கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 4,074 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெருந் தெருவிலிருந்து பிரிந்து வயல்வெளியினூடே செல்லும் மண்பாதையில் அந்தத் துவிசக்கரவண்டி சென்று கொண்டிருந்தது. பாரவண்டிச் சிற்களின் இரும்பு வளைய அமுக்கத்தில் நொறுங்கி, சீமெந்துத் தூள போல மெத்தென்றிருக்கும் மண்ணிலே, துவிச்சக்கர வண்டிச் சில்லுகள் புதையக் கூடாதே என்ற சிரத்தையோடு, வண்டித் தடங்களின் மத்தியில் ஓணான் முதுகாக மேடிட்டுக் கிடந்த கலட்டித் தரையில், குழியில் விழுந்தும் மேட்டில் மிதந்தும் அசமந்தமாகச் சென்று கொண்டிருந் தது அத்துவிசக்கரவண்டி!

அதில் சவாரி செய்பவர் கிழடு தட்டியவராக இருக்க லாம். ஆனால் துவிசக்கர வண்டியோ புத்தம் புதியது. கைப்பிடியிலே ‘கணீர் கணீர்’ என்று சப்திக்கும் மணி, இரவிலே ஒளியை உமிழ்ந்து பாதையை விளக்கம் செய்வ தற்கான லைற், பின்னால் பொருட்களை வைப்பதற்கான சுமை தாங்கி, அதன்கீழே பாதுகாப்பிற்கான பூட்டு, ஏன்? காற்றடிக்கும் குழாய்கூடச் செருகப்பட்டிருந்தது. புதுமை மெருகு குலையாத அவ்வண்டியின் ‘சேறு தாங்கி’ களில் சூரிய கிரணங்கள் பட்டு ஜொலிக்கையில் அதன் புதுமை மெருகு மேலும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

கலட்டியிலே இன்னமும் இரண்டு மைல்கள் ஓட வேண்டும். இந்த நேரத்தில் சென்றாற் பாடசாலையை அடைவதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலமாவது என் பதையிட்டு கனகசபை கவலைப்படவில்லை. சித்தம் போக்குச் சிவம்போக்காய் வண்டி குழியில் விழுந்து மேட்டில் மிதந்து சென்று கொண்டேயிருந்தது.

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் போற்றத் தக் கது இந்தத் துவிசக்கர வண்டிதான். மாடு தேவையில்லை. எரிபொருள் தேவையில்லை. எந்தப் புறச் சக்தியுமில்லா மல், மனிதனின் சொந்தச் சக்தியிலேயே, ஆனாற் சொந்தச் சக்திக்கும் மேலான வேகத்திற் செல்லக்கூடிய அற்புதமான வாகனந்தான் துவிசக்கரவண்டி, இரண்டு சக்கரங்களும் ஒன்றாக உருளும்போது, அவை தாங்கி நிற்கும் வாகனம் சரிந்து விடாமல் ஓடிக் கொண்டிருக்கும் என்பதை கண்டுபிடித்தவன் மேதையாகத்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கனகசபை எண்ணிக் கொள்ள வில்லை. மாறாக அவரது மனது கடந்த கால நினைவு களை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

காலையில் அவர் வீட்டைவிட்டுப் புறப்படுகையில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் அவர் மகன் கேட்டான்.

“ஏன் அப்பா! இந்தச் சைக்கிளைத் தராவிட்டால் என்ன?”

“இது நம்மட இல்லியே. தரத்தான் வேண்டும்.”

“எப்ப புதுச் சைக்கிள் வாங்குவீங்க?”

“பென்சன் எடுத்து வாங்கலாம்.”

அவருடைய பதிலில் அவர் மகனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லைப் போலும். ஏன்? அவர் சொன்னதில் அவருக்கே நம்பிக்கையில்லை. இப்போதுள்ள விலை வாசியில் தானாவது புதுச் சைக்கிள் வாங்குவதாவது? காலையில் மகன் சொன்னது மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது.

“சைக்கிள் வாங்காட்டி மில்லுக்கு நெல்லுக் குத்தப் போக மாட்டன். கொச்சிக்காய் அரைக்கவும் போசு மாட்டன்.”

அவன் குறிப்பிட்ட இரண்டு வேலைகளையும் இனித் தாமே செய்யவேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டார் கனகசபை. துவிசக்கர வண்டி மட்டும் இருக்குமானால் அந்த வேலைகளை மட்டுமென்ன, சைக்கிள் சவாரி செல்லும் சுகிப்பில் எல்லா வேலைகளையும் அவனே செய்வான். சந்தைக்கு, லோண்டரிக்கு, பால் வாங்க – எல்லா வேலைகளையும் அவனே செய்வான்.

கனகசபை தான் சைக்கிள் ஓட்டப் பழகியதோடு தன் மகன் பழகியதை ஒப்பிட்டார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே, அப்போது அவர் எஸ்.எஸ்.சி, படித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்குச் சைக்கிள் பாலபாடம் தொடங்கியது.

நிலாக்குடம் பாலைக் கொட்டிக் கொண்டிருந்த பங்குனி மாதத்து இரவு. அவரை வண்டியில் ஏற்றி, இருக் கையில் அமர்த்தி, கைப்பிடியைப் பிடிக்கச் செய்து பின்னால் ஒருவரும், இரு பக்கங்களிலும் ஒவ்வொருவராக இன்னும் இருவரும் அவர் அமர்ந்திருந்த துவிச்சக்கர வண்டியை உருட்டி ஓட்டினார்கள். குண்டும் குழியுமாகக் கிடந்த கொட்டியாபுரத்து வீதிகளில் வேகமாக கதவைத் தள்ளிக்கொண்டு வந்தவர்கள் “கீழே பார்க்காதே. முன்னே பார்” என்ற எச்சரிக்கைகளோடு திடீரென

கைவிட்டபோது அவர் ஏறி ஓடிகொண்டிருந்த வண்டி குழியில் விழுந்து…

முழங்கைகளிலும் கால்களிலும் இரத்தம் பொசியும் சிராய்ப்புக் காயங்கள்…

சுதாரித்துக் கொண்டு எழுந்தபோது நண்பர்கள் மீண் டும் அவரை வண்டியில் ஏற்றி உருட்டித் தள்ளி ஓட்டித் தனியே அவரை ஓட விட்டு

மூன்றாம் இரவுதான் அவருக்குத் துவிசக்கர வண்டி யோட்டும் கலை கைவந்தது. அக்கலையைக் கற்றுத் தந்த ஆசான்களுக்கு மூன்றாம் நாள் அவர் வீட்டிலே விருந்து பிட்டும் கோழிக்கறியும்…

ஆனால் எந்தக் குருநாதரும் தம் மகனுக்கு அக்கலை யைக் கற்றுத் தரவில்லை. தான் வண்டியைக் கொண்டு வந்து வைத்ததும். அதை எடுத்துக்கொண்டு வீட்டுச் சுவரையோ வேலிக் கதியால்களையோ பிடித்துக் கொண்டு, தானாகவே அக்கலையைக் கற்றுக் கொண் டான். இப்போதெல்லாம் துவிசக்கர வண்டியில் ஏறிக் கொண்டு சிட்டாகப் பறக்கிறான்.

அந்தக் காலத்திலே நான்கூட அப்படித்தான். பாடசாலைக்கு மட்டுமல்ல; வடக்கே தம்பலகாமத்துக் கோணேசர் திருவிழாவா, தெற்கே வெருகற் சித்திர வேலாயுதர் கோயிற் திருவிழாவா, ஏன் தொலைவிலுள்ள மட்டக்களப்பு மாமாங்கத்திற்குக் கூடச் சைக்கிளிற் சென் றிருக்கிறேன். எனது சொந்த வண்டி! ஆம் அந்த வருடம் கோடை வேளாண்மை வெட்டியதும், என் தந்தையார் எனக்கொரு புத்தம் புதிய சைக்கிள் வாங்கித் தந்தார். றலி சைக்கிள், அது எனக்குச் சத்ரபதி சிவாஜியின் குதிரை யைப்போல…

அந்த றலி சைக்கிளைத்தான் நான் எவ்வளவு கவன மாகப் பாதுகாத்தேன். அதன் கைப்பிடிப் பகுதியில் முகம் பார்க்கும் வட்டக் கண்ணாடி. கைப்பிடியின் மையத்தில் டைனமோ லைற்றுக்கு மேலாகப் பறக்கும் பாவனையில் அமைந்த கழுகு. கைப்பிடியின் இரு அந்தங்களிலும் கணீர் என்று ஒலிக்கும் மணிகள். சைக்கிளின் முன் சட்டமாக அமைந்த குழாயில் அழுக்குப் படியக் கூடாதே என்ற சிரத்தையோடு, ஜப்பானிய நீச்சலுடை அழகி, சில்லின் அச்சுகளிற் புழுதிபடியா வண்ணம் தானாகவே துடைத் துக் கொள்ளும் பட்டுக் குஞ்சம். இருக்கையை மூடி மெத் தென்றிருக்கும் முயற் தோலுறை…

இதோ இந்த வண்டியிலுங்கூட இந்தச் சாதனங் களெல்லாம் அமைந்துள்ளன. ‘பாவம்! அவன் தனக்குக் கிடைக்கும் சில்லறைகளை எல்லாம் இந்த வண்டியைச் சிங்காரிப்பதற்கே செலவிடுகிறா 1 681 . ‘ என்று எண்ணிக் கொண்டே கனகசபை எதிரே கிடந்த சாணிக்குவியலைத் தன் வண்டிச் சக்கரங்கள் தீண்டாதவாறு, ஒடித்துத் திருப்பி, கட்டைவண்டித் தடத்துப் பட்டு மண்ணிற்சிறிது ஓடவிட்டு, மீண்டும் மேட்டிலே ஏறிக் கொண்டபோது, பட்டுக்குஞ்சங்கள் சக்கரத்திலே ஒட்டிய புழுதிமண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தன.


நான் பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்ட போது, எனக்கு எங்கோ தொலை தூரத்தில் உத்தியோகம் கிடைத்தது. அதனால் அப்பா வாங்கித் தந்த வண்டியும் பயனற்றதாகிவிட்டது. அதை என் தம்பி எடுத்துக் கொண்டான்

நீண்ட காலத்தின்பின் ஊருக்கு மாற்றலாகி வந்த போதுகூட எனக்குச் சைக்கிள் வண்டி அத்தனை அவசிய மானதாகத் தோற்றவில்லை.

ஆனால் நீண்ட காலத்துக்குப்பின் விழித்துக்கொண்ட அரபு நாடுகள், தம்பலத்தை உணர்ந்து கொண்ட யானை களாக எண்ணெய் விலைகளை உயர்த்திய போதுதான், ஒவ்வொரு நாளும் போக்குவரத்திற்காக ஆறு ரூபாய் அழ வேண்டியிருக்கிறதே என்று ஏங்கிச் சைக்கிள் வண்டியைப் பற்றிச் சிந்தித்தேன்.

ஆனாற் சம்பளத்தில் முழுதாக ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடிக்க முடியுமா? அந்தச் செப்படி வித்தையைச் செய்ய எந்தக் குருநாதரும் உபதேசிக்கவில்லையே.

கடன் சபைக்கு விண்ணப்பித்தேன். கந்தோருக்கு நான்கு தடவைகள் சென்று, கடன்சபைக் காரியதரிசியைப் பிடித்துச் செய்யவேண்டிய சடங்கையெல்லாம் செய்து முடித்துக் கடைசியாய்க் கையில் எழுநூற்றைம்பது ரூபாய்க் காசோலை கிடைத்தபோது வருடம் மூன்று ஓடி விட்டது!

ஆனால் எழுநூற்றைம்பது ரூபாய்க்குப் புதுச் சைக்கிள் வாங்க முடியுமா? ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மகன் அரியம் ஆயிரம் ரூபாய்க்குக் குறைய எந்தச் சைக்கிளுமே வாங்க முடியாது என்று அறுதியிட்டுச் சொன்னான்.

இந்த ஞானம் ஏன் கடன் சபையினருக்குத் தெரிய வில்லை! மீதிக்காசைச் சேகரித்து ஒரு சைக்கிள் வாங்கி விட வேண்டும் என்று துடித்தேன்.

ஆனால் அந்த எழுநூற்றைம்பது ரூபா சந்திக்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்புக்களை என் மனைவி அடுக்கினாள்.

இரண்டாந் தடவை எஸ்.எஸ்.சி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மூத்த மகனுக்கு நூறுரூபா அப்பிஸிக் கேஷனுக்கு வேணும்!

வங்கியில் அடைமானமாக இருக்கும் மூத்த மகளின் வளையலை மீட்க ஐந்நூறு ரூபா வேண்டும்.

தனக்கு ஒரு நூல் சேலையாவது வாங்க வேண்டும்! முடிவாகச் சைக்கிள் வாங்கும் எண்ணத்தையே கைவிட வேண்டியதாயிற்று.

இம்முடிவினாற் பாதிக்கப்பட்டவன் சின்ன மகன் அரியந்தான்! புதுச் சைக்கிள் ஒன்றின் சொந்தக்காரனாகி விடலாம் என்ற ஆசையில் மண் விழுந்ததை அவனாற் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நானும் நாளாந்தம் போக்குவரத்திற்கு ஆறு ரூபாய் அழ வேண்டியிருக்கிறதே என நொந்தேன். இதை நிவர்த்தி செய்ய என்னால் எடுக் கக் கூடிய லீவு முழுவதையும் எடுத்தேன். அதைத் தவிர வேறெந்த வழியும் எனக்குத் தெரியவில்லை.

காலம் ஓடிக்கொண்டேயிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ‘யூனிசெப்’ நிறுவனம் அவருடைய பாடசாலைக்கு ஒரு சைக்கிள் வண்டி தருவதாகக் கந்தோரிலிருந்து அவருக்குக் கடிதம் வந்தது!

நான் மகிழ்வுடன் கந்தோருக்குச் சென்றேன். கந்தோரிலே கையெழுத்திட வேண்டிய பத்திரங்களிலெல் லாம் ஒப்பமிட்டுப் புத்தம் புதிய சைக்கிளைக் கையேற்ற போது சாயந்தரம் ஐந்து மணியாகி விட்டது!

காலையிலே பட்டிணத்திற்குப் புறப்பட்டு வந்த போது பையிலே இருபது ரூபாய் இருந்தது. மதிய உணவு, தேநீர் என்று அது கரைந்த பின்னர் பையிலே சில ரூபாய் கள்தான் பல்லிளித்தன. ஆனால் அதையிட்டுக் கவலைப் படவில்லை. மகனின் இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதியைப் போலச் சைக்கிளிலே ஆரோகணித்து இருபது மைல்களை அனாயாசமாகக் கடந்து வீட்டை யடைந்தபோது இரவும் இன்னமும் இளமையாகவே இருந்தது!

அதிகாலையில் எழுந்தபோது, பஸ்ஸிற்கு ஆறு ரூபாய் வேண்டுமே என்ற நித்திய விசாரம் இல்லை. பஸ் ஸிற்குக் காத்திருக்க வேண்டியதில்லை. மெயின்ரோட்டிலி ருந்து பாடசாலை வரை ஒரு மைல் நடக்க வேண்டிய தில்லை. மீண்டும் இரண்டே கால்மணி பஸ்சைப் பிடிக்கப் பாடசாலையிலிருந்து மெயின்றோட் வரையும் நடக்கத். தேவையில்லை.

ஆம்; எத்தனையோ பிரச்னைகளை அச் சைக்கிள் வண்டி தீர்த்து வைத்தது. அவரைப் பொறுத்த அளவில் அந்தச் சைக்கிள் குருடனுக்குக் கிடைத்த கோல்!

“இந்த மாதிரிச் சைக்கிள் ஊரிலே ஒருத்தரிட்டையும் இல்ல. ‘ஏவண்’ கொம்பனிதான் இந்த ‘பியூக்’ கையும் செய்திருக்கு. ரயர்கூட இந்தியன் ரயர். நம்மட லோட்டஸ்’ மாதிரி இல்ல. நல்லாப் பாவிக்கும்.” என்று வண்டியின் ரிஷி மூலத்தையே கண்டுபிடித்துச் சொன்னான் அரியம்.

சைக்கிள் சில் வளையத்தோடு ஒட்டிக்கொண்டு தூசு துடைக்கும் பட்டுக் குஞ்சம், சில்லுகளின் அச்சிலே சுழலும் துடைப்பான் சரிகை, இருக்கையையும் கைப் பிடியையும் இணைக்கும் இரும்புக்குழாயிற் சுற்றப்பட்டி ருக்கும் நைலோண் நார், ஆசனத்தில் மெத்தென்றிருக்கும் றப்பர்க் கவசம், எல்லாமே அவன் பூட்டிய அணிகலன்கள் தான்!

குழிகளில் இறங்கி, திட்டிகளில் ஏறி வண்டி ஓடிக் கொண்டு – இல்லை நடந்து கொண்டிருந்தது. சென்ற ஆண்டு நடந்த மகளின் திருமணத்தின் உறவினர்களோ, நண்பர்களோ செய்யாத வேலையை இந்தத் துவிசக்கர வண்டி செய்திருக்கிறது! அதன் கைப்பிடிகளைப் பற்றிக் கொண்டு அவர் ஓடிக் கொண்டிருந்தார்!

ஆம்; அந்தத் திருமணத்தின்போது அயற்கிராமங்களி லிருந்த உறவினர்களுக்கெல்லாம் திருமண ஓலைகொண்டு சென்றது. வாழைக்குலைகளையும். தாமரை இலைகளை யும் சுமந்து வந்தது. மணவறைச் சோடனைப் பொருட் களைச் சுமந்து வந்தது. எல்லாக் கருமங்களையும் அது கர்ம யோகியாய்ச் செய்திருக்கிறது.

பிரியப் இன்னமும் சில நாழிகைகளில் அதனைப் போகிறோமே என்ற எண்ணம் ஆசிரியரின் கண்களிற் கண்ணீரையே வரவைத்துவிட்டது

பாடசாலையை அடைந்த ஆசிரியர் கலங்கிய கண் களைச் சால்வையாற் துடைத்துக் கொண்டார். சைக் கிளை உருட்டிக் கொண்டு தெருப்படலையைத் தாண்டி நடந்தார்.

அவரின் பிரதம உதவி ஆசிரியரான விஸ்வலிங்கம் நான்கு வகுப்புக்களோடு மாரடிப்பதில் தம்மையே மறந்து வராகக் கரும் பலகையில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

பாடசாலைக் கட்டிடத்திற்கு வெளியே சடைத்து நின்ற ஆத்தி மரத்தின் குளிர் நிழலிலே வெண்மணலில் வீற்றிருந்த சிறுவர்களுக்கு ஆசிரியை பாட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சிறந்த நல்ல சைக்கிள் வண்டி
சீமையிலே செய்த வண்டி

‘ஆஹா! தமிழாசிரியரான கவிமணிக்கும் என்னைப் போல ஒரு அனுபவமா?’ என்றெண்ணிக் கொண்ட கனகசபை சைக்கிளை ஸ்ராண்டில் நிறுத்தியபோது விசுவலிங்கம் திரும்பிப் பார்த்தார்.

“பெரியையா வாறார்” என்ற மாணவர்களின் ஆர்ப்பரிப்புக்கிடையில், விசுவலிங்கம் சொன்னார்:

“நீங்கள் இன்றைக்கே வருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை.”

“எப்படி வராமலிருப்பது? சைக்கிளைத் தர வேண்டாமா?”

“அதற்காகவா வந்தீர்கள்?”

“நேற்றே நான் இதைத் தந்திருக்க வேண்டும். ஆனால் பிரியாவிடை பைவங்கள் எல்லாம் முடிய நன் றாக இருட்டி விட்டது அதன் பிறகு பஸ்ஸும் இல்லை. அதனாற்தான் சைக்கிளைக் கொண்டு போனேன். இதற் கான உரிமை நேற்றோடு எனக்கில்லை. சரி மாஸ்ரர் இந் தாருங்கள் சைக்கிள் திறப்பு”

திறப்பை நீட்டிய ஆசிரியர் சால்வையாற் கண்களை ஒத்திக் கொள்கிறார்.

“ஏன் மாஸ்ரர் அவசரம். இருங்கள் தண்ணி குடிச்சிற்றுப் போகலாம்.”

“இல்ல மாஸ்ரர். எனக்கு வேல கிடக்கு. இப்ப சுந்திக்கு நடந்தாற்தான் பத்து மணி பஸ்ஸைப் பிடிக்கலாம்”.

விசுவலிங்கம் திறப்பை வாங்கிக் கொள்கிறார். கைக் கோலை இழந்துவிட்ட குருடன் போல, ஓய்வு பெற்ற ஆசிரியர் பாடசாலை வளவைத் தாண்டித் தெருவிலிறங்கிப் பிரதான வீதியை நோக்கி நடக்கையில் அவர் கண்கள் பனித்திருந்தன.

– தினகரன் 1982

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *