வெகுளி வெள்ளையப்பன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 3,466 
 

வெள்ளையப்பனைப்பற்றி எங்கள் ஊரில் தெரியாதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். ஊரில் எந்தவொரு வீட்டிலும் நல்லது, கெட்டது நடந்தாலும் அங்கு மாங்கு, மாங்கென கொடுத்த வேலைகளை செய்து கொண்டிருப்பான்.

எழுபதுகளில் தற்போது இருப்பதைப்போல பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுக்க மாட்டார்கள். பித்தளைக்குடங்கள் பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே பயன் படுத்துவார்கள். மற்ற வீடுகளில் மண் குடங்கள் தான் அதிகமாகப்பயன் படுத்துவர். தண்ணீர் ஊற்றி வைக்கவும், சமையல் செய்யவும் மண் பானைகளும், மண் சட்டிகளும் பயன் படுத்துவார்கள். வீடுகள் கூட பெரும்பாலும் மண் சுவர்களாகவும், பனை ஓலை அல்லது தென்னை ஓலை வேய்ந்த கூரை வீடுகளைத்தான் அதிகம் பார்க்க முடியும். சில வீட்டின் மண் சுவர்கள் மழை நீரால் அரிக்கப்பட்டு பாதி சுவர் கரைந்து எலும்புக்கூடு போல எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருக்கும்.

ஒரு முறை மழைக்கு அவனது தாத்தா கட்டி வைத்த வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் வீடே தரைமட்டமாகிவிட, குடியிருக்க வீடின்றி பக்கத்து வீட்டு வாசலில் படுத்து உறங்கப்போனவனை, வீட்டினர் விரட்டியடிக்க எங்கள் வீட்டுத்திண்ணையில் கேட்காமலேயே வந்து படுத்துக்கொண்டான் வெள்ளையப்பன்.

அந்த ஊரிலேயே பெரிய திண்ணையுடன் கூடிய ஓட்டு வீடு எங்களுடையது மட்டும் தான். அதை கொசவன் ஓடு என்று கூறுவார்கள். சுவரும் சுண்ணாம்புக்காரை எனும் ஒருவகை கலவையால் கட்டப்பட்டு பூசியதால் முகம் தெரியும் கண்ணாடி போல் இருக்கும்.

அக்காலத்தில் வீட்டிற்குள் யாரும் நுழைய முடியாதபடி தற்போது போல் காம்பவுண்ட் சுவர் வைத்து யாரும் கட்ட மாட்டார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் திண்ணை எனும் படுத்து ஓய்வெடுக்கும் பகுதி வீதிப்பக்கம் வைத்துக்கட்டப்பட்டிருக்கும். அந்த வீட்டினர் வீட்டிற்குள் படுத்துக்கொள்வர். அந்த வழியாகச்செல்லும் வழிப்போக்கர்கள், வீடில்லாத அனாதைகள் ஓய்வெடுத்துச்செல்ல திண்ணைகள் பயன்படும்.

வீட்டில் உள்ளவர்கள் அவ்வாறு ஓய்வெடுத்துச்செல்பவர்களுக்கு தாங்கள் உண்டது போக மீதமிருக்கும் உணவைக்கொடுப்பர். அவ்வாறு வெள்ளையப்பனும் ஓய்வெடுத்து எங்கள் வீட்டில் போடும் உணவை சாப்பிட்டதோடு எங்கள் வீட்டினர் சொல்லும் எடுபிடி வேலைகளையும் செய்தான்.

ஒரு நாள் வெள்ளையப்பன் தன் தலையில் வைத்து மண் குடத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் போது நான் அவனைப்பார்த்து “அத பாரு வெள்ளைக்காக்காய் பறந்து போகுது” என்றதும் மேலே வெள்ளையப்பன் அன்னாந்து பார்க்க, அவனது தலையிலிருந்த மண் குடம் விழுந்து சுக்கு நூறானது. என்னை முறைத்துப்பார்த்து அடிக்க வந்ததும் நான் அங்கிருந்து ஓடி விட்டேன்.

வீட்டுக்கு போன பின் தான் தெரிந்தது அந்த உடைந்து போன மண் குடத்தில் எங்களுடைய வீட்டுக்குத்தான் தண்ணீர் கொண்டு சென்றான் என்று. அன்று மதியம் அம்மா வெள்ளையப்பனுக்கு சோறு போடாததால் அழுதபடி வாசலில் அமர்ந்திருந்தவன் என்னையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். நல்ல வேளை குடம் உடைந்ததற்கு நான் தான் காரணம் என்று என் அம்மாவிடம் கூறி என்னை மாட்டி விடாததால் தப்பித்தேன். எனக்கென தனியாக அம்மா வெங்கலப்போசியில் எடுத்து வைத்திருந்த உணவை வெள்ளையப்பனுக்கு போட்டு விட்டு நான் தண்ணீரைக்குடித்து பட்டினி கிடந்து நான் செய்த தவறுக்கு நானே எனக்கு தண்டனை கொடுத்துக்கொண்டேன்.

கவளை என்று சொல்லக்கூடிய காளைகள் பூட்டிய கயிற்றில் எங்களது கிணற்றில் எனது தாத்தா தோட்டத்துக்கு நீர் இறைப்பார். மின்சாரம் மூலம் மோட்டார் வைத்து விட்டால் ஒரு சுவிட்ச்சைப்போட்டாலே தண்ணீர் வந்து விடும் என மின்சார ஊழியர்கள் ஒரு முறை வந்து சொன்ன போது, தண்ணீர் வழியே மின்சாரம் வந்தால் இறந்து விட நேரும் என பலர் தாத்தாவிடம் எடுத்துச்சொல்லியும் மின் துறையினர் கொடுத்த நம்பிக்கையில் மின் இணைப்பு பெற்றுக்கொண்டு மோட்டார் வைத்து வாய்க்காலில் நீர் சென்றதை ஊரே வேடிக்கை பார்த்தது.

ஆனால் மின் மோட்டார் வைத்த பின்பு வெள்ளையப்பன் எங்கள் தோட்டத்துக்கு வர மறுத்து விட்டான். தோட்டத்து கிணற்றுக்கு மின்சாரம் கொடுக்க பயன்படும் மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் கம்பிகள் பாதைக்கு குறுக்கே இருந்தது தான் காரணம்.

ஒரு நாள் நானும் உடன் வருவதாக கூட்டிச்சென்று கம்பிகள் குறுக்கிடும் இடத்தை நான் கடப்பதைப்பார்த்தும் பயம் போகாமல் குனிந்த படி மின் கம்பிகளுக்கு அடியே வேகமாக ஓடி அவ்விடத்தைக்கடப்பான். “இந்தக்கிரகத்த வேற இப்படிப்போட்டு வெச்சுட்டானுக” எனக்கூறுவான். வாய்க்கால் நீரிலும் கால் வைக்கப்பயப்படுவான்.

மாட்டு வண்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்த காலத்தில் சைக்கிள் வந்தது ஒரு புரட்சி என்றாலும், அதற்க்கான விலை கொடுத்து வாங்க ஒரு ஏக்கர் பூமியை விற்க வேண்டும். அல்லது சைக்கிள் வாங்கும் விலையில் வண்டி, மாடு வாங்கி விடலாம் எனும் நிலையில் எங்கள் ஊரின் செல்வந்தர் ஒருவர் நான்கு சைக்கிள்களை வாங்கி வாடகைக்கு விட்டார்.

பொங்கல் பண்டிகைக்கு என் அம்மா கொடுத்த காசில் சைக்கிள் ஓட்டும் ஆசையில் வாடகைக்கு ஒரு சைக்கிளை எடுத்த வெள்ளையப்பன் காலையிலிருந்து மாலை வரை ஓட்டத்தெரியாததால் தள்ளிக்கொண்டே முப்பது மைல் தொலைவிலிருந்த தன் அக்காள் வீட்டிற்கு சென்று வந்ததைப்பார்த்து ஊரே சிரித்தது.

எனக்கும் சைக்கிள் ஓட்டிப்பழக ஆசை வந்தது. ஐந்தாவது படிக்கும் பத்து வயதில் சைக்கிள் ஓட்டினால் போலீஸ் பிடித்துச்சென்று விடும் என பயத்தை என் தந்தை போட்டு வைக்க, சைக்கிள் பக்கத்தில் சென்று நிற்க கூட பயப்பட்டேன்.

வெள்ளையப்பனின் சைக்கிள் ஆசை வெறியாக மாறியது. அடிக்கடி சைக்கிள் கடை பக்கமே திரிய ஆரம்பித்தவன் சைக்கிளை வெளியே எடுத்து நிறுத்துவது, துடைப்பது என சம்பளம் வாங்காத வேலைக்காரனாகவே மாறியிருந்தான்.

சைக்கிள் கடைக்காரரின் பெண் ராணி சைக்கிள் ஓட்டிப்பழக விரும்பிய போது வெள்ளையப்பன் பின்னால் உள்ள கேரியரைப்பிடித்துக்கொள்ள அவள் கால்களை கீழே ஊனாமல் குரங்கு பெடலில் ஓட்ட ஆரம்பித்து ஒரே மாதத்தில் வெள்ளையப்பனை பின்னால் அமர வைத்து ஊரைச்சுற்றும் அளவுக்கு நன்றாக ஓட்ட ஆரம்பித்து விட்டாள். சைக்கிளோடு ராணியையும் மிகவும் பிடித்துப்போனதால் அவன் எங்கள் வீட்டுப்பக்கம் தலைகாட்டுவதை விரும்பாமல் சைக்கிள் கடையிலேயே சைக்கிள்களை பாதுகாக்கும் பொருட்டு படுத்துக்கொள்வதும், ராணி தன் வீட்டிலிருந்து உணவு கொடுப்பதும் தொடர்கதையானது.

ராணி படிப்பு முடித்து அரசு ஆசிரியை வேலை கிடைத்ததால் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் நிலை வர, அவளுக்கு எடுபிடி வேலை செய்ய வெள்ளையப்பனை அனுப்பி வைத்தார் ராணியின் தந்தை.

ராணிக்கு மாப்பிள்ளை பார்த்த போது தான் வெள்ளையப்பனை விரும்புவதாக ராணி சொல்ல குடும்பமே ஆடிப்போய் விட்டது. எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் ராணி பிடிவாதம் பிடிக்க அவனையே அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

படித்து வேலைக்குப்போன நான் தற்போது வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் காலத்தைக்கழித்துக்கொண்டிருக்க, படிக்காத வெள்ளையப்பன் தனது எழுபத்தைந்தாவது வயதில் தன் மகன் நடத்தும் எழுபத்தைந்தாவது ஜவுளி நிறுவன கிளையை ரிப்பன் வெட்டித்திறந்து வைத்தார்.

‘வெகுளி வெள்ளையப்பன்’ என அன்று ஊர் அழைத்தது மாறி இன்று ‘ஜவுளி வெள்ளையப்பன்’ என உலகம் அழைக்கிறது. எந்த நிலையும் எவருக்கும் மாறலாம் என்பதற்கு வெள்ளையப்பனே சாட்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *