முகுந்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 3,519 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிறுவர்களும் குரங்குகளும் சேர்ந்துவிட்டால் விளையாட்டுக்கு என்ன குறைவு? வேலம்பட்டிப் புளியந் தோப்பில் ஊர்ப்பையன்களெல்லாம் சேர்ந்து மரத்தில் ஏறியும் குதித்தும் கூக்குரலிட்டும் குரங்குகளை விரட்டிக்கொண்டும் விளையாடினார்கள். சில சமயம் குரங்கு கள் ஜயித்தன. அப்போது அவைகளில் பெரிய குரங்கு ‘உர்’ என்று உறுமும்போது, சில பிள்ளைகள் விளையாட்டை மறந்து, சிறிது பயங்கொள்வார்கள். குரங்கு களில் சிறு குட்டிகளுக்கு. பாவம், ஆபத்தாய்த்தா னிருந்தது. அவை விளையாட்டில் வேடிக்கை எதுவும் காணவில்லை. பயந்து ஓடி ஓடிக் கிளைக்குக் கிளை பாய்ந்து சிறுவர்களுடைய இம்சையிலிருந்து தப்பப் பார்த்தன. பையன்களுக்கோ இது வேடிக்கையாயிருந்தது. அவர்களுடைய ஆரவாரமும், குரங்குகளின் கீச் கீச் என்ற சத்தமும் ஊருக்குக் கேட்கும்.

திடீரென்று கிழக்குக் கோடியில் ஒரு பையன் பெரிய கூக்குரலிட்டான். எல்லோரும் என்னவோ அபாயம் நேர்ந்துவிட்டதென்று அந்தப் பக்கம் ஓடினார்கள். முகுந்தன்மேல் ஒரு பெரிய குரங்கு பாய்ந்து, அவன் உடம்பெல்லாம் கிழித்து இரத்தக் காயம் செய்து கழுத்தைக் கவ்விக் கொண்டிருந்தது. முகுந் தன் குரங்குக்குட்டி ஒன்றைத் துரத்தி விளையாடும் போது அது கிளையிலிருந்து நழுவிக் கீழே விழ, அவன் அதைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடவே, தாய்க் குரங்கு மரத்திலிருந்து சீறி அவன் மேல் பாய்ந்து இவ்விதம் தாக்கிக்கொண்டிருந்தது. முகுந்தன் திக்பிரமை கொண்டவனாய், இன்னது செய்ய வேண்டுமென்று தோன்றாமல், குரங்குக் குட்டியை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டான். இதைக் கண்டு குரங்கு இன்னும் ஆவேசத்துடன் அவனைக் காயப்படுத்திற்று. ‘குட்டியை விட்டுவிடு, குட்டியை விட்டுவிடு’ என்று பையன்கள் கூக்குரல் போட்டும் அவனுக்கு விளங்கவில்லை. சிறுவர்களில் யாரும் கிட்டப் போகத் தைரியங் கொள்ளவில்லை. குரங்கோ மிகப் பெரியது. மகா கோபாவேசங் கொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மாரி என்னும் சிறுவன். “அடே, செத்துப் போயிடுவான்” என்று கத்திவிட்டு, ஒரே குதியாய்க் குதித்து முகுந்தன் கையிலிருந்த குரங்குக் குட்டியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினான். உடனே குரங்கு முகுந்தனை விட்டுவிட்டு மாரிமேல் பாய்ந்தது. பாய்ந்ததும், மாரி, குட்டியைக் கீழே போட்டுவிட்டுத் தரையில் கிடந்த ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு குரங்கை எதிர்த்துநின்றான். குட்டி கீழே விழுந்து ஓட ஆரம்பித்ததும், தாயானது பையனைத் தாக்குவதை விட்டுவிட்டுக் குட்டியண்டை ஓடிற்று. குட்டி தாயின் வயிற்றைக் கௌவிக்கொள்ளவே. இரண்டும் மரத்தின் மீது ஏறி உச்சிக் கிளை போய்ச் சேர்ந்து ஒன்றுமே நடவாததுபோல் அங்கே உட்கார்ந்தன.

முகுந்தன் நினைவற்றுக் கீழே கிடந்தான். பையன்கள் எல்லாம் பயந்து, ‘முகுந்தன் செத்துவிட்டான், குரங்கு முகுந்தனைக் கொன்றுவிட்டது’ என்று கத்திக்கொண்டு ஊர்ப்பக்கம் ஓடினார்கள். மாரி மாத்திரம் ஓடாமல், ” அடே சின்னான்! போய் அம்மாவைக் கேட்டு ஒரு கலையத்தில் தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்லி முகுந்தன் பக்கத்தில் உட்கார்ந்து அவனுடைய முகத்தைத் துடைத்துத் தடவிக்கொண்டிருந்தான். சின்னான் சேரிக்கு ஓடிப்போய் ஒரு மண் கலையத்தில் தண்ணீர் கொண்டுவந்தான். அதை மாரி வாங்கி முகுந்தன் முகத்தில் தெளித்ததும், அவனுக்கு நினைவு வந்தது. ஆனால், காயங்களில் இரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது.

“சின்னா. நீ ஒரு பக்கம் பிடி, நான் ஒரு பக்கம் பிடிக்கிறேன். இருவரும் தூக்கி இவனை வீட்டுக்குக் கொண்டு போவோம் வா” என்று மாரி சொல்ல. இருவரும் சேர்ந்து முகுந்தனைத் தூக்கிக்கொண்டு போனார்கள். மாரியும் சின்னானும் சிறு குழந்தைகள் தான். ஆனால், ஏழைப் பிள்ளைகளாயிருந்தபடியால் வேலைக்கு அஞ்சவில்லை. சுகத்தில் வளரும் குழந்தைகள் செய்யாத காரியங்களை யெல்லாம் ஏழைக் குலத்தில் பிறந்த குழந்தைகள் தைரியமாகச் செய்யும். இல்லா விட்டால் அவர்கள் எப்படிப் பிழைக்க முடியும்?

***

முகுந்தன் தகப்பனில்லாக் குழந்தை. அவன் தகப்பனுக்கு ஒரு காரணமுமில்லாமல் வந்த ஜுரம் ஒரு மாதம் விடாமல் அடித்தது: ஊர்ப்பண்டிதன் என்ன மருந்து கொடுத்தும் நிற்கவில்லை. முப்பத்தோராவது நாள் இரவு. மனைவியையும் மகனையும் திக்கற்றவர்களாய் விட்டுவிட்டு, அவன் இறந்து போனான்.

சீதம்மாள் தெய்வபக்தியுடையவள். புருஷன் இறந்த பிறகும் தைரியத்துடன் பையனை வளர்த்து வந்தாள். ஊரில் புருஷன் அங்கங்கே கொடுத்திருந்த காசு பணத்தையெல்லாம் வசூலித்து, அவன் வைத்து விட்டுப்போன நாலு ஏக்கரா புன்செய்க்காட்டை ஒரு குடியானவனிடம் குத்தகைக்குப் பேசி விட்டுக் குடும்பத்தை நடத்தி வந்தாள். பையனைக் கிராமத்திலிருந்த சிறு பள்ளிக்கூடத்தில் போட்டாள். வீட்டிலும் அவனுக்கு இராமாயண பாகவத பாரதக் கதைகளைச் சொல்லி வந்தாள். தைரியமாய் வாழ்வு நடத்தி வந்தாலும், பாவம், சிறு வயதில் விதவையாய்ப் போன சீதம்மாளுக்குச் சில சமயம் உலகத்தின் மீது வெறுப்பு உண்டாகும். திக்கற்ற வாழ்வின் துன்பங்களைச் சகித்துக்கொள்ளுதல் யாருக்குமே கடினமல்லவா? ஆனால், ஈசுவர நம்பிக்கையும் ஆசார சீலமும் இவளைக் காத்துவந்தன.

சீதம்மாள் ஸ்நானம் செய்து. பூஜைக் காரியங்களை முடித்துவிட்டு அடுப்பண்டை சமையல் செய்து கொண்டிருந்தாள். திடீரென்று மாரியும் சின்னானும் ‘அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்து. மேலெல்லாம் இரத்த வெள்ளமாயிருந்த முகுந்தனை அவள் முன் கீழே இறக்கி வைத்தார்கள். திடுக்கிட்டுப்போன தாய் ஒரே பாய்ச்சலாய்க் குழந்தையண்டை வந்து குதித்து. “ஐயோ! என் குழந்தாய்!” என்று தலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு. “என்னடா செய்தீர்கள்? துஷ்டப் பயல்களா!” என்று கூக்குரலிட்டாள். இவள் திடுக்கிட்டுக் குழந்தையண்டை குதித்த குதியும், தோப்பில் குரங்கு தன் குட்டியைக் காக்கச் சீறிப் பாய்ந்த பாய்ச்சலும் ஒரேமாதிரியாயிருந்தன. பெற்ற வயிறு எல்லாம் ஒன்று தானே குரங்கானாலென்ன, சீதம்மாளானாலென்ன?

நடந்த சங்கதிகளெல்லாம் மாரி சொன்னான். கேட்டதும், அவளுடைய உள்ளத்தில் உதித்த நன்றி முகத்தில் அழகிய புன்முறுவலாகப் பிரகாசித்தது.

“நீங்கள் யார் அப்பா” என்றாள்.

“நாங்கள் பறைப்பசங்கள். அம்மா” என்றான் மாரி.

இதைக் கேட்டதும் திடீரென்று சீதம்மாளுடைய மனோநிலை மாறிவிட்டது.

“பறைப்பயல்களா? அட பாவி! வீட்டுக்குள் நுழைந்துவிட்டீர்களே! ஐயோ, ஈசுவரா! நான் என்ன செய்வேன்? அடுப்பண்டை வந்துவிட்டீர்களே. ஐயோ. கொடும் பாவிகளே!” என்று எல்லாவற்றையும் மறந்து பெருங் கூக்குரலிட்டுக்கொண்டே ஒரு விறகுக் கட்டையை எடுத்துப் பலத்துடன் வீசிச் சின்னான் மேல் எறிந்தாள். மாரி சட்டென்று குறுக்கே குதித்தான். கட்டை அவன் காலில் பட்டுக் காயம் ஏற்படவே அவன் கீழே விழுந்தான். சின்னான் கூக்குர லிட்டுக்கொண்டு தெருப்பக்கம் ஓடினான்.

“பறைப் பயல் வீட்டுக்குள் நுழைந்து என் ஜன்மத்தைப் பாழாக்கினான். போதாதற்கு. ஊருக்கெல்லாம் என் அவமானத்தைத் தெரிவிக்கக் கூச்சலிட்டுக் கொண்டு ஓடுகிறான். பார்” என்று கூவினாள் சீதம்மாள்.

கீழே விழுந்த மாரி, மெள்ள எழுந்து காயம் பட்ட காலைக் கையால் அழுத்திக்கொண்டு, “அம்மா, உன் மகனை நான் குரங்கின் கையிலிருந்து தப்புவித்தேன். அதற்குப் பதிலாக நீ, என் காலை ஒடித்து விட்டாய்” என்றான். ஏழைக் குழந்தைகள் வயது முதிர்ந்தவர்களைப்போல் பேசுவார்கள்.

“நீயும் உன் குரங்கும் நாசமாய்ப் போக. இந்தப் பறைத் தீட்டு எப்படி நீங்கி நான் நற்கதியடையப்போகிறேன். ஐயோ. நிழல் பட்டாலும் தீட்டாயிற்றே! வீட்டுக்குள் சுவாமி வைத்திருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார்களே! இவர்கள் நாசமாய்ப் போக. ஹே. ஈசுவரா! என்மேல் கருணை வைத்துக் காப்பாற்று. சுவாமி” என்று கத்தினாள்.

மாரி இன்னும் காலை அமுக்கிக்கொண்டே நின்றான். “அடே. தூரப்போ. பறைப்பயலே” என்று இன்னொரு கட்டையை யெடுத்து மெய்மறந்து ஓங்கி அவன் மேல் அடித்தாள். முன் அடியைக் காட்டிலும் இது பலமாய்த் தாக்கிற்று. பொறுக்க முடியாமல் வீல் என்று கத்திக்கொண்டு, பாவம், பையன் காலைப் பிடித்துக் கொண்டே ஓடினான்.

முகுந்தன் தெருவில் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. என்ன. என்ன? என்று சிலர் கேட்கவும், சிலர் பதில் சொல்லவும் பெரிய ஆரவாரம் கிளம்பிற்று. மாரி, சின்னான் இவர்களுடைய ஆயாளும் சேரியிலிருந்து வந்து தெருக்கோடியில் நின்று கொண்டு “ஐயோ, என் குழந்தைகளைக் கொல்லுகிறார்களே!” என்று பெரிய கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாள். பெற்ற தாயின் வயிறு எரிதல் எல்லா உயிர்களிடையும் ஒரே மாதிரி தான். குரங்கானால் என்ன. வேறு எந்த உயிரானால் தான் என்ன?

***

பிறகு இரண்டு வருஷத்திற்குப்பின் கதை. முகுந் தன் பெரியபையனாகிக் கமலாபுரம் பேட்டையில் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்டான். தினம் இரண்டு மைல் போய்த் திரும்பிவரவேண்டும். ஆனால், இவனைப் போலவே அந்தப் பள்ளிக்கூடம் போகிற இரண்டு பிள்ளைகள் துணைக்கு இருந்தபடியால் போவது கஷ்ட மாய்த் தோன்றவில்லை. குரங்கு விளையாட்டுச் சமா சாரத்தை எல்லாரும் மறந்துவிட்டார்கள். முகுந்தன் நெற்றியில் மாத்திரம் பெரிய ஒரு தழும்பு இருந்தது.

மாரியின் தாயார் குப்பாயினுடைய மனத்துக்கு மாத்திரம் சமாதானம் ஏற்படவில்லை. “எப்படி ஐய மார் வீட்டுக்குள் போய் நுழையலாம்? அந்தப் பாவம் பிடித்துத் தின்னாதா? மற்ற ஜாதிப் பையன்களுடன் நீங்கள் ஏன் கலந்து விளையாடினீர்கள்? தெய்வம் நம்மை விடுமா? அதனால் தான் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் நமக்கு வந்திருக்கின்றன. மழை பெய்யாமல் நின்று விட்டது. தின்னச் சோறு இல்லாமல் தவிக் கிறோம். எல்லாம் அந்தச் சாபந்தான்” என்று பல வாறாகத் தன் மகனை ஏசிக்கொண்டேயிருந்தாள். ஊர் மாரியாயிக்கு மூன்று பொங்கலுக்கும் தவறாமல் மூன்று கோழி கொடுத்து. ஆயாளே! தெய்வமே! என் மகன் தெரியாமல் செய்துவிட்டான். மன்னித்துவிடு என்று பிரார்த்தனை செய்துகொண்டாள். எவ்வளவு பய பக்தியுடன் பூஜை செய்து பலி கொடுத்தாலும், மாரியாயிக்குக் கோபம் சாந்தமாகவில்லை. கஷ்டங்கள் மேலும் வந்து கொண்டே இருந்தன. முன்னெல்லாம் புருஷன் கள்ளுக்கடைக்கு சந்தையன்று மாத்திரம் போவது வழக்கம். இப்போது தினமும் போகலானான். குடித்துவிட்டுப் போதையுடன் வீடு வந்து, சோறு போடு என்று மிரட்டுவதும், சோறு ஏது? எல்லாம் கள்ளுக்குத் தொலைத்து விட்டாயே? என்றால். உதைப்பதும் அடிப்பதும் வழக்கமாயிற்று. பகலெல்லாம் காட்டில் திரிந்து ஒரு தலைச்சுமை விறகு பொறுக்கி வந்து விற்று அவள் ஒரு பணம் சம்பாதித்தால், அதையுங்கூடச் சண்டை போட்டுப் பிடுங்கிக் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடுவான். இப்படி வாழ்வு மிக்க கஷ்டமான போதெல்லாம், “பாப்பாத்தி அடுப்பண்டைபோன சாபந்தான் இது” என்று தன் பிள்ளைகளைப் பார்த்துச் சொல்வாள். புருஷன் குடித்துவிட்டு வந்து அடித்தால் அடிகளை வாங்கிக் கொண்டு “பிள்ளைகளே. அழவேண்டாம். நாம் கண்டிக்குப் போய்விடலாம். இந்தப் பாழாய்ப் போன ஊரும் வீடும் நமக்கு வேண்டாம். இவன் கள்ளுக் கடையிலே சாகட்டும்” என்பாள்.

அந்த வருஷம் மழை, சுத்தமாய். இல்லை . நிலங்க ளெல்லாம் காய்ந்து கிடந்தன. கூலிக்கு அழைப்பார் யாருமில்லை. ஏழைக் குடியானவர்கள் பாடே வெகு கஷ்டமாயிருந்தது. கூலி வேலை செய்து ஜீவனம் பண்ணு வோர்பாடு இன்னும் பரிதாபம். பறையர். சக்கிலி மார்களைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அவர்களின் நிலையை எழுதத்தான் முடியுமா?

கண்டிக்கு ஆள் சேர்க்கக் கங்காணி வந்தான். ஜனங்கள் அவனைத் தெய்வமாய் எண்ணி எதிர்கொண் டார்கள். ‘கங்காணி வந்து ஏழைகளை ஏமாற்றி அழைத்துப் போகிறான். பொய்யும் புரட்டும் சொல்லி அறியாதவர்களை இட்டுச் செல்கிறான். இந்த அநி யாயத்தைக் கேட்பாரில்லையே என்று பெரிய குடித் தனக்காரர்கள் சொன்னார்கள். ஆனால், ‘நாம் இப்போது படும் கஷ்டத்தைவிடப் பெரிய கஷ்டம் என்ன இருக்கப் போகிறது?’ என்றெண்ணி சேரிகளிலிருந்து கங்காணியுடன் இலங்கைக்குச் சென்றார்கள்.

குப்பாயியும் தனக்கு விமோசனம் இதுதான் என்றெண்ணிக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கண்டிக்குப் போகப் பெயர் கொடுத்தாள். புருஷன் வரமாட்டேன் என்றான். அவன் எக்கேடாவது கெட்டடும் என்று அவனை ஊரில் விட்டுப் போவதாகவே முதலில் தீர்மானித்திருந்தாள். ஆனால், கடைசியில் அவன், “எனக்கு யார் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்? நானும் வருகிறேன்” என்றான். இனி, கள், சாராயம் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து தன்னையும் கூட்டிக்கொண்டு போகும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். முடிவில் எல்லோரும் சேர்ந்தே போனார்கள்.

***

மூன்று வருஷம் கழிந்தது. முகுந்தன் பள்ளிக் கூடத்தில் நன்றாய்ப் படித்து வந்தான். கடைசிப் பரீட்சையில் பையன்களுக்குள் முதலாவதாகத் தேறினான். இந்தச் செய்தி ஒருநாள் காலையில் வெளியா யிற்று. முகுந்தன் உடனே தாயிடம் போய்ச் சந்தோஷ சமாசாரஞ் சொல்ல மிக்க ஆவல் கொண்டான். ஆனால், பரீட்சையில் தேறிய தோழர்கள் எல்லாரும் கூடி சுவாமிமலை யேறி, அங்கே அன்று திருநாள். பார்த்து விட்டு வேடிக்கையாய்ச் சிறிது நேரம் கழித்து வரலா மென்று தீர்மானித்து முகுந்தனையும் அழைத்தார்கள். மாட்டேன் என்று அவன் சொல்லிப் பார்த்தான். “போனால் நேரமாய்விடும், வீட்டில் தாயார் காத்திருப்பாள்” என்றான்.

“போடா, பெண் குழந்தை போல் பேசுகிறாய். நேரமானால் நானும் உன்னுடன் ஊருக்கு வருகிறேன். நீ பயப்பட வேண்டாம். பரீட்சையில் முதலில் தேறினோமென்று கர்வப்படாதே. எங்கள் கூடக் கட்டாயம் வரவேண்டும்” என்று ஒரு தடிப் பையன் வற்புறுத்தினான்.

“வந்தே தீரவேண்டும், வந்தே தீரவேண்டும் விடக்கூடாது” என்றார்கள் சுற்றிலு மிருந்த பையன்கள் எல்லாரும். முகுந்தனிடம் எல்லாருக்கும் மிகவும் பிரியம்.

ஆகவே முகுந்தன் மலைக்குப் போகவேண்டிய தாயிற்று. மலைமேல் வேடிக்கையாய்த்தா னிருந்தது. உற்சவத்திற்குத் திரள் திரளாக ஜனங்கள் வந்திருந் தார்கள். பையன்கள் கோயிலுக்குள்ளும் வெளியிலும் கடைவீதியிலும் மனம் போனபடி சுற்றித் திரிந்து விளையாடினார்கள். அவர்களில் ஒருவன் பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளை. அவன் தகப்பன் ஐந்து ரூபாய் முழு நோட்டு ஒன்று பையன் இஷ்டப்படி செலவு செய்யக் கொடுத்திருந்தான். இதைக்கொண்டு மிட்டாய்க் கடையில் வேண்டிய பட்சணங்கள் வாங்கி எல்லாரும் தின்றார்கள். வெயிலில் நாள் முழுதும் ஓய் வில்லாமல் திரிந்துவிட்டு மலையிலிருந்து இறங்கினார்கள். பாதி தூரம் இறங்கும் போது. “அடே, ராம கிருஷ்ணா! வெகு தாகமாயிருக்கிறதடா” என்றான் முகுந்தன். “இங்கே தண்ணீர் ஏது? ஊர் சேர்ந்தால் தான்” என்றார்கள் மற்றவர்கள்.

“போங்களடா, மடையன்களா! இங்கே அனுமான் குட்டை இருப்பது தெரியாதா?” என்று தடிப்பையன் சொல்லி, அங்கே ஒரு ஒற்றடிப் பாதை வழியாய்ப் போய் ஒரு பெரிய ஆஞ்சநேயஸ்வாமி செதுக்கியிருந்த பாறைக்குப் பின்னால் குட்டை ஒன்றைக் காட்டினான். முகுந்தன் அதில் இறங்கித் தாகம் தீரத் தண்ணீர் குடித்தான். “எவ்வளவு நன்றாய் இருக்குதடா தண்ணீர்?..” என்று சொல்லிக்கொண்டு மேலே ஏறினான். நல்ல தாகமாயிருந்தால் அழுக்குத் தண்ணீர் கூட வெகு ருசியாயிருக்குமல்லவா?

கமலாபுரம் போய்ச் சேரவே இருட்டாய்விட்டது. அதற்குமேல் முகுந்தன் வேலம்பட்டி போய் வீடு சேர்ந்து, “அம்மா” என்று கதவைத் தட்டியபோது அதிக நேரமாய் விட்டது. “அப்பா முகுந்தா. வந்தாயா? ஏன் இவ்வளவு நேரம்? நான் பயந்து விட்டேன். குழந்தாய் ! பரீட்சை சமாசாரம் தெரிந்தவுடன் திரும்பி வருவதாய்ச் சொன்னாயே?..” என்றாள் தாயார்.

“சுவாமிமலைக்கு எல்லாரும் போயிருந்தோம். நான் வரவில்லை என்றேன். பையன்கள் விடவில்லை. போய்த் திரும்பிவர இவ்வளவு நேரமாகி விட்டது. உற்சவ வேடிக்கையெல்லாம் பார்த்தோம்” என்று முகுந்தன் சொன்னான்.

“நல்லது; எப்படியாவது வந்து சேர்ந்தாயே. அதுவே போதும். இருக்கட்டும். பரீட்சை என்னவாயிற்று குழந்தாய்?” என்று தாயார் கேட்டாள்.

“அம்மா! நான் முதலாவதாகத் தேறியிருக்கிறேன்” என்றான்.

“ஐயோ! என் கண்மணியே!” என்று சீதம் மாள் குழந்தையை அணைத்துக் கட்டிக்கொண்டு அழு தாள். அவள் ஏன் அழவேண்டும்? அவள் மனதில் அப்போது என்னென்ன எண்ணங்கள் உதயமாயின? இவை யெல்லாம், புருஷனை இழந்து, பெற்ற பிள்ளை ஒருவன் மேல் ஆசைவைத்து வளர்த்த தாய்களுக்குத் தான் தெரியும். நான் எழுதமுடியுமா?

***

முகுந்தன் தாயார் இப்படி ஆனந்தக் கடலில் மூழ்கிய நான்கே நாட்களுக்குள் ஐயோ. உலகமே! இந்த வீடு ஏன் இப்படிப் பாழடைந்து கிடக்கிறது? கதையைச் சுருக்கமாய்ச் சொல்லி முடிக்கிறேன். முகுந்தன் சுவாமிமலையில் தோழர்களுடன் விளையாடி விட்டு. வீடு திரும்பிய இரவே, வயிற்றில் வலி கண்டது. பிறகு பேதியாயிற்று. இரவுக்குள் பத்துத் தடவையாயிற்று. ஆனால் யாரும் விஷபேதி என்று நினைக்கவில்லை. ஏதோ சுவாமிமலையில் கடையில் பட்சணம் வாங்கித் தின்றதால் அஜீரணம் ஏற்பட்டிருப்பதாக எண்ணினார்கள். பையன் வெகு கஷ்டப்பட்டான். கிராமத் தில் நோய் கண்டால், வைத்தியனா . மருந்தா , ஒன்றும் கிடையாது. அதிலும் ஏழைகள் வீட்டில் காலரா அல்லது வேறு பெரிய வியாதியை நிறுத்தவோ , பரவா மற் செய்யவோ, என்ன ஏற்பாடுகள் செய்வதென்று ஒருவருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதற்குச் சௌகரியம் ஏது? செலவுக்குப் பணம் எங்கே? இப் படிச் செய்யவேண்டும். அப்படிச் செய்ய வேண்டும் என்று அறிந்தோர் சொல்வார்கள் : புத்தகத்தில் எழுதியிருப்பார்கள்; அவற்றில் ஒன்றையும் திக்கற்ற ஏழைகளின் குடிசைகளில் நடத்த முடியாது.

தெய்வாதீனமாய்ப் பையன் பிழைத்துக் கொண்டான். பக்கத்து வீட்டு ஜனங்கள் சிலர் பரிதாபப்பட்டு உதவி செய்தார்கள். பையன் தப்பிப் பிழைத்தாலும் தாயை விஷநோய் பிடித்தது. இரண்டு நாள் யாருக்கும் சொல்லாமல் தன் நோயை மறைத்து வைத்துக் கொண்டே பையனுக்கு வேண்டியது செய்து வந்தாள். கடைசியில் தாங்க முடியாமற் போகவே, படுத்துவிட்டாள். பிறகு என்ன செய்ய முடியும்? “ஐயோ என் குழந்தைக்குக் குணமாயிற்றா? அவனை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் சாகிறேனே!” என்று எழுந்து உட்கார்ந்து கதறிவிட்டு மறுபடியும் கீழே பிரக்ஞை தப்பி விழுந்தாள். பிறகு நினைவு வரவேயில்லை. கை கால்கள் சிறிது இழுத்தவுடன் உயிர் போய்விட்டது.

***

மேலும் பதினைந்து வருஷம் சென்றது. எல்லாம் அடியோடு மாறிவிட்டது. வேலம்பட்டி பார்ப்பாரத் தெருவில் வீடுகள் எல்லாம் பாழாயின். கோயில் பூஜை செய்யும் கிருஷ்ணபட்டர் மாத்திரமே தம்முடைய வீட்டில் குடியிருந்தார். மற்றவர்கள் எல்லாரும் ஜீவனோபாயந் தேடி ஊரைவிட்டுப் பட்டணக் கரைகளுக்குப் போய்விட்டார்கள். வேலம்பட்டிப் பறைச்சேரியும் பாதி பாழாய்க் கிடந்தது. சிலர் கண்டிக்கும், சிலர் பினாங்குக்கும், சிலர் சேர்வராயன் மலைக்கும், சிலர் கோலாருக்கும், பெங்களூருக்கும், வேறிடங்களுக்கும், கூலி வேலை தேடிப் போய்விட்டனர். குடியானத் தெருமட்டும் அவ்வளவு பாழாகவில்லை. காட்டையும் மாட்டையும் விட்டுப் போக வழியில்லாமல் அவர்கள் இருந்த இடத்திலேயே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

தாயுடன் இலங்கைக்குப் போன மாரியும் சின்னானும் அங்கேயே இருந்து வந்தனர். தோட்டம் சேர்ந்தவுடன் தகப்பன் பழையபடி கள்ளுக்கடைக்குப் போக ஆரம்பித்தான். வேலையும் சரியாய்ச் செய்வதில்லை. சோம்பேறி. குடிகாரன் என்று அவனைச் சில நாளுக்குள்ளாகவே துரத்திவிட்டார்கள். பின்னர் வேறு தோட்டத்துக்குப் போனான். அங்கேயும் இதே கதிதான். கண்ட கண்ட இடமெல்லாம் அலைந்து பிச்சையெடுத்துக் கொஞ்ச நாள் குடித்து வந்தான். கடைசியில் இன்ன இடம் போனானென்றே தெரிய வில்லை.

மாரியும் சின்னானும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு தாயுடன் சிக்கனமாய் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். மாரிக்கு இப்போது வயது இருபத்தைந்து. அதே தோட்டத்தில் பிறந்த பெண் ஒருத்தி இருந்தாள். “உனக்கு இந்தப் பெண்ணை விட நல்ல பெண் ஊரில் எங்கே கிடைக்கப் போகிறாள்? இவளைக் கட்டிக்கொள்” என்று குப்பாயி வற்புறுத்தியதன் மேல் மாரியும் அதற்கிணங்கினான். கலியாணமாகிச் சில நாளானதும் ஊருக்குத் திரும்பக் குடி போகலாம் என்று மாரி யோசித்தான்.

“அம்மா. இந்த நாட்டில் நாம் பதினைந்து வரு ஷம் ஜீவனம் செய்தாகிவிட்டது. தகப்பன் போனவன் திரும்பி வரவேயில்லை. அவனுக்காகக் காத்துப் பய னில்லை. நாம் ஏன் இனி நம் ஊருக்குப் போகக் கூடாது? நமக்கு இப்பொழுது என்ன குறைவு? நம் முடைய பணம் சுமார் 200 ரூபா கங்காணியிடமிருக் கிறது. அதை வாங்கிக்கொண்டு வேலம்பட்டிக்குத் திரும்பிப் போய், ஒரு வண்டியும் ஒரு ஜதை மாடும் வைத்துக்கொண்டு மானமாய் ஜீவனம் செய்யலாம். அம்மா ! இந்த ஊர் எனக்குப் பிடிக்கவேயில்லை. பட்டி யில் அடைப்பட்ட மாடுகள் மாதிரி வாழ்வு நடத்து கிறோம். கோயில் கிடையாது. ஒருவன் பெண்டாட்டி ஒருவனுடைய வளல்ல. இங்கே ஏன், அம்மா ! நாம் இனி இருக்க வேண்டும்?” என்று தாயிடம் சொன்னான்.

“ஆமாப்பா ஆமாம் / வேலம்பட்டிக்கே போய் அங்கே உங்கப்பன் குடிசையிலேயே சாகவேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை” என்றாள் குப்பாயி.

அவ்வாறே வேலம்பட்டிக்குத் திரும்பிப்போய்ச் சேர்ந்தார்கள். மாரியும் சின்னானும் மேலச்சேரிச் சந்தைக்குப் போய் ஒரு ஜதை நல்ல காளை மாடும், சேலத்தில் ஒரு வண்டியும் வாங்கிக்கொண்டு வந்தார்கள். அவற்றை வைத்துக்கொண்டு சில காலம் மாரி மிகவும் சந்தோஷமாய் வாழ்வு நடத்தினான். குடியானத் தெருவில். “பார்த்தாயா? கண்டிப்பறையன் மாடும் வண்டியுமாய்க் கொழுத்திருக்கிறான்” என்று பொறாமைப் பட்டார்கள்.

ஆனால், நீண்ட நாள் இப்படி நடக்கவில்லை. கெட்ட காலம் சீக்கிரத்திலேயே வந்துவிட்டது. மாடுகளில் ஒன்று இருந்தாற் போலிருந்து நொண்ட ஆரம்பித்தது. இன்ன காரணமென்று தெரியவில்லை. என்ன செய்தும் கால் சரியாகவில்லை. கொண்டலாம்பட்டியில் ஒரு மாட்டு வைத்தியனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்துக் காலுக்கு மருந்து வைத்துக் கட்டிப் பார்த்தான். பிறகு மந்திரம் போடுவித்தான்; கடைசியில் சூடும் போட்டுப் பார்த்தான். ஒன்றுக்கும் கேட்கவில்லை. அந்த மாட்டுக்குப் போட்ட பணம் வீணாய்ப் போயிற்று. வண்டியை ஈடுகாட்டி குடியானவன் ஒருவனிடம் நாற்பது ரூபாய் கடன் வாங்கிக் கையிலிருந்த பணத்தையும் சேர்த்து வேறொரு மாடு வாங்கினான். இது கொஞ்ச நாள் நடந்து வந்தது.

திடீரென்று அந்தப் பக்கத்துக் கிராமங்களில் கோமாரி வியாதி பரவலாயிற்று. அனேகக் கால்நடைகள் இறந்தன. மாரியின் புதுமாடு அந்த நோய்கண்டு ஒரே நாளில் செத்துவிட்டது. பிறகு குடித்தனம் போன போக்கைப்பற்றி எழுதுவானேன்?

கடைசியில் ஒரு குடியானவன் தோட்டத்தில் அண்ணனும் தம்பியும் வேலைக்கு அமர்ந்தார்கள். எஜமானன் இரவும் பகலும் வேலை வாங்குவான். ஆனால். கூலி மிகவும் குறைவு. எல்லாரும் அரை வயிறு சாப் பிட்டாலும் தள்ளாத தாயைக் காப்பாற்றுவது கஷ்ட மாய் இருந்தது. போதாதற்கு, தம்பி சின்னான் சண்டை பிடிக்க ஆரம்பித்தான்.

இப்படியிருக்கையில் பினாங்குக்கு ஆள் சேர்க்க ஒரு கங்காணி வந்தான். சின்னான் அண்ணனிடம் சொல்லாமல் அவன் பின்னோடு போய்விட்டான். நாகப்பட்டினம் போனதும் அண்ணனுக்கு ஒரு கடுதாசி எழுதிப்போடச் செய்தான். தான் சொல்லாமல் வந்து விட்டது பெருங்குற்றம் என்றும், அதற்காக மன்னிக்க வேண்டுமென்றும், பஞ்சம் பொறுக்க முடியவில்லை யாதலால் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலா மென்று கிளம்பி வந்ததாகவும். அண்ணன். அண்ணி. தாயார் இவர்களுடைய பாதாரவிந்தங்களுக்கு நமஸ் காரம் செய்வதாகவும் கடிதத்தில் எழுதியிருந்தது. ஆனால், இந்த வக்கணையெல்லாம் சின்னானுக்கா எழுதத் தெரியும்? எழுதித் தந்தவனுடைய கைச்சரக்குதான். ஆனால், அண்ணனுக்கு மரியாதையாய்க் கடிதம் எழுதச் சொல்லி அதற்காக இரண்டணா எழுத்துக் கூலி கொடுத்தது பெருந்தன்மை யல்லலா? படிப்பில்லாத ஏழை ஒருவன் அதற்குமேல் என்ன செய்யமுடியும்?

கிழவி குப்பாயி. பாவம், அதிகமாகப் புலம்ப ஆரம்பித்தாள். “ஐயோ ! இது எல்லாம், குழந்தையாயிருக்கையில் அந்தப் பாப்பாத்தி அடுப்பண்டை போனாயே. அந்தச் சாபந்தான் அப்பா! அது இன்னும் நீங்கவில்லையே. மாரியாயி நீ எப்போது மனமிரங்கு வாய்? இந்தக் கொடுமை எப்போது தீரும்? கையில் காசு இல்லையே. இருந்தால் அடுத்த நோன்புக்கு ஒரு கோழியாவது தருவேனே. வேலம்பட்டி ஆயாளே நானாவது சீக்கிரம் செத்தால் என் கஷ்டம் தீர்ந்து விடும். என் அறியா மகனைக் காப்பாற்று. அவனும் அவன் பெண்டாட்டியும் சுகமாயிருக்க வேண்டும்” என்று அவள் சதா உளறிக்கொண்டேயிருப்பாள்.

மாரியின் மனைவி பூவாயிக்குப் பதினைந்தே வயதானாலும் வெகு சுறுசுறுப்பாய் வேலை செய்வாள். காட்டுக்குத் தைரியமாய்ப் போய்ச் சுற்றித் திரிந்து விறகு கொண்டுவருவாள். வெறுமனே ஒரு நிமிஷமும் இருக்கமாட்டாள். ஒழிந்த நேரத்தில் புல் செதுக்குவாள். அல்லது எங்கேயாவது கெஞ்சி வேலை செய்து கூலி கொண்டுவருவாள். புல் அல்லது விறகு கொண்டு போனால் இவள் தலைச் சுமைக்குக் கொஞ்சம் அதிக விலையே கொடுப்பார்கள். எப்படியோ தன் சாமர்த்தி யத்தால் வாரத்தில் இரண்டு, மூன்று நாள் தவறாமல் வெள்ளைப் பணமாக இரண்டணா கொண்டுவந்து சிரித்த முகத்துடன் புருஷனிடத்தில் கொடுப்பாள்.

அந்த வருஷத்தில் மழை துளிகூடக் கிடையாது. நாலு வருஷமாகவே மழை சரியாய்ப் பெய்யவில்லை. ஆனால், அந்த வருஷத்தைப்போன்ற கொடும் பஞ்சம் அதற்குமுன் கிடையாது. கிணறுகளெல்லாம் வற்றிப் போயின. பயிர் பச்சையேயில்லை. குடிக்கத் தண்ணீ ருக்குக் கூடக் கஷ்டமாய்ப் போய்விட்டது. அனேகம் பேர் ஊரைவிட்டே போய்விட்டார்கள்.

மாரியும் தன் மனைவியுடன் எங்கேயாவது போய் ஜீவனம் தேடலாமென்று பார்த்தான். ஆனால், தாய், “நாம் இங்கேயே இருந்து செத்துப் போகலாம். எங்கே போய் என்ன? தெய்வம் அங்கே காப்பதா யிருந்தால் இங்கேயும் காக்கும் ” என்று சொல்லிப் பிடிவாதமாய் மாட்டேனென்றாள் . தள்ளாத தாயின் வார்த்தையை மாரி தட்ட மாட்டாமல் பேசாதிருந் தான்.

சேரியில் இப்போது ஐந்து வீடுகள் தான் காலியாகா மல் இருந்தன. மற்ற வீட்டுக்காரர் எல்லாரும் ஊரை விட்டுப் போய்விட்டார்கள். சேரியைச் சேர்ந்த தண் ணீர்க் குட்டை வற்றிப்போய் பல நாளாயிற்று. பக்கத் தில் ஒரு வேளாளன் தோட்டம். அதில் ஒரு கிணற்றில் தான் கொஞ்சம் தண்ணீர் இன்னும் இருந்தது. அந்த தோட்டக்காரன் அதில் கவலை கட்டி இறைத்துக் கொஞ்சம் பாக்கி இருந்த பயிரைக் காப்பாற்றி வந்தான். தண்ணீர் இறைத்தானதும் கவலை மாடுகளை அவிழ்த்து விட்டுக் கழுவின பிறகு பறையர்கள் கிணற்று வாய்க் காலிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டி யது. கிணற்றில் பறையர்கள் தங்கள் குடத்தை விடக் கூடாது. விட்டால் தீட்டாய்ப் போகும். ஆகையினால் அவர்கள் வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டியது : மற்றக் குடியானவர்கள் இவ் வளவுகூட இடங்கொடுக்க மாட்டார்கள். ஐந்து வீட்டார் தினசரி எடுத்துக்கொள்ளும் தண்ணீர். காய்ந்துபோகும் பயிருக்குக் கொஞ்சம் உதவுமல்லவா? ஆனால், குட்டிக்கவுண்டன் நல்லவன். “பாவம் ஏழைப் பறையர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லா மல் சாகிறார்கள்” என்று இரக்கப்பட்டு அவர்களைத் தண்ணீர் எடுக்கவிட்டான்.

காலையிலிருந்து பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் முன், நீ முன் என்று சண்டை போடுவார்கள். வாய்க்காலில் தோண்டிய பள்ளத்தில் நிற்கும் ஜலம் ரொம்பக் கொஞ்சம். ஆகையால் சண்டை. ஒவ்வொரு நாள் அவர்கள் போடும் சண்டையில் வாய்க்காலில் தண்ணீர் சேறாய்ப் போய்விடும். “பார். சாமி, பொல்லாதவள் தண்ணீரைக் கலக்கிவிட்டாள்” என்று ஒருத்தி மேல் மற்றொருத்தி குடியானவனிடம் புகார் சொல்லுவாள். இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டு நின்ற குடியானவர்கள் “இந்தப் பறையர்கள் வழக்கமே இப்படி” என்பார்கள். பிறகு. அந்தப் பெண்கள் சேற்று நீரையே அள்ளி எடுத்துக்கொண்டு போவார்கள். வீட்டில் குடத்தில் வைத்திருந்தால் பிறகு தெளியலாமல்லவா?

இவையெல்லாம் படிப்பதற்குக் கஷ்டமாகவே இருக்கும். மகா கொடுமை! ஆனால், இவ்வளவும் உண்மையேயல்லவா? ஏழைத் ‘தீண்டாதாரின் துயரம் இதுதான். உலகத்திலே புண்ணிய பூமியும், தர்மம் என்பதற்குப் பிறப்பிடமுமானது நமது பாரத தேசம். அன்பும், தெய்வ பக்தியும், பாவத்தைக் கண்டு அஞ்சும் குணமும், நம் நாட்டில் வாழும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயல்பானவை. ஆனால் நீசர் என்று பெயரிட்டுச் சிலரை ஒதுக்கிவைக்கிறோமே. அக்கொடிய வழக்கத்தின் வெப்பத்தில் நமது தர்மம் அன்பு, தெய்வபக்தி, நல்லொழுக்கம் எல்லாம் எரிந்து சாம்பலாய்ப் போய் வருகின்றன. அவ்வழக்கம் தொலைய வேண்டும். தெய்வம் கொடுக்கும் சுகதுக்கங்களை அனை வரும் சமமாகப் பகிர்ந்து அனுபவிப்பதல்லவா தர்மம்? சிலர் பேரில் பொறுக்க முடியாத சுமை போடுவது பாவம் அல்லவா?

***

குட்டிக்கவுண்டன் தோட்டத்துச் சாளையில் வழக்கம் போல் அவன் மக்கள் இருவரும் படுத்திருந் தார்கள். இராத்திரிக் காவலுக்கு அங்கே பயிர் ஒன்று மில்லை. ஆனால், அரை வயிற்றுக்குத் தீனி போட்டு எலும்புக்கூடாயிருந்த நாலு எருதுகளும் நாலைந்து வெள்ளாடுகளும் இருந்தன. தண்ணீர் இறைத்த பரியும் கயிறும் கிடந்தன. இவைகளை யாராவது தூக்கிக் கொண்டு போய்விடலாமல்லவா? பஞ்சக் காலத்தில் கிடைத்ததைத் தூக்கி விடுவார்கள். இதற்காகக் காவல் சாளையில் யாராவது இரவில் படுப்பது வழக்கம்.

நடுநிசி. உச்சிக்குமேல் பூரண சந்திரன். அந்த வெண்ணிலாவில் காய்ந்துபோன வயல் காடுகளும் கூடப் பால்வண்ணத்துடன் அழகாய்த் தோன்றின. பகலில் தான் எங்கேயும் பஞ்சத்தின் கொடிய தோற்றம். இரவில் எல்லாம் ஓய்ந்து அடங்கி மறைந் திருந்தன. பஞ்சங்கூட இரவில் தூங்குமல்லவா? மனிதனுக்கிருக்கும் கஷ்டங்களுக்கு. அவன் சற்று நேரம் நினைவற்றுத் தூங்கக்கூடியதா யிருப்பது ஒரு பெரிய சகாயமே.

நிச்சப்தமாயிருந்த அந்த நள்ளிரவில் திடீரென்று நாய் குலைத்தது. ஒன்று குலைக்கவே எல்லா நாய்களும் குலைக்கத் தொடங்கின. “யார்? திருடன்!” என்று குட்டிக்கவுண்டனின் சின்ன மகன் எழுந்து உட்கார்ந்தான். கிணற்று வாரியோடு யாரோ பூவரச மரங்களின் நிழலில் மெதுவாய் நழுவிச் சென்றதாகத் தோன்றிற்று.

“எழுந்திரு. அண்ணா! யாரோ திருடன் ஓடுகிறான்” என்று மறுபடியும் சத்தம் போட்டான். ‘என்ன, என்ன?” என்று செங்கோடன் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்தான். உடனே “ஓ. மாமா ! ஏ. இராக்கியாக்கவுண்டா! ஓ. காளி! பரி எடுத்துக்கொண்டு ஓடுகிறான் திருடன். ஓடி வாருங்கள் / ஓடி வாருங்கள் என்று உரக்கக் கூவிக் கொண்டு ஆள்போன பக்கமாய் ஓடினான்.

இதற்குள் ஊரிலுள்ள நாய்கள் எல்லாம் குலைக்க ஆரம்பித்துவிட்டன. ‘தோட்டத்தில் திருடன் புகுந்து விட்டான் என்றும், பிடி பிடி’ என்றும் இன்னும் பலவாறாகப் பெருங்கூச்சல் கிளம்பிவிட்டது. பக்கத் துச் சாளைகளில் உள்ளவர்கள் எல்லாரும் எழுந்து ஓடிவந்தார்கள். கடைசியில் திருடன் பிடிபட்டான். பிடிபட்ட திருடனைப் பார்த்தால் ஒரு பெண் பிள்ளை! அவள் கையில் மண் குடமும் கயிறும் இருந்தன. திருடியது தண்ணீர்! கிணற்றில் தன் குடத்தைப் போட்டுத் தண்ணீர் மொண்டிருந்தாள். “அடே பாவி. பறைப்பிள்ளை வந்து கிணற்றில் குடத்தை விட்டு விட்டதடா” என்று கூக்குரலிட்டார்கள். உடனே “அடி” “உதை”. ‘கொல்லு. “உடை பானையை” – என்று நாலாபுறமும் கூச்சல் கிளம்பிற்று. பானை ஒரு நிமிஷத்தில் சுக்கு நூறாயிற்று. உதையும் அடியும் ஒன்றின் மேல் ஒன்றாக ஓயாமல் விழுந்தன. பெண்பிள்ளை நினைவு தப்பிக் கீழே விழுந்தாள்.

“அடே. செத்துப்போய்விட்டாள். இனி அடிக் காதேயுங்களடா” என்றான் இராக்கியாக்கவுண்டன்.

“குழி வெட்டி நாயை மூடுங்கடா” என்றான் இன்னொருவன்.

‘ஆமாம். தொந்தரவு இல்லாமற் போகும்’ என்றான் மற்றொருவன்.

குழி வெட்டுவது, மூடுவது என்ற பேச்சுக் கிளம்பியவுடன் எல்லாருக்கும் கொஞ்சம் புத்தி தெளிந்தது. அடித்துக்கொண்டேயிருக்க முடியாது. அதற்கு ஒரு முடிவு உண்டு என்று உணர்ந்தார்கள்.

“யாரடா இவள்? யாருக்காவது தெரியுமா? பாருங்கள்” என்றான் ஒரு கிழவன்.

‘கண்டி மாரி பெண்சாதிடா! ஐயோ பாவம் இவள் நல்ல பிள்ளையாயிற்றே. இவள் ஏன் இந்த வேலை செய்தாள்?’ என்றான் செங்கோடன், குட்டிக் கவுண்டனின் பெரிய மகன்.

“நேற்றுத் தண்ணீர் இல்லை போ என்று எல்லாப் பறைப் பெண்களையும் விரட்டிவிட்டேன். ஆகையால் இம்மாதிரிப் போக்கிரித்தனம் செய்திருக்கிறாள்” என்றான் சின்ன மகன்.

“இந்தக் கொடும் பஞ்சத்தில் சாதியேது. சாமி யேது. எல்லாம் ஒன்றாய்ப் போய்விட்டது. நல்லதுமில்லை, கெட்டதுமில்லை” என்று ஒரு நெட்டையான கவுண்டன் கீழே கிடந்த பெண்ணண்டை நின்று பார்த்துக்கொண்டு சொன்னான்.

“அடே, அவள் சாகவுமில்லை. ஒன்றுமில்லை. வெறும் பாசாங்கு. உதையடா. உதை விழுந்தால் எழுந்து வீட்டுக்கு ஓடுவாள்” என்று ஒருவன் சொல்லிக்கொண்டு உதைக்கவும் உதைத்தான். மற்ற வர்களும் இந்தச் சிகிச்சையைப் பிரயோகித்தார்கள். கொஞ்சம் அசைந்தாற்போல் காணப்பட்டது. ஆனால், எழுந்திருக்கவுமில்லை, பேசவுமில்லை.

“அடே , இந்த நாயைத் தூக்கிப் போய்ச் சேரியில் எறிந்துவிட்டு வாருங்கடா” என்றான் இராக்கியாக்கவுண்டன், இராக்கியாக்கவுண்டனுக்குக் கொலைக் கேசு அனுபவம் உண்டு. அதன் கஷ்டம் அவனுக்குக் கொஞ்சம் தெரியும். அவன் செஷன்ஸ் வரையில் ஒரு விசாரணைக்காகப் போயிருந்தவன்.

இராக்கியாக்கவுண்டன் சொன்னபடி, மூன்று நாலுபேர், கீழே கிடந்த பெண்பிள்ளையைத் தூக்கிக் கொண்டு சேரிப்பக்கம் சென்றார்கள்.

***

பெற்றோர்களில்லாத அனாதைக் குழந்தைகள் ளுடைய சரித்திரம் உண்மை விவரங்களுடன் எழுதப் பட்டால் எல்லாருக்கும் மிகுந்த பயன் தருவதா யிருக்கும். நாம் அனைவரும் அவர்களைப் போன்ற அபாக்கியர்கள் இல்லையானாலும், அவர்களுடைய அனுபவங்களிலிருந்து பல விஷயங்களைக் கற்றறிந்து பயன் பெறுதல் கூடும். முகுந்தனுடைய அனுபவங் களும் அத்தகையனவே. தாய் இறந்து அனாதையாய்ப் போன நாள் முதல், அவன் ஏங்கித் திரிந்து அலைந்து வளர்ந்த கதை ஒரு பாரதமாகும். ஆனால், அவன் தன் சரித்திரத்தை எழுதி வைக்கவில்லை. கேட்டறிந்து எழுதுவது ஆறின கஞ்சியைப் போல் ருசியற்றிருக்கும்.

திக்கற்ற குழந்தைகளுக்கு மற்றது ஒன்றுமில்லா மல் போனாலும், தேசம் சுற்றித் திரியும் பாக்கியம் உண்டு. பூகோள சாஸ்திரம் அவர்களுக்கு அனுபவப் படிப்பு . முகுந்தனும் பாரததேசம் முழுதும் அலைந்து திரிந்து வெகு கஷ்டங்கள் பட்டு எப்படியோ முன் னுக்கு வந்தான். கடைசியாக, டாக்டர் பரீட்சையில் தேறி. ஒன்றிரண்டு ஊர்களில் இருந்துவிட்டுப் பிறகு சொந்த ஊருக்கே ஆஸ்பத்திரி டாக்டராக வந்து சேர்ந்தான்.

ஒருநாள் கமலாபுரம் ஆஸ்பத்திரியில் டாக்டர் முகுந்தன், மேஜை மீது மருந்து கொடுத்த கணக்குகளை வைத்துக் கொண்டு ஒத்துப்பார்த்துக் கொண்டிருந் தான். வருஷாந்தரக் கணக்குத் தயார் செய்து அனுப்ப வேண்டிய நாள் நெருங்கியிருந்தது. அப்போது வெளியே நான்கு ஆட்கள் தாங்கள் தூக்கி வந்த கயிற்றுக் கட்டிலைக் கீழே மெதுவாக வைத்து, “சா அ அமி. என்றார்கள். அளபெடை வண்ணம் காதில் வீழ. ‘பறையர்கள் போலிருக்கிறது. என்ன? கொலையா? போய்ப் பாரும்” என்று முகுந்தன் கம்பவுண்டருக்குச் சொன்னான்.

அவ்வூர்ப் பள்ளிக்கூடத்தின் தலைமை உபாத் தியாயர் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் தினம் காலையில் தேகாரோக்கியத்துக்காகக் கொஞ்ச தூரம் நடந்துவிட்டு ஆஸ்பத்திரியில் டாக்டருடன் அரை மணி நேரம் வெறும் பேச்சுப் பேசிவிட்டுப் போவது வழக்கம்.

“வாரந் தவறாமல் இந்த ஊரில் ஒரு கொலை: ஒரு பிரேத விசாரணை. பொல்லாத ஊர் இது. நான் இருந்த வேறு எந்த ஆஸ்பத்திரியிலும் இப்படியில்லை” என்றான் முகுந்தன்.

‘படிப்பில்லாத ஜனங்கள். இந்த ஜில்லாவில் ஒன்றுமில்லாததற்கெல்லாம் சண்டை போடுவார்கள். வாய்ப் பேச்சிலிருந்து உடனே அடி, குத்து. கொலை ஏற்பட்டுவிடுவது சர்வ சாதாரணம். ஆரம்பப் படிப்புப் பரவினால் தான் இவைகளெல்லாம் இருக்காது’ என்றார் உபாத்தியாயர்.

இதற்குள் கம்பவுண்டர் முத்துப் பிள்ளை திரும்பி வந்து. “பிரேதமல்ல; பெண்பிள்ளையைப் பலமாய் அடித்துக் கட்டிலில் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றார்.

“வயது என்ன?” என்றார் ஹெட்மாஸ்டர். இந் தக் கேள்வியைக் கவனியாமல் முகுந்தன், “உள்ளே கொண்டு வந்து மேஜைமேல் இறக்கச் சொல்லு” என்றான்.

ஹெட்மாஸ்டர் புன்னகையுடன் “ஏதோ திருட்டு சினேகம். அதிலிருந்து வந்த ஆபத்துப் போல் தோன்றுகிறது” என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.

“இருந்தாலும் இருக்கலாம் : போய்ப் பார்ப் போம்” என்று முகுந்தன் எழுந்து மேஜையண்டை போனான். பெண்ணைக் கொண்டுவந்த ஆட்கள் அவளை மெல்லக் கட்டிலிலிருந்து தூக்கி மேஜைமேல் படுக்க வைத்தார்கள்.

முகுந்தன் காயங்களைப் பார்த்துக்கொண்டே, “பலமாய் அடித்திருக்கிறார்கள்” என்றான். நன்றாகப் பரிசோதித்ததில், இரண்டு கையெலும்புகள் ஓடிந்து போயிருந்ததாகத் தெரியவந்தது. மற்றவை மேலான தோல் காயங்கள்.

பெண்ணைத் தூக்கிவந்த ஆட்களில் ஒருவன் மாரி. “பிழைப்பாளா, எஜமானே?” என்று அவன் கேட்டான்.

“உனக்குச் சொந்தமா? “என்றான் முகுந்தன்.

“என் வீட்டுக்காரி. சாமி! பிழைப்பாளா?” என்று கண்ணில் நீர் ததும்ப மறுபடியும் கேட்டான்.

“எல்லாம் சரியாய்ப் போகும் ; பயப்படாதே. ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் வைத்திருக்க வேண்டும்” என்றான் முகுந்தன்.

இதைக் கேட்டதும் மாரி “ஐயோ” என்று கதறி, “ஒரு மாதம் கஞ்சிக்கு என்ன செய்வேன்?” என்றான்.

“பைத்தியக்காரா! கஞ்சி நாங்கள் வார்ப்போம். பயப்படாதே” என்றான் முகுந்தன். அப்போது கூட வந்திருந்தவர்களில் ஒருவன், “அடே மாரி! உனக்குத் தெரியாதா? நம்ம ஊர் சாமியடா; டாக்டர் துரை நம்ம வேப்பமரத்தையா மகன்! நம்மைக் காப்பாற்றுவார். எஜமான். வாசிபண்ணிவிடுவார்” என்றான்.

‘கஞ்சி வார்த்துக் குணப்படுத்தி விடுவார். உனக் கும்கூடச் சோறு போடுவார். ஏண்டா அழுகிறாய்?’ என்றான் மற்றொருவன்.

“நம்ம எஜமான், நம்மைக் காப்பாற்றுவாராடா” என்றார்கள் மூன்று பேரும் சேர்ந்து.

மாரி இப்போது நிமிர்ந்து டாக்டர் முகத்தைப் பார்த்தான். “சுவாமி, நீங்கள் முகுந்தையா அல்லவா?” என்று கேட்டான்.

‘ஆம், ஆம்’ என்று முகுந்தன் அடிப்பட்டவளுடைய ஒடிந்த கைகளைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“நான் போய் வருகிறேன். டாக்டர்வாள்!” என்று ஹெட்மாஸ்டர் நமஸ்காரம் செய்தார்.

“ஆகா. சரி, நமஸ்காரம்” என்று முகுந்தன் அவருக்குச் சொல்லிவிட்டு. “என்ன சண்டை? ஏன் இந்த அடி? சமாசாரம் சொல்லு, தம்பி” என்று மாரியைக் கேட்டான்.

வந்தவர்கள் நடந்த விருத்தாந்தத்தைச் சொன்னார்கள். கதை சொல்லும் போது எல்லாரும் சேர்ந்தாப் போல் பேசியபடியால், விவரம் தெரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாய்த்தானிருந்தது.

***

“முத்துப்பிள்ளை! ஏதாவது பூப்பறித்து வைத்திருக்கிறீரா. என்ன?” என்று டாக்டர் கேட்டார்.

“இல்லை ஐயா / பூவேது. பறிப்பதேது? செடி யெல்லாம் காய்ந்து கிடக்கிறது” என்று கம்பவுண்டர் சொன்னார்.

“இந்தப் பெண்ணண்டை வந்தால் கம் என்று மல்லிகை வாசனை வருகிறதே. என்ன காரணம்? அம்மா கொய்துவைக்கும் மல்லிகைப்பூ வாசனை மாதி ரியே இருக்கிறது ” என்று முகுந்தன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இவ்விதம் தன் தாய் ஞாப கத்துடனே பூவாயியின் காயங்களுக்கெல்லாம் மெது வாக மருந்து தடவினான். பிறகு எலும்பு உடைந்த கைகளுக்கு சிம்புகள் வைத்துக் கட்டினான்.

“எப்படியிருக்கிறதம்மா?..” என்று அவளைக் கேட்டான்.

“அப்பா என்று அவள் பெருமூச்சுவிட்டு ‘இப்போது கொஞ்சம் பொறுக்கலாம். எஜமானே! சாமி உன்னை மகாராஜனாக்கட்டும். நீ சுகமாயிருக்க வேண்டும், எஜமானே!” என்றாள்.

இவ்வார்த்தைகள் அந்தப் பெண் வாயிலிருந்து வந்தபோது அவள் பார்வையும், அவள் முகத்தில் பூத்த புன்முறுவலும், பெற்ற தாய் தன் குழந்தையைக் கண்டு ஆனந்தப்படும் போது தோன்றும் முகமலர்ச்சி யாகவே இருந்தது. முகுந்தனுக்கு ஏனோ தன் தாயின் நினைவு மேன்மேல் அதிகரித்து வந்தது.

“இது என்னவோ தெரியவில்லை. இவளண்டை வரும்போதெல்லாம் அம்மா நினைவு மேலிடுகிறது என்று மறுபடியும் தனக்குள்ளே சொல்லிக் கொண்டு முகுந்தன் எழுந்து கைகழுவப் போனான். எங்கே போனாலும் மல்லிகை வாசனை நிறைந்தாற்போ லிருந்தது. முகுந்தன் தாயாருக்கு மல்லிகைப் பூவில் அதிகப் பிரியம். புருஷன் இறந்து தலையில் பூவைத்துக் கொள்ள முடியாமற் போன பிறகுங்கூட தினம் தவறா மல் எங்கிருந்தாவது மல்லிகைப்பூ பறித்துக்கொண்டு வந்து பூஜைக்கு வைப்பாள். வீடு முழுதும் வாசனை வீசும். இன்று முகுந்தன் எங்கும் அவ்வாசனையைக் கண்டான்.

இம்மாதிரி சில சமயங்களில் அகாரணமாக ஏதோ ஒரு வாசனை அல்லது ஒரு பாட்டின் இசை மனதில் திடீர் என்று தோன்றி, அதனுடன் குழந்தைப் பிராயத்தின் நினைவு உதிப்பது பலருடைய அனுபவம் அல்லவா? சில வேளைகளில் ஏதோ முன்னால் மோந்த மணம், எப்போதோ கேட்ட பாட்டு என்று மாத்திரம் நினைவு தோன்றுமேயொழிய, எப்போது. எந் நாளில், நுகர்ந்தது என்று சொல்ல முடியாம லிருக்கும். இவை பூர்வ ஜன்ம நினைவுகள் என்று சிலர் சொல்வார்கள். தான் குழந்தையா யிருந்தபோது வேலம்பட்டி வீட்டில் தாயுடன் விளையாடின பருவம் இன்று முகுந்தன் மனதை விடாமல் கவர்ந்தது.

‘இதென்ன ஆச்சரியம்! இந்த மல்லிகைப் பூ வாசனை விடமாட்டேன் என்கிறது. ஒரு வேளை இறந்தவர்கள் மறுபடியும் பிறக்கிறார்களென்று சொல்லுகிறார்களே. அம்மாதான் இந்தப் பெண் ணாய்ப் பிறந்தாளோ, என்னவோ? யார் இல்லையென்று சொல்ல முடியும்? என்று இந்த மாதிரி எண்ணி முகுந்தன் மறுபடி எழுந்து அந்தப் பெண்ணின் கட்டி லண்டை போனான். கண் மூடியிருந்தவள் கண்ணைத் திறந்து இவனைப் பார்த்தாள். அந்தப் பார்வை மறு படியும் இவனுக்குத் தாயார் நினைவை உண்டாக்கிற்று மீண்டும் மல்லிகைப் பூ வாசனை குப் என்று வீசிற்று.

படுத்ததும் தூங்கிப் போவது முகுந்தன் வழக்கம். இந்த வித்தையை அவன் வடக்கே சுற்றிக் கொண் டிருந்த காலத்தில் ஒரு யோகியிடம் கற்றுக்கொண் டான். படுத்த உடன் தூக்கம் வராமல் எண்ணங்கள் பல தொடர்ந்து தொடர்ந்து வருவது எல்லாருக்கும் சாதாரண அனுபவம். முகுந்தன் அவ்வெண்ணங்களை விரட்டி. மனதை யடக்கிப் படுத்தவுடன் தூங்கிப் போகப் பயின்றிருந்தான். ஆனால், இன்று அது பலிக்க வில்லை. என்ன முயற்சி செய்தும் தூங்க முடியவில்லை. சிறிது நேரம் புரண்டு புரண்டு பார்த்துவிட்டுக் கடைசியில் எழுந்து உட்கார்ந்து விளக்கேற்றிப் புஸ்த கத்தை எடுத்துக் கொண்டான். அது . இறந்து போன நண்பன் ஒருவன் கொடுத்த பகவத்கீதைப் புஸ்தகம். அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். இரண்டா வது அத்தியாயம். 22-ம் சுலோகத்துக்கு வந்தான் :

“ஒருவன் நைந்து போன துணியை எறிந்து விட்டுப் புதிய துணியை உடுப்பது போல் தேகத் தில் வசிக்கும் ஆன்மாவானது பழுதுபட்ட தேகத்தைவிட்டு வேறு புதிய தேகத்தையடைகிறது.”

முகுந்தனுக்குத் தன் தாயார் நினைவு வந்தது.

“ஆமாம்; ஆனால், இறந்தவனுக்கு மறு பிறப்பில் என்ன தேகம் கிடைக்கும்? நினைத்த தேகம் எடுக்க முடியுமா? அது முடியாது. தான் செய்த நன்மை, தீமை, உபகாரம். அபகாரம், இவைகளையொட்டியே புது ஜன்மம் கிடைக்கும். மனிதனோ, பிராணியோ துன்பத்தில் அடிபடுவதை அடிக்கடி நாம் காண் கிறோம். நம்மைத் துக்க சாகரத்தில் மூழ்கடித்துவிட்டு இறந்துபோன நமது தாயே, தகப்பனே. அண்ணனே மறுபிறப்பில் அந்த உருவம் எடுத்திருக்கலாமல்லவா? ஆதலின் துன்பப்படும் மனிதனுக்காகட்டும், பிராணிக் காகட்டும். நாம் அன்புடன் ஆதரவளித்து நோயைத் தீர்க்க முயல வேண்டும். யாராவது பொருளோ. பதவியோ அடைந்து சுகமாயிருப்பதைக் கண்டு நாம் பொறாமைப் படுகிறோமே. அது என்ன அறியாமை? ஒரு வேளை. நமக்கு மிகவும் பிரியராயிருந்து அகாலத் தில் இறந்துபோன எவருக்காக நாம் இன்னும் துக்கப் படுகிறோமோ அவரே. மறு ஜன்மம் எடுத்து, தாம் முன்செய்த நற்கருமங்களின் காரணமாய் அந்த நல்ல பதவியையோ . பொருளையோ அடைந்திருக்கலா மல்லவா? இப்படி முகுந்தன் தனக்குத்தானே வியாக் யானம் சொல்லிக்கொண்டான்.

இந்த கீதா சுலோகத்தை இதற்கு முன் பலதரம் அவன் படித்ததுண்டு. புதியதொன்றுமில்லை. ஆனால், சில சமயங்களில் நாம் படிக்கும் சுலோகமோ . பாட்டோ . குறளோ முன்னெப்போதுமில்லாத புது மைத் தெளிவுடன் விளக்கமாகிறது. இந்த பகவத் கீதை சுலோகம் முகுந்தனுக்கு அவ்விதம் இன்று விளங்கிற்று.

“வயதினாலோ. நோயினாலோ மெலிந்து உடல் தான் இறந்து போகிறது. ஆனால், நோயும், மூப்பும் இல்லாத ஆத்மாவும் அத்துடன் இறந்து போகுமோ? அதெப்படி முடியும்? அம்மாவின் உடல் இறந்தாலும் அவள் மறுபடியும் வேறு உடலில் பிறந்தே இருக்க வேண்டும்” என்றிவ்வாறு இடையிடையே பற்பல எண்ணங்கள் எண்ணிக்கொண்டே படித்துக்கொண்டிருந்தான்.

***

“அப்பா, முகுந்தா! குழந்தாய் எழுந்திருக்கிறாயா? சாப்பிட வருகிறாயா?..” என்று அம்மா சமையல் உள்ளிலிருந்து கூப்பிட்டாள்.

அவள் குரலே; அதில் சந்தேகமேயில்லை! இதென்ன அதிசயம்? இவ்வளவு நாள் இவள் இறந்து விட்டாள் என்று நினைத்து வருந்திக்கொண்டிருந் தேனே? இதோ அவள் குரல் / அவளே ! நான் ஊர் ஊராய்ச் சுற்றியது. கஷ்டப்பட்டது, எல்லாம் வெறுங் கனவு. அம்மா செத்துப் போகவில்லை; உயிருடன் இருக்கிறாள். பள்ளிக்கூடத்துக்குப் போக நேர மாயிற்று. இனி ஒருநாளும் அழுக்குத் தண்ணீர் குடிக்கமாட்டேன். எனக்குக் காலரா வந்தாலும் அவளை என்னருகில் வரவிடமாட்டேன். அவளுக்கும் நோய் ஒட்டும்படி விடமாட்டேன். ஐயோ! இதென்ன சந்தோஷம்? அம்மா உயிருடன் இதோ இருக்கிறாளே ! அம்மா கிட்டவா!

***

எங்கேயோ அவசரமாய்க் குடம் எடுத்துக் கொண்டு வேகமாய்ப் போகிறாள். என்னையும் வா வென்று அழைப்பது போல் கையினால் சைகை காட்டுகிறாள். அவசரமாய்ப் போகிறாள். இதென்ன சேரிக் குள் ஓடுகிறாள் ! ஐயோ நில், அம்மா , நில், ஏன் ஓடு கிறாய்? அதோ, சேரிக்குள் போய்விடுகிறாள். அங்குள்ள வர்கள் எல்லாம் சுற்றிக்கொண்டு அடிக்கிறார்கள். ‘வந்தாயா சேரிக்குள்? பாப்பாத்திக்கு இங்கென்ன வேலை?. என்று காட்டு மிருகங்களைப்போல் கூக்குரலிட்டுக்கொண்டு தடி எடுத்து வந்து மனம் போனபடி அடித்து எலும்பை நொறுக்கி விடுகிறார்கள். கயிற்றுக் கட்டிலில் போட்டு நாலுபேர் தூக் கிக்கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் போடுகிறார்கள். ஐயோ, அம்மா!

என்ன புத்தி மாறாட்டம்? காலரா கண்டு, பாவம், படுத்தப்படுக்கையாக அல்லவா இருக்கிறாள்? உடம்பில் சொல்ல முடியாத வலி. கை கால் இழுப்பு. வயிற்றில் பொறுக்க முடியாத நோவு. ஐயோ. அம்மா வைத் தூக்கிப்போகிறார்களே. என்னால் எழுந்திருக்க முடியவில்லையே! முடிந்து போயிற்று என்கிறார் களே. என்ன? அம்மாவுக்கு என்ன? ஏன் பேசாதிருக்கிறாள்? செத்தா போய்விட்டாள்? எனக்கு இனித் தாய் இல்லையா? ஐயோ ! என்ன செய்வேன்?

திடுக்கிட்டு முகுந்தன் கண்விழித்தெழுந்தான். நாற்காலியிலேயே தூங்கிப்போனபடியால் பகவத் கீதைப் புஸ்தகம் கீழே விழுந்து கிடந்தது. கமலாபுரம் ஆஸ்பத்திரியில் இருப்பதுதான் உண்மையாகவும், மற் றவை யெல்லாம் கனவாகவும் முடிந்தன. எழுந்து படுக்கையில் படுத்துக்கொண்டு தூங்கிப் போனான்.

***

பூவாயியின் காயங்களை யெல்லாம் ஆற்றிக் கை யெலும்பைக் குணப்படுத்த ஒரு மாதத்திற்கு மேலா யிற்று. மிக்க அன்புடனும் ஆதரவுடனும் முகுந்தன் மருந்து போட்டுப் பார்த்து வந்தான்.

“தம்பி, மாரி, நான் ஒன்று சொல்லுகிறேன். கேட்கிறாயா?” என்றான் முகுந்தன்.

“சொல்லு, எஜமானே” என்றான் மாரி.

“நாம் சிறு பையன்களாயிருக்கையில் என்னை ஒரு பெரிய குரங்கின் கையிலிருந்து காப்பாற்றினாய் அல்லவா? அப்போது என் தாய் அதற்காக உன்னை அடித்துத் துரத்தினாளல்லவா?

“ஏதோ நடந்தது. அது வெகு நாளாயிற்று. சாமி இப்போது என் வீட்டுக்காரியின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தாயே. என் வீட்டில் விளக்கு வைத்தாயே, எஜமானே”.

“மாரி. செத்துப் போனவர்கள் திரும்பிப் பிறக் கிறார்களென்று உனக்குத் தெரியுமா? நல்லதோ, தீயதோ , செய்ததன் பலன்களை அனுபவிக்க மறு ஜன்மம் எடுப்பது தெரியுமா?..

“ஆமாம். எஜமான்! அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆண்டவன் எல்லாம் பார்த்து வரு கிறான். ஒருவரையும் விடமாட்டான். அவனுக்கு மேல் யார்?

“என் தாயார் உனக்குச் செய்தது பெருந் தவறு. அதற்காக அவள் இப்போது வேறு ஜன்மம் எடுத்துக் கஷ்டப்படுகிறாள் என்றே நினைக்கிறேன். அதற்காக நான் ஒரு நோன்பு இருக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.”

“சொல்லு, சாமி” என்றான் மாரி.

“இப்போது உங்களுக்கெல்லாம் மிகவும் கஷ்ட காலம். கொடும் பஞ்சம். நீயும் உன் மனைவியும் என் வீட்டில் என்னுடன் இருங்கள். எனக்குப் பந்துக்கள் இல்லை. நீயும் பூவாயியும் எனக்குத் தம்பியும் தங்கையுமாயிருக்க வேண்டும்” என்றான் முகுந்தன்.

மாரிக்கு ஒன்றும் புரியவில்லை. “சாமி, நாங்கள் எஜமானுக்குத் தம்பியும் தங்கையும் எப்படி ஆவோம்? முடியாது எஜமானே” என்றான் மாரி.

அதற்கு முகுந்தன் “மாரி. உங்களை இப்படிக் கேவலமான வாழ்வு நடத்தும்படி மற்றவர்கள் வைத்திருப்பது பெரும் பாவம். அதற்காகவுந்தான் இந்த நோன்பு நிச்சயித்தேன். நீ மறுக்கக்கூடாது” என்றான்.

“சாமி!”

“இறந்தால் புது ஜன்மம் உண்டு என்று சொன்னேனல்லவா? உன் மனைவியைப் பார்த்தது முதல். என்ன காரணமோ, அவள் என் தாயாரே என்று நான் நினைக்கிறேன்.”

“சாமி எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?”

“தம்பி. விளங்காமற் போனால் போகட்டும். நான் சொல்வதை நீ மறுக்கக்கூடாது. என் கூட நீங்கள் இருக்கவேண்டும்.”

“என் தாய் சம்மதிக்கமாட்டாளே?”

“நான் சமாதானப்படுத்துகிறேன்” என்றான் முகுந்தன்.

“அவள் ஒப்புக்கொண்டால் சரி, எஜமானே” என்று மாரி சொன்னான்.

எப்படியோ முகுந்தன் சொல்லிக் குப்பாயியைச் சம்மதிக்கச் செய்தான்.

அதுமுதல் முகுந்தன் ஊருக்குப் பறையனாய்ப் போனான். அவன் மனம் சாந்தியடைந்தது.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *