ஆற்றல்மிகு கரத்தில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 612 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனதிலே சகிக்க முடியாத வேதனைகள் ஏற்படும் போதெல்லாம், வேலன் இப்படித்தான் செய்து கொள்கிறான். எத்தனையோ வேதனை களை, எத்தனையோ தடவைகளில் அவன் இப்படித்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறான்.

சுடுகாட்டுப் பக்கமாக இருக்கும் ஆலடி வயிரவருக்கு முன்னால் வந்து உருண்டு, புரண்டு கண்ணீரைக் கரையவிட்டு, ‘வயிரவா, சுடலை வயிரவா’ என்று குரல் வைத்து, விம்மித் தீர்த்துக் கொள்கிறான். ஆனால், இன்றையவரை அந்த வயிரவன் அவனுக்கு, ஒரு வழியையும் காட்டி வைக்கவில்லை. வயிரவன் எப்படிக் கல்லாய்ச் சமைந்திருக் கிறானோ! வயிரவன் மட்டுமல்ல, ஊரில் யாருமே வேலனின் குரலுக்கும், செய்கைக்கும் மதிப்பு கொடுப்பதுமில்லை; பெரிதுபடுத்துவதுமில்லை.

இரவெல்லாம் வேலன் இப்படித்தான் செய்து கொள்வதும், புலம்புவதுமாக இருப்பான். நன்றாக விடிவதற்கு முன்னாலேயே, எந்தத் தாக்கத்திற்கும் உட்படாத வழமையான மனிதனாகத் தோளில் துண்டை எடுத்து, அரையில் வரிந்து கட்டிக்கொண்டு, அப்பாவியாக – எந்தவித சலனமும் இன்றிப் போய்விடுவான். ஆனால், இன்றோ அவன் அந்த அன்றாட நிலைக்குப் புறம்பாக, வயிரவனுக்குமுன்னால் பிடிவாதத்தோடு பழி கிடக்கிறான். விடிந்தும் வெகுநேரம் ஆகிவிட்டது. இரவெல்லாம் அழுது, அழுது அவன் கண்கள் உப்பிப் போயிருந்தன.

***

அறிவு என்ற ஒன்று தெரிந்த பருவத்தில் கந்தப்புக்கமக்காரன் வீட்டில், ‘தாய்’ என்ற ஒரு உருவம் அவனை இட்டுச் சென்றுவிட்டு வந்ததாக ஞாபகம். பின்பு, அந்தத் ‘தாய்’ என்ற அவளும் செத்துப் போய்விட்ட தாகத் தகவல்.

இதன் பின், சுமார் பத்தாண்டுக் காலம் வேலன் கமக்காரன் வீட்டு அடிமையாக இருந்தான்.

அம்மாள் வேலனின் முதுகில் குத்துவாள். சின்னக் கமக்காரன் வேலனின் பிடரியில் அடிப்பான். சின்னக் கமக்காரிச்சி வேலனின் செவிகளைப் பிடித்துத் திருகுவாள். சுமக்காரன் வீட்டுக் குழந்தை குட்டிகள் வேலன்மீது எச்சில் துப்பி வேடிக்கை பார்ப்பார்கள். இவை எல்லாவற்றையும் பெருமனது பண்ணிப் பொறுத்துக் கொள்ளவேண்டும்!

காலை பத்து மணிக்குமேல், பழங்கஞ்சியும், பனாட்டும். நடுப் பகலுக்கு மேல், தட்டுவத்தில் ஓரளவு சோறும் கறியும். இரவு வந்து விட்டால், எரிந்தோ, கருகியோபோன அடிப்பாத்திரத் தீனிகள்!

உடுப்பு என்ற விதத்தில், அரையோடு ஒட்டிப்போய்க் கிடக்கும் நவமுட்டுத் துண்டு! தலையில் தடவிக்கொள்ள எண்ணெய், குளிப்பு, முழுக்கு என்பவை எல்லாம் மாதத்தில் ஒன்றோ, இரண்டோடவைகள், அர்த்த ஜாமத்தில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!

இந்த நரக வாழ்க்கையிலிருந்து, மீண்டு கொள்ள வேலன் என்றுமே நினைத்ததில்லை. ஆனாலும், முடிவில் ஒருநாள் சந்தர்ப்பம் அப்படி நினைக்க வைத்துவிட்டது.

பக்கத்தூர் பிடாரி அம்மன் கோவிலில், திருவிழா நடந்தது. வேலன் மட்டுந்தான் வீட்டில் தன்னந்தனியாக இருந்தான். விடியப்புறமாக மேற்கு வீதியில் நடக்கும் சின்ன மேளக் கச்சேரியையும் பார்த்துக் கொண்டுதான் அவர்கள் வருவார்கள் என்பது அவனுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இதனால், கமக்காரனின் நீல நிறப் போர்வை ஒன்றால் தன்னை மூடிக்கொண்டு அவன் புறப்பட்டுவிட்டான். எங்கே போகி றோம் என்ற குறிக்கோளே இன்றி அவன் நடந்து சென்ற போது, நன்றாக விடிந்து விட்டது. போர்வையை மடித்துக் கக்கத்துக்குள் வைத்துக்கொண்டு உணவுக்காக அவன் அலைந்தான். உணவு எதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஊரில் எல்லோரும் அவனைக் கவனித்துப் பார்த்தனர். அதன்பின், ஒருவன் அவனைக் கவனித்து விட்டு, ‘டேய், நீ கந்தப்பர் வீட்டிலை.’ என்று வாய் திறந்தபோது, வேலன் ஓடத்தொடங்கிவிட்டான். அதன்பின், அவனை நான்கைந்து பேர் கலைத்துப் பிடித்து நன்றாக உதைத்துவிட்டு, விதானையார் வீட்டில் ஒப்படைத்து விட்டனர்.

இரவு எட்டுமணி ஆவதற்குள், சதங்கை நாதம் கலீரென ஒலிக்க, விதானையார் வீட்டு வில்லு வண்டி கந்தப்பர் வீட்டு வாயிலை வந்தடைய, வேலனும் வந்தடைந்து விட்டான். அதன்பின்… அதன்பின்…

அதன்பின், வேலன் கந்தப்பர் வீட்டு நிரந்தர அடிமையாகக் கிடக்க வேண்டியதாயிற்று. இந்த வேளையில் அவனுக்கு ஒரு சிறு அதிர்ஷ்டம் வந்ததோ இல்லையோ வேலனால் பதில் கூற முடியவில்லை.

‘கீழ்ஜாதிப் பயலே, கழட்டடா சட்டையை!’ என்று அதட்டிக் கொண்டே ஒருவன் அவன் சட்டையைக் கிழித்தான்.

மற்றவன் அவன் கன்னத்தில் அறைந்தான்; மீண்டும், மீண்டும் அறைந்தான்.

392 – டானியல் படைப்புகள்

கணவேளைக்கிடையில் வேலனின் சட்டை தாறு மாறாகக் கிழிந்து தொங்கியது.

அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. முடிவில்; அந்த இருவரும், அவனை அம்மணமாக்கி நிறுத்தி, அவன் கால் நிறையை உடுத்தியிருந்த வேட்டியின் ஒரு பகுதியைக் கொடுத்து, முழங்காலுக்கு மேல் தெரியும் பகுதியில் உடுக்க வைத்து விட்டுச் சென்றனர்.

கிழிந்து கந்தலாகிவிட்ட அவனின் உடைகள், துண்டுத்துண்டாக அந்த இடத்தில் பரவிக்கிடந்தன.

சிறிய தாயாரைத் தேடிச் சென்ற வேலன், ஓடிச் சென்ற பாதையில் கிடந்த இந்த வயிரவனுக்கு முன்னால் அன்று ஊமைத்தனமாக விம்மிக் கொண்டிருந்தான்.

***

இந்தச் சம்பவத்திற்குப்பின், வேலன் சிறிய தாயாரான சின்னப் பெட்டை யின் குடிசைக்குள் அடைபட்டுக் கிடந்தான்.

சின்னப்பெட்டை அவனுக்கு சுடுசோத்து ஒத்தணம் பிடித்தாள்.

இரத்தக் கண்டலுகள் தெரிந்த இடத்திற்குப் பச்சிலை மருந்து கட்டினாள். ஆனாலும், நோவும் காயங்களும், இலேசில் ஆறிவிட வில்லை . அவளுக்கு ஆத்திரம் வந்தது.

ஊரில் சின்னப் பெட்டைக்குச் சிறிது மதிப்பு. இருபது வருடங்களாகச் சின்னப்பெட்டையின் தாய் கற்பி விதானையார் வீட்டுச் சிறைக்குட்டி என்ற மட்டில் இருந்தாலும் அதற்கு மேலாக, அந்த வீட்டுடன் ஒட்டி வாழ்ந்து வருகிறாள். அவள் இல்லாவிட்டால், விதானையார் வீடே ஸ்தம்பித்துவிடும். மாட்டுக் கொட்டகையிலிருந்து அம்மாவுக்குக் கால், கை உருவிவிடுவது வரை ….

கற்பி, அம்மாளின் கால், கைகளை உருவி விடுவதில் எந்தவித சாதி வேறுபாடும் – அல்லது தீண்டத்தகாத விதத்தில் அம்மாள் எதையுமே பார்ப்பதில்லை. கற்பிக்கும் இந்தப் பெருமை மிகவும் உற்சாகமானது. விதானையார் வீட்டு ஓட்டை ஒடிசல்கள் – விதானையார் அம்மாளின் நூற்றுக்கு நூறு வீதமானவரலாற்று உண்மைகள் என்ற வீதத்தில் எல்லாம் கற்பிக்கு உட்பட்டவைகளே!

கற்பி சின்னப்பெட்டையின் தாய் என்ற விதத்தில், விதானை யாரிடம் சின்னப்பெட்டைக்கும் ‘பெருமதிப்பு’ இதனால், வேலனுக்கு நடந்துவிட்ட கொடுமையை விதானையார் முன்னிலையில் அவள் விஸ்தரித்தாள். விதானையார் எல்லாவற்றையும் ஆதியோடந்தமாகக் கேட்டுவிட்டு, ‘முலை விழுந்தால் வயிறுதானை, சின்னப்பெட்டை தாங்க வேணும். நீ பேந்தொருக்கா வேலனையுங் கூட்டிக்கொண்டு செக்கலுக்குப் பிறகு வந்திட்டுப்போ’ என்று பொடிவைத்துப் பேசி அனுப்பி விட்டார்.

வேலன், விதானையார்வீட்டுக்கு வர மறுத்தான். உரோசத்தினால் அல்ல; பயத்தினால், இறுதியில், ஒருவிதமாக வேலனுக்குத் தேறுதல் கூறி, செக்கலுக்குப் பின்னால் அவனை விதானையாரிடம் அழைத்துச் சென்று, விதானையாரிடம் அவனைப் பேசவிட்டுவிட்டு, வெளியே காத்திருந்தாள் சின்னப்பெட்டை.

கொல்லைப் பின்புறமுள்ள கொட்டிலுக்குள் வைத்து விதானையார் வேலனிடம் நிறையப் பேசினார்; அமைதியாகப் பேசினார். பேச்சு முடிந்ததும், விதானையார் வெளியே வந்து “சின்னப்பெட்டை நான் வேலனுக்கு எல்லாஞ் சொல்லி இருக்கிறன். நீ அவனைக் கூட்டிக் கொண்டு போ! இனி மேல் அவனுக்கு ஒண்டும் நடவாது’ என்று மொட்டையாகக் கூறிக்கொண்டே, சட்டை இடப்படாமல் குறுக்குக் கட்டுக்குள் இறுகிப் பிதுங்கிய அவளின் நெஞ்சுக்குமேல் பார்வையை மேய விட்டுக்கொண்டே கொல்லைப்புறம் போய்விட்டார்.

வேலனுடன் வீட்டுக்கு வரும்போது, விதானையார் என்ன தம்பி சொன்னவர்?’ என்ற கேள்வியை மட்டும் சின்னப்பெட்டை வேலனிடம் கேட்டாள்.

வேலன் அமைதியாக வந்தான். பின்பு மௌனத்தைக் கலைத்துக்கொண்டே அவன் இதைத்தான் கூறினான்:

‘விதானையார் எங்கடை பக்கந்தான் குஞ்சியாச்சி, ஊர் ஓடுகில் ஒத்தோட வேணும். ஒருத்தன் ஓடுகில் கேட்டோட வேணும்’

***

நோவும் இரத்தக் கண்டல்களும் ஆறிப்போக, வேலன் வெளியே உலாவ வாறான். கந்தப்பர் வீட்டுக் கமக்காறிச்சி தந்த பத்து ரூபாயில் பாதிப் போய்விட்டது. அதை வைத்துக்கொண்டு ஏதாவது செய்ய நினைத்தான். ஊருக்குள் செய்வதற்கு என்ன இருக்கிறது? பட்டணத் திற்குப்போய் ஏதாவது வாங்கி வந்து, ஊருக்குள் விற்கலாம் என்று நினைத்தான். அதன்படியே பட்டணத்திற்குச் செல்வதற்காகப் பெரிய வீதிவரை நடந்து, பெரிய வீதியில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தான். பஸ் வர நேரமிருந்தது. அதற்கிடையில் தாகம் எடுத்தது.

பெரிய வீதி மூலையோடு, கோவிந்தக்குட்டி என்ற ஒரு மலை யாளம் கடை வைத்திருக்கிறது. அக்கடை ஆரம்பித்து மூன்று மாதங்கள் கூட இல்லை. வியாபாரம் நன்றாக நடந்தது. வேலன் ஒரு கோப்பி என்று கேட்டதும், மினுமினுப்பான ஒரு பித்தளைக் குவளையில் அவனுக்குக் காப்பி கிடைத்தது.

‘மலையாளத்தார்கள் சாதி பார்க்கிறவர்களில்லை’ என்று வேலன் காதில் முன்பு யாரோ கூறியதாக ஞாபகம். எனவே, மிகவும் பிரியத் துடன் வேலன் காப்பியைக் குடித்தான். வந்தது நாசம். சயிக்கிள்களில் வாழைக் குலைகளைக் கட்டிக்கொண்டு வந்த நான்குபேர், சயிக்கிள் களைச் சாத்திவிட்டு வேலனுக்குச் சமீபமாக வந்தனர். வேலனை முறைத்துப் பார்த்தனர். ஒருவன் சொன்னான் ‘இவன் செம்பாட்டுப் பள்ளன்’ என்று. மற்றவன் மலையாளத்தியிடம் வினவினான். மலை யாளம் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தபோது வேலனின் பிடரியிலும் முதுகிலுமாகப் பலர் தாக்கினர்.

கோப்பிப் புரைக்கேற, வேலன் தகைத்துத் தெளிவதற்கிடையில் அவன் நையப் புடைக்கப்பட்டுவிட்டான்.

வேலனைச் சுற்றிக்கூட்டம் கூடிவிட்டது. பஸ்ஸுக்காகக் காத்து நின்றவர்களில் ஒருவர் கதர் உடை உடுத்தி யிருந்தார்.

‘தம்பியவை, சாத்வீக வழியிலை திருத்துங்கோ. அடி பிடியெண்டு நில்லாதையுங்கோ, உயிர்வதை செய்யாதையுங்கோ’ என்று பேசிக் கொண்டே வேலனை மீட்க முன்வந்தார்.

***

இதன்பின், பிள்ளையார் கோவில் திருவிழா வந்தது. ‘சுருட்டுக் காறற்றை திருவிழா, நாலாந் திருவிழா’ என்று பேரெடுத்த திருவிழா வந்தது.

பெரிய மேளம், சின்ன மேளம், சிகரம், சப்பரம், வாண விளை யாட்டு என்ற விதத்தில் அடுக்கடுக்காக நிகழ்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும் பெரிய திருவிழாத்தொடங்கிவிட்டது. அந்தவேளைகிழக்குப் புறமாக ஜனக்கூட்டம் கூடி நின்று யாரோ ஒருவனை நையப்புடைக் கின்றது.

ஜனத்தை அடக்கிக்கொண்டு முன்னேறிச் சென்றனர் இரு பொலிசினர். அவர்கள் விசேஷமாகத் திருவிழாவுக்கென்றே தருவிக்கப் பட்ட பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நையப் புடைக்கப் பட்ட மனிதனை மீட்டெடுத்து வந்தபோது பார்த்தால்

அவன் வேலன்!

அவன் கடைவாயிலிருந்து இரத்தம் வடித்து கொண்டிருந்தது. பஞ்சமருக்கென வரையறுக்கப்பட்டிருந்த இடத்தைத் தாண்டி அவன் சற்று உள்ளே போய் விட்டான்!

குடுமி கலைந்து போக, ‘பள்ளனுக்கு இவ்வளவு துணிச்சலோ?’ என்று இருமிக் கொண்டே மாங்கண்டர் கந்தையர் கூட்டத்தைவிட்டு வெளியே வந்து, ‘மக்காள் எல்லோரும் இருங்கோ, எல்லாருமிருங்கோ

ஒண்டுமில்லை’ என்று கையமர்த்திக்கொண்டு சென்றார்.

‘டேய் பள்ளன், நீ ஏண்டா உள்ளுக்குப்போனதும்?’ என்று பொலிஸ் காரப் பறங்கியரும் வேலனை உதைத்து இழுத்துச் சென்றனர்.

தொடர்ச்சியான இந்தச் சம்பவம் எல்லாவற்றுக்கும் பின் வேலன் ஊரின் விந்தைக்குரிய மனிதனாகிவிட்டான்.

கண்டதிற்கெல்லாம் வேலனை எல்லோரும் அடிப்பார்கள். கேலியாக, வேலனின் பிடரியைத் தட்டிப் பார்ப்பார்கள்.

அவனுக்குத் தெரியாமல், அவன் பின்னால், அவன்களுக்குச் சமீப மாக வந்து, ‘டேய் வேலா!’ என்று கூவி அவனைத் திடுக்குற வைப் பார்கள்.

பெரிய வீட்டுச் சிறிசுகள், வேலன் மீது குரும்பட்டிகளை விட்டெறிந்து விந்தையான வேடிக்கை வருவிப்பார்கள்.

வேலனுக்கு யாரைக் கண்டாலும் பயம். வேலனுக்கு எந்த ஓசையைக் கேட்டாலும் வெருட்சி இது அவனுக்கு ஒரு நோயாகி விட்டது.

நித்திரையிலிருக்கும்போதுகூடக் கத்திக்கொண்டே திடுக்குற்று விழித்துநடுங்குவான்!

உடல் மெலிந்து வெளிறிப்போக, நேரத்திற்குக் குளிப்பு முழுக்கற்று, உடல் சுருங்கித் துடித்து, பீதிகளின் நிறைவால் கண்கள் பிதுங்கிப் பெருத்து, குறைந்த வயதுக்குள்ளேயே வேலன் கூனிக் குறுகிவிட்டான்.

பேத்திக் கிழவி கற்பியும், சின்னம்மாள் சின்னப்பெட்டையும் செத்துப்போயினர்.

நெருங்கிய இரத்த உறவு என்ற ஒன்றே இல்லாமல் உலகில் தன்னிச்சையாகவே தோன்றி, வளர்ந்து நிற்கும் ஒருவித மனித உருவம் வேலன்!

வயிற்றை நிரப்புவதற்காக, நாற்றுநடுகை, புல்லுப் புடுங்குகை, வேலி அடைத்தல் மூலம் கிடைப்பவைகளைப் பெற்றுக்கொள்வது.

‘துயில்’ என்ற ஒன்று வருவதெனக் கண்டால், வரும் சந்தர்ப்பத்திலே எங்கிருக்கிறானோ அங்கேயே விழுந்து படுத்துக்கொள்வது.

வேலனுக்கு இல்லற சுகம் என்ற விதத்தில் ஏதாவது இச்சைகள் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. அப்படி இருக்கும் போது நேற்று நடந்துவிட்ட…

நேற்றுச் சாயங்காலம்….. இருட்டிவிட்ட வேளை அவனை மாங்கண்டரின் மருமகள் அன்னமுத்து கொள்ளிக்கட்டையால் அடித்து விட்டாள்; முகத்தில் காறி உமிழந்துவிட்டாள்.

வழமைபோல அவன் விவகாரத்தை, யாரும் விசாரிக்காதிருப்பது போல, இதையும் யாரும் விசாரிக்கவில்லை.

மாங்கண்டர் வீட்டுக் கொல்லைப்புற வேலியை மூன்று நாட்களாக வேலனும் ஒருசிறிய பையனும் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மாங்கண்டரின் மருமகளுக்குக் கணவன் இல்லை. பல ஆண்டு களுக்கு முன், அவர் காணாமல் போய்விட்டதாகக் கதை,

வயதும் அதிகமில்லை . அவள் அநேகமாக விதவைக் கோலத்தில்தான் வசிக்கிறாள். நேற்றுச் சாயங்காலம் – இருட்டும் வேளை வேலையை முடித்துவிட்டு வந்த வேலன், இருட்டிய போதுதான் அரையில் கட்டப்பட்டிருந்த நலமுண்டுத் துண்டைக் காணாததைக் கவனித்தான்.

அரையில்கட்டியிருந்த துண்டை மாங்கண்டர் வீட்டுப் பின்கூரை வேலியோடு போட்டதாக ஞாபகம் வரவே அதை எடுத்து வருவதற்காக வேலன் முன்பக்கமாகப் போகாமல், வீட்டின் பின் பக்கமாகச் சென்று, வெளியில் நின்றே அந்தத் துண்டை எடுத்துவிட நினைத்தான். ஆனால், துண்டு வேலியின் உட்பக்கமாகவே தொங்கியதால் அதை எடுத்துவிட, பகல் புடுங்கிவிடப்பட்ட வெளியால் உள்ளே சென்றான். அப்போது, அங்கே சீவல்கார முத்தன் கோடி மரத்தைச் சீவுவதற்காக ஆயத்தமாக நின்றான். வேலனின் வரவை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை! ஆனால், முத்தன் பதில் சொல்வதற்கிடையில் அன்னமுத்துவின் அவலக்குரல் மட்டும் எழுந்தது. அதைத் தொடர்ந்து, ‘பள்ளா! எழிய பள்ளா, பெண் பிடிக்கவோடா வந்தனி?’ என்று கேட்டுக்கொண்டே அன்னமுத்து, வேலனைக் கொள்ளிக்கட்டையால் அடித்தாள்.

சணவேளைக்குள் வேலனைக் குஞ்சு குழந்தைகள் என்ற விதத்தில் பலர் சூழ்ந்து கொண்டனர்.

மாங்கண்டர் எதை நினைத்துக்கொண்டாரோ, ‘சத்தம் போடாதை யுங்கோடி’ என்று அடக்கமாக இரைந்து கொண்டே, வேலனைப் பிடித்து அப்புறமாக இழுத்துச் சென்று, அவனை மேற்கொண்டும் எதுவும் செய்யாமல் முன்பக்கத்துச் சங்கடப் படலைக்கப்பால் தள்ளிவிட்டார்.

***

இப்போது ஆயிரந் தடவைகள் வேலன் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்துக் கொள்கிறான்.

அன்னமுத்து கொள்ளிக் கட்டையால் தாக்கிவிட்டாள்! இது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை காணத்தான் வேலன் வெயில் ஏறிவரும் வரையில் சுடலை வயிரவனுக்கு முன்னால் கிடந்து முயற்சிக்கிறானா?

இரவெல்லாம் அழுதழுது உப்பிப்போயிருந்த கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டான்.

கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்துக்கொண்டான். சுடலை வயிரவன் சந்நிதானத்தை விட்டு வெளியே வந்தான். நிமிர்ந்து பார்த்தான்; நடந்தான்.

உடம்பில் கூனல் தெரியவில்லை ! வழமையாக அரையைச் சுற்றிக்கொண்டு, பழி கிடக்கும் நல முண்டுத்துண்டு இலாவகமாக அவன் தலை மீது கொலுவிருந்தது.

சுடுகாட்டைத் தாண்டி, ஊரின் முகப்பிறகு வந்தபோது மாங்கண்டுக் கந்தையரின் மகன் சண்முகமும், வேறொருவனும் எதிர்ப்பட்டனர்.

‘சண்முகம் ; அங்கை பாற்றா வேலன் தலைப்பாவோடை வாறான்.’ ‘ஓமடா, தலைப்பாவைக் கழட்டான் போலைக் கிடக்கு!’ வேலன் நிமிர்ந்தபடி நேருக்கு நேராக வந்துவிட்டான். “டேய், கழட்டடா தலைப்பாவை!’ சண்முகம் அதட்டினான். எப்போதும்போல வேலன் வெருளவில்லை; வேலியோடு ஒதுங்க வில்லை.

சண்முகம் அவனை நோக்கிக் கையை வீசினான்; மற்றவன் வேலனைக் கட்டிப் பிடிக்க முயன்றான்.

வேலனின் இரு கரங்களும், அந்த இருவரையும் நோக்கித் தாறு மாறாகத் தாவின. சணவேளை! அவ்வளவுதான்! வேலனின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத அவ்விருவரும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஓடினர்.

வேலன் நிதானமாக முன்நோக்கி நடந்து கொண்டிருந்தான். இதன்பின்…. எத்தனையோ…. எத்தனையோ…. வேலன் இப்போது யாருக்கும் பயந்தவனில்லை! வேலனை இப்போது யாரும் பயம் காட்டுவதில்லை. வேலனின் தலையில் எப்போதும் தலைப்பாகைக் குந்தியிருக்கும்! இடுப்பிலே பாளைக் கத்தி செருகியிருக்கும்! கையிலே கட்டுமஸ்தான ஒரு தடி இருக்கும்! அவன் பாதைக்கு இப்போது யாரும் குறுக்கே வருவதில்லை. குறைந்த சாதி இளமட்டங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் அமைக்கப் போவதாக ஊரில் பலரும் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.

இந்த இள மட்டங்கள் வேலனிடம் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தனர்.

வேலன் இந்த அளவுக்குத் தன்னைத்தானே உயர்த்திக் கொண்டு விட்டான்.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *