அக்பரின் நிழலில் ராணு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 1,716 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புயல் 

அந்தி வெய்யில் ஆரவல்லி மலைக் கொடிகளையும் முடிகளையும் தழுவி விளையாடிக் கொண்டிருந்தது. 

அந்த இயற்கை அழகில் மனத்தைப் பறிகொடுத்த வளாக ஒரு பாறையின் மீது உட்கார்ந்திருந்தாள் ரத்னாபாய். பக்கத்திலிருந்த மரக்கிளையில் கட்டியிருந்த ஏணையில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 

பார்த்திருக்கும் போதே கொடிமுடிகளிலிருந்த பொன் வெய்யில் மாயமாகிக் கொண்டு வந்தது. 

தூளியிலிருந்த குழந்தை விழித்துக் கொண்டு அழுதது. எழுந்துபோய் அதைத் தூக்கிக் கொண்டு வந்து பாறையின் மீது உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தாள். அவள் கணவன் ரத்தன் சிங்கைக் காணவில்லை. 

குதிரைகளின் குளம்போசை லேசாகக் கேட்டதும், திடுக்கிட்டு எழுந்தாள் ரத்னாபாய். 

எங்கும் ஒரே இருள். எந்தத் திசையிலிருந்து ஓசை வருகிறது என்பது உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேட்டாள் அவள். 

பின் பக்கத்தில் தீவர்த்தியின் வெளிச்சம் மின்னுவதைக் கண்டதும், ‘சரி அக்பரின் ஆட்கள் என்பதில் சந்தேகமில்லை’ என்று எண்ணி, இடுப்பிலிருந்த கத்தியைத் தயாராசு உருவிக் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் ரத்னா. 

இடுப்பிலிருந்த குழந்தை பசிபைத் தாங்க இயலாது வீரிட்டது. 

குழந்தையின் பசியைப்பற்றியோ, தன்னுடைய தனிமை யைப்பற்றியோ அவள் பயப்படவில்லை. எதிரிகளிடம் தனது கணவன் சிக்கியிருப்பானோ என்ற திகிலில் அவளது உள்ளம் பதைத்தது. 

வீராவேசத்துடன் கண்களில் தீப்பொறி பறக்க, கதறும் குழந்தையுடன் நிமிர்ந்து நின்று, கையிலிருந்த வாளை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டாள். 

“ரத்னா” என்று எதிரொலித்த ரகசியக் குரல் அவளைத் தூக்கி வாரிப்போட்டு உலுப்பியது. 

உள்ளம் சிலிர்க்க குரல் நடுங்க “பிராணேசுவரா’ என்று இதயம் பிறப்பித்த நெடுமூச்சுக் கனலுடன் விம்மினாள் ரத்னாபாய். 

“அன்பே,இனி நாம் தப்ப வழியில்லை, மறையவும் இட மில்லை. பகைவனுக்குப் பணிந்து உயிர் வாழ்வதைவிட, மானத்தோடு அழிவதே மேல். கண்ணே, பசியால் துடிக்கும் குழந்தைக்கு வயிற்றுக்கு உணவு கொடுத்து விட்டுப் பிறகு அதைக் கத்திக்கு இரை கொடுக்க நினைத்து எங்கெங்கோ சுற்றினேன். ஒன்றும் கிடைக்கவில்லை. அடிவாரம் முழு வதும் எதிரியின் ஆட்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தேவியின் அருள் போலும்! கொண்டுவா குழந்தையை!” என்றான் ரத்தன் சிங். 

“இதோ, முதலில் என்னை” 

“ஆ! அப்படியா? ஆம்; பெற்ற தாயின் முன் மதலையை அழிக்கக் கூடாதுதான். வா அருகில் வா, தேவியை நினைத்துக் கொள்!” 

பின்புறமாக வந்த கை ஒன்று, ரத்தன் சிங்கின் ஓங்கிய கையைப் பலமாகப் பிடித்தது. 

இடுப்பிலிருந்த குழந்தைவய ஓர் உருவம் பிடுங்கிக் கொண்டதை உணர்ந்தான் ரத்தன் சிங். 

இருள் துரோகியாக இருந்து எதையும் அறிய இயலாத படி திணற வடித்தது, 

“ஆ! ஐயோ!” என்று ஆவி துடிக்க அலறிய ரத்னா பாயின் குரலிலிருந்து அவளையும் பகைவர்கள் தீண்டிவிட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டான் ரத்தன் சிங். 

தன் கையைப்பற்றியவனுடன் தன்னை மறந்து போராடினாள்.  பக்கத்திலிருந்தவன் பலமான குரலில் “ஷேர்கான்” என்று கத்தினான். 

கை தட்டும் ஓசை; தீவர்த்திகள் பளிச்சிட்டன. பத்துப் பதினைந்து குதிரைகள் வீரர்களைச் சுமந்து கொண்டு அங்கே வந்து நின்றன. 

“அஜ்மல், ராணியைப் பல்லக்கிலேற்றிப் பாதுகாப்புடன் ஜனானாவுக்கு அனுப்பு. குழந்தையை நீ எடுத்துக் கொள். அப்துல். மகாராஜாவை வெள்ளைக் குதிரைமீது அமரச்செய்! பத்திரம் நழுவ விட்டு விடாதீர்கள்! அப்பால் நம் உயிர் நம்முடையதல்ல” என்று ஹிதாயத்கான் கட்டளையிடும் போது ரத்தன் சிங் குதிரைமீது கயிறுகளால் இறுகப் பிணிக் கப்பட்டுக் கொண்டிருந்தார். 

ராணாவின் உயிர்துடியாய்த்துடித்தது. ‘ரத்னா, என் உயிரே ! கடைசியில் உன்னை இக்கதிக்கா ஆளாக்கினேன் ! பாவி ஏன் காலையிலேயே நம் மூவரின் ஆவியைப் போக்கி யிராமல் தாமதித்தேன் நான்? விதி !’ 

குதிரை மீது ஆரோகணித்து அதை நடத்திச் செல்லும் ஹிதாயத்கான், ‘ராணா அவர்களே, ஆயாசப்பட வேண்டாம். நீங்கள் என்ன முயன்றாலும் கட்டுகள் தளராது!” என்று கூறிவிட்டு, பக்கத்திலே குதிரைமீதேறி வரும் ஷேர்கானிடம், “இன்று நாம் இவ்வளவு கஷ்டப்படா விட்டால் இவர்களை உயிருடன் கண்டிருக்க முடியாது. அல்லாவின் பேரருளே இது!…” என்று முணுமுணுத்தான். 

ரத்தன் சிங் எதிரிகளைப் பற்றி சிந்திக்கவேயில்லை. அவர்கள் கையில் கடைசியாக அகப்பட்டுக் கொண்ட அநியாயம் தான் அவர் நெஞ்சைச் சுட்டுப் பொசுக்கியது ”ஐயோ, கொடுமை ! பகைவனுக்கு எதிரில் கைகால் கட் டுண்டு, கைதியாக நிற்கவா ஒளிந்து ஒளிந்து இவ்வுயிரைக் காப்பாற்றினேன்? எதற்காகப் பாடுபட்டேன் ? என் மானம் பறிபோகவா? ரத்னாவின் கற்பு சீரழியவா ? தேவி, பவானி! உனக்கு நான் என்ன பாதகம் செய்தேன்? என்னை ஏன் எதிரிகள் கையில் ஒப்பு வித்தாய்…?” 

ராணா சுய நினைவிழந்தார்…! 

மனம் 

ராணா ரத்தன் சிங் கண்வழித்த போது, தமது கட்டுகள் அகற்றப் பட்டிருப்பதையும், அருகிலிருந்த ஆசனத்தில் தில்லிக் காவலரான அக்பர் அமர்ந்திருப்பதையும் கண்டு வெகுண்டெழுந்தார். 

“ராணாஜீ ! இது தங்கள் அரண்மனை! நான் தங்கள் விருந்தினன். விருந்தினரை வரவேற்பதா, கையை ஓங்கிக் கொண்டு சண்டைக்கு வருவதா? எது முறை ?” என்று வினவினார் சக்கரவர்த்தி. 

திகைத்து நின்றுவிட்டார் ராணா. அவர் கூட பேச மறுத்து விழித்த கண் விழித்தவாறு தன்னையே உற்று நோக்குவதைக் கண்ட பாதுஷா, நண்பரே, அமைதியடையுங்கள். சுய கௌரவமும், அஞ்சாமையும் நீதிமுறையும்,நேர்மையும் என்னை மிகவும் கவர்ந்து விட்ட- நாடு போனாலும், சுகம் போனாலும்,உயிர் போனாலும் போகட்டும்; மானம் போகக் கூடாது என்று, தினம் ஒரு இடமாக மாறி, பசியும், பட்டினியு மாக குழந்தையுடன் தாங்களும் தங்கள் துணைவியாரும் பட்ட அல்லல்கள் என் நெஞ்சை உருக்கி விட்டன. 

“நல்ல மனப்பான்மையுடன் உங்களை நாடி செய்தி தெரிவிக்கலாம் என்றால், என் ஆட்களைக் கண்டதும் மறைய இயலாவிட்டால் உயிரை இழந்து விடுவீர்களோ என்று ஐயம் கொண்டு இந்த இரண்டு வருஷங்களாகத் தங்களை உயிரோடு பிடித்து வருபவர்களுக்கு ஏராளமான பரிசு தருவதாகக் கூறினேன். 

“கர்ப்பிணியாக இருந்த ராணி வழி நடக்குங்கால் என்னை எவ்வாறு சபித்தார்களோ, தெரியாது. என் எண்ணம் நல்லதாக இருந்ததால், குழந்தையுடனும் பத்தினி யுடனும் தங்களை கண்டுபிடித்து, உங்கள் அரசை உங்களிடமே ஒப்புவித்துக் கௌரவித்து, என் மனத்திலுள்ள பாராட்டு தலையும் தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. என் அந்தரங்கக் காரியதரிசி ஹிதாயத் ஒரு கணம் தாமதித்திருந்தாலோ, தவறியிருந்தாலோ, என் திட்டங்கள் சர்வ நாசமாகி, கனவுகள் கலைந்து, அவற்றின் விளைவாக என் உயிருள்ளளவும் நான் நரகவாதனைப்பட இடமுண்டாகியிருக்கும். 

“ராணாஜீ ! எல்லோரும் இன்புற்று வாழ விரும்புபவன் நான். ராஜ புத்திரர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்வதற்கே என் சாம்ராஜ்யத்தில் ராஜஸ்தானை இணைத்து விட்டிருக்கிறேன். 

தங்கள் பத்தினியும் குழந்தையும் சௌக்கியமாக உள்ளே இருக்கிறார்கள். நடந்தவை யாவும் நன்மைக்கே என்ற தாத்பரியத்துடன் என்னைக் கெளரவித்து அனுப்புவீர்கள் என்றே நான் நம்புகிறேன் !” 

பேச்சை நிறுத்தினார் அக்பர்…! 

தழும்பு 

ராணா ரத்தன்சிங்கின் சிந்தனையில் ஏதோ எண்ணங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. ஆனால் அதைப்பற்றி ஒன்றுமே பிரஸ்தாபிக்கவில்லை. அக்பரை அவரது நல்லெண்ணத்திற் காகத் தான் மிகவும் பாராட்டுவதாகவும், இனி நட்பினர் களாகவே வாழ விரும்புவதாகவும் முக மலர்ச்சியுடன் கூறி உபசரித்து அக்பரை அனுப்பி வைத்தான் ராணா. 

ராணாஜியின் உபசரிப்பும் வார்த்தைகளும் உண்மை யென்று நம்பி அகமகிழ்வுடன் புறப்பட்டுச் சென்ற பதினைந்து நாட்களுக்கெல்லாம், ராணா விடமிருந்து ஓர் ஓலையுடன் ஆள் வந்திருப்பதாக அக்பரிடம் கூறினான் ஹிதாயத்கான். 

முடங்கலை வாங்கிப் படித்துக் கேட்டார் பாதுஷா. அதில் அக்பருடைய குணாதிசயத்தைப் புகழுரை புனைந்து, கடைசியில், ஒருமுறை துறந்த அரசை அப்புறம் தானமாகப் பெற்று அரசாள்வதில் தன் மனம் சாந்தியடையவில்லை யென்றும், குழந்தையுடனும் பத்தினியுடனும் தான் தேச யாத்திரை போவதாகவும், அரசை சாம்ராஜ்யத்துடன் இணைத்து பிரஜைகளைப் பரிபாலிக்குமாறும் கேட்டுக் கொண்டு ராணா முடங்கலை முடித்திருந்ததைக் கேட்டு அக்பருடைய உள்ளம் உருகியது. 

‘ஆஹா! எத்தகைய சுத்த வீரர்! நான் ஏன் அவருடைய ராஜ்யத்தை முற்றுகையிட்டேன்? பேரரசு நிறுவும் என் ஆசை கொடிது, கொடிது! அந்த ஆசைமீது தழும்பேற்றிச் சென்றுவிட்டார் ராணா ரத்தன்சிங், அந்தோ!’

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *