அது ஒரு “கறி”க் காலம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 9,574 
 

முந்தாநாள் தான் இந்தியாவில் இருந்து வந்தேன்.

இந்த இந்தியா பயணத்தில் போய் இறங்கிய முதல் நாள் காலையில் இட்லி குடல் குழம்புடன் ஆரம்பித்து , பயணத்துக்கு முந்தைய தினம் மாரியம்மன் பொங்கலும் , கறி விருந்தும் என்று முடிந்த காலம் முழுவதும் கறிக்காலமாக இருந்தாலும் ( அதிலும் இந்த பொங்கல் வைத்து குழைந்து போன வெள்ளை சாப்பாட்டில் அப்படியே எலும்புக் குழம்பை பிசைந்து அடிப்பது தனி சுவைத்தான் ) , அதற்கும் மேல் என்ற அனுபவத்தை தந்த நாள் தான் இந்த கறிக் காலம் .

அது ஒரு வெள்ளிக்கிழமை ,காலை பத்துமணிக்கெல்லாம் , கதர்சட்டையும் , நெற்றி நிறைய பொட்டுமாக உறவுகள் வந்து விட்டார்கள் . சின்ன மாமனாரின் நண்பர்கள் , ஒரு 2 அடி டிபன் பாக்ஸ் ஐ (நிஜமாலுமே இரண்டு அடிக்கு மேல் இருக்கும் ) கொண்டு வந்து காரில் திணிக்க , காலையில் நடை பயணம் போகும் போது பார்த்த சேவலை , வாங்கி , கறிக்கடையில் அடித்து, வெட்டிக்கொண்டு வந்துவிட்டார் மச்சான் .

நல்ல சேவல் வெடப்பா இருந்தது பார்த்ததுமே முடிவு பண்ணிட்டேன் என்று சொன்னார் , அவர் சொல்ல சொல்லவே சிறிது பசி வந்து விட்டது . ஈரோட்டில் இருந்து காஞ்சி கோயிலுக்கு தொடங்கியது எங்கள் பயணம் .

இவ்வளவு அவசரமாக நாங்கள் புறப்பட்டு போன இடம் , தம்பிக்களை அய்யன் கோயிலுக்கு அடுத்ததாக உள்ள “ஆயா கடை ” – ஒரு சின்ன பலகை பட்டும் தான் உள்ளது . உள்ளே நுழைந்ததும் கூண்டில் உள்ளே நாட்டுக்கோழிகளும் , சேவல்களும் , அதன் எதிர்புறத்தில் அவைகளை சுத்தம் செய்து கொடுக்கும் கறிக்கடை , அதனை தாண்டி ஆள் உயரத்துக்கும் மேல் குவிக்கப்பட்டிருக்கும் விறகுகள் , அதற்கு எதிர்புறத்தில் சின்ன தோட்டம் , அதனை தாண்டினால் வருகிறது மண் அடுப்புகளும் , உணவு அருந்தும் இடமும் . சின்ன வெங்காயங்களும் , வர மிளகாய்களும் கொட்டிக் கிடக்கின்றன .

நாம் கொண்டு வந்த கறி அல்லது அங்கே எடுத்த கறியை கொடுத்து , எவ்வளவு பேருக்கான சாப்பாடு என்று சொல்ல வேண்டும் , நாம் சொன்ன பிறகுதான் சாப்பாட்டிற்கு அரிசியே போடுகிறார்கள் . நல்ல பெரிய ஈயப்பாத்திரத்தில் கறியை கொட்டி , நல்லெண்ணெய் , சின்ன வெங்காயம் , வர மிளகாய் கொண்டு , விறகு அடுப்பு கொழுந்து விட்டு எரிய ஆரம்பம் ஆகிறது சமையல் . கறியை கிளறுவது கூட விறகு குச்சியில் தான் .

45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும் என்பதால் , வெளியே வந்து என்ன செய்வது என்று கேட்டேன் , அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை , காலையிலேயே சொல்லியாயிற்று , நல்ல வாகான இரண்டு ஆட்டுதலைகளை சுத்தம் செய்து வறுத்து , கோபியில் இருந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறான் என் மச்சான் என்றார் சின்ன மாமனார் . கேட்டதுமே எனது கவலை எல்லாம் பறந்தோடி விட்டது . சொல்லி முடிக்கும் முன்னர் அவர் வந்து சேர்ந்தார் .

கறிக்கோழி இரண்டு கிலோ , இரண்டு ஆட்டுத் தலை எப்படியும் இரண்டு கிலோ வந்து விடும் , ஆக நாலு கிலோ கறி சாப்பிட வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால் , வேலையை தொடங்கவேண்டும் என்று இடம் பாக்க ஆரம்பித்தோம் , எதிர்லயே இருந்தது சற்று ஒதுக்குபுறமான இடம் .

வேப்ப மரங்கள் சுற்றிலும் இருக்க , அதன் நிழலில் காரை நிறுத்தி , தலைக்கறியை சுவைக்கும் படலம் தொடங்கியது , பாக்குத் தட்டில் சாப்பிட்டது நல்லதாக போயிற்று ( வாழை இலையில் நம்ம அவசரத்துக்கு சாப்பிட முடியாது பாருங்க , கொஞ்சம் பொறுமையாக சாப்பிட வேண்டும் இல்லையேல் இலை கிழிந்து விடும் , பாக்கு தட்டு அப்படியில்லை , அழுத்தி எடுத்து சாப்பிடலாம் , அதிலும் நீங்கள் மசாலாவை சொரண்டி எடுத்தால் அந்த தட்டில் உள்ள வரிகள் விரல்களுக்கு அழுத்தம் கொடுத்து , இன்னொரு வாய் எடுத்துக்கொள் என்று சொல்லும் ).

வேப்பமரக் காத்து , சுற்றி உள்ள காய்ந்த புல்லிலும் , எருக்களஞ்செடிகளிலும் இருந்து வரும் ஒரு கலவையான வாடை , மணக்க மணக்க காரம் தூக்கலாய் செய்யப்பட்ட தலைக்கறி , அவ்வப்போது எழும் பறவைகளின் சத்தமும் , ஆடு களின் சத்தமும் தவிர , நாமளும் , நம்ம தலைக்கறியும் தான் .

பேசிக்கொண்டே சாப்பிட்டதில் நேரம் போனது தெரியவில்லை , கோழி வாங்கி வேண்டிய நேரம் வந்து விட்டது ( இதில் இருந்து நாலு பேருக்குள் கண்ணா முழி சாப்பிடுவதற்காக நடந்த சண்டை எல்லாம் தனி வரலாறு ).

திரும்பவும் ஆயா கடை – கறி (மனம்) மணம் நேரே அடுப்பில் கொண்டு போய் நிறுத்துகிறது , அவர்கள் கிளறி , கிளறி கொட்டும்போதே மறுபடியும் பசிக்கிறது ,சுட சுட சாப்பாடு , கறி , இவற்றோடு கிடைக்கிறது , பச்சை புளி ரசமும் , தக்காளி ரசமும் , அதிலும் இந்த பச்சை புளி ரசம் இருக்கிறதே அது ரசங்களின் அரசன் . தண்ணி , நுணுக்கமாக நறுக்கிய சின்ன வெங்காயம் , புளி , கொத்துமல்லி தளை , இவற்றை போட்டு பக்குவமாக கலந்தால் தயாராகிவிடும் . வேக வைப்பதெல்லாம் கிடையாது , கலக்கு வதில் இருக்கிறது இதன் சுவை . மொண்டு மொண்டு டிபன் பாக்ஸில் ஊற்றும்போதே நாவு ஊறுகிறது.

பின் அதனோடே கிடைக்கிறது நல்ல கெட்டியான எருமை தயிர். அவர்களே எருமை வளர்த்துவதால் அதிகமாவே தருகிறார்கள் . சாப்பாடு பத்துமா என்ற சந்தேகம் எழுந்ததால் ஓரியாடி ஒரு அரை சாப்பாடு அதிகமாக வாங்கினோம் . நமக்கும் அதிகமாக வாங்கினோம் என்று இருக்கும் அவர்களுக்கும் வியாபாரம் செய்த மாதிரி இருக்கும் அல்லவா ? அதிலும் நான் , சின்ன வெங்காயம் உரித்துக்கொண்டிருந்த ஆயாவிடம் , கடையை பற்றி எழுதுவதாக சொல்லி ஒரு கை நிறைய வெங்காயங்களை தயிருக்கு கடித்துக்கொள்ள வாங்கினேன் , சும்மா கேட்டாலே கொடுப்பார்கள் என்றாலும் , நானும் ஒரு எழுத்தாளன் என்று பதிவு செய்வது முக்கியம் அல்லவா ?

அனைத்தும் வாங்கிவிட்டதால் , சாப்பிடுவதற்கான அடுத்த இடத்திற்காக கோபி நோக்கி பயணம் , சுற்றி சுற்றி பவானி ஆற்றின் கிளை நதிக்கான ஒரு வாய்க்காலின் ஓரம் கொண்டு போய் நிறுத்தினார்கள் . பாதையே இல்லாத இடத்தில காரை ஓட்டுவதற்கெல்லாம் தனித்திறமை தேவை .

அமைதியாய் ஓடும் வாய்க்கால் , அதன் ஒரு கரையில் தோட்டங்கள் , மறுகரை ஏனோ வெறும் காய்ந்த புற்களும் , மரங்களுமாய் இருக்கிறது , மரங்களுக்கு இடையே தார்பாயை விரித்து அமர்ந்ததும் தொடங்கியது அடுத்த வேட்டை , கோழிக்கறி மற்றும் தலை கறி .

சாப்பாடு சாப்பிட்டால் வயிற்றில் இடம் இருக்காது என்பதால் வெறும் கறியாக சாப்பிட்டு , அது செரிக்க பச்சை புளி ரசமாக குடித்துக்கொண்டிருந்தோம் . நல்ல உச்சி வேளை , வெயில் தகிக்க , மிளகாய் காரமும் சேர , தலையில் இருந்து தண்ணியாய் இறங்கியது . எங்கிருந்தோ வந்து சேர்ந்தன காகங்களும் , நாய்களும் , கறியை ருசித்து நாம் மட்டும் சாப்பிடாமல் , காகங்களுக்கு , நாய்களுக்கும் சிறிது வைத்து சாப்பிட்டதில் கூடுதல் சுவை . பகுத்துண்டு வாழுதல் என்பது இதுதான் போல . சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் தொப்பலாக வேர்த்து விட்டது .நிறைய சாப்பிட்டு விட்டதை போல ஒரு உணர்வு .

வேர்வை நீங்க குளிக்கலாம் என்று அடுத்த இடம் நோக்கி சென்றோம் . வாய்க்காலில் குளிக்கலாம் என்று சொன்னதற்கு வேண்டாம் வாங்க ஒரு அருமையான இடம் கூட்டி போகிறோம் என்று சொன்னார்கள் .

அடுத்த இடம் தேடி , கோபியில் இருந்து பங்களாபுதூர் சாலை வழி சென்றோம் , சாலையின் இரு பக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை , நெல் வயல்களும் , வாழைமரங்களும் தான் , ஆங்காங்கே வாத்து முட்டைகளும் , சோளமும் விற்கிறார்கள் , அதிலும் அறுவடையான வயல்களில் வெள்ளாடு பட்டியைப் போல வாத்துப்பட்டி போட்டிருக்கிறார்கள் , வாத்தில் இருந்து வந்த சூடு குறையாமல் முட்டைகள் கிடைக்கிறது .

இந்த சாலையில் வயல்களை பார்த்த படி சென்று கொண்டிருக்கையில் வருகிறது மத்தாளக்கோப்பு ஊற்று . வாழைமர தோப்புகள் சுற்றி இருக்க , அருகில் ஊற்றில் இருந்து வரும் தண்ணீர் வாய்க்காலுக்கு செல்ல ரம்மியமாக இருக்கிறது, வருடம் முழுவதும் வற்றாமல் பொங்கி வரும் இந்த ஊற்று . அவ்வளவு தெளிவான தண்ணீர் . ஊற்றுக்குள் இறங்க சுற்றியும் படி கட்டி இருக்கிறார்கள் , ஊற்றுக்குள் இறங்கினால் நீங்கள் பாதம் வரை துல்லியமாக பார்க்க முடிகிறது . சோப்பு , ஷாம்பு , மது , மாமிசம் அனுமதி இல்லை என்பதால் , மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து , வாய்க்காலில் ஒரு முங்கு முங்கி பின் ஊற்றில் இறங்கினோம். (குளித்து விட்டால் கணக்கு வராது பாருங்க )

உச்சி வெயில் சிறிது சிறிதாக கீழ இறங்க ஒரு வேலையும் செய்யாமல் , ஊற்றில் நாமும் சேர்ந்து ஊறுவது , பின் எழுந்து சென்று சாப்பிடுவது , வாய்க்காலில் முங்குவது , பின் மறுபடியும் ஊற்றில் வந்து ஊறுவது , பின் சாப்பாடு என செய்ததில் மாலை ஆகி விட்டது . மனம் இல்லாமல் ஊற்றில் இருந்து மேலேறினோம் .

வருத்தம் அதிகமாகி விட்டதால் மறுபடியும் சாப்பிட போனோம் , தேடி தேடி பார்த்தும் ஒரு துண்டு கறி கூட மீதம் இல்லை . மனதை தேற்றிக்கொண்டு அங்கங்கே ஒட்டி இருந்த சாப்பாட்டில் தயிரை நன்கு போட்டு குழைத்து சின்ன வெங்காயத்தை கடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம் . நல்ல கெட்டி தயிரை போட்டு பிசைந்தால் அதில் இருக்கும் வெண்ணை மாவு மாதிரி கையெல்லாம் ஒட்டிக் கொள்கிறது . அதனூடே சாப்பாடு சாப்பிடுவதும் நன்றாய்தான் இருக்கிறது . டிபன் னை கழுவ அதிகம் சிரமப்பட தேவை இல்லாமல் கழுவி வைத்ததைப்போலத்தான் இருந்தது .

பின் இரவு மெல்லச் சூழ , பௌர்ணமி நிலவும் , இளையராஜா பாடலும் தொடர்ந்து வர , திணறத் , திணறத் சாப்பிட்டால் மட்டுமே வரும் ஒரு அரை மயக்க நிலையில் வீடு வந்து சேர்ந்தேன் .

நாக்கின் அடிப்பகுதியிலும், வாயின் ஓரங்களிலும் வர மிளகாயின் காரம் என்ன செய்தும் போகாமல் ஒட்டிக்கொண்டு இருக்க , மூக்கில் அதன் காந்தல் அடிக்க அடிக்க தூங்கிப்போன அந்த நாள் இனிய நாள் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *