதிரி தாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளை தள்ளிக்கூடப் பார்த்தார்கள். மாவட்ட குடும்பநல அதிகாரிமீதுதான் , யாரும் கண்வைக்கவில்லை. அவர்தான், கேஸ் கிடைக்குமா என்பது மாதிரி சற்று தொலைவில் வயிறு உப்பிய பெண்களைப் பார்த்தார்.

சிறிது மௌனம்.

வரவேற்பு நிகழ்த்துபவர்போல், பழைய கூத்தாடியும், இன்றைய பண்ணையாருமான ஒருவர், “ராமன் கால்பட்டு, அகல்யைக்கு விமோசனம் வந்ததுபோல், ஒங்க கால்பட்டாவது இந்த ஊருக்கு விமோசனம் வரட்டும்” என்றார். அவர் சொன்னது சரிதான் என்பது மாதிரி ஊர் பிரமுகர்கள் அத்தனை பேரும் கல்மாதிரி இருந்தார்கள்.

முனியம்மாவுக்கும் மகிழ்ச்சி அதிகரித்தது. ஆபீசர் எஜமான்கள் சிரிக்கிற சிரிப்பைப் பார்த்தால், அவளுக்கும் முதியோர் பென்ஷன் கிடைக்கும் என்று நம்பினாள். ‘பணம் மாசா மாாசம் வருமாமே…. எப்படியோ… இந்த விறகு வெட்டுற வேலைய நிறுத்தணும். கழிசடத் தொழில். சீ…. அப்டில்லாம் பேசப்படாது. பணம் வருதுன்னு கண்ணுமண்ணு தெரியாம ஆடப்படாது. விறகு வெட்டுறது கஷ்டமுன்னால், புல்லாவது வெட்டணும்.”

அதிகாரிகள் அந்தஸ்து எப்படி இருந்தாலும் அதிக அதிகாரங்களை வைத்திருந்த ரெவின்யூ டிவிஷனல் ஆபீசர், “சரி…. பட்டுப்பட்டுன்னு ஒங்க குறையைச் சொல்லுங்க” என்றார்.

உடனே ஒரு பிரமுகர், “பள்ளிக் கட்டிடத்துல மழை வந்தால் ஒழுகுது. வேற ஒன்று கட்டிக்கொடுக்கணும்” என்றார். இதற்குப் பதிலளிப்பதுபோல் மாவட்ட கல்வி அதிகாரி, “இங்கே தனியார் பள்ளிக்கூடம் இருக்கு. இதுக்கு நாங்க கட்டிடம் கட்ட முடியாது…. கூடாது” என்றார்.

பள்ளி மானேஜர், பழைய பகையை புதிய விதத்தில் காட்டிப் பேசிய பிரமுகரை முறைத்துப் பார்த்துக்கொண்டே, டெப்டி இன்ஸ்பெக்டரைப் பார்த்து இளித்தார். எல்லோருக்கும் புரிந்துவிட்டது. பள்ளிக் கட்டிடத்தைப் பற்றி பேசினால், மானேஜர் இசக்கிமுத்து இடிந்துவிடுவார். வேண்டாம், நம்ம ஊர்க்காரன்”. நீண்ட மௌனம்.

முனியம்மா, தன் அனாதரவான நிலையைக் கூறி, முதியோர் பென்ஷனைப் பற்றி பேசப்போனாள். பிறகு யோசித்தாள். ‘ஊர் விவகாரந்தான் முக்கியம். சொந்த விவகாரம் அப்புறம். பள்ளிக்கூடம் இடிந்து விழப்போவுதுன்னு ஏதோ கேட்டாங்க. அப்புறம் ஏன் பேசாம இருக்காங்க. நாமளாவது யோசன சொல்லணும். பாவம்… முன்னால் மதுரையில் செத்தது மாதிரி வாழப்போற குழந்தை செத்துடப்படாது. பாரு…..’

முனியம்மா, சத்தம் போட்டே பேசினாள்.

“ஏன் சாமி யோசிக்கிய? இசக்கிமுத்து பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க முடியாதுன்னா அதுவே சின்னப் பிள்ளிய எல்லாத்துக்கும் பெரிய சமாதியா ஆயிடும். நீங்களே மடத்தூர்ல இருக்கது மாதிரி ஒரு பள்ளிக்கூடத்த ஆரம்பிக்கக் கூடாதா? பிள்ளியளுக்கும் மத்தியானச்சோறு கொஞ்சமாவது கிடைக்கும். இசக்கிமுத்துதான் என்ன பண்ணுவான்? அவ்வளவு வாத்தியாருக்கும் சம்பளம் கொடுக்கணும். அவங்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கதுக்கே படாதபாடு படுறான்.”

எல்லோரும், முனியம்மாவைப் பார்த்தார்கள். இசக்கிமுத்து, பல்லைக் கடித்தார். கிழவி, சம்பளம் சரியாகக் கொடுக்கவில்லை என்பதிலிருந்து மத்தியானச் சாப்பாடு போடாதது வரை சொல்லிட்டாளே. கிழட்டுச் செறுக்கி… இருடி இரு…’

முனியம்மா, அப்பாவித்தனமாகச் சிரித்தாள். எல்லோரையும் களங்கம் இல்லாமல் பார்த்தாள். திகைத்துப் பார்த்த அதிகாரிகளை ஒரு தலைவர் திகைக்காமலே பார்த்தபடி, “பாவம் ஏழைக்கிழவி எதையும் தெரியாம பேசுவாள்” என்றார். அதிகாரிகள் பயத்தோடு சிரித்தார்கள்.

முனியம்மா யோசித்தாள். ‘பென்ஷனைப் பற்றிப் பேச, இதுதான் சாக்கு சொல்லட்டுமா…? தப்பு. ஊர்விவகாரம் மொதல்ல முடியட்டும்.’

பள்ளிக்கட்டிடத்தைப் பற்றி பைசல் செய்யாமலே , “கூட்டுறவு சங்கத்துல எல்லாப் பொருளும் சரியா கிடைக்குதா?” என்றார் கூட்டுறவு அதிகாரி.

எல்லோரும் மௌனமாக இருந்தபோது, கூட்டுறவுச் சங்கத் தலைவர், தன் தொடையில் கிள்ளிய வலி தாங்க முடியாத ஒரு பிரமுகர், “எல்லாம் கிடைக்குது. எப்பவும் கிடைக்குது” என்றார்.

நீண்ட மௌனம். முனியம்மா யோசித்தாள். ஒரு யோசனையும் சொன்னாள்.

“எங்க சாமி சரியா கிடைக்குது? பெருமாள்தான் என்ன பண்ணுவான்? வெளியூர்ல இருக்க ஹோட்டல்காரங்க கூட, அவன் கிட்டவந்து அரிக்கிறாங்க. இவங்க உபத்திரம் தாங்க முடியாம, நேத்துக்கூட , ஒரு மூட்டை சர்க்கரையை வண்டிலே ஏத்தி அனுப்புறான். நீங்க நிறைய கொடுத்தால் ஊர்சனத்துக்கும் அவன்

ஏதோ கொடுப்பான்… இல்லியா…? அதிகமா கொடுங்க சாமி.”

பிரமுகர்கள், இப்போது முனியம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். ‘கிழவி திட்டம் போட்டுப் பேசுகிறாளா? யாரும் தயார் பண்ணி விட்டிருக்காங்களா?

முனியம்மா, இப்போதும் களங்கமில்லாமலே சிரித்தாள். சிறிது தைரியப்பட்டவளாய், கூட்டத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டாள். அந்தச் சமயத்தில் பழைய பஞ்சாயத்துத் தலைவர், “எல்லா ஊருக்கும் பஸ் வந்துட்டுது. எங்க ஊருக்கு இன்னும் வரல. கொஞ்சம் சீக்கிரமா…” என்று இழுத்தார்.

போக்குவரத்து சம்பந்தப்பட்ட அதிகாரி, ஏதோ பதிலளிக்கப் போனபோது, முனியம்மா குறுக்கே புகுந்தாள்.

“பஸ்ஸு கிடக்கட்டும். தட்டுப்பாறை ரோட்ட மொதல்ல கவனிங்க. ஊர்த் தெருவைப் பாருங்க…. மூணு வருஷமா ஒரு வண்டி மண்ணுகூட அடிக்கல. பஸ் வந்தா திரும்பிப் போவாது.”

மாவட்ட என்ஜினீயர், காண்டிராக்டரையும், யூனியன் எஞ்ஜினீயரையும் ஒரு மாதிரிப் பார்த்தார். மூன்று மாதத்திற்கு முன்புதானே, பத்தாயிரம் ரூபாய் எஸ்டிமேட்டில் வேலை நடந்ததாகப் பில்’ வந்தது. அவர் ஏதோ சொல்லப்போனபோது, காண்டிராக்டர் சுதாரித்துக் கொண்டார்.

“நம்ம முனியம்மா… திக்கில்லாத கிழவி. முதியோர்பென்ஷன் கொடுக்கணும். பாட்டி விவரமா… அய்யாமாருங்க கிட்ட ஒன்னப் பத்திச் சொல்லு…”

முனியம்மா, விவரமாகச் சொல்லப் போனாள். அப்படிச் சொல்வதற்கு ஆயத்தமாக தலையை நிமிர்த்தியபோது, தற்செயலாக வெளியே முப்பது வயது மாயாண்டி சற்றுத் தொலைவில் நொண்டிக்கொண்டே போவது தெரிந்தது. ‘பனை மரம் மாதிரி இருந்தவன்; இப்போ கோணத் தென்னை மாதிரி ஆகிட்டான். நாமாவது விறகு சுமந்து பொழைப்போம்; அவன் வேலைக்கு கீலைக்கு போக முடியாமல் அவஸ்தப்படுறான்…. அவன் விவகாரத்த மொதல்ல பேசலாம்.’

முனியம்மா, அங்கிருந்தபடியே கத்தினாள்.

“ஏய்… மாயாண்டி…. யாரும் ஒன்ன அடிக்க மாட்டாங்க. சும்மா வாடா. பன்னாரிப்பய மவன்.. பாக்கான் பாரு. வாடா….. ஒனக்கு நல்ல காலம் பிறந்துட்டு… ஓடியாடா… ஓடியா…”

எல்லாரும், அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதுமாதிரி, பைத்தியக்காரத்தனமாய் சிரித்தார்கள். முப்பது வயது மாயாண்டி, என்ன செய்யலாம் என்று யோசித்தான். பிறகு, முனியம்மாவின் பேச்சுக்குக் கட்டுப் பட்டவன் போல், முதலில் மெள்ள மெள்ள நடந்து, பிறகு வேகமாக வந்தான். வந்தவனின் கையைப் பிடித்துக் கொண்டே, முனியம்மா அரற்றினாள்.

“பாருங்க சாமி. இவன் ஆறு மாசத்துக்கு முன்னால், அடியும் தலையும் ஒரே மாதிரி ராசா மாதிரி இருந்தான். சொம்மாக் கிடந்தவனை ‘குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கடான்னு…. இழுத்துக்கிட்டு போனாங்க. என்ன பண்ணுனாங்களோ தெரியலே. வலிக்குதுன்னு துடிச்சான். அறுத்துப்போட்ட ஆஸ்பத்திரிக்கு பலதடவை போனான். எல்லாரும் நாளைக்கு வா நாளைக்கு வான்னு சொன்ன துல… இப்போவ இவன் சாவுறதுக்கு நாளைக்கோ இன்னைக்கோன்னு ஆயிட்டான். பிள்ள குட்டிக்காரன். ஏதாவது பண்ணுங்க சாமி… ஒங்க ஆளுங்க, ஆள அறுக்கதுக்கு காட்டுற வேகத்த, அப்புறம் காட்டமாட்டக்காங்க. பன்னாடப்பய மவனே…. எசமாங்ககிட்ட சொல்லேண்டா…”

மாயாண்டி, பேசத் திறனின்றி தலையைச் சொறிந்தான். இதற்குள் உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவர், எதுவும் பேசாதே என்பதுபோல், தன் வாயில் ஆள் காட்டி விரலை வைத்து அடித்தார். மாயாண்டி புரிந்து கொண்டான். புரியாத முனியம்மா மாயாண்டிக்காகப் பரிந்து பேசினாள்.

“பயப்படுறான் சாமி… போன வாரம், இவங்க சேரிக்கும்…. எங்களுக்கும் சின்னத் தகராறு. எங்க ஆளுங்க, இவங்கள் ஊருக்குள்ள வரப்படாதுன்னு… வழியில் முள்ள வச்சு அடைச் கட்டாங்க. இவங்க, இப்போ இந்தப் பக்கம் வாரது இல்லே. இவன் எப்படியோ வந்துட்டான் . நீங்கதான் இந்த விவகாரத்தையும் தீர்த்து வைக்கணும்… சாமிமாரே. இல்லான்னா, சேரி ஆளுங்களுக்கும் எங்க ஆளுங்களுக்கும் சண்ட வந்து, பத்து கொலையாவது விழும். ஏல மாயாண்டி ! எப்டி, ஆப்ரேஷன் பண்ணாங்க…. அப்புறம் என்ன ஆச்சுன்னு தர்மதுரைங்ககிட்ட… சொல்லுடா…. இப்போ சொல்லாட்டா… ஒன் கோளாறு எப்போதான் தீரும்? ஊருக்குள்ளே வந்ததுக்காவ , எங்க ஆட்கள் அடிக்க மாட்டாங்க…. சும்மா சொல்லுடா…”

ஊர்ப் பிரமுகர்கள், ஒன்றானார்கள். பஞ்சாயத்தின் கடந்த கால, எதிர்காலத் தலைவர்கள், ஒருவரையொருவர் ஆதரவாகப் பார்த்துக் கொண்டார்கள். ‘கிழட்டுக் செறுக்கிக்கு என்ன திமிரு இருந்தால், இப்படி பேசுவாள்…. ஊர்க்காரங்களையே காட்டிக் கொடுக்காளே….’

காண்டிராக்டர், அதிகாரிகளை நோக்கிக் கனிவாகப் பேசினார்.

“அடடே… நேரமாகிட்டே… மொதல்ல சாப்பிட்டுட்டு வந்துடுவோம். அப்புறம் பேசலாம்.”

எல்லாரும் ஆனந்தப் பரவசத்துடன் எழுந்தார்கள். கோழிகள் கருகிய வீட்டைப் பார்த்து மெல்ல நடந்தார்கள்.

கூட்டம், மெள்ள மெள்ளக் கரைந்தது.

முனியம்மா, விறகுக் கட்டிலில் கைபோட்டு, ஒரு கல்மேல் உட்கார்ந்தாள். மாயாண்டி, அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். விருந்துக்குப் போக முடியாத சிலர், அவளை விரோதத்துடன் பார்த்தார்கள். முனியம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘தன் பேச்சுக்கு யாருமே மறுபேச்சு பேசலியே…. ஏன்… அதிகாரிங்க பேசல… பாவம், பசியில் வந்திருப்பாங்க… சாப்பிட்டுட்டு வரட்டும். இந்த மாயாண்டி பயலைப் பத்தி ‘அடிச்சுப் பேசணும். நம்ம பென்ஷனப் பத்தியும் கேக்கணும்.’

எங்கேயோ நகரப்போன மாயாண்டியின் வேட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டே “இருடா…. இப்ப வந்துடுவாங்க…” என்றாள்.

ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.

தரையின் சூடு தாங்காமல், விறகுக்கட்டே பற்றி எரியப்போவதுபோல் சுட்டது. முனியம்மா எழுந்து நின்று எட்டி எட்டிப் பார்த்தாள். ‘அதோ… வாசலுக்கு வெளியே அதிகாரிங்க வந்துட்டாங்க… ஏய்மாயாண்டி நீயும்… ஒன் நிலைமையை அடிச்சுக் சொல்லுடா…. என்ன இது… ஜீப்பு வண்டிங்க… ஊரவிட்டு ஓடுது. போயிட்டாங்களா – ஒருவேள் சாயங்காலம் வருவாங்களோ – பாவம் வெயிலாச்சே…’

முனியம்மா, மாயாண்டியை போகவிட்டு, தானும் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளை வழியனுப்பி வைத்துவிட்டு, ஊர்ப் பிரமுகர்கள் கூட்டம், அவளை நோக்கி வந்தது. முனியம்மா , விகற்பம் இல்லாமல் கேட்டாள்.

“சாயங்காலம் வருவாங்களா…?” காண்டிராக்டர், உடனே பதிலளித்தார்.

“ஆமாம். ஒன்னப் பார்க்க சாயங்காலம் வாராங்க. ஒனக்கு மாசம் நூறு ரூபாய் பென்ஷன் தருவாங்களாம்.”

முனியம்மாவால் நம்ப முடியவில்லை . ‘நூறு ரூபாயா…. மாரியம்மா… தெய்வமே… நீ நிசமாவே தெய்வந்தாண்டி’ அந்தக் மூதாட்டி, வயது வித்தியாசத்தைப் பார்க்காமல், காண்டிராக்டர் காலில் விழப்போனாள். உடம்பு இருந்த சோர்வில், அவளால்

அப்படி செய்ய முடியவில்லை. மனம்விட்டு கூவினாள்.

“ஏதோ…. ஒன் புண்ணியம் ராசா…. இந்த மாயாண்டிப் பயலுக்கும்….”

“தனி ஆஸ்பத்திரியிலே…. காட்டி, இவனை மட்டும் கவனிக்கப் போறாங்களாம். சாயங்காலம் வரப்போறாங்க. எங்கேயும் போயிடாதீங்க. அறிவு கெட்ட முண்ட… இருக்க இடம் கொடுத்தால், படுக்க இடமா கேக்குற..? திருட்டுச் செறுக்கி….”

முனியம்மாள் திடுக்கிட்டாள். பிரமிப்புடன் காண்டிராக்டரைப் பார்த்தாள். அவர்பற்கள், ஒன்றுடன் ஒன்று பிராண்டின. இதற்குள் ஊர்ப் பிரமுகர்கள் வாய்க்கு வந்தபடி கேட்டார்கள்.

“ஒன்ன… எவன் பேசச் சொன்னான்? சர்க்கரையைப் பற்றிய எதுக்குடி பேசுற? ரோடு எப்டி இருந்தா ஒனக்கென்ன நாயே…? கையெழுத்துக்கூடப் போடத் தெரியாதவளுக்கு பள்ளிக் கூடத்தப்பத்தி பேச என்ன யோக்கிய இருக்கு? சேரிப் பசங்கள் வரவிடாமல் வழியை அடச்சத… எதுக்குழா சொன்னே ? ஏல…. மாயாண்டி எதுக்குல… ஊருக்குள்ள வந்தே…? ஓடுல….. ஏய்கிழட்டுச் செறுக்கி! என் நிலத்துல போட்டுருக்க குடிசையை ராத்திரியோட ராத்திரியா எடுத்துடணும். இல்லன்னா…. அங்கேயே வச்சு.. ஒன்னை எரிச்கடுவேன்.”

முனியம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுவுமே ஓடவில்லை. எதுக்காக திட்டுதாவ. என்னத்த அப்படிச் பெரிசா பேசிப்பிட்டேன். இதனாலயாருக்கு நஷ்டம்? அடமாரியம்மா… நான் என்னத்தடி அப்படிப் பேசிப்பிட்டேன். வழியில் கிடக்க ஓணான எடுத்து மடில போட்ட கதையாப் போச்சே. இதுவரைக்கும் ஒரு சொல் கூட வாங்காத என்னை, ஒரேயடியா வாங்கவச்சுட்டியேடி.’

முனியம்மா, தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த மாயாண்டியைப் பார்த்தபோது, தலைவர்களில் ஒருவர், “இப்ப மட்டும் இந்தப் பயலால எப்டி ஓட முடியுது? குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனால் நடக்க முடியலன்னு நடிச்சிருக்கான். இந்த கிழட்டுச் செறுக்கியும் எப்டி நடிச்சுட்டாள் பாருங்க… என்றார்.”

எவரோ ஒருவர் முனியம்மாவை அடிக்கப் போனார். இன்னொருவர் அவரை பிடிக்கப் போனார். சிறிது அமைதி…. பிறகு எல்லோரும் போய்விட்டார்கள் ஒற்றுமையாக.

முனியம்மா ஊர்ப் பெரிய மனிதர்கள் முதுகுகளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ‘எதுக்காவ, பேய்ப்பயலுவ… பேய்மாதிரி ஆடுறானவ? என்ன நடந்தது இப்போ ? அதுவும் நானா வரல்லியே. அவன்தான் கூப்பிட்டாள்…. பேகனதுல இது இது தப்புன்னு சொன்னால் அர்த்தம் இருக்கு… அர்த்தம் இல்லாம திட்டுறதுல என்ன இருக்கு? குடிசையை வேற எரிப்பேன்னு மிரட்டுறான். எரிச்சால் எரிக்கட்டுமே. ஈமச் செலவு மிச்சம்.’

அறுபது ஆண்டுகால, உயிர் அங்கேயே பிரிந்து போனதுபோல், முனியம்மா கண்கள் தெறிக்க , நாக்கு துடிக்க, அப்படியே நிலையிழந்து நின்றாள். கண்கள் திறந்திருந்தாலும் எல்லாம் இருட்டாகி, தானும் இருட்டானதுபோல தோன்றியது. சிறிது நேரத்திற்குப் பிறகு விறகுக் கட்டைப் பார்த்தாள். அதுவும்

அவள் பேசிய உண்மையைப் போல், மரத்துக் கிடந்தது.

உண்மை என்ற தர்மத்தை தன்னை அறியாமலே தலையில் ஏற்றுபவள்போல் அவள், விறகுக் கட்டைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு…..

அந்த விறகாலேயே, தன் உடம்பை, தானே எரிக்கப் போகிறவள் போல் போய்க்கொண்டிருந்தாள்.

– தினமணிக் கதிர், 18-12-1981

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *