கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 1,795 
 

(1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏங்கா, கிடுகச் சுறுக்கா எளயங்களங்கா”

தங்கச்சிக்காரி அவசரப்படுத்துறா. இந்தப் பொண்டு களக் கொண்டு கிடுகெழக்கதெண்டா லேசிப்பட்ட காரியமா? நாலு பொண்டுகள் ஒரு ‘களரி’யாக் கூடிக்கிட்டாளுக ளெண்டா வேலயா நடக்கப்போகுது? ஊர் அலாய் பலாயக் கழுகிக் குடிச்சிக் ‘கொத்துவர்’ ஓத இருந்திருவாளுகள். இந்த வாசாரியளுக்கு மையத்து ஊடும் ஒண்டுதான்; கலியாண ஊடும் ஒண்டுதான்.

பச்ச ஓலதானே, லேசா எழக்கலாம். என்ர கௌ வழியச் சேந்த பொண்டுகப் புள்ளயளெல்லாம் பொறத்தி வாசல் மணலில கூடிக்கிட்டிருந்து பச்சோல பொழந்து கிடுகெழக்காளுகள்.

ம்… நாம நெனச்சாப்போல என்ன தான் நடக்குது. அவரவர்ர தலையில் அந்த வல்ல பெரிய றகுமான் எழுதின எழுத்து எப்புடியோ, அவியவியட கலாகதிர் எப்புடி முடிய வேணும் எண்டிரிக்கோ அப்புடித்தான் நடக்கும். ஒங்கட தோளால என்ர ‘சந்தக்கு’ ஆலயடிக்குப் போகவேணுமெண்டு எந்த நேரமும் செல்லுவன். என்ர ‘இத்தா’க் கடன நெற வேத்திப்போட்டுத்தான் நீ மகுத்தாகவேணும், ஒன்னக் கட்டி உசிருக்குசிரா வெச்சிக்கிட்டிருக்கன், நீ ‘இத்தா’ இருந்து எனக்கு அந்த ஒலகத்தில ஈடேத்தம் தேடித்தரப் படாத? இப்புடி என்னத் திருப்பிக் கேட்பார். ஆர்ர எண்ணம்தான் நெறவேறாட்டியும் அவர்ர எண்ணத்த ஆண்டவன் ‘கபுலாக்’கிப்போட்டான்.

‘எழக்க கிடுகுகள எடுத்துக்கா பேரன்’

தம்பிக்காறன் வேல செய்ய எண்டு நிண்டா கச்சான் காத்துக்கு ஓலையாடுகமாதிரித் துடுதுடுப்பாத்தான் நிப்பான். என்ர மகள்ள மகனத்தான் பேரன் எண்டு கூப்பிடுகான், எனக்கு ‘இத்தா’ வேலி அடைக்க பேரப்புள்ளயளும் வேல செய்யுதுகள். எவ்வளவு பெரிய பாக்கிசம். போன தலப் பொறக்கி முந்தின தலப்பொறயில், அதாவது ‘மீரா’ கந்திரி மாசப் பொறப்பண்டுதான் பேத்தி மூத்தவளுக்குக் கலியா ணம் சீர்செறப்பா முடிஞ்சிச்சி. அதுகள்ற நலவெறட்டப் பாக்க என்ர ‘ஹயாத்த’ நீளிக்கப்போடுகானோ என்னமோ? அவரில்லாத ஒலகத்தில் நானிருந்து தர்ன் என்ன? இல்லாட் டித்தான் என்ன? தலமசிரும் காத்துக்கு வெடிச்ச கமுகம் பாளமாதிரிப் போச்சி. இந்த வயசுக்கும் எந்தச் சந்தோச காரியத்தையும் நானோ அவரோ தனியக் கொண்டாடினதில்ல.

தம்பிக்காறனும் என்ர மூத்தவனுந்தான் ‘இத்தா’ வேலி அடைக்கானுகள். நடுவௌயவன் ஏழாங் கத்தத்துக் கறுக்க மர்ட்டுப்பொணயல் கொண்டாறத்துக்காக படுவாங் கரைக்குப் போயிருக்கான். இப்பதான் கொம்பு தள்ளின தாம்பன் பொணயல்தான் கொண்டருவான். வண்டற தீவில் தான் மாட்டுவாடி, வண்டற தீவிலேயே எங்கட மாட்டுப் பட்டிதான் பெரிசாம்.

வாடியில இருந்து வந்த பொறகால எழும்பின வாயுவு தான். பத்து நாளா படுக்கையில போட்டுட்டு. அந்த வாயுவு அத்தக்கத்த வாறதுதான். இடிச்சித்தின்னாத தூளு மில்ல; லேகியமுமில்ல.

இவிய என்னத்த வேலி கட்டுறாங்க. அவர்ர கையால தான் வளவச் சுத்தி வளச்சிவர வேலி கட்டினார். ஆறு மாசத் துக்கெடையில் எறந்தபோச்சி? கட்டின வேலிக்கு மேலால பச்சக் கிடுகு சாத்துறாங்க.

எல்லா ஊரிலயும் பச்சக் கிடுகாலதான் ஈராவேலி கட்டுகினமோ? அதெல்லாம் எனக்கெப்படித் தெரியும். எங் கட ஊர் வழக்கம் இப்புடி. பொறந்தாம் பொறப்புக்கும் ஊர உட்டு அடுத்த ஊருக்கும் போயறியன். பக்குவப்பட்டு பெரிய மனிசியானத்திலிருந்து அவருக்கு வாழ்க்கப்பட்டு மாமியாட ஊட்ட கால்மாறிப்போற வரக்கும் கடப்பக்கூட கடந்திருக்கமாட்டன். அந்த நேரத்தில எங்க உம்மாக்கு என்னிலதான் கண்ணும் கருத்தும்.

கால் மாறிப்போன அண்டக்கி ஒரு பொடவர முக தலய எனக்கும் சமதலய அவருக்கும் உடுத்தாட்டி ஏழாந் தண்ணி வாத்தத்த நெனச்சா இண்டக்கிம் கல்புக்க சுர் ரெண்ணுது. அண்டு ராவு றோட்டெல்லாம் ஒரே கிடுகிடுப்பு, ங்க் .. றோட்டெண்டுட்டனாக்கும். அந்த நாளயில் றோட்டேது. நான் இசாவாகி, ஓதப்போயிருக்கிறவன் தரிச்சி, ஆறுமசாம் இருக்கககுள்ளதரோன ஒழுங்கக்கி றோட்டுப்போட்டு சனங் களுக்குத் தறுமவேல குடுத்த. அந்த வருசம் வானம் நல்லா ஏறக்கட்டிப் போட்டுது. செரியான கருக்கு தலப் பஞ்சம்.

ஆம்புளயளோட அவர் போனார். மகுத்தான காக் காக்காறன் அவருக்குக் கொடப்புடிச்சிப்போனார். அவர் உடுத்துக்குப்போன மகிழம்பூச் சாறனும், விசிறித் தலப்பர் வும், குட்டான் பட்டுச் சாலுவையும் மடிச்சி, பொட்டுக் கறையான் தின்னாம தாழம்புப் பூ போட்டுப் பொட்டகத் துக்க பத்திரமா வெச்சிரிக்கி, உதுத்தி எடுத்த வம்மிப் பூ மாதிரி செம்பாணி தச்ச குதிரக்கால் மிருவடிய அவர் போட் டுக்கு நடக்கக்குள்ள ஒழுங்கையெல்லாம் அழகொழுகிச்சி. அந்த உடுமானமெல்லாம் இப்ப ஆரு உடுக்கிறா. பணத்துக்கு மூணு சள்ளல் கோருவ வித்த அந்தக் காலத்திலேயே சாரன்ர பெறுமதி ரெண்டரப் பவுண். இந்தக்காலத்து மாப் பிள்ளையள் கண்டறியாத வெள்ளைச் சாறனையும் சட்டயயும் கண்டுபிடிச்சிற்றாங்க. ஆக்களுக்கு எசக்கமிருந்தாத்தானே. இங்கரிந்து வண்டற்தீவுக்கு இருவதுகட்ட. ஊட்டில மத்தி யானச் சோறு திண்டுட்டு, அரிசி, தேங்காய், கொச்சிக்காய் சரக்குச் சாமானையெல்லாம் சாக்கில கட்டி முன்னடப்ப பின்னடப்ப போட்டுக்கு பொறப்பட்டாரெண்டா மகரித் தொழுகைக்கு வாடிக்குப்போய்ச் சேர்ந்திருவார். இந்தக் காலத்து எளந்தாரிமாருக்கு கைமனக்கிப் போறதெண்டா லும் பைசிக்கல் வேண்டும். இல்லாட்டி வஸ் வேணும். எங்க பாப்பம் இவியட வஸ்ஸால காருலயெல்லாம் மாட்டுவண்டி பயப்போல காட்டுக்கையும் மேட்டுக்கையும் போகேலும்?

அவர் போடுக குண்டுவாரில ஆனப்பல்லுப் புடி. போட்ட வில்லுக்கத்தியும், தொறப்புக் கோருவையும் எவ் வளவு அலங்கிறுதமர்க் கிலுங்கும்.

மூத்த மதினியா என்க்கு வெள்ளவிரிச்ச கொடப் புடிச்சிக்கு வந்தா. என்னச் சுத்தி இருதெறத்தார்ர பொண்டு களும். எங்களுக்கு முன்னாலபோன அவரோ…. ஆம்புளயள். அந்தநேரம் வெடிச்ச எறிவெடில் இப்ப எங்க இரிக்கி. இப்ப எல்லாம் வெடில் சுட நெருப்புமல்லவா தேவைப்படுகுது? சண்டக் காலத்தில எங்கட ஊர் கடல்ல போன கப்பல் களுக்கு சப்பான்காறன் போட்ட குண்டுட சத்தம்மாதிரி. குண்டு போட்ட வருசம் எளயதுகள் ஒண்டுப் பொறக்கல்ல. புள்ளயள் மூணோடயும் உள்ளூட்டுக்க போய் சிக்காறாக் கதவப் பூட்டிக்கிட்டன், அவர் ஆக்களோட கடக்கரைக்குப் போய் புதினம் பார்த்தார். பேர்கவேணாம் எண்டு சொன் னத்தக் கேட்டாத்தானே. என்ர ஈரல்ல, பல்லில் தண்ணி இல்ல. மக்காமடிய அடங்கி இருக்கிற பெரிய மகுலானா வாப்பர்ட துவா பறக்கத்தாலதான் குண்டு ஊரில்ல உளல்ல.

“எச்சி முள்ளும் சோறுந் தாறன் ஆலிமு மாமா வாறாரெண்டு தெத்திக்காட்டு காகம்”

பேத்தி காகத்துக்கிட்ட வெசகளங் கேக்காள். விடிஞ் சதில இருந்து காகம் அரிசரிச்சுக் கத்துது. பயணக் காகந் தான் இப்புடிக்கத்தும். எளயவன நெனச்சாக் கண்ணால மாலமர்லயாத் தண்ணி வருகுது. நெஞ்சுக்குள்ள பிலாக் காயப் போட்டமர் திரித் தைக்குது. தகப்பன்ர மையத்துவ முளிக்க ஆண்டவன் அவனுக்குக் கிருபசெய்யல்ல. றோகு’ போற நேரத்தில மக்களும் பேரப்புள்ளயளும் மொச்சிக் கிட்டிருந்து, கொழறிக்கொழறி இருந்து இரப்புக் கேட்டிச்சி கள். இளயமகனார் வரல்லய வரல்லய என்றென்று கேட்டார். மகன்ர ஈறலால மல்லுக்கட்டித்தான் ‘மலக்கல் மகுத்து’ ‘றோகெ’டுக்கவேண்டி இருந்திச்சி. தந்திக்குமேல தந்தி அடிச் சும் அந்தத் தம்பி வராம உட்டுட்டான். வாப்பாட ஈறலத் தீக்க அவனுக்குக் கல்பின இல்லாமப் போச்சி.

அவன் தான் என்ன செய்வான். இந்தியாவில் இருந்து வாறதெண்டா லேசுப்பட்ட காரியம் ? கேர்ச்சி ஏறிக் கப்ப லேறி வரவேணும். அதுகும் இந்தத் துண்டுக்குள்ளதான் சேர்தினயாம். சோதின நேரத்தில அங்க இல்லர்ட்டி ஓதின ஓதலுக்கு ஒரு ஒப்பின இல்லாமப்போகும். சோதின பாஸ் பண்ணினாத்தானே ஆலிமுப் பட்டம் கெடக்கிம். என்ர புள்ள அச்சுட்டாப்பேர்ல பாஸ் பண்ணுவான்.

மகனார் ஓதிக்கிட்டு வந்து மொதல் வெள்ளிக்கிழம ஆண்டக்கிப் பள்ளிவாசல்ல எழும்பி ஹதீது சொல்லுகத்தக் காதால கேட்டுட்டுத்தான் மகுத்தாகுவன் எண்டு ராத்திரி பகலாச் செல்’லிக்கிட்டே இருந்தார். ஹதீது செல்லிமுடி வக் கொத்துவாக்குப் போன சனமெல்லாம் பைத்துப்படிச்சி ஊட்ட கூட்டிக்கந்து உடுவாங்க. கூட்டிக்காறவியளுக்கு எல் லாருஞ் செய்யிறாப்போல வெறுந் தேத்தண்ணியக் குடுத்து டாம மாடறுத்துக் கந்திரி கொடுத்துப் பசியர்த்துறதாக கல்பில நர்ட்டம் பூண்டிருந்தார்.

லீவில வந்திருக்கக்குள்ள வாப்பாவும் மகனும் கூடி னாங்களெண்டா காதுகன்னம் வெச்சிருக்கேலாது. கொம்பல் சத்தத்தில் அல்லசல் காரரும் வந்திருவாங்சு. எடுத்த விஷ பத்திலெல்லாம் சண்ட. அவருக்கும் சின்னமகனோடதான் உசிர். அவன் பொறந்த முழுத்தந்தானே பெரிய மரைக்கார் வேல கெடச்சது. அடியடிவர்ழையர் வந்த மொறதலைகளை யும், கட்டுமட்டுகளயும் மாத்த எணங்கமாட்டார். மகன் ஏட்டிக்கிப்போட்டி. மகன்ர சுறுளித்தலக்கி கிறுதா நல்ல சோக்கா இருந்திச்சி. ஒதப்போன ரெண்டாவது ஆண்டில தம்பி ‘கிறுதா’ வெச்சத்தக் கண்டதும் கொல்லு கழுத்தறு எண்டுக்கு நிண்டிட்டார் மனுஷன். சாணகத்தக் கரச்சி மகன்ர தலையில் தப்ப வெரட்டித்திரிஞ்சார்.பொடியன் இவர்ர ஒட்டத்துக்குக்கெல்லாம் உட்டுக்கொடுத்தாத்தானே. நாயக மவங்களும் இறுதா வெச்சிருந்ததாக ஆலிமுமாரெல்லாருஞ் சொல்லுகாங்க. அவங்க தலைக்கி அத்தர்தான் தடவுறதாம். ஏலர்தமட்டில வர்ப்பர்க்காறன் சவுத்திற்றார். அடுத்த லீவுல வரக்குள்ள கிறுதாவ மாத்தி சேக்கெல்லவவெட்டிக்கந்திச் சித் தம்பி அவரக் கேக்கவேணும். அவன் சேக் கொறக் கர்ட்டி சோறு தின்னமாட்டன் என்று குல்லு செய்யினில நிண்டிட்டார் மனுசன், பரிதாபம் பாக்கேலாம கொட்டியா ரத்துக்குப்போய் அவனோட ஓதுற கூட்டாளிர ஊட்டில நிண் டுட்டான் பொடியன். என்ன இருந்தாலும் போட்டியில் மகனுக்குத்தான் வெத்தி. ஒரு வழியுமில்லாம அவர்போய் மகனக் கூட்டிக்கி வந்தார். அவர்ர புடிவாதத்தாலதானே என்ர புள்ளயள்ள ஒண்டையாச்சிம் இங்கிலிசி படிப்பிக்கே லாமப் பேர்ச்சி.

“லெக்கா மச்சி இந்த நகநட்டையெல்லாம் தைலாப் பொட்டிக்க வெக்கங்கா”

தம்பி பொண்டி என்ர நகநட்டயெல்லாம் சவுக்காரம் போட்டுக் கழுகித் தெர்றச்சி தைலாப் பொட்டிக்க அடுக் கிறா. வாண்டதில் இருந்து சறுவாங்கத்தில் பூணாரம் இல் லாம இருந்ததில்ல. அல்லாகுத்தாலா வெறுங்கழுத்தோட இரிக்கப்பண்ணயாக்கிப் போட்டான். மகுத்த ஆராலதான் தட்ட ஏலும்? குஞ்சி கொழந்தையில் தாலியறுத்தவளுகள நெனச்சா ஆறுதலாத்தான் இரிக்கி. எனக்குப் பல்லும் அர வாசியில்ல, நகைகளுக்குப் பொட்டி காணுதில்ல. தம்பி பொண்டி அமத்தி அமத்திக் திணிக்கிறா. நானென்ன இந்தக் கர்வத்து அல்லாமத்துக் காறியளப்பேர்ல கழுத்தில ஒரு சங்கிலியும், தூக்கணமில்லாத மின்னியும் ஈக்கில் காப்பும் போட்டவள? அஞ்சி வெரலாலயும் அப்பிப்புடிச்சாப்போலக் கோடப்பூக் கொண்டக்குத்தி. அல்லுக்குத்தும் சிமிக்கி வர்ளி யும் போட்ட காது. ஓட்டயெல்லாம் அறுந்து போச்சி. பட் டுக்கணக்கான மணிக்கோர்வையள் காணாம அட்டியல்களும் செஞ்சி தந்தார். என்ர காலத்தவளுகள் பூனக்குட்டி கையில போட்ட தர்வத்துக் கொடியிர நர்த்தமே இப்ப கொடை யாதே. முகப்பணியன் காப்பு, கட்டு வளையல், கைக்கு மோதிரம், காலுக்கு மோதிரம், தண்ட் கறண ஒண்டில ஒண்டு கொறச்சலில்லாம சிமிக்காக வாங்கித்தந்தார். பூணா ரத்தையெல்லாம் தூக்க இந்தநாளையப் பிலுக்குக்காறியளுக்கு எசக்கமிருந்தாத்தானே. நெல்லுக்குத்தி, கொள்ளி கொத்தி, அம்மி இழுத்துக் கொச்சிக்காயரைச்சி வேல செஞ்சாத்தானே ஓடம்பில பெலனூறும். சோறாக்கிறத்துக்கும் மிசின் வந்தாத் தான் இவளுகளால காலம் தள்ளலாம். குனிஞ்சி கூட்ட இடுப்பில எசக்கமில்லாததால நிண்டு கூட்ட வாருகல் தேவையாயிருக்கி. இந்த ஆம்புளயளும், அவளுகள்ர போக் குக்கெல்லாம் உட்டுறுகானுகள். கொச்சிக்காய மைபோல அரச்சி ஆணங்காச்சர்ட்டி அவருக்குச் சேர்றும் எறங்காது. பூணாரத்தையெல்லாம் அவர்ர கண்ணோடதானே போட முடிஞ்சிச்சி. பொண்டுகளுக்குப் புருசன் தான் பூணாரம் எண் டது மெய்தான். பூணாரம் போட்டுப் புருசனுக்குத்தானே அழகு காட்டவேணும்.

என்ர வகுத்தில் காச்ச ஆண்டிகளுஞ் செரி, பொண் ணடிகளுஞ் செரி ஒத்தும் உள்ளதுகள். நான் பெத்துவளத்த புள்ளயன் வேற எப்புடி இருக்குங்கள். அதுகளச் ‘சாலிஹான’ குணசாலிகளாக வளக்க அடிச்சடிச்சிப் புத்தி சொல்லித் தந்தார். வேற எடத்தில எண்டா இந்தப் பூராணத்துக்காக நான் முந்தி, நீ முந்தி எண்டு ‘பித்த னாப் படுகுங்கள். அது களுக்குத்தான் என்ன கொறய வெச்சார். அந்த றகுமான்
வெச்ச குடியாக பறக்கத்தோட குடிவாகஞ் செலுத்துதுகள்.

“அந்த நாய வெரசுங்ககா,”

மூத்த மகள்ள கொரல், இத்தா வளவுக்கு நாய் பூன வராமக் காவல் கட்டா இருக்கவேணும். பொழுது மொகத் தையும் பாக்கப்படாது. ராவலதான் தண்ணிவாக்க. ஆம் புளயளெண்டு, மக்களும் ஒரு கொடல்ல கெடந்த அண்ணன் தம்பிமாரும், அவியட மக்களும் வரலாம். வாப்பாவும் வர லாம். என்ர வாப்பாதான் இல்லய. பொண் பொரசிகள் வரலாம். அவியள்ளயும் புள்ளத்தாச்சிமார் வரப்படாது. வகுத்தில இருக்கிறதுகள் ஆண் கிணாட்டைகளாக இருந் திற்றா? நாலுமாசம் பத்து நாளக்கி தலையில் எண்ண வெக் கவும் ஏலாது. வாந்து கட்டவும் ஏலாது. தாழம்பூ எண்ண தான் நான் வளக்கமாத் தலக்கி வெக்கனான், வெயில்ல காயப்போட்ட சோமன், கம்பாயங்களை எல்லாம் எளய மகள் மடிச்சி அடுக்குறாள். வன்னமான பொடவையெல்லாம் வாங்கித்தந்தார். பொடவையள அவளால தூக்கவும் ஏலு தில்ல. கனங்கூடின பொடவையள். உடுத்தாலும் ஒடம்பெல் லாம் நெறஞ்சமாதிரி இரிக்கும். இப்ப உள்ள தொளுப்புறிக ளெல்லாம் வண்டப்பத்த வெட்டல காட்டுற அரிதட்டுப் புடவையளெல்லாம் உடுக்காளுகள். சட்டதைக்கிறத்துக்கு ஒண்ணயகால் யார்தான் வாங்குவார். சட்டரகை மணிக் கட்டு வரக்கிம் இருக்கிம். இப்ப எல்லாம் முக்கா மொளம். கொச்சிக்காய கொரக்கன அரச்சி, நெல்லுக்குத்தி, கொள்ளி கொத்தினா நெஞ்சி பெருக்கும். சட்டப் பொடவயும் கொள்ள யாத் தேவப்படும். அவளுகள் எப்படியும் போகட்டும். நாலு மாசமும், பத்தரப் பொழுதையும் எண்ணெண்டுதான் கழிக் கதோ? தெரியாது. ம்… செறமாதிரித்தான் செற இருந் தாத்தானே அவருக்கும் அங்குத்து வழியில ஈடேத்தம் கெடக்கும். நாலு கையாலயும் நெறப்பமா இருக்கிற நான் செறயெண்டு நெனச்சா… அஸ்தகு பிறுல்லாகில் அலியுல் லழீம். ‘அல்லா’ என்ர பொளயப் பொறுத்துக்க அண்டக் கித்தின்னவும் வழி இல்லாதவளுகளும் இத்தா இரிக்காளுகள் தானே.

அந்தக் காலத்தில், அறபு நாட்டில, ஒருவிதமான தொண இல்லாததுகளெல்லாம் கண்ணுக்கு மாத்திரம் பெர்த்தல வச்சி ஒடம்பப் போத்திக்கிட்டு எரங்கின சீதேவி களுக்கிட்டப் போய் வாங்கிக் ‘கனாயத்’த உட்டுக்கிட்டும்

‘இத்தா’ இரிப்பாங்களாம். பள்ளியில் புகாரி’ ஓதி ஹதீது’ செல்லக்குள்ள இப்புடி ஒரு ஆலிம்சா ஹதீது சென்னது எனக்கு நெனப்பு. வயசுபோன கௌடுகெட்டயள் இத்தா இரிக்கத்தேவல்ல எண்டு ஆலிமு மகன் எந்த நேரமும் கதப் பான். எனக்கும் ஊட்டுக்குத் தூரப்பட்டு பதினஞ்சி வருசத் துக்கு மேலாச்சிது. நாசமத்த நெனப்பெல்லாம் நமக்கென் னத்துக்கு. நம்மட கடம இருக்கவேண்டியது.

“மாமா வாறாங்க. ஆலிமு மாமா வாறாங்க”

“ஏகே .. ஏகே… எங்கட மாமா வாறாங்க”

“ஓண்டோவ், ஆலிமுச் சாச்சா வர்றாங்கடோவ்”

“மாமா முட்டாசி கொண்டாறாங்க கடிச்சி”

காகங் கத்தினது செரிதான். எளயமகனார் வாறான். புள்ளயளெல்லாம் துள்ளிக் குதிக்குதுகள். கொழந்தயளுக்கு துக்கம் சலிப்பெல்லாம் என்ன தெரியும்.

வந்த புள்ளயச் சந்தோசமா வரவேற்காம, கொளறு காளுகள், அவளுகள் தான் கொளறாம என்ன செய்வாளுகள். குடும்பத்துக்குத் தலையாரியான மலையான மலசிங்கன் மகுத்தானா ஆராலதான் சிரிக்கமுடியும். எனக்கே சலிப்ப அடக்கேலுதில்ல. மகனார் எனக்கிட்டதான் ஓடியாறான்.

‘உம்மா”

“வாப்பாட காதுக்கு காமத்துச் செல்லி ஊத வராய உட்டுட்டியே மகனே”

“நடந்தந்தப் பேசி ஒண்டும் ஆகப்போறதில்ல…. அழாதங்கம்மா”

மகன்ர கண்ணும் முறிச்செடுத்த ஆமணக்கந் தலப்பு மாதிரித் துழும்புது. எல்லார்ர கொளறுவயயும் அடக்கு றான். புள்ளயளும் கொளறுகத்தச் சாடமாடயா உடுகுதுகள். வேதத்தச் செமந்த புள்ளயல்லவ? அவன்ர பேச்ச ஒரு புள்ளயளும் தட்டுறதில்ல. மகன் சட்ட, தொப்பிய எல்லாம் களத்தி வெறக்குக் கட்டயில போடுகான். கெணத்தடியில் போய் கால் மொகத்தயெல்லாம் கழுகிக்கிட்டு வாறான். எளய மகள்காறி தேத்தண்ணி கொண்டந்து குடுக்காள்.

“மாமாவையும் காக்காவையும் கூப்பிடுங்க”

ஆலிமு மகன் தான் தேத்தண்ணியக் குடிச்சுப்போட்டு பேசுறான். புள்ளயளும் கூப்புடுதுகள். தம்பியும் மூத்தவனும் வாறானுகள்.

“மாமா அதுதான் புது வேலியாச்சே….. அதுக்கு மேலால என்னத்துக்குக் கிடுகு சாத்துறயள்?”

இந்தத் தம்பிக்கென்ன பயித்தியம்? ‘இத்தா’ வேலி யப் பிரிக்கச் செல்லுகான். புள்ளகுட்டிகளெல்லாம் யேயறஞ் சதுபோல முளிக்குதுகள்.

“என்ன தம்பி நீங்க கேக்க கத? ஓங்கும்மாக்கு இத்தா வேலி கட்டுறம்”

“எனக்கும் இருபது வயதாகுது. நான் தான் எங்கம்மாக்குக் கடைசிப்பிள்ளை. இத்தா இருக்கிற நோக்கந் தெரியுமா உங்களுக்கு?”

“நீதான் ஓதிப் படிச்சவன். ஒன்ன உட எங்களுக் கென்ன தெரியும். ஒலக வழக்கத்தச் செய்யுறம்.”

எனக் கெல்லாம் தெரியும். நீங்க வேலியப் பிரியுங்க”

‘நீயாச்சி… யேலியாச்சி; நாங்க வாறம்.”

“என்ரல்லாவேய்! தம்பிக்காறன் கோவிச்சிக்கிப் போறான்”.

(யாவும் கற்பனை)

– தினகரன் – பரிசோதனைக் களம் – 1962,

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *