காரல்மார்க்சும் காயத்ரியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 9,195 
 

அன்றும் வேலை கிடைக்காமல்தான் ரூமிற்கு திரும்பினேன், தோழர் ரூமில்தான் இருந்தார், ஆம் அவரை நாங்கள் தோழர் என்றுதான் அழைப்போம், நாங்கள் என்றால் நான், எங்கள் காலேஜில் உள்ளவர்கள் எங்கள் ஏரியா நண்பர்கள் எல்லோரும்.

முதலில் என்னை பற்றி , நான் இந்த வருடம் தான் இன்ஜினியரிங் முடித்து வேலை தேடி சென்னை வந்திருக்கிறேன், இல்லை ஏன் அப்பாவால் அனுப்பிவைக்கபட்டேன்.

தோழர் …. என் கல்லூரி சீனியர், என் ஏரியா, இருவரும் ஒரே பேருந்து, ஆனால் அவருடனான என்னுடைய அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தது மேத்தமடிக்ஸ் தான்.

என்னுடைய இரண்டாவது செமஸ்டேரில் என் வாழ்வில் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது,அந்த செமஸ்டர் மேத்சில் அரியர் வைத்துவிட்டேன், அன்று என் அப்பா என்னை பார்த்த பார்வையை இன்று நினைத்தாலும் திருவிளையாடல் படத்தில் சிவனாக சிவாஜி நக்கீரனை ஒரு கோப பார்வை பார்ப்பாரே அதுதான் எனக்கு நினைவுக்கு வரும். .நான் அப்பொழுதெல்லாம் இதை பற்றி பெரிதாக கவலைபட்டதில்லை,

ஆனால் செவன்த் செமஸ்டர் படிக்கும் போதுதான் லேசாக பயம் வந்தது. எப்படியாவது இந்த முறை கிளியர் செய்துவிட வேண்டுமென்று, நானும் இரவு பகல் பாராமல் படித்து அந்த முறையும் அரியர் வைத்தேன்.இந்த “ஃபுரியர் ட்ரான்ஸ்பார்மேஷேன்” தான் என்னை பாடாய் படுத்தியது, அப்பொழுது ரகுதான் சொன்னான் நம்ம தோழர் இருக்கரில்லா அவர் நல்ல மேத்ஸ் போடுவர்டா, அவர்கிட்ட கேட்டு பாருடா.

அது வரையில் அவருடன் எனக்கு பெரிய அறிமுகம் கிடையாது, பஸ் ஏறும்போது ஒரே ஸ்டாப்பில் நிற்போம் என்னை பார்த்து சிரிப்பார் ஒரு முறை “பஸ் இன்னைக்கு ரொம்ப லேட்ல” என்று என்னை கேட்டார் நான் ஆம் என்றேன் இதுதான் அவருடன் நான் அதிகமாக பேசியது. ஆனால் அவர் பேருந்தில் வரும்போது அவர் நண்பர்களுடன் பேசுவதை கேட்பேன்.

ரகு சொன்ன அன்றே அவரை பார்த்து பேசினேன் தினமும் சாயங்காலம் அவர் வீட்டிற்கு வர சொன்னார். அவர் கேம்பஸில் செலக்ட் ஆகி ஜாய்னிங் டேட்காக வெய்ட் பண்ணிக்கொண்டு இருந்தார்.

அந்த இரண்டு மாதம் அவருடன் பழகியது எனக்கே புதியதாய் இருந்தது, அவர் மேத்ஸ் தவிர நிறைய விஷயம் பேசுவார், சோவியத், கியூபா, காஸ்ட்ரோ, சே அவருடைய இந்திய பயணம், உலக சினிமா, அகிரா, ஜெயகாந்தன் என அவர் அனைத்தை பற்றியும் பேசுவார், காரல் மார்க்சை பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாமல் பேசுவார். “மூலதனத்”தை காட்டி இதுதான் உலக வேதம் என்பார்.

அடுத்த இரண்டு மாதத்தில் அவருக்கு ஜாய்னிங் டேட் கிடைத்து சென்னை கிளம்பிவிட்டார், நானும் ரிசல்ட்டுகாக காத்திருந்தேன், இந்த முறை கிளியர் பண்ணி விட்டேன். ரிசல்ட் வந்த அடுத்த நாளே என்னை சென்னைக்கு அனுப்ப டிக்கெட் எடுத்துவிட்டார், என்னை என் மாமா வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்தார் ஆனால் நான் தோழர் ரூமில்தான் தங்குவேன் என்று அடம் பிடித்து அவரிடம் அனுமதி வாங்கி விட்டேன். .அப்பாவிற்கு தான் இதில் துளியும் விருப்பமில்லை தோழரை பற்றி அவருக்கும் தெரியும்.

இதோ சென்னைக்கு வந்து இன்றோடு நான்கு மாதம் ஆகி விட்டது, இன்று வரை வேலை கிடைக்கவில்லை, அப்பாவின் கோவம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுஇருந்தது.

தோழர் ” என்ன கணேஷ் என்னாச்சு?”

“ப்ச் இன்றைக்கும் அதே கதைதான் வெய்ட் பண்ணுங்கன்னு சொல்லி இருக்காங்க”

“தெரிஞ்ச விஷயம் தான் , என்னமோ உலக மயமக்கிவிடால் நாட்டில் எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என்று சொன்னார்களே எல்லாம் ஏமாற்று வேலை” என்றார்

“அப்படி எல்லாம் இல்லை எனக்கு நேரம் சரி இல்லை” என்றேன்.

“நேரமாவது ஒன்றாவது அப்படி எல்லாம் எதுவும் இல்லை, இப்ப நேரம் சரி இல்ல இன்னும் ஒரு வருஷத்தில் நல்ல நேரம் வந்துடும் ரெண்டு வருஷத்தில் வந்துடும்னு சொல்லி நம்மை எல்லாம் முட்டாள் ஆக்கிட்டு இருக்காங்க”

அன்று இரவு சரக்கு அடித்தோம்,தோழர் தான் வாங்கி கொடுத்தார்(மாமா வீட்டிற்கு போகாமல், தோழர் ரூமிற்கு வந்ததிற்கு இதுவும் ஒரு காரணம்). அன்றைக்கு மார்க்சை பற்றியும் சோவித் பற்றியும் மிக நீண்ட நேரம் பேசினார். உலகத்திலேயே வறுமையை ஒழித்த ஒரே தேசம் சோவித் தான் என்றார்

நான்”அப்புறம் ஏன் சோவித் உடைந்தது?” என்று அவரை மடக்கி விட்டதாக நினைத்து அவரை கேட்டேன்.

“அதற்கு பல காரணங்கள் உண்டு ” என நிறைய புள்ளி விவரங்களுடன் கூறினார்.

ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் மன்னித்து விடுங்கள், அவர் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்தார், காயத்ரி. அவர் கிளாஸ் தான்.

சரி மீண்டும் நம் சரக்கு பார்ட்டிக்கு வருவோம்.

நான் போதை தலைக்கு ஏறிய நிலையில் “சரி தோழர் நீங்க சொல்வது சரிதான் நானும் உங்களோடு சேர்ந்து போராடலாம்ன்னு இருக்கேன் ஆனா நீங்க தான் பெரிய IT கம்பெனியில் வேலை பார்கிருங்க நீங்க எப்படி வெளிய வருவீங்க பேசுறதெல்லாம் நல்லா பேசுறிங்க ஆனா செயல் ஒன்னும் இல்லையே” என்றேன்

அவர் என்னையே ரொம்ப நேரம் மௌனமாக பார்த்தார்.

பின்னர் “நீ சொல்லறது ரொம்ப சரிதான் இது வரைக்கும் எங்க குடும்பத்துக்காக வாழ்ந்துட்டேன் இனியும் இந்த மாதிரி இருக்க போறதில்லை நாளையிலருந்து வேலைக்கு போக போறதில்லை”. என்றார்

நான் சிரித்து விட்டு அப்போ காயத்ரி என்றேன்.

ஏன் ஜென்னியும் மார்க்சும் வழவில்லையா என்றார்

எனக்கு திடீரென்று பயம் ஆகி விட்டது நாம் ஏதோ போதையில் சொல்ல இவர் ரொம்ப சீரியஸ் ஆகி விட்டாரே என்று.

காலையில் போதை தெளிந்தால் எல்லாம் சரியாகி விடுமென்று நான் விட்டு விட்டேன்.

காலையில் எனக்கு ஒரு இன்டெர்வியு அதனால் சீக்கிரமே கிளம்பி விட்டேன், மத்தியானம் ரூமிற்கு வந்த போது தோழர் ரூமில் இல்லை.

மாலை தான் வந்தார், என்னை பார்த்து நான் வேலையை விட்டு விட்டேன் என்றார்.

“தோழர்” என்றேன்,

“நீ சொன்னதெல்லாம் யோசிச்சேன் உண்மை தான் இனி நான் நினைத்தது போல் வாழ போறேன்.

“காயத்ரிகிட்டே சொன்னிங்களா? என்ன சொன்னங்க?”

“ஹ்ம்ம் சொன்னேன் சண்டை போட்டா”

“வீட்லே”

“அப்பா கத்திட்டு வீட்டு பக்கம் வந்திராதேன்னு சொன்னார் அம்மா அழுதா”

“தோழர் இத்தன பேர கஷ்டபடுத்த தான் வேண்டுமா நான் ஏதோ நேத்து போதைல பேசுனேன் அதை பெருசா நெனைச்சுட்டு இப்படி உங்க வாழ்கைய..”

நான் முடிவு பண்ணிட்டேன் நாளைக்கே ஒரு போராட்டம் இலவச கல்விக்காக கோட்டை முற்றுகை போராட்டம் அதிலே நான் கலந்துக்க போறேன்னு சொல்லிட்டு ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்.

காலையில் நான் எழுந்திருக்கும் முன்னே அவர் வெளியே சென்று விட்டார்.

மதியம் அப்பாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது” உடனே கிளம்பி வரலே அங்க வந்து உன்ன அடிப்பேன்” என்றார்

என்ன ஆச்சு என்றேன்

போ போய் நியூஸ் பாரு என்றார்

நான் தொலைகாட்சியை ஆன் செய்தேன்.

வழக்கமான செய்திதான் ஓடியது பெட்ரோல் விலை உயர்வு, நாடாளுமன்ற அமளி..

அதன் பின்னர்தான் அந்த செய்தி வந்தது கோட்டை முற்றுகை பலர் கைது, அதில் தோழரை ஒரு காவலர் அடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு இருந்தார்.

அதன் பின்னர் தான் அப்பாவின் கோவத்திற்கு காரணம் புரிந்தது,எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஆனால் இப்போதைக்கு அவர் பேச்சை மீற முடியாது என்று தெரிந்தது.

அன்றிரவே ஊருக்கு பஸ் ஏறினேன் என்னை நினைத்தால் எனக்கே அசிங்கமாக இருந்ததது தோழர் என்ன ஆனார் என தெரியவில்லை,ஆனால் நான் ஊருக்கு கிளம்பி விட்டேன்.

இரண்டு நாள் கழித்து அவர் வெளியே வந்து விட்டதாக அவர் அம்மா சொன்னார்.அவருக்கு கால் செய்தேன் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அடுத்த ஒரு மாதத்தில் எனக்கு ஜார்கண்டில் ஒரு பவர் ப்ளாண்டில் வேலை கிடைத்து சென்று விட்டேன் கொஞ்ச நாளில் என் அப்பா அம்மாவையும் அழைத்து என்னுடன் அழைத்து சென்று விட்டேன்.

ஏழு வருடங்கள் சென்று விட்டது நடுவில் கல்யாணமும் இரண்டு மூன்று இடங்களுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி கடைசியாக சென்னை வந்து சேர்ந்தேன்.தோழரின் நினைவு மெல்ல அப்படியே அறுந்து விட்டது

அன்று காலை நகரின் அந்த பெரிய பள்ளியின் முன் என் மகளுக்கு LKG அப்ளிகேசன் வாங்க அந்த பெரிய க்யுவில் கடைசியாக நின்றேன், திடீரென்ருதான் எனக்கு முன்னால் நின்றவரை கவனித்தேன், ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் அவர் தோழர் தான்.

மிக ஆர்வமாக தோழர் என்று கூப்பிட்டேன், அவர் திரும்பி என்னை பார்த்து கணேஷ் என்றார்.

“தோழர் எப்படி இருக்கீங்க” என்றேன்

அவர் என் கையை பிடித்து “தோழரெல்லாம் இல்லை வசந்த் தான்” என்றார்

“என்ன ஆச்சு”

“அன்னைக்கு நைட்டு காயத்ரிதான் வந்து போலீஸ்ல சொல்லி என்னை வெளிய எடுத்து வந்தா, என்ன இதையெல்லாம் விட்டு உடனே கல்யாணம் பண்ண சொன்ன, நான் கேக்கல, கொஞ்ச நாள் பொருத்து பாத்துட்டு விஷம் சாப்டுட்டா,வேற வழி இல்லை கல்யாணம் பண்ணிகிட்டேன், புது வேலை வாங்கி கொடுத்தா இதோ இப்போ என் பையனுக்காக இங்க நிக்கிறேன், அப்பாவுக்கு இப்போ ரொம்ப சந்தோசம்”

“உங்களுக்கு..?” என்றேன்

சிரித்தார்

“என்ன மன்னிச்சிடுங்க” என்றேன்

“விடு கணேஷ் ஒவ்வருக்கும் ஒரு நெருக்கடி, எனக்கு காயத்ரி உனக்கு அப்பா. ஒரு விஷயம் தெரியுமா நான் இப்போலாம் மார்க்ஸ் பத்தி பேசுறதே இல்ல எப்பவும் காயத்ரி மந்திரம் தான்” என்று சொல்லி விரக்தியாக சிரித்தார், அவர் கண்ணில் நீர் படலம் தோன்றியது.

பின்னர் அவர் நம்பர் வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

டிவி ஓடி கொண்டிருந்தது, நடிகர் பிரபு ஒரு நகை கடைக்காக புரட்சி போராட்டம் நடத்தி கொண்டிருந்தார், ஏனோ என் இதழோரம் ஒரு வறண்ட சிரிப்பு தோன்றியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *