கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 2,746 
 

சுப்புவுக்கு சக்கரை நோய். கூடவே போனசாக கொஞ்சம் ரத்தக் கொதிப்பு. எந்த வயதிலும் இதெல்லாம் சகஜமப்பா! காலம் நேரம் பார்த்தா சுகர் வருகிறது? சுப்புவுக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை. மிடில் ஏஜ். தொப்பை , பெல்லி ஏரியா கொஞ்சம் பெரியது. அதனால், அவருக்கு மிடில் ஏஜ்.. 28 வயதில் ஒரு மகன்..

சுகர் குறைய,, சாயந்திரம் தினமும் நடைப் பயிற்சி செய்வார். சுகர் மட்டும் குறைய வில்லை. முன்பெல்லாம் காலையில் போய்க் கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம் வயசாகிவிட்டது. தூக்க மாத்திரை இல்லாமல் தூக்கம் வராது. அதனால், சாயந்திரம் வாக்கிங்.

எவனோ, வேலையத்தவன், வாட்சப்பில் போட்டு விட்டான். “தினமும் 10,000 அடி நடந்தால், நோயே வராதாம்”. அதை படித்து விட்டு , சுப்பு இன்னும் விருப்பத்துடன் , தினமும் விடாமல் நடக்க ஆரம்பித்து விட்டார்.

தன் வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்து, பார்க் செல்வார். அங்கு அலைபேசியில் பாட்டு கேட்டுக் கொண்டே, ஆறு ரவுண்டு நடப்பார். (ஒரு ரவுண்டு 3௦௦ மீட்டர்) பின்னர், அங்கே உள்ள ஒரு அரச மரத்தின் கீழே கல் திண்ணையில் அமர்ந்து, போகிறவர் வருகிறரை , காலை ஆட்டிக் கொண்டே (அது கால் பயிற்சி என்பது அவர் எண்ணம்), வேடிக்கை பார்ப்பார்.

பின்னர் எழுந்து பக்கத்தில் இருக்கும் சிவா விஷ்ணு கோவிலுக்கு சென்று. வெளியிலிருந்தே விநாயகனை பார்த்து, வேண்டிக் கொள்வார். உள்ளே போகணும்னா, ஷூவை கழட்டனுமே! அது அவருக்கு ஆகாது. எவன் குனிந்து ஷூவைக் கழட்டறது? போடறது?

விநாயகர் அவரை படுத்தும் பாட்டிற்கு, விநாயகர் கன்னத்தில் ரெண்டு போட , அவருக்கு ஆசைதான். ஆனால் அது முடியாது. ஆஸ்திகர்கள் எல்லோரும் அவர் கன்னத்தில் போட்டு விடுவார்கள். அதனால், அவர் தன் கன்னத்தில் செல்லமாக ரெண்டு தடவை போட்டுக் கொள்வார்

போகிற போக்கில், ஆஞ்சநேயரை பார்த்து ரெண்டு திட்டு திட்டி விட்டு , வீட்டிற்கு திரும்பி விடுவார். சில நாள், ரொம்ப வெறுப்பாக இருக்கும் பொது, ஷூவை கழட்டி விட்டு, கோவில் உள்ளே சென்று, விஷ்ணுவையும் சிவனையும் பார்த்து நாலு வார்த்தை கேட்டு விட்டு வருவார். “கடன்காரா! என்னை ஏன் இந்த பாடு படுத்தறே!”. அதில் அவருக்கு ஒரு திருப்தி.


அன்றும் அப்படித்தான். பார்க்கில் சுப்பு , ஆமை வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் மனதில் என்னவோ தான் சிறுத்தை போல ஓடுவதாக எண்ணம். ரெண்டு வயதான தம்பதியினர், பேசிக்கொண்டே அவரை தாண்டி சென்றும், தான் ஒரு சிறுத்தை என சுப்பு நம்பினார். இது தான் டெல்யுஷன் (delusion ) என்பார்கள் போல. இதை மன தத்துவ மருத்துவரிடம் சொன்னால், உங்களுக்கு மன சிதைவு நோய் என்று சொல்லி, இரண்டு மாத்திரை எழுதி கொடுத்து விடுவார். “மெதுவாகத்தான் குணமாகும். வாரா வாரம் வந்து பாருங்க “என பீஸ் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவார். இனி வாரா வாரம் வரும்படி அவருக்கு.


சுப்பு , பார்க்கில் நடைப்பயிற்சி. மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அதற்கே அவருக்கு கால் வலித்தது. அப்போது அவரை அலைபேசி அழைத்தது. அந்த பக்கம் இருந்தவர் வினவினார் “என்ன சார், வாக்கிங் போறீங்களா?“. சுப்புவுக்கு ஆச்சரியம். “அட! ஆமாம். எப்படி கண்டு பிடிச்சீங்க?“. எதிர் முனையில் நண்பர் சொன்னார் “அதான் மூச்சிரைக்குதே, இங்கே மாவு மெஷின் மாதிரி கேக்குதே!”

அட, எனக்கு மூச்சிறைக்கறது அவருக்குமா கேக்குது! சுப்புவுக்கு ஆச்சரியம். வயசானாலே இப்படித்தான். தான் சின்ன வயதில் ஐந்து கிலோ மீட்டர் பெரிய பார்க் வரை ஓடி திரும்பி வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அது பொற்காலம் என்று அவர் அன்று. அதை போற்ற வில்லை. போற்ற தோன்ற வில்லை. வீணாக்கினார். இன்று அது பகற்கனவு. மீண்டும் கிடைக்காது. வெறுமே ஆசைப்பட்டு லாபமில்லை.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவது இளமை..ஆடிய ஆட்டத்துக்கெல்லாம் ஆட்டம் கண்டு அதன் பலனை அனுபவிப்பது முதுமை

நடைப் பயிற்சி முடித்து விட்டு, சுப்பு அரச மரத்தடியில், திண்ணையில், எறும்பெல்லாம் தட்டிவிட்டு அமர்ந்தார். தன் கையை காலை அசைத்துக் கொண்டே, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அது அவருக்கு ஒரு டைம் பாஸ். மன பாரம் சிறிது நேரம் இறக்கி வைக்க ஒரு வடிகால்.

அந்நேரம், அப்பா அம்மாவுடன், ஒரு இளம் தம்பதி, இரண்டு வயசு பெண் குழந்தையுடன் பார்க் உள்ளே நுழைந்தனர். குழந்தை, பால்ய பருவம். அப்பா, தன் தோளிலிருந்து குழந்தையை இறக்கி விட்டார். பார்க்கை பார்த்து குழந்தைக்கு கன குஷி. கையைக் காலை அசைத்துக் கொண்டு, ஏதோ தனக்குள் சொல்லிக் கொண்டு, கால் கொலுசு குலுங்க குலுங்க, ஆடிக் கொண்டே, அந்த குழந்தை ஓடியது. கூடவே அப்பா பின்னால் வருகிறாரா என திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே. பயம் , அப்பா தன்னை விட்டு விட்டு போய் விட்டால்? அப்பாவும் அம்மாவும் அதை ரசித்துக் கொண்டே பின்னால் நடந்தனர். “பாத்து பாத்து..” அக்கறையுடன் சொல்லிக் கொண்டே. இந்த குழந்தை பின்னாளில், இந்த அப்பா அம்மாவை என்ன பாடு படுத்த போகிறதோ?

சுப்பு சற்று திரும்பினார். அரச மரத்துக்கு எதிரே, ஒரு சறுக்கு மரம், கிரீச் கிரீச் என சத்தம் போட்டுக் கொண்டே ஆடும் ஊஞ்சல். ஊஞ்சலுக்கு எண்ணெய் போட

மாநகராட்சிக்கு ஊழியருக்கு நேரமில்லை. எதிலும் ஊழல், எங்கும் ஊழல். இது நகராட்சி இல்லை. நகராத ஆட்சி.

ஊஞ்சலில் ஏழெட்டு குழந்தைகள் கும்மாளமிட்டு ஆடிக் கொண்டிருந்தன. தன்னிலை தெரியாத இளந்தளிர் பருவம். கவலை என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது. விழுந்தால், அழ மட்டும் தான் தெரியும். அம்மா அப்பா ஓடி வந்து அவர்களை அணைத்துக் கொள்வார்கள். அத்தோட சரி. துன்பம் தொலைந்தது.

சுப்பு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பார்வை சற்று தூரத்தில் ஓடியது , அங்கே, விடலை பருவத்தினர் (teen age) பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரே சத்தம். சிரிப்பு. படிக்கும் நேரம் தவிர, பள்ளிக்கு போகும் நேரம் தவிர, எப்போதும் சந்தோஷம் தான். இன்னும் தள்ளி, சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கேளிக்கை, சந்தோஷம் அவர்களை சுற்றி.

இன்னும் சற்று தள்ளி, வாலிப பருவ இளைஞர், இளைஞிகள் இலை மறைவு, காய் மறைவாக அமர்ந்து, செடி மறைவில், கடலை போட்டுக் கொண்டிருந்தனர். இளைஞிகள் முகத்தில் கோவிட் முக மூடி. அவர்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாதாம். உலகமே மறந்து, வெட்கம் மானம் துறந்து, தங்களை, இழந்து, உணர்ச்சிகளின் உறைவிடமாக. இனக் கவர்ச்சி, ஏகோபித்த ஆட்சி.

பராக்கு பார்த்துக் கொண்டிருந்த சுப்புவின் கவனம் , சத்தம் கேட்டு சிதறியது. தொப்பையும் தொந்தியுமாக சிலர், நடு வயதுக்காரர்கள் , அலைபேசியும் கையுமாக, உரக்க பேசிக் கொண்டு, நடந்து கொண்டிருந்தனர். “ஆமா சார், சரி சார், முப்பதுக்கு முடிச்சிடலாம் சார். நாளைக்கே முடிச்சிடலாம் சார்! சரி சார், ஓகே சார், ஓகே சார் “என்று, காதில் ப்ளூ டூத் மாட்டிக் கொண்டு வாக்கிங் பயிற்சி. குடும்பம் நடத்த பணம் வேண்டுமே. அவர்களுக்கு இடம் பொருள், ஏவல் இல்லை. காசேதான் கடவுளடா!

சுப்பு போன்ற சிலர், வயதானவர்கள் , மிடில் ஏஜ் தாண்டியவர்கள், மரத்தடியில் அமர்ந்தபடி, அரசியல் பேசிக் கொண்டு, சொந்தக் கதை, சோகக்கதை சொல்லிக் கொண்டு இருந்தனர். இவன் சரியில்லை, அவன் சரியில்லை என்று அரசை வசை பாடிக் கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது, சுப்புவிற்கு ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் பாடல் நினைவிற்கு வந்தது. என்ன அழகாக , தெள்ள தெளிவாக, பார்க்கில் இன்று நடப்பதை , ஆயிரம் வருடம் முன்பே, நாலே வரிகளில், இவை அனைத்தையும் வான் வழி காட்சியாக (aerial view) படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அவர். ஒரு வேளை , இந்த பார்க்கில், ட்ரோன் (drone) உபயோகப் படுத்தியிருப்பாரோ?

பாலஸ்தாவத் க்ரீடா சக்த: தருணஸ்தாவத் தருணீ சக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த: பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர். பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது. முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள்…..

இது இந்த பார்க்குக்கு மட்டும் பொருந்துமா என்ன? எந்த பூங்காவுக்கும், எந்த நாட்டுக்கும், எந்த காலத்துக்கும் பொருந்துமே?

சுப்புவின் பார்வை மட்டும்தான் பார்க்கில். சிந்தனை, நதி, கடல் நோக்கி ஓடுவது போல சங்கரரின் பாடலை நோக்கி ஓடியது.

புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;மீண்டுந்தாயின் கருப்பையிலுறக்கம்; பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;….

அட! என்ன ஒரு அழகு! என்ன ஒரு உண்மை! எம். எஸ் சுப்புலட்சுமி அம்மா அவர்கள் இதை பாடும்போது மனம் சிலிர்க்குமே! வீட்டுக்கு போய், பஜ கோவிந்தம் பாடலை கேட்க வேண்டும்!.


“என்ன சார், எந்த உலகத்திலிருக்கீங்க?” சுப்பு குரல் கேட்டு திரும்பினார். எதிரே, பழைய நடைப் பயிற்சி நண்பர்… அவர் பெயர், சட்டென்னு நினைவுக்கு வரவில்லை. ஆ! நினைவுக்கு வந்து விட்டது. ராமன். நல்லவர்.மற்றவருக்கு கெடுதல் பண்ணத் தெரியாது. சுப்புவுக்கு அவரை அவர் குடும்பம் பற்றி நன்றாகவே தெரியும். நண்பர்கள் எல்லோரும் தவிர்க்கும் ஆள், ராமன். சுப்புவும் அவர்களில் ஒருவர். ராமன், அவராக ஓடி வந்து ஒட்டுவார். ஏமாந்தவரை, அவர்கள் ஏமாந்த-வரை, ஓட்டுவார்.. இன்று சுப்பு மாட்டி விட்டார்.

சுப்பு: “ஹல்லோ! எப்படி இருக்கீங்க? சவுக்கியமா?பாத்து ரொம்ப நாளாயிருச்சு?”

ராமன் : நான் நல்லாயிருக்கேன் சார்! கனடாவில் பையன் செட்டில் ஆயிட்டான். எனக்கும் அங்கேயே PR (பெர்மெனன்ட் ரெசிடென்ட்) கிடைச்சிடுச்சு. இங்கே வீடு இருக்கு. பெரிய வீடு. இதைத்தவிர இன்னும் இரண்டு வீடு இருக்கு. மராமத்து பண்ணனுமே! வாடகைக்கு விடனும். ஒரு வீடு நல்ல விலைக்கு கேட்டிருக்காங்க. விக்கணும். அதுக்காக வந்தேன். எப்படியும் வருஷத்துக்கு ஒரு தடவை வருவேன். சும்மா இன்னிக்கு வாக்கிங் வந்தேன். உங்களை பார்த்தேன். நீங்க எப்படி இருக்கீங்க? நம்ம பார்க் நண்பர்கள் எல்லாம் நல்லா இருக்காங்களா? நீங்க இப்போ காலைலே வாக்கிங் போறதில்லையா? தனியா வந்திருக்கீங்க? உங்க மனைவி வருவாங்களே? அவங்க வரலையா?

அர்ஜுனன் வில்லிலிருந்து விடு படும் அம்பு போல, அவரது கேள்விக் கணைகள் தொடர்ச்சியாக சுப்பு மேல் விழுந்து துளைத்துக் கொண்டிருந்தது..ஆனால், கர்ணன் போல், சுப்பு சுதாரித்துக் கொண்டார்.

சுப்பு : நீங்க, ராமன் தானே. நாம எல்லாரும் ஒண்ணா வாக்கிங் போவோமே?

ராமன் : பரவாயில்லியே. நானேதான். நீங்க சௌக்கியமா?

சுப்பு : இருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?

ராமன்: என்ன! பேச்சிலே ஒரு ஜோஷ் இல்லியே! ஹாப்பியா இருங்க சார். என்னை பாருங்க!

சுப்பு : நீங்க சௌக்கியமா?

ராமன்: எனக்கென்ன குறை! கானடாவிலே மொட்டை மாடியிலேயே நடக்கிறேன். நல்ல சாப்பாடு. மத்தியானம் தூக்கம். சாயந்திரம் , மெட்ரோ பிடிச்சி, பீச் பக்கம் போயி, அங்கே நடக்கிறேன். பையன் , மருமகள் அங்கேயே இருக்காங்க. என்னையும் என் மனைவியையும் பார்த்துக்கறாங்க. சூப்பராக இருக்கேன். எனக்குன்னு தனி வீடு. ராஜ வாழ்க்கை போங்க!

சுப்பு : ரொம்ப சந்தோஷம் சார்!

ராமன்: சுப்பு, உங்க சன் எப்படி இருக்கார்? இப்போ இந்தியாலே தான் இருக்காரா? என்ன பண்றார்?

சுப்பு : இப்ப, எங்க கூடத்தான் இருக்கார். ஒரு சின்ன சோலார் உதிரி பாக தொழிற்சாலை நடத்தறார்.

ராமன்: லாபம் வருதா?

சுப்பு: இல்லே சார், நஷ்டம் தான்! இன்னும் சூடு பிடிக்கலே!

ராமன்: சோலார் பிசினெஸ் இல்லியா! வெயில் வரணும். சூடு பிடிக்க! ஹா ஹா! ஜோக்கு சார் , ஜோக்கு, சிரிங்க!

சுப்புவுக்கு சிரிப்பு வரவில்லை. எரிச்சல் தான் வந்தது. அடக்கிக் கொண்டார். பாவம். சிரித்து வைப்போம்.

சுப்பு : ஹா ஹா ஹா! நல்லா இருந்தது!

ராமன்: அது சரி, அடடா : என்ன சுப்பு! இப்படி பண்ணிட்டீங்களே! கொஞ்சம் யோசனை பண்ணி இந்த தொழில்லே இறங்கியிருக்கணும். இந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ்லே , நிறைய முதலீடு பண்ணணும், நல்ல மேலாண்மை வேணும், அதுக்கு அனுபவம் வேணும், நேரடியா இறங்கிட முடியாது, நிறைய ரிசர்ச் பண்ணணும், புதுமை பண்ண தயாரா இருக்கணும் , இதெல்லாம் இல்லாம இந்த தொழில்லே இறங்கிட்டீங்களே!.

சுப்பு: ஆமா! நீங்க சொல்றது ரொம்ப சரி. இப்போ பாங்க்லே தான் இன்னும் கடன் கேட்டிருக்கோம்!

ராமன்: என்னை கேட்டா, இன்னிக்கி தமிழ் நாட்டிலே , வாகன உதிரிபாகங்கள், ரெடி மேட் ஆடைகள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களின் உற்பத்திதான் பெஸ்ட். அதிலே தான் நீங்க இறங்கியிருக்கணும் இல்லே, பண்ணை வெச்சிருக்கலாம், தென்னை மரம், பாக்கு மரம் இப்படி ஏதாவது. அல்லது இப்போ அலைபேசி பிசினெஸ் ரொம்ப நல்லா போயிட்டிருக்கு. அது சம்பந்தமா இறங்கியிருக்கலாம் நல்ல லாபம் கிடைச்சிருக்கும். இது எல்லாம் விட்டுட்டு, இப்படி சோலார் பிசினெஸ்லே இறங்கிட்டீங்களே!

சுப்பு: ஆமாம்! காலை விட்டுட்டோம். மெதுவாகத்தான் மேலே வர முடியும். வந்துடுவோம்! பாக்கலாம்

ராமன்: இன்னிக்கு , இந்தியாலே செர்விஸ் இண்டஸ்ட்ரி தான் நல்லா போயிட்டிருக்கு. இன்சூரன்ஸ் , டிஜிட்டல் மார்கெடிங் இப்படி ஏதாவது ஒன்னு முயற்சி பண்ணி பாருங்களேன். பாருங்க, நான் கனடாலே இருந்தாலும், இந்தியா பத்தி எவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கேன்!

சுப்பு: பாக்கலாம்! சோலார்லே இறங்கிட்டோம். இதுலேயே, ஒரு கை பாக்க வேண்டியது தான்.

ராமன் : அதுவும் சரிதான். பாத்து சுப்பு. கை சுட்டுக்காதீங்க! சோலார். ஹ ஹ ஹ! அப்புறம் நீங்க எப்படியிருக்கீங்க! உங்க வீட்டிலே எல்லாம் நலமா?

சுப்பு: எங்கே சார், எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லே. வீட்டிலேயும் சரியில்லே. ஆஸ்பத்திரி , வீடுன்னு அலைஞ்சிட்டிருக்கோம்

ராமன்: அடடா! நீங்க யோகாவெல்லாம் பண்றதில்லையா? அது பண்ணுங்க! மூச்சு பயிற்சி தினமும் பண்ணுங்க. நாலு மணிக்கு எழுந்து, தினமும் தியானம் பண்ணுங்க. அப்புறம் யோகா. சாப்பாடு கவனம் நிறைய வேணும். இந்த வயசிலே நிறைய சாப்பிடாதீங்க. இந்த டாக்டருங்க கொடுக்கிற மருந்தெல்லாம் நம்பாதீங்க. உடம்பை கெடுத்திரும் இதெல்லாம் மருந்து கம்பனிங்க. அவங்க ப்ராடக்ட் விக்க பண்ற ட்ரிக்கு. என்னைப் பாருங்க. எவ்வளவு ட்ரிம்மா இருக்கேன். டெய்லி யோகா பண்றேன். மூச்சுப் பயிற்சி பண்றேன். தியானம் பண்றேன்! நீங்களும் பண்ணுங்க!

சுப்புவுக்கு அலுத்து விட்டது. என்ன இந்த ஆள் வந்ததிலிருந்து, அட்வைசா கொட்டறான். தொல்லை தாங்க முடியலியே!

சுப்பு : ஆமாமா! இப்பவே அப்படித்தான் பண்றேன்

ராமன்: ஆமா! கேக்கனும்னு நினைச்சேன்! மெடிக்கல் இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணியிருக்கீங்க இல்லே!

சுப்பு : இல்லே சார்!

ராமன்: தப்பு பண்ணிட்டீங்களே சுப்பு. ஏன் பண்ணலே!

சுப்பு: பையன் பண்ணியிருப்பான்னு நினைச்சேன் சார். பையன் பண்ணலே.

ராமன்: அடடா! பெரிய தப்பு பண்ணிட்டீங்க சுப்பு. இப்போ பாருங்க. எல்லா மருத்துவ செலவையும் நீங்களே பாக்க வேண்டியிருக்கு. உங்க பையன் உங்களுக்கு உதவி பண்றதிலையா?

சுப்பு : எங்க ராமன்? அவனுக்கு இருக்கிற செலவிலே, இந்த ப்ரீமியம் கட்ட முடியலே. பிசினெஸ் நஷ்டமே கழுத்தை நெறிக்குது.

சுப்புவுக்கு தாங்கவில்லை. எரிச்சல் வந்து விட்டது. என்ன இந்த ஆள், கேள்வி மேலே கேள்வி கேட்டு இப்படி துளைக்கிறான். மத்தவன் விஷயத்திலே இப்படி மூக்கை நுழைக்கிறான். ரொம்ப அலட்டறான். இவனை எப்படி கழட்டி விடறது? நாம கொஞ்ச நேரம் நிம்மதியா வேடிக்கை பாக்கிறது கெட்டது!. பேசாம பை பை சொல்லிட்டு கிளம்பிடலாமா? இவனுக்காக நாம இங்கேயிருந்து ஓடுவதா? கூடாது. சுப்பு முடிவு செய்து விட்டார். ரூட்டை மாத்து!

சுப்பு : என்ன ராமன்! நான் என் சோகக் கதையை பத்தியே பேசி உங்க கழுத்தை அறுக்கிறேன். உங்களை பத்தி கேக்கவேயில்லை. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க குடும்பம் எப்படி இருக்காங்க?

ராமன்: நல்லா இருக்காங்க. அது இருக்கட்டும் சுப்பு, உங்க மனைவிக்கு அப்படி என்ன உடம்பு?

சுப்பு : எல்லாம் வயசானா வர உடம்பு தான்! ராமன், உங்க பையன் எப்படி இருக்கான்? எதோ டைவர்ஸ் அப்படின்னு கேள்விப்பட்டேன்.

ராமன் : (ஆச்சரியமாக ) யார் சொன்னாங்க?

சுப்பு : போன மாசமோ, அதற்கு முன்போ, சந்துருவை பார்த்தேன். பொதுவா பேசிக்கிட்டிருந்தோம். அப்போ அவர் சொன்னார்.

ராமன் : அதெல்லாம் சரியாகி விட்டது. இப்போ சந்தோஷமா இருக்காங்க

சுப்பு : உங்க மருமகள் இந்தியா வந்திருக்காங்கன்னு சந்துரு சொன்னாரே! இங்கே தான் இருக்காங்களாம்?

ராமன் : அதெல்லாம் ஒன்னும் இல்லே சார். சரி, நான் கிளம்பட்டுமா?

சுப்பு : உக்காருங்க ராமன். உங்க பெண் இப்போ என்ன பண்றாங்க? எம் சி ஏ பண்ணினாங்க இல்லே? இப்போ எங்கே இருக்காங்க? கல்யாணம் ஆயிடுச்சா?

ராமன் : இன்னும் இல்லை சுப்பு. சும்மாதான் இருக்கா.

சுப்பு : அடடா! உங்க பெண்ணை மெடிசின் போட்டிருக்கலாமே! உங்க கையிலே இல்லாத பணமா? குறைந்த பட்சம் பொறியியல் பட்டப் படிப்பு போட்டிருக்கலாம். ஏன் எம் சி ஏ போட்டீங்க?

ராமன் : சுப்பு! இப்ப நான் கிளம்பட்டுமா? அப்புறம் நிறைய பேசலாம்.

சுப்பு : இருங்க. போகலாம். எனக்கு இப்போ கொஞ்சம் பண முடை. நீங்க தான் கனாடாவிலே செழிப்பா இருக்கீங்க! கொஞ்சம் பணம் கடனா தள்ளறது?

ராமன் : சுப்பு! எனக்கு நேரமாச்சு! பின்னாடி பாக்கலாம்!

சுப்பு : இருங்க போகலாம்! ரொம்ப நாளாச்சு! பேசி!

ராமன் : இல்லே சுப்பு! ஒரு அவசர வேலை. பின்னாடி பாக்கலாம்!

அடுத்த நிமிஷம் ராமனைக் காணவில்லை. இனி, சுப்புவை பார்த்தாலும் , சுப்புவின் கண்ணில் படாமல் ஓடி விடுவார்.

சுப்பு சிரித்துக் கொண்டார். ராமனை , சுப்பு , ராமன் வழியிலேயே நடந்து, அவரை திருப்பி அனுப்பி விட்டார்.

அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதை விட புத்தகத்தில் நுழைத்துக் கொண்டால் இந்த உலகம் சிறந்த இடமாக இருக்கும் – ஆண்ட்ரியா என்ற அறிஞர் சொன்னது சுப்புவுக்கு நினைவு வந்தது

சிலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது என்பது ‘ தான் உயர்ந்தவன்’ என்பதை காட்டிக் கொள்ளவே. சுய தம்பட்டம்.

எல்லோருக்கும் மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதில் தீர்க்கமான ஐடியா இருக்கிறது, தங்கள் வாழ்க்கையை தவிர என்று ஏதோ அறிஞர் சொன்னார்(Paulo Coelho). எவ்வளளவு உண்மை.!

இனி பிரச்னையில்லை. சுப்பு, தன் வேலையுண்டு, தான் உண்டு என மீண்டும் பார்க்கில், பராக் பார்க்க ஆரம்பித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *