பனி இறுகிய காடு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 2,136 
 
 

1 – 7 | 8 – 13

8

புதிய வேப்பமரம் ஒன்று ஆவேசமாக வளர்ச்சியில் இருந்தது. அவனை விட சற்று உயர்த்தில் இருந்தது. அதன் கீழே பாசிபடிந்த கற்களின் குவியல். நடுவில் செயற்கை என்று சொல்லத்தக்க ஒரு பொருள் நிற்பது அவன் கவனத்தை கவர்ந்தது. கரிய நிறத்தில் தியானத்தில் இருக்கும் புத்தனின் சிலை. செம்மண் படிவால் அதன் கரிய நிறம் துலக்கமாகத் தெரிந்தது. தோள்கள் சற்று அதிகமாக அகன்று மெல்லிய ஆடை மேலே இருக்கிறது என்கிற அடையாளக் கோடுகளுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.

அருகில் செல்லமுடியாத அளவிற்கு அதனைச் சுற்றி நிறைய முட்செடிகள் நிறைந்திருந்தன. ஏதோ ஒரு வெறியில் முட்செடிகளை தள்ளியபடி முன்னே சென்றான். நெற்றியில் தியான குறியும், கைநடுவில் சக்கரக் குறியும் இருந்தன. கண்கள் தாழ இருந்ததால் கீழே நோக்குவது போன்றிருந்தது. சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும்போது ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாக தோன்றும். அவன் உயரத்தில் இருந்த புத்தரின் தலையில் சுருட்டை முடி அடையாளமாக செதுக்கப்பட்டிருந்தது. நத்தைகள் ஊர்வது போன்று தலைமுடியில் அலங்காரம்.

நீண்ட நேரம் தியானத்தில் இருக்கும் அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே வர இருபது அடி வரை முட்கள் அடர்த்தியாக் இருந்தன. வெளியே வந்து முட்செடிகளை வெட்டி எடுக்க ஆரம்பித்தான். முக்கிய வேலையில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்ளும்போது ஏற்படும் ஆழ்ந்த அமைதி மனதில் தோன்றியது என்ன வேலை செய்கிறோம் என்பதை மறந்திருந்தான்.

இளங்காலை அது என்பதை இதமான சூரிய ஒளியில் முட்களின் அடர்த்தி குறைவாக தெரிந்தது. நீராகாரத்தை குடித்துவிட்டு வயலுக்கு போக கிளம்பியிருந்த அக்காவு, உள்ளே தேடி சிறு அருவாளும், மண்வெட்டியையும் கொடுத்துவிட்டுச் சென்றான். அவன் பிள்ளைகள் அவனை கண்டு நின்று பார்த்துவிட்டு பள்ளிக்கு சென்றன. மல்லி அவனை ஒரு அரசு அதிகாரி என்று நினைத்துக் கொண்டாள். அவனுக்கு விருப்பமற்றதைச் செய்ய, அவனுக்கு எதிரானதைச் செய்யப் பயந்தவளாக எதையும் கேட்காமல் இருந்தாள்.

அருவாளால் செடிகளின் அடிபாகத்தை முதலில் வெட்ட வேண்டும் என்று சற்று நேரம் கழித்துப் புரிந்து கொண்டான். உடலில் வியர்வை பெருக ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்திருந்தான். முள் செடிகளில் கருவேலமும் நெருஞ்சியும் அதிகம் இருந்தன. அடர்த்தியான பச்சை இலைகளின் நடுவே முட்கள் மறைந்திருந்தன. வேலிக்காத்தான் செடியின் முட்கள் நீண்டு அவன் கைகளை பதம்பார்த்தன.

வெய்யில் சற்று ஏறியிருந்த சமயத்தில் மல்லி ஒரு சொம்பில் கஞ்சியை எடுத்து வந்து ஒரு கல்லின் மீது வைத்துவிட்டு “கஞ்சி இருக்கு எடுத்துக்குங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அவன் தலை தூக்கி பார்த்தபோது இருபது சதம் தான் முடிந்திருப்பதை அறிந்தான். பாறையில் இருந்த கஞ்சி சொம்பு அவன் கண்களில் சிறு ஒளிக் கீற்று போல தெரிந்தது. வெய்யிலில் அதன் ஒளி அருகில் செல்லச் செல்ல மங்கியது. எடுத்து குடித்ததும் அவன் அடைந்த சோர்வை மீட்டுக் கொண்டான்.

கம்பங்கஞ்சியில் வெங்காயமும் மோரும் விடப்பட்டிருந்தது. அதை குடித்ததும் வயிறு மிக அடர்த்தியடைந்ததாக உணர்ந்தான். அக்காவு சென்றது, குழந்தைகள் பள்ளிக்குச் சென்றது அவன் நினைவிற்கு வரவில்லை. மதியம் வெயில் அவனை அதிக வெறி கொள்ள வைத்ததும், சற்று அமைதியடைந்து சூழலை யோசிக்க ஆரம்பித்தான்.

சட்டையை கழற்றிவிட்டு மீண்டும் வேலை செய்ய தொடங்கினான். பனியன் உடம்புடன் வேலை செய்ய தொடங்கியதும் வேர்வை உடலில் ஒட்டுவது குறைந்திருந்தது. அங்கிருந்து காற்றில் வேர்வை ஆவியாவதை உணர்ந்தான். அவன் மூச்சுக் காற்றை அவனே கேட்பது முதல் முறை என தோன்றியது. மூச்சுக் காற்று மிக நெருக்கமான தன் மனதுடன் பேசுகிறது. மூச்சின் வேகம் அதிகரிக்க மனம் வேகமாக யோசிக்க செய்கிறது. முன்னமே எது தேவை என்பதை உடல் அறிந்து தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்கிறது. கையில் இருந்த அருவாள் அவன் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு கைகளின் வழியே சென்று புற்களையும் முட்களையும் அறுத்து தள்ளியது. மீதம் இருக்கும் வெளியே தெரிந்த நிலத்தை மண்வெட்டியால் அள்ளி எடுத்துத் தனியே போட்டான்.

அருகே செல்லச்செல்ல மலத்தின் வீச்சம் அதிகரித்தது. மரத்தின் பின்னே மலம் கழிக்கும் இடம் இருந்தது, அதன் பின்னே சிறுகுளம். அங்கே கழித்துவிட்டு குளத்தில் கழுவினார்கள். அன்று காலை அவனும் அக்காவுவும் சற்று தொலைவில் இருந்த மற்றொரு காட்டிற்கு சென்று மலம் கழித்துவிட்டு ஒரு ஓடையில் கழுவினார்கள். இந்த இடம் குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானதாக இருந்தது. இவ்வளவு அருகில் இருக்கும் இடத்தை அக்காவு வராததிலிருந்து தெரிகிறது.

உடைந்து கிடந்த மண்பானையை எடுத்து குளத்தில் தண்ணீர் மொண்டுவந்து சிலையை கழுவினான். செம்மண் விலகத் தொடங்கியது. வைக்கோல் நாரை வைத்து தேய்த்து கழுவினான். வெள்ளை கல் போன்று நிறம் மாற, சூரிய வெளிச்சத்தில் சற்று நேரத்தில் காய்ந்து காய்ந்த இடத்தில் வெண்ணிற கோடுகள் எழுந்தன.

சிலை முன்னே நீண்ட இடம் அதை அணுகுவதற்கு தோதாக இருந்தது. அங்கிருந்த மக்களுக்கு இப்படி ஒரு சிலை இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் உண்மைத் தன்மையும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கண்களை மூடி தியானத்தில் பல ஆண்டுகள் அல்லது நூற்றாண்டுகளாக காத்திருந்து தன்னை வெளிப்படுகிறார். தன்னுடன் தன் நோக்கத்தையும் அவர் காட்டுவதாக இருக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோயில் இருந்திருக்கலாம். விகாரை எனப்படும் கோயில், அதை ஏதோ மன்னனோ அல்லது பெரிய ஞானியோ அவர் தேவைக்காக கட்டியிருக்கலாம். சிறு குடிகள் கொண்ட தியான மண்டபமும், பள்ளியும் இருந்திருக்கலாம். அந்த குளம் பெரிய இடத்தை ஆக்கிரமித்திருக்கலாம். அழகிய தாமரை மலர்ந்திருக்கும் குளமும் அருகில் தோட்டமும் இருக்க வேண்டும்.

விகாரை சூறையாடப்பட்டிருக்க வேண்டும். கைவிடப்பட்டு காலமாற்றத்தில் இடிந்து விழுந்திருக்கும். சிறுசிறு அலகுகளாகப் பெயர்ந்து ஓவ்வொன்று விலக உள்ளிருந்த தெய்வம் சிலையாக மாறிவிட்டிருக்கும். யாரோ ஒருவர் எதற்கோ என்று குளத்தின் கரையில் தூக்கி வைத்திருக்கிறார். மரங்கள், செடிகள் சூழ்ந்து நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் புத்தருக்குத் தெரியாது யாரோ ஒருவன் தன்னை மீண்டும் தூய்மை செய்து வழிபடுவதற்கு ஏற்பாடு செய்வான் என்று.

கம்பீரமும் அழகும் கொண்டிருந்தது சிலை. நத்தை சிகைக்கு மேலே தாமரை மொட்டு ஒன்று நின்றிருந்தது. புருவங்கள் வளைந்து உள்ளே நெற்றிப் பொட்டின் கீழ் இணைந்திருந்தன. மூக்கு சிதிலமடைந்து உடைந்திருந்தது. உடைந்த சில்லு இங்கு கிடக்கலாம். காதுகள் அழகிய வடிவாக வளைந்து கீழ்பகுதி ஓட்டையாக நீண்டிருந்தது. கழுத்தில் வளையங்கள் மாட்டப்பட்டது போன்று வரிசை மடிப்புகள். உடலில் ஒருபக்கம் மூடப்பட்ட ஆடை அழகிய மடிப்பாக செதுக்கப்பட்டிருந்தது. வயிறு லேசாக பருத்து, கைகள் ஒன்றன்மேல் ஒன்றாக இதழ்கள் போல விரிந்திருந்தன. மெல்ல இதழ்களை விரித்து சிரிக்கும் பாவனை முகத்தில் தெரிந்தது. நீண்ட பாதையை நன்கு கூட்டியதில் நடக்கும் இடமாக மாறியிருந்தது. அவன் நினைத்ததைவிட அதிக மெருகுடன் அந்த இடம் துலக்கம் பெற்றுவிட்டது.

தராசின் மேல்கீழ் ஆடல்போல மனம் ஆடி நிலைபெற்றது. இந்த இடத்தை மனதில் நினைத்தது போன்ற பிரமை தன்னை சூழ்ந்திருந்ததை ஒரு கணத்திற்கும் குறைவான நேரமே அறிந்திருந்தான். அம்மாவின் கனிந்த உருவம் என்றுமில்லாத வகையில் மனதில் நிழலாடியது.

அம்மாவுடன் தனித்த நீண்ட வாழ்க்கையில் அவளை அறிந்த மிக மெல்லிய தருணங்களை ஒன்றிணைந்து மலர்ச்சரம்போன்று கூடியபடி வந்தது. அப்பா இறந்ததை அவள் நினைவு கூர்வதேயில்லை. எந்த இடத்திலும் அப்பாவை விட்டுக் கொடுத்துப் பேசியதுமில்லை. தன் வாழ்வின் மிக உன்னதம் அவர் என்கிற எண்ணம் அவள் மனதில் இருக்கிறது. அதைத்தான் அவள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். லட்சிய வாழ்க்கை வாழ்வது போலத்தான் அவளுக்கு இந்த வாழ்க்கை. எதையும் தனித்தே செய்ய வேண்டும் என்கிற வெறி அவளுக்கு உண்டு. அப்பா இறந்த நினைவு நாளை மட்டும் அரிசியும் பருப்பும் சேர்த்த கஞ்சி கொடுத்து நினைவு கூர்வாள்.

வெய்யில் சற்று இறங்கியிருந்த மதியத்தில் அணில்களின் கீரிச்சிடல்களுடன் இருந்த ஒரு அரசமரத்தின் கீழ் அமர்ந்திருந்தான். கீரிச்சிடல்கள் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தன.

9

நீண்ட பித்தளைப் பாத்திரம், அதன் காதுகள் அசைவில் கணீரென்ற ஓசைகள் வெளியாகும். அதை கஷ்டப்பட்டு கொல்லையில் பெரிய விறகடுப்பில் ஏற்றியிருந்தாள் அம்மா. கொதிக்கும் களத்தில் அரிசி, பயத்தம்பருப்புடன் இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் என்று மணக்கும் பொருட்களுடன் இறக்கிவைத்து. சற்று ஆறியது, சிறிய பாத்திரத்தில் எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு வாசலில் வந்து வைத்துவிட்டாள். சின்ன சொம்புகளில் நிரப்பி குழந்தைகளுக்கு முதலில் அளித்தாள். அதிலும் ஆண் பிள்ளைகளுக்குதான் முதலில் அளித்தாள்.

“அக்கா எனக்கு கொடுக்கா” என்று குமுதா கேட்டாலும், “இருடி பசங்களுக்கு கொடுத்துட்டு உனக்குதான்.”

“ஏம்மா முதல்ல பசங்களுக்கு கொடுக்கணும்” என்று தனியாக கேட்டிருக்கிறான்.

“குடும்பத்துக்காக வாழ்ந்து சாவுற ஆம்பள புள்ளைங்களுக்கு நாம எதாவது நன்றிக்கடன் செய்ய வேண்டாமா, பசங்க இப்ப நல்லா இருந்தாதானே பின்னாலே எல்லாரையும் காப்பத்துவாங்க”

பெரியமனிதனாகத் தன்னை நினைத்துக் கொண்டு கொடுக்கும் லாவகத்தைப் பெற்று வைத்தியும் தன் பங்கிற்கு சிறு போனையில் அள்ளி ஊற்றி வரிசையில் அடித்துக் கொள்ளும் பிள்ளைகளுக்குக் கொடுத்தான். யாரோ கஞ்சியை கீழே சிந்தியதும் அம்மா பதறிவிட்டாள். பலமாகச் சத்தமிட்டாள். பிள்ளைகள் பயந்து நடுங்க, “அம்மா, எப்படியும் சிந்தத்தாம்மா செய்யுது, இவங்க அடிச்சிபிடிச்சு இழுக்குறாங்க” என்றான்.

“இது அப்பா, அப்பாவ எல்லோர் கால் மிதிபட விடுவோமா.”

நீர் முட்டிய கண்களோடு கஞ்சியை பத்திரமாகப் பிடித்தான். அப்பாவின் உடலை நாம் எல்லோருக்கும் உணவாக்குகிறோம். அப்பா தன்னை உணவாக்கிக் கொள்கிறார். தான் உண்டு பெருகிய உடலைக் கூரிட அனுமதிக்கிறார். திறந்த கண்களில் சிரிப்புடன் தன் உடலை அளிக்கிறார். அப்பாவின் ஊன் தானமாக வெளிவருகிறது என நினைத்து இரவில் அழுது கொண்டிருந்தான். மஞ்சள் காமாலை நோய் அம்மா செய்த வைத்தியத்தில் தீரவில்லை. அந்த குற்றஉணர்ச்சி அவளுக்கு இருந்தது.

மூடியிட்ட பெரிய பாத்திரத்தை இடுப்பில் வைத்து வலது கையில் கஞ்சி எடுக்க கரண்டியும் அதை ஊற்றிக் கொடுக்கச் சொம்பும் எடுத்து அருகில் உள்ள கோயிலுக்கு சென்றாள். எதிர்படும் மனிதர்களுக்கு தன் கணவனின் இறப்பைச் சொல்லி அங்குவரும் மனிதர்களுக்கு கொடுத்தாள். அந்த சித்திரம் வைத்தி மனதில் பதிந்து அப்பாவை நினைக்கும்போதெல்லாம் அச்சித்திரம் வந்துவிடும்.

அன்பு வழியும் கைகளால் சிரித்த முகத்துடன் அளிப்பதை யாரும் வேண்டாம் என சொன்னதில்லை. கடைசியாக அம்மாவின் உதட்டில் ஒரு சொல் மிச்சமிருக்கும். “இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க”

“போறும்மா போறும்மா” என்பார் அந்த மனிதர்.

“நல்லா இரு தாயி உனக்கு இனிமே ஒரு குறையும் வராது”

“இதோ இதுதாங்க என் புள்ள இவனையும் வாழ்த்துங்க”

“நல்லா இரு மகனே, அம்மாவ கண்கலங்காம நல்லா பாத்துக்கப்பா”

கோயில் குளக்கரையில் அமர்ந்துக் கொண்டாள். படிகளில் இறங்கிவரும் ஏறிவரும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கு அளித்தாள். இல்லை என்று சொல்லும் ஒரு நாள் வாழ்வில் இருக்காது என்று நினைத்தான்.

“அம்மா கைவலிக்குதுமா எவ்வளவு நேரந்தான் கொடுக்கிறது”

“அப்பாவுக்கு நீன்னா உசுரு, நீ பொறக்குறத்துக்கு முன்னையே நீ விளையாட பொம்மை வாங்கி வெச்சிருந்தாரு, டிரஸ்ஸு வாங்கி வெச்சிருந்தாரு, நீ பொறக்குறவரைக்கும் கூட அவரு இல்ல, அவருக்காகத் தான் நீ இத பண்ற”

“மகேஷுபய கிண்டல் அடிக்கிறாம்மா”

“அப்பாவுக்கு வந்த மாதிரி யாருக்கும் வரக்கூடாது, உன்னைய விட்டுட்டு போன மாதிரி எந்த அப்பாவும் போகக்கூடாது அதுக்குதான் பண்றோம்”

“அப்பா இத பாப்பாராம்மா”

“ஆமா அவரும் மேகமா மேல இருந்து எந்த வருஷமும் விடாம செய்யதப் பாத்துகிட்டே இருப்பாரு, குடிக்கிற மக்கள் மனசு குளிர்ர மாதிரி அவரு மனசும் குளிரும்”

சொற்களற்று அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். வியர்வை வழிந்து கோடுகளாக மாறியிருந்த முகம் அன்பும் அசாத்திய பொறுமையும் கூடியிருந்த முகம் கொண்ட அவளது கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டான்.

“எத்தன பேரு மனசு குளிருதோ அத்தன நாளு அப்பா சந்தோஷமா இருப்பாரு”

அழுதுக் கொண்டிருந்தான் வைத்தி. “அப்பா மாதிரி நானும் செத்துடுவேனாம்மா”

சற்று அதிர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, “அப்படி இல்ல, நீ அப்பா ஆயுசையும் வெச்சு ரொம்ப நாள் இருப்ப”

“அப்படியா”

“ஆமா அப்பாவோட வயசு, அனுபவம், சந்தோஷம் எல்லாம் உனக்கு வரப்போவுது”

நிலைகொள்ளாமல் தவித்தான். நிலமெங்கும் நீர் கொண்டு தெளித்தது போன்ற குளிர்ச்சி. நீரின் கனம்கூட நிலம் இளகி தன்னை உணவாக்கி கொடுக்கும் அழகு. மனிதர்களின் மென்கரங்கள் தோளின்மீது பட்டு அன்பை பரிமாறும் நெகிழ்ச்சி. கட்டியணைத்த மனிதர்களின் அகத்தை நினைத்துக் கொள்கிறான். எத்தனை இனியது இந்த உலகம், எங்கும் அன்பு நிறைந்து வழிந்தோடுகிறது. எதையும் வீணாகாமல் பருக துடித்தது அவன் மனது. அம்மாவின் உருவம்தான் அவர்களை கனிந்த மனிதர்களாக மாற்றியளிக்கிறது.

அவன் நண்பர்களுக்கு அம்மாவைக் கண்டால் பயம் கலந்த மரியாதை வந்துவிடும். அவள் வார்த்தையை மீறமுடியாமல் தலையசைக்கும் போது நினைத்துக் கொள்வான் எப்படி அம்மாவால் இது சாத்தியமாகிறது என்று. அக்காவு மாதிரியான முரட்டுச் சிறுவர்கள் அம்மாவின் முன் அடங்கிய காளையின் உடல்மொழியுடன் நின்றிருப்பார்கள்.

அக்காவுவின் சிறிய உருவம் இன்னும் சிறுத்து சிறுநாய் குட்டிபோல் ஆகிவிடுவான். வனவிலங்கின் தாழ்ந்த தலையுடன் நிலையான கண்களுடன் பேசினான்.

“அக்கா எனக்கு கணக்குப் பாடம் சொல்லித் தருவீங்களா”

“அதுக்கென்னடா, வீட்டுக்கு வா, சாயந்தரமெல்லா இருட்டுற வரைக்கு வைத்திகூட படிக்கலாம்”

அக்காவு சொன்னது போல வீட்டிற்கு வந்தான். மடித்த தமிழ் புத்தகம் அவன் கையில் இருந்தது. அவன் படிக்காத புத்தகம், அதன் வரிகள் அவனுக்கு பரிச்சையமே இல்லாத புத்தகத்தைக் கற்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான். அதில் என்ன எழுதியிருக்கிறது என்கிற யோசனை அவன் மனதில் இருந்துக் கொண்டிருந்தது. அம்மா புரிய வைக்கும் சமயங்களில் அவன் கண்கள் மேலே சென்று யோசித்துப் பார்ப்பதை கண்டான். கடைசிவரை அந்நன்றியுடனே இருந்தான் அக்காவு.

10

மழை லேசான தூறலுடன் ஓய்ந்திருந்தது. பாதை நனைந்து இறுகி அழகிய வடிவத்திற்கு வந்துவிட்டிருந்தது. அக்காவு வந்து பார்த்ததும் கண்களில் ஆச்சரியம் மிளிர கேட்டான். “நீயேவா பண்ண”

கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து நேரே பார்த்தபடி அமர்ந்திருந்த வைத்தி கேட்டதும் “ஆ…” என்று ஆமோதித்து தலையசைத்தான். கயனி தண்ணீரை பக்கத்தில் கொட்டிக் கொண்டே மல்லி, “அவரு மத்தியானத்துலேந்தே எதுவும் சாப்பிடலங்க” என்று புகாரளித்தாள்.

“ஏன் வைத்தி சாப்பிடல, இல்ல ஏன் கூடயாவது வந்திருக்கலாம்ல, எங்கையாவது வெளியே நடந்து போனாரா மல்லி”

“இல்ல, இத சுத்தம் பண்ணவே அவருக்கு நேரம் சரியா இருந்துச்சு”

“இரு புள்ள, நானும் அவரும் போயி குளிச்சிட்டு வாரோம், அப்புறம் திங்ககிறோம்”

“போயிட்டுவாங்க”

அதே வெள்ளை பேண்ட், மெருன் சட்டையில் இருந்தான் வைத்தி. அவனை குடமுருட்டி கிளையாற்றிற்கு அழைத்துச் சென்றான். ஆற்றில் கொஞ்சமே தண்ணீர் ஓடியது. இருவரும் குளித்து அவன் அணிந்துக் கொள்ள வேட்டியும் மேலே போட ஒரு துண்டையும் கொடுத்தான். வேட்டியில் வைத்தி வேறுமனிதன் போலிருந்தான். நிலைப் பெற்ற கண்கள் சற்று நெகிழ்ந்திருந்தது. வீட்டிற்கு திரும்பும் மாடு போல சகஜ நிலைக்கு சற்று வந்திருந்தான்.

வீட்டில் அவனுக்கு மட்டும் மனையிட்டு இலைவைத்து ஓரத்தில் ஊறுகாயும் ஒரு பொரியலுடன் சோறு வைத்தாள் மல்லி, அக்காவு அருகில் அமர்ந்துக் கொண்டான். சோறு வைத்ததும் சுடுபண்ணிய குழம்பை ஊற்ற மெதுவாக தின்றான் வைத்தி. அவனுக்கு சோறிடுவதை பாக்கியமாக நினைத்திருந்தாள் மல்லி. அவன் உண்டு முடிக்குவரை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியே அவன் பிள்ளைகள் நால்வரும் சோறு உண்டுவிட்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வீடு நிறையும் அமைதி கொண்டிருந்தது.

வைத்தி வெளியே வந்து கை கழுவ, நிலாவும் நட்சத்திரங்களும் சேர்ந்த புதிய உலகம் மலர்ந்திருந்தது.

“பாத்தியா வைத்தி, எப்படி உலகம் மாறிடுச்சுன்னு, வா உட்காரு, என் பிள்ளைங்களும் பொண்டாட்டியும் உன்னைய பத்தி கேட்டுக்கிடே இருக்காங்க, நீ எதாவது சொல்ல மாட்டியானு”. கனவுகள் நீண்டு தொடரும் தூக்கம் போல அவன் பழையதை நினைத்துப் பார்த்தான். மனம் சற்று அலைகள் போல மிதக்க அதில் படகுடன் செல்லும் நீராழத்தை அறிந்த படகோட்டியின் மனநிலையில் இருந்தான்.

இருட்டில் அவன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி வந்து “உங்க பேரென்ன” என்றாள் கோலிகுண்டு கண்களைக் கொண்ட சிறுமி. அவள் அணிந்திருந்த பாவாடையின் பச்சை இலைகளும் சிவப்பு பூக்களும் மறைந்து வெள்ளைப் பகுதி மட்டும் திட்டுதிட்டாக தெரிந்தாள். சற்று துடுக்கான அவள் கண்கள் மின்ன, வெண்ணிற முன்பற்கள் இரண்டும் பளிச்சென்று தெரிந்தன.

“என் பேரு வைத்தியநாதன், உம் பேரு என்ன”

“அமலா”

“அவ அஞ்சாவது படிக்கிறா, இவன் சங்கரு, மூனாவது, இவன் குமரன் ஒன்னாவது, இவன் வரதராஜன் அட்டகிளாசு” அட்டகிளாஸ் என்றதும் வரதராஜன் சிரித்து மகிழ்ந்தான்.

“நாலு பிள்ளைகளா”

“ஆமாம், பொண்ணு மொத தாரத்துக்கு பொறந்தவ, ரெண்டாவது பையன் ரெண்டாம் தாரத்துக்கு பொறந்தவன், இது ரெண்டும் இவளுக்கு”

அவன் திரும்பி பார்த்தபோது நிலைப்படியின் அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் வெட்கம் தெரிந்தது.

“ரெண்டுபேரும் செத்து போயிட்டாங்களா”

“ஆமா, மோதோகாரி செத்துபோயிட்டா, ரெண்டாம்காரிக்கு வேற ஆம்பள தேவையா இருந்துச்சு நானே போன்னு சொல்லிட்டேன். இப்ப மணக்கால் அய்யம்பேட்டையில அவன் கூட இருக்கா, அப்பப்ப போயி பார்ப்பேன்”

அக்காவுவையே பார்த்துக் கொண்டிருந்தவன், “அந்தப் பொண்ணு போனது கஷ்டமா இல்லையா”

“ஏன் கஷ்டப்படனும் அவளுக்கு வேற நல்ல வாழ்க்கை வரும்போதும் போவ நினைக்கிறா அப்புறமாட்டுதான் இவள கட்டிக்கிட்டேன். உறவுகாரப் பொன்னுதான். அவங்க குடும்பம் வறுமையில இருக்கு, சரின்னு கட்டிக்கிட்டேன். நானும் பிள்ளைங்கள பாத்துகனுமே”

“உங்களுக்கு எத்தன புள்ளைங்க பொன்னுங்க” என்றாள் மல்லி, அவள் குரல் திடீரென ஒலித்ததும் திரும்பிப் பார்த்தான்

“ஒரே ஒரு பையந்தான்.”

“பொண்டாட்டி”

“ம் அவளும் இருக்கா”

அவன் பேசாமல் அமர்ந்திருந்தான். சொல்லுவதனால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்கிற எண்ணத்தோடு. அந்த அமைதி சூழல் மாறுவதை உணர்ந்த அக்காவு, “சரி, எல்லாம் சரியாயிடும்” என்றான்.

சற்று அதிர்ந்து தன் கண்களில் நீர் கோர்ப்பதை அறிந்து உடல் விதிர்ப்புடன் அவனை நோக்கினான். அந்த மாலையில் பிள்ளைகள் விளையாடுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அவன் நினைவுகளை அவன் கேள்வி அழித்துக் கொண்டிருந்தது. பரிசுத்தமான அன்பு கொண்ட இப்பிள்ளைகள் எப்படி தன்னை நோக்கின என்பதன் அர்த்தத்தை அவன் சொல்லும் அச்செயல் தடுத்துவிடும் என நினைத்தான்.

உணவுண்ட பிள்ளைகள் வெட்டவெளியில் விரித்த பாயில் பால்நிலவின் வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக உறங்க தொடங்கியிருந்தன. நட்பான பின்னே கதைகள் சொல்லக் கேட்டன. குழந்தைகள் சூழ அமர்ந்த வைத்திக்கு கதை சொல்லுதலே அலாதியாக இருந்தது. சற்று நேரத்தில் தூங்கியதும் அவனை அழைத்துக் கொண்டு குளக்கரைக்கு சென்றான் அக்காவு. அவனுக்கு தன் மேல் இருக்கும் கரிசனம் விருந்தாளி என்பதை தாண்டி நிஜ அக்கறையென வெளிப்பட்டது.

“அக்காவு, இந்த குளம் இரவுல எவ்வளவு அழகா இருக்கு”

அக்காவு அதை பார்த்துக் கொண்டே பக்கத்தில் அவன் அமர்வதற்கு இடமளித்து மண் மேடு ஒன்றில் அமர்ந்தான். அந்த வரிசை முழுவதும் சிறுசிறு பனைமரங்கள் சிறுகுழந்தையின் உயர்த்தில் இருந்தன. “இந்த மரமெல்லாம் வளர்ந்தா இன்னும் நல்லா இருக்கும்ல” என்றான்.

நீர் தெளிந்து பூத்திருந்தது. அதன் மலர்ச்சியில் இரவின் ஒலிகளை உருவாக்கும் காரணி போல இருந்தது. எந்த சலனமுமின்றி ஒரு நீர்நிலையை பார்க்கும்போது ஏற்படும் பரவசம் தான் என தோன்றியது.

“ஏன் அக்காவு அப்படி சொல்ற” என்றான்

அவன் பேசக்கூடும் என காத்திருந்ததுபோல திரும்பி “எல்லாம் சரியாயிடும்னு சொன்னேனே அதுவா” என்றான்

“எனக்கு மூனு பொண்டாட்டி, நாலு பிள்ளைங்க, ரெண்டு அம்மா, வளர்த்தது என்னோட சித்தி, அம்மாவோட தங்கச்சி, அம்மாவுக்கு ஏழு புள்ளைங்க, சித்திக்கு புள்ளையே கிடையாது. கடைசி புள்ளையா அம்மாவுக்கு நா பொறந்தோன்னே தூக்கிகிட்டு வந்துடுச்சு சித்தி. ஆனா கடைசி வரைக்கு என்கிட்ட நா ஒ அம்மாயில்லனு சொல்லல. ஒரு பத்துவயசு இருக்கும்போது, பக்கத்துவீட்டு பையன் “டேய் நீ சித்திக்கிட்ட தான்டா வளர்ன்னு” சொன்னான். அவனுக்கு யாரோ சொன்னது, நா நம்பல, நானும் சித்திக்கிட்ட கேட்கவும் இல்ல, மனசுலேயே வெச்சுகிட்டிருந்தேன்.”

“அம்மாவா வளர்த்த சித்திக்கு அவ்வளவு அன்பு எம்மேல. அவ்வளவு பிரியமா வளர்த்தா, ஒரு சொல்லு என்னைய திட்னதில்ல, நா வெச்சிருக்கிற ரெண்டு ஏக்கரா நிலம், இந்த வீடு எல்லாம் அதோடதுதான். என் சின்னவயசுலேயே என் சித்தப்பா செத்துட்டாரு, சித்தி ஆறு வருஷத்துக்கு முந்தி பெரிய வியாதியோ என்னவோ உள்ளுக்குள்ளேயே இருந்து பொசுக்குனு போயிடுச்சு.”

“சித்தி செத்ததுலேந்து பணம் கொடுடான்னு என் அம்மா கேட்டுக்கிட்டு இருக்கு, என் அண்ணன்களுக்கு அக்காக்களுக்கு கொடுக்கச் சொல்லி இன்னும் பினாத்திக்கிட்டே கிடக்கு”

ஆழ்ந்து யோசிப்பதுபோல அமைதியாக இருந்தார்கள். அதுவரை இருந்த குளம் தன் குளிர்ச்சியை இழந்து மலநாற்றம் வீசும் இடமாக மாறியதை அறிந்தான் வைத்தி.

“எங்கப்பாரு செத்தோன்ன, அவரோட ஒரு அண்ணனுக்கு அவர் பொண்டாட்டிக்கு தெரியாம தனிவீட்டுல குடும்பம் நடத்துனவ என் அம்மா, பணமும் உடல்சுகமும்தான் வாழ்க்கைனு ஆனவ, அது சொல்பேச்சு நா எப்படி கேட்க முடியும். இதவிடவா ஒனக்கு பெரிய கஷ்டம் வந்துடுச்சு சொல்லு”

ஆழ்ந்து யோசிப்பதன் முகபாவனை அக்காவுவின் முகத்தில் வந்ததும் தான் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைத்தான் வைத்தி. வார்த்தைகள் அவனுக்கு பெரிய இடஞ்சல்கள் என்பதை அவனிடம் விளக்க முடியும் என தோன்றவில்லை. சற்று யோசிப்பின் பின் நூலில் மணிகளை கோர்ப்பதுபோல சேர்க்க ஆரம்பித்தான்.

“உனக்கு வந்திருக்கிற பிரச்சனை புறவயமாக தெரியறமாதிரி இருக்கு. அதபத்தி மத்தவங்ககிட்ட பேசறத்துக்கு உன்னால முடியுது. மத்தவங்க தீர்வு சொன்னா அத ஏத்துக்கிறத்துக்கும் உன்னால முடியும். எனக்கு அப்படி எதுவும் சொல்ல முடியாது. கற்பனை உலகத்தை சார்ந்து என் மனதுல இருக்குற சித்திரங்களும் பேச்சுகளும், தொடு உணர்ச்சிகளும் இதுதான்னு அர்த்தப்படுத்தி சொல்லமுடியாது”

ஆழ்ந்த யோசிப்பின் பாவனையில் இருந்து தன்னை விடுவித்து அதிர்ச்சியுடன் அவனை நோக்கினான். அதிர்வின் எந்த சலனமுமில்லாமல் கயிற்றில் நிற்கும் மனிதனைப்போல தன்னையே அவன் நோக்கிக் கொண்டிருந்தான். கயிற்றின் ஆட்டத்திற்கு அவன் கால்களும் உடலும் ஆடி சமன்படுத்தும் முயற்சியில் இருந்தன.

“நேத்து ஒரு பெரிய கனவு வந்தச்சு. கனவுல நான் இருக்கேன் ஆன நாலஞ்சி கேரக்டரா இருக்கேன். ஒவ்வொருத்தரும் வேறவேற ஆளுமாதிரி எதிரெதிரா பேசுறாங்க. யாருக்கும் என்னைய தெரியல, நா யாருகூட என்னயப் பொருத்திகிறதும்னு தெரியல”

“அதுல வெள்ளச் சட்டை அணிர்ந்த ஒருத்தர் மட்டும் பாதாள அறைக்கு உள்ளே நடந்து போறாரு, கையில ஒரு சின்ன டார்ச் இருக்கும். மேலேந்து மத்த நாலும் பேரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அப்பதான் கவனிக்கிறேன் அவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கலர்ல சட்டை போட்டிருக்காங்க”

“உள்ள எப்படி தெரியுமா இருக்கு, வெறும் தூசியால மூடினது மாதிரியான ஒரு இடத்துல டார்ச் வெளிச்சத்துல போனா எப்படி இருக்கும் அப்படி இருக்கு. ஆனா போயிகிட்டே இருக்கேன். கொஞ்ச தூரத்துல இப்ப மேலேந்து மண்புழுவோ பாம்போ ஏதோ ஒன்று நெழிஞ்சு நெழிஞ்சு கீழே விழுகுது. ஒன்னுல்ல பல அப்படி விழுது. கொஞ்சம் உள்ளே போகப்போக விழுகிற எண்ணிக்கை அதிகமாயிக்கிட்டேயிருக்கும். மண்புழுங்க மாதிரி தலையில்லாம இருக்கிற பாம்புங்க கீழே விழுந்து பதறி ஓடுதுங்க”

“கால்ல ஏறிடுமோன்னு பதறிக் குதிச்சு குதிச்சு ஓடுறேன். ஆனா எனக்கு தெரியும் இது கனவுதான்னு. இங்கேந்து தப்பிச்சு ஓட முடியும் தெரியும். நா நிலத்துலேந்து எழுந்து ஓடுனா கனவு சிதெஞ்சு ஒடிடும். நா அதை சிதெயறத விரும்பல்ன்னு நினைக்கிறேன். வேணும்னே எழுந்துக்காம கனவு கலஞ்சிடாம பத்திரமா படுத்திருக்கேன்”

“நா புரிஞ்சுகிட்டது ஒன்னுதான் அது இந்த வாழ்க்கைக்கு புடிச்சுக்க ஒன்னு வேணும். எங்கம்மாவத் தவிர வேறயாரும் அப்டி இருக்க முடியாது. எங்கம்மா போனதுக்கு பின்னாது நான் செத்து மறுபிறப்பு எடுக்கனும். ஏதோ ஒரு கணத்திலேயும் என்ன நா முழுமையா இழக்கனும். இந்த உடல், இந்த மனம் எல்லாமே மறுபிறப்பு எடுத்து புது மனுஷனா மாறனும் அது நடக்குற வரைக்கு நா இப்படிதான் இருப்பேன்னு நினைக்கிறேன். எனக்கு தெரியும் நா செத்தா திரும்பி வரமுடியாதுன்னு, ஆனா “நான்” சாகனும்னு நினைக்கிறேன். நான் சொல்றது என்னைய மட்டும் என்கிட்ட இருக்குற ப்ரக்ஞைய சொல்றேன்”

11

விடியலுக்கான ஒலிகள் கேட்கத் தொடங்கியிருந்தன. துல்லியமான ஒலியின் லயப்பில் ஆழ்ந்திருந்தான். தூரத்து கிழக்கு மேகங்கள் தெளிவடைந்து ஓலைகீற்றுகள் போல துலங்கி வந்தன. காற்று தன் திசை நோக்கி வருவதை கண்களின் மினுக்கங்களில் கண்டான்.

பக்கத்தில் படுத்திருந்த அக்காவு கண்களை கசக்கி எழுந்தமர்ந்தபோது, மணி இப்ப என்ன இருக்கும் என்றான். அக்காவு ஒருபக்க கழுத்தை சொறிந்துக் கொண்டு 5.10 இருக்கும். அவனது சொன்ன துல்லியத்தை எதிர்பார்க்கவில்லை.

“ரொம்ப கரெக்டா சொல்ற”

“ஆமா தினம் இந்த நேரத்துல தானே எழுந்திருக்கிறேன்”

நேற்று பேச்சின் நீளம் சற்று அதிகமானதும் அதனால் அயர்ச்சியும் தொய்வும் ஏற்பட்டு சட்டென படுத்துவிட்டான் அக்காவு. அவனிடத்தில் பாய் சுருண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் அப்படியே தூங்கியிருந்தான். வைத்தி அமர்ந்திருந்து பார்த்தவன் பின் குளக்கரைக்கு சென்று உலாவிய பின்னும் தூக்கத்தின் அசதி அவனுக்கு தோன்றவில்லை. லேசாக குளிர ஆரம்பித்தபோது வந்து அவன் பக்கத்து பாயில் படுத்து வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

தூக்கம் மெல்லிய விலகல் போன்றிருந்தது. சிறிது நேரம் மட்டுமே நிகழும் அது பின் நாள் முழுவதும் முழு விழிப்புடன் இருந்தான். நிலத்தில் நாயின் கால்கள் பிராண்டும் அசைவுகள் மனதை உலுக்குவதுபோல பிரக்ஞை இருப்பதை அவன் பல நேரங்களில் அறிந்திருந்தான். ஏதோ ஒரு சிந்தனை என்று மட்டுமே நினைத்திருந்தான். ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்கள் மனதின் அடுக்குளில் நிகழும் சேகரம் போல விழிப்பு அவனிடம் இருந்தது. ஒவ்வொன்றாக அறியவும் ஒவ்வொன்றாக விடவும் முடிகிறது. சொற்சேர்க்கைகளை வைத்து அறிந்தவற்றை புரிந்துக் கொள்ள எத்தனிப்பான்.

அம்மாவிற்கு ஏற்பட்ட முதல் காயம் நினைவிற்கு வந்தது. ஒரு சைக்கிள். ஓட்டியவன் சிறுவன், அதிவேக, ஆவேச ஓட்டத்தில் இடையே அம்மா கவனமற்று நுழைகிறாள். லேசாக வண்டியின் பின் பக்கம் அவள் கால் முட்டியை இடிக்கிறது, ஒரு காலை பதறி தூக்க நிலைகுலைந்து பின்பக்கம் விழுகிறாள். விழுந்த இடம் செங்கல் அடுக்கி வைத்த இடம் கைகால் சிராய்ப்புடன் மண்டை உடைகிறது.

இலகுவாக அதிலிருந்து தன்னுடலை மீட்க முடியும் ஆனால் அம்மா ஒரு குழந்தையின் தடுமாற்றம்போல முதிர்ச்சியின்மையுடன் விழுகிறாள். தன்னை தன் கால்களில் பிணைத்து எழுந்து நிற்க தெரியாமல் மெதுவாக தலைமட்டும் தூக்கி பார்க்கிறாள். வைத்தி ஓடி அவளை தூக்கிப் பிடித்தான். தான் மனிதனாகவும் அம்மா குழந்தையாகவும் ஆன தருணம்.

அம்மாவை தள்ளிவிட்ட சைக்கிள்பையனை அடிக்க கிளம்பினான். அவன் வேகம் கண்டு அவனே “என் மேல் தப்பில்ல அந்த அம்மாதான் பின்னாடி பார்த்துகிட்டே வந்தாங்க” என்றான் அவசர அவசரமாக. அப்போது அவன் ஆத்திரம் தீரவில்லை. அவன் கைகள் பல்வேறு அடிகளை அவன் மேல் பாய்ச்சியிருந்தன. யாரோ சிலர் தடுத்து, “அம்மாவப் பாருப்பா” என்றார்கள்.

அம்மாவைக் குழந்தையாக பாவிக்கும் ஒரு இடம் தன் வாழ்வில் வரும் என நினைத்திருக்கவில்லை. அன்று முதல் அம்மா குழந்தையாக ஆன தினம். அவன் மனதில் அப்படிதான் ஆகிப் போனாள். அன்றிலிருந்து அம்மாவின் பெண்வாசனை மாறிவிட்டிருந்தது, குழந்தை வாசனை கொண்டிருந்த உடலை நுகரத் தொடங்கியிருந்தான்.

காலை மல்லி கொடுத்த கஞ்சிக்கு பின் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு சிலை பாதையை தூய்மைபடுத்த கிளம்பினான். மல்லியும், அக்காவுவும் நின்று பார்த்து சிரித்துக் கொண்டனர். நான்கு பிள்ளைகளும் பள்ளிக்கு போனபிறகு, அக்காவுவும் கிளம்பிச் சென்றான். அவனுக்கு இன்று நகரம் வரை சென்று உரமும் பூச்சிமருந்து வாங்கிவரும் வேலை இருந்தது. அவன் வேலையாள் மருதுவுடன் கிளம்பிவிட்டான்.

மனித நடமாட்டமற்ற காலையாக மாறியதும் தூக்கம் வரும் அசதி ஏற்பட்டது. மல்லி கைகளில் கூடையும் கயிற்றையும் வைத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டையை கழற்றிவிட்டு பனியன் கால்சராயில் வேலையை தொடங்கியிருந்தான். அவன் அணிந்திருந்த கால்சராய் இப்போது முழுமையாக பழுப்பு நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. உப்புநீர் சேர்ந்து காய்ந்தது போல வெள்ளைவெள்ளையாக திட்டுகள் தெரிந்தன. கட்ட சரிவரவில்லை என்பதால் அக்காவு கொடுத்த வேட்டியை வேண்டாம் என்று சொல்லிவிட்டிருந்தான்.

மதியம் மூன்று மணிக்கு பொருட்களோடு திரும்ப வந்தான் அக்காவு. வந்ததும் வைத்தியை அழைத்து குளத்தில் குளிக்க வைத்து கட்டாயப்படுத்தி வெள்ளை வேட்டியை அணிவித்தான்.

வீட்டிற்கு வந்து இருவரும் சாப்பிட்டார்கள். சாப்பாட்டில் தன்னை மறந்தவனாக வியர்வை வழியும் முகத்துடன் அமர்ந்து அவசரமாக உண்டு கொண்டிருந்தான். உணவு நிதானமாக உண்பது தன் வேகத்திற்கு குறை என்பது போல வேகமாக உண்டபடி இருந்தான். தன் தாயின் நினைவு வந்துவிடக்கூடாது என்கிற அவசரத்தில் வேகமாக முடித்துவிட்டு பாதையைச் சரிசெய்ய ஓடிவிடவேண்டும் என நினைத்தான்.

“வைத்தி, கொஞ்சம் பொறுமையா சாப்பிடு நாம ஒரு இடத்துக்கு போறோம்” என்றான். தன்னை வீட்டிற்கு அனுப்பும் திட்டம் அவனுக்கு வந்துவிட்டது என புரிந்து கொண்டவனாக, நிதானமாக உணவுண்டபின் எழுந்து வெளியே போனான்.

கிளம்பி வேறு எங்கும் சென்றுவிடக்கூடும் என்பதால் வெளியே வந்த அக்காவு, “இரு, நாம ஒருத்தர பாக்கப் போறோம். அவரும் உன்கூட படிச்சவராம் பேசனும்னு சொன்னாரு” என்றான்.

சற்று முகம் மலர்ந்து “சரி போவோம்” என்றான்.

நீராவி ரயில் போல மெதுவாகத்தான் கிளம்பினான் அக்காவு. வேண்டுமென்றே சற்று தாமதப்படுத்துகிறான். அவன் துள்ளல்களில் சிறுபதற்றம் இருந்தது. புதிய வேட்டியும் சட்டையும் அணிந்திருப்பதில் ஒரு முக்கிய இடத்திற்கு செல்கிறான் என்று காட்டின.

நீண்ட மணியோசை ஒன்று எழுந்து நின்றது. எங்கோ பாங்கு ஒலிக்கும் செய்தி கேட்டது. அவனை அக்காவு அழைத்து செல்லும் போதே பக்கத்தில் வந்து முக்கிய வேலையாட்டிருக்கு என்று கேட்டான் மாரி. அவனுக்கு எதையும் கேட்காமல் இருக்க முடிவதில்லை. “ஆமா விலகு நாங்க கிளம்புறோம்” என்று நடக்கத் தொடங்கினான் அக்காவு. லேசாக இருட்டிக் கொண்டு வந்தது வானம். காற்றில் வேட்டி பரபரக்க அக்காவு பின்னாலேயே சென்றான். அக்காவு அழுத்தமாக மடித்து கட்டிய வேட்டி சட்டையில் வேகமாக நடந்துக் கொண்டிருந்தான்.

சுற்றி மட்கிய நிறத்து காய்ந்த வைக்கோல் பரந்துகிடந்த நிலங்களில் நடுவே பெரிய சாலையிலிருந்து வளைந்து ஒற்றையடி சாலை உள்ளே சென்றது. வரிசையாக மரங்கள் அடர்ந்த சாலையின் முடிவில் குடிசையும் அதன் முன்னே கிணறும் இருந்தன.

குடிசை ஒரு கோயிலென பிறகு உணர்ந்தான் வைத்தி. அதன் முன் சட்டையில்லாத வேட்டிமட்டும் அணிந்த வெண்தாடி வெள்ளை தலைமுடியும் கொண்ட மனிதர் குடிசை பக்கத்து நடையிலிருந்து வெளி வந்தார். அவர் கையில் வைத்தியத் தேவைகளுக்கான பச்சை இலைகள் இருந்தன. அதை இப்போதே பறித்து வருகிறார் என தோன்றியது.

அவரை பணிந்து வணங்கினான் அக்காவு. “இவன் என் சிநேகிதன், ஒரு சின்ன பிரச்சன, அவன் அம்மா செத்துப்போனதிலேந்து ஒரு மாதிரியா இருக்கான். அதான் உங்களப் பாத்துபோலாம்னு” என்றான்.

அவர் கண்கள் அவனை லேசாக தொட்டுச் சென்றன. வைத்தி அவசரமாக “அதெல்லாம் ஒன்னுமில்ல” நெளிந்தபடி பதிலளித்தான். பள்ளி நண்பன் என்று சொன்னது பொய்யாக இருக்கும் என அவன் நினைத்திருந்தது சரியாக இருந்தது.

“எனக்கு இன்னைக்கு மூலிகை அரைக்கிற வேலை இருக்கே” என்றார்.

அக்காவு யோசித்த முகத்துடன் இன்னைக்கு “இன்னிக்கு அவரு ஊருக்கு போறாரு” என்றான் மெதுவாக. புரிந்துக் கொண்டவர் போல தலையசைத்து “உள்ள உட்காருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இரவின் சாயல்கள் பெருகிவரும் நேரம், பெரிய உருண்டை பல்பு உயரத்தில் எரிந்தது. அதன் வெளிச்சம் மஞ்சள், இளம்சிவப்பு நிறங்களை வெளிப்படுத்தின. உள்ளே வந்த போது மாறியிருந்தார். கழுத்து மணிகளின் ஓசை மிக மெல்லியதாக வைத்தியின் உள்ளத்தில் ஒலித்தது. அவ்வோசையை பின் தொடர்ந்தால் அவர் கைவேலைகளின் வேகத்தை அறியமுடியும். கண்களை மூடிக் கொண்டான் வைத்தி. முழுமையான இருள் பிரதேசம். அவன் இருப்பது அவனுக்கே தெரியவில்லை.

12

பற்களை கடிக்கும் ஓசை கேட்டபோது கண்களை திறந்து பார்த்தான் வைத்தி. சாமி அமர்ந்திருந்த இடத்திற்குப் சற்று பின்னால் இருந்த திரை விலக்கப்பட்டு பாம்புப்புற்று ஒன்று ஒராளடி உரத்தில் இருப்பது தெரிந்தது. அவன் முன்னால் பூமியில் புதையுண்டு வெளியே முக்கோணமாக தெரியும் ஒரடி உயர கற்கள் இரண்டு தெரிந்தன. அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு பளபளப்புடன் காட்சியளித்தன.

அக்காவு அவன் பின்னால் நின்றிருந்தான். இரவுவிளக்கின் வெளிச்சத்தில் தெரியும் காட்சிகளில் எலி ஓடுவது போல பார்வையில்படுவனவற்றை மனம் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தது. உள்ளே நீரில் அமிழும் பந்துபோல அது வெளியேற துடித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் இறந்து, பிறந்து வந்த ஒவ்வொரு நாளையும் அவன் எண்ணிக் கொண்டிருந்தான். கடந்த நான்கு நாட்களாக வீட்டில் இல்லை. அலுவலகத்தில் இல்லை, தெரிந்த மனிதர்களை சந்திக்கவில்லை.

புதிய மனிதர்களும் புதிய காட்சிகளும்தான் உள்ளத்தை நிறைந்திருக்கின்றன. வேறுவேறு உலகத்தில் வாழ்ந்துவிட்டது போன்ற பிரமை. சொற்களாலும் பேச்சுகளாலும் செயல்களாலும் எல்லாம் புதியனவை.

இந்த நான்கு நாட்கள் ஒரு யுகம் போன்றிருக்கிறது. புதிய பயணங்களில் கூட முன்பே திட்டமிட்டவையால் எப்போது எந்த ஊர், எப்போது உணவு, எப்போது தூக்கம் என்று அறிந்திருந்தான். ஆனால் இப்போது பெற்றவை இலக்கற்ற பயணியின் அனுவபங்கள். தூரத்தில் தெரியும் காட்சிகளை வைத்து தொடரும் பயணம். அருகில் சென்றதும் அடையும் பரவசமும், பதற்றமும், பக்தியும் அவன் முன்பு அறிந்திராதவை. வாழ்வில் மறக்க முடியாத ஏதோ ஒன்றின் பிரதிபிம்பம்.

கண்களை திறக்க முடியவில்லை. கண்களில் சாமி தெளித்த நீர், கோர்த்து மேலே ஒரு படலத்தை உருவாக்கிவிட்டிருந்தது. திறந்தாலும் அந்நீரில் வழி தெரியும் பிம்பம் ஆழ்கிணற்றின் இருள்போலிருந்தது.

ஒருமுறை அறுபதடி ஆழ் பாழுங்கிணற்றில் இறங்கியிருக்கிறான். வழுக்கும் வளையமுனைகள் கொண்ட சுவற்றின் கால்களை இரு பக்கத்தில் வைத்து கைகளை அதன் பக்கத்தில் வைத்து அடுத்த வளையத்திற்கு சென்றான். மேலே தலைதூக்கி பார்க்காதவரை தொடர்ந்து இறங்கிவிடமுடியும். இருள் சூழ்ந்து வர பல்வேறு ஓசைகள் உயிரைக் குடிக்கும் ஆசைகள் அதற்கு உண்டு என அறியும் கணத்தில் இறங்கினான். தளங்கள் கீழே செல்லச் செல்ல சிறுபறவைகள், பூச்சிகள், சிலந்தி, தவளை, பாம்பு, வெளியேறிச் சென்றன. சில அவனை எதிர்க்கும் பொருட்டு தலைதூக்கி ஆவேசத்துடன் நின்றன. இறங்கத் தொடங்கியபின் பயமில்லை. அதுவரை இருந்த பயங்கள் மறைந்திருந்தன. செயலில் மட்டுமே அவன் கவனம் இருந்தது. முக்கியமாக அவன் செய்ய நினைத்த ஒன்றிற்காக இறங்கினான்.

அவன் ஆசையாக வளர்த்த டாமி கிணற்றில் விழுந்திருந்தது. பிறந்த கண்களை திறந்த மூன்று நாட்களில் அதை அழைத்து வந்திருந்தான்.

காலையில் கண்களில் பீளை இருக்கும், கண்களை திறக்கமுடியாமல் முனகிக் கொண்டு குருடனின் அசைவுகளை போன்று கிடக்கும். துடைத்து, குளிப்பாட்டி, பால் தந்து மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

அம்மா வந்து பதறி, “அசிங்கம் புடிச்ச புள்ளடா நீ, எவனாவது பொறந்த குட்டிய இப்படி வெச்சிருப்பானடா, அது இன்னும் வயத்துக்குள்ளேயே இருக்குன்னு நினைச்சுக்கிட்டிருக்கும்டா, அது உடம்புல இன்னும் கர்ப்பவாசனை இருக்கு பாரு, எங்கேந்துடா எடுத்துகிட்டு வந்தே, தாயி பாத்துச்சுன்னா, உன்ன கடிச்சு கொதறிடும், எங்கடா இருந்துச்சு”

பொறுமையாக தலைதூக்கிப் பார்த்தான். “மடத்து தெரு முட்டு சந்து கடைசியில ஒரு வேலி இருக்குல்ல அங்க இது இருந்துச்சு, போய் பாக்கச் சொல்ல என் கூடவே வந்துச்சு அதான் தூக்கிட்டு வந்துடேன்.”

சட்டையை தூக்கி வயிற்றில் வைத்து சட்டையால் மூடிக் கொண்டான். அவன் உடல் வெப்பத்தில் முனகியபடி இருந்தது.

“அய்யோ கருமம் புடிச்சவனே, அது அம்மா அங்கதான் இருக்கும், வாசன கண்டுபிடிச்சு வந்துடும்”

“நா தூக்கிட்டு வரப்ப அதுவும் கூடவே வந்துச்சு, தெரு தாண்டுனோன்ன அது நின்னுகிச்சு”

குதித்துக் குதித்து ஓடும் அழகில் அதன் பின்னே ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருந்தான். மாம்பழம் உருள்வதுபோல ஓடிக் கொண்டிருந்த டாமி கிணற்றில் இருந்த சிறு படிக்கட்டில் ஏறி சமதளத்தில் நடப்பதாக நினைத்து இருளில் விழுந்தது.

அம்மாவை எதிர்ப்பார்காமல் கிணற்றில் இறங்க தொடங்கினான். கிணறு ஒரு சிறு குகைபோலதான் இருந்தது. அவன் இறங்க இறங்க டாமி அவன் ஓசையையும் வாசனையையும் கிரகித்து குரலெழுப்பியது. “இதோ வரேன் டாமி பயப்படாதே” என்று கூறியபடி இறங்கினான். டாமிக்கு அவனுக்கும் ஒரு நல்ல தொடர்பிருந்தது. ஒவ்வொரு சொல்லையும் அது புரிந்துக் கொண்டது.

மழைபெய்யும் மண்வாசனை உள்ளே இருந்தது. கிணற்றில் இறங்க இறங்க அவன் வேகம் கூடியது. எதையும் யோசிக்காத வேகம். மேலிருந்து ஒலிகள் கூம்புவடிய ஸ்பீக்கரிலிருந்து கேட்கும் ஒலிகள்போல கேட்க தொடங்கின. அதில் பயமும் பதற்றமும் இருந்தது. யாரோ யாரையோ அழைக்கிறார்கள்.

கணுக்காலளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. நிலவு மட்டும் இருக்கும் இருண்ட வானம் போல இருந்தது கிணறு. அந்த வட்ட ஒளி மேலிருந்து வருவது. அதை வைத்தே நீரின் அசைவுகளைக் கொண்டு டாமியை கண்டுபிடித்து தூக்கினான். அதன் பயந்த ஒலி அடித்தொண்டையின் கீறல்கள் போல ஒலிக்க, “பயப்படாதே டாமி, பயப்படாதே, நாந்தான் வந்துட்டேன்ல ஏன் பயப்படற,” என கட்டியணைத்தான். முழுமையாக நனைந்திருந்த டாமி அவன் உடலோடு ஒட்டிக்கொண்டது.

கிணற்றின் வீச்சத்தை அப்போதுதான் உணர்ந்தான். கால்களில் ஏதோ ஊர்வதுபோலிருந்தது. வேகமாக மாற்றிவைத்தான். தலைதூக்கி மேலே பார்த்தபோது வானஒளியில் சுற்றிலும் தலைகள் மட்டுமே தெரிந்தன. பயம் அதிகரித்தது.

தலைகள் தெரிந்த ஆட்டம் அவர்களும் பயந்திருக்கிறார்கள் என்று தோன்றியது. சட்டென ஏறத்தொடங்கினான். டாமியை சட்டையின் உள்ளே நெஞ்சினில் வைத்து, சட்டையை கால்சிராயின் உள்நுழைத்திருந்தான். அது ஒரு சிறுபை போன்று உள்ளேயே இருந்தது.

மேலே ஏறஏற உற்சாகம் கூடியது. விரைவில் மேல் மட்டத்தை அடைந்துவிடுவேன் என்கிற ஆவல். கீழே விழுந்தால் என்னாவது என யோசித்தான். ஆனால் யோசிக்க நேரமில்லை. பரபரக்கும் கைகள் உள் நீட்டி அழைக்கும் ஒலி இப்போது துல்லியமாக கேட்டது. மேலே வந்ததும் அவனை எல்லோரும் வெளியே இழுத்துப் போட்டார்கள். ஹோ என்ற ஒலியோடு “என்னடா இப்படி பண்ணிட்ட” என்று அலறல்களும் கேட்டன. சிலர் மக்களை தள்ளி அமர்ந்திருந்த அம்மாவிடம், “உன் மகன் வந்துட்டான் வந்துட்டான் பாரு” என்றார்கள். கண்கள் சொறுக மயங்கி கிடந்தாள் அம்மா.

“அம்மா” என்ற அவன் குரல் கேட்டு எழுந்து நின்றாள். தடுமாறும் கால்களோடு வந்து அவனை தாக்கினாள். “இந்த புள்ள எனக்கு வேணாம். இந்த புள்ள எனக்கு வேணாம். எப்போ என் சொல்பேச்சு கேட்காம போச்சோ போய் தொலை, போய் தொலை” என்று சொல்லிக்கொண்டே அங்கு கிடந்த ஆடுகட்டும் பெரிய கட்டையை கொண்டு தாக்கினாள். நிலைதடுமாறிப் போயிருந்த சுத்துமக்கள் அவனையும் அவளையும் பிரிக்க பெரும்பாடு பட்டார்கள். அவளது அடி எதுவும் நாயின் மீது விழாமல் இருக்க கவனமாக அணைத்துக் கொண்டான்.

“புள்ளன்ன அப்படிதான் இருக்கும் சம்முகம், கொஞ்சம் பொறுமையா இருக்கு, அதன் புள்ள வந்துட்டான்ல, என்னாயி போச்சு இப்ப வுடு…”

அவள் வீட்டிற்கு போனதும் வேறுமாதிரி ஆனாள் அம்மா, வைத்தியை இறுக கட்டிக் கொண்டாள். “புள்ளய அடிச்சுட்டனா, வலிக்குதா, எம் புள்ளைய இப்படி அடிச்சுட்டேனே நா எவ்வளவு பெரிய ராட்சசி, அய்யோ கடவுளே” என்று கட்டி அங்கங்கே உடலை அழுத்தி அழுதுக் கொண்டிருந்தாள்.

“அம்மா வலிக்கலம்மா, லேசாதான் வலிச்சுது, நா மூச்ச புடிச்சுகிட்டு நின்னேனா அந்த அடி எனக்கு வலிக்கவேயில்லை, பாரு,” கைகளையும் காலையும் காட்டினான்.

கட்டியணைத்திருந்த அம்மாவின் கண்களில் கண்ணீர் வந்தபடி இருந்தது அவளுக்கு. “ஏம்ப்பா இப்படியெல்லாம் பண்ற,” உதடுகளில் அசைவு வைத்து அதைத்தான் கூறுகிறாள் என யூகித்தான்.

13

கண்களில் ஓரங்களை துண்டால் அழுத்தி வைத்து துடைத்தார் சாமி. அவர் சொல்லும் மந்திர வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தன. இதுவரை வெறும் உதட்டசைவாக மட்டும் இருந்தது. நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்து முன் சிகையைத் தள்ளிச் சரிசெய்தார். அவன் முன்னே பித்தளை தட்டில் பணத்தை வைத்தான் அக்காவு. வெள்ளை சாமி திரையை மூடினார். பெரிய திரி விளக்கின் ஒலியில் சற்று துலங்கி வந்தது அறை. வெளியே அக்காவும் வைத்தியும் வந்தார்கள்.

முழுவதும் இருட்டி விட்டிருந்தது. வரப்பு தெரியவில்லை. அக்காவு வைக்கும் கால்களைக் கொண்டு அவனும் நடந்தான்.

“உள்ளே என்ன நடந்தது”

“எதுவும் நடக்கல வா”

இருள் தன்னை விழுங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தான். ஒவ்வொரு துளியும் இருளில் கருமையின் சாயலை பெற்றிருந்தது. நிலவொளியின் மீது ஒரு வெண்படலம் பாதுகாப்பிற்காக இருப்பது போன்றிருந்தது. சுற்றி சுவர்க்கோழிகளின் ரீங்காரம், தவளைகளின் அழைப்புகள், காதோரத்தில் பூச்சிகளின் சிணுங்கல்கள், இவை மட்டும் இல்லையென்றால் இந்த உலகத்தில் அவன் இருப்பதற்கான அடையாளம் எதுவும் அவனுக்கு தெரிந்திருக்காது. நடையை விரைவாக அவன் போட, மெதுவாகவே நடந்தான் வைத்தி.

சில இடங்களில் திரும்பி நின்று வைத்தி வரும்வரை காத்திருந்தான். சில நேரங்களில் பொறுமையை அவன் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கைக்கொள்கிறான் என தோன்றும். அம்மாவின் தன்னம்பிக்கைபோல.

அதுவரை நினைவிலில்லாத சம்பவம் அது. கிணற்றில் குதித்து நாய்க்குட்டியை எடுத்தது அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அவன் செத்துவிடுவான் என்கிற பயம் அவளுக்கு. அச்சம்பவத்தை மறைக்க நினைவுகளிலிருந்து எப்போது மறைத்து வைத்திருந்தான். அம்மாவிற்கு மிகுந்த வலியை கொடுத்தது என்பதனாலேயே அதை நினைப்பதில்லை. நினைவுக் கீறல்களில் அது முக்கியமானது என்பதை ஆழ்தியானம் காட்டிவிட்டது.

அவன் வரப்போவதில்லை என்றால் நான் சாகப்போகிறேன் என்று மண்ணெண்ணை கேனை அம்மா எடுத்ததாக பார்வதியக்கா ஒரு முறை கூறினாள். அவளை அடித்துப் பிடுங்கி வைத்திருந்தார்கள். தன் முடிவில் அவள் உறுதியாக இருந்திருக்கிறாள். அவன் மேலே வரும்போது அவளே நம்பாமல் மயங்கி விழுந்தாள்.

மூன்று வயதில் அப்பாவின் கிருதாவும் மீசையும் புகைப்படத்தில் பார்த்து வியந்தான். அதேபோல் பெரியவனானதும் வைத்துக் கொள்ளப்போவதாக அவன் சொல்லியிருந்தான். அம்மா சிரித்து சிரித்துக் களைத்துப் போனாள். ஆறு வயதில் அப்பா திரும்பி வரப்போவதில்லை என்று அறிந்து கொண்டான். திரும்பிவரமுடியாமை என்ற சொல்லின் அர்த்தம் விளங்கியது. திரும்பமுடியாமை என்பது எதன்பொருட்டு உருவாகிறது. எதைக் கொண்டு அதை அளவிடுவது. சொற்களை தேடித்தேடி களைத்திருந்தான்.

கிழக்கு கரிய வானத்தில் நட்சத்திரம் ஒன்று விலகி நின்றதும் அதிர்ந்து பார்த்தான். வானம் எப்போது போலவே இருந்தது. அதன் அதிர்வுகளில் சிறு மின்னல்கள் தெரித்து மறைந்தன.

வைத்திக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் பிள்ளைபேறு கிடைக்காதபின்னே, மகன் பிறக்க பல்வேறு விரதங்களை இருவரையும் இருக்கச் வைத்தாள். வைத்தியை விரதமிருக்க வைத்து சபரிமலைக்கு அனுப்பினாள். நாற்பத்தியோரு நாட்கள் விரதமிருந்த போது சூரியன் மறைவிற்குபின் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டாள். கருப்பு உடைகள் மட்டுமே அணிய வேண்டும் என்றும் காலை மாலை குளித்து பூஜை செய்யவும் வேண்டும் என்றாள். ஒவ்வொரு நாளையும் அவன் ஒருமையுடன் இருக்க சுவாதியை அவன் முன்னே வரவிடாமல் பார்த்துக் கொண்டாள். திண்ணையில் படுத்து கொல்லையில் குளித்து, உடைமாற்றி உணவுண்டு அப்படியே அலுவலகம் சென்றான். அவள் கொடுத்த உணவைத்தான் மதியமும் உண்ண வேண்டும் என்றாள்.

ஒவ்வொரு நாளும் கூட்டுப்புழுவின் நூல்போல வட்டங்கள் சுற்றி அவனை இறுக்கி வைத்தன. அவனே அதை செய்ய பெரிய பந்துபோல உருமாறினதாக நினைத்தான். கூட்டுப்புழு தன்னுயிரை அதனுள் தக்க வைத்துக் கொள்கிறது. மிக மெல்லிய படலம் உருவாகிவரும்போது அதை ஏற்கும் மனஅமைதி உருவாவது எளிதானதல்ல. உலகத்தைக் காணாமலும் உணவைத் தேடாமலும் அது தன்னை இறுக்கிக் கொள்கிறது. வேண்டிய மட்டும் தன்னை உருமாற்றச் செய்துகொள்கிறது. அதன் உருவத்தை, நிறத்தை, வடிவை அதுவே அப்பருவத்தில் தேர்வு செய்கிறது.

எதன்பொருட்டு செய்கிறது. யாரை திருப்திப்படுத்த, யாருக்கான வாழ்க்கை அது தேர்வு செய்கிறது என்பதை தன் முன்னே இருக்கும் உலகை அது புரிந்து கொள்ளும் நொடியில் மட்டுமே நிகழ்கிறது. புழுக்களின் கூட்டத்திலிருந்து விலகித் தனித்துச் சென்று ஒரு கிளையில் தலைகீழாக தொங்கத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மூடிக்கொள்கிறது. எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை யுகங்கள் என்றுகூட அதற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சபரிமலையில் இறங்கிய கொஞ்ச நேரத்தில் அவன் வந்த கோஷ்டியிடமிருந்து காணாமல் போனான். கூட்டநெரிசலில் அவனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கழுத்தில் அணிந்திருந்த மணிகளின் ஓசையும், சந்தன குங்கும வாசனைகள் நிறைந்த கூட்டத்தில் இருந்தான். கம்பிவேலியாக இருந்த பாதையில் நடந்துச் சென்றார்கள் சாமிகள். அவன் பதற்றத்தை கண்ட அருகில் நின்ற வயதானவர் “என்ன சாமி ஏன் பதட்டமா இருக்கீங்க, உள்ளே போக இன்னும் ரொம்ப நேரமாகும்” என்றார். “இல்ல, என் கூட வந்தவங்க யாருமில்ல, எப்படி போறதுன்னு தெரியல”, சற்று அதிர்ந்த அவர், “அதுதான் ஐயப்பனோட லீலை, கன்னிசாமிகள விடமாட்டான், எப்படியும் கூப்ட்டுருவான், பயப்படாம வாங்க சாமி” என்றார்.

இனி தன் கோஷ்டியைக் காணப்போவதில்லை என்று தோன்றியது. கடைசியாக வந்து வலப்பக்கத்து பாதையில் ஏறியபோது கூடவே வந்தார் பெரியவர். “கன்னிசாமிகளை எப்படியும் பார்க்க வைப்பான், ஆனா அவன பார்த்ததும் வெளியே வந்தா இங்க இருக்கப் பிடிக்காது, உடனே ஓடத்தோணும்” என்றார்.

கூட்டம் கூடியபடியே சென்றது. செல்லும் மனிதர்களின் வேகத்தில் பரவசமும் பக்தியும் கூடிக் கொண்டிருந்தது. வேகமாகச் செல்வதில் சரணங்களின் குரல் உயர்ந்தன. கண்கள் சுழல கால்களின் பலமின்றி உடல் மிதந்து சென்றது. சரணம் ஐயப்பா என்கிற அவனது குரல் அவனுக்கு அன்னியமாக ஒலித்தது. அக்குரலின் புதுமை அவனை ஈர்த்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அதை செய்தபடியே முன்னேறிக் கொண்டிருந்தான். சுற்றுப் பிரகாரத்தை சுற்றி வந்து கடவுளை கண்டபோது அவரின் உருவம் அவனை துணுக்குறவைத்தது. இதுவரை கண்டிராத பரவசத்துடன் உடலில் எல்லா சுரப்பிகள் சுரந்து அவன் உடல் ஈரமாவதை உணர்ந்தான்.

நீண்ட இடதுகை, நீண்டு தரை தொடும் மாலை, மடிந்த கால்கள் எங்கோ பார்த்த ஓர்மையில் உள்ளம் தேடியலைந்தது. விழுந்த பறவையின் துடிக்கும் சிறகுகள்போல மனம் அடித்துக் கொண்டிருந்தது. காணாததைக் கண்டுவிட்ட பரவசம். பார்க்கும் இடமெல்லாம் இது வரை அறிந்துகொண்ட உண்மையை விவரிக்கும் பொருட்கள் நிறைந்திருந்தன. தனக்கும் புதுவாழ்க்கை இறகுகள் முளைத்த கூட்டுப்புழுபோல தலைகீழான உடலை நேராக்குவதுபோல உயர்ந்து நின்றான். அவனைத் தள்ளிச் சென்றது கூட்டம். யார்யாரோ அவனைக் கைவைத்துத் தள்ளினார்கள். அவன் மனம் எங்கோ எப்போதோ நின்றுவிட்டது.

உடலால் உணரமுடியாத வலி. பொங்கிவழியும் பாத்திரத்தை நிறைத்துப் பொங்கி வழியும் நீர்போல மனம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடலும் உள்ளமும் வேறுவேறு தளத்தில் நின்றாடின. ஈ துடிப்பது போலிருந்தது உடல், பல்லியின் அறுந்துவிட்ட வால்போல துடித்துக் கொண்டிருந்தது மனம். பரவசம், பக்தி, மகிழ்ச்சி, இன்பம், போற்றுதல் ஏதோ ஒரு பெயர் அதற்கு.

சிமெண்ட் நடைமேடை வந்ததும் அவன் தன்நிலை கொண்டான். கண் எரிச்சலும் வயிற்று பசியும் தெரிந்தது. வெப்பமான காற்றுவீச்சு புரிந்தது. மனிதர்களின் எச்சில் மல நாற்றம் உணர்ந்தான். “அப்பாடா” என்றிருந்தது.

அவசர அவசரமாக தலை சீவிக் கொண்டான். சட்டையை மாற்றிக் கொண்டு வேகமாக நடக்க தொடங்கினான். தன் கோஷ்டியைத் தேடாமல் கீழே வந்து பஸ் ஏறி அமர்ந்ததும் தூங்கிப் போனான். வீடு வந்தபோது எல்லாம் அப்படியே இருந்தது தெரிந்தது. சுவாதி ஆரத்தி எடுத்தாள். அவள் உதட்டில் சிரிப்பு மலர்ந்திருந்தது. மச்சம் கொண்ட மூக்கு விடைக்க அவனை நோக்கிக் கொண்டிருந்தாள். உதடுகளில் குறும்பான சிரிப்பு. அவனுக்கு மட்டும் தெரியும்படியான சிரிப்பு.

வீடு கலகலவென்று மாறியது. சுவாதி கருவுற்ற நாளில் அம்மா மிகுந்த அன்பும் பாசத்தோடு அவளை அணைத்துக் கொண்டாள். மகன் பிறந்தபோது மணிகண்டனே வந்து பிறந்துவிட்டான் என அம்மா அதிசயித்தாள். வைத்தி தான் சாஸ்திரா என்று பெயரிட்டான்.

“இவ்வளவு நேரமா வாரத்துக்கு, மணி பன்னென்டாவுது” என்றாள் மல்லி. புதிய இடத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது வைத்திக்கு.

“ஆமா அங்க முடிய கொஞ்சம் நேரமாயிடுச்சு” என்றான். “புள்ளைங்க படுத்துட்டாங்களா,” “அவங்க எப்பையோ தூங்கிட்டாங்க,” “சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என்றாள். “ஆமா வைத்தி பசியில இருப்பாரு சீக்கிரம் சோத்த போடு,”

“வாங்க வாங்க”

“வா வைத்தி”

வைத்தி தன் வயிற்றின் மேல் நிற்பதுபோல நின்றிருந்தான். தன் வயிறு கூடும் பெரிய பாறைபோல இருந்தது. தன் மேல் விழும் மழைத்துளி வழிந்து செல்வதை போல உடல் இருந்தது. உடல் தன்னை உணரும் மிகுந்த பசியும் மனம் தன்னை அழைக்கும் நிலைகொள்ளாமையும் உணர்ந்தான்.

சாஸ்திராவும் சுவாதியும் வீட்டு மாடி ஜன்னலோரத்தில் அமர்ந்து தெருவை பார்த்துக் கொண்டிருக்கும் சித்திரம் மனதில் எழுந்தது. அவன் அலுவலகத்திலிருந்து வரும்போது அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் இடம் அது.

கழிந்த இந்த நாட்களை வாழ்நாளில் மறக்க முடியாதவையாக இருக்கும். வீட்டிலிருந்து கிளம்பி இரவில் நடந்து, பேருந்து நிலையத்தில் தங்கி, பால்யகாலத்தில் கழித்த ஊரில் இறங்கி, பால்யகால நண்பனை சந்தித்தது, புதிய மனிதர்களைச் சந்தித்தது, கோயிலை உருவாக்கியது, எல்லாமே கிளைநுனியில் தங்கிய புழுவின் கூட்டுவாழ்க்கை. தவமாய் இருந்து பெற்றவை இவை. இனி எப்போது சோர்வில்லை. சுகமில்லை, துக்கமில்லை, இழப்பில்லை, எதுவுமே வாழ்வின் புதியவையாக மாறிவரும். பருவம் மாறும் பனியால் இறுகிய காடும் மாறும், பூச்சிகள் தங்களை தியானத்திலிருந்து விடுவித்தும் கொள்ளும்.

“அக்காவு எனக்கு ரொம்ப பசியா இருக்கு. வீட்டுல காவலுக்கு ஒரு நாயிருக்கு நா சாப்டோன்னதான் அது சாப்பிடும், எம் மவனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும், அதக் கட்டாம வந்துட்டேன், எம் பொண்டாட்டி எனக்காக ஒரு வரம் கேட்டிருக்கா, அதையும் கொடுக்கணும். நா இப்ப என்ன பண்ணட்டும். ஊருக்கு கிளம்பட்டா?”

ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றான் அக்காவு. சாப்பாட்டு குண்டானோடு மல்லியும் திரும்பிப் பார்த்தாள். அக்காவு வேட்டியை நகர்த்தி கால்சிராயிலிருந்து பணம் எடுத்து கொடுத்து, “கிளம்பு” என்றான்.

(நிறைவு)

– சொல்வனம், இதழ்-285, டிசம்பர் 25, 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *