மன அலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,222 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடற்கரை மணலில் கைவிரல்களால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கோகிலா. அவளின் நான்கு ‘வயது மகள் சரண்யாவும், இரண்டு வயது மகன் குமாரும் சற்று தள்ளி மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த பெரிய அலைகளால் கோகிலா போட்ட கோலம் அழிந்தது.

ஆனால், அவள் வாழ்வில் அழிக்க முடியாத கோலங்களாகவும், அவளின் இதயத்தை ஆறாத புண்ணாகவும் வலிக்கச் செய்து கொண்டிருக்கும் அந்த சம்பவங்கள் எப்போது அழியும்.

வசதியான குடும்பத்தில் ஒரே பெண்ணாக பிறந்த கோகிலா இயற்கையிலேயே நல்ல அழகுடன் இருந்தாள். செல்வத்தில் மட்டுமல்லாது கல்வியிலும் கோகிலா சிறந்து விளங்கினாள். பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல முயற்சி செய்துக் கொண்டிருந்த கோகிலாவுக்கு மிகப் பொருத்தமான, தங்கள் மனதிற்கு மனப்பூர்வமாக திருப்தி அளித்த மாதவனுக்கு திருமணம் செய்து கொடுக்க கோகிலாவின் பெற்றோர் விரும்பினர்.

மாதவன் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். நற்பண்புகள் நிறைந்தவன். மாதவன் சட்டத்துறையில் தேர்ச்சி பெற்று அரசாங்க வழக்குரைஞராக பணியில் இருந்தான்.

கோகிலாவின் தந்தை சீனிவாசனின் பழைய நண்பர் ப்ன்னீர் செல்வத்தின் மகன்தான் மாதவன்.

மாதவன் தன் அறிவாற்றல் நிறைந்த பேச்கத் திறமையால் இந்த இளம் வயதிலேயே சிறந்த வழக்கறிஞர் என்று பெயரும் இருந்தது. மாதவனை தன் மருமகனாக அடைய சீனிவாசன் விரும்பியதில் ஆச்சரியம் இல்லை.

சீனிவாசன் தன் மகள் கோகிலாவை அழைத்து “கோகிலா நீ விரும்பியபடி படிப்பை முடிச்சாச்சு. உனக்கு இப்போ வயசு இருபத்து இரண்டு ஆகுது. இனிமேலும் நான் உன் கல்யாணத்த தள்ளிப் போட விரும்பல”, என்றதும் கோகிலா,

“அப்பா, நான் வேலைக்குப் போக விரும்பறேன்”, என்றாள். அதற்கு சீனிவாசன் “கோகிலா நீ வேலைக்குப் போகனும்னு அவசியம் இல்ல. மாதவன் ஒரு எம்.எ.பி.எல். அட்வகேட், உன் விருப்பத்த தெரிஞ்சிக்கிட்டு பேசலாம்னு நினைக்கிறேன்” என்றார் சற்று கண்டிப்புடன்.

கோகிலா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு “உங்க இஷ்டம்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

தந்தையின் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்ற கொள்கையில் தன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாளே தவிர, கோகிலாவுக்கு தன் மனதிற்குள் சற்று பயமாக இருந்தது. மாதவன் எப்படிப்பட்டவன்? அவன் குணம் என்ன? அவரோடு தன் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.

நல்ல சுபயோக சுபதினத்தில் கோகிலா – மாதவன் திருமணம் ஊரே மெகம்படி மிகச் சிறப்பாக நடந்தது.

திருமணத்தைக் காண அலை கடலென வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மணமேடையில் இருந்த தம்பதிகளை பார்த்து மகிழ்ந்தனர். வேறு சிலர் சீனிவாசனின் உயர்ந்த எண்ணத்தையும் தாராள மனதையும் பேசி மகிழ்ந்தன.

கோகிலாவை எற்கனவே பெண் கேட்ட சில பெரிய இடத்து பெற்றோர்கள் “வசதி படைத்த எங்க பையனுக்கு பெண்ண தராமல் யாரோ விலாசம் தெரியாத பையனுக்கு பெண்ணை தொடுக்கறாரு இந்த சீனிவாசன்” என்று பேசினர். போகப் போகப் பார்ப்போம் எப்படி வாழப் போறாங்கன்னு” என்று தங்கள் வயிரெறிந்தும் கூறினர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்ததால் மாதவன் விலாசம் தெரியாதவனா?

பணம் அழியக்கூடியது என்றும், கல்வி அழியாச் செல்வம் என்றும் இந்த மடையர்களிடம் யார் கூறுவது? அந்த ஆண்டவன்தான் சொல்ல முடியும். திருமணம் நடந்த அன்று மாலை சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற

நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கோகிலா உயர்ந்த வகை சேலை அணிந்து பூரண அலங்காரத்துடன் இருந்தாள் மாதவனும் மிகப் பொருத்தமான கோர்ட், ஷர்ட்டில் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

முக்கிய தொழிலதிபர்கள், நண்பர்கள் நெருங்கிய உந்வினர்கள் பலர் கையில் பரிகப் பொருளுடன் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு, வாய்க்கு ருசியாக உணவை அருந்திவிட்டு சென்றனர்.

கோகிலாவும் மாதவனும் மனம் நிறைந்து காணப்பட்டனர். கோகிலா புகுந்த வீட்டில் மூத்த மருமகளாக குடி புகுந்தாள். மாதவனின் தாய் லட்சுமி தன் மருமகள் கோகிலாவை தன் மகள் போல பார்த்துக் கொண்டரள். மாதவனின் தம்பி, தங்கைகள் கோகிலாவை அன்புடன் நடத்தினர்.

கோகிலா வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்தாலும் தன் கணவர் வீட்டில் எல்லோரையும் அனுசரித்து வாழ்க்கை நடத்தினாள்.

திருமணத்திற்கு பிறகு கோகிலா தன் கணவன் மாதவனிடம் ஒரு நாள் தான் வேலைக்குச் செல்ல விரும்புவதைக் கூறியதும் மாதவன் எந்த மறுப்பும் தெரிவிக்காமல், “கோகிலா நீ படித்த படிப்பு வீணாகக் கூடாது. உன் விருப்பப்படியே செய்” என்றான். கோகிலா பெரு மகிழ்ச்சி அடைந்தாள். மாதவன் நல்ல மனம் படைத்தவன் என்று புரிந்து கொண்ட கோகிலா மாதவனை வாழ்க்கைத் துணையாக அடைந்ததை எண்ணி உள்ளம் பூரித்தாள்.

கோகிலா வேலைக்குச் சென்றாள். நான்கு ஆண்டுகளில் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள். மூத்த பெண் ‘ சரண்யா. இரண்டாவது பையன்தான் குமார்.

குமார் பிறந்த பிறகு கோகிலா வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து பிள்ளைகளை கவனித்தாள்.

ஒரு நாள் மாதவன் அவசரமாக கேஸ் விசயமாக கோர்ட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, அவன் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அதே இடத்திலேயே மாதவன் மரணமடைந்தான். செய்தியைக் கேட்ட கோகிலா துடிதுடித்து மயக்கமடைந்து விட்டாள்.

திருமணத்தின் மூலம் தன் வாழ்க்கையை பூரணமாக்கிக் கொண்ட கோகிலா, வாழ்வின் தொடர்ச்சி தொடராமல் மணம் வீசிக் கொண்டிருக்கும் போதே கசக்கி எறிந்த மலராக ஆன அவள் வாழ்வை எண்ணி கண்ணீர் விட்டு அழுதாள்.

ஆனந்தமாக இருந்த அவள் வாழ்க்கையில் பாழும் விதி புயலாக வந்து நாசமாக்கி கோகிலாவை நடைப்பிணமாக உலாவச் செய்தது.

அவள் தற்போது இருந்த மன நிலையில் கடற்கரையில் இருந்த தென்னை மரங்களின் அழகை ரசிக்க முடியவில்லை. மகள் சரண்யா வந்து “அம்மா வாம்மா குளிக்கலாம்” என அழைத்ததும்தான் கோகிலா தன் நினைவுகளை மனதிலிருந்து களைய முடியாமல் கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, மனதை கல்லாக்கிக் கொண்டு பிள்ளைகளை சந்தோசமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தாள்.

மாதவனின் மறைவுக்குப் பிறகு கோகிலாவின் மனதை கவலைகள் வியாபித்துக் கொண்டன.

நிரந்தரமில்லாத இந்த மனித வாழ்க்கையில் மிக குறுகிய காலத்தில் ஆசைகளை மனம் நிறைய வைத்துக் கொண்டு அவதிப்படுகிறோமே ! என்று கோகிலா நினைத்தாலும், அவள் பிள்ளைகளின் எதிர்காலம்? அதற்கு ஆண்டவன்தான் பொறுப்பு என்று கூறிக்கொண்டு அவளால் சும்மா இருக்க இயலவில்லை. சிந்தித்தாள். விடை காண முடியாமல் அவள் மனம் அலை பாய்ந்தது.

குடும்பம் என்ற வண்டி ஒட இரண்டு சக்கரங்கள் தேவை. அதில் ஒன்று உடைந்து விட்டது. கணவன் மறைவுக்கு பிறகு அவள் உயிர் வாழ்வதே அவள் பெற்ற இந்த இரண்டு பிள்ளைகளுக்காகத்தான். கணவன் மாதவன் இறந்த இந்த ஒரு வருடமாக கனவாகிப் போன தன் வாழ்க்கையை மறக்க முடியாமலும், அவள் மனதில் அழியாத கோலங்களாகவும் அவளை வாட்டி வதைத்தது.

மாதவனின் பெற்றோர் கோகிலாவை தங்கள் வீட்டிலேயே இருந்து பிள்ளைகளுடன் உறவாட விரும்பினர். ஆனால், கோகிலா மாதவன் வீட்டிலிருந்தால் மாதவனின் நினைவு அவள் இதயத்தை சுட்டெரிப்பதால் அடித்கடி தன் தந்தை வீட்டிற்கு சென்று தங்கி விடுவாள்.

இந்த நேரத்தில் கோகிலாவின் தந்தை சீனிவாசன் மகளிடம், “கோகிலா நீ வாழ வேண்டிய பொண்ணு. ஏம்மா இன்னொரு கல்யாணம் பண்ணி க்கக்கூடாது ? உன் பிள்ளைக ளை நானும் அம்மாவும் பார்த்துக்கறோம்” என்றார் பணிவாக.

“இந்தக் கோலத்தில உன்னைப் பார்க்க என் நெஞ்சே வெடிச்சிடும்போல இருக்கு” என்று கோகிலாவின் தாய் கூறவும், கோகிலா பதில் ஏதும் கூறாமல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடற்கரைக்கு வந்தாள்.

மாறுபட்ட அமைதியான இந்த இடத்தில் அவள் சிந்தித்து ஒரு நல்ல முடிவை தன் தாய் தந்தையிடம் கூற விரும்பினாள்.

தன் கணவன் மாதவன் உயிரோடு இருக்கும் போது கூறியவை கோகிலாவின் நினைவுக்குள் நிழலாடியது.

“கோகிலா நீ பெரிய இடத்துப் பெண் என்று முதலில் உன்னை திருமணம் செய்ய சற்று யோசித்தேன். ஆனால், நீ எங்கள் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக, எனக்கு நல்ல மனைவியாக நடந்து கொண்டே. நம்ம பிள்ளைகளுக்கு நல்ல தாயாக, நம்ம பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து உயர்ந்த இடத்துக்கு கொண்டு வர நாம ரெண்டு பேரும் பாடு படனும்” என்றான் மாதவன்.

மாதவன் அன்று கூறிய இலட்சியத்தை நிறைவேற்ற இப்போது உயிரோடு இல்லை. ஆனால், அவர் இலட்சியத்தை நான் நிறைவேற்றவே விரும்பறேன் என்று தன் தந்தையிடமும் கூறி விட்டாள்.

தன் பிள்ளைகளுக்கு தாய், தந்தை எல்லாமே நாம்தான் என மனதில் உறுதி எடுத்தாள்.

கோகிலாவுக்கு அவள் கற்ற கல்வி மன தைரியத்தைக் கொடுத்தது.

மேலும் அவள் வேலைக்குச் ‘ செல்ல விரும்பினாள். பிள்ளைகளை தானே வளர்த்து ஆளாக்க எண்ணினாள்.

சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் வாழ்வதற்கு அவளிடம் கல்வி இருக்கிறது. பணமும் இருக்கு. அவள் பெற்றோரின் ஆதரவு, அவள் கணவன் வீட்டாரின் அன்பும், ஆதரவும் இருக்கு. அவள் மனதில் நம்பிக்கை வேர் அஸ்திவாரம் போட்டது.

தன் பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் உயர்வு, இவர்கள் மாதவனின் பிள்ளைகள் என ஊராரின் பாராட்டுக்கள் இதற்காக தான் பாடுபட போவதாக இலட்சியம் எடுத்துக் கொண்டாள்.

கோகிலா வழுக்கி விழும் பட்டாம் பூச்சி அல்ல. அவள் சிறகொடிந்த பறவையும் அல்ல. அவள் மனம் பூப்பூத்த நந்தவனமாகவும் அதில் அவள் பிள்ளைகள் இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கரை காண முடியாத கடலிலிருந்து அவள் வாழ்க்கைக்கு கரை கண்டு விட்ட மகிழ்ச்சியுடன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் காரில் அப்பா வீட்டிற்கு வந்தாள்.

அப்போது மாதவனின் நண்பன் ச்ங்கர் வெளியே வந்து கொண்டிருந்தான். கோகிலாவைப் பார்த்து ‘ஹலோ’ என்றான். பதிலுக்கு கோகிலாவும் ‘ஹலோ’ என்றாள். சங்கர் வேகமாக வெளியே சென்று விட்டான். ஆனால் சீனிவாசன் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். மகளையும் பேரன், பேத்தியையும் பார்த்தவுடன் ஓடி வந்து பேரனை தூக்கி முத்தமிட்டுக் கொண்டே “கோகிலா உன் வாழ்க்கையில சோகம் என்பது ஒரு தொடர்கதை இல்ல. ஆண்டவன் உனக்கு ஒரு நல்ல வழி காட்டிட்டான்”, என்றார். கோகிலா குழப்பத்துடன் “என்னப்பா சொல்றீங்க?”, என்றாள்.

“இப்போ வந்துட்டு போனாரே சங்கர், அவர் ஏற்கனவே மனைவியை இழந்தது உனக்குத் தெரியும்.”

“ஆமாம்பா தெரியும்.” என்றாள் கோகிலா. “சரி, சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கே வந்திடறேன். சங்கர் உன்னை மறுமணம் செஞ்சுக்க விரும்பறார். அவருக்கு குழந்தைகளில்லே. ஆனா உன் குழந்தைங்க மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்காரு.” “உன் பிள்ளைகளை அவர் பிள்ளைகளைப் போல பார்த்துக்குவாராம் நான் என் சம்மதத்தை மனப்பூர்வமா சொல்லிட்டேன். இருந்தாலும் சங்கர் உன் முடிவை கேட்டுச் சொல்லச் சொல்றார்” என்றார் மகளிடம். கோகிலாவிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவள் மௌனத்தை

சம்மதமாக எடுத்துக் கொண்டு “நான் இப்பவே சங்கருக்கு போன் போட்டு சரின்னு சொல்லிடறேன்” என்றார் சீனிவாசன். கோகிலா பதற்றம் எதுவும் இல்லாமல் அமைதியாகவும், நிதானமாகவும் மனதில் எந்த சலனமும் இல்லாமல் தான் எற்கனவே எடுத்துக் கொண்ட முடிவை தன் தந்தையிடம் கூறினாள்.

“சங்கரை திருமணம் செய்து கொள்ள எத்தனையோ பெண்கள் கிடைப்பார்கள். என் மனக்கடலில் என் கணவர் மாதவன் மட்டுமே அலைகளாக இருப்பார்” என்று கோகிலா கூறியதைக் கேட்ட சீனிவாசன் தன் மகளின் உயர்ந்த உள்ளத்தை புரிந்து கொண்டவராக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவளின் உறுதியை ஏற்றுக்கொண்டார்.

இவ்வுலகை விட்டு பிய்ந்தாலும் கோகிலாவின் மனதை விட்டு பிரியாமல் அவள் மனத்தில் அலைகளாக இருக்கும் மாதவன் கோகிலாவின் இதயத்தில் தெய்வமாக இருந்து குடும்பத்தை வழி நடத்துவான். மிகத் தெளிவுடன் முடிவெடுத்தாள் கோகிலா.

– ஒலிக்களஞ்சியம் 96.8 செப்டம்பர், 1989, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *