நினைவுமுகம் மறக்கலாமோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 777 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று என்னவோ விடித்தது முதல் மனசு வெகு நிம்மதியாக இருந்தது. வியாதியின் கொடுமை அவ்வளவு தெரியவில்லை. வயிறுகூட ஏதோ லேசாக இருந்தது. ஆஸ்பத்திரிக்காரர்கள் கொடுத்த காலை ஆகாரத்தைச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தேன்.

ராயப்பேட்டை க்ஷடியரோக ஆஸ்பத்திரியில் என்னைச் சோதனை செய்து பார்த்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள். சிறை யில் வியாதி அதிகம் ஆனவுடனேயே சர்க்கார் என்னை விடுதலை செய்துவிட்டார்கள். என்னுடைய வியாதி குடல் க்ஷயம் என்று ஜெனரல் ஆஸ்பத்திரியில் கண்டு பிடித்தார்கள். சிகிச்சையும் நடந்தது. ஆனால் என் பலம் மட்டும் நாளுக்கு நாள் குன்றிவந்தது.

குன்றினால்தான் என்ன முழுகிப்போய்விட்டது என்று எனக்குத் தோன்றியது. வாழ்க்கையிலேயே எனக்கு ஒருவிதமான பற்றும் இல்லை. தேசத் தொண்டோ, நாடு இருந்த நிலைமையில், அவசியம் இல்லாமலே போய்விட்டது. எங்கும் காங்கிரஸ் ராஜ்யபாரம் வகித்த போது தொண்டனுக்கு என்ன வேலை இருக்கிறது? அவனை யார் சீண்டப்போகிறார்கள்? செய்ய வேண்டியதை ஏதோ கூடியவரையில் செய்தாகிவிட்டது என்ற நிம்மதி மனத்தில் இருந்தது. அதோடு உயிர் போனாலுங்கூடப் பாதகமில்லைதான். நோயால் எவ்வளவு நாள் திண்டாடுவது? எதற்காக அப்படித் திண்டாடி உயிரைக் காப்பாற்றுவது? என்றுகூட எனக்குத் தோன்றிவிட்டது.

ஆனால் அன்று ஏன் அந்த நிம்மதி? படுக்கையை விட்டு எழுந்து நடந்து போகலாம் போல இருந்தது. நான்கு படுக்கைகளுக்கு அப்பால் ஒருவன் ஏதோ வலியால் முனகிக்கொண்டிருந்தான். அவனிடம் எனக்குக் கோபங்கூட வந்தது.

‘ஏன் இப்படி ஊளையிடுகிறான்? கூட இவ்வளவு பேர் படுத்துக் கொண்டிருக்கிறார்களே என்ற ஞானங்கூட இல்லையே!” என்று பக்கத்துப் படுக்கைக்காரனிடம் சொன்னேன். அவன் தொல்லை என்னவோ, அவன் பதில் சொல்லவில்லை; உறுமினான். மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பக்கத்திலிருந்து பெண் குரல் ஒன்று கேட்டது. அதைக் கேட்டதுமே பளிச்சென்று எனக்கு நினைவு வந்தது. அது ஞானத்தின் குரல்!

ஆமாம்! எவ்வளவு வருஷங்கள் கழிந்தால் என்ன? வாழ்க்கையில் இடையே எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டால்தான் என்ன? அந்தக் குரலின் ஒலிப்பதிவு என் உள்ளத்தில் ஒரு தரம் ஏற்பட்டுவிட்ட பிறகு உயிர் உள்ளவரை அழியுமா என்ன? அதிலும் அந்த மாதிரி, அவ்வளவு நெருக்கமான வகையில்?

அது அவள் குரல்தான்; சந்தேகமில்லை. அவளுக்குத்தான் அந்தக் குரல் உண்டு. ஆனால், ஞானம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு எங்கே வத்தாள்? ஏன் வரக்கூடாது ? நான் எப்படி வந்தேன்? திருச்சியும் சென்னையும் அப்படி என்ன வெகு துரமா? ஆனால் அவள் திருச்சியை விட்டுப் போய்விட்டாளே, எங்கோ கண்காணாத சீமைக்கு!

கல்யாணமானவுடன் அவள் ரங்கூனுக்கல்லவா போய்விட்டான் கணவனுடன்? எங்கேயோ அவன் ஸ்திரமாக இருக்கப்போவதாக அல்லவா பேச்சு அப்பொழுது? ஆனால் பத்து வருஷங்களில் என்னதான் நடக்கக் கூடாது ?

***

பத்து வருஷங்களுக்கு முன் ஞானம் என்னுடன் படித்துக்கொண்டி ருந்தாள். கல்யாணம் ஆகும் வரையில் படித்தாள். அவளுக்குப் பதினான்கு வயசு அப்பொழுது.

பெங்களூர்ப் பட்டுப் பாவாடையும் மஞ்சள் பட்டுத் தாவணியும் அணிந்திருப்பாள். நீண்ட பின்னலைக் கையில் எடுத்து ஏதாவது விஷமம் செய்து கொண்டேதான் இருப்பாள். குதிப்புத்தான், நடையே இல்லை.

நான் அப்போது மூன்றாவது பாரத்தில் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கும் அதே வயசுதான்; ஒன்றுஇரண்டு மாதங்கள் நான் பெரிய வனாக இருக்கலாம். அந்தப் பருவத்தில், உணர்ச்சிகள் மொட்டுக்களாக இருக்கும். அந்த ‘இரண்டுங் கெட்டான்’ சமயத்தில் ‘காதல்’ என்று சொல்லுகிறார்களே அது இருந்ததாக நான் சொல்லவே முடியாது. ஆனால் நாங்கள் இருவரும் இணைபிரிவதில்லை. பெரியோர்கள் கூடக் கவனித்துக் கண்டிக்கும்படியாக அவ்வளவு தூரம் எப்பொழுது பார்த் தாலும் சேர்ந்தே இருப்போம்.

இப்போது யோசித்துப் பார்க்கும் பொழுது நன்றாகத் தெரிகிறது; எங்கள் பற்றில் வேறுவிதமான ஞாபகம் ஒன்றுமே இல்லை. இருந்திருந்தால் நான் இங்கே சொல்லுவதில் எனக்கு யாதொரு வெட்கமும் இல்லை. நடந்ததை எல்லாங்கூடச் சொல்லி விடுகிறேனே:

‘என்னை நீ தொடக்கூடாது; நீ புருஷப் பிள்ளை’ என்பாள். ஆனால் தொடும்படியாகவே ஏதாவது விளையாடுவாள். தொட்டபிறகு கோபம் கொண்டவள்போல், ‘இனிமேல் உன்னோடு பேசமாட்டேன். போ!! என்பாள். சிறிது நேரத்திற்கெல்லாம். ‘குஞ்சு!” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்துவிடுவாள்.

நன்றாக நினைவு இருக்கிறது: ஒரு நாள் ஏதோ விஷமம் செய்து விட்டு ஓடினாள். நான் துரத்திக்கொண்டு போய்க் கட்டிப்பிடித்து விட்டேன். ஒரு நிமிஷம் இருவருக்கும் ஏதோ ஒரு விபரீத உணர்ச்சி, அவன் முகம் சிவந்துவிட்டது. நான் சட்டென்று அவளை விட்டு விட்டேன். வெட்கத்தைக் கோபமாக மாற்றிக்கொண்டு அவள் வேகமாக நடந்து போய் விட்டாள்.

ஒருநாள் முழுவதும் நாங்கள் சந்திக்கவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது. ஒன்றும் பிடிக்கவில்லை. தனியாகத் திண்ணை ஓரத்தில் இருட்டில் படுத்துக்கொண்டிருந்தேன். யாருக்கும் தெரியாமல் ஞானம் என்னிடம் வந்தாள். அவளைப் பார்த்ததும் நான் கோபம் கொண்டவன்போலப் பாசாங்கு செய்து மௌனமாக இருந்தேன்.

ஞானம் அருகில் வந்து என்னைத் தொட்டுத் தடவினாள். ‘கோபமா, குஞ்சு?’ என்றாள். நான் பதில் சொல்லவில்லை. ‘பேசமாட்டியா?’ என்றாள். விக்கி விக்கி அழுதாள். நான் எழுந்து அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, ‘நான் தொட்டால் உனக்கு என்ன வந்துவிட்டது?’ என்றேன்.

‘அம்மா தொடப்படாது என்கிறாடா. குஞ்சு. இல்லாட்டா நீ தொட்டா என்ன?’ என்றாள்.

ஒரு வாரத்திற்கெல்லாம் அவளுக்குக் கல்யாணம். நிச்சயதார்த்தத்திற்கு முதல்நாள் இரவு என்னைத் தேடிக்கொண்டு மாடிக்கு வந்தாள். கல்யாணச் செய்தியைக் கேட்டதுமே எனக்கு என்னவோ வேதனை. வெட்டவெளியில் படுத்து யோசனை செய்து கொண்டிருந்தேன். ‘குஞ்சு, இனிமேல் நீ நிஜமாகவே என்னைத் தொட முடியாது”, எனக்கு அப்போது திடீரென்று ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. ‘கல்யாணமான பிறகுதானே தொடக்கூடாது?’ என்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டேன். அவள் என்னைத் தடுக்கவில்லை.

***

படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு குரல் வந்த பக்கம் பார்த்தேன். அவள்தான்!

சில நிமிஷங்களுக்குமுன் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்றல்லவா எண்ணினேன்? வாழ்க்கையில் எனக்கும் ஓர் இன்பம் இன்னும் இருக்கிறது. ஞானம் இருக்கும் உலகத்தில் எனக்கும் இடம் இருக்க வேண்டும். எனக்கு அவள் நினைவு இருக்கிறவரையில், அவளுக்கு என் நினைவு இருக்கிறவரையில் உயிர் வாழலாம்.

ஒருவரையொருவர் சந்திக்காவிட்டால் என்ன? சாம்பலின் கிழ்க் கனல்போல அது கிடக்கும். ஒருதரம் ஒரு பார்வை அவள் பார்த்தால் போதும்; அது பளிச்சென்று பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்.

வாழ்க்கையில் இருவரும் கையைப் பிடித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டால் என்ன மோசம்? அதனால் உள்ளம் தடைப்படுமா என்ன? அவள் வார்த்தையொன்று போதாதா, அதைக் கிளறிக் கொள்ளை யிடுவதற்கு?

அவள் முகத்தை நான் மறக்கவில்லை. அவள் குரலைக்கூட மறக்க வில்லை. அவள் நடையே எனக்குத் தெரியும். அவள் என்னை மறந் திருக்க மாட்டான். எப்படி மறப்பான்? மறக்கக்கூடியவாறா நாங்கள் பழகினோம்? வாழ்க்கையின் தொல்லைகளிலும் அவள் என் முகத்தை மறக்க முடியாது. அதன் பெருங்கூட்டத்திலும் அவள் நிச்சயம் என்னை அடையாளம் கண்டு கொள்வாள்.

நான் முன்பு சொன்ன நோயாளியின் அருகில் நின்றுகொண்டிருந்தாள் அவள்; அவன் அவள் புருஷனா? எனக்கு அடையாளமே தெரியவில்லை! அவள் பத்து வருஷங்களுக்கு முன்பு இருந்த அதே சாயலாகத்தான் இருந்தாள். உடைமாற்றத்துடன் ‘என்லார்ஜ்’ செய்ததுபோல இருந்தாள். பின்னலுக்குப் பதிலாக அழகிய கோடரி முடிச்சு. புருஷனுடன் பேசிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தாள்.

‘ஆம் ஆயிற்று! என்னைப் பார்த்துவிடுவாள். அடுத்த நிமிஷம் தூக்கி வாரிப் போட்டுவிடும் அவளுக்கு. ஒருவேளை அலறிவிடுவாள். வாய்விட்டுக் கூட! எல்லோருக்கும் சங்கடமாகப் போகும்’ என்று பயப்பட்டேன். முகத்தைத் திருப்பிக்கொண்டு விடலாமா என்று எண்ணினேன். மனகம் இல்லை, அவகாசமும் இல்லை. அவள் என்னைப் பார்த்தாள்; ஆனால் அவள் பார்வையில் ஒன்றும் இல்லை. அது என்னைவிட்டு நீங்கி மேலே சென்றது. அவள் என்னை அடையாளம் கண்டு கொள்னவில்லை.

‘ஞானம், இதோ பார்! நான் இங்கே இருக்கிறேனே, உனக்கு அடையாளம் தெரியவில்லையா? நான்தான் குஞ்சு. என் முகம் உனக்கு மறந்து போய்விட்டதா? ஞானம்!’ என்று என் உள்ளம் கதறிற்று. ‘இல்லை, இல்லை, யோசனை செய்கிறாள். எங்கோ பார்த்த ஞாபகம் இருக்கிறது அவளுக்கு. அது இல்லாமற் போகுமா? பாவம்! வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களோ…!’ என்று யோசனை சமாதானம் கூற முயன்றது.

அவள் பார்வை மீண்டும் என் பக்கம் வந்தது. அதிலும், அட்டா…!

***

பிறகு எனக்கு நினைவு வத்தபோது படுக்கையில் கிடத்தப்பட்டிருந்ததை உணர்ந்தேன். நர்ஸ் அருகில் இருந்தாள். சற்றுநேரம் கழித்து நர்ஸை விசாரித்தேன்.

‘அந்தக் கேஸ் உபயோகமில்லை என்று சொல்லிவிட்டோம். மனைவி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் விட்டாள். ஏன்? எதற்காகக் கேட்கிறீர்கள்?’

‘அந்த அம்மாள் பெயர்?’

‘ஞானம்பாள்!’

சற்றுமுன்தான் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தேன். எழுந்து உலகில் நடமாடலாம் என்றுகூட எண்ணம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஓய்ச்சல் மேலிட்டுப் படுக்கையில் விழுந்தேன்.

அதனால் என்ன மோசம்? படுத்த படுக்கையானால் தான் என்ன இனிமேல்? வேறு என்ன ஆனால்தான் என்ன?

நினைவு – என்னுடன் அப்படிப் பழகின ஞானத்தின் நினைவு-முகம் மறக்கலாமோ? மறந்தால் பிறகு வாழ்க்கையில் எனக்கு ஒன்றும் இல்லை.

– பாரததேவி, 28.07.1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *