அவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 153 
 
 

“பன்றிகளுடன் சண்டைப் போட்டால் பன்றியாக மாறிவிடுவாய்” இப்படியாக பாபா சொன்னதாக ஆசிஷ் மிஸ்ரா என்னிடம் ஒருமுறை சொன்னபோது நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பாபா பொருட்படுத்தக் கூடிய ஆசாமியாக எனக்கு படவில்லை. எப்போது பார்த்தாலும், காப்கா என்றோ காம்யூ என்றோ பேசும் அவனை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது.

நான், பாபா, மிஸ்ரா மூவரும் ஒரே வங்கியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தோம். அங்குதான் மூவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களிலேயே பாபா வேலையைவிட்டு முழு நேர எழுத்தாளராகி விட்டான். அவன் என்ன எழுதினான், எந்தப் பத்திரிக்கையில் எழுதினான் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவன் அவ்வளவு பிரபலமானதாக எனக்கு தெரியவில்ல்லை.

பிரபலமாக வேண்டுமென்ற நோக்கோடே பலரும் எழுதுவதாகவும் அவர்கள் யாரும் படைப்பின் Quality பற்றிக் கவலைப்படுவதில்லை என்றும் பாபா சொல்லுவான். மேலும், இங்கே படைப்பைவிட படைப்பாளிக்கே முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாக சொல்வான். அவனை சந்திக்க நேர்ந்தால் இப்படியெல்லாம் ஏதாவது பேசுவான். இதெல்லாம் எழுத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத எங்களிடம் ஏன் சொல்கிறான் என்று யோசித்தால் அதை புரிந்துக் கொண்டு வேறு ஏதாவது தீவிரமான கருத்தை பதிவு செய்வதாக நினைத்துக் கொண்டு எதையாவது சொல்வான்.

மனித இனமே வேலை செய்வதற்காக பிறந்த ஒன்றல்ல என்பான். மனிதனின் அடிப்படை தேவையே நல்ல உணவும் நல்ல தூக்கமும். இவ்விரண்டையும் இழந்துவிட்டு உழைக்கும் உழைப்பு பொருளற்றது என்பான். அவன் சித்தாந்தங்கள் தேவையில்லாத மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் நான் அவனை தவிர்த்து வந்தேன். ஆனாலும் மிஸ்ரா அவனுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தான்.

மிஸ்ரா தாம்பரத்தில் ஒரு கிளையில் வேலைப் பார்த்து வந்தான். நான் கோடம்பாக்கத்தில் பணியாற்றினேன். வார விடுமுறைகளில் இருவரும் சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம் மிஸ்ரா தன்னுடைய கிளையிலுள்ள பிரச்சனைகளை சொல்லி புலம்புவான். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ராஜா போல் என் கிளையில் வலம் வந்தேன்.

“என்ன வேலைக்காரன் மாதிரி நடத்துறாங்க” இதை மிஸ்ரா பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறான். தன்னுடைய மேலாளர் தன்னை மிகவும் கொடுமைப் படுத்துவதாக சொல்வான். சில நேரம் அழுவான். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவன் மேலாளர் ஒரு பெண். எங்களை விட இரண்டு வயது தான் மூத்தவள். அவளால் அவனை எந்த வகையில் தொந்தரவு செய்துவிட முடியும் என்று யோசித்திருக்கிறேன்.

ஆனால் அவள் அவனுடன் நேரடியாக மோதுவதில்லை என்பது பின்தான் தெரிந்தது. நிர்வாக அலுவலகத்தில் ஆரோக்கியராஜ் என்றொரு கரடி உண்டு. அவர் நிர்வாக மேலாளர். அவரை ‘கரடி’ என்றே பலரும் அழைத்தனர். அதற்கு காரணம் தெரியவில்லை. அடிக்கும் வெயிலில் சபாரி சூட்டை அணிந்துக் கொண்டு திரிவார். பேசும்போது தன் கண்ணாடியை நடுவிரலால் ஏத்திவிட்டுக் கொண்டே பேசுவார். மிஸ்ராவின் மேலாளர் தும்ம வேண்டுமென்றாலும் ஆரோக்கியராஜை கேட்டு தான் செய்வாராம். ஆரோக்கியராஜ் மிகவும் இளகிய மனம் கொண்டவராதலால், பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் மூக்கை நீட்டிக் கொண்டு வருவார். அதுவும் மிஸ்ராவின் மேலாளார் ஆரோக்கியராஜிற்கு ஆஸ்தான அடிமை என்பதால் அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஆரோக்கியராஜால் அமைதியாக இருக்க முடியாது.

இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குடிகாரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் லோன் தர முடிவெடுத்து அந்த கோப்பில் மிஸ்ராவை பரிந்துரைக் கையெழுத்திட சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.

அந்த குடிகாரன் கரடியின் வீட்டில் வேலை செய்பவன். அவனுக்கு லோன் கொடுத்தால் கரடியிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளலாம், வருங்கலத்தில் தனக்கு தேவையான ஊருக்கு இடமாற்றம் வாங்கிக் கொள்ளலாம் என்பதாலேயே அந்த கடனை தர மிஸ்ராவின் மேலாளார் முடிவெடுத்திருக்கிறாள். ஆனால் எந்த ஆவணமும் இல்லாத அந்த கடனிற்கு எப்படி பரிந்துரைக் கையெழுத்து போட முடியும் என்று மிஸ்ரா கேட்டிருக்கிறான். அவ்வளவுதான். அவன் கழுகுகளின் பார்வைக்குள் சிக்கிக் கொண்டான்.

‘மேனேஜர் மேடமும் ஆரோக்கியராஜ் சாரும் போர்ஸ் பண்றாங்க ஜி’ மிஸ்ரா அரைகுறை தமிழில் சொன்னான்.

‘டாக்குமென்ட்ஸ் ப்ராப்பரா இல்லன டோன்ட் sign’ என்று நான் சொன்னேன்.

பொதுவாக எந்த கடனாக இருந்தாலும் முதலில் உதவி மேலாளர் பரிந்துரைக்க வேண்டும். பின் மேலாளர் அதில் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். ஆனால் மிஷ்ராவின் மேலாளர் சற்றே விசித்திரமான பேர்வழி. தான் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான, நேர்மையான பெண்மணி என்பது போல் வெளியே காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் தன்னுடைய ஆதாயத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தக் கூடியவள். தனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதோவொரு லாபம் இருக்குமாயின் விதிகளை எப்படி வேண்டுமானலும் வளைத்துக் கொள்ளக் கூடிய அந்த பெண்மணி, அந்த கடன் ஆவணத்தில் தன்னுடைய ஒப்புதல் கையெழுத்தை முதலிலேயே போட்டுவிட்டு, ‘மிஸ்ரா கையெழுத்து போட மறுக்கிறான்’ என்று ஊரெல்லாம் சொல்லித் திரியத்தொடங்கியிருக்கிறாள். இந்த செய்தி பலர் காதுகளுக்குள் நுழைந்து அவர்களின் வாய் வழியே மேலிடத்திற்கு எட்டிவிட்டது.

ஆரோக்கியராஜும் மேலிடத்தில் மிஸ்ராவைப் பற்றி பல அவதூறுகளை பரப்பியிருக்கிறார். மிஸ்ராவிற்கு மேலிடத்தில் இருந்து ஒரு கண்டனக் கடிதம் வந்திருக்கிறது. அதில் மிஸ்ரா தன் வேலையை ஒழுங்காக செய்வதில்லை என்றும், இப்படியே தொடர்ந்தால் மிஸ்ரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுதியிருந்தது. எல்லாம் மேலாளரும், கரடியும் செய்த வேலை. ஆனால் இதையெல்லாம் சொல்லி யாருக்கும் புரிய வைக்க முடியாது. கடிதத்தைப் பார்த்ததும் மனமுடைந்து போன மிஸ்ரா, வேறு வழியில்லாமல் அந்தக் கடன் ஆவணத்தில் கையெழுத்து போட்டுவிட்டான்.

உண்மையில் மற்றவர்களைப் போல் அரசியல் செய்ய தெரியாத அப்பாவி மிஸ்ரா. உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவனுக்கு அப்பா கிடையாது. அம்மாவும் அண்ணனும் மட்டுமே. தாம்பரத்தில் ஒரு சிறிய வீட்டில் தன் தாயுடன் வசித்துவந்தான். அந்த வேலைமட்டுமே அவனுக்கு ஆதாரம். தான் தன்னுடைய இருத்தலுக்கும் நேர்மைக்குமிடையே சிக்கிக் கொண்டு சாவதாக மிஸ்ரா பாபாவிடம் சொல்லியிருக்கிறான். வெறும் வாயை மெல்லும் பாபாவிற்கு, அவல் கிடைத்துவிட்டது போல ஆகிற்று இந்த சம்பவம்.

மிஸ்ராவை அமரவைத்து நிறைய அறிவுரைகள் சொல்லியிருக்கிறான். பாபா. உலகம் பன்றிகளால் ஆனது என்றிருக்கிறான். டார்வினின் கோட்பாடு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டதாகாவும். மனிதன் தன்னை அழித்து வேலை பணம் என்று ஓடுவது முட்டாள்தனம் என்றும், மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரை ஒருவகையான பாதுகாப்பாற்றதன்மையோடு வாழ்கிறான் என்றும் சொல்லியிருக்கிறான்.

இதையெல்லாம் என்னிடம் சொல்லிய மிஸ்ரா, தன் மேலாளர் தொடர்ந்து தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியே சொல்லி வருவதாக சொன்னான். அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று நான் அவனுக்கு ஆறுதல் சொன்னேன். மேலும் அலுவலகத்தில் இதுபோன்ற அரசியல் சாதரனமென்றும், இதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்றே நம்மை போன்ற சாதரணமான ஆசாமிகள் சிந்திக்க வேண்டுமென்றும், பாபா போன்ற மாறுபட்ட ஆசாமிகளின் கோட்பாடு நமக்கு பொருந்தாது என்றும் கூறினேன். ஆனால் மிஸ்ரா நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து பேசினான். தன்னுடைய மேலாளர் இப்போதெல்லாம் பார்ப்பதற்கு பன்றிக் குட்டி போல் காட்சியளிப்பதாக சொன்னான். ஆரோக்கியராஜ் பெரிய பன்றி போல் தோற்றமளிப்பதாகவும் அவர் பேசுவது பன்றி உறுமுவது போல் இருப்பதாகவும் சொன்னான். எனக்கு ஏதோ விபரீதமாகப் பட்டது. நான் பாபாவின் நட்பை துண்டிக்கும்படி மிஸ்ராவிடம் அழுத்தமாக சொன்னேன். அன்றிலிருந்து மிஸ்ரா என்னை சந்திப்பதை தவிர்த்து வந்தான். நான் அவனுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை.

ஒருநாள் மிஸ்ராவின் அம்மாவிடமிருந்து போன் வந்தது. அவர்களின் குரல் உடைந்திருந்தது. மிஸ்ராவிற்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள். நான் அலுவகத்திலிருந்து நேராக மிஸ்ரா வீட்டிற்கு சென்றேன். அங்கே பாபாவும் இருந்தான். நான் அவனை சட்டை செய்யவில்லை.

மிஸ்ராவின் அம்மா என்னைப் பார்ததும் வாயை மூடிக் கொண்டு அழுதார். கொஞ்சநாளாகவே மிஷ்ராவிற்கு ஏதோ பிரச்சனை என்று அம்மா அழுதுக் கொண்டே சொன்னார். அவன் வீட்டில் தன்னிடம் பேசுவதை இல்லை என்றும், எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறான் என்றும் சொன்னார். அன்று மிஸ்ரா அலுவலகத்திலிருந்து மதியமே வந்திருக்கிறான். வந்தவன், தன்னை பன்றிகள் துரத்தி வருவதாக சொல்லியிருக்கிறான். மிஸ்ராவின் தாய் பதறி அடித்துக் கொண்டு அவனை ஆசுவாசப் படுத்தி இருக்கிறார். மிஸ்ரா தான் அலுவலகத்தில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது கூட்டமாக பன்றிகள் உருமிக் கொண்டே வந்தாதாகவும், அவன் அலுவலகத்தை விட்டு பயந்து வெளியே ஓடி வந்ததாகவும் அந்த பன்றிகள் பின்னாடியே வந்ததாகவும் சொல்லியிருக்கிறான்.

நான் மிஸ்ராவின் அறைக்குள் நுழைந்தேன். அவன் படுக்கைக்குள் புதைந்து கிடந்தான். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் ஆசிஷ் ஆசிஷ் என்று அவனை பிடித்து உலுக்கினேன்.

“கட்டுலுக்கடில பன்னிங்க நிறைய ஒளிஞ்சிருக்கு” என்றான். அவன் தாய் அவன் கோலத்தை பார்க்க முடியாமல் அழுதார். நான் அவர்களை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு, அருகே இருந்த டாக்டரிடம் அழைத்து சென்றேன். பாபாவும் உடன் வந்தான். நான் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது மிஸ்ரா நாக்கை வெளியே சுழட்டி ‘உவா’ என்று உறுமினான். ஆட்டோ டிரைவர் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, “மசூதிக்கு கூட்டிட்டு போய் மந்திரிங்க சார்” என்றார். நான் எதுவும் பேசவில்லை.

டாக்டர் மன அழுத்தத்தினால் மிஸ்ரா அப்படி பேசுகிறான் என்றார். சில மாத்திரைகளை கொடுத்து, ‘நல்ல தூக்கம் வரும். ரெண்டு நாள் கழிச்சு வாங்க. நான் psychiatrist-க்கு ரெபர் பண்றேன்” என்றார். நான் ஆஷிசை வீட்டில் கொண்டுவந்து விட்டேன். பாபா வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டான். நான் மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.

“அவங்கலாம் பன்னிங்க. அவங்க கூட சண்டை போட்டா நாமலும் பன்னியாகிடுவோம் ராசிக். Stay away from pigs” பாபா சொல்லிவிட்டு என்னை கூர்மையாக பார்த்தான். எனக்கு பாபாவை ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவனுடைய ஆழமான பார்வை என்னை பயமுறுத்தியது. எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தேன்.

மணி இரவு எட்டானது. நான் வீட்டிற்கு போகும் வழியில் தான் எங்களுடைய நிர்வாக அலுவலகம் இருந்தது. ஆரோக்கியராஜ் இரவு ஒன்பதரை மணிவரை அங்கேயே அமர்ந்திருப்பார். அந்த அலுவலகத்தைப் பார்த்ததும், எனக்கு கோபமாக வந்தது. ஆரோக்க்கியராஜை தேடி அவருடைய அலுவலகத்தில் நுழைந்தேன். அலுவலகம் காலியாக இருந்தது. கடைசி அறையில் மட்டும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அது ஆரோக்கியராஜின் அறை.

“ஏன் சார் ஒருத்தன் வாழ்க்கைல இப்டி விளையாடுறீங்க” என்று ஆரோக்கியராஜை கேட்க வேண்டும் என்று தோன்றியது. அந்த அறைக்குள் நுழைந்தேன். டேபிளுக்கு பின் அமர்ந்து கீழே குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்த கரடி, என்னை நிமிர்ந்து பார்த்தார்.

“வாங்க மிஸ்டர். ராசிக். ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு” என்றார் தன் கண்ணாடியை நடுவிரலால் ஏத்திவிட்டுக் கொண்டே. அவருடைய காதுகள் புடைத்திருந்தது. அவர் உதடுகள் பெருத்து ‘உம்’ என்றிருந்தது. அவர் பேசியது உறுமுவது போல் இருந்தது,

நான் பேச வாய் எடுத்தபோது குரல் வரவில்லை. என் வயிறு வீங்கத் தொடங்கியது. என் கால்கள் வலி எடுத்தது. குனிந்து பார்த்தால் என் கால்கள் பன்றியின் கால்கள் போல் காட்சியளித்தன. என்னால் பேச முடியவில்லை. என் வாயிலிருந்து ‘உவா’ என்று உறுமல் சப்தமட்டும் வந்தது. பாபாவின் சிர்ப்போலி காதில் கேட்டது. “Stay away from pigs” என்று அவன் சொல்வது போல் இருந்தது. நான் பயந்துக் கொண்டு ஓடிவந்துவிட்டேன்.

– மார்ச் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *