நிழல் பேசுகிறது!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 2,171 
 

ஒற்றையடிப்பாதையில் பரந்து வளர்ந்து பூத்து காய்த்துவிட்டு, இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து விட்டு மொட்டையாக நின்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தது அந்தக் கொன்றை மரம். சல்லடையில் பட்ட வெயில் போல் மரத்தின் நிழல் மண்ணில் விழுந்தது.

விளையாட்டுப் பருவம் மாறாத; பள்ளிப்பருவம் முடிக்கப்படாத; எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வின் முடிவுக்கு காத்திருக்கும் வேளையில் வாழ்க்கையின் வினாக்குறியை யோசித்து யோசித்து கண்கள் சிவந்தும்; எண்ணெயில் வெந்த பனியாரம் போல் கன்னங்களும்; பாவாடை சட்டையோடு; ரெட்டை சடைப் பின்னலோடு; கண்ணீர் சிந்த தன் மேனியையும், தனது நிழலையும் கொன்றை மர நிழலையும் நனைத்துக் கொண்டு இருந்தாள் ராணி.

இவளது கண்ணீர்த்துளிகள் நிழலைத் தீண்டியதும் நெருப்பில் பட்ட விரல் போல் துடித்தது நிழல்.

நிழல் பேசியது:

ஏய்! பெண்ணே! அழுவதை நிறுத்து. அவளது காதுகள் கவனிக்காமல் கண்கள் அழுது கொண்டே இருந்தன.

நிழல் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தது.

“வேம்பும் கொன்றை மரமும் சூழ்ந்த இந்த ஊரில் தான் நீ பிறந்தாய். சற்று முன் சற்று முன் வரை தான் வரை தான் என்மேல் உன் தோழிகளுடன் ஏறி பூக்களையும் காய்களையும் பறித்து விளையாடினாய். விளையாட்டுப் பெண்ணாக இருந்த நீ அழுவதை எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.

“உன்னோடு பிறந்தவர்கள் ஐந்துபேர் மூத்த அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தைகளோடு பட்டணத்துல இருக்கா. அடுத்தும் ஒரு அக்கா. அவதான் தேவி. இவதான் உன்ன அழவச்சவ. மூணாவதா அண்ணன்; யாருக்கிட்டேயும் பேசமாட்டாரு. கூச்ச சுபாவம் உள்ளவரு. நாலாவதா அக்கா. அவ இப்ப படிச்சுக்கிட்டு இருக்கா. அவ பேரு ரேவதி. அஞ்சாவதா தான் நீ பிறந்தாய். உனக்கடுத்து தம்பி ஒருத்தன் இருக்கான். இதுதான் நீ பிறந்த வரலாறு”

உன்னோட கண்ணீருக்கான வரலாறையும் சொல்றேன் கேளு!

“உன்னோட ரெண்டாவது அக்கா தேவிக்கும் பக்கத்துவீட்டு முருகேசுக்கும் இலைமறை காயாக காதல் இருந்து வந்துச்சு. இவ படிக்காவிட்டாலும் ரொம்பவும் விவரமானவ, முருகேசு வீட்டுக்கும் உங்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னைதான். அதனால உங்க அப்பா அம்மா தேவிய கண்டிச்சாங்க”.

“இந்த நேரத்துல உங்க சின்ன அக்கா ரேவதிக்கும் உங்க மாமன் மகன் சந்திரனுக்கும் படிச்சு முடிச்சவுடனே கல்யாணம் செஞ்சு முடிச்சுடனும்னு பேசி முடிச்சுட்டாங்க. நீயும் ஏழாவது படிக்கும் போதே பெரியவளா ஆயிட்டே. கல்யாணப் பொண்ணுக்கு உள்ள பக்குவம் உனக்கு இல்ல. தேவிய வேற ஆளுக்குத் தான் கட்டித் தருவோம்னு உங்க அப்பா அடிக்கடி சொல்லி வந்தாரு.”

“இந்த நேரத்துல தான் தேவிய, ரொம்ப தூரத்துல இருந்து பொண்ணு கேட்டு வந்தாங்க. உங்க அப்பா வாய்ப்ப பயன்படுத்திக்கிட்டு சம்மதம் சொல்லிட்டாரு”.

“ஊமையா இருந்த உங்க அக்கா முருகேசு கூட கல்யாணம் மூணு நாள் இருக்க ஓடிப்போயிட்டா. விசயத்த கேள்விப்பட்ட மாப்புள்ள வீட்டுக்காரங்க வந்தாங்க”.

“புள்ளயா வளர்த்து வச்சுருக்கீங்க? எங்களுக்குப் பதில் சொல்லியே ஆகனும். பாக்கு வச்சு பரிசம் போட்டு பத்திரிக்கை வச்சாச்சு. இப்பகைய விரிச்சுட்டீங்களே. எங்களுக்கு நஷ்டஈடு கொடுக்குறீங்களா இல்ல உங்க நாலாவது மக இராணிய தர்றீங்களானு” மாப்பிள்ளையோட பெரியப்பா பிடிவாதமா இருந்தாரு.

உங்க அப்பாவும் நஷ்ட ஈடு தரமுடியாதுனு சொல்லிட்டாரு. மூணாவது மக இருக்கும் போது சின்னவள தரமுடியாதுனுட்டாரு.

“என்னய்ய மூணாவது மகளத்தான் அவங்க மாமன் மகனுக்கு கட்டித்தர்றதா சொல்லீட்டங்களாமே. அப்புறம் என்ன” மாப்பிள்ளை வீட்டார் விடுவதாக இல்லை. எல்லாருமா சேந்து உன்ன சின்னபுள்ளனு கூட பாக்காம பழிகிடாவா மாத்திட்டாங்க.

“மாப்பிள்ளைக்கு இருபத்தாறு வயசு, உனக்கு பதினாலு வயசு பாண்டியாட்டம் ஆடவேண்டிய உன்ன நொண்டியாக்கிட்டாங்க. பச்சப் புள்ளய கட்டி; கொடுக்கிறது பாவம்; கொடுமைனு யாருக்குமே தோணல். உங்க அண்ணனும் தலைய சொரிஞ்சுக்கிட்டே இருந்தாரு. கல்யாணப் பேச்சு நடக்கும் போது தேவி ஓடிப்போயிருந்தா பிரச்சினை இல்ல. இது தேவியோட தப்பு. தேவி விரும்புனவனையே கட்டிவைக்க மறுத்தது உங்க அப்பா செஞ்ச தப்பு. ரேவதியும் படிச்சவதானே அவளாவது தடுக்க முயற்சி செஞ்சாளா. இது ரேவதியோட தப்பு. ஊமையாபோனது உன் அண்ணணோட தப்பு. இவங்க செஞ்ச தப்பு எல்லாம் மன்னிக்கமுடியாத குற்றம்”.

சோளைக்காட்டு பொம்மைக்கு சேலை கட்டிய மாதிரி உன்ன மாத்தி கல்யாணம் முடிஞ்சுருச்சு. இப்ப சேலைய வீசி எறிஞ்சுட்டு பாவாட சட்டையோடு அழுதுக்கிட்டு நிக்கிறே. தைரியமா இரு! உன்னோட தன்னம்பிக்கை தான் உனக்கு துணையாவரும். “மரம் அசைய நிழலும் அசைந்தது”.

யாரோ அவள் தோளில் கை வைக்க மெதுவாக திரும்பினாள். கதிர்வேல் வாடிய முகத்தோடு நின்றான். புத்திகெட்டுப்போயி நானும் தப்பு செஞ்சுட்டேன். உன்னக் கலங்காம பாத்துக்கிறது என்னோட பொறுப்பு. அவன் உதடுகள் பேசும் பொழுதே தானாக அவனது விரல்கள் அவளது கண்ணீரைத் துடைத்தன. தன்னோடு அணைத்தவாறு அழைத்துச் சென்றான்.

என் வேதனை என்னோடு போகட்டும். இனியாருக்கும் வேண்டாம். தனக்குள் எண்ணிக்கொண்டாள்.

கொன்றை மரம் அசைந்து அவர்களை வழியனுப்பியது. அவர்கள் நிழலும் பின்தொடர்ந்தது. அவள் அந்த மரத்தின் நிழலை திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்று கொண்டு இருந்தாள்.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

1 thought on “நிழல் பேசுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *